தமிழக தத்துவத்தின் தோற்றமும், மரபும் !
-மார்க்சிய அறிஞர் தேவ பேரின்பன்
(தமிழக தத்துவ வரலாற்றை அறிவதற்கு மிகச்சிறந்த ஆய்வு முறையாக மார்க்சிய வரலாற்றுப் பொருள் முதல்வாதமே பயன்படுகிறது. ஆனால், தமிழகத்தில் உலா வரும் பல தத்துவ வரலாறுகள் பாட்டாளி வர்க்க விடுதலைக்கான செயல்பாட்டுக்கு ஊக்கமளிக்கும் படைப்புகளாக இருப்பதில்லை.
உறுதியான மார்க்சிய அடித்தளத்தில் நின்று, தமிழக வரலாறு, தத்துவம், சமூகம், பண்பாடு ஆகிய அனைத்து துறைகளிலும் ஆழமாக ஆய்வு செய்தவர் மறைந்த மார்க்சிய அறிஞர் தேவ பேரின்பன் .அவருடைய முக்கிய கட்டுரை ஒன்று இங்கே பிரசரிக்கப்படுகிறது.
ஏற்கனவே இது போன்ற பல கட்டுரைகளை மார்க்சிஸ்ட் இதழில் பிரசரித்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக இதனை வாசிக்க வேண்டுமென வாசகர்களை கேட்டுக் கொள்கிறோம் – ஆசிரியர்)
மனிதனின் வாழ்நிலைதான் அவனது சிந்தனையின் உருவாக்கத்துக்கு அடிப்படையானதாகும். மனித வாழ்நிலை இரு நிலைகளில் செயல்படுகிறது.
அவை:
- மனிதனின் இயற்கை வாழ்நிலை.
- மனிதனின் சமூக வாழ்நிலை.
இந்த இரண்டின் தொகுப்பாகவே (Block) மனித வாழ்நிலை அமைகிறது. இவற்றைப் பிரித்துப் பார்க்க இயலாது. மனிதனின் வாழ்க்கை இவை இரண்டோடும் பல்லாயிரக்கணக்கான எண்ணற்ற உறவுகளால் பிணைக்கப்பட்டதே ஆகும்.
இத்தகைய மனித வாழ்நிலையானது, வரலாற்று ரீதியாக, வளர்ச்சிக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டதாகவே இருந்து வந்துள்ளது. இது மனிதன் சமூகமாக இயற்கையை எதிர்கொண்டு தன் உழைப்பின் மூலம் தன் வாழ்நிலையை உயர்த்திக் கொள்ளும் இயக்கத்தோடு தொடர்புடையது. இந்த நிகழ்வுப் போக்கிலேயே மனிதன் உருவாகிறான். அது பல வகைப்பட்ட சமூக உறவுகளால் உறுதி செய்யப்படுகிறது.
சமூகம் என்பது மனிதனிடமிருந்து பிரிக்கப்பட்ட வெறும் யூகக் கருத்தல்ல. அது மனிதர்களின் வெறும் கூட்டத் தொகுதியும் அல்ல. சமூகம் ஒன்றின் கீழ் மனிதர்கள் திட்டவட்டமான பொருளியல் மற்றும் கருத்தியல் உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளனர். அந்தப் பிணைப்பு, ஒரு சமூக அமைப்பாக மலர்ச்சி பெறுகிறது. இது மனித இயக்கத்தால் வரலாற்றுப்பூர்வமான வளர்ச்சியைப் பெறுகிறது.
இது வெறும் எந்திர இயக்கமல்ல. மனிதன் உணர்ச்சி மயமானவன்; உணர்வுப் பூர்வமானவன்; சிந்தனை வயப்பட்டவன். மனிதனின் வளர்ச்சியும், இருப்பும், இவற்றின் வளர்ச்சியோடு தொடர்புடையதே. உணர்தலும், அறிதலும், மனித உடலுறுப்பான மூளையின் வேலையாக அமைந்தாலும், அது மனிதனின் இயற்கை வாழ்நிலை, சமூக வாழ்நிலை ஆகியவற்றுக்கு உட்பட்டே அமைகிறது. இவற்றுக்கு அப்பாற்பட்ட ‘சூட்சுமமான’ உணர்வு அறிவு என்பதெல்லாம் மனிதரில் ஒரு சிலர் உருவாக்கிக் கொண்ட பொய்யே ஆகும்.
சமூகக் கட்டமைப்பின் அங்கம்:
‘சமூக பொருளாதார கட்டமைப்பு’ ஒன்றின் உயிர்ப்பான அங்கமாகவே மனிதனின் சிந்தனையும், உணர்வும் திகழ்கின்றன. சமூக பொருளாதாரக் கட்டமைப்பு என்ற கருத்தியலை மார்க்ஸ் – எங்கெல்ஸ் உருவாக்கினர்.
மார்க்ஸ் கீழ்கண்டவாறு அதனை விளக்கினார்:
“உற்பத்தி உறவுகளின் கூட்டு மொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டடம் எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக்கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறையே சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுப்போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வு, அவர்களது வாழ்க்கைநிலையைத் தீர்மானிப்பதில்லை; அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களின் உணர்வைத் தீர்மானிக்கிறது.”
மனிதனின் அறிவுலக வாழ்க்கையின் செறிவான அங்கம் தத்துவமாகும். ஏனெனில், தத்துவம் மனிதனுடைய உலகப் பார்வையின், வாழ்க்கை அணுகுமுறையின் அமைப்பாக உள்ளது என்பதை ஏற்கெனவே விளக்கியுள்ளோம். இதன் தோற்றம் மனிதர்களின் பொருளியல் நடவடிக்கையோடு முதலில் நேரடியாகத் தொடர்புடையது என்கிறார் மார்க்ஸ்.
“எண்ணங்கள், கருத்துகள், உணர்வு ஆகியவற்றின் தோற்றம் மனிதர்களுடைய பொருளியல் நடவடிக்கை, உறவு ஆகியவற்றோடு முதலில் நேரடியாகத் தொடர்புடையது. பொருள் உற்பத்தியையும் அதன் தொடர்பான உறவுகளையும் மனிதர்கள் வளர்க்கும்போது, அவர்களது இருப்பு, சிந்தனை, சிந்தனையின் முடிவுகள் ஆகியவற்றையும் மாற்றுகின்றனர். (மார்க்ஸ்- ஜெர்மானிய சித்தாந்தம்)
தத்துவமும் ‘முதலில்’ பொருளியல் நடவடிக்கையோடும், மனிதர்களுக்கு இடையிலான உறவுகளோடும் நேரடித் தொடர்புடையதாகவே தோன்றியது. உடல் உழைப்பிலிருந்து மூளை உழைப்பு பிரிந்து, அதுவே உயர்குடிகளின் ஒரே வேலையாக அவர்களது ஏகபோகமாகியபோது, தத்துவம் உலகியல் நடவடிக்கைகளுக்கும் மேலானதாகச் செயற்கையாக வைக்கப்பட்டது.
தத்துவத்தின் தோற்றம் மனிதனின் அறிதல் நிகழ்விலிருந்தே தோன்றுகிறது. தத்துவம் உலகெங்கும் எல்லாச் சமூகங்களிலும் பொதுவான சூழலிலேயே தோற்றம் பெற்றது. அது வர்க்க சமூகத்தின் உருவாக்கத்தோடு நிகழ்ந்தது. முரண்பட்ட வாழ்நிலையானது வேறுபட்ட தத்துவ அமைப்புகள் உருவாவதற்கு வழி ஏற்படுத்தியது.
தொன்மங்களும் அறிவும்
உலகெங்கும் எல்லாச் சமூகங்களிலும் வர்க்க சமூகம் தோன்றுவதற்கு முன்னர் தொல்குடி (இனக்குழு) வாழ்க்கை முறையே நிலவியது. அந்த வாழ்க்கைமுறையில் மனித அறிதலின் வடிவம் தொன்மங்களாகவே இருந்தது. இந்தத் தொன்மங்களில் இருந்து விடுபட்டே, தத்துவம் தோன்றியது. அறிவின் பயணம் அது. வேறுபட்ட இயற்கை வாழ்நிலை காரணமாக ஏற்பட்ட திட்டவட்டமான சமூக வாழ்க்கை முறைகளால், இந்தப் பொதுப் பயணத்தில் ஒவ்வொரு சமூகமும், தனக்குரிய தனித்தன்மையிலான தொன்மங்களையும், தத்துவங்களையும் உருவாக்கிக் கொண்டன.
மனிதனின் அறிதல் ஆதித் தொன்மங்கள் மூலமாகவே தனது வரலாற்றைத் துவக்குகிறது. ஆதிமனிதன், தனது கரடுமுரடான வாழ்க்கைப் போராட்ட அனுபவங்கள் மூலமாகப் பெற்ற அறிவு தொன்மங்கள் வழியாகவும் சடங்குகள், கதைகள், வழிபாடுகள் மூலமும் அவனது அடுத்த தலைமுறைக்கு அளிக்கப்படுகிறது. இந்த அனுபவங்கள் தனிமனித அனுபவங்கள் அல்ல; அவை சமூக அனுபவங்கள். தனிமனித அனுபவங்கள் பெறும் அறிவு, சமூக அனுபவங்கள் பெற்றுள்ள அறிவோடு முரண்படுவதில்லை; சமூக அறிவைச் சார்ந்தே அவை அமைகின்றன. சமூகம் இனக்குழுச் சமூகமாக இருப்பதால், அதன் நடவடிக்கைகளும், சிந்தனைகளும் கூட்டுத்தன்மையைப் பெறுகின்றன.
கருத்துநிலை தளத்திலான அறிதல் தோன்ற ஆதி வாழ்க்கை முறையில் உணர்ச்சிகளும், நம்பிக்கைகளும் கலந்த நேரடி உடல் சார்ந்த அனுபவங்களால் பெறப்படும் அறிவே தொன்மங்கள் மூலமாக வடிவம் பெறுகிறது. “தொன்மம் போன்ற வெளிப்பாடுகள், ஓர் இனத்தவரின் கூட்டு மனம்; அந்த இனத்தின் அன்னியோன்யமான கூட்டுத் தன்முனைப்பு: தங்களைப் பற்றிய முழு அர்த்தப்பாடு; சூழலின் தொன்மம் என்பது அந்த இனத்தின் கூட்டு மனப் பிரதிநிதித்துவப் பதிவாகும்” என்பார் மானுடவியல் அறிஞர் பக்தவசலபாரதி. எனவேதான், தொன்மங்கள் எதுவும் வெறும் புனைவுகள் மட்டுமல்ல. புனைவுகள் வழியாக அளிக்கப்படும் கூட்டு அனுபவம்: உருவாக்கப்படும் கூட்டுமனம்.
அறிவியல், தத்துவம், மதம்
இந்த கூட்டுத்தன்மை சமூக ஒத்துழைப்பு என்ற அவசியம் கருதியே உருவாகிறது. எல்லா மனித நடவடிக்கையும் சமூக ஒத்துழைப்பு இன்றி நிறைவு பெறுவதில்லை. நடவடிக்கை, குடும்பம் வாழ்க்கைமுறை போன்ற எதுவும் சமூக ஒத்துழைப்பு மூலமாக நடைபெறுகிறது. சமூக ஒத்துழைப்புதான் கருத்தினங்களையும் தோற்றுவிக்கிறது. இவை குறியீடுகள் (Symbols) மூலம் சமுதாயத்தின் அறிதல் நுகர்வுக்கு அளிக்கப்படுகிறது. தொன்மக்குறியீடுகள் கற்பனை மிகுந்தவை; உணர்ச்சி (Emotional) மேலிட்டவை. எழுத்துமொழி வழியிலான குறியீடுகள் அறிவுப் பூர்வமானவையாகக் கட்டமைக்கப்படுகின்றன. இவை அறிதலின் பலவகையான வகைப்பாடுகளை உருவாக்குகின்றன. தொன்மங்களும் இதை ஒட்டிய வகைப்பாடுகளை உருவாக்குகின்றன. தொன்மவியலின் தர்க்கம் மாற்றங்களைப் பெறுகிறது. தொல்குடி தொன்மவியல் முன்வைக்கும் தர்க்கம், தத்துவம், அறிவியல் அமைப்புகளின் வளர்ச்சியால் மறுக்கப்படுகிறது. மதம் தொன்மங்களைத் தன்வயப்படுத்திக் கொள்வதன் மூலம் சமூக அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்கிறது.
தொல்குடி சமூக வாழ்க்கை உருவாக்கிய தொன்மங்கள் கூறும் கதைகள் ‘மனிதனாக’ இருப்பது குறித்த கதைகள்தான். தொல்குடி மனிதன் தன் முன் உள்ள யதார்த்தத்தை (reality) மனிதத் தன்மையோடுதான் பார்த்தான். இயற்கைப் பொருட்களான தாவரங்களும், விலங்கினங்களும் அவனுக்கு மனித வடிவம் கொண்ட சக்திகளே. இயற்கை சக்திகளான காற்று, மழை, புயல், தீ போன்ற யாவும் அவனுக்கு மனித வடிவம் கொண்டவையே. மனித அனுபவங்கள் இவற்றின் வழியே பிற மனிதர்களுடன் தொடர்பு கொள்கிறது. இதன் மூலம் தொல்குடி கூட்டு அறிவும், சமூக உணர்வும் குடி முழுவதற்கும் கொண்டு செல்லப்படுகிறது.
இயற்கையோடு மனிதன் கல்லாயுதங்களுடன் போராடி வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் ஆகிய நிலைகளில் வாழ்ந்தபோது இரண்டு பிரச்சனைகள் அவனை எதிர்கொண்டன. முதலாவது, உணவும், பாதுகாப்பும். இரண்டாவது, மனித இனப்பெருக்கம், இவை இரண்டுக்குமான தொன்ம சிந்தனைகளின் தர்க்கம் மனித அனுபவம் பெற்ற ஆக்கப்பூர்வமான சிந்தனை (Positive Thought) இடம் பெற்றது என்பார் லெவிஸ்டாசா. காட்டுமிராண்டி நிலையில் இருந்த தொல்குடி மரபில் வேட்டையாடும் வீரனும், தாய் தெய்வமும் முதன்மையான இடம் பெற்றன. இவையே வீரமும், காதலும் எனும் ஆதி வேளாண் சமூகத்தின் கருத்தியலுக்கு வித்திட்டன.
இந்தியப் பண்பாட்டில் ஆரியரது வருகைக்கு முந்தைய தொன்மங்கள் வளமையை அடிப்படையாகக் கொண்ட தாய் தெய்வங்களை உருவாக்கின. ஆரியர்களின் வருகை புதிய தொன்மங்களைக் கொண்டு வந்தது. இந்தத் தொன்மக் கடவுளுக்கான வேள்வி முறைகள் புகுத்தப்பட்டன. ஆரியரின் வருகைக்கு முன்பிருந்த தொன்மங்கள் வேள்வி முறைகளை மறுத்தன. பௌத்தம், சமணம், போன்ற வைதிக எதிர்ப்புத் தத்துவங்களும் வேள்வி முறைகளை எதிர்த்தன. இந்த அடிப்படையிலேயே தொல்குடித் தொன்மங்களை வேத வைதிக எதிர்ப்பு மதங்கள் மறுகட்டமைப்பு செய்தன.
தமிழர் தத்துவ தோற்றுவாய்
தமிழர் தத்துவத்தின் தோற்றுவாய் இந்தப் பின்னணியிலேயே ஏற்பட்டது. உலகெங்குமான தத்துவத்தின் தோற்றுவாயின் பொதுப் போக்கை ஒட்டியே தனித்த பண்புகளோடு உருவானது. தமிழர் தத்துவம் ‘மெய்யறிதலை’ அடிப்படையாகக் கொண்டது. மெய்யறிதலுக்கான ‘காட்சி’ (கண்ணோட்டம்) தமிழர் சிந்தனை மரபில் வலியுறுத்தப்படுகிறது. மெய்யறிதலுக்கான காட்சி நம்பிக்கை அடிப்படையில் அமைவதில்லை; அவை அறிவு சார்ந்த விசாரணை அடிப்படையிலானவை. ஆனால், தொல்குடித் தொன்மங்கள் பெரிதும் நம்பிக்கை சார்ந்தவை. மக்கள் மத்தியில் தொன்மங்கள் தொல்குடி வாழ்க்கைக் கண்ணோட்டத்தை வழங்கிவிடுகிறது. அது புனைவுகள், தொன்மங்கள், வழிபாடுகள் வழியாகத் தொல்குடி வாழ்க்கையைக் கருத்துநிலை ரீதியாக (Ideological) உறுதிப்படுத்துகிறது. அது ஆதி பொதுமை சமூகத்தின் உலகப் பார்வையாகும். ஆதி சமூகத்தில் தனி மனிதனுக்கு என தனியே உலகப் பார்வை ஏதும் கிடையாது. அங்கு இனக்குழுதான் சிந்திக்கிறது. தனிமனித சிந்தனை தன்னியல்பாக (instinct) இனக்குழு சிந்தனையாகவே உள்ளது.
தத்துவத்தின் தோற்றுவாய், இத்தகைய தொன்மங்கள், சமூக உணர்வின் மேலோங்கிய அங்கமாக இருக்கும் சூழலில், வர்க்கச் சமூகங்களின் தோற்றத்தோடு ஏற்பட்டது. ஒருபுறம், அது தொன்மங்களின் இறுகிப் போன நம்பிக்கைகளைத் தகர்த்து, அறிதல்போக்கில் புதிய காட்சியுண்மைகளைத் தத்துவரீதியாக வளர்க்க வேண்டும்; மறுபுறம் தொன்ம நம்பிக்கைகள் வலுவாக உள்ள நிலையில், அதனைத் தாண்டி தனியே தத்துவம் மட்டும் சமூக ஏற்பைப் பெறவும் முடியாது.
தத்துவத்தின் வரலாற்றில் இத்தகைய முரண்பாடு ஐரோப்பாவில் தொன்மங்களைத் தத்துவம் முழுவதுமாக நிராகரித்துத் தனியே இயங்குவதில் முடிந்தது. ஆனால், ஆசிய நாடுகளில் (சீனா, இந்தியா) தொன்மங்களை மறுகட்டமைப்புச் செய்வதன் மூலம் தத்துவம் தொன்மங்களைத் தன்வயமாக்கியது. இதன் விளைவு தொன்மங்களில் இருந்து பிரிந்த சுயமான ‘தூய தத்துவங்கள் ஆசிய நாடுகளில் இல்லை. தொன்மங்களில் இருந்துதான் மதங்களும் உருவாயின. எனவே ஆசியத் தத்துவங்களும் மதங்களின் வழியே செயல்பட்டு தமது இருப்பை நிலைப்படுத்திக் கொண்டன.’
சமூக உற்பத்தி முறை ஒவ்வொன்றும் தமக்கே உரித்தான சமூக அறநெறிகளை உருவாக்கிக் கொள்கிறது. தொல்குடி வாழ்வின் தொன்மங்கள் தொல்குடி சமூகத்தின் அறநெறிகளை (ஒழுக்கங்களை) வகுத்துக் கொள்கிறது. வர்க்கச் சமூகத்தின் அறநெறிகள், தத்துவத்தாலும், மதங்களாலும் வகுக்கப்படுகின்றன. தத்துவத்தின் தோற்றுவாயில் அது அப்பாலையியலைக் காட்டிலும் சமூகம் பற்றியதாகவும், அறம் பற்றியதாகவுமே உலகெங்கும் இருந்துள்ளது. தமிழர் தத்துவத்தின் தோற்றுவாயிலும் இதுவே காணப்படுகிறது.
சங்க இலக்கியத்தின் வேறுபட்ட மரபுகள்
தமிழர் தத்துவம் எழுத்து வடிவம் பெற்ற தொன்மங்களின் வழியாக வாய்மொழி மரபின் தொன்மங்களைத் தத்துவப்படுத்தியது. சங்கப் பாடல் இலக்கியத் தொகுதிகள் இந்த மாறுதலைத் தெளிவுபடுத்துகின்றன. சங்கப் பாடல்கள் வழியாக அறியப்படும் தொன்மங்கள், எழுத்து வடிவில் கட்டமைக்கப்பட்ட தொன்மங்களே. அதில் மொழி எழுத்து வடிவில் வளர்ந்த காலத்து சமூகப் பிரச்சனைகள், தொன்மங்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை ஒரே தன்மையுடையன அல்ல. வேறுபட்ட சமூக வாழ்க்கை முறை காரணமாக நான்கு வகையான தொன்ம மரபுகள் சங்கப் பாடல்களில் “சக வாழ்வு” வாழ்கின்றன.
அவை:
- வாய்மொழி பாடல் மரபு- பாணர், புலவர், மகளிர் ஆகியோர் வழியாக வெளிப்படுத்தப்படும் தொன்ம மரபு. இயற்கை மீதான மந்திரங்கள், நம்பிக்கை பற்றியது.
- மன்னர் வேந்தர் குறித்த பழமரபு – சான்றோர், உயர்குடி குறித்த போற்றுதல்கள், சமூக உறவு பற்றியது.
- சமணம், பௌத்தம், ஆசீவகம் வழியான எழுத்து வடிவ (இலக்கிய) மரபு – அறிவு, கல்லாமை பற்றியது. வினையாற்றுதல் அடிப்படையில் தத்துவக் கொள்கையியலை முன்வைப்பது.
- வேள்விச் சடங்கு மரபு – பார்ப்பனர்கள் வழியாக வெளிப்படுத்தப்படும் சடங்கு மரபு. வேதகால வட இந்தியத் தொன்மங்களை வழிபடுதல் பற்றியது. இவை தொன்மப் புனைவுகளாக பழமரபுக்கலைகள், தொன்ம சடங்குகளும் நம்பிக்கைகளும், புராணக் கதைகள் போன்றவைகளாக சங்க இலக்கியத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மங்கள் குறித்த தொகுப்பில் காண முடியும்.
பண்டைய பண்பாடுகளில் காணப்படுவது போன்ற வளர்ச்சிப் போக்கு தமிழர் தத்துவத்தின் தோற்றுவாயிலும் உள்ளது. அத்தகைய போக்கின் பொதுப் பண்புகளில் சில:
- காட்டுமிராண்டி நிலையில் உணவு சேகரித்தும், வேட்டையாடியும் வாழ்ந்த குறிஞ்சி நில மக்களின் தொன்மங்கள் பூசலையும், வளமையையும் அடிப்படையாகக் கொண்டிருந்தன.
- எகிப்து, சுமேரியா, மெசபடோமியா போன்ற பண்பாடுகள் போலவே பிறப்பு, மரணம், வாழ்க்கை இன்ப- துன்பங்கள் போன்றவை இயற்கை புவிசார் வாழ்க்கைப் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு தொன்மங்கள் வழியாக முன்னிலைத் தத்துவம் வளர்ந்தது. இயற்கை மானுடத்தன்மையோடு அணுகப்பட்டது.
- சமூக வாழ்க்கையின் இருப்பு நிலையில் மாற்றம் ஏற்படும்போது தொல்குடி தொன்மங்களிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. கால்நடை மேய்ப்பு ஆதி வேளான் சமூகமான முல்லை வாழ்வில் தாய்த் தெய்வ தொன்மங்கள் இயற்கையின் இயல்புகளை அறிவதற்கான அறிவியல் கூறுகளையும் கொண்டு அனுபவங்கள் அடிப்படையிலான ‘உண்மை’களை அறிதல் (மெய்யறிதல்) என்ற வளர்ச்சிப் போக்கு ஏற்பட்டது.
- மருத நிலப்பகுதியின் உற்பத்தி முறை நிலம் சார்ந்த வேளாண் உற்பத்தியாக வளர்ச்சியடைந்ததும், நகரங்களும் – வர்த்தகமும் உருவானதும் சமூக வர்க்கங்களின் மோதல் காரணமாகத் தொன்மங்கள் தத்துவமயப்படுத்தப்பட்டன. தத்துவக் கருத்தமைவுகளின் வழியே தத்துவ அமைப்புகள் வளர்ந்தன. சமணம், ஆசீவகம், பௌத்தம் போன்றவை தமிழகச் சூழலில் மருத நிலம் வழியாக வளர்க்கப்பட்டன.
முன்னிலை உலகாயதம்:
உலகெங்கும் தத்துவம் இயற்கை தத்துவமாகவே (natural philosophy) தோற்றம் பெற்றது. முன்னிலை உலகாயதம் (Proto Lokayatha) அத்தகைய தத்துவக் கூறுகளையே கொண்டிருந்தது.
இயற்கையின் அங்கமாக இருந்த ஆதி மனிதன் (குறிஞ்சி) இயற்கையை மானுடத்தன்மையோடு அணுகினான். தொன்மப் புனைவுகள் வழியாக இயற்கை, சமூகம், மனிதன் பற்றிய உலகக் கண்ணோட்டம் உருவானது. தாய் தெய்வ வளமை வழிபாடு, ஆவி நம்பிக்கை, புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்கள் பற்றிய தொன்மப் புனைவுகள் ஆகியவற்றின் வழியாகத் தொன்ம உலகக் கண்ணோட்டம் உருவானது.
உணவு சேகரித்து வேட்டையாடும் நிலையிலிருந்து கால்நடை மேய்ப்பு ஆதி வேளாண் சமூக உற்பத்தி முறைக்கு (முல்லை நிலங்களில் மாற்றம் ஏற்பட்டபோது மனிதன் இயற்கையின் மீது செயல்பட்டு, இயற்கையைத் தனது வாழ்வுக்கும், வளத்துக்கும் உரியதாக மாற்றத் தொடங்கினான். தொன்மங்களில் இருந்து விடுபட்டு அறிவுப் பூர்வமான அறிதல் என்ற நிகழ்வுப் போக்கு தொடங்கியது. தொன்மங்கள் புதுப்பிக்கப்பட்டன. இயற்கையின் முரண்பாடுகளும், வாழ்வின் முரண்பாடுகளும் தத்துவ நிலையில் விளக்கப்பட்டன. அவை தொன்ம வடிவத்தில் பெரிதும் அமைந்தன. இது முன்னிலை உலகாயதத்தை உருவாக்கியது.
உலோகப் பயன்பாடு (இரும்பு), மருத நில வேளாண் வளர்ச்சி. நகரங்களின் உருவாக்கம், கைவினைஞர் சமூகக் குழுக்களின் வளர்ச்சி, வர்த்தகம் உருவாகுதல் போன்றவை வளர்ச்சியடைந்தபோது, அது வர்க்க சமூகமாக விளங்கியது. அரசு, மொழி, மதம், பலவகையான அறிவியல்கள் உருவாயின. தொழில்நுட்ப வளர்ச்சி, உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி, உணவு மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களின் உபரியான வளர்ச்சிக்கு வழிவகுத்தன. விநியோக முறை வர்க்கச் சமூகத்தின் நியாயங்களைக் கொண்டிருந்ததால், சமூக முரண்பாடுகள், வறுமை/ வளமை ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது. நிலையாமை பற்றிய தத்துவக் கோட்பாடுகள் உருவாயின. இயற்கை, மனிதன், சமூகம் பற்றிய தத்துவ அமைப்புகள் தோன்றின.
பண்டைய தமிழகத்தின் சங்ககாலப் பகுதியில் இத்தகைய தத்துவ அமைப்புகள் நகரங்களை மையமாகக் கொண்டு வளர்ந்தன. இயற்கையையும், வாழ்க்கையையும் புரிந்து கொள்வதும், முரண்பாடுகளை விளக்குவதோடு மட்டும் நில்லாமல், அதற்கான தத்துவப் புரிதலுக்கான தருக்க முறைகளும் வளர்ச்சியடைந்தன. உலகாயதம், சமணம், பௌத்தம், ஆசீவகம் போன்றவை பழந்தமிழர் தத்துவமாக விளங்கின. கடற்கரையோரப் பகுதிகளில் கடல் பெருக்கும் (ஊழி)யும் மருதநிலப் பகுதியில் நீர், நில வளமும், குறிஞ்சி முல்லைப் பகுதிகளில் வறட்சியும் தத்துவப் பிரச்சனைகளாயின. நிலைத்த வளமான வாழ்க்கைக்கான இன்ப நாட்டம் என்ற கோட்பாடு அடிப்படையிலான உலகாயத தத்துவமும், நிலையாமை குறித்த சமண, பௌத்தத் தத்துவமும் சமூக மனிதனின் வாழ்க்கை அறம் பேசின. இவை அக்கால சமூக உற்பத்தி முறைக்கு அவசியமான ஒழுக்கங்களாகும். தமிழகத்தில் உருவான இயற்கைத் தத்துவ அமைப்புகள் அற தத்துவங்களாகவும் விளங்கின.
பெளத்தத்தின் வருகை
தமிழர் தத்துவத்தின் தோற்றத்தைக் கண்டறிவதில் சில சிறப்பு பண்புகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதலாவதாக, புவிசார் வேறுபாடுகள் அடிப்படையிலான திணை வாழ்க்கை நிலைமைகளுக்கு ஏற்ற தொன்மங்கள் பலவும் பழந்தமிழகத்தில் நிலவியிருந்தன. இவற்றில் பெரிதும் வளமை சார்ந்த தாய் தொன்மங்களாகவே அமைந்தன. இத்தகைய தாய் தொன்மங்கள் வழியாகவே வாழ்க்கை புரிந்து கொள்ளப்பட்டது. பெண்மையே அனைத்து வளத்துக்கும் ஆதாரம் என்ற நம்பிக்கை வலுவாக இருந்தது. மனிதன் இறந்த பின்னும் வளம் பெறுவது என்ற நோக்கோடு, முதுமக்கள் தாழிகளில் தாய்மையைக் குறிக்கும் வளமை உருவங்கள் செதுக்கப்பட்டன. ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழி இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
இரண்டாவது, நடுகல் வழிபாடு ஆவி நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. போரில் அல்லது பூசலில் மாண்டவனின் ஆவி தனது இனக்குழுவைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை அடிப்படையில் நடுகல் வழிபாடு குறிஞ்சி, முல்லை பகுதிகளில் வலுவாக இருந்தது.
மூன்றாவதாக, இவற்றுக்கு மத்தியில் சமணம், ஆசீவகம், பௌத்தம் முதலியவற்றின் செயல்பாடும் நகரங்கள், வர்த்தகத் தடங்களில் இருந்தது. இவை தத்துவ அமைப்பாகச் செயல்பட்டதை அறிய முடிகிறது. இந்தத் தத்துவ அமைப்புகள் தமிழரின் தொன்மங்களைத் தன்வயப்படுத்தியும் மக்களின் ஏற்பைப் பெற்று இயங்கின.
இத்தகைய சிறப்புப் பண்புகளில் முன்னிலைத் தத்துவமாகத் தொன்ம நம்பிக்கைகளில் இருந்து விடுபட்ட, முன்னிலைப் பொருள் முதல்வாதம் இருந்தது. அதே சமயத்தில் வளர்ச்சியடைந்த தத்துவ அமைப்புகளின் செயல்பாடும் இருந்தது. உதாரணமாக, கொடுமணல் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் நூற்றுக்கணக்கான தமிழ் பெயர்கள் பதித்த ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ‘திஸ்ஸன்’ என்று பதிக்கப்பட்ட ஓடுகளும் உண்டு. ‘திஸ்ஸ’ என்பது தேரவாத பௌத்தத் துறவிகளுக்கு வைக்கப்படும் பட்டப் பெயராகும்.
அதேபோல யோக நிலையில் அமர்ந்த எலும்புக்கூடு ஒன்றும் கண்டறியப்பட்டது. இவை யோகமும், பௌத்தமும் அங்கு இருந்ததைக் காட்டுகிறது. கொடுமணல் அகழ்வாய்வில் அவற்றின் காலம் கி.மு. – 408 என்று கண்டறியப்பட்டது. அசோகர் காலத்துக்கு முன்பே பௌத்தம் நந்தர்கள் காலத்தில் தமிழகம் வந்ததை இது உறுதி செய்கிறது. தொல்லியல் சான்றுகள் அடிப்படையில் தத்துவ அமைப்புகளின் வருகைக்குரிய காலமாக இதனைக் கொள்ளலாம்.
அதற்கும் முன்னர் தொன்மங்களில் இருந்து முன்னிலைத் தத்துவம் வளர்ச்சியடைந்தது. முன்னிலைத் தத்துவத்திலிருந்து தத்துவமாக வளர்வதற்கு வர்க்க சமூகத்தின் ஆக்கம் ஒரு முன் நிபந்தனையாகும். அத்தகைய முன் நிபந்தனை பழந்தமிழ்ச் சமூகத்தில் மருதநிலம் மற்றும் வர்த்தக மையங்களில் உருவான இளம் பருவ அரசு நிர்வாகம் மூலமாகவே உருவானது. கொடுமணல் அகழ்வாய்வின்படி அது கி.மு. – 408 ஆகும். தமிழர் தத்துவத்தின் தோற்றுவாயைத் தற்போதைக்கு கி.மு. – 500 அல்லது கி.மு. – 400 என்று கொள்வதில் தவறேதுமில்லை என்றே தோன்றுகிறது.
திணை நிலமும் சிந்தனையும்
தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிய தத்துவப் போராட்டங்களைச் சங்க காலம் என்றழைக்கப்படும் காலப் பகுதியிலிருந்து காண முடிகிறது. சங்க காலம், சங்கம் மருவிய காலம் என்ற காலப்பகுதி கி.மு. 5 முதல் கி.பி. 5 வரையிலுமான ஆயிரமாண்டுக் காலத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
இந்தக் காலப் பகுதியில் தமிழகம் இரண்டு அடிப்படையான வரலாற்று நிலைமைகள் காரணமாகத் தமக்கே உரிய தனிச் சிறப்புகளைக் கொண்டது.
முதலாவதாக, ‘வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகத்தின்’ எல்லைக்குள் காணப்பட்ட பல வகைப்பட்ட உற்பத்தி முறைகள்.
சங்க காலத்துத் தமிழகம் மூன்று வகையான உற்பத்தி முறைகளைக் கொண்டிருந்தது. குறிஞ்சி, முல்லை, மருதம் என்ற புவிசார் பிரதேசங்களின் அடிப்படையில் இந்த உற்பத்தி முறைகள் அமைந்தன. குறிஞ்சி நில மக்கள் காடுகளில் வாழும் இனக்குழுவினர். வேட்டையாடுதலும், தேன் போன்ற உணவு சேகரித்தலும் குறிஞ்சி நில மக்களின் தொழில். வேளாண்மையின் ஆதி வடிவமான காட்டைத் தீயிட்டுக் கொளுத்தி, தினை, மலை நெல் முதலியன பயிரிட்டனர். இனக்குழுத் தலைவனை ஆதாரமாகக் கொண்ட இனக்குழு நிர்வாகம் பகிர்ந்துண்ணும் பண்பு நிலையை வளர்த்தது. முல்லை நில மக்கள் ஆடு மாடுகளை மேய்க்கும் இனக்குழுவினர். ஆடுமாடு மேய்த்தலைச் சார்ந்த வேளாண்மையும் இவர்கள் தொழில் ஆநிரை கவர்தலும், ஆநிரை மீட்டலுமான பூசல்கள் நிறைந்த வாழ்வில் தலைவனுக்குக் கட்டுப்பட்ட வாழ்க்கை முறை. பருவ மழையை நம்பியதால் பஞ்சம் பாதித்த நிலையும் முல்லை நில வாழ்வில் பாலைத் தன்மைகளை வளர்ந்தன.
மருதநில மக்கள் உழவர்கள். வேளாண்மையே தொழில். உழுதலும் உழுதுவித்து உண்போரும் இதிலேதான் ஏற்பட்டது. ஆற்றங்கரை நீர்ப்பாசனம் நிலைத்த, வளமான உறுதியான வாழ்வை அளித்தது. வேந்தன்/மன்னன் தலைமையிலான அரசு அமைப்பு உருவாகியது. இந்த மூன்று வகையான உற்பத்தி முறைகளிலும் அவற்றுக்கேற்ற சமூக நிறுவனங்கள் நிலவின.
குறிஞ்சி நிலத்தில் இனக்குழு சபையே எல்லா முடிவுகளையும் எடுக்கும். முல்லை நிலத்தில் இனக்குழுத் தலைவர்கள் தலைமையில் சமூகம் இயங்கியது. இந்த இரண்டு வாழ்க்கை முறையிலும் வர்க்கங்களோ – வர்க்க மோதல்களோ இல்லை. அரசு உருவாகவில்லை. மருத நில வாழ்வை ஒட்டியே பண்டைத் தமிழக நாகரிகம் வளர்ந்தது. சமுதாயம் இங்கே வர்க்கங்களாய்ப் பிளவுபட்டிருந்தது. மருத நிலத்து வேளாண்மையிலிருந்து பெறப்பட்ட உபரியை மன்னராட்சி பயன்படுத்திக் கொண்டது. கலை, இலக்கியம், தத்துவம் போன்ற சமூக வாழ்வின் வளர்ச்சியடைந்த வடிவங்கள் இங்கே தோன்றின.
சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் நிலவிய மூன்று சமூக உற்பத்தி முறைகளும் திணை வாழ்க்கை முறை என அறியப்பட்டன. இந்த மூன்றும் அருகருகே தனித்தனியாக, ஒன்றை ஒன்று கலக்காமல், தமது தனித்தன்மைகளோடு இயங்கின. ஆனால், இந்த மூன்றிலும் வளர்ச்சி அடைந்த மருத நில வாழ்க்கையே பிற இரண்டின் மீதும் செல்வாக்கைச் செலுத்தியது. சங்ககாலத் தமிழர் வாழ்வு என்பது சாராம்சத்தில் மருத நில வாழ்வே. மருத நில வாழ்வின் நலன் அடிப்படையிலேயே குறிஞ்சி, முல்லை நில இனக்குழு வாழ்க்கை செயல்பட்டது. ஏனெனில், மூன்று திணை வாழ்விலும் வளர்ச்சியடைந்த வாழ்வு மருத வாழ்வே. அதிலிருந்தே நகர நாகரிகமும், வர்த்தகம் மூலமான உலகத் தொடர்பும் தமிழகத்துக்கும் கிட்டியது.
நிலவுடைமை முறையின் தோற்றம்
கி.மு. நான்காம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டில் குலங்களும், குடிகளும் அழியத் தொடங்கி, நிலவுடைமை முறை தோன்றத் தொடங்கிவிட்டது. விவசாய உற்பத்தி அதிகமானது. அதனையொட்டி வணிகமும் செழித்தது. பல புதிய பொருட்களுக்கான தேவை பிறந்தது. இத்தேவை வணிகத்தை வளர்த்தது. முதலில் நிலக்கிழார் வர்க்கத்திலிருந்து தோன்றிய வணிக வர்க்கம், நிலக்கிழார்களின் நிலப்பிடிப்பை எதிர்த்து நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதுதான் கி.பி. முதல் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரை நிலவிய வர்க்க முரண்பாட்டின் சித்திரம். இனக்குழு வாழ்க்கை முறையிலிருந்து, நிலத்தை அடிப்படையாகக் கொண்ட வேளாண் சமூக வர்க்க ஆட்சி முறைக்கு மாறிய காலத்தை சங்க காலம் எடுத்துக் காட்டுகிறது.
மருத நில வேளாண்மையை ஒட்டித் தமிழகத்தின் நீண்ட கடல் எல்லையில் பெருமணல் உலகம் என்று அழைக்கப்பட்ட நெய்தல் நிலம் இந்தப் புதிய ஆட்சி முறைக்கு வலு சேர்த்தது. கடல் காற்றுகள் மூலம் நாவாய் செலுத்தி வர்த்தகத் தொடர்புகளை மருதநில மன்னர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். ரோமானியர்களுடனான வர்த்தகமும், மௌரியர்களுடனான வர்த்தகமும் தமிழகத்தின் மருதநிலப் பகுதிகளில் நகர நாகரிகத்தை வளப்படுத்தியது. தமிழ்ச் சமுதாயத்தின் உருவாக்கம் இந்த வெளித் தொடர்புகள் இன்றி ஏற்பட்டிருப்பதற்கே வாய்ப்பில்லை. தமிழகத்தின் தனிசிறப்புக்கான இரண்டாவது காரணம் இதிலிருந்தே முகிழ்க்கிறது.
ரோமானியப் பேரரசின் கடல் பயணம், இந்தியத் துணைக் கண்டம் என்ற பெரும் எல்லைக்குள் நிகழ்ந்த மாற்றங்கள் (குறிப்பாக மௌரிய சாம்ராஜ்யத்தின் ஆக்கம்) போன்றவை தமிழகத்தில் நிலவிய திணை வாழ்வைப் பெருமளவு பாதித்தன. இதன் பகுதியாக, தமிழகம் உள்ளிட்ட இந்தியாவெங்கும் கடலோர – ஆற்றங்கரை நகர நாகரிகங்கள் செழித்தோங்கின. வட இந்தியாவில் வேத கால இனக்குழு வாழ்வை உடைத்து முதல் அரசுகள் தோன்றின. சனபதங்கள் என்றழைக்கப்பட்ட ஒரு பிரதேச எல்லைக்குள் அமைந்த சிறு அரசமைப்பு வேளாண்மையை வளர்த்ததோடு, கைவினைஞர்களையும் வர்த்தகத்தையும் வளர்த்தது. ரோமாபுரியிலிருந்து அலெக்சாண்டர் படையெடுப்பை ஒட்டி, மௌரியர்களுடனான வர்த்தகமும், மௌரியர்களின் வணிகப் பயணங்களும், ரோமாபுரியிலிருந்து கடல் வர்த்தகம் அரபுக் கடல் வழியாக இந்தியாவை அடைந்ததும், தமிழகத்தின் வரலாற்றுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.
கடல் வழியாகவும், நிலம் வழியாகவும் வணிகத் தடங்கள் உருவாக்கப்பட்டு அவற்றுக்கான அரசு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இரும்பு, தாதுப்பொருட்கள், விலைஉயர்ந்த கற்கள், தங்கம் போன்ற இயற்கையான ஆதாரங்கள் நிறைந்த தமிழகத்தின் குறிஞ்சி, முல்லை நிலங்களின் வழியே இந்த வணிகத் தடங்கள் நிறுவப்பட்டன. இவற்றை ஆதாரமாகக் கொண்டு உழவுத் தொழிலின் உபரியைச் சாராத இரும்புத்தாது. உயரிய மணிகள் போன்றவற்றின் ஏற்றுமதியின் மீதான வருவாயைச் சார்ந்த முல்லை நில அரசுகள் தோன்றியது. இது தமிழகத்தின் தனித்தன்மைகளில் சிறப்பான ஒன்றாகும்.
போர்களும் பூசல்களும்
வேளாண் நாகரிகம் வளர்வதற்கான அடிப்படை ஆதாரமாக உள்ள இரும்பு முதலிய இயற்கை வரங்களுக்குாகவும், வணிகத் தளங்களுக்காகவும் மருதநிலத்தில் அரசுகளுக்கு இடையே போர்களும் பூசல்களும் நிகழ்ந்தன. இதனால், வீரமே தமிழனின் அடையாளமாக அன்றைய வாழ்நிலையின் அவசியமாகக் காட்டப்பட்டது. இரும்பு போன்ற உலோகங்களின் ஆதாரங்கள் உள்ள நிலப்பகுதிகள் கைப்பற்றப்பட்டு, இரும்புக் கருவிகள் ஆக்கப்பட்டதன் விளைவாக, வேளாண்மை வளர்ச்சியடைய வேளாண் பிரதேசங்கள் வணிகத்தடங்களோடு இணைக்கப்பட்டன. இவை மீது மருதநில அரசுகளான பாண்டிய, சோழ அரசுகள் உறுதியாக்கப்பட்டன; வளம் பெருக்கின.
கி.மு. 3-ஆம் நூற்றாண்டு வாக்கில் மௌரியப் பேரரசு காலத்தில் தென்னிந்தியாவில் இத்தகைய வணிகத் தடங்கள் உருவாக்கப்பட்டன. தட்சிணபாதத்துக்கான (தென்னிந்தியா) வணிகத்தடத்தைப் பற்றி அர்த்த சாத்திரம் பேசுகிறது. அசோகனின் கல்வெட்டு ஒன்று தமிழ் ஆட்சியாளர்களாகப் பாண்டிய, சேர, சோழ, சத்திய புத்திரர் (அதியமான்கள்)களை எடுத்துரைக்கிறது.
வட இந்தியாவில் பேரரசுகள் தோன்றியபோது, வேள்விகளையும், வேதமுறைகளையும் எதிர்த்து சமணமும், பௌத்தமும் இயக்கம் கண்டன. சாதி அடிப்படையிலான சனாதன அமைப்பு தொலைதூர வர்த்தக வளர்ச்சிக்குத் தடையாக இருந்தது.
தொலைதூர வர்த்தகம் வளர, பௌத்த- சமணப் பள்ளிகளும், மடங்களும் பேருதவி புரிந்தன. புதிதாக உருவாக்கப்பட்ட வர்த்தகத் தடங்களில் பௌத்த மடங்களைப் பேரரசுகள் நிறுவின. பல்வேறு சமூகக் குழுக்களையும் ஏற்றுக் கொள்ளும் சமத்துவக் கொள்கையைக் கொண்ட பௌத்தமும், சமணமும் இயல்பாகவே வர்த்தக வளர்ச்சிக்கு உதவின.
தமிழகத்தில் புதிதாகத் தோன்றிய வேந்தர்களின் ஆட்சிமுறைக்கு வர்த்தகம் மூலமான வருவாய் பேரளவிலான அடிப்படையை அளித்தது. பெருமளவிலான நிலப்பரப்பில் வேளாண்மை வளராத நிலையில் நிலத்தின் மூலமான வருவாயைக் காட்டிலும் வர்த்தகம் மூலமான வருவாயை அதிகமாகப் பெற்ற மருத நில அரசுகள் பௌத்தத்தையும் சமணத்தையும் ஏற்றுக் கொண்டன.
தமிழர் தத்துவத்தின் உருவாக்கத்தில் பௌத்த- சமண மதங்களின் கொள்கைகள் மிகவும் அடிப்படையானவை. வேத வைதிகம், சமஸ்கிருதம் வழியேயும், சமண- பௌத்தம், பாலி முதலிய வட இந்திய மக்கள் மொழி வழியேயும் தமிழகம் வந்தடைந்தன.
வேளாண்மை முதன்மை பெறல்
கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் தொடங்கி தமிழகத்தின் முதல் நகர மையங்கள் அழியத் தொடங்கின. இந்தக் காலத்தில் மெளரிய -ரோமானிய வர்த்தகம் முடிவுக்கு வந்தது. இதன் உடனடி விளைவாக, வர்த்தகத்தின் வழியாக வருவாய் பெற்று இயங்கிய சங்க கால அரசுகள் வீழ்ந்தன. வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசுகளின் தோற்றம் நிகழ்ந்தது.
கி.பி. 6-7ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் பல்லவர்களின் ஆட்சி தொடங்கியது. துவக்கத்தில் அவர்களும் சமணர்களாகவே இருந்தனர். ஆனால் புதிய விளைநிலங்களை உருவாக்கும் வட்டாரத்தன்மை வாய்ந்த நிலப்பிரபுத்துவம் வளர்ச்சி அடைந்ததன் காரணமாகவும், குப்தப் பேரரசை ஒட்டி வேதங்களை ஆதாரமாகக் கொண்ட சாதிய மதம் (சைவ – வைணவம்) வளர்ந்ததன் காரணமாக சமணம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. கோயிலை மையமாகக் கொண்ட நிலப்பிரபுத்துவ முறை நிறுவனப்படுத்தப்பட்டது.
மேற்கண்ட வரலாற்று நிலைமைகள் காரணமாகப் பல்லவர் காலத்துக்கு முந்தைய பண்டைய தமிழகத்தில் நிலவிய தத்துவப் போராட்டங்களின் போக்கை நாம் இலக்கண – இலக்கிய நூல்கள் மூலமாக அறிய முடிகிறது.
சமணமும், பௌத்தமும் தமிழகத் தத்துவ அமைப்பில் முதலிடம் பெற்றிருந்தன. வட இந்தியாவில் வைதிக மதத்தை எதிர்த்து சமணமும், பௌத்தமும் போராடின. ஆனால் தமிழகத்தில் சமண- பௌத்த மதங்களின் வருகைக்கு முன் வைதிக மதம் வந்து சேரவில்லை. பின்வந்த வைதிக மதம் ஏற்கெனவே நிலைபெற்ற பௌத்த – சமண சமயங்களை எதிர்த்துப் போராட வேண்டி வந்தது. ஆவூர் மூலங்கிழார் பௌத்தர்களை வெறுத்து வேள்விகளைப் போற்றிப் புறநானூற்றில் பாடியுள்ளதைச் சான்றாகக் கொள்ளலாம்.
சமண பௌத்த மதங்கள் தமிழகத்தின் நகரங்களிலும், வணிகத் தடங்களிலுமே வேரூன்றியது. ஏற்கெனவே இனக்குழு வாழ்வின் பொது உணர்வு நிரம்பிய தமிழ் மக்களின் திணை வாழ்வில் இவ்விரு சமயங்களும் பரவியதில் வியப்பேதுமில்லை. இதன் காரணமாக சைவமும், வைணவமும் கி.பி. 500 முதல் 1500 வரையிலான ஆயிரமாண்டுகளில் சமண – பௌத்த சமயங்களை வீழ்த்தியே தன்னை நிலைப்படுத்திக் கொண்டன.
தொல்காப்பியம் காட்டும் சிந்தனை
உலகெங்கும் ஆன இனக்குழு மக்களின் சுருத்துலகின் சிந்தனைக்கு அடிப்படையாய் அமைவது உலகாயதம் அல்ல; முன்னிலை உலகாயதம் (Proto Materialism) என்பதே அறிஞர்கள் முடிவு, தமிழ்ச் சமுதாயத்திலும் முதல் தத்துவக் கருத்துகள் இனக்குழு உலகக் கண்ணோட்டத்தின் எச்சமாக முன்னிலை உலகாயதக் கருத்துகளாகவே முகிழ்த்தன.
இயற்கை பூதங்களால் (பொருட்களால்) ஆக்கப்பட்டது என்பதே தமிழரின் முதல் தத்துவ நிலை. தொல்காப்பியம் முழுதும் இந்த முன்னிலை பொருள் முதல் வாதத்தையே எடுத்துரைக்கிறது. “
காற்று மூலமாக எழுப்பப்படும் ஒலியை அடிப்படையாகக் கொண்டே தமிழ் எழுத்துக்களைத் தொல்காப்பியம் வகைப்படுத்துகிறது. சொல் வகைகளை உயர்திணை, அஃறிணை என பிரிக்கும்போதும் மக்களை உயர் திணையாகவும், ஏனைய உயிர்களை அஃறிணையாகவும் தொல்காப்பியம் பிரிக்கிறது. கடவுள் என்ற கருத்தையோ, ஆன்மா பற்றிய கருத்தையோ தொல்காப்பியம் வெளிப்படுத்தவில்லை.
நிலம், நீர், தீ, வளி, விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் –
தொல்காப்பியம் 1589
என்ற பூத வாழ்நிலையை எடுத்துரைக்கும் தொல்காப்பியம் நிலத்தையும், பொழுதையுமே (950) முதல் பொருளாகவும் தெய்வம், உணவு, விலங்குகள், மரம், செடி கொடிகள், பறவை, தொழில், யாழ் போன்றவற்றைக் கருப்பொருளாகவும் (964) முன் வைக்கிறது.
ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு தெய்வத்தை முன் வைக்கும் தொல்காப்பியம் அவற்றை அந்த நிலத்தைச் சார்ந்த தெய்வமாகவே முன் வைக்கிறது. அந்தத் தெய்வங்கள் திணை வாழ்வின் இனக்குழு நம்பிக்கைகளின் வடிவங்கள் மட்டுமே ஆகும். நிலத்துக்கும், பொழுதுக்கும் மேலான உபநிடதக் கடவுள் கொள்கை தொல்காப்பிய காலத்தில் இல்லை.
தொல்காப்பியத்தாலும், சங்க இலக்கியங்கள் பலவற்றாலும் முன் வைக்கப்படும் தெய்வங்கள் இனக்குழுச்சார்பு தெய்வங்களாகவே உள்ளன. அவை ‘இறை’ அல்ல; பரம்பொருள் அல்ல.
பரிபாடல் தவிர்த்த சங்க இலக்கியங்களில் பௌத்த மதங்களின் கருத்துகளே மேலோங்கியிருப்பதைக் காண முடியும். பௌத்த – சமண சமயக் கருத்துகளும் தமிழ்ச் சமூகத்தின் இனக்குழு வாழ்வின் முன்னிலை பொருள் முதல்வாதநிலைக்கு ஏற்பவே எடுத்துரைக்கப்பட்டது. சங்க இலக்கியங்களில் எடுத்துரைக்கப்படும் வினை, ஊழ் பற்றிய கோட்பாடுகளும் சமண- பௌத்த நிலைகளைச் சார்ந்ததே ஆகும்.
சங்க இலக்கியங்களில் பின்னாளில் இணைக்கப்பட்ட பரிபாடல், காலத்தால் – பிந்தையது என்பார் பேராசிரியர் வையாபுரிபிள்ளை. ஆயினும், சங்ககாலச் சமுதாயத்தில் சமணம்- பௌத்தம் மட்டும் தத்துவக் கருத்துகளாக உலவவில்லை. சமண- பௌத்த கருத்துகள் மேலோங்கி இருந்தாலும், வேத வழி சார்ந்த ஆரிய மதக் கருத்துகளும் சங்கப் பாடல்களில் காணக் கிடக்கின்றன. தொல்காப்பியத்திலும் சங்கப் பாடல்களிலும் அள்ளித் தெளித்தது போல ஆங்காங்கே காணப்படும் வைதிக மத நிலைகள், அந்நாளில் வைதிகம் தமிழகத்தில் பல போக்குகளின் ஒன்றாக மட்டுமே இருந்ததைக் காட்டுகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
