வாச்சாத்தி: ‘எதையும் தாங்கிய’ மக்களின் வரலாறு – குரலற்ற மக்கள் அரசுக்குக் கற்றுத் தந்த பாடம்
பெ. சண்முகம்
(கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டில் வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் மாநிலச் செயலாளர் தோழர். பெ. சண்முகம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம் – ஆசிரியர் குழு)
நம் நாட்டில், ஒரு மனிதன் எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். அது அனுமதிக்கத்தக்கது; வைரங்கள் நிரம்பிய ஒரு சுருக்குப் பையையும் அவர் வைத்திருக்க முடியும். அது தவறில்லை; அவர் விரிந்து பரந்த ஒரு நிலப்பரப்பையும் தன் வசம் வைத்திருக்க முடியும். அது சட்டபூர்வமானது. ஆனால் அவர்களின் கொல்லைப்புறத்தில் ஒரு சிறிய சந்தன மரக்கன்றை வைத்திருப்பது சட்டவிரோதம் என்று சட்டம் கூறுகிறது. என்ன ஓர் அற்புதமான சட்டம்! தங்கம் அல்லது வைரத்தை விட சந்தனம் மதிப்புமிக்கதா? இல்லை, இல்லவே இல்லை! ஆனாலும், பழங்குடி மக்கள் ஒவ்வொருவரும் ‘இதோ வீரப்பன்!’ என்பது போல பிடித்துப் பழிவாங்கப்படுகிறார்கள்.
ஏதாவது ஒரு சாக்குப்போக்கில் பழங்குடியினர் மீது சீரற்ற தாக்குதல்கள் என்பது இந்தியா முழுவதற்கும் பொதுவானதே ஆகும். காடுகளையும், அதன் செல்வங்களையும் கைப்பற்றுவதும், காட்டில் வசிப்பவர்களான பழங்குடியினரை ஆக்கிரமிப்பாளர்களாக மாற்றுவதும், பின்னர் அவர்கள் காட்டுக்குள் நுழைவதைக் கண்டித்து அவர்களைக் குற்றவாளிகள் என தண்டிப்பதும் காலனிய அரசாங்கத்தின் கொள்கையாக இருந்தது. பிர்சா முண்டா, அல்லூரி சீதாராம ராஜு போன்ற ஏராளமான பழங்குடித் தலைவர்களும் ஒரு தீர்க்கமான பங்கினை வகித்த நம் நாட்டின் விடுதலைக்குப் பிறகும் கூட எதுவும் மாறவில்லை என்பதையே நம் அனுபவம் எடுத்துக் காட்டுகிறது.
சமமான அளவில் பாதிக்கப்படக்கூடிய பெண்கள் ஒரு குழுவாக, விறகு அல்லது சிறிய வன விளைபொருட்களை சேகரிக்க, குழந்தைகளுடன் காட்டுக்குள் செல்வது என்ற இந்த வேலையின் உள்ளார்ந்த தன்மை, வனக்காவலர்கள், ஒப்பந்தக்காரர்கள், இடைத்தரகர்கள் ஆகியோரின் துன்புறுத்தலினால் பாதிக்கப்படுவோராக அவர்களை ஆக்குகிறது. அவ்வாறு பாதிக்கப்படும்போது பழங்குடியின பெண்கள் புகார் கொடுக்க எங்கே போவார்கள்? வனக்காவலர்களால் அன்றாடம் துன்புறுத்தப்படுவது எதனால்? பழங்குடியினப் பெண்கள் நீதியை அணுகுவதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை என்பது இந்தியாவின் நீதிசார்ந்த நடைமுறைகளை கேலிக்கூத்தாக்குகிறது.
இத்தகையதொரு பின்னணியில்தான் வாச்சாத்தி சம்பவம் நம் கவனத்தை ஈர்க்கிறது. ஏனென்றால், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் குற்றவாளிகள் என அறிவித்து, அவர்களை சிறையில் அடைத்தது தனித்துவமான ஒரு சாதனையே. இந்த கனவு நனவாவதற்கான செயல்பாடு என்பது தொடக்கத்தில் இருந்தே எளிதான ஒன்றாக இருக்கவில்லை. அர்ப்பணிப்புள்ள கம்யூனிஸ்டுகளின் ஆதரவுடன் வாச்சாத்தி பழங்குடிகள் நடத்திய போராட்டத்தின் சுருக்கம் இதோ:
ஒரு சிறிய கிராமத்தில் வெறும் 655 பேருக்காக 32 ஆண்டுகளாக யாராவது தொடர்ந்து போராடுவார்களா? நாங்கள் அதை செய்தோம்! ஏனென்றால் நாங்கள் கம்யூனிஸ்டுகள். ஆம்! வாச்சாத்தி – தர்மபுரி மாவட்டத்தில் சித்தேரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிறிய, கண்ணுக்குத் தென்படாத ஒரு கிராமம். வன்கொடுமை நடந்தபோது அந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 655 மட்டுமே. இதில் 12 குடும்பங்கள் மட்டுமே பழங்குடியினர் அல்லாதோர். மீதமுள்ளவர்கள் ‘மலையாளி’ என்ற பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
1992 ஜூன் 20, 21 மற்றும் 22 தேதிகளில், ‘சந்தன மரக் கடத்தலைத் தடுக்கிறோம்’ என்ற பெயரில், வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இந்தக் கிராமம் முழுவதையும் சூறையாடினர். அரசின் மூன்று வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் ஒரே நேரத்தில் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தினார்கள் எனில், நிச்சயமாக முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்றுதான் அதற்குப் பொருள். இந்த மிருகத்தனமான தாக்குதல், ஓர் எதிரி நாட்டு மக்களைத் தாக்குவதைப் போல, மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளின் தலைமையின் கீழ், அதன் சொந்த மக்கள் மீது நடத்தப்பட்டது. 300க்கும் மேற்பட்ட சீருடை அணிந்த போலீசார், பெண்கள், குழந்தைகள், முதியவர்களை அடித்து இழுத்துச் சென்று கிராம ஆலமரத்தடியில் உட்கார வைத்தனர்.
ஜூன் 20 மாலை, ஆலமரத்தடியில் கூடியிருந்த கிராம மக்களில், 18 இளம் பெண்களை, சந்தன மரம் ஏற்றும் வேலையைச் செய்ய அழைத்துச் செல்வதாகக் கூறி, லாரியில் அருகிலுள்ள ஏரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, புதர்களுக்கிடையில் இந்தப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இவர்களில் 15 பேர் திருமணமாகாதவர்கள். ஒருவர் 13 வயதே ஆன, எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி. இந்தப் பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் வனத்துறையைச் சேர்ந்தவர்கள். அன்றிரவு, கிராம மக்கள் அனைவரும் சட்டவிரோதமாக வனத்துறை அலுவலகத்திற்குள் அடைத்து வைக்கப்பட்டனர். அடி, உதை, வாய்கூசாத வசவுகள், அரை நிர்வாணம், பாலியல் துன்புறுத்தல்கள் வன அலுவலகத்திலும் தொடர்ந்தன. சீருடை அணிந்த இந்த அதிகாரிகளால் வார்த்தைகளால் சித்தரிக்க முடியாத வகையில் அவர்கள் மிக மோசமாக நடத்தப்பட்டனர். மறுநாள் இரவு, 28 குழந்தைகள் உட்பட, அனைவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் வன அலுவலகத்திற்குள் அடைபட்டிருந்த அதே நேரத்தில், அதிகாரிகள் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் இந்த கிராமத்தை ஒரு பாழடைந்த கிராமமாக மாற்றும் வகையில் ஒரு வெறியாட்டத்தை நிகழ்த்தினர். உடைக்கப்படாத அல்லது அழிக்கப்படாத வீடுகள் அல்லது பொருட்கள் எதுவும் அங்கு இல்லை. கிராமத்தின் ரேஷன் கடையையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. நீங்கள் கிராமத்திற்குத் திரும்பி வந்தால், வாழ்க்கை நடத்துவதற்கு உதவும் எந்தப் பொருளும் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தோடு மிகவும் வெறித்தனமாக இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அரசு அதிகாரிகளால் சமைக்கப்பட்டு உண்ணப்பட்ட கோழி மற்றும் ஆடுகளின் கழிவுகள் கிணற்றில் கொட்டப்பட்டன. மேலும் இந்தக் கிணற்று நீரை எவ்வகையிலும் பயன்படுத்த முடியாதபடி என்ஜின் ஆயில் கிணற்றில் ஊற்றப்பட்டது. விவசாய கிணறுகள் இடிக்கப்பட்டு, அவற்றின் என்ஜின்கள் கிணறுகளுக்குள்ளே தள்ளப்பட்டன. இந்தச் சம்பவம் நடந்து 25 நாட்கள் கழித்துதான் 1992 ஜூலை 14-ஆம் தேதிதான் இந்த விவரங்கள் எல்லாம் எங்களுக்கு தெரிய வந்தது. அதுவரையில் அதிகார வர்க்கம் செய்த அட்டூழியங்கள் அனைத்தும் வெளி உலகிற்கு தெரியாமல் மறைக்கப்பட்டிருந்தன.
பாலியல் வன்கொடுமை, வன்முறை என அகராதியில் வகைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து குற்றங்களும் அந்த ஒரு கிராமத்தின்மீது அரசு அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்டன. சட்டத்தின்படி செயல்பட வேண்டிய, சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகள்தான் இந்தச் சட்டவிரோத செயல்கள் அனைத்தையும் செய்துள்ளனர். எனவே, சாதாரண மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதம் என்று இதை மிக எளிதாகக் கூறிவிட முடியும்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு செய்வது, சிறையில் உள்ளவர்களுக்கு ஆறுதல் சொல்வது, அவர்களுக்கு ஜாமீன் வாங்கித் தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது, பல்வேறு வழிகளில் நடந்த இந்தக் கொடுமைகளை வெளி உலகின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சிப்பது, தவறு செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு மனு கொடுப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும் கிடைக்க ஆளும் கட்சியை எதிர்த்து போராடத் தயாராவது ஆகிய இவை அனைத்துமே மின்னல் வேகத்தில் நடைபெற்றன.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இந்த அனைத்து நடவடிக்கைகளிலும் முழுமையாகவும் தீவிரமாகவும் ஈடுபட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மறைந்த தோழர் அ. நல்லசிவன் இந்தக் கொடூரமான சம்பவம் குறித்து 1992 ஆகஸ்ட் 5 அன்று மாநிலங்களவையில் பிரச்சினையை எழுப்பினார். தோழர் தம்புசாமி, சிபிஐ (எம்) சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இது குறித்து பேசினார். ஆளும் அதிமுகவின் மறுப்பு, இதுவரை நடந்த அனைத்தையும் மூடி மறைத்தது. ஒரு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பது போலவே, இது சிறுபிள்ளைத்தனமானது என்பதில் சந்தேகமில்லை. மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு, பாதிக்கப்பட்ட இந்தப் பழங்குடி மக்கள்தான் குற்றவாளிகள் என்று சட்டமன்றத்துக்குள்ளேயே, உண்மையான குற்றவாளிகளான தனது அதிகார வர்க்கத்தையே காப்பாற்ற முயன்றதால், இந்த வழக்கில் நிவாரணம் கோரி நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதற்கிடையில், பகுதி, மாவட்ட, மாநில அளவிலான போராட்டங்கள் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட வெகுஜன இயக்கம் இதில் மிக முக்கியமான அம்சமாகும். சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போன்ற வர்க்க அமைப்புகளும், மலைவாழ் மக்கள் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம், எஸ் எஃப் ஐ., டி ஒய் எஃப் ஐ. போன்ற வெகுஜன அமைப்புகளும் எங்களுடன் களத்தில் இருந்தன. மக்கள் போராட்டமும், சட்டப் போராட்டமும் இணைந்த கலவைதான் இந்த வழக்கின் மகத்தான வெற்றிக்கு வழிவகுத்தது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதை எங்களால் உறுதி செய்ய முடிந்தது. எங்கள் மனுவைத் தொடர்ந்து, மாநில அரசு அனைத்து குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து மறுத்து வந்ததால், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ)யிடம் ஒப்படைத்தது. மத்தியில் இப்போதுள்ள பாஜக ஆட்சியாளர்களால் சிபிஐ எவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதை இந்த நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தவரை, சிபிஐ மிகவும் நேர்மையாகவும், அக்கறையுடனும், சட்டபூர்வமாகவும் செயல்பட்டு, பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கு ஆதரவாக வழக்கை வெல்வதற்கு தனது சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்துள்ளது.
குற்றவாளிகளை பட்டியலிடுதல், பாலியல் பலாத்காரம் செய்தவர்களை அடையாளம் காணுதல் ஆகியவற்றோடு பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம், 1989 இன் கீழ் திறமையான வகையில் சிபிஐ ஒரு வழக்கைப் பதிவு செய்தனர். இதன் மூலம் அதிகாரிகளின் பாலியல் வன்கொடுமைக் குற்றத்தை நிரூபித்தனர். அதனால்தான் தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் சிபிஐக்கு சிறப்பு பரிசாக ரூ.1 லட்சம் அரசாங்கம் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது. ஒருபுறம், சி.பி.ஐ இந்த வழக்கை திறம்பட கையாண்டது. எனினும், ஆளும் கட்சி ஏஜெண்டுகளின் இனிமையான, கவர்ச்சியான வார்த்தைகளுக்கு அடிபணியாமல், தைரியமாக சாட்சியமளித்த, பாதிக்கப்பட்ட இந்த மக்களின் மனஉறுதி, அச்சமின்மை, உள்ளார்ந்த விருப்பம் ஆகியவை வழக்கின் வெற்றிக்கு பெரிதும் பங்களித்தன என்று சொன்னால் அது மிகையாகாது. அவர்களின் ஒவ்வொரு முயற்சியிலும் செங்கொடி இயக்கம் அவர்களுக்கு உறுதுணையாக நின்றது.
நீண்ட 19 ஆண்டுகளில், பல சோதனைகள் மற்றும் இன்னல்களுக்குப் பிறகு, செப்டம்பர் 29, 2011 அன்று, தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி திரு. எஸ்.குமரகுரு வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரும், அவர்கள் எந்த பதவியில் இருந்தபோதிலும், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இதற்கிடையில் இறந்த 15 பேரைத் தவிர, மற்ற அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது. தண்டனை ஒரு வருடம் முதல் 10 ஆண்டுகள் வரை இருந்தது. இதற்கு முன்பு ஒருபோதும், சீருடை அணிந்த பணியாளர்கள், ஒரே வழக்கில், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில், தண்டிக்கப்பட்டதில்லை. இந்தத் தீர்ப்பின் மற்றொரு புதுமை என்னவென்றால், தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னதாக, இறந்தவர்களும் கூட குற்றவாளிகள் என்றே அறிவிக்கப்பட்டனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேலும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, 2023 செப்டம்பர் 29 அன்று, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் இந்த மேல்முறையீட்டு வழக்கில் மற்றொரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார். மேல்முறையீட்டு நீதிமன்றம், அதாவது உயர் நீதிமன்றம், மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். நீதிபதி வேல்முருகன் தனது தீர்ப்பில், மேல்முறையீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்ததுடன், அடித்தட்டு மக்களின் கூக்குரல்களுக்கு செவிசாய்க்காத அப்போதைய மாவட்ட ஆட்சியர் தசரதன், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராமானுஜம், ஐ.பி.எஸ் ஆகியோர் மீது துறைரீதியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் உடனடியாக ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், அவர்கள் உயிரோடு இல்லையெனில், பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த இழப்பீடான ரூ.10 லட்சத்தில் 50% -ஐ, அதாவது ரூ. 5 லட்சத்தை, 18 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து அரசு வசூலிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அப்போதைய அரசு அதிகாரிகளால் சீர்குலைக்கப்பட்ட 18 பெண்களுக்கு அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற தீர்ப்பு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. இச்சம்பவத்திற்குப் பிறகு, வாச்சாத்தி கிராம மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசினால் எடுக்கப்பட்ட நலத்திட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்தத் தீர்ப்பு ஆணையிட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை கிராம மக்கள் முழு மனதுடன் வரவேற்றனர். இதையடுத்து குற்றவாளிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த 30 வனத்துறை அதிகாரிகளில், மூன்று அதிகாரிகளின் வழக்கை நீதிபதி கே.வி.விஸ்வநாதன் அக்டோபர் 16, 2023 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மறுத்து, நாதன், ஐ.எஃப்.எஸ், பாலாஜி, ஐ.எஃப்.எஸ், ஆகிய இருவரும் தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆறு வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் 86 வயதான ஹரிகிருஷ்ணன் ஐஎஃப்எஸ், தனது வயதைக் காரணம் காட்டி பிணை கோரி தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தை அணுக வேண்டுமென அறிவுறுத்தினார். உச்ச நீதிமன்றத்திலும் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் மக்கள் காத்திருக்கிறார்கள். இந்தியாவில் நீதிக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. எந்தவொரு நிரபராதியும் தண்டிக்கப்படக்கூடாது என்ற நன்கு நிறுவப்பட்ட குறிக்கோளின் மீது நீதியின் கட்டமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது என்றே தோன்றுகிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் வலி, காயங்கள் மற்றும் இழப்புகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது, இந்த நீதித்துறை நடவடிக்கைகள் மிகவும் சோர்வினைத் தருபவையாகவே உள்ளன.
அரசின் அதிகார வர்க்கத்தை எதிர்த்து நாங்கள் இவ்வாறு போராடிய போது, மனசாட்சியுள்ள அதிகாரிகள் சிலர், தங்களது நேர்மையான நடவடிக்கைகளால் எங்களுக்கு பெரிதும் உதவினார்கள் என்பது உண்மையில் ஒரு முரண்நகையே. இதில் முதலில் குறிப்பிட வேண்டியது எஸ்.சி/எஸ்.டி ஆணையத்தின் தென் மண்டல ஆணையராக இருந்த திருமதி பாமதி ஐ.ஏ.எஸ். ஆவார். ஆகஸ்ட் 3, 1992 அன்று மாதர் சங்கத் தலைவர் மைதிலி சிவராமன் அளித்த மனுவின் பேரில், திருமதி பாமதி உடனடியாக வாச்சாத்திக்குச் சென்று, பழங்குடியினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகளின் விவரங்களைச் சேகரித்து, தேசிய எஸ் சி/ எஸ் டி ஆணையத்திற்கு ஓர் அறிக்கையை அனுப்பினார். மீண்டும், சென்னை உயர்நீதிமன்றத்தின் கோரிக்கையை ஏற்று, அவர் இந்தச் சம்பவம் குறித்து ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில்தான் இந்த வழக்கை சிபிஐ கையாள வேண்டும் என்று அவர் பரிந்துரைத்திருந்தார். அதுவே பின்னர் உயர்நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உத்தரவிடப்பட்டது.
அதேபோல், சி.பி.ஐ., டி.எஸ்.பி., திரு. எஸ். ஜகந்நாதன், இந்த வழக்கின் புலனாய்வு அதிகாரியாக, சி.பி.ஐ.யால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் உள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் அமர்வு நீதிமன்றத்தின் திருப்திக்கு ஏற்ப நிரூபிப்பதில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்ல நேர்மையான நீதிபதிகளிடம் இந்த வழக்கு சென்றதும் இத்தகைய தீர்ப்புக்கு முக்கிய காரணமாகும். கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது. நீதிபதி அக்பர் அலி அவர்கள் சாட்சிகளை விசாரிக்க ஆரம்பித்தார். இந்த வழக்கு பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு என்பதால், பிறகு நீதிபதிகள் அசோக் குமார், மதிவாணன், சிவக்குமார் ஆகியோர் விசாரித்தனர். தருமபுரி மாவட்ட நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்கிய குமரகுரு, பிறகு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதியரசர் பி. வேல்முருகன் ஆகியோர் மிகவும் நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டதும் இத்தகைய தீர்ப்புக்கு மற்றொரு அடிப்படை. தன்னலம் கருதாது அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர்கள் குழுவில் இருந்த, மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர். பிரசாத், ஆர். வைகை, வழக்கறிஞர்கள் ஜி.சம்கிராஜ், கே. இளங்கோ, டி. சுப்புராம் ஆகியோரின் பங்களிப்பு இல்லாமல் இந்த வழக்கின் வெற்றி இல்லை என்றே கூறலாம்.
அதைப் போன்றே, சேலம் பெண்கள் சிறையில் வார்டனாக இருந்த திருமதி. லலிதாபாய், வாச்சாத்தி கிராமப் பெண்கள் மீது நடைபெற்ற இந்தப் பாலியல் வன்கொடுமை பற்றிய தகவலை எங்களிடம் முதலில் கூறியவர் என்பதோடு, தமிழ்நாடு அரசின் கீழ் ஓர் ஊழியராக இருந்தபோதிலும், விசாரணை நீதிமன்றத்தில் மனசாட்சிப்படி சாட்சியம் அளித்து, இந்த வழக்கிற்கு மேலும் வலுசேர்த்தார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். அதேபோன்று, ஜூன் 20 அன்று மாலை நடந்த சம்பவம் குறித்து அந்த நேரத்தில் வாச்சாத்தி கிராமத்தில் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவரின் உறுதியான சாட்சியமும் பாலியல் வன்கொடுமை என்ற குற்றச்சாட்டை நிரூபிக்கப் பேருதவியாக இருந்தது. ஒரு முதலாளித்துவ சமுதாயத்தில், எந்தப் பின்புலமும் ஆதரவும் இல்லாத மக்களுக்கு நீதி கிடைப்பது என்பது கிட்டத்தட்ட அரிதான ஒரு செயலே ஆகும். எவ்வாறாயினும், இதுவரை நாம் கடந்து வந்த பாதையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அரசாங்கத்திற்கும் அதிகார வர்க்கத்திற்கும் எதிரான இந்த வழக்கின் வெற்றி, வரலாற்றின் ஏடுகளில் இணையற்றது என்று உறுதியாகக் கூற முடியும். இந்த எளிய, பெரும்பாலும் படிப்பறிவற்ற மக்களிடம், மூத்த பத்திரிகையாளரான துரைராஜ், “இந்தப் போராட்டத்தில் எதைக் கண்டும் கலங்காது நீங்கள் நின்றதற்குக் காரணம் என்ன? என்று கேட்டார். “இதோ இந்தச் சிவப்புக் கொடிதான்!” என்பதே அவர்களின் பதிலாக இருந்தது. அந்த அழுத்தம்திருத்தமான பதில்தான் இந்த இணையற்ற சாதனையின் அடித்தளமாக விளங்குகிறது. உண்மை என்றும் தோற்பதில்லை. நாம் வெல்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
