ஒன்றிய அரசின் பட்ஜெட் 2024-25: திக்குதெரியாதகாட்டில்…
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
அறிமுகம்
ஒன்றிய அரசின் 2024-25க்கான வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. உண்மையில், பாஜக, மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியிருப்பதை, 2024 பொது தேர்தல்கள் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ள பின்னணியில், கடந்த கால பட்ஜெட்டுகளில் இருந்து, இந்த ஆண்டு பட்ஜெட் வேறுபடும் என்பது போன்ற ஊகங்களை கார்ப்பரேட் ஊடகங்கள் உலாவ விட்டன. ஆனால், பத்தாண்டு காலமாக பாஜக-ஆர்எஸ்எஸ் அரசு பின்பற்றிவரும், அதே மக்கள்-விரோத, விவசாயிகள்-விரோத கொள்கையைத்தான் என்டிஏ கூட்டணி சார்பாக பாஜக முன்மொழிந்துள்ள பட்ஜெட் பின்பற்றுகிறது. தெலுகு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய தனது கூட்டணி கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை பாஜக முற்றிலும் புறக்கணிக்காவிட்டாலும், அவர்கள் ஆளும் ஆந்திர பிரதேசம் மற்றும் பிஹார் மாநிலங்களுக்கு, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற பன்னாட்டு முகாமைகளிடம் பேசி, நிதி உதவிக்கு ஏற்பாடு செய்வதாக பட்ஜெட் தெரிவிக்கிறது. ஆனால், இவை மானியமா கடனா என்பதெல்லாம் தெளிவாக இல்லை. இருப்பினும், உடனடியாக ஓரு மாற்றை நோக்கி செல்ல இயலாது என்பதால், பாஜகவின் கூட்டணி கட்சிகள் இதனை ஊதிப் பெரிதாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றன. இந்தியா கூட்டணி கட்சிகள், பிற மாநிலங்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை என்று சரியாகவே குரல் எழுப்பியுள்ளன. ஒன்றிய பட்ஜெட்டின் தமிழக விரோத அம்சங்களை அம்பலப்படுத்தி, இயக்கங்கள் நடந்துள்ளன. எனினும், இக்கட்டுரையில் நமது கவனம், பிரதானமாக விவசாயிகள், விவசாய தொழிலாளிகள், மற்றும் இதர உழைக்கும் மக்கள் மீதான தாக்கம் பற்றியே அமையும்.
வழக்கம் போல, பட்ஜெட் தாக்கலுக்கு முந்தைய நாள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2023-24க்கான பொருளாதார ஆய்வறிக்கை ஒன்றிய அரசின் புகழ் பாடியது. உலகிலேயே வேகமாக வளர்ந்துவரும் நாடு இந்தியாதான் என்ற தவறான கருத்தை மீண்டும் அங்கும் இங்கும் முன்வைத்தது. தொடரும் கடும் விலைவாசி உயர்வு பற்றியும், கட்டுக்கடங்காமல் அதிகரித்துவரும் வேலையின்மை பற்றியும், எந்த வெளிச்சமும் பாய்ச்ச இயலாமல் ஆய்வு அறிக்கை திக்கு தெரியாத காட்டில் திணறும் முயற்சியாகவே அமைந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக பொதுத்துறை முதலீடுகள்தான் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு அளித்துள்ளன என்ற உண்மையை அரைமனதுடன் அங்கீகரிக்கும் ஆய்வறிக்கை, அதேநேரத்தில், இனி பொதுத்துறை விலகி தனியார் துறையிடம் முதலீட்டுப் பணிகளை ஒப்படைக்க வேண்டும் என்று கூவுகிறது. இந்திய பொருளாதார வளர்ச்சியில் அரசின் பங்கு குறைந்து கொண்டே போக வேண்டும்; இந்திய, அந்நிய பெரும் கம்பனிகளிடம் இந்திய பொருளாதாரம் ஒப்படைக்கப்படவேண்டும் என்பதே ஆய்வறிக்கையின் சாராம்சமாக உள்ளது.
வளர்ச்சிக்கான முனைவு இல்லை
பட்ஜெட் தரவுகள் பற்றியும், பொதுவாக சமகால ஒன்றிய அரசு முன்வைக்கும் பொருளாதார தரவுகள் பற்றியும், அவை நம்பக தன்மை குறைந்தவை என்பதே பொது கருத்து. இதில் நாமும் உடன்படுகிறோம். இருப்பினும், அத்தரவுகளின்படியே பார்த்தாலும், ஒன்றிய பட்ஜெட் இந்திய பொருளாதாரத்தில் கிராக்கியை உயர்த்தி வளர்ச்சியை ஊக்குவிக்காது என்பது தெளிவு. கடந்த நிதி ஆண்டான 2023-24இல் ஒன்றிய அரசு மேற்கொண்ட மொத்த செலவின் திருத்தப்பட்ட மதிப்பீடு, இப்பொழுது அரசு முன்வைத்துள்ள பட்ஜெட் ஆவணங்களின்படி ரூ. 44.90 லட்சம் கோடி. நடப்பு நிதி ஆண்டான 2024-25க்கு ஒன்றிய அரசின் மொத்த செலவின் பட்ஜெட் மதிப்பீடு ரூ. 48.21 லட்சம் கோடிதான். இது 7.37 சதவிகித உயர்வுதான். பணவீக்கமே 10%-ஐ நெருங்கி இருப்பதால், அரசின் செலவு உண்மையளவில் கடந்த ஆண்டைவிட குறைவுதான். மேலும், கடந்த ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8%க்கும் அதிகம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளதை கணக்கில் கொண்டால், தேச உற்பத்தி மதிப்பின் சதவிகிதமாக, அரசின் மொத்த செலவு மேலும் குறைவு. இது, உள்நாட்டு பொருளாதாரத்தில் கிராக்கியை வீழ்ச்சி அடையச் செய்யும். பொருளாதார மந்தநிலை தொடரும்; தீவிரமடையும்.
2019-20 கோரோனா நோய்க்கு முந்தைய நிதி ஆண்டு. அந்த ஆண்டில் இருந்து 2023-24 முடிய தேச உற்பத்தியில் ஏற்பட்ட உயர்வு 20%தான் என்று ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. இதன் பொருள், ஏற்கெனவே இந்திய பொருளாதாரம் மந்தகதியில்தான் வளர்கிறது என்பதாகும். இந்த ஆண்டு மந்தநிலை சற்று தீவிரமாகவே ஒன்றிய பட்ஜெட் வழிசெய்கிறது. வேலையின்மை பிரச்சினை, பாஜக அரசின் பத்தாண்டு ஆட்சியில் பூதாகாரமாக அதிகரித்துள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள பட்ஜெட் தயாராக இல்லை. மந்தநிலை, பணவீக்கம் மற்றும் வேலையின்மை பிரச்சினைகள் வரும் மாதங்களில் தீவிரமடையும்.
பெரும்பணக்காரர்கள், கார்ப்பரேட்டுகள் மீதான வர்க்க பாசம்
நடந்துமுடிந்த தேர்தலில் முன்னுக்கு வந்த ஒரு முக்கிய பிரச்சினை வரிக் கொள்கை பற்றியதாகும். கடந்த 30-40 ஆண்டுகளில் தாராளமய கொள்கைகளின் காரணமாக முதலாளித்துவ நாடுகளில் சொத்து மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகள் மிக வேகமாக அதிகரித்து வந்துள்ளன. இதற்கு எதிராக இன்று பல இயக்கங்கள் போராடி வருகின்றன. பெரும் செல்வந்தர்கள் மீது கூடுதல் வரிகள் போட வேண்டும் என்ற குரல் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கிறது. இந்தியாவிலும், தேர்தலின் பொழுது இக்குரல்கள் ஒலித்தன. பல நாடுகளில் சொத்துவரி உள்ளது. அது முக்கிய பங்கு ஆற்றுகிறது. ஆனால் பாஜக இதை ஏற்க மறுத்தது. செல்வந்தர்கள் மீதான சொத்துவரியை பாஜகவின் மேனாள் நிதி அமைச்சர் அருண் ஜய்ட்லி 2016-17 நிதி நிலை அறிக்கை வாயிலாக ரத்து செய்தார். (காங்கிரஸ் கட்சி ஒன்றிய அரசில் ஆட்சிசெய்த பொழுதும் சொத்து வரியை நீக்குவது நடந்தது. மறைந்த மேனாள் குடியரசுத்தலைவர் திரு வெங்கடராமன் அவர்கள் ஒன்றிய நிதி அமைச்சராக 1981 பட்ஜெட் மூலம் சொத்துவரி நீக்கப்பட்டது. ஆனால் பின்னர் பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சராக இருந்த பொழுது, சொத்துவரி மீண்டும் கொண்டுவரப்பட்டது.) பல ஆண்டுகளாக இந்தியாவில் சொத்துவரியும் இல்லை; வாரிசு வரியும் இல்லை. மிக மிக அதிகமாக சொத்து வைத்திருப்பவர்கள் மீதாவது ஒரு குறைந்தபட்ச சொத்துவரி மற்றும் வாரிசு வரி போடுவது நாட்டு வளர்ச்சிக்கு முதலீடுகளை மேற்கொள்ள அரசுக்கு உதவும். ஒரு திருமணத்திற்கு 5,000 கோடி ரூபாய் செலவு செய்யும் பெரும் செல்வந்தர்கள் நம் நாட்டில் உள்ளனர்! ஆனால் பாஜக கூட்டணி பட்ஜெட் இதை ஏற்கவில்லை. மாறாக, வெளிநாட்டு கம்பனிகள் மீது இருந்த 40% லாப வரியை 35% ஆக குறைத்துவிட்டனர். மறுபுறம், கடுமையான ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை மூலம் அனைத்து உழைக்கும் மக்களையும் சிறுகுறு தொழில் முனைவோரையும், வணிகர்களையும், சிறுகுறு விவசாயிகளையும் ஒன்றிய அரசு கசக்கி பிழிகிறது. நடப்பு நிதி ஆண்டில் மட்டும் ரூ. 21 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஜிஎஸ்டி மூலம் மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டது. ஏகபோக பெரும் கம்பனிகளோ அரசுக்கு கொடுக்கும் ஜிஎஸ்டி வரியை விற்கும் பொருள் அல்லது சேவையின் விலையில் ஏற்றி விடுகின்றன. அவர்களுக்கு பாதிப்பு மிகக்குறைவுதான்.
உழைப்பவர்–செல்வந்தர் இடைவெளி மேலும் கூடுகிறது
இன்றைய இந்தியா உலகிலேயே மிக அதிகமான பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் கொண்ட நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
2023 இல் வெளிவந்த ஆகஸ்ஃபாம் (OXFAM) அறிக்கை சொல்கிறது:
- மேல்மட்ட 10% இந்தியர்களிடம் நாட்டின் சொத்து மதிப்பில் 77% உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் உருவான செல்வத்தில் 70% உயர்மட்ட 1% நபர்கள் கைக்குள் சென்றது. மறுபுறம், 67 கோடி இந்திய மக்களின் செல்வம் 1%தான் அதிகரித்தது.
- 2000 இல் இந்தியாவில் அமெரிக்க டாலர் கணக்கில் 100 கோடி மற்றும் அதற்கும் அதிகமாக சொத்து வைத்திருந்தவர்கள் ஒன்பது பேர்தான். 2017 இல் இது 101 ஆக உயர்ந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 169 ஆகியுள்ளது.
- ஐந்து பெரும் கார்ப்பரேட் கம்பனிகளின் ஏகபோக ஆதிக்கம் இந்திய தொழில் துறையில் மேலும் கூடியுள்ளது.
- ஆண்டுதோறும் சுகாதாரத்திற்கான செலவுகளின் உயர்வால் 6.3 கோடி இந்தியர்கள் வறுமையில் தள்ளப்படுகின்றனர்.
மக்களுக்கான மானியங்கள் வெட்டு
பெரும் செல்வந்தர்களுக்கும், இந்நாட்டு, பன்னாட்டு பெரும் கம்பனிகளுக்கும் வரிச்சலுகைகளையும் வேறு பல சலுகைகளையும் வாரி வழங்கும் ஒன்றிய அரசு, தனது வரவுகளை பெரும்பாலும் மக்களை வாட்டி வதைத்து பெறுகிறது. ஆனால் மக்களுக்கு மிக அவசியமான செலவுகளை செய்ய மறுக்கிறது. கல்வி, ஆரோக்கியம், ஊரக வளர்ச்சி, வேளாண் துறை போன்ற துறைகளுக்கான அரசின் ஒதுக்கீடுகள் விலைவாசி உயர்வுக்கு ஈடு கொடுக்காமல், உண்மை அளவில் குறைந்து வருகின்றன. சென்ற 2023-24 நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்ட குறைவான மானியங்களையும் கூட ஒன்றிய அரசு வெட்டியுள்ளது. எடுத்துக்காட்டாக, 2023-24இல் உரமானியம் ரூ. 1,88,894 கோடி. இது 2024-25இல் ரூ 1,64,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் உணவு மானியம் ரூ. 2,12,332 கோடியில் இருந்து ரூ 2,05,250 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. உர மானியத்தையும் உணவு மானியத்தையும் வெட்டிய ஒன்றிய அரசு, விவசாயிகளுக்கு சாமிநாதன் ஆணயம் பரிந்துரைத்த குறைந்த பட்ச ஆதரவு கொள்முதல் விலையை அறிவிக்கவும் இல்லை. தக்க அளவிலும், உரிய நேரத்திலும் கொள்முதல் செய்யவும் இல்லை. வேளாண் தொழிலுக்கான அடிப்படை கட்டமைப்பு, ஆராய்ச்சி, விரிவாக்க சேவைகள் போன்றவற்றிற்கான முதலீடுகளையும் ஒன்றிய அரசு செய்ய மறுக்கிறது. மறுபுறம், மின் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. ஒன்றிய அரசு மின் துறையை தனியாருக்கு தாரைவார்த்துக்கொண்டே இருக்கிறது.
ஊரக தொழிலாளிகளின் மிக முக்கிய வருமான ஆதாரம் ரேகா திட்டம். இத்திட்டத்தை அழித்தொழிக்க பாஜக தொடர்ந்து முயன்று வருகிறது. சென்ற ஆண்டு செலவிடப்பட்ட தொகையான ரூ 86,000 கோடி தான் நடப்பு ஆண்டுக்கும் ஒதுக்கீடாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சட்டப்படி பதிவு செய்யும் அனைத்து ஊரக குடும்பங்களுக்கும் குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலையும் உரிய கூலியும் தரவேண்டும். ஆனால் ஐம்பது நாட்கள் கூட வேலை தரப்படுவதில்லை. கூலி பாக்கியும் கணிசமாக உள்ளது. தொழிலாளிகளை அவமானப்படுத்தும் வகையிலான நெறிமுறைகளும் புகுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் விவசாய சங்கம் செய்த ஆய்வில், ஊரக கூலித் தொழிலாளிகளின் துயர நிலை வெளிவந்துள்ளது. வட மாநிலங்களின் நிலைமை இன்னும் மோசமாகவே இருக்கும். சட்டப்படி தக்க கூலி கொடுத்து, ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 100 நாள் வேலை அளிக்கப்படுவதை உறுதிப்படுத்த, சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் ரேகா திட்டத்திற்கு ஒதுக்கப்படவேண்டும். ஆனால் பாஜகவின் நோக்கம் ரேகா திட்டத்தை அமலாக்குவதல்ல; அதை அழித்தொழிப்பதுதான்.
கோடிக்கணக்கான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளிகளும், நாடு தழுவிய தொழிற்சங்கங்களின் ஆதரவுடன், ஓர் ஆண்டுக்கும் மேலாகப் போராடி, 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்னுயிர் நீத்த பின்பு, ஒன்றிய மோடி அரசு வேறு வழியின்றி, பாராளுமன்றத்தில் ஜனநாயக விரோதமாக அது நிறைவேற்றிய மூன்று வேளாண் விரோத கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களை குப்பை தொட்டியில் போட வைத்தனர். பின்னர், எங்கெல்லாம் விவசாயிகளின் போராட்டம் மிக வலுவாக நடந்ததோ, அங்கெல்லாம் நடந்து முடிந்த தேர்தலில், பல பாஜக/ஆர்எஸ்எஸ் வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர். நாடு முழுவதும் இத்தேர்தலில் பாஜக/ஆர்எஸ்எஸ் தலைமையிலான கூட்டணி பின்னுக்கு தள்ளப்பட்டது. இனி நமக்கு 400 மக்களவை இடங்கள் என்று கொக்கரித்து தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய பாஜக, இருந்த பெரும்பான்மையை இழந்து, இன்று ஐக்கிய ஜனதா தளத்தின் தயவிலும், தெலுகு தேசம் கட்சியின் தயவிலும்தான் ஒரு கூட்டணி அரசை நடத்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளது. ஆனால் தனது தேர்தல் பின்னடைவில் இருந்து பாஜக/ஆர்எஸ்எஸ் பாடம் கற்றதாக தெரியவில்லை. மாறாக, தனது விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் விரோத கொள்கைகளை அது தொடர்கிறது.
வேலைவாய்ப்பும் பட்ஜெட் சுடும் வடையும்
ஒன்றிய பட்ஜெட், வேலையின்மை பிரச்சினையில் பெரும் முனைவுகள் மேற்கொண்டுள்ளதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. உண்மையில், இது முற்றிலும் பொய்யான பிரச்சாரம். பட்ஜெட்டில் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்கள், வேலையில் சேர்பவருக்கு அளிக்கும் ஊக்கத்தொகை, அதிகபட்சமாக ரூ 15,000 என்ற அளவில் மிகக்குறைவு. இதுவே முதலாளி தான் தரும் கூலியை குறைத்துக்கொள்ள வாய்ப்பளிக்கும். அதுமட்டுமல்ல. வேலையில் சேர்க்கப்படும் ஒவ்வொரு தொழிலாளி சார்பாகவும் முதலாளி கட்டவேண்டிய வைப்பு நிதி சந்தாவின் கணிசமான பகுதியை அரசே கட்டும் என்கிறது பட்ஜெட். இதனால் ஒவ்வொரு தொழிலாளி சேர்க்கப்படும் பொழுதும் ரூ 72,000 தொழிலாளி வாய்ப்பு நிதியை நிறுவனம் சார்பாக அரசு கட்டும். அதாவது, வேலையில் ஒருவரை சேர்க்க முதலாளிக்கு அரசு மானியம் வழங்குகிறது. இப்படி வேலையில் சேர்பவர் பணியில் தொடர்ந்து இருப்பார் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது! மிகப்பெரிய 500 கம்பனிகள் ஒரு கோடி தொழிலாளிகளுக்கு ஒரு ஆண்டு பயிற்சி தர பரிந்துரைக்கும் பட்ஜெட் திட்டம் வேலை வாய்ப்பு திட்டமல்ல. “திறன்” மேம்பாட்டுக்கான திட்டம் என்று கூட சொல்ல முடியாது. வேலையின்மைக்கு காரணம் “திறன்” இல்லாத தொழிலாளிதான் என்ற மோசமான ஆளும் வர்க்க பிரச்சாரத்தின் பகுதிதான் பட்ஜெட் முன்வைக்கும் இத்திட்டம். “வேலை” சார்ந்த பட்ஜெட் திட்டங்கள் முதலாளிகளுக்கு மானியம் வழங்கும் ஏற்பாடு தான். வேலையின்மை பிரச்சினையின் தீவிரத்தை குறைக்க இவை எந்த வகையிலும் உதவாது.
வேலை இன்மையை எதிர்கொள்ள, கிராமப்புறங்களில் சிறு குறுவிவசாயிகள் விவசாயத்தில் லாபம் காண வேண்டும். சிறு-குறு தொழில் முனைவோர் லாபம் ஈட்ட வேண்டும். தொழில்கள் கிராமப்புறங்களில் விரிவடைய வேண்டும். இதற்கெல்லாம் அரசு பல முதலீடுகளை மேற்கொள்வதோடு, அரசிடமும் உச்சவரம்பிற்கு மேல் தனியாரிடமும் உள்ள நிலங்களை, நிலமற்ற ஊரக வேளாண் மற்றும் இதர உடல் உழைப்பு தொழிலாளிகளுக்கு வழங்கி, வேளாண் தொழில் மற்றும் பிற தொழில் நடத்த அவர்களுக்கு அரசு உதவ வேண்டும். சிறு-குறு விவசாயத்தையும், சிறு-குறு தொழில்களையும், அறிவியல்-தொழில்நுட்ப ரீதியாகவும், சந்தை விரிவாக்க ரீதியாகவும், வலுப்படுத்துவதே சரியான கொள்கை. கிராமப் பொருளாதாரம் மேம்பட்டால் புலம் பெயர் தொழிலாளிகளின் நிலைமையும் மேம்படும். ஆனால் ஒன்றிய அரசின் பட்ஜெட் இவற்றைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளவில்லை; கவனம் தரவில்லை.
மாநிலங்களுக்கு வஞ்சனை
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை மாநிலங்களை வஞ்சிக்கிறது என்பதை குறிப்பிட்டதாக வேண்டும். இதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் சொல்லலாம். சர்ச்சார்ஜ், ஸெஸ் மூலம் ஒன்றிய அரசு வரிவருமானம் திரட்டும் பொழுது, அதில மாநிலங்களுக்கு பங்கு கிடையாது. அதேபோல் ரிசர்வ் வங்கியின் உபரியில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் கூடுதலாக ஒன்றிய அரசு பெற்றுள்ளது. ரிசர்வ் வங்கியின் உபரிக்கு மாநில அரசுகள் கட்டும் வட்டியும் ஓரு காரணம். ஆனாலும் ஒன்றிய அரசுக்கு ரிசர்வ் வங்கியால் தரப்பட்டுள்ள உபரியில் ஒரு பைசா கூட மாநிலங்களுக்கு இல்லை! கொடிய கோரோனா காலத்திலும், மாநில அரசுகளை அதிக வட்டியில் பணச்சந்தைகளில் கடன் வாங்க வைத்தது பாஜக ஒன்றிய அரசு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
மக்கள் மீது வட்டிச்சுமை
ஒன்றிய அரசு பட்ஜெட்டின் விவரங்களை பரிசீலித்தால் ஒரு முக்கிய உண்மை புலனாகும். அரசின் செலவுகளில் ஒரு இனம் “வட்டி கொடுத்தல்” (Interest Payments). 2022 – 23 நிதியாண்டில் அரசின் நடப்பு செலவுகள் பட்டியலில் வட்டி செலவு ரூ 9,28,517 கோடி. இது 2023-24 இல் திருத்தப்பட்ட மதிப்பீட்டின் படி ரூ 10,55,427 கோடியாக உயர்ந்தது. 2024-25 பட்ஜெட் மதிப்பீடுகளின்படி இத்தொகை ரூ 11,62,940 கோடியாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகம் முதலாளித்துவ ஊடகங்களால் விமர்சிக்கப்படும் உணவு, உரம், எரிபொருள் ஆகிய மூன்று வகை முக்கிய மானியங்களுக்கான செலவு ரூ 5 லட்சம் கோடிக்கும் குறைவு. அரசின் ரூ 11,62,940 கோடி வட்டி செலவு என்பது அரசு பத்திரங்களை வாங்கி, அரசுக்கு கடன் அளிக்கும் திறன் பெற்ற மிகக் குறைவான எண்ணிக்கையிலான பெரும் கம்பனிகள், பெரு முதலாளிகள், நிலப் பிரபுக்கள், இதர உயர் வருமான பகுதியினர் ஆகியோரின் வருமானமாகும். இந்த வட்டி எங்கிருந்து அரசால் கட்டப்படுகிறது? அனைத்து உழைக்கும் மக்களையும் ஜிஎஸ்டி உள்ளிட்ட மறைமுக வரிகள் மூலம் தாக்கி அரசு வசூல் செய்யும் வரி வருமானத்தில் இருந்துதான் போகிறது. இது பட்ஜெட்டின் வரக்கத் தன்மையை “பளிச்” என்று படம் பிடித்துக் காட்டுகிறது. உழைக்கும் மக்களை முதலாளி வர்க்கம் இருமுறை சுரண்டுகிறது. உற்பத்தியில் நேரடியாக சுரண்டுகிறது; உபரி மதிப்பை கையகப்படுத்துகிறது. மீண்டும், அந்த உபரியில் ஒருபகுதியை அரசுக்கு கடனாக கொடுத்து, வட்டிவருவாய் ஆக தனது சுரண்டலை தொடர்கிறது.
நிறைவாக
மொத்தத்தில், தேர்தலில் மக்கள் வெளிப்படுத்திய கோபத்தை பாஜக கூட்டணி அரசு புறந்தள்ளியிருக்கிறது. மக்களை திரட்டி ஒன்றிய அரசுக்கு மீண்டும் பாடம் புகட்டுவோம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
