
“வர்க்கம்”
சொல்லகராதி
அன்வர் உசேன்
ஒரு சமுதாய அமைப்பை புரிந்துகொள்வதற்கான அடிப்படைத் திறவுகோல் ‘வர்க்கம்’ என்ற கருத்து ஆகும். ஒருவரின் வர்க்க நிலையை அவரின் பிறப்போ, கலாச்சாரமோ அல்லது எண்ணங்களோ தீர்மானிப்பதில்லை; மாறாக, உற்பத்தியிலும், விநியோகத்திலும் அவருக்கு உள்ள உறவே அவரின் வர்க்க நிலையை முடிவு செய்கிறது.
வர்க்கம் என்ற இந்தச் சொல்லை மார்க்சுக்கு முந்தைய பொருளாதார அறிஞர்களான ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ போன்றவர்களே பயன்படுத்தியுள்ளார்கள். அவர்கள் சமூகம் வெவ்வேறு பொருளாதார வர்க்கங்களாகப் பிரிந்துள்ளதை அடையாளம் கண்டனர்.
இருப்பினும், வர்க்க நலன்கள் மோதிக் கொள்வதையும், இந்த முரண்பாடுகளால் எழும் போராட்டங்களின் விளைவாகவே சமூகம் இயங்கி வருவதையும், அறிவியல் அடிப்படையில் நிலை நிறுத்தியவர்கள் கார்ல் மார்க்ஸும், ஃபிரடெரிக் எங்கெல்சும் ஆவர்.
கம்யூனிஸ்ட் அறிக்கை நூலில், “இதுவரை இருந்த சமுதாயங்களின் எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” என்று அவர்கள் விளக்குகிறார்கள். மார்க்ஸ்/ எங்கெல்ஸ்/ லெனின் ஆகியோரின் வர்க்க ஆய்வுகள் இன்றளவும் நமக்கு வழிகாட்டிகளாக உள்ளன.
வர்க்கம் என்றால் என்ன?
முதலாளித்துவ சமுதாயத்தை எடுத்துக் கொண்டால், அங்கு நிலவும் பிரதான உற்பத்தியை முதலாளி வர்க்கமே கட்டுப்படுத்துகிறது. முதலாளிகள் உற்பத்தி சாதனங்களையும், விநியோக ஏற்பாட்டையும் ஆதிக்கம் செய்து, உபரியை தனியுடைமையாக்குகின்றனர். அதே சமயம் உற்பத்திச் செயல்பாட்டில் தவிர்க்கவியலாத வர்க்கமாக பாட்டாளிகள் ஈடுபடுகின்றனர். அவர்கள் தம் உழைப்புச் சக்தியை விற்று, அதற்கு விலையாக கூலியைப் பெறுகின்றனர்.
உற்பத்திச் சாதனங்கள் என்பவை, ஒரு சமூகம் தனக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யத் தேவையான அனைத்தையும் குறிக்கும். இதில் முக்கியமாக இரண்டு அம்சங்கள் அடங்கும்:
1. உற்பத்திக் கருவிகள்: இயந்திரங்கள், தொழிற்சாலைகள், கருவிகள், தொழில்நுட்பம்.
2. இயற்கை வளங்கள்: நிலம், நீர், கனிமங்கள், காடுகள்.
இன்றைய முதலாளித்துவ சமூகத்தில், இந்த உற்பத்திச் சாதனங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்பதைப் பொறுத்தே சமூகம் பெருமளவில் இரண்டு முக்கிய வர்க்கங்களாகப் பிரிகிறது:
1. ஆளும் வர்க்கம் (Bourgeoisie/பெருமுதலாளிகள் & நிலப்பிரபுக்கள்): இவர்கள் உற்பத்திச் சாதனங்களைச் சொந்தமாக வைத்திருப்பவர்கள் அல்லது அவற்றின் மீது முழுமையான கட்டுப்பாடு கொண்டவர்கள். உதாரணமாக, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், பல ஏக்கர் நிலங்களை வைத்திருக்கும் பெரும் நிலக்கிழார்கள்.
2. ஆளப்படும் / சுரண்டப்படும் வர்க்கம் (பாட்டாளிகள்): இவர்கள் எந்தவொரு குறிப்பிடத்தக்க உற்பத்திச் சாதனத்தின் மீதும் உரிமையோ, கட்டுப்பாடோ இல்லாதவர்கள். இவர்களின் ஒரே சொத்து அவர்களின் உழைப்புச் சக்தி மட்டுமே. உயிர்வாழ்வதற்காக, தமது உழைப்புச் சக்தியை முதலாளியிடம் விற்று, ஊதியம் (கூலி) பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
o தொழிற்சாலைத் தொழிலாளி: ஆலையில் உள்ள இயந்திரங்கள் அவருக்குச் சொந்தமில்லை. அவர் தனது உழைப்பை விற்று, உற்பத்தி செய்யும் பொருளின் மீது எந்த உரிமையும் இன்றி, வெறும் கைகளுடனும் கூலியுடனும் வெளியேறுகிறார்.
o விவசாயக் கூலி: உழவுக்குத் தேவையான நிலம் எனும் இயற்கை வளம் அவருக்குச் சொந்தமில்லை. தனது கையில் உள்ள மண்வெட்டி போன்ற சிறு கருவிகள் இருந்தாலும், அதைப் பயன்படுத்த நிலம் தேவைப்படுவதால், நிலப்பிரபு அல்லது பணக்கார விவசாயியின் நிலத்தில் உழைத்துச் சொற்பக் கூலியைப் பெறுகிறார்.
எந்த சமுதாயத்தில் நாம் பணியாற்றும்போதும், அங்கே நிலவும் உற்பத்தி முறை எப்படிப்பட்டது?, உற்பத்தியில் என்னென்ன வர்க்கங்கள் ஈடுபடுகின்றன? என்பதை ஆராய்வதுடன், அந்த வர்க்கங்களின் நலன்கள் எங்கே முரண்படுகின்றன, இந்த முரண்பாட்டில் எழும் மோதல்களில் நாம் எந்தப் பக்கம் நிற்பது? நாம் திரட்ட வேண்டிய அடிப்படை வர்க்கங்களின் நலன்களை பாதுகாக்கும் போராட்டத்தை எப்படி தீவிரப்படுத்தலாம்? என்று சிந்தித்தே ஒரு மார்க்சிய இயக்கம் முன்னேற வேண்டும்.
இன்று இந்தியாவை எடுத்து கொண்டால் ஆலைகள் உட்பட நவீன உற்பத்தி கருவிகளை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும்/பெரும் நிலக்கிழார்களும் வசப்படுத்தியுள்ளனர். நிலம்/ நீர்/ காற்றலை போன்ற இயற்கை வளங்களையும் வளைத்துள்ளனர். விநியோகத்தை கட்டுப்படுத்துகின்றனர். இதன் மூலம் உழைத்து உருவாக்கப்படும் உபரியை உறிஞ்சிக் கொழுக்கின்றனர். உழைக்கும் வர்க்கங்கள் சுரண்டப்படுகின்றனர்.
அவ்வாறே, ஆளும் வர்க்கங்களின் சுரண்டலுக்கு கிராமப்புறங்களில் மிகப்பெரும் எண்ணிக்கையில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகள் ஆளாகியுள்ளனர்.
தொழிலாளி – விவசாயி ஆகிய இந்த வர்க்கங்களின் கூட்டணி, இந்தியாவில் மக்கள் ஜனநாயக புரட்சியை முன்னெடுப்பதற்கு அவசியமானதாகும்.
இந்தியாவில் நிலவும் வேறுபல வர்க்கங்களின் நிலையையும் ஆய்வு செய்து சி.பி.ஐ(எம்) தனது திட்ட ஆவணத்தை உருவாக்கியுள்ளது.
வர்க்கமும் சாதியும்
மேலும், இந்திய சூழலில் வர்க்க சமூக உருவாக்கத்திற்கும், சாதி அமைப்புக்கும் உள்ள தொடர்பையும் புரிந்துகொள்ள வேண்டும். முதலாளித்துவ அமைப்புக்கு முந்தையதும், இந்திய துணைக்கண்டத்தில் தனித்துவமாக காணப்படுவதுமான பிறப்பின் அடிப்படையிலான சாதி ஒடுக்குமுறையானது, பொருளாதார நிலையிலும், சமூக-கலாச்சார நிலையிலும் செயல்பட்டு வருகிறது.
சாதி அமைப்பில், ஆதியில் நிலவிய வர்க்கப் பிரிவுகள் கெட்டிதட்டிப் போயிருந்தது. இப்போது, சாதிகள் பல்வேறுபட்ட வேலைகளில் ஈடுபட்டாலும், பிறப்பின் அடிப்படையிலான சாதிப் படிநிலை அமைப்புக்கு மத அங்கீகாரம் இருக்கிறது. அகமண முறையும், ஆணாதிக்கமும், தீண்டாமையும் தொடர்கின்றன. எனவே, மக்களின் உணர்வு நிலையில், நான் இவ்வாறு பிறந்தேன், எனவே இந்த சமூக ஒழுங்கை நான் ஏற்றுக்கொண்டாக வேண்டும், அது கடவுள்/மதம் எனக்கு பணித்துள்ள கடமை என்ற ஒப்புதலை உருவாக்குகிறது. இதனைக் கொண்டு, ஒரு உற்பத்தியாளரை நிர்ப்பந்திக்காமலே அவர் உற்பத்தி செய்கிற உபரியைச் சுரண்டமுடிகிறது. சுரண்டப்படும் ஒருவர் தனது உழைப்பின் உற்பத்திப்பொருள், தன்னுடைய சொத்து இல்லையென்று நம்புகிறார். சுரண்டலை இது எளிதாக்குகிறது.
இதனால்தான், முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையிலான சமூகம் சாதியச் சுரண்டலோடு சமரசம் செய்துகொண்டது. இந்திய முதலாளி வர்க்கமே சாதிய வேறுபாடுகளை வளர்த்தும் விடுகிறது. இவ்வகையில் வர்க்கம் பற்றிய புரிதல், சாதி ஒழிப்புக்கும் அவசியமான ஒன்றாகும்.
மார்க்சிய இயக்கம் மட்டுமே வர்க்கத்திற்கும் சாதிக்கும் இடையிலான உள்ளார்ந்த தொடர்பினை சுட்டிக்காட்டி, தனது புரட்சிகர திட்டத்தை வகுத்துள்ளது. எனவே மார்க்சிய நோக்கில், ‘வர்க்கம்’ என்ற சொல்லை புரிந்துகொள்வது, சமுதாயத்தை மாற்றியமைக்கும் புரட்சிகர போராட்டத்தில் மிக மிக அவசியம்.
You may also like
1 comment
Leave a ReplyCancel reply
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

please read the book
Chalam, K S. Political Economy of Caste in India how crony capitalism saves cast system