ஒரு சோஷலிச உலகம் சாத்தியமே! அந்தஉலகை வென்றடையப் போராடுவோம்!
டாக்டர் அசோக் தவாலே
(மார்ச் 16, 2025 அன்று லண்டன் ஹைகேட் கல்லறை வளாகத்தில் உள்ள கார்ல் மார்க்ஸ் நினைவுச் சதுக்கத்தில் டாக்டர் அசோக் தவாலே ஆற்றிய நினைவு சொற்பொழிவு)
142 ஆண்டுகளுக்கு முன்பு, 1883 மார்ச் 17 அன்று, பாட்டாளிகளின் மகத்தான தலைவரான பிரெடரிக் எங்கெல்ஸ், நாம் நின்று கொண்டிருக்கின்ற இந்த இடத்திற்கு அருகில்தான், தன் நெருங்கிய தோழரும் நண்பருமான மார்க்ஸின் கல்லறையின் முன்பாக அஞ்சலி செலுத்தும் தறுவாயில் “அனைத்திற்கும் முன்னதாக, மார்க்ஸ் ஒரு புரட்சியாளராக இருந்தார். அவரது புகழ் பல யுகங்களையும் கடந்து நிலைத்திருக்கும்; அதைப் போலவே, அவரது பணிகளும் கூட நினைவு கூரப்பட்டுக் கொண்டேயிருக்கும்.” என்று கூறினார்.
மார்க்ஸின் அளப்பரிய பங்களிப்பு
எங்கெல்ஸின் தீர்க்கதரிசனம்தான் என்னே! மார்க்ஸின் பெயரும் பணியும் காலங்காலமாக நிலைத்து நிற்பது மட்டுமின்றி, காலப்போக்கில் பெருமளவிற்கு மேம்பட்டும் வந்துள்ளது. தன் இளமைக் காலத்தில் “ நமக்கு முன்பாக இருந்த தத்துவஞானிகள் நாம் வசிக்கும் இந்த உலகத்தைப் பல்வேறு வழிகளில் விளக்க மட்டுமே செய்து வந்துள்ளனர். எனினும், செய்ய வேண்டியது என்னவெனில், அதை மாற்றுவதுதான்!” மார்க்ஸ் எழுதியிருந்தார்: சமூகத்தைப் பகுப்பாய்வு செய்வதற்கான அவரது அறிவியல்பூர்வமான, விமர்சனபூர்வமான, புரட்சிகரமான வழிமுறையானது இந்த உலகத்தை மாற்றியுள்ளது; வரும் காலங்களில் அதை மேலும் அதிகமாக மாற்றும் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை.
இயக்கவியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற அறிவியலை மட்டுமின்றி, சுரண்டலின் நடைமுறையை வெளிக்கொணர்ந்த உபரிமதிப்பு என்ற கோட்பாட்டையும் அவர் கண்டுபிடித்தார். அதைப் போன்றே, புரட்சி, விடுதலை, சோஷலிசம் ஆகியவற்றை அடைய வேண்டுமெனில் ஓர் அரசியல்ரீதியான வர்க்கப்போராட்டம் அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார். இது பிரம்மாண்டமான போராட்டங்களின் நேரடி அனுபவத்தால் நிரூபிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு சோஷலிசப் புரட்சிகள், அவற்றின் கண்கவர் சாதனைகள், இவை அனைத்திற்கும் மேலாக, உலகளாவிய பாசிசத்திற்கு எதிராக முன்னாள் சோவியத் யூனியன் மேற்கொண்ட வெற்றிகரமான போராட்டத்தின் வரலாறு காலங்களைக் கடந்து நிற்பனவாகும்.
உலகின் இன்றைய நிலையானது மார்க்ஸின் பகுப்பாய்வு எவ்வளவு பொருத்தமானது என்பதை நிரூபிக்கிறது. மூன்றே மூன்று சுருக்கமான மேற்கோள்களை மட்டுமே மார்க்ஸிடமிருந்து எடுத்துக் கொள்வோம். இன்றைய நிலைக்கு அவை எவ்வளவு கச்சிதமாகப் பொருந்துகின்றன என்பதைப் பார்ப்போம்.
மார்க்ஸ் தனது ‘மூலதனம்’ முதல் தொகுதி(1867)யில் எழுதுகிறார்: “ஆகியரின் கூற்றுப்படி, பணம் ஒரு கன்னத்தில் பிறவியிலேயே உருவான இரத்தக் கறையுடன் உலகிற்குள் வருகிறது என்றால், மூலதனம் தலைமுதல் கால் வரை, ஒவ்வொரு துளையிலிருந்து இரத்தமும் அழுக்கும் சொட்டச் சொட்ட வருகிறது.” இந்த இடத்தில் மார்க்ஸ் டி.ஜே. டன்னிங்-ஐ மேற்கோள் காட்டி ஓர் அடிக்குறிப்பையும் சேர்க்கிறார்: “போதுமான லாபம் இருக்கும்போது, மூலதனம் மிகவும் துணிச்சலாகிறது. 10 சதவீத லாபம் கிடைக்குமானால், அது எங்கும் முதலீடு செய்வதை உறுதிப்படுத்தும்; 20 சதவீத உறுதியான லாபம் என்றால், அது மேலும் ஆர்வமடைகிறது ; 50 சதவீதம் என்றால், அசாத்திய துணிச்சலை உருவாக்குகிறது; 100 சதவீதம் என்றால், மனிதர்கள் உருவாக்கிய அனைத்து சட்ட விதிகளையும் மிதிக்கத் தயாராகிவிடும்; 300 சதவீதம் என்றால், அதன் உரிமையாளரை தூக்கிலேற்றும் அபாயம் இருந்தாலும் கூட, அது எந்தக் குற்றத்தையும் செய்யத் தயங்காது; எந்த அபாயத்தையும் ஏற்கத் தயங்காது. கலவரமும் போராட்டமும் லாபத்தைக் கொண்டுவருமானால், அவற்றை அது தாராளமாக ஊக்குவிக்கும். கடத்தல் வியாபாரமும் அடிமை வர்த்தகமும் இங்கு கூறப்பட்டவற்றை முழுமையாக நிரூபித்துள்ளன.”
‘மூலதனம்’ முதல் தொகுதியில் மார்க்ஸ் மீண்டும் எழுதுகிறார்: “ஒரு முனையில் செல்வக் குவிப்பு இருக்கும் அதே நேரத்தில், எதிர்முனையில், மூலதனத்தின் வடிவில் அதன் சொந்த உற்பத்தியை மேற்கொள்ளும் வர்க்கத்தின் (தொழிலாளி வர்க்கத்தின்) தரப்பில் துயரம், உழைப்பின் வாதனை, அடிமைத்தனம், அறியாமை, மிருகத்தனம், மனச்சீரழிவு ஆகியவை ஒன்றுதிரண்டு நிற்கின்றன.”
1848ஆம் ஆண்டு எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸும் எங்கெல்ஸும் இவ்வாறு எழுதியிருந்தனர்: “தன் உற்பத்திப்பொருட்களுக்கு தொடர்ந்து விரிவடைந்து கொண்டே வரும் சந்தையின் தேவையானது முதலாளித்துவ வர்க்கத்தை பூமிப்பந்தின் முழுப்பரப்பிலும் துரத்திக் கொண்டே இருக்கிறது. அது எல்லா இடங்களிலும் கூடுகளைக் கட்டிக் கொண்டே இருக்க வேண்டும்; எல்லா இடங்களிலும் குடியேற வேண்டும்; எல்லா இடங்களிலும் தன் இணைப்புகளை நிறுவிக் கொண்டே இருக்க வேண்டும்.” தீர்க்கதரிசனமான இந்தப் பத்தியில்தான் மார்க்ஸும் எங்கெல்ஸும் (அவர்களது காலத்திற்குப் பிறகு) வரவிருக்கும் உலகமயமாக்கலை துல்லியமாகச் சித்தரித்துக் காட்டுகின்றனர். அதாவது, முழுமையாக 177 ஆண்டுகளுக்கு முன்பாகவே, அவர்கள் இதை முன் உணர்ந்து கூறியிருக்கின்றனர்.
மார்க்ஸும் எங்கெல்ஸும் எதிர்பார்த்த முதலாளித்துவத்தின் இத்தகைய வளர்ச்சியை ஆய்வுக்கு உட்படுத்திய லெனின், “ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் மிக உயர்ந்த கட்டம்’ (1917) என்ற முக்கியமானதொரு படைப்பில் மார்க்ஸின் இந்தக் கருத்தாக்கத்தை மேலும் வளப்படுத்தினார்.
இன்றும் பொருத்தப்பாடுடைய மார்க்ஸ்
மார்க்ஸின் பொருத்தப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டும்படியாக, இன்றைய உலகில் நாம் காண்பதென்ன?
பொருளாதார ரீதியான சுரண்டல், சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றின் நேரடி விளைவாக, மிக மோசமான, அருவெறுக்கத்தக்க ஏற்றத்தாழ்வுகள் கணக்கற்ற வகையில் பெருகியுள்ளன. உலகில் ஒரு சதவீதம் மட்டுமே ஆன செல்வந்தர்கள் மனித குலத்தில் கீழேயுள்ள 95 சதவீத மக்களை விட அதிகமான செல்வத்தைத் தங்களிடம் குவித்து வைத்துள்ளனர். 2020 முதல் புதிதாக உருவான செல்வங்கள் அனைத்திலும் கிட்டத்தட்ட 67 சதவீதத்தை இந்த ஒரு சதவீதமேயான செல்வந்தர்கள் கைப்பற்றிக் கொண்டுள்ளனர். அதாவது, சமூகத்தின் கீழேயுள்ள மீதமுள்ள 99 சதவீத மக்களைப் போல இரண்டு மடங்கு புதிய செல்வத்தை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். பணவீக்கமானது 170 கோடி தொழிலாளர்களின் ஊதியத்தை விஞ்சிய நிலையில் இருக்கும் அதே நேரத்தில், பில்லியனர் என்று அழைக்கப்படும் அபரிமித செல்வந்தர்களின் சொத்துமதிப்பு நாள்தோறும் 2.7 பில்லியன் டாலர்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
மறுபுறத்தில், 2023ஆம் ஆண்டில், உலக மக்கள்தொகையில் 46 சதவீதம் பேர் அல்லது 300 கோடிக்கும் அதிகமான மக்கள் நாளொன்றுக்கு 6.85 டாலர் (2017இல் வாங்கும் திறன் சமநிலை) என்ற உலகளாவிய வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர். இவர்களில் 70 கோடிப் பேர் மிகவும் தீவிரமான வறுமையில் (அதாவது ஒரு நாளைக்கு 2.15 டாலருக்கும் குறைவான வருமானத்தில்) உயிர் வாழ்கின்றனர். உலக மக்கள் தொகையில் பத்து சதவீதம் பேர் (86.41 கோடி பேர்) கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கபட்டுள்ளனர். இவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள், சிறுமிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று உலகளாவிய வேலையின்மை விகிதம் என்பது 5 சதவீதமாகவும், உலகளாவிய இளைஞர்களின் வேலையின்மை விகிதம் என்பது 13 சதவீதமாகவும் உள்ளது. புதிய தொழில்நுட்பங்களும் செயற்கை நுண்ணறிவும் வேலையின்மையையும் சுரண்டலையும் மேலும் தீவிரமாக்கியுள்ளன. மேலும் அவை மிகப்பெரும் ஏகபோகங்கள், பெருநிறுவனங்களுக்கு மேலும் அதீதமான லாபத்தை ஈட்டித் தருகின்றன. கட்டுக்கடங்காத பணவீக்கமும், அதற்கு ஈடுகொடுக்க முடியாத ஊதியமும், உலகின் பல நாடுகளிலும் தொழிலாளி வர்க்கம், நடுத்தர வர்க்கம் ஆகிய இரு தரப்பினருக்கும் கடுமையான வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு இட்டுச் சென்றுள்ளன. 2024ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, உலகிலுள்ள 54 நாடுகள் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன; அதைப் போன்றே, வளரும் நாடுகளிலிருந்து வளர்ந்த நாடுகளுக்குச் செல்லும் நிகர வள பரிமாற்றம் என்பது ஆண்டுக்கு சராசரியாக 700 பில்லியன் டாலர்கள் ஆகும்.
மேலே கூறப்பட்ட அப்பட்டமான உண்மைகள் அனைத்துமே கடந்த நான்கு தசாப்தங்களில் தீவிரமடைந்துள்ள நவ தாராளமயம், ஏகாதிபத்திய உலகமயமாக்கல் ஆகியவை முன்வைக்கும் கொள்கைகளின் நேரடி விளைவுகளே ஆகும். அதில் எவ்வித சந்தேகத்திற்கும் வழியில்லை. 2008ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தொடங்கி, பின்பு ஐரோப்பாவிலும் உலகம் முழுவதிலும் பரவிய உலகளாவிய நிதி நெருக்கடியின்போது இந்தக் கொள்கைகள் கடுமையான அதிர்ச்சியை எதிர்கொண்டன. அப்போதுதான் இந்த நிகழ்வுகளுக்கு நம்பகமானதொரு விளக்கத்தைப் பெறுவதற்கு முதலாளித்துவ உலகத் தலைவர்கள் பலரையும் வேறு எவரையும் அல்ல, ‘மிகவும் வெறுக்கப்பட்டவர்; மிகவும் அவதூறு செய்யப்பட்டவர்’ என்று எங்கெல்ஸால் விவரிக்கப்பட்ட மார்க்ஸை நோக்கித் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எத்தகையதொரு கவித்துவமான முரண்நகையாக அது இருந்தது!
உலகளாவிய வடக்கிற்கும் (வளர்ந்த நாடுகளுக்கும்) உலகளாவிய தெற்கிற்கும் (வளர்ந்து வரும் நாடுகளுக்கும்) இடையிலான உலகளாவிய சமத்துவமின்மைகள் ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் பொருளாதார, சமூக சமத்துவமின்மைகள், ‘சிக்கன நடவடிக்கைகள்’ என்பதன் பெயரால் ஆளும் வர்க்கங்கள் உழைக்கும் மக்கள் மீது தொடுக்கும் தாக்குதல்கள் ஆகியவற்றின் விளைவாக அதிகரித்து வரும் சமூகரீதியான அமைதியின்மை போன்றவை ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் ஸ்தூலமான நிலைமைகளுக்கு ஏற்ப இரண்டு வழிகளில் விரிவான வகையில் மடைமாற்றி விடப்படுகின்றன.
இவற்றில் ஒன்று, பல நாடுகளிலும் ஏற்பட்டு வரும் வலதுசாரி மாற்றம். இது சில நேரங்களில் புலம் பெயர்ந்தவர்கள் உள்ளிட்டு, இன, மத, பிற சிறுபான்மையினர் மீதான தீவிர வலது மற்றும் நவ பாசிச வாத தாக்குதல்களின் வடிவத்தை மேற்கொள்கிறது. வரலாற்றின் முரண்நகை என்று கூறத்தக்க வகையில், அடால்ஃப் ஹிட்லரின் அதே கொள்கை இப்போது பெஞ்சமின் நெதன்யாஹுவால் மிகுந்த விசுவாசத்தோடு நகலெடுக்கப்படுகிறது. வேறு சிலரும் கூட இதைப் பின்பற்றுகின்றனர். மேலும் பல நாடுகளில் சமூக- ஜனநாயகக் கட்சிகளில் அரசியல்- தத்துவார்த்த நிலைபாடுகளின் திவாலான நிலையும், அவற்றின் கோட்பாடற்ற சமரசங்களும் தீவிர வலதுசாரிகள் முன்னேற உதவியுள்ளன.
வெனிசுவேலா, பொலிவியா, பிரேசில், மெக்சிகோ, கொலம்பியா, உருகுவே, சமீபத்தில் இலங்கை ஆகிய நாடுகளில் பெரும்பகுதி மக்களை வென்றெடுக்க முடிந்த இடதுசாரிகளின் குறிப்பிடத்தக்க வெற்றிகள் இதற்கு நேரெதிரான போக்காக அமைகின்றன.
தீவிர வலது, நவ பாசிச, எதேச்சாதிகாரத்தின் தாக்குதலுக்கு மிகச் சமீபத்திய, உன்னதமான, உதாரணமாக அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் திகழ்கிறார். அவரது பைத்தியக்கார செயல்பாடுகளிலும் கூட ஒரு முறை இருக்கிறது. அமெரிக்காவின் தவிர்க்கமுடியாத வீழ்ச்சியைத் தடுப்பதற்கான திட்டமிட்ட கடைசி முயற்சியாகவும் இது திகழ்கிறது. எனினும் இந்த முயற்சியும் கூட தோல்வி அடையவே செய்யும். ட்ரம்ப்-இன் கீழ், எலான் மஸ்க் போன்ற பெரு நிறுவன எடுபிடிகள் இப்போது நேரடியாக அமெரிக்க அரசின் செயல்பாடுகளை ஆட்டிப்படைக்கின்றனர். இத்தகைய செயல்பாடுகள் பணக்காரர்களை மட்டுமே மையமாகக் கொண்ட, நவ தாராளவாத, மக்கள் விரோத, ஜனநாயக விரோத போக்குகளை மேலும் வளர்க்கவே செய்யும். இவ்வகையில்தான் நவ தாராளவாதம், நவ பாசிசத்திற்கு உகந்த நிலைமைகளை உருவாக்கி வருகிறது.
கிரீன் லாந்து, கனடா, பனாமா கால்வாய் மற்றும் காசா பகுதி ஆகியவை குறித்த ட்ரம்ப்-இன் அபத்தமான கூற்றுகளும், அவர் கட்டவிழ்த்து விட்டுள்ள வரிவிதிப்பும் வர்த்தகப் போர்களும் உலகம் முழுவதிலும் எதிர்ப்புக் குரல்களை எழுப்பியுள்ளன. பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்தும், ஐ.நா. சபையின் உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகும் என்ற அவரது முடிவுகளும் கூட பல்வேறு சக்திகளால் கடுமையாக எதிர்க்கப்படுகின்றன. உக்ரைன் போர் குறித்த அவரது நிலைப்பாடு இப்போது மேற்கு ஐரோப்பிய அரசுகளை அவருக்கு எதிராக அணிதிரட்டியுள்ளது. காசாவின் துணிவு மிக்க பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய மனிதத்தன்மையற்ற, ஏகாதிபத்திய ஆதரவுபெற்ற, ஜியோனிச இனப்படுகொலையில், சுமார் 50,000 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 60 சதவீதம் பேர் பெண்களும் குழந்தைகளும் ஆவர். ஏகாதிபத்திய முகாம் முழுவதுமே இப்போது இஸ்ரேலின் பின்னால் முழுமையாக ஒன்றுதிரண்டுள்ளது.
நம்பிக்கையின் கீற்றுகள்
இத்தருணத்தில், தங்கள் நாட்டு மக்களின் துரிதமான, நியாயமான சமூக- பொருளாதார முன்னேற்றத்திற்காகக் கடுமையாக உழைத்துவரும் கியூபா, சீனா, வியட்நாம், லாவோஸ், கொரிய மக்கள் குடியரசு (வட கொரியா) போன்ற சோஷலிச நாடுகளுக்கும் லத்தீன் அமெரிக்கா, இலங்கை போன்ற இடதுசாரிகள் தலைமையிலான நாடுகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களில் பலரும் ஏகாதிபத்தியத்தையும் ஜியோனிசத்தையும் (யூதவெறி) துணிவோடு எதிர்த்து வருகின்றனர். ஃபிடெல் காஸ்த்ரோ, சே குவேரா, ராவ்ல் காஸ்த்ரோ போன்ற தீரர்களால் நிறுவப்பட்ட, கம்யூனிஸ்ட் கட்சியால் வழிநடத்தப்படும் கியூப மக்களுக்கு நமது சிறப்பான செவ்வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். ட்ரம்ப் நிர்வாகத்தின் காட்டுமிராண்டித் தனமான புதிய தாக்குதல்களுக்கு எதிராக அங்குள்ள மக்கள் துணிவோடு போராடி வருகின்றனர்.
மற்ற நாடுகளிலும் கூட போராட்டங்களும் எதிர்ப்புகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. எமது நாடான இந்தியாவில் 2020-21ஆம் ஆண்டில், நாட்டின் தலைநகரான டெல்லிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்ட பல லட்சக்கணக்கான விவசாயிகளின் உண்மையான அடையாளத்தை, ஒன்றுபட்ட, நாடுதழுவிய போராட்டத்தை எம்மால் காண முடிந்தது. கொரோனா தொற்றுப்பரவலின் உச்சத்தில், மத்திய அரசு திணித்த கார்ப்பரேட் ஆதரவான, விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவே அவர்கல் போராடினர். 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் வீரமரணம் எய்தினர். வீரஞ்செறிந்த இந்தப் போராட்டம் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியது. வரலாற்றுச்சிறப்புமிக்க ஒரு வெற்றிக்கும் வழிவகுத்தது.
இப்போது அதே மத்திய அரசு கார்ப்பரேட் ஆதரவு, தொழிலாளர் விரோத தொழிலாளர் சட்டங்கள் நான்கை அமலாக்க முயற்சி செய்கிறது. தொழிலாளி வர்க்கத்தின் மீதான இந்தக் கடுமையான தாக்குதலுக்கு எதிராக, 2025 மே மாதத்தில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களும், விவசாயிகளும் பங்கேற்கும் வகையில், விவசாயிகளின் கிராமப்புற வேலை நிறுத்தம் ஒன்றின் ஆதரவோடு, வலுவான, ஒன்றுபட்ட, தேசிய அளவிலான பொதுவேலைநிறுத்தம் ஒன்றுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நம்பிக்கையைக் குறிக்கும்படியான கவர்ச்சிகரமானதொரு முழக்கத்தை உலக சமூக மன்றம் வைத்துக் கொண்டுள்ளது. ‘வேறொரு உலகம் சாத்தியமே!’ என்பதுதான் இந்த முழக்கம். மகத்தான புரட்சியாளரான கார்ஸ் மார்க்ஸின் நினைவு நாளில், அவரது கல்லறையில், நாம் அந்த முழக்கத்தைச் சற்றே மாற்றி அமைக்கலாம். ஒரு சோஷலிச உலகம் சாத்தியமே! 21ஆம் நூற்றாண்டுக்கான சோஷலிசம் என்பதே ஒரே மாற்று!
மனித குலத்தின் உன்னத வழிகாட்டிகளான மார்க்ஸும் எங்கெல்ஸும் தங்களது கம்யூனிஸ்ட் அறிக்கையை கீழ்க்கண்ட முழக்கத்தோடுதான் நிறைவு செய்திருந்தனர்: “ பாட்டாளிகளுக்கு இழப்பதற்கு அடிமைச்சங்கிலிகளைத் தவிர வேறு எதுவுமில்லை! ஆனால் அவர்கள் வெல்வதற்கோ ஒரு பொன்னுலகம் இருக்கிறது!”
மார்க்சியத்தின் உண்மையை நிரூபிக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம்! மக்களின் மனதையும் இதயத்தையும் வெல்வதற்கான நமது முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்வோம்! சோஷலிச உலகை வெல்ல, நமது ஊக்கம், வலிமை, அதிகாரம், அறிவு, கற்பனை ஆகிய அனைத்தையும் கொண்டு தொடர்ந்து போராடுவோம்!
ஏகாதிபத்தியம் ஒழிக! நவ பாசிசம் ஒழிக! முதலாளித்துவம் ஒழிக! நிலப்பிரபுத்துவம் ஒழிக!
ஜனநாயகம் நீடூழி வாழ்க! சோஷலிசம் நீடூழி வாழ்க! புரட்சி நீடுழி வாழ்க! மார்க்சியம் நீடுழி வாழ்க!
தமிழில்: வீ. பா. கணேசன்
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
