
அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளின் தாக்கம் குறித்து…
பிரகாஷ் காரத்
கேள்வி 1: தூதரக உறவுகளில் தனிமைப்படுத்தல், கடுமையான சர்வதேச தடைகள், உள்நாட்டுப் பொருளாதாரத் துயரங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில், கணிக்க முடியாத வகையில் அதிகரித்துக் கொண்டே போகும் உலகச் சூழலில் வடகொரியா எவ்வாறு தன் சோஷலிச கொள்கைகளை தன்னம்பிக்கையோடு பராமரிக்க இயலுகிறது? இன்று அதன் சோஷலிசத் திட்டம் எதிர்கொள்ளும் முக்கியமான கட்டமைப்பு மற்றும் தத்துவார்த்த சவால்கள் எவை?
2006-இல் முதல் முறையாக அணு ஆயுத சோதனை நடத்தியதன் விளைவாக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையால் டெமாக்கிரட்டிக் பீப்பல்ஸ் ரிபப்ளிக் ஆஃப் கொரியா (வடகொரியா) தொடர் தடைகளுக்கு உள்ளாகியது. 1950-இல் வடகொரியப் படைகளின் தெற்கு நோக்கிய முன்னேற்றத்தைத் தடுக்க அமெரிக்க மற்றும் அதன் கூட்டணிப் படைகள் தலையிட்டதே கொரியா, வட கொரியா, தென் கொரியாவாக பிரிவதற்கான காரணமாகும். சீனப் படைகள் வடகொரியாவுக்கு உதவின. மூன்றாண்டுப் போருக்குப் பிறகு ஜூலை 1953-இல் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி, 38 ஆவது இணையில் (parallel) போர் நிறுத்தக் எல்லை நிர்ணயிக்கப்பட்டது. இன்றும் இதுவே வட கொரியா, தென் கொரியாவுக்கு இடையேயான ராணுவ ரீதியான எல்லையாக உள்ளது.
இன்றும், ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படைத் தளங்களில் தென்கொரியாவில் இருக்கிறார்கன. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க மற்றும் தென்கொரிய இராணுவங்களின் கூட்டு இராணுவப் பயிற்சிகள் அங்கு நடத்தப்படுகின்றன. இவை யாவும் வடகொரியாவைக் குறிவைத்தே நிகழ்த்தப்படுகின்றன.
இந்தப் பின்புலத்தை நினைவில் கொண்டே வடகொரியாவின் தற்போதைய நிலைப்பாடுகளை நாம் பேசவேண்டும். வடகொரியாவின் அந்நிய செலவாணியை தடுக்கும் வகையில் அதன் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் அதன் பொருளாதாரத்தை நிச்சயமாகப் பாதித்துள்ளன. வடகொரியாவில் ஏராளமான இரும்புத் தாது மற்றும் கனிம வளங்கள் உள்ளன. அதேநேரம் விவசாய நிலங்கள் குறைவு. எனவே, உணவு தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் அதற்கு உள்ளது. வர்த்தக தடைகளின் காரணமாக அம்மக்களின் வாழ்வை கடுமையாக பாதித்தன. இந்த நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் வெள்ளம், வரட்சி ஆகிய காரணங்களால் அவர்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனபோதும் வடகொரியாவை ஆட்சி செய்யும் கொரிய தொழிலாளர்கள் கட்சி (Workers’ Party of Korea), இத்தகையச் சிக்கல்களை அவ்வப்போது சமாளித்து வருகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தொடர் இராணுவச் சூழ்ச்சிகளுக்கும் நிரந்தர அச்சுறுத்தலுக்கும் வடகொரியா உள்ளாகியுள்ளது. எனவே, அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் உருவாக்குவது தனது பாதுகாப்பிற்கும் இறையான்மையைப் பாதுகாப்பதற்கு இன்றியமையாததாக வடகொரியா உணர்கிறது. அதன் விளைவாக, சீனா இதை ஏற்றுக்கொள்ளாத போதிலும் அணு ஆராய்ச்சிகளையும், ஏவுகணை சோதனைகளையும் மேற்கொண்டுவருகறது.
கோவிட் காலகட்டம் வடகொரியப் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்தது. ஆனால், 2023 முதல், அதன் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துவருகிறது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 3.1 சதமாக வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத வகையில் தொழிற்துறை உற்பத்தி 4.9 சதம் அதிகரித்துள்ளது. சீனாவுடனான பொருளாதார உறவுகள் வளர்ந்துள்ளன. சீனாவின் ஆதரவே வடகொரியாவை திறனுள்ள நாடாக மாற்றியுள்ளது. கடுமையான தடைகளை எதிர்கொள்ள அதுவே அவர்களுக்கு துணை புரிகிறது.
சமீபத்திய ஆண்டுகளில், ரஷ்யாவும் வடகொரியாவும் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தியுள்ளன. பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்திலும் கடந்த ஆண்டு இந்நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. சீனா மற்றும் ரஷ்யாவுடனான வடகொரியாவின் நெருக்கமான உறவு உலக அரசியலில் அதனை ஒரு சிறந்த இடத்தில் வைத்துள்ளது.
கொரியாவின் தொழிலாளர்கள் கட்சி ஒரு மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியாகும். அதேநேரம் அதன் ஆட்சி அதிகார அமைப்பில் உள்ள தலைமை (தனிநபர்) வழிபாட்டு (Personality Cult) ஒரு சிதைவாக உள்ளது. கிம் ஈல் சுங் கொரியப் புரட்சியின் சிறந்த தலைவராக இருந்தார்; ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை அவர் வழிநடத்தினார். அவரது தலைமையின் கீழ்தான் வடகொரியாவில் ஒரு சோசலிச அரசின் அடித்தளம் அமைக்கப்பட்டது. எனினும், கிம் ஈல் சுங்கை வழிபட்ட அதே நிலை அவரது மகன் கிம் ஜோங் ஈலுக்கும் நீண்டது. அவருக்குப் பின்னர் தற்போதைய தலைவர் கிம் ஜோங் உன் ஆட்சிக்கு வந்தார். இந்தக் தனிநபர் வழிபாட்டை சிபிஐ(எம்) விமர்சித்துள்ளது. தனிநபர் வழிபாடு இருந்தபோதும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தல் நீங்கும் பட்சத்தில் அங்கு பொதுவுடைமை சமூக அமைப்பும், சோசலிச வளர்ச்சிக்கான அடித்தளமும் உருவாகும் வாய்ப்புக்கள் உள்ளன.
கேள்வி 2: வெனிசுவேலா, கூபா மீதான வாஷிங்டனின் தீவிரமான அழுத்தம், பிரேசில் அதிபரான லூலா தலைமையின் கீழான இடதுசாரி கொள்கைகளுக்கு எதிராக பொருளாதார நெருக்கடியை திணித்தல் ஆகியவற்றை கருத்தில் கொள்ளும்போது லத்தீன் அமெரிக்காவை வடிவமைக்கும் ஒட்டுமொத்த அரசியல் நீரோட்டமாக எதைக் கருதுகிறீர்கள்? அமெரிக்காவின் மேலாதிக்கம் மக்களின் இயக்கங்களை வலுக்குன்றச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளதா?
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, இடதுசாரிகளால் வழிநடத்தப்பட்ட புதிய இயக்கங்களும் போராட்டங்களும் லத்தீன் அமெரிக்காவில் காணப்பட்டன. இதன் விளைவாக பிரேசில், வெனிசுலா, பொலிவியா, ஈக்வடார் போன்ற நாடுகளில் இடதுசாரி அதிபர்களும் அரசாங்கங்களும் அதிகாரத்திற்கு வந்தனர். சில காலத்திற்கு பிறகு, சிலி, கொலம்பியா மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளிலும் இடது சாரி அதிபர்களைத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எதிர்பார்த்தபடியே, இந்த இடதுசாரி அரசாங்கங்களின் பாயணம் அவ்வளவு எளிதாக இல்லை. பிரேசிலில், தீவிர வலதுசாரியான போல்சனரோ சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரத்திற்கு வந்தார்; ஆனால், கடைசி ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தார்; லுலா மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வலதுசாரிகளின் எதிர்த்தாக்குதலால், ஈக்வடார் மீண்டும் வலதுசாரி சக்திகளின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது. சமீபத்தில், பொலிவியாவில், சோசலிசத்திற்கான இயக்கம் (MAS) பிளவடைந்துவிட்டது. முதல் சுற்று தேர்தலிலேயே சோசலிசத்திற்கான இயக்கம் வெளியேற்றப்பட்டுவிட்டது. இதன்விளைவாக 15 ஆண்டுகால இடதுசாரி ஆட்சிக்குப் பிறகு, அதிபருக்கான தேர்தலின் இரண்டாம் நிலை வாக்கெடுப்பில் வலது மையவாத வேட்பாளருக்கும், தீவிர வலதுசாரி வேட்பாளருக்கும் இடையே நடக்கவுள்ளது. இவர்களில் ஒருவர்தான் அதிபராக தேர்வாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது டிரம்ப் அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு வெனிசுலாவைக் குறிவைத்து, புதிய தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது. டிரம்ப்க்கு முன்பே, பைடன் வெனிசுலா மீது தடைகளை விதித்திருந்தார். சாவேசின் வாரிசான மதுரோ அரசாங்கத்தை பொறுத்துக்கொள்ள முடியாத அமெரிக்கா, போதைப்பொருட்களுக்கு எதிரான போர் என கூறிக்கொண்டு, அமெரிக்க கடற்படைக் கப்பல்களை அங்கு குவித்துள்ளது. வெனிசுலாவின் மீன்பிடி படகுகள் மற்றும் டிராலர்கள் அமெரிக்க விமானங்களால் தாக்கப்பட்டதின் விளைவாக பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். போல்சனரோவுக்கு தண்டனை விதித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக பிரேசில் மீது 50 சத வரிஉயர்வை விதித்து லுலா அரசாங்கத்துக்கு எதிராகவும் டிரம்ப் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளார். கியூபா தொடர்ந்து கடுமையான வர்த்தகத் தடைகளுக்கு உள்ளாகியுள்ளது.
டிரம்பின் புதிய வல்லாதிக்க கொள்கைகளின் காரணமாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “பின்புலம்” என்று கருதப்படும் லத்தீன் அமெரிக்கா நேரடி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. பிரேசில், வெனிசுலா, கொலம்பியா மற்றும் சிலி ஆகிய நாடுகளில் உள்ள முற்போக்கு அரசாங்கங்கள் அனைத்தும் இந்த புதிய உண்மையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. டிரம்பின் ஆக்கிரமிப்பு விரிவாக்கக் கொள்கையை எதிர்கொள்ள, லத்தீன் அமெரிக்காவின் நீண்ட போராட்டப் பாரம்பரியமும், பிரசித்திபெற்ற மக்கள் திரள் போராட்டங்களும் அவர்களுக்கு பலமாக அமையும்.
கேள்வி 3: கூட்டணி அரசியல், பொருளாதார-சமூக கொள்கைகளின் மீதான போட்டி, அமெரிக்காவின் இறக்குமதி வரிவிதிப்புகள் போன்ற வெளிப்புற நெருக்கடிகள் போன்றவற்றின் விளைவாக தென் ஆப்பிரிக்கா உள்ளார்ந்த மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. இவை அதன் சர்வதேச உறவுகளையும் பாதிக்கக் கூடும். இந்த உள்நாட்டு மாற்றங்கள் தென் ஆப்பிரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை என்று நம்மால் மதிப்பிட இயலும்?
தெற்குலகின் முக்கிய நாடும், ஆப்பிரிக்காவின் முன்னணி நாடுமான தென்னாப்பிரிக்கா, டிரம்ப் நிர்வாகத்தின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அங்கு சிறுபான்மையினராகவுள்ள வெள்ளை இனத்தவர்களை துன்புறுத்துவதாக தென்னாப்பிரிக்க அரசாங்கத்தை டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இது ஒரு பெரும் முரண்பாடான குற்றச்சாட்டாகும். பெரும்பான்மையான கருப்பின தென்னாப்பிரிக்கர்களை கடும் ஒடுக்குமுறையின் மூலம் ஆட்சி செய்த வெள்ளை மேல்தட்டினரே இந்த இனவெறி (Apartheid) முறையை நீடிக்கச் செய்தவர்களாவர். அமெரிக்காவில், வெள்ளை இனத்தவர்களே உயர்ந்தவர்கள் என்று கூறும் கொள்கையுடையவர்களின் பிரதிநிதியாகவே டிரம்ப் அறியப்படுகிறார். அதேநேரம், இஸ்ரேல் காசாவில் நடத்தும் இனப்படுகொலையை கண்டித்து தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றதை டிரம்ப் மன்னிக்கவில்லை.
ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைமையில் தென்னாப்பிரிக்காவில், நடைபெறும் அரசாங்கம், இனவெறிக்கு எதிரான தனது போராட்ட விழுமியத்தோடு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தனது போராட்டப் பாரம்பரியத்தைத் தொடர்கிறது. அதேநேரம், தேச விடுதலைக்கு பின்னர் அதன் உள்நாட்டுக் கொள்கைகளில், விடுதலைக்குப் பின்னர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் புதிய பொருளாதார கொள்கைகளுக்கு முற்றாக மாறியுள்ளது. இதன் விளைவாக, மக்களிடையே பெரும் ஆதரவைக் கொண்ட முதன்மை தேசிய விடுதலை அமைப்பான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தனது அடித்தளத்தை இழந்து வருகிறது. 2024-இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்தது. இதன் காரணமாக வலதுசாரிக் கட்சியான டெமாக்கிரட்டிக் அலையன்ஸ் (Democratic Alliance) உடன் ‘தேசிய ஒற்றுமை அரசாங்கம்’ (Government of National Unity) என்ற பெயரில் கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது. நவதாரளமயக் கொள்கைகள் வேலையின்மையையும் ஏற்றத்தாழ்வுகளையும் அதிகரிக்கத்துள்ளன. இதன் விளைவாக, ஆப்பிரிக்க தேசிய காங்கிரசுடனான, தென்னாப்பிரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி (SACP), மற்றும் COSATU – தென்னாப்பிரிக்கத் தொழிற்சங்கங்களின் காங்கிரஸ் ஆகியவற்றுக்கிடையிலான கூட்டணியில் பிரச்சினைகள் எழுகின்றன. குறிப்பாக தனியார் ஏகபோக மூலதனத்திற்கும் (Monopoly Capital), அரசுக்கும் இடையேயான கூட்டணி காலப்போக்கில் தீவிரமடைந்துள்ளதன் விளைவாக தேசிய ஜனநாயகப் புரட்சியில் தொழிலாளி வர்க்கத்தின் பங்கு தகர்க்கப்பட்டுள்ளது என்று ஏப்ரல் 2025-இல் நடந்த தென்னாப்பிரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் தீர்மானித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், 2026-இல் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களில் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதுவரை, தென்னாப்பிரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசினுடைய கூட்டணியின் ஒரு பகுதியாகப் போட்டியிட்டுவந்துள்ள நிலையில் இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
சர்வதேச அளவில், பிரிக்ஸ் கூட்டமைப்பு (BRICS), ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பு (OAU) மற்றும் தெற்குலக ஒத்துழைப்பு ஆகியவற்றில் தென்னாப்பிரிக்கா ஒரு நேர்மறையான பங்காற்றிவருகிறது. பாலஸ்தீனப் போராட்டத்திற்கும், இஸ்ரேலின் இனப்படுகொலைப் போருக்கு எதிராகவும் அதன் உறுதியான ஆதரவு போற்றத்தக்கதாகும்.
தமிழில்: ச. லெனின்
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply