வெண்மணியின் குரலாய் சட்டமன்றத்தில் சங்கரய்யா
கீழ்வெண்மணி படுகொலை தொடர்பாக “தஞ்சை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு தவறியது; கீழ்வெண்மணி கிராமத்தில் தீவைப்பால் பலர் உயிரிழந்தது குறித்த அமைச்சரவையின் கொள்கையைக் கண்டிக்கும்” ஒரு கண்டனத் தீர்மானத்தை , காங்கிரஸ் கட்சி முன்மொழிந்தது. அதன் மீது 1969 பிப்ரவரி 28 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், தோழர் சங்கரய்யா ஆற்றிய உரையை வெண்மணி நினைவு தினத்தை ஒட்டி இங்கு பிரசுரிக்கிறோம். – ஆசிரியர் குழு
திரு. என். சங்கரய்யா : சபாநாயகர் அவர்களே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், இங்கு கொண்டு வரப்பட்டிருக்கிற இந்த கண்டனத் தீர்மானத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்பதை முதலிலே குறிப்பிட விரும்புகிறேன். அதற்கான காரணங்களையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். இங்கு காங்கிரஸ் கட்சியின் சார்பிலே கொண்டு வரப்பட்டிருக்கிற தீர்மானம், அரசியல் முதல் பெறுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களைச் சார்ந்த ஒரு காங்கிரஸ் உறுப்பினர் மூலமாக கொண்டு வரப்பட்ட போதிலும், உண்மையிலே இது நிலப்பிரபுக்களின் சார்பிலே கொண்டு வரப்பட்ட தீர்மானம் என்ற காரணத்தினால், இன்று நிலப்பிரபுக்களுக்கு எதிராக உள்ள இலட்சக்கணக்கான ஏழை எளிய உழைப்பாளி மக்களின் பெயரால், இந்தக் கண்டனத் தீர்மானத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நண்பர் ஜெயராஜ் அவர்கள், பூந்தாழங்குடியிலே ஒரு விவசாயக் தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்டார் என்று குறிப்பிட்டார். அதையும் இன்றைக்கு ஒரு குற்றச்சாட்டாகக் கொண்டு வந்தார்கள். உண்மை. ஆனால் அவ்வாறு சுட்டுக் கொன்றதற்குப் பிறகு, பூந்தாழங்குடி விவசாயிகள் மேலுள்ள வழக்கை வாபஸ் வாங்கவேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்ற கட்சிகளும் ஒருமித்துக் கேட்ட நேரத்தில், ஒரே ஒரு கட்சித் தலைவர், காங்கிரஸ் கட்சியின் தலைவர், வாபஸ் வாங்கக் கூடாது. அந்தத் தொழிலாளிகள் மீது வழக்கு நடத்த வேண்டுமென்று கூறினார். ஒரே ஒரு கட்சி, காங்கிரஸ் கட்சி தான் வாபஸ் வாங்கக் கூடாது என்று கூறியது. அப்படிப்பட்ட ஒரு கட்சிக்கு-இன்று கீழ்வெண்மணியிலே நிலப்பிரபுக்களின் கொடுமையால் 42 பேர் உயிரிழந்தார்கள் என்று இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வர என்ன உரிமை இருக்கிறது என்று கேட்க விரும்புகிறேன்.
திரு. பி. ஜி. கருத்திருமன் (எதிர்க்கட்சித்தலைவர்): எங்களுக்கு உரிமையில்லையென்று சொல்ல அவர் யார் என்று கேட்க விரும்புகிறேன்.
திரு. என். சங்கரய்யா : மற்றொன்று கேட்க விரும்புகிறேன். நண்பர் ஜெயராஜ் போன்ற அரிசன மக்களுடைய பிரதிநிதிகளாக இருக்கக்கூடியவர்களை கேட்க விரும்புகிறேன். குடியானவர் மீது, விவசாயத் தொழிலாளர்கள் மீது, மாண்புமிகு கருத்திருமன் அவர்களுக்கு அக்கறை இருக்குமானால், இந்த தீ வைப்பை முன்னிட்டு கைது செய்திருக்கிறார்களே, அதே மிராசுதார்களை,சிறையிலே சென்று ஆறுதல் தருவதற்கு அவர் முன் வருவார்களா, உங்கள் கட்சித் தலைவர் அவர்கள் முன் வருவார்களா என்று கேட்க விரும்புகிறேன்.
திரு பி.ஜி. கருத்திருமன்: சபாநாயகர் அவர்களே, என் பெயரைச் சொல்வதால் நான் சொல்ல விரும்புகிறேன். அங்கு நான் சென்றேன், பார்த்தேன். அடிபட்ட சகோதரர்களையும் பார்த்தேன். ஆனால் இவர் இருக்கிற கட்சியின் தலைவர் இராமமூர்த்தி சிலரை மட்டும் பார்த்துவிட்டு, மற்றவர்களை எல்லாம் பார்க்காமல் வந்துவிட்டார்கள் என்று சொல்ல விரும்புகிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர்: எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பின்னால் பேசப் போகிறார்கள். பேசும்பொழுது இந்தக் கருத்துக்களை எல்லாம் சொல்லலாம். நீங்கள் (எதிர்க்கட்சித் தலைவர்) இப்பொழுது சொன்னால் அவர் இன்னும் நேரம் கேட்பார்.
திரு. என். சங்கரய்யா: ஆகவேதான் காங்கிரஸ் கட்சியிலேயுள்ள அரிசன எம்.எல்.ஏ-க்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், அவர்களுடைய அக்கறையை பாதுகாக்க காங்கிரஸ் இருக்கிறது என்று சொன்னால், இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருக்கக்கூடாது. விவசாயத் தொழிலாளிகளுக்கு எதிராக இருக்கிற நிலப்பிரபுக்களை கண்டிக்கக்கூடிய ஒரு தீர்மானத்தை, அந்த நிலப்பிரபுக்களை ஒரு பகுதியாக கொண்டுள்ள காங்கிரஸ் தலைமை கொண்டுவந்திருக்குமானால், அதை இன்றைக்கு வரவேற்றிருக்க முடியும். அரிசன விவசாயத் தொழிலாளிகளோடு சேர்ந்து, நிலப்பிரபுக்களுடைய இன்னல்களிலிருந்து அவர்களை விடுவிக்க, அவர்களுடைய போராட்டங்களில் சேர்ந்து நிற்பதுதான் மக்களுக்கு காங்கிரஸ் செய்யும் கடமை என்று தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களே, இன்றைக்குப் பேசப்படுகிறது…
திரு. பி.ஜி. கருத்திருமன்: ‘நண்பர்களே’ என்று பொது கூட்டம் என்று நினைத்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்…
திரு. என். சங்கரய்யா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி தாறுமாறாக பேசப்படுகிறது. இன்றைக்கு இருக்கிற நிலைமை மக்களுக்கு நிச்சயமாக தெரியும். ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
தஞ்சை மாவட்டத்தில் தொடர்ச்சியாக விவசாயத் தொழிலாளிகளுக்கும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்குமிடையே முக்கூட்டு மாநாடு நடத்தி இந்த பிரச்சினையை தீர்த்தாக வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியது. ஆனால், முக்கூட்டு மாநாடுகளை நடத்தக் கூடாது. அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தக் கூடாது. முக்கூட்டு மாநாடு நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு உரிமையும் கிடையாது என்ற முறையில் கூறி வந்தது நிலப்பிரபுக்களின் கூட்டம். இன்றைக்கு காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர்கள் மிராசுதார்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஏன்? காங்கிரஸ் தலைவர்கள் மிராசுதார்களினுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ஏழை அரிசன விவசாயத் தொழிலாளர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? கூலியை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்பதற்கு அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? விவசாய தொழிலாளர்களுக்கு எந்தக் கூலியை வேண்டுமானாலும் கொடுப்பதற்கு மிராசுதார்களுக்கு உரிமை இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுமென்றே இந்தக் கலவரங்களைத் தூண்டிவிட்டு, இந்த அரசாங்கத்திற்கு கெட்ட பெயர் ஏற்படவேண்டும் என்று செய்வதாக காங்கிரஸ் கட்சித் தோழர்கள் குறிப்பிடுகிறர்கள். அவர்கள் இரண்டு விஷயங்களைக் கூறுகிறார்கள். கூட்டணியைச் சேர்ந்த கட்சி என்பதினால் தி.மு.க. எங்கள்பேரில் இளக்காரம் காட்டுகிறார்கள். அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பயன்படுத்திக்கொண்டு அரசாங்கம் நடத்தி வருகிறார்கள் என்று கூறுகிறார்கள். நான் அவர்களுக்குத் திட்டவட்டமாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
மாநிலத்தைப் பொறுத்தவரையில். ஒரு திட்டத்தின் அடிப்படையில் கூட்டணி ஏற்படவில்லை. தொகுதி உடன்பாடுதான் என்பதை நாங்கள் எற்கனவே தேர்தலுக்கு முன்பு தெளிவுபடுத்தியிருக்கிறோம். தி.மு.க. இந்த மாநிலத்தில் தனியாக அரசுப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கூறியிருக்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருப்பம் அதுதான். தேர்தலுக்குப் பிறகு தி.மு.க தனியாக அரசு அமைக்க வேண்டும். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு கொடுக்கும். ஆனால் மந்திரி சபையில் சேரும்படி அழைக்கப்பட்டாலும் கூட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவையில் இருக்காது. காரணம், இந்த மாநிலத்திலுள்ள நிலைமை என்று ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருக்கிறோம்.
ஆகவே, கூட்டணி என்பது தேர்தல் உடன்பாட்டின் அடிப்படையில் ஏற்பட்டதுதான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்பதுதான் என்னுடைய பிரதான வருத்தம். எங்களுக்குச் சாதகமாக செயல்படவேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி, 50 பேர்களைக் கொண்ட கட்சி. பல பத்திரிகைகளைக் கொண்ட கட்சி. நிலப்பிரபுக்களுக்குச் சாதகமாகப் பேசுகிறார்கள். அகில இந்திய ரேடியோவில் ஒலிபரப்புகிறார்கள். நிலப்பிரபுக்களுக்கு எதிராகத் தீவிரமான நடவடிக்கை எடுப்பதற்கு, தங்களுடைய போலீஸை திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் பயன்படுத்தவில்லை. அவ்வாறு பயன்படுத்தியிருந்தால், இம்மாதிரிச் சம்பவம் ஏற்பட்டிருக்க முடியாது என்பதுதான் என்னுடைய வாதம்.
காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தி.மு.க. அரசாங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இளக்காரம் காட்டுவதினால் ஏற்பட்ட சம்பவம் என்று சொல்வது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல்தான் ஆகும். தி.மு.க. அரசின் தயவைப் பயன்படுத்திக் கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அராஜகத்தில் ஈடுபடுகிறது. கடைசியில் அந்தக் கட்சி தி.மு.க-வையே ஜீரணித்துவிடும் என்றெல்லாம் பேசப்பட்டது. தி.மு.க.வும் நாங்களும் சேர்ந்து காங்கிரஸை ஜீரணித்துவிடுவோம். நாகர்கோவிலில் உங்களை ஜீரணிப்பதற்குச் சரியான சூரணம் எது என்பதில்தான் கருத்து வேறுபாடு எங்களுக்குள் இருந்ததே தவிர, வேறு ஒன்றுமில்லை.
அரிசன மக்கள் பெரும்பாலோரால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அரிசன மக்கள் பற்றி தி,மு.க.-வுக்குப் பொறுப்பு இருப்பதும் அவர்களுக்குத் தெரியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெளிவாகக் கூறியிருக்கிறோம். எங்களுடைய நோக்கமெல்லாம் மக்களுக்குச் சேவை செய்யவேண்டும். உழைக்கும் தொழிலாளர்களுக்கு நன்மை செய்யவேண்டும். அந்தப் பிரச்சினைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தி.மு.கவுக்கும் உடன்பாடு இருக்கிறது. தி.மு.க. மக்களுக்கு தேர்தலின் பொழுது வாக்குறுதி அளித்திருக்கிறது. தி.மு.க. தலைவர்கள் காங்கிரஸ் அரசாங்கம் கொண்டுவந்த நில உடைமை வரம்புச் சட்டத்தில் பல ஓட்டைகள் இருக்கின்றன என்று அதற்காக ஒரு போராட்டமே நடத்தியிருக்கிறார்கள். அவர்கள் விவசாயிகளுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள், தொழிலாளிகளுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள், அதை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய காரியங்களுக்கெல்லாம் தி.மு.க. அரசுக்கு எங்கள் ஆதரவு கிடைக்கும். ஆனால் மக்களுக்கு விரோதமான காரியங்களைச் செய்தால், அதை எங்களுடைய கட்சி விமர்சிக்கும் என்பதுதான் எங்கள் நிலை.
கூட்டணியில் நாங்கள் இருப்பதால், திமு.க.வின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன என்று கூறுவதெல்லாம் சரியல்ல. 44 பேர்கள் எரிக்கப்பட்டுச் செத்திருக்கிறார்கள். இதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை. அது சம்பந்தமான வழக்குகள் சரிவர நடத்தப்படவேண்டும். இந்தக் கண்டன தீர்மானத்தின் நோக்கம் என்ன ? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் விவசாயத் தொழிலாளர்கள் இயக்கத்தை தி.மு.க. குலைக்கவேண்டும். அப்படிக் குலைக்கத் தவறி விட்டது. நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாக, விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிராக, பயங்கரமான அடக்குமுறை ஏன் நடக்கவில்லை என்று கேட்பதுதான் இந்தக் கண்டனத் தீர்மானத்தின் நோக்கம். ஆகவே, அந்தக் கண்டனத் தீர்மானத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.
நான் கூற விரும்புவது என்னவென்றால், தி.மு.க. அரசாங்கத்திற்குச் சொல்லிக்கொள்வது என்னவென்றால், நிலப்பிரபுக்களுடைய மிரட்டுதலுக்குப் பணிய வேண்டாம். உண்மையிலேயே நிலப்பிரபுக்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், ‘விவசாயத் தொழிலாளர்கள், உற்பத்தியாளர் சங்கத்தின் கொடிக்குக் கீழ் வரவேண்டும்; இல்லையென்றால் உங்கள் குடிசைகளுக்குத் தீ வைக்கப்படும்’ என்பதுதான். இருஞ்சூர் கிராமத்தில் விவசாயத் தோழர் சின்னப்பிள்ளை என்பவர் காணப்படவில்லை, அதைப்பற்றி நானும் தோழர்கள் திரு.ஞானசம்பந்தம், திரு. தனுஷ்கோடி, திரு.பாரதி மோகன் மூவரும் புகார் செய்திருக்கிறோம். இன்னும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இருஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு அவர்கள் ஊரிலிருந்து சின்னப்பிள்ளை என்பவர் காணப்படவில்லை. அதைப்பற்றிப் போலீஸார் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? சிக்கலில் ஒரு தோழர் கொல்லப்பட்டார். கீழக்கரையில் திரு ராமச்சந்திரன் சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஆதமங்கலத்தில் என்ன கொடுமைகள் நடந்திருக்கின்றன ? தகாத முறையில் நிகழ்ச்சிகளெல்லாம் நடந்திருக்கின்றன.
அதுபற்றிக் குறிப்பிட்டபொழுது, கலெக்டரிடமிருந்து அவ்வாறு நடக்கவில்லை என்று ரிப்போர்ட் வந்திருப்பதாகச் சொல்லப்பட்டது. ‘மேலும் விவரங்கள் ஏதாவது இருந்தால் கூறுங்கள்’ என்று சொன்னார்கள், அவ்வாறு நிலப்பிரபுக்கள் செய்துகொண்டிருக்கிற நேரத்தில், அதற்கு ஆதரவாக சில போலீஸ் அதிகாரிகள் நடந்துகொண்டிருக்கிறார்கள். கீவளூர் போலீஸ் ஸ்டேஷனில் மிராசுதார்கள் சொல்படி போலீஸ் அதிகாரிகள் நடந்துகொள்கிறார்கள். அதற்கு நிச்சயமான ஆதாரங்கள் என்னால் தரமுடியும். தஞ்சை ஜில்லாவில் நிலச் சீர்திருத்தம், விவசாயத் தொழிலாளிகளுக்குப் பாதுகாப்பு முதலியவை பற்றி கணபதியா பிள்ளை கமிஷன் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. நிலப்பிரபுக்கள் என்ன கொடுமை செய்தார்கள்? போலீஸ் அதிகாரிகள் எப்படி நடந்துகொண்டார்கள், அவர்கள் யாருக்குச் சாதகமாக இருந்தார்கள் என்பதைப் பற்றியெல்லாம் விவரங்கள் தெரியவரும்.
விவசாயிகளுக்குக் கூலி பிரச்சினை வெறும் பொருளாதாரப் பிரச்னை மட்டுமல்ல; சமுதாயத்தில் அவ்வப்பொழுது ஏற்படுகிற பிரச்னை. அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வழி காணவேண்டும். உடனடியாகத் தஞ்சை மாவட்டத்திலுள்ள போலீஸ் அதிகாரிகளை மாற்றவேண்டும். அப்பொழுதுதான் அங்கு ஒரு சுமூகமான சூழ்நிலை ஏற்படும். பெரிய போலீஸ் அதிகாரிகள் கிராமங்களுக்குச் செல்லும்பொழுது பெரிய மிராசுதார்கள் வீடுகளில்தான் தங்கி, அங்குதான் சாப்பிடுகிறார்கள்.
மிராசுதார்கள் அளிக்கும் வசதிகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ‘உப்பிட்டவனை உள்ளளவும் நினை’ என்று சொல்வதுபோல், மிராசுதார்கள் வீட்டில் தங்கிச் சாப்பிட்டுவிட்டு, எப்படி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்? அரசாங்கம் இதுபற்றி ஒரு கடுமையான உத்தரவு போட வேண்டும். போலீஸ் அதிகாரிகள் கிராமங்களுக்குச் செல்லும்பொழுது, மிராசுதார்கள் வீட்டில் தங்கக்கூடாது. பொது இடத்தில்தான் தங்கவேண்டும். மிராசுதார்கள் வீட்டில் சாப்பிடுவதோ, மற்றபடி அவர்கள் கொடுக்கும் வசதிகளை ஏற்றுக்கொள்வதோ அறவே கூடாது என்று ஒரு உத்தரவு போடவேண்டும். இது ரொம்பவும் முக்கியமான விஷயம்.
மற்றொன்று, பெல்லட்டுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. தஞ்சை மாவட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடிக்குப் பிறகு 39 துப்பாக்கிகளைப் போலீஸார் திரும்பப் பெற்றிருக்கிறார்கள். விவசாயத் தொழிலாளர்கள் இறந்து கிடந்தார்கள். விவசாயத் தொழிலாளர்களுக்குத் துப்பாக்கி ஏது? கீவளூர் போலீஸ் ஸ்டேஷனில் 39 துப்பாக்கிகள் திரும்பிப் பெற்றுக்கொள்ளப்பட்டன. நிலப்பிரபுக்களுக்குத் துப்பாக்கிகள் ஏன் கொடுக்க வேண்டும்? தி.மு.க. அரசுக்கு எங்களது கோரிக்கை என்னவென்றால், நிலப்பிரபுக்கள் விவசாயத் தொழிலாளர்களைக் கொடுமைப்படுத்தும்பொழுது, போலீஸ் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ளவேண்டும். காங்கிரஸ் கட்சி தி.மு.க. வினர்கள் கம்யூனிஸ்டு வலையில் விழுந்துவிட்டதாகக் குற்றம் சாட்டுவார்கள் என்ற தயக்கம் இருக்கக்கூடாது. தஞ்சை ஜில்லாவில் விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடுகிறார்கள். மிராசுதார்கள் தரப்பில் குற்றமா அல்லது விவசாயத் தொழிலாளர்கள் தரப்பில் குற்றமா என்ற உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும். சமுதாயத்தில் செல்வாக்குப் படைத்தவர்கள் பக்கம் அதிகாரிகள் செயல்படுவதினால்தான் இம்மாதிரித் துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடக்கின்றன.
ஆகவேதான் நான் கேட்டுக்கொள்கிறேன். விவசாயத் தொழிலாளர்களுக்குச் சாதகமாக, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகளில் ஒருவரை தஞ்சை மாவட்டத்தில் உயர்ந்த போலீஸ் அதிகாரியாக நியமிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. இன்றைக்கு இருக்கக்கூடிய நிலைமையில் அப்படிப்பட்ட ஒரு மாறுதலை ஏற்படுத்தவேண்டும். நன்னிலத்தில், விளாகத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. நிலப்பிரபுக்கள் விவசாயத் தொழிலாளர்களுடைய வீடுகளுக்கு தீ வைக்கும் ஒரு வழியைக் கடைப்பிடிக்கிறார்கள். ஏழை எளிய விவசாய மக்கள் மிராசுதார்களுடைய வீட்டிற்குத் தைரியமாகப் போய் தீ வைப்பார்களா இந்தக் காலத்தில், அது நடக்கக்கூடிய சம்பவமா என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
அதற்கு மாறாக, நிலப்பிரபுக்கள் அடக்குமுறையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு ஏழை எளிய விவசாயத் தொழிலாளிகளைக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்பதுதான் உண்மை நிலை.
இந்தக் கண்டனத் தீர்மானம் நிலப்பிரபுக்களுக்குச் சாதகமாகக் காங்கிரஸ் கட்சியினால் கொண்டுவரப் பட்டிருக்கிறது என்றுதான் நான் கூறுவேன். கீழ்வெண்மணிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தாராளமாக உதவி அளிக்க சர்க்கார் முன்வரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இந்தச் சம்பவத்தில் தீக்கிரையான வீடுகளை உடனடியாகக் கட்டிக்கொடுப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டும். விவசாயத் தொழிலாளர்களின் குறைகளை சுமூகமாகத் தீர்ப்பதற்கு வழிவகைகள் காணவேண்டும். அதற்கான முறையில் கணபதியா பிள்ளை கமிஷன் விசாரணை நடைபெறவேண்டும்.
நிலப்பிரபுக்கள் விவசாயத் தொழிலாளிகளை எந்த விதத்தில் கொடுமைப்படுத்துகிறார்கள்; போலீஸ் அதிகாரிகள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் தகராறு வரும்பொழுதெல்லாம் என்பதைப் பற்றியெல்லாம் விசாரணை நடந்து, விவசாயத் தொழிலாளர்களின் குறைகள் தீர்க்கப்பட்டு, அவர்களுக்கு நிலப்பிரபுக்களின் கொடுமையிலிருந்து தகுந்த பாதுகாப்புக் கொடுக்கப்பட்டு, ஏழை விவசாயிகள், தாழ்த்தப்பட்ட அரிசனத் தொழிலாளர்கள் நல்வாழ்வு வாழ ஏற்பாடுகள் செய்யவேண்டும். நிலப்பிரபுக்களின் சுரண்டலுக்கு இடம் கொடுக்கக்கூடாது. அப்படிப்பட்ட முற்போக்குக் கொள்கையை, ஜனநாயகக் கட்சியெல்லாம் கொண்டு இருக்கின்றன. அரசாங்கம், விவசாயத் தொழிலாளர்களுடைய, ஏழை விவசாயிகளுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதன்மூலம், அதற்கெல்லாம் ஒரு முடிவு காணவேண்டும். நிலப்பிரபுக்களுக்குச் சாதகமாக, காங்கிரஸ் கட்சியின் வாதங்களுக்கு இரையானால், தஞ்சை ஜில்லாவில் நிலைமைகள் சீர்கெடும் என்பதைக் கூறிக் கொண்டு முடிக்கிறேன்.
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
