அணு ஆயுத பரவலை அதிகப்படுத்தும் அமெரிக்க போர் வெறி!
– விஜய் பிரசாத்
ஐக்கிய நாடுகள் நிறுவனம் நிறுவப்பட்ட சிறிது காலத்திற்குப் பிறகு, 1958இல் ஈரான் IAEA-வில் சேர்ந்தது. தொடர்ந்து அது IAEA-வின் உறுப்பினராக நீடிப்பதோடு, அமைதியான அணுசக்தி பயன்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட விதிமுறைகளின் பொதுவான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வருகிறது. ஈரானுக்கு எதிராகத் தடை விதிக்க வேண்டுமென புவிக்கோளத்தின் வடக்கு நாடுகள் (வளர்ச்சியடைந்த நாடுகள்) IAEA மீது மிகுந்த அழுத்தம் கொடுத்த போதிலும், ஈரான் விதிமுறைகளை மீறவில்லை; அது ஓர் அணு ஆயுத நாடு அல்ல என்பதை IAEA அமைப்பின் தொடர்ச்சியான அறிக்கைகள் தெளிவாக்கியுள்ளன.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக ஆக்கிரமிப்புப் போரை நடத்துவதன் மூலம் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளன. தனது நாட்டில் அணுசக்தி வசதிகள் உள்ள பகுதியில் அணுக் கதிர்வீச்சு மாசுபாடு இல்லை என்று ஈரான் கூறியுள்ளது. இதன் பொருள் அமெரிக்காவின் தாக்குதல்கள், இந்த மையங்களின் பாதுகாப்பு அமைப்பினைத் தாண்டி ஊடுருவ முடியவில்லை என்பதாகும். இந்த தாக்குதலை மேலும் விரிவாக்கி, ஈராக்கில் ஏற்கனவே புஷ் அரசாங்கம் மேற்கொண்டது போன்ற ஆக்கிரமிப்பு போரினை முன்னெடுக்க டிரம்ப் நிர்வாகம் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும் கூட இந்த பதட்டம் போராக மாறாது என்று சொல்லவும், அணுசக்தி வசதிகள் மீதான தாக்குதல்களைத் தாண்டி, அது நீடிக்காது என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. எதிர்பார்க்கப்படும் பேச்சுவார்த்தைகளில் ஈரான் தங்கள் நிபந்தனைகளை ஏற்க மறுத்தால், அமெரிக்காவும் இஸ்ரேலும் தெஹ்ரானை நோக்கி குண்டு வீசி, ஈரானின் தலைமையைக் கொல்ல முயற்சிக்கலாம்; அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கலாம்.
ஈரான் மீதான தாக்குதல்கள் அந்த நாட்டு மக்களின் உறுதியை பலவீனப்படுத்தவில்லை; மாறாக அதை அதிகரித்துள்ளதாகவே தெரிகிறது. தாக்குதல்கள் இருந்தபோதிலும், மக்கள் தங்கள் கோபத்தையும், ஈரானையும் அதன் இறையாண்மையையும் தாக்கும் எவருக்கும் எதிராக போராடும் தங்கள் உறுதியையும் வெளிப்படுத்த தெருக்களில் இறங்கி வருகின்றனர்.
ஈரானில் நிலவும் உயர் தேசபக்தி விகிதங்களும் ஈரானிய மக்களின் உறுதியும் அந்த நாட்டின் மீது படையெடுக்க முயற்சிக்கும் அமெரிக்காவின் முனைப்புகளைத் தடுக்கும் (ஈரானின் மக்கள்தொகை 9 கோடி, ஈராக்கின் மக்கள்தொகை 4.5 கோடி, ஈராக்கை விடவும் இரண்டு மடங்கு எண்ணிக்கையும், கூடுதல் இளமையையும் கொண்ட – சராசரி வயது 33 – மக்கள்தொகையை அடக்குவது சாத்தியமில்லை). ஈரான் மீது கோழைத்தனமான குண்டுவீச்சுத் தாக்குதல் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், வீதிகளில் தீவிர எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் ராணுவப் படையெடுப்பு அத்தனை எளிதல்ல.
லிபியாவில் தாக்குதல் நடத்தி, அந்த அரசை அமெரிக்கா-நேட்டோ படைகள் அழித்தன (2011). இப்போது ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலை முன்னெடுத்திருக்கிறது. இவையெல்லாம், வட கொரியா போன்ற நாடுகளுக்கு அணு ஆயுதக் கவசம் அவசியம் என்பதை நிரூபிக்கிறது. உண்மையில், வட கொரியா தனது இராணுவ அமைப்பில் அணு ஆயுத விலக்கம் செய்ய மறுப்பது இதற்காகத்தான். இப்போது புவிக் கோளத்தின் தெற்கு நாடுகள் (வளர்ச்சியடைந்து வரும் நாடுகள்) தம்முடைய இறையாண்மையை பாதுகாக்க விரும்பினால், வழக்கமான ராணுவம் மட்டுமே போதாது என்றே இந்த தாக்குதல்கள் காட்டுகின்றன.
அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்திலிருந்து (1968) ஈரான் விலகக் கூடும்; IAEA-வுடனான ஒத்துழைப்பை நிறுத்துவதுடன் அணு ஆயுதத்தை உருவாக்கவும் கூடும். எகிப்து, சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளும் இதே வழிமுறையை பின்பற்றலாம். தங்களுடைய ஏவுகணைத் தேவைக்காகவும், அணு ஆயுதங்களுக்காகவும், மியான்மர் வட கொரியாவுடனான ஒத்துழைப்பை அதிகரிக்கலாம். ஈரானின் இறையாண்மை மீறப்படுவதை நெருக்கமாக கவனித்து வரும் நாடுகள், ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பதால் அல்ல; அணு ஆயுதம் இல்லாததால்தான் இந்த தாக்குதல் நடக்கிறது என்பதை உணர்கிறார்கள். அவர்களுக்கு இந்த வாதம் அணு ஆயுத தேவையை வலியுறுத்தும் ஒரு கவசமாகிறது. எனவே, அணு ஆயுத பரவலுக்கு மிகப்பெரிய ஊக்கம் ஈரான் மீதான இந்த தாக்குதல்தான்.
இஸ்ரேலாலும், பின்னர் அமெரிக்காவாலும் மேற்கொள்ளப்பட்ட இந்த மிகை-ஏகாதிபத்திய தாக்குதலின் தாக்கங்களால் அச்சமடைந்து, மெல்ல மெல்ல, பெரும் மக்கள் குழுக்கள் தெருக்களில் இறங்கத் தொடங்கியுள்ளன. இந்த தாக்குதல்களைக் கண்டிக்கவும், போர்களை எதிர்த்தும், அமைதியும் வளர்ச்சியுமே உலக மக்களின் விருப்பங்கள் என்ற உண்மையை உறுதிப்படுத்தவும் முழக்கங்கள் எழுகின்றன. இஸ்ரேலும் அமெரிக்காவும் நடத்தும் இந்த தாக்குதல், ஈரானை நோக்கியதல்ல; மேற்கு ஆசியாவில் ஆதிக்கம் செலுத்த விரும்பும், புவியின் வடக்கு (ஏகாதிபத்திய) நாடுகளின் போர் விருப்பத்தில் இருந்து எழுகின்றது என்பதை தெற்கு நாடுகள் சந்தேகத்திற்கிடமில்லாமல் அறிந்து வைத்துள்ளன.
(ட்ரை கான்டினென்டல் ஆராய்ச்சி மைய இணைய தளத்தில் வெளியான கட்டுரையின் பகுதிகள்)
தமிழில்: இரா. சிந்தன்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
