by rasindhanJune 13, 2023
அமெரிக்க வங்கிகள் ஏன் திவால் ஆகின்றன?
பேரா. பிரபாத் பட்நாயக்
இந்த கேள்விக்கான பதிலை நேரடியாக அறியும் முன்பு, நெருக்கடி காலத்தில் முதலாளித்துவ பொருளாதாரத்தின் போக்கினை அறிந்துகொள்வது அவசியமாகிறது. “பணவீக்கம்” (Inflation) என்பதை பொதுவாக விலைவாசி உயர்வு என்று மட்டும் புரிந்துகொள்ள முடியாது. குறிப்பாக, பொருளாதார நெருக்கடி காலத்தில் உருவாகும் மொத்தச் செல்வம் யாருக்குச் செல்ல வேண்டும் என்பதில் முதலாளி வர்க்கத்திற்கும் உழைக்கும் வர்க்கங்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. நெருக்கடியின் காரணமாக லாப விகிதம் குறைவதால் தன்னுடைய லாப அளவைக் கூட்டுவதற்கு முதலாளி வர்க்கம் முயற்சிக்கிறது. இதனை எதிர்த்து போராடும் திறனோடு இருந்தால் தொழிலாளி வர்க்கத்தால் இதனை தடுக்க முடியும். ஆனால் இன்று நவதாராளமய சூழலில் உலகம் முழுவதுமே தொழிலாளி வர்க்கத்தின் வலிமை குறைவாக இருக்கிறது. இந்த நிலைமையில் முதலாளி வர்க்கம் பண்டங்களின் விலையை உயர்த்துவதன் மூலம் (ஊக அடிப்படையிலும் இன்னும் பல வழிமுறைகளிலும்) தமது லாப விகிதத்தை உயர்த்திக் கொள்ளவும், தக்க வைக்கவும் முயற்சிக்கிறது. இதுவே பண வீக்கத்தில் வெளிப்படுகிறது. ஆனால், நவதாராள-உலகமய பொருளாதார அறிஞர்கள், சந்தையில் உள்ள பண்டங்களை விடவும் மக்களின் கையில் ரொக்க நோட்டுக்கள் அதிகமாக இருப்பதாகவும், எனவே பணத்திற்கான கிராக்கியை குறைக்க வேண்டும் என்றும் புரிந்துகொள்கிறார்கள். எனவேதான் அவர்கள் வட்டி விகிதத்தை அதிகரித்து, அதன் மூலம் முதலீட்டிற்காக கடன் வாங்கப்படுவதை குறைப்பதன் மூலம் ரொக்க பணத்திற்கான கிராக்கியை குறைக்க முடியும் என நினைக்கிறார்கள். அதன் காரணமாகவே, மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை கூட்டி, பண வீக்கத்தை கட்டுப்படுத்திவிடலாம் என்று வட்டி விகிதத்தை கூட்டிக்கொண்டே போகின்றனர். வங்கிகளில் மக்கள் போடும் சேமிப்பு, வங்கிகளுக்கு ஒரு சுமையாகும். அதற்கு வட்டி கொடுக்க வேண்டும். வங்கிகளில் வாங்கப்படும் கடன் வங்கிகளுக்கு செல்வம் ஆகும். அதனால் வட்டி ஈட்ட முடியும். வங்கிகளின் வசமுள்ள செல்வங்களில் ஒரு முக்கியமான அம்சம் பாண்டு பத்திரங்கள் ஆகும். (அதாவது அரசாங்கத்திற்கும், நிறுவனங்களுக்கும் வங்கிகள் கொடுக்கும் கடன்) ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது அரசாங்கம், அதன் பாண்டுகளை ஒரு குறிப்பிட்ட முகாந்திர மதிப்பில் (face value), ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் (coupon rate) விற்கும். அதை வாங்கும்பொழுது, அந்த பாண்டுகளுக்கு அதே வட்டியை ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் வரை கொடுக்கும். இப்போது பொருளாதாரத்தில் வட்டி விகிதம் உயரும் பொழுது, ஏற்கனவே வாங்கி வைத்த பாண்டுகள் மூலம் கிடைக்கும் வட்டி உயர்வதில்லை. அந்த வட்டி விகிதம் அந்த பாண்டை வாங்கும் பொழுதே குறிப்பிடப்பட்டு விட்டது (coupon rate) என்பதுதான் அதற்கு காரணம். எனவே பொருளாதாரத்தில் வட்டி விகிதம் உயரும் பொழுது, அந்த பாண்டின் சந்தை மதிப்பு (market value) சரியும். ஆனால் பொருளாதாரத்தில் வட்டி விகிதம் உயரும்பொழுது, மக்களின் சேமிப்புகளுக்கு வங்கிகள் கொடுக்க வேண்டிய வட்டியும் உயரும் அல்லவா?. ! இதன் விளைவாக பொருளாதாரத்தில் வட்டி விகிதம் உயரும் பொழுது, வங்கிகளின் "செல்வங்களின்" மதிப்பு குறைகிறது, "சுமைகள்" கூடுகிறது. இதனால் பங்குச் சந்தையில் வங்கிகளின் சந்தை மதிப்பு குறைகிறது. சந்தை மதிப்பு குறைவது சேமிப்பாளர்கள் மத்தியில் பதட்டத்தை உருவாக்குகிறது. பல சேமிப்பாளர்களும் பணத்தை திரும்பக் கேட்கிறார்கள். அவ்வாறு ஏராளமானவர்கள் தங்கள் பணத்தை ஒரே நேரத்தில் திரும்பக் கேட்கும்போது (அந்த சேமிப்புகளை கடனாக கொடுத்து விட்டதால்), அதை திரும்பி கொடுக்க முடியாமல், வங்கிகள் திவால் ஆகின்றன. இதுதான் இப்போது அமெரிக்க வங்கிகளின் விசயத்தில் நடந்துள்ளது. (தமிழில்: தழுவி எழுதியவர் அபிநவ் சூர்யா)
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
