
தியாகங்கள், கோவையின் அடையாளம்…!!
கே. கணேஷ்
“அம்மூ..” என்று பெருங்குரலில் அரற்றிய அந்தப் பெண்ணின் குரல் கேட்டு ஒட்டுமொத்த தொழிலாளர் கூட்டமே திரும்பிப் பார்த்தது. சில நிமிடங்களில் அது நடந்து முடிந்தது.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டனில் தொடங்கிய தொழிற் புரட்சியானது, வேளாண்மை, தொழில்கள் ஆகியவற்றை எந்திர மயமாக்கியது. தொடக்கத்தில் திரளாத வர்க்கமாக இருந்த தொழிலாளிகள், ஆண்டுகள் செல்லச் செல்ல அமைப்பாகத் திரண்டனர். அரசியல்படுத்தப்பட்டவர்களாகவும் மாறினர். பிரிட்டனில் கிடைத்து வந்த உரிமைகள், அதன் குடியேற்ற நாடுகளில் வழங்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை. குடியேற்ற நாடுகளில் அரசியல் உரிமைகளுக்கான போராட்டங்களோடு, உழைப்பாளி வர்க்கத்தின் உரிமைக்குரலும் ஓங்கி ஒலித்தது.
மத்தள நிலையில் பெண்தொழிலாளிகள்
தொழிலாளிகளைச் சுரண்டும் கொடுமை ஒருபுறம்; மறுபுறத்தில் பெண் தொழிலாளர்கள் எதிர்கொண்ட பாலியல் கொடுமை சொல்ல மாளாததாகும். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று பெருமையுடன் விளிக்கப்படும் கோயம்புத்தூரில் தொழிலாளி வர்க்கம் சந்தித்த கொடூரங்கள் கரும்புள்ளிக் கோலமிட்டன. அதிலும் பெண் தொழிலாளிகளின் நிலையோ படுமோசமாக இருந்தது. பணிச்சுமையோடு, அடிக்கடி தண்டமும் அழ வேண்டியிருந்தது. அவ்வப்போது தற்காலிகமாகப் பணிநீக்கமும் உண்டு. எப்போது வேண்டுமானாலும் ஆட்குறைப்பு என்ற பெயரில் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.
தொடங்கியது போராட்டம்
பொறுமையை இழந்த ஸ்டேன்ஸ் ஆலைப் பெண் தொழிலாளிகள் போராடக் கிளம்பினர். 1946 ஆம் ஆண்டு, அரசியல் விடுதலை கிடைப்பதற்கு ஓர் ஆண்டு முன்பாக, அக்டோபர் மாதத்தில் அவர்களின் வேலை நிறுத்தம் தொடங்கியது. நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஒரு மாத காலத்திற்குப் பிறகு ஆண் தொழிலாளர்களும் களத்தில் இறங்கினர். சங்கம் போய் மாகாண அரசைக் கேட்டபோது அவர்களும் அசையவில்லை. இதனால் உற்சாகமடைந்த ஸ்டேன்ஸ் நிர்வாகம், கருங்காலிகளை இறக்கி ஆலையை இயக்க முடிவெடுத்தது. இது தெரிந்தவுடன், கருங்காலிகளை ஆலைக்குள் நுழைய விடாமல் தடுப்பது என்று தொழிலாளிகள் முடிவெடுத்தனர். நவம்பர் 11, 1946 அன்று பெண் தொழிலாளர்கள் ஆலை வாயில் முன்பாகப் படுத்து மறியல் போராட்டத்தைத் தொடங்கினர்.
கருங்காலிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் சண்டை எழ வேண்டும் என்பதே நிர்வாகத்தின் எதிர்பார்ப்பாகும். மறியல் செய்த பெண்களை மிதித்துக் கொண்டு ஆலைக்குள் செல்ல கருங்காலிகள் முயன்றனர். அதைக் கண்டு வெகுண்ட ஆண் தொழிலாளிகள் கருங்காலிகளைத் தடுத்ததோடு, விரட்டியடித்தனர். இதற்காகவே காத்திருந்த காவலர்கள் தொழிலாளர்கள் மீது கொடூரமான தாக்குதலை ஏவினர். கண்மூடித்தமான தடியடி. துப்பாக்கிகளை வைத்து பெண்களைத் தாக்கினர்.
அம்முவின் வீரம்-தியாகம்
அப்படித் துப்பாக்கிக் கட்டையைக் கொண்டு தன்னை அடித்த ஒரு காவலரிடமிருந்த துப்பாக்கியை அம்மு என்ற இளம்பெண் தொழிலாளி தடுத்துப் பிடித்தார். காவலர் உடையில் இருந்த அந்தக் கயவன் அம்முவைப் பிடித்துக் கீழே தள்ளி, கால்களால் மிதித்தான். துப்பாக்கியின் மறுமுனையில் உள்ள கத்தியைக் கொண்டு கழுத்து மற்றும் பிற உடற்பகுதிகளில் குததினான். படுகாயங்கள் அடைந்த அம்மு அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய கடைசி நொடிகளைப் பார்த்துக் கொண்டிருந்த அருகில் இருந்த மற்றொரு பெண் தொழிலாளிதான் “அம்மூ” என்று அலறினார்.
கொதித்தெழுந்த ஆண் தொழிலாளர்கள் தொடர்ந்து கண்டனக் குரல்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர். அதைத் தடுக்க என்ன செய்வது என்று தெரியாத காவலர்கள், சரமாரியாகத் துப்பாக்கிகளை இயக்கினர். ஐந்து தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். ஸ்டேன்ஸ் ஆலையில் இப்படி நடக்கிறது என்று கேள்விப்பட்டவுடன் ‘நம்மால் என்ன செய்ய முடியும்’ என்று காளீஸ்வரா மற்றும் சோமசுந்தரா ஆலைத் தொழிலாளர்கள் மற்றும் புரூக் பாண்ட் நிறுவனத் தொழிலாளர்கள் பரிதவித்துக் கொண்டிருந்தனர். துப்பாக்கிக் குண்டுகள் முழங்கியதைக் கேட்டவுடன் ஸ்டேன்ஸ் ஆலையை நோக்கி வந்தனர்.
11 பேர் படுகொலை
காவலர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் மோதல் நடந்தது. கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியபோது, வெங்காயத்தை விழிகளில் தேய்த்துக் கொண்டு கம்பீரமாக எதிர்கொண்டனர். காவல்துறையின் அடக்குமுறையால் அந்தப்பகுதி முழுவதும் ரத்தத்தால் வண்ணம் பூசியதுபோல் காட்சியளித்தது. முதல் பலியான அம்முவையும் சேர்த்து 11 பேர் நிர்வாகத்துக்கு ஆதரவாக நின்ற காவல்துறையின் குண்டுகளுக்குப் பலியாகியிருந்தார்கள். இதில் கொடுமை என்னவென்றால், கொல்லப்பட்ட 11 பேரில் ஐந்து பேரைத்தான் அடையாளம் காண முடிந்தது.
ஆலைக்கு அருகில் ஒரு வீட்டில் இருந்தவாறே தோழர் கே.ரமணி போராட்டத்தின் போக்கை வழிநடத்திக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தோழர் எம்.ஆர். வெங்கட்ராமனும அவருடன் இருந்தார். ஆலைகள் மூடப்பட்டன. ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தனர். இதற்கிடையில் ஆலைகளைத் திறக்க முடிவு செய்த நிர்வாகங்கள், கருங்காலிகளைத் திரட்டினர். அவர்களை நேரடியாகவே சந்தித்த தொழிலாளர்கள், வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று கோரிக்கை வைத்தனர். கருங்காலிகளை அழைத்து வந்த நபர், ஆறுமுகம் என்ற சங்க ஊழியரைக் கன்னத்தில் அறைந்தார். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள திருப்பித் தாக்கிய ஆறுமுகம், அந்த நபரின் வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விட்டார். அந்த நபர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவை: கூட்டுக் குரல்களே அடையாளம்
இந்த சம்பவத்தையும் பயன்படுத்திக் கொள்ள நினைத்த காவல்துறை, அந்த சமயத்தில் தலைமறைவாக இருந்து தொழிலாளர்களை வழிநடத்தி வந்த தோழர் கே.ரமணியை இந்த வழக்கில் இணைக்கத் திட்டமிட்டனர். அவரோடு ஆர். உமாநாத் உள்ளிட்ட இன்னும் பிற தோழர்களையும் கொலை வழக்கில் இணைத்தனர். தனிப்படை போட்டும் தோழர். கே. ரமணி இவர்கள் கைகளில் சிக்கவில்லை. இரண்டரை ஆண்டுகாலம் தலைமறைவாகவே இருந்து, அவர் தொடர்ந்து வழிகாட்டினார். ஆனால், யார், யார் கம்யூனிஸ்டுகள் என்று துருவி, துருவி விசாரித்து, காவலர்கள் கைது செய்தனர். இவ்வளவு அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டும், தொழிலாளர்கள் அணிதிரள்வது அதிகரித்தது. தொழிலாளர்களின் தியாகங்களோடு, கோரிக்கைகள் கூட்டுக் குரல்களாக ஒலிப்பதும் கோவையின் அடையாளமாக மாறியது.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply