
கியூபா புரட்சியின் வீரம்மிக்க பயணம்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
அறிமுகம்
இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த பல சோசலிச புரட்சிகளில் கியூபா புரட்சிக்கு ஒரு முக்கிய தனித்தன்மை உண்டு. அமெரிக்க கண்டத்தின் வரலாற்றில் முதல்முறையாக 1959 ஜனவரி 1 அன்று கியூபாவில் சோசலிச புரட்சி ஆட்சியை கைப்பற்றியது. ஏகாதிபத்திய முகாமின் தலைமையாக விளங்கும் அமெரிக்க வல்லரசின் மிக அருகாமையில் உள்ள நாடு கியூபா. உலகில் எங்குமே சோசலிசம் பரவி விடக்கூடாது; உலகம் முழுவதும் ஏகாதிபத்திய நாடுகளின் பெரும் கம்பெனிகளுக்கு லாப வேட்டைக்கான களமாகவே இருக்கவேண்டும் என்ற நிலைபாட்டின் அடிப்படையில் செயல்பட்டுவரும் அமெரிக்க வல்லரசு, 1959 ஜனவரி 1 அன்று பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.
அத்தினத்தில் கியூபாவில் அமெரிக்க உதவியுடன் கொடுங்கோல் ஆட்சி நடத்திவந்த சர்வாதிகாரி பாதிஸ்தாவின் அரசு படைகளை பிடெல் காஸ்ட்ரோவின் தலைமையில் கியூபா மக்களின் விடுதலைப் படைகள் தோற்கடித்தன. பாதிஸ்தா நாட்டைவிட்டு ஓடிவிட்டான். தனது வெற்றி உரையில் கியூபா சோசலிச பாதையில் பயணிக்கும் என்பதை காஸ்ட்ரோ முன்வைத்தார். அமெரிக்க வல்லரசு கியூபாவின் சோசலிச பயணத்திற்கு எதிரான தனது நாசவேலைகளை தீவிரப்படுத்தியது. 1960 மார்ச் மாதமே கியூபாவின் புரட்சிகர அரசை தூக்கியெறிய அமரிக்க வல்லரசு திட்டங்கள் தீட்டியது. ஏப்ரல் 1960 இல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசுக்கு மக்களின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதையும், அங்கு கம்யூனிசத்திற்கு ஆதரவு வேகமாக அதிகரித்து வருவதையும் கண்ட அமெரிக்க அரசு கியூபாவிற்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.
எடுத்துக்காட்டாக, கியூபாவிற்கு கச்சா எண்ணையை விற்க மறுத்தது. சோவியத் ஒன்றியம் கியூபாவிற்கு கச்சா எண்ணை தர முன்வந்தது. சோவியத் ஒன்றியம் அளித்த எண்ணையை சுத்திகரிப்பு செய்யக் கூடாது என்ற அமெரிக்க அரசின் நிர்ப்பந்தத்தால் கியூபாவில் செயல்பட்டுவந்த பன்னாட்டு பெட்ரோலிய எண்ணைக் கம்பெனிகள் கச்சா எண்ணையை சுத்திகரிக்க மறுத்துவிட்டன. இதற்கு சரியான பதிலடியாக அக்கம்பெனிகளை கியூபா அரசு நட்டஈடின்றி நாட்டுடமையாக்கியது. எதிர்வினையாக, அமெரிக்க அரசு கியூபா நாட்டின் சர்க்கரையை வாங்குவது என்ற ஒப்பந்தத்தை ரத்து செய்தது. பின்னர் மேலும் சில அமெரிக்க கம்பனிகளை கியூபா நாட்டுடமை ஆக்கியது.
அடிப்படை நிலசசீர்திருத்தத்தை மேற்கொண்டு நிலங்களை அரசுடமை ஆக்கியது. கியூபாவின் சோசலிச புரட்சியை முடிவுக்கு கொண்டுவர தீவிரமாக விரும்பிய அமெரிக்க அரசு, சோவியத் செல்வாக்கு கியூபாவில் அதிகரித்திருப்பதாக கூறி, மனிதாபிமான உதவி நீங்கலாக கியூபா உடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் ரத்து செய்தது. 1961இல் கியூபாவுடனான தூதரக உறவுகளை அமெரிக்கா துண்டித்துக்கொண்டது. கியூபா நாட்டுடமை ஆக்கியதில் பெரும்பகுதி ஏற்கெனவே பல பத்தாண்டுகள் கியூபாவை சுரண்டிக் கொழுத்த அமெரிக்க பகாசுர கம்பெனிகளின் சொத்துக்களைத்தான் என்பதை இங்கு பதிவிட வேண்டும்.
அமெரிக்க வல்லரசை எதிர்கொண்ட கியூபா
கியூபா அரசுக்கு எதிராக கலகம் தூண்டி கவிழ்க்க 1961 ஏப்ரல் மாதம் அமெரிக்க அரசு தயாரித்து அனுப்பிய கூலிப்படை நான்கு நாட்களில் சரணடைந்தது. இதனை தொடர்ந்து காஸ்ட்ரோ கியூபா சோசலிச நாடு என்று பிரகடனம் செய்கிறார். இதனை சாக்காக வைத்து, மேலும் பல கியூபா விரோத நடவடிக்கைகளை அமெரிக்க வல்லரசு எடுக்கிறது. 1962 செப்டம்பர் 7 அன்று அமெரிக்க அரசு கியூபாவிற்கு எதிரான வர்த்தக தடையை கிட்டத்தட்ட அனைத்து பொருட்கள் மீதும் விரிவுபடுத்துகிறது. பின்னர் அடுத்தடுத்து அமெரிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் மூலம், கியூபாவிற்கு எதிரான முழு பொருளாதார மற்றும் அரசுசார் தடைகள் அமலுக்கு வருகின்றன. இடையிடையே சிறு சிறு மாற்றங்கள் நிகழ்ந்தாலும், அனைத்து அமெரிக்க அரசாங்கங்களுமே இன்று வரை, அதாவது சுமார் 65 ஆண்டுகளாக, இத்தடையை ஏறத்தாழ முழுமையாக அமலாக்கி வருகின்றன. பிற நாடுகளையும் கியூபாவுடன் பொருளாதார, வர்த்தக உறவுகள் வைத்துக் கொள்ளக் கூடாது என்று தொடர்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியம் நிர்ப்பந்தித்து வருகிறது.
கியூபாவிற்கு இத்தடைகள் பெரும் சேதம் விளைவித்துள்ளது உண்மை என்றாலும், கியூபா அரசின் லாவகமான அயலுறவு அணுகுமுறைகளின் காரணமாகவும், கியூபா மக்களின் உறுதிமிக்க நாட்டுப்பற்று, சோசலிச பற்று, இறையாண்மை பற்று ஆகியவற்றாலும், கியூபாவின் சோசலிச அமைப்பின் சாதனைகள் மூலமும், அமெரிக்காவின் மோசமான நடவடிக்கைகள் பலவற்றை எதிர்கொள்ளவும், பன்னாட்டு அரங்கில் அமெரிக்க வல்லரசை அம்பலப்படுத்தவும், கியூபாவை தனிமைப்படாமல், மதிக்கத்தக்க நாடாக நிலை நிறுத்திக்கொள்ளவும் முடிந்துள்ளது.
சொல்லப்போனால், மத்திய, தென் அமெரிக்க நாடுகள் மத்தியில் மட்டுமின்றி, பல ஆப்பிரிக்க நாடுகளிலும், உலகம் தழுவிய அணிசேரா இயக்கத்திலும், சோசலிச கியூபா பெரும் மதிப்பு பெற்ற நாடாக மிளிர முடிந்துள்ளது என்பது கியூபாவின் சோசலிச அமைப்பின் வலுவுக்கும் கியூபா கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் சிறந்த தத்துவம் மற்றும் நடைமுறைக்கும் சான்றாக உள்ளது. ஏகாதிபத்திய முகாமில் உள்ள நாடுகள் பலவும் கூட, கியூபாவுடன் ராஜீய மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தியுள்ளன.
ஐக்கிய நாடுகளின் பேரவையில் கியூபாவிற்கு ஆதரவாகவும், அமெரிக்க பொருளாதார மற்றும் அரசியல் தடைகளை எதிர்த்தும், மிகப் பெரும்பாலான நாடுகள் பலமுறை வாக்களித்துள்ளன. அமெரிக்க கண்டத்தில் வெடித்த முதல் சோசலிச புரட்சி, சவால்கள் நிறைந்த 66 ஆண்டுகளில் தனது சோசலிச அமைப்பை தக்க வைத்துக்கொண்டது மட்டுமின்றி, ஏகாதிபத்தியத்திற்கு இன்று வரை அடிபணியாமல், வீரத்துடன் தனது சோசலிச பயணத்தை தன் நாட்டு மக்களின் பேராதரவுடனும், ஜனநாயக பங்கேற்புடனும் தொடர்கிறது என்பதும் பெருமைக்குரிய சாதனைகள்.
உலகின் பல நாடுகளில் புரட்சிகர முற்போக்கு உணர்வுடன் கியூபாவின் மருத்துவர்களும் அறிவியலாளர்களும் கியூப ராணுவமும் பெரும் சேவைகளை செய்துள்ளனர்; செய்து வருகின்றனர் என்பதை முதலாளித்துவ உலகின் ஊடகங்கள் கூட அங்கீகரிக்கும் நிலைமையும், சோசலிச தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் பெருமை சேர்க்கின்றன. அதேநேரத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூபாவிற்கும் சோசலிசத்திற்கும் முதல் எதிரியாக தொடர்கிறது என்பதையும் ஒரு நொடி கூட மறக்கலாகாது.
சோசலிச கியூபா – முதல் முப்பது ஆண்டுகள் 1959-1989
சோசலிச சக்திகள் 1959இல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியபொழுது, கியூபா நாட்டின் நிலைமை அனைத்து துறைகளிலும் பின்தங்கியதாக இருந்தது. எழுத்தறிவு இல்லாத மக்களின் சதவிகிதம் 41.7% ஆக இருந்தது. புரட்சிகர அரசு இப்பிரச்சினையை விரிவான மக்கள் இயக்கம் மூலமாக எதிர்கொண்டது. இரண்டே ஆண்டுகளில் எழுத்தறிவு இல்லாதவர் சதவிகிதம் 4% க்கும் கீழே சென்றது. 1981இல் இது 2%க்கும் குறைவாக ஆகிவிட்டது. 1950களில் கியூபாவின் கிராமப்புற மக்களில் 8% தான் மருத்துவ சிகிச்சை பெற்றனர். 74% மிக மோசமான உறைவிடங்களில் வாழ்ந்துவந்தனர். 63% மக்களுக்கு எந்த கழிவறை வசதியும் கிடையாது. 7.2% மக்களுக்குத்தான் மின்சாரம் கிடைத்தது. 1980இல் 80 சதம் மக்களுக்கு மேம்பட்ட உறைவிட வசதி கிடைத்தது. கிட்டத்தட்ட 80 சதவிகித மக்களுக்கு கழிப்பறை உள்ளிட்ட சுகாதார வசதிகள் கிடைத்தது. அனைத்து கிராம மக்களுக்கும் மருத்துவ வசதி கட்டணம் இன்றி கிடைத்தது. கிட்டத்தட்ட சரிபாதி மக்களுக்கு மின்சார வசதி கிடைத்தது. டைபாய்டு, காச நோய், தொண்டை அழற்சி நோய் போன்ற நோய்கள் 1980இல் கியூபாவில் அநேகமாக ஒழிக்கப்பட்டுவிட்டன.
1965இல் கியூபாவில் 1200 மக்களுக்கு ஒரு மருத்துவர் இருந்தார். இது அடுத்த பத்து ஆண்டுகளில் 1000 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்று ஆகியது. மருத்துவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. 1985இல் 500 கியூப மக்களுக்கு ஒரு மருத்துவர் என்றும், 2005 இல் 167 கியூப மக்களுக்கு ஒரு மருத்துவர் என்றும், உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு, மருத்துவர்கள் எண்ணிக்கையை பெருக்கி, கியூபாவிற்கு மட்டுமின்றி உலகிற்கே கியூபா சேவை செய்தது. 2017இல் ஒரு கோடியே 12 லட்சம் மக்கள்தொகை கொண்டிருந்த கியூபாவில், 85,000 மருத்துவர்களும், ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கில் பயிற்சி பெற்ற புதிய மருத்துவர்களை உருவாக்கும் 21 மருத்துவ கல்வி நிறுவனங்களும் கியூபாவில் இருந்தன.
2017, 2018இல் வளரும் நாடான கியூபாவின் சேய் இறப்பு விகிதம் (அதாவது, ஒரு வயதை அடையும் முன்பே இறக்கும் சேய்கள் எண்ணிக்கை) உயிருடன் பிறக்கும் 1000 சேய்களில் 4 சேய்கள் என்று உலகிற்கே எடுத்துக்காட்டாக இருந்தது. குபேரபுரி என்று விளம்பரப்படுத்தப்படும் அமெரிக்காவில் இந்த விகிதம் 5.9 என்று இருந்தது என்பதும், கியூபாவிற்கு மிக அருகாமையில் உள்ள ஹைதி நாட்டில் கிட்டத்தட்ட 40 என்று பத்து மடங்கு அதிகமாக இருந்தது. ஒரு அமெரிக்க மருத்துவ ஏடு கியூபாவின் மக்கள் நல்வாழ்வு அமைப்பு பற்றி பின்வருமாறு குறிப்பிட்டது:
“கியூபாவின் மக்கள் நல அமைப்பு (Cuban healthcare system) கற்பனைசெய்ய முடையாத வகையில் உள்ளது. எண்ணிலடங்கா மருத்துவர்கள் உள்ளனர்! ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குடும்ப மருத்துவர் இருக்கிறார். மருத்துவ மற்றும் உடல், மன நல வசதிகளை பொருத்தவரையில் எல்லாமே இலவசம், முழுக்க முழுக்க இலவசம்!!” கியூபா சோசலிஸத்தின் மகத்தான சாதனைகளில் ஒன்றாக அந்நாட்டின் மக்கள் உடல், மன நல அமைப்பு திகழ்கிறது.
கியூப சோசலிசத்தின் பாட்டாளி வர்க்க சர்வதேசீயம்
கியூப சோசலிசத்தின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் அதன் சர்வதேசீய பங்களிப்பு ஆகும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறைகளில் உலகின் பல வளரும் நாடுகளில் கியூபா ஆற்றியுள்ள சிறப்பான பங்கு அதனை அங்கீகரிக்க வேண்டிய அவசியத்தை மேலை நாடுகளின் முதலாளித்துவ ஊடகங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவில் எபோலா தொற்று வெடித்தபொழுது, உலக சுகாதார அமைப்பு உதவி கோரி விடுத்த அறைகூவலுக்கு உதவ முன்வந்த முதல் நாடு கியூபா. ஏற்கெனவே அதன் மருத்துவர்களும் செவிலியர்களும் பணி செய்து கொண்டிருந்த கினி, சீயரா லியோன், லைபீரியா நாடுகளுக்கு மிக அதிக எண்ணிக்கையில் மருத்துவர்களை அனுப்பியது கியூபா. இரண்டே வாரங்களில் 10,000 கியூப மருத்துவர்கள் பணப்பலனை எதிர்பார்க்காமல் தங்கள் உயிரையும் பணயம் வைத்து அங்கு சென்றனர்.
ஆனால் சோசலிச கியூபாவிற்கு இது புதிதல்ல. 1960ஆம் ஆண்டில் இருந்து அடுத்த 60 ஆண்டுகளில் 164 நாடுகளில் கியூபாவின் 4 லட்சம் மருத்துவ துறை நிபுணர்கள் பணியாற்றியுள்ளனர். இதையெல்லாம் ஆளும் வர்க்க ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை; குறிப்பிடுவதில்லை.
ஆப்பிரிக்காவில் மட்டுமின்றி இதர பல நாடுகளிலும் கியூபாவின் பங்கு சிறப்பானது. பத்தாண்டு காலம் வெனிசுவேலாவில் 20,000க்கும் மேற்பட்ட கியூபா மருத்துவ நிபுணர்கள் பணியாற்றியுள்ளனர். இதனுடன் பல நாடுகளில் விடுதலை இயக்கங்களில் ராணுவவீரர்களாக, கல்வியாளர்களாக, கட்டிட பணிகளில், பல தொழில்நுட்ப பணிகளில் என்று சென்ற கியூப மக்களை கணக்கில் கொண்டால், புரட்சிகர கியூபாவின் மக்களில் பத்துக்கு ஒருவர், பாட்டாளி வர்க்க சர்வதேசீய பணிகளில் பிறநாடுகளில் செயல்பட்டுள்ளனர் என்ற, நம்மை பிரமிப்புக்கு உள்ளாக்கும் செய்தி கிடைக்கிறது. வளரும் நாடுகளிலிருந்து வரும் எண்ணற்ற மாணவர்களுக்கும் தரமான கல்வியை இலவசமாகவும் மலிவாகவும் கியூபா அளித்துவருகிறது. குறிப்பாக, மக்கள் நல்வாழ்வு துறையில் இது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட உண்மை.
1960களின் இறுதியில் பல நாடுகளில், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில், கியூபாவின் மருத்துவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஆறு ஆப்பிரிக்க நாடுகளில் பாதிக்கும் மேலான மருத்துவர்கள் கியூபாவை சேர்ந்தவர்கள். 1990களில், சோவியத் ஒன்றியம் தகர்க்கப்பட்டபின் கியூபா கடும் நெருக்கடியை சந்தித்தது. என்றாலும் கூட, கியூபா “லத்தீன் அமெரிக்க மருத்துவ பள்ளி” என்ற மிகப்பெரிய மருத்துவ கல்லூரியை அமைத்தது. இதில் பல நாட்டவர் கட்டணம் இன்றி படித்தனர். 2009இல் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் சான் கூறினார்:
“எனக்கு தெரிந்து கட்டணம் எதுவும் வாங்காமல், மாணவர்களுக்கு இவ்வளவு சிறப்பான பயிற்சி தரும் நிறுவனம் வேறு எங்கேயும் இல்லை. மேலும் இந்நிறுவனம் ஏழை குடும்பங்களில் இருந்துவரும் மாணவர்களுக்கு, பழங்குடி மக்களுக்கு, பெண்களுக்கு, இச்சேவையை அளிக்கிறது. இது ஒரு தன்னிகரில்லா நிறுவனம்.”
2019 ஆம் ஆண்டு கணக்குப்படி 105 நாடுகளில் இருந்து 29,000 மாணவர்கள் இங்கு படித்து உலகின் பலநாடுகளில் மருத்துவர்களாக பணி புரிகின்றனர்.
தேச விடுதலை இயக்கங்களில் கியூபாவின் பங்கு
1950கள் முதல் 1980களின் துவக்கம் வரை ஒரு வலுவான சோசலிச முகாம் இருந்த பின்புலத்தில், தேச விடுதலை இயக்கங்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களும், இதர சோசலிச மற்றும் முற்போக்கு இயக்கங்களும் பல வெற்றிகளை ஈட்ட முடிந்தது. அவை முன்னேறின. எனினும் ஏகாதிபத்திய உலகும், அதன் அரவணைப்பில் ஆப்பிரிக்காவில் ஆண்டுவந்த நிறவெறி அரசுகளும், தேச விடுதலை இயக்கங்களை கடுமையாக எதிர்த்தன. இதன் ஒரு பகுதியாக, 1975 நவம்பர் முதல் 1976 மார்ச் வரை அங்கோலா நாட்டின் தேச விடுதலை போராட்டத்திற்கு ஆதரவாக, 36,000 கியூப ராணுவ வீரர்கள் களம் புகுந்தனர். கூடவே 200 மருத்துவப் பணி செய்வோரும் சென்றனர்.
இதுபோல், 1977இல் இருந்து எத்தியோப்பியா உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகளிலும் கியூபா துருப்புகளும் மருத்துவ ஊழியர்களும் பணியாற்றினர். தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசு அது கைப்பற்றியிருந்த நமிபியாவில் இருந்து அங்கோலாவை 1987இல் தாக்கிய பொழுது கியூபா மறுபடியும் அங்கோலாவிற்கு உதவியது. சாவெஸ் தலைமையிலான வெனிசுவேலா ஏகாதிபத்திய அச்சுறுத்தலுக்கு உள்ளானபொழுது கியூபா வெனிசுவேலாவிற்கு ஆதரவாக நின்றது. பல்வேறு தருணங்களில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள முற்போக்கு இயக்கங்களுக்கு பலவகைகளில் சோசலிஸ கியூபா உதவி புரிந்து வந்துள்ளது.
விசேஷ கட்டம் எனப்படும் 199௦கள்
1989-91 காலத்தில் உலக சோசலிச இயக்கம் பெரும் பின்னடைவுகளை சந்தித்தது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிச அமைப்பு வீழ்த்தப்பட்டு முதலாளித்துவ ஆட்சிகள் அமைந்தன. 1991இல் சோவியத் ஒன்றியம் சிதறுண்டது. “சோசலிசம் அழிந்துவிட்டது. இனி எங்கும் முதலாளித்துவம் தான்” என்று ஏகாதிபத்திய முகாம் கொக்கரித்தது. அதுவரை கியூபாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த சோசலிச சோவியத் ஒன்றியம் தகர்க்கப்பட்டதும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவ அமைப்பு ஏற்பட்டதும், கியூபாவிற்கு பெரும் நெருக்கடியாக அமைந்தது.
எனினும் சோசலிச கியூபா இந்த நெருக்கடியை வீரத்துடனும் விவேகத்துடனும் எதிர்கொண்டது. முப்பது ஆண்டு கால சோசலிச வளர்ச்சியில் பல துறைகளில் கியூபா முன்னேறியிருந்தது. அரசியல்-பொருளாதார சுயசார்பு, கியூபாவின் சோசலிச பயணத்தில் முக்கிய இடம் பெற்றிருந்ததால், சோவியத் தகர்வின் விளைவுகளையும் கியூபா தனது உறுதியான சோசலிச கொள்கை நிலைபாட்டில் நின்று சந்தித்தது. முதல் நான்காண்டு காலம் -1993 வரை- கியூபாவின் தேச உற்பத்தி மதிப்பு சரிந்தது. ஆனால் நெருக்கடியில் இருந்து மீள, தக்க சமூக, பொருளாதார, அரசியல் நடவடிக்கைகளை கியூபா மேற்கொண்டதன் விளைவாக, கடும் சிரமங்களை இடைப்பட்ட காலத்தில் சந்திக்க நேர்ந்தாலும், மக்களின் விரிவான ஜனநாயக பங்கேற்புடன் மாற்று கொள்கைகளை அமலாக்கி கியூபா தன் பயணத்தைத் தொடர முடிந்தது.
இதில் குறிப்பிடவேண்டியது கியூபாவின் நடவடிக்கைகள் தாராளமய பாதையை நிராகரித்து சோசலிச பாதையில்தான் இருந்தன என்பதே. அரசின் வலுவான மையமான பங்கு தொடர்ந்தது. திட்டமிட்ட பொருளாதாரம் மேலும் வலுப்படுத்தப்பட்டது. அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், துறைகளிலும் கள நிலைமைக்கு ஏற்றவாறு திட்டங்கள் வகுக்கப்பட்டு அமலாயின. சிறு, குறு விவசாயிகள், சிறு, குறு தொழில்முனைவோர், சுயவேலை செய்வோர், கூட்டுறவு அமைப்புகள் என்று பல வகையான பிரிவினரும் அரசின் ஊக்கம் பெற்றனர். நாட்டு வளர்ச்சியில் மக்களின் ஜனநாயக பங்கேற்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. அரசு மேற்கொண்ட புதிய கொள்கைகளும் திட்டங்களும் மக்களிடையே விவாதிக்கப்பட்டு, அவர்களது பங்கேற்புடன் அமலாக்கப்பட்டது. அரசின் மையமான பங்கு தொடர்ந்தது. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. உயிரி தொழில்நுட்பம், மருத்துவ துறை ஆகியவற்றில் தீவிர முனைவுகள் மேற்கொள்ளப்பட்டன. இவை விரைவில் பயன் தந்தன.
மார்க்சீய நிலைபாட்டில் நின்று சமூகத்தையும், பொருளாதாரத்தையும், அரசியலையும் இணைத்தே புதிய கொள்கைகளும் முனைவுகளும் அமலாக்கப்பட்டன. பல நாடுகளில் சோசலிச நிர்மாணம் பற்றி கிடைத்த வெளிச்சமும் படிப்பினைகளும் கியூபாவின் களநிலைமைகள், சமகால பன்னாட்டு நிலைமைகள் ஆகியவையும் கணக்கில் கொள்ளப்பட்டு, நெருக்கடியை எதிர்கொள்ள தக்க நடவடிக்கைகள் தீர்மானிக்கப்பட்டன.
199௦களின் துவக்கத்தில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவில் இருந்து படிப்படியாக கியூபா மீண்டது. 2௦௦௦ முதல் 2௦௦6 வரையிலான ஆறு ஆண்டுகளில், லத்தீன் அமெரிக்காவில் மிக வேகமாக வளரும் நாடாக கியூபா ஆண்டுக்கு 6.4% வேகத்தில் வளர்ந்தது. நெருக்கடி மிக்க 199௦களின் பத்தாண்டுகளிலும் கியூபாவின் சமூக குறியீடுகள் சரியவில்லை. தொடர்ந்து மேம்பட்டன; சேய் இறப்பு விகிதம் குறைந்தது. சராசரி ஆயுட்காலம் அதிகரித்தது. பள்ளிக்கல்வி மேலும் வலுவானது. மருத்துவர்கள் எண்ணிக்கை மக்கள் தொகையை விட வேகமாக அதிகரித்தது. பொருளாதார வளர்ச்சி வேகப்பட்டது. சோஷலிச கியூபா நவதாராளமயத்திற்கும் முதலாளித்துவ விழுமியங்களுக்கும் எதிராகவும், சோசலிசத்திற்கு ஆதரவாகவும் வலுவான கருத்துப்போர் நடத்தியது.
விரிவடைந்து வலுப்பெற்று வரும் பன்னாட்டு உறவுகள்
சோசலிச முகாம் பின்னடைவை சந்தித்தபோதிலும், அமெரிக்க மற்றும் ஏகாதிபத்திய முகாமின் கை 199௦களில் ஓங்கியிருந்தாலும், முதலாளித்துவ நெருக்கடி தீவிரமடைந்து கொண்டிருந்தது. இதனால் பல லத்தீன் அமெரிக்க நாடுகளில் தாராளமய எதிர்ப்பு இயக்கங்கள் வலுவடைந்தன. சில நாடுகளில் இடதுசாரி அரசுகள் ஆட்சிக்கு வந்தன. இச்சூழல் லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் கியூபா தனது உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள உதவின. இந்த நாடுகளுக்கு கியூபா பல துறைகளில் உதவ முடிந்தது. மருத்துவம், மருந்து உற்பத்தி, உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல தளங்களில் கியூபா முன்னணியில் இருந்தது. அறிவியல் தொழில் நுட்பம், ஆராய்ச்சி துறைகளில் கியூபாவால் இந்நாடுகளுக்கு உதவ முடிந்தது. அடுத்தடுத்து அநேக லத்தீன் அமெரிக்க நாடுகள் கியூபாவுடன் ராஜாங்க உறவுகளை மேம்படுத்தின. கியூபாவை தனிமைப்படுத்த அமெரிக்க வல்லரசால் முடியவில்லை. கிட்டத்தட்ட 200 நாடுகளுடன் கியூபா நாட்டிற்கு ராஜாங்க உறவுகள் உள்ளன. இது 1958 இல் 50 ஆக இருந்தது!
கியூபாவின் சோசலிச புரட்சி தொடரும்; வெல்லும்
கியூபாவின் சோசலிச பயணம், சோசலிச உலகிற்கும், உலகெங்கும் சோசலிச சமூகம் அமைக்க பாடுபடுபவர்களுக்கும், பெரும் உற்சாகம் அளிக்கும் பயணம். ஒரு சின்னஞ்சிறு நாடு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேரடி தாக்குதல்களை எந்த நேரமும் எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். இச்சிறு நாட்டையும் அதன் சோசலிச பயணத்தையும் அழித்தொழிக்க, உலகின் பலம் வாய்ந்த வல்லரசு 1959இல் இருந்து முயற்சித்து வந்துள்ளது. கியூபா புரட்சியின் மகத்தான தலைவர் பிடெல் காஸ்ட்ரோவை கொலை செய்ய பல முறைகள் திட்டம் தீட்டி, அதில் தோல்வியை சந்தித்த ஏகாதிபத்திய வல்லரசு அமெரிக்கா என்பதை நாம் மறக்க முடியுமா? கியூபா இன்றும் இறையாண்மை பெற்ற சோசலிச நாடாக தொடர்வதே ஒரு வரலாற்று சாதனை அல்லவா?
கியூபா தனது பயணத்தை இனியும் தொடரும். கியூபா கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிசத்தில் ஆழமான தத்துவ புரிதல்கொண்ட கட்சி மட்டுமல்ல; தனது 65 ஆண்டு களஅனுபவத்தில் ஆழமான நடைமுறை அனுபவமும் பெற்றுள்ள கட்சி. இக்கட்டுரையில் அந்த அனுபவங்களில் ஒரு சிறிய பகுதியைத்தான் பேச முடிந்திருக்கிறது. எனினும் அதன் சில முக்கிய படிப்பினைகளை நாம் கவனத்தில் கொள்ளலாம்.
கியூபா புரட்சியின் முதல் முப்பது ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் உள்ளிட்ட சோசலிச முகாம் ஒரு அரணாக இருந்திருக்கிறது. மேலும் 1960 முதல் 1980கள் வரை தேச விடுதலை இயக்கங்களும் உலகெங்கும் மக்களிடம் இருந்த வலுவான ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வும் சோசலிச கியூபாவிற்கு ஆதரவான அம்சங்களாக இருந்தன. (இருந்தாலும் அமெரிக்க வல்லரசின் பொருளாதார–அரசியல் தடைகள் பெரும் சவாலாகவே இருந்தன; இன்றும் தொடர்கின்றன என்பதை நாம் மறந்து விடக் கூடாது. 2018இல் ஐக்கிய நாடு அமைப்பிற்கு கியூபா சமர்ப்பித்த ஆண்டு அறிக்கை 60 ஆண்டுகள் தொடர்ந்த அமெரிக்க தடைகள் ஏற்படுத்திய இழப்பு 134 பில்லியன் டாலர்கள் என்று தெரிவித்துள்ளது. இந்த தடையின் முக்கிய நோக்கம் கியூபாவிற்கு அதிகபட்ச பொருளாதார சேதம் விளைவித்து கியூப மக்களின் வாழ்க்கை தரத்தை நாசப்படுத்துவதுதான்.)
மிக முக்கியமாக, கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை, தொடக்கத்தில் இருந்தே மக்களின் பெரும் நம்பிக்கையை வென்றெடுத்த இயக்கம் மட்டுமல்ல; மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் இயக்கமும் ஆகும். அதன் 65 ஆண்டு ஆட்சிக்காலத்தில் நாட்டின் சோசலிஸப் பாதையின் முடிவுகள் அனைத்திலும் மக்கள் பங்கேற்பு என்பது ஒரு முக்கிய விழுமியமாகவே இருந்துள்ளது. எந்த கட்டத்திலும் கியூபா கம்யூனிஸ்ட் கட்சி, மாரக்சீய புரிதலை நிராகரித்ததில்லை. மாறாக, ஸதூலமான நிலைமைகளுக்கு பொருத்தமான அணுகுமுறைகளை மார்க்சீய அடிப்படையில்தான் அக்கட்சி தெரிவு செய்து வந்துள்ளது.
ஏகாதிபத்தியம் ஆதிக்கம் செலுத்தும் உலகில் மிகவும் பின்தங்கிய, முதலாளித்துவ உறவுகளே பெருமளவிற்கு வளராத பல நாடுகளில் எவ்வளவு சிக்கலான சூழல்களில் சோசலிச புரட்சிகள் செயல்பட வேண்டியுள்ளது என்பதை நினைவில் கொள்வது மிக அவசியம். கியூபாவை பொருத்த வரையில், தனது அனுபவத்தில் இருந்து, பல பரிசோதனைகளை மேற்கொண்டு, மிகவும் கடினமான சூழலில் கூட தன்னை தக்க வைத்துக்கொள்வது மட்டுமின்றி, தானும் முன்னேறி, தனது சர்வதேச கடமைகளையும் நிறைவேற்றிக்கொண்டு, சாதனை படைத்துள்ளது. இவற்றை பற்றியெல்லாம் இன்னொரு வாய்ப்பில் மேலும் பரிசீலிக்கலாம்.
ஆனால் ஒன்று நிச்சயம்: கியூபாவின் சோசலிச பயணம் வெற்றிகரமாக தொடரும்!
(இக்கட்டுரையை எழுத உதவிய கருத்து மூலங்கள்)
- Noam Chomsky, Cuba and the US Government, available at https://chomsky.info/roguestates03/
- Vijay Prashad and Noam Chomsky(2023), On Cuba:Reflections on 70 years of Revolution and Struggle, The New Press, New York and London
- William M. Leogrande (1980), The Communist Party of Cuba since the First Congress,
Journal of Latin American Studies, Vol. 12, No. 2 (Nov., 1980), pp. 397-419
- Raul Castro Ruz (2021), Central Report to the Eighth Congress of the Communist Party of Cuba
- Fidel Castro, Building Socialism in Cuba at Resistancebooks.com
- Helen Yaffe, We Are Cuba! How a Revolutionary People Have Survived in a Post-Soviet World Yale University Press, 2020, vii + 363 pp.
- Leo Huberman and Paul Sweezy (1960), Cuba: Anatomy of a Revolution, Monthly Review Press
- Aquilas Mendes and Rosa Maria Marques (2008) Cuba and the “Battle of Ideas”: A Jump Ahead accessed at https://doi.org/10.1177/0486613408324409
- Wu Honying On the New Constitution of Cuba CIR Vol 29, No 4
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
