நகல் அரசியல் தீர்மானம் – ஓர் அறிமுகம்
உ.வாசுகி
கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த முக்கிய சர்வதேசிய, தேசிய நிகழ்ச்சிப் போக்குகள் சுருக்கமாக குறிப்பிடப்பட்டு, அதன் பின்னணியில் கட்சி கடைப்பிடிக்க வேண்டிய அரசியல் நடைமுறை உத்தி என்னவாக இருக்க வேண்டும் என விளக்குகிற ஆவணமே அரசியல் தீர்மானம்.
சர்வ தேசிய சூழல்:
சர்வதேசப் பகுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய நடவடிக்கைகள், உலகப் பொருளாதாரத்தின் மந்த நிலை, அதன் விளைவாக உருவாகும் சமத்துவமின்மை, வறுமை, வேலையின்மை, பசி, ஊட்டச்சத்து குறைவு போன்ற அம்சங்கள், இந்த பாதிப்பை எதிர்த்து தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாளி வர்க்கமும் இதர உழைப்பாளி மக்களும் நடத்தி வருகிற போராட்டங்கள், கொலம்பியா, பிரேசில், மெக்ஸிகோ, உருகுவே, இலங்கை போன்ற நாடுகளைத் தவிர மற்ற பல நாடுகளில் தேர்தலில் தீவிர வலதுசாரி அரசியல் சக்திகள் ஆட்சியைப் பிடித்திருக்கக் கூடிய சூழல், பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள், சோஷலிச நாடுகளின் நிலைமை, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைதல், இஸ்ரேலின் அடாவடித்தனம் ரஷ்யா உக்ரேன் போர், இந்தியாவின் அண்டை நாடுகளில் நடந்து வரும் மக்கள் போராட்டங்கள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறுகின்றன. இலங்கையில் ஜேவிபியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி அபாரமான வெற்றியும், அவர்களுக்கு முன் உள்ள சவால்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சமூக முரண்பாடுகளில், ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் மட்டுப்பட்ட நிலை தொடர்கிறது, அதே சமயம் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பெடுத்திருப்பது என்பது, ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையில் உரசல்களை அதிகப்படுத்தும் வாய்ப்பை உருவாக்குகிறது. மைய முரண்பாடாக உள்ள ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்து வருகிறது, நாடுகளுக்குள் மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையிலான முரண்பாடும் தீவிரமடைகிறது, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளுக்கும் வளரும் நாடுகளின் மக்களுக்கும் இடையிலான முரண்பாடும் தீவிரமடைகிறது போன்ற மதிப்பீடுகள் 3 ஆண்டு கால நிகழ்ச்சி போக்குகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன.
உலகில் உருவாகும் செல்வத்தின் பங்கீடு ஒரு சிலரின் கைகளில் குவிவதும், அவர்களுக்கு சாதகமாகவே அரசியலும், பொருளியல் கொள்கைகளும் நவதாராளமயப் பாதையில் தீவிரப்படுவதும், GDPயில் தொழிலாளர்களுக்கான பகுதி குறைந்து வருவதும் உதாரணங்களுடன் சுட்டிக்காட்டப்படுகிறது.
தேசிய சூழல்:
தேசிய சூழலைப் பொறுத்தவரை பாஜக அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. பிற்போக்கு இந்துத்வ நிகழ்ச்சி நிரலைத் திணிப்பதற்கான முயற்சிகளும், கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளும், எதிர்ப்புகளையும் ஜனநாயகத்தையும் ஒடுக்குவதற்கான எதேச்சாதிகார நடவடிக்கைகளும் நவ பாசிசப் போக்குகளை (neo fascist characteristics ) வெளிப்படுத்துகின்றன என்ற வரையறுப்பு இடம்பெறுகிறது. இந்த வரையறுப்பு முக்கியமானது. கடந்த கால வரையறுப்புகளில் இருந்து ஒரு படி தீவிரமான வரையறுப்பு இது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
22வது அகில இந்திய மாநாட்டில் எதேச்சதிகார இந்துத்துவ வகுப்புவாதத் தாக்குதல்கள் “ பாசிசத் தன்மை கொண்ட போக்குகள் முன்னுக்கு வருவதை வெளிப்படுத்துகின்றன” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 23வது மாநாட்டில், ஆர் எஸ் எஸ் – இன் பாசிசத் தன்மையிலான நிகழ்ச்சி நிரலை பாஜக மோடி அரசு அமல்படுத்தி வருகிறது எனக் குறிப்பிட்டோம். பாசிசத்தன்மை கொண்ட (fascistic) போக்குகள் என்ற இடத்தில் இருந்த வரையறை , தற்போதைய நகல் தீர்மானத்தில் , பாசிச(fascist) போக்குகள் என்ற இடத்துக்கு நகர்ந்துள்ளது . பழைய பாணி பாசிசத்தின் தற்கால வடிவம் என்று சொல்வதற்காக ‘நவ’ (neo) என்னும் சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. நவ பாசிச பண்புகள் அல்லது போக்குகள் வெளிப்படுகின்றன என்பதோடு இந்த வரையறுப்பு நிற்கிறது. பாஜக அரசாங்கத்தை அல்லது ஒட்டுமொத்த இந்திய அரசை பாசிசம் என வரையறுக்கவில்லை. தற்போதைய சூழலில் அப்படி வரையறுக்கவும் முடியாது.
இதைப் புரிந்து கொள்ளாமலோ அல்லது தவறான புரிதலை உருவாக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் நோக்க பூர்வமாகவோ, பாஜக அரசாங்கம் பாசிச அரசாங்கம் அல்ல என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறிவிட்டது எனப் பல முனைகளில் இருந்தும் விமர்சனக் கணைகள் பாய்கின்றன.
பாசிச அபாயத்தை நகல் தீர்மானம் குறைத்து மதிப்பிடவில்லை. அந்த அபாயம் விரிவாகவே குறிப்பிடப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகளும் எதிர் நடவடிக்கைகளும் எவ்வாறு அமைய வேண்டும் என்று விளக்கமாகவே கூறப்பட்டுள்ளது. ஒரு நிர்ணயிப்பு என்ற அடிப்படையில் பாஜக அரசாங்கமோ, இந்திய அரசோ பாசிசமாக முழுமையாக மாறிவிடவில்லை என்பதையே தீர்மானம் முன் வைக்கிறது. நீண்ட காலம் நமக்கு உள்ளது என்று மெத்தனமாக இருப்பதற்காக அல்ல.
ஆட்சி அதிகாரத்தை பாசிசம் கைப்பற்றுவதை, இதர முதலாளித்துவ கட்சிகள் கைப்பற்றுவதுடன் ஒப்பிட முடியாது, முதலாளித்துவ ஆதிக்கத்தின் ஒருவகையான அரசு வடிவம் மற்றொரு வகையான அரசு வடிவத்தால் மாற்றப்படுவதையே பாசிச அரசின் சாராம்சமாக டிமிட்ரோவ் முன்வைக்கிறார். அதாவது நாடாளுமன்ற ஜனநாயகம் என்கிற ஆட்சி முறைக்கு பதிலாக பகிரங்க பயங்கரவாத சர்வாதிகார முறை வருவது. அந்த நிலை இன்னும் ஏற்படவில்லை என்று மதிப்பிடுவதே அதன் அபாயத்தைக் குறைப்பது என்ற வாதத்தை எப்படி ஏற்க முடியும்?
எனவே நிர்ணயிப்பு மிகவும் அவசியம். திட்டவட்டமான சூழலைத் துல்லியமாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் உத்திகளை வகுக்க வேண்டும் என்பதுதான் மார்க்சியத்தின் சாராம்சம். நிர்ணயிப்பு – உத்தி இரண்டில் எது தவறாக இருந்தாலும் பிரச்சனை தான்.
உலக அளவில் நவ பாசிச சக்திகள்:
இன்றைய காலகட்டத்தில் உலக அளவில், அரசியலில் ஏற்படும் வலதுசாரி திருப்பங்கள், நவ பாசிச சக்திகளை வலுப்படுத்துவதற்கான களத்தை உருவாக்குகின்றன. இன்று நாம் பார்க்கும் நவ பாசிச போக்குகள் சிலவற்றை, பழைய பாணி பாசிசத்திலும் பார்க்க முடியும். அதி தீவிர தேசியம் – குறிப்பாக வரலாற்று ரீதியான தவறுகள், அநீதிகள் இழைக்கப்பட்டதாக உருவகம் செய்து அதற்கு பதிலடி கொடுக்கும் முறையில் அதி தீவிர தேசியத்தை முன்னெடுப்பது; நாம் – அவர்கள் என உள்நாட்டு எதிரிகளை உருவகம் செய்து அவர்கள் மேல் பழி போடுவது, தீவிர வலது சாரி மற்றும் நவ பாசிச கட்சிகள், சக்திகளுக்கு பெரு முதலாளிகள் முழுமையாக ஆதரவளிப்பது போன்ற உதாரணங்களைக் கூற முடியும் இந்தியாவில் நவ பாசிசம் என்பது ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் இந்துத்துவ சித்தாந்தத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆர் எஸ் எஸ் பாசிசத் தன்மை கொண்டது என்பதை நமது கட்சித் திட்டம் சுட்டிக்காட்டுகிறது. பாஜக ஆட்சியில் இருப்பதைப் பயன்படுத்தி அதிகாரத்தின் விசைகளை இயக்கும் வாய்ப்பையும் திறனையும் ஆர்.எஸ்.எஸ். பெற்றுள்ளது. பெரு முதலாளி வர்க்கத்தின் பெரும் பகுதி மற்றும் ஏகபோகங்கள் பாஜகவை ஆதரித்து வருகின்றனர்.
இந்துத்துவ பிளவுவாத சித்தாந்தம், நவதாராளமய நெருக்கடி, அதற்கு நடுவே பெருமுதலாளிகளின் நலனைப் பாதுகாப்பதற்காகப் பின்பற்றப்படும் எதேச்சாதிகார நடவடிக்கைகள் இந்த மூன்றின் கலவையும் நவ பாசிசத்தின் முன்வடிவக் கூறுகளாக (proto) உள்ளன என நகல் அரசியல் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.
நவ பாசிசம் உலகளாவிய அம்சமாக உள்ளது என்றும், அது நவ தாராளமயப் பாதை உருவாக்கிய நெருக்கடியின் விளைபொருள் என்றும் சிபிஎம் சுட்டிக்காட்டுகிறது..
பொருளாதாரப் பெருமந்தம், அதன் நெருக்கடி ஏகபோகம் உள்ளிட்ட பெரு முதலாளித்துவத்தை பாதித்தது, அதை ஒட்டி சந்தைகளைப் பங்கீடு செய்வதற்கு நடந்த போர்கள், புரட்சிக்கான உடனடி சாத்தியக்கூறு என்ற பின்புலத்தில் அன்றைய பாசிசம் எழுந்தது. இன்றும் நவீன தாராளமய பொருளியல் பாதை முதலாளித்துவத்துக்கு உருவாக்கி இருக்கக்கூடிய கடும் நெருக்கடியின் பின்னணியில், அதன் விளைவுகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் அதிருப்தியைப் பயன்படுத்தித் தான் பல்வேறு நாடுகளில் நவ பாசிச கட்சிகளும், தீவிர வலதுசாரி சக்திகளும் முன்னெழுகின்றன. சில, ஆட்சி அதிகாரத்துக்கும் வந்துள்ளன. நிதி மூலதனத்தின் பிரமாண்டமான வளர்ச்சியில், ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான முரண்பாடு தற்சமயம் மட்டுப்பட்டு இருப்பதால், முரண்பாடுகளைத் தீர்க்க, பெரும் போர்களை நாடும் வாய்ப்பு குறைவு. பொருளாதார நெருக்கடியைக் குறை சொல்லி, மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வரும் தீவிர வலதுசாரிகள், ஆட்சிக்கு வந்த பிறகு மாற்றுக் கொள்கையைக் கடைப்பிடிப்பதில்லை. நெருக்கடியை எந்தக் கொள்கை விளைவித்ததோ அதே நவீன தாராளமயக் கொள்கையைத்தான், அது பெருமூலதனத்துக்கு உகந்தது என்பதால், அவர்களும் பின்பற்றுகிறார்கள். ஆனால் மக்கள் கோபத்தை மடை மாற்றம் செய்யும் வல்லமையைப் பயன்படுத்தி திசை திருப்புகிறார்கள்.
பழைய பாணி பாசிசத்தில் இருந்து, இவர்கள் வேறுபடும் ஒரு முக்கியமான அம்சம் உள்ளது. தேர்தலைப் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்துக்கு வரும் இத்தகைய சக்திகள் அதன் பின்னரும் தேர்தல் முறையை ஒழித்துக் கட்டுவதில்லை. அதனை, பேருக்கு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் எதேச்சதிகார நடைமுறைகளைப் பின்பற்றி, எதிர்ப்புகளை ஒடுக்கி முன்னேறுகிறார்கள். நீண்ட காலப் பார்வையுடன், உள்ளிருந்தே செயல்பட்டு, அரசு கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றனர்.
பத்தாண்டுகளுக்கு மேலாக பாஜக அரசாங்கம் ஆட்சியில் இருப்பதும் அதனைப் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தின் விசைகளை பாசிசத் தன்மை கொண்ட ஆர் எஸ் எஸ் இயக்குவதும், அரசமைப்பு சார் நிறுவனங்களில் ஊடுருவல் செய்வதும் பாசிசப் போக்குகளை வெளிப்படுத்தி உள்ளன. இன்றைய சூழலுக்கு ஏற்ப நவ பாசிச பண்புகள் அல்லது போக்குகள் என்று அவற்றை நாம் வகைப்படுத்துகிறோம்.
எதிர்க்கட்சிகள் மற்றும் முற்போக்கு சக்திகளைப் பொறுத்த வரை, கட்டுப்பாடுகளும், சட்டத் திருத்தங்களும் தடுத்தாலும், நாடாளுமன்றத்தைப் பயன்படுத்த முடிகிறது, தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள் உட்பட செயல்படுகின்றன, ஊடகங்களின் ஒரு பகுதி உண்மை பேச முடிகிறது, சமூக வலை தளத்தில் விமர்சனங்களையும் வேறுபட்ட கருத்துக்களையும் வைக்க முடிகிறது, பல பகுதி உழைப்பாளி மக்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டுள்ளனர். அதற்கான வெளி இன்னும் உள்ளது. நாடாளுமன்றத்தை இன்னும் பயன்படுத்த முடிகிறது. சங் பரிவாரத்தின் இன்றைய இந்துத்துவ கார்ப்பரேட் எதேச்சதிகார பாதையின் வேகம் தொடர்ந்தால் பாசிசத்தை நோக்கிய அவர்கள் நகர்வுகள் அதிகரிக்கும். எனவே இப்போதே இந்துத்வ வகுப்புவாத மற்றும் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அனைத்து தளங்களிலும் போராட்டங்களைப் பரந்து பட்ட வகையில் நடத்திட வேண்டும் என்பதையே சிபிஎம் முன்வைக்கிறது.
சுதந்திர போராட்ட வரலாறு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்கள், பன்மைத்துவ பண்புகள், மொழிவழி மாநில அமைப்பு, மாநில உரிமைகள் போன்றவை ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரல் அமலாக்க வேகத்தை மட்டுப்படுத்துகின்றன. இந்நிலையைப் பயன்படுத்த வேண்டும். சங்பரிவாரம் தங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு ஏதுவாக மக்களின் மனநிலையைக் கட்டமைக்க பல்வேறு வழிகளைக் கையாளுகிறார்கள். அரசியலில் வலதுசாரி திருப்பம் என்பது அரசியலுடன் நின்று விடுவதில்லை. அது சமூகத்தின் சிந்தனைகளிலும் ஊடுருவுகிறது. எனவே தான், பாஜக தனிமைப்படுத்தப்பட வேண்டும், தோற்கடிக்கப்பட வேண்டும் என்று சிபிஎம் இணைத்து வைக்கிறது. சங்பரிவாரத்துக்கு எதிரான போராட்டம் அரசியல் களத்தில் மட்டுமல்ல, தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல, அனைத்து தளங்களிலும் குறிப்பாக சித்தாந்தத் துறையில் உட்பட தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என சிபிஎம் முன்வைக்கிறது. இடது ஜனநாயக மாற்றுத்திட்டத்தின் அவசியத்தையும் தொடர்ந்து முன்மொழிகிறது.
நகல் அரசியல் தீர்மான நிர்ணயிப்பு, பாஜகவுக்கு எதிரான போராட்டத்தை பலவீனப்படுத்துகிறது என்கிற வாதத்தில் உண்மை இல்லை என்பது நகலை முழுமையாகப் படித்தாலே புரியும்.
காங்கிரஸ் குறித்து:
காங்கிரசோடு அரசியல் கூட்டணி இருக்காது என்ற அரசியல் தீர்மானத்தின் ஒரு வரியை மட்டும் தனிமைப்படுத்தி எடுத்துப் போட்டு, இது ஒரு புதிய விஷயம் என்பதாகவும், பாஜகவை எதிர்த்த போராட்டத்தை இது சீர்குலைக்கும் என்றும் விமர்சனம் வருகிறது.
காங்கிரஸ், பெருமுதலாளிகளின் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்கிற மதிப்பீட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. வளர்ந்து வரும் பாஜக அபாயத்தை எதிர்கொள்ள, பெரு முதலாளித்துவ வர்க்கப் பிரதிநிதியான காங்கிரசுடன் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க உள்ளோம் என்பது தான் முக்கியம்.
21வது மாநாட்டில், காங்கிரசுடன் தேர்தல் கூட்டணியோ அல்லது புரிந்துணர்வோ கூடாது என்ற அரசியல் லைன் எடுக்கப்பட்டது. 22வது மாநாட்டில், பாஜக, காங்கிரஸ் இரண்டுமே பெரு முதலாளித்துவ கட்சிகள் என்றாலும், இரண்டையும் சமமான அபாயமாகப் பார்க்க முடியாது என்று குறிப்பிடப்பட்ட அதே சமயம், பெருமுதலாளித்துவ கட்சியுடன் கூட்டணியோ முன்னணியோ வைக்க முடியாது என்று கூறப்பட்டது. 23வது மாநாட்டில், காங்கிரசுடன் அரசியல் கூட்டணி கிடையாது என்பது அரசியல் உத்தியின் ஒரு பகுதியாக அமைந்தது.
24வது மாநாட்டு நகல் அரசியல் தீர்மானம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:
“காங்கிரஸ் தமது பொருளாதார கொள்கையின் திசைவழியை மாற்றிக்கொள்ளவில்லை. கள்ளக் கூட்டணி அல்லது சலுகை சார் முதலாளித்துவத்தை எதிர்ப்பதாக பேசிக்கொண்டே அதற்கு மூல காரணமாக இருக்கிற நவ தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றுகிறது. இந்துத்வ நிகழ்ச்சி நிரலைப் பொறுத்தவரை, அதன் தேசிய தலைமை சற்று கறாரான நிலைபாட்டை எடுத்தாலும், பாஜக மற்றும் அதன் இந்துத்வ கூட்டாளிகள் தீவிரமான தாக்குதல்களைத் தொடுக்கும்போது, ஊசலாட்டங்களும் சமரசப் போக்கும் தொடர்கின்றன. பாஜக பாதுகாக்கும் பெரு முதலாளித்துவ வர்க்க நலன்களையே காங்கிரசும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இருப்பினும் பிரதான மதச்சார்பற்ற எதிர்க்கட்சி என்கிற முறையில் பாஜகவை எதிர்த்த போராட்டத்திலும், மதச்சார்பற்ற கட்சிகளின் பரந்த ஒற்றுமையைக் கட்டுவதிலும் காங்கிரசுக்கு பாத்திரம் உண்டு. இதனைக் கணக்கில் எடுத்தே, காங்கிரஸ் குறித்த சிபிஎம் அணுகுமுறை தீர்மானிக்கப்படும். ஆயினும் காங்கிரசுடன் அரசியல் கூட்டணி கிடையாது”.
மாநில முதலாளித்துவ கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு கொள்ளும்போது, சில மாநிலங்களில் அதற்குள் காங்கிரஸ் இடம் பெறுவது வேறு. அரசியல் கூட்டணி என்பது வேறு.
இதையும் சேர்த்து 24 வது மாநாடு விவாதிக்க உள்ளது. இவை உட்பட அனைத்து அம்சங்கள் மீதும் திருத்தங்கள் அனுப்புவதற்கான வாய்ப்பும் உண்டு. இந்த அரசியல் நடைமுறை உத்தி பலன் அளிக்க வேண்டும் என்றால் மார்க்சிஸ்ட் கட்சியின் சொந்த பலம் உயர வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது. மாநாட்டு விவாதத்தின் மையப் புள்ளியாக இது அமையும். சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தது போல, பாஜக தனிமைப்படுத்தப்பட்டு தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதும், நம் கட்சியின் சொந்த பலம் உயர வேண்டும் என்பதும் ஒரே அரசியல் நடைமுறை உத்தியின் இணைந்த பகுதிகளே. சிபிஐ (எம்.எல்) சொல்வது போல், ஒன்று மற்றொன்றுக்கு எதிராக வைக்கப்படவில்லை.
மாநாட்டின் முடிவே அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான அரசியல் திசைவழியைக் காட்டும்
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
