
ஏகாதிபத்திய எதிர்ப்பில் மக்கள் இயக்கம்! : கிளர்ச்சி, பிரச்சாரம், மாற்றம்
என். குணசேகரன்
இன்றைய உலகம் ஏற்றத்தாழ்வானது. உலகின் வடக்கு நாடுகளுக்கும் தெற்குலக நாடுகளுக்கும் இடையே வளர்ச்சியில் பெரும் இடைவெளி உள்ளது. உலகை மேலாதிக்கம் செலுத்தும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ ரீதியாகவும் புவி அரசியலிலும் பெரும் செல்வாக்கு செலுத்தும் நிலை உள்ளது. மாறாக, வளர்முக நாடுகள் மற்றும் ஏழை நாடுகளில் பின்தங்கிய நிலைமை நீடித்து வருகிறது.
ஏன் உலகில் இந்த சமச்சீரற்ற வளர்ச்சி? தற்போது உலகம் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய பாதையே இதற்கு முதன்மை காரணம்.
நாடுகளிடையே சமச்சீரற்ற வளர்ச்சி அதிகரித்து வரும் இதே சூழலில், நாடுகளுக்குள்ளே, மக்களிடையே, ஏற்றத்தாழ்வுகளும் அதிகரித்து வருகின்றன.அமெரிக்க, ஐரோப்பிய வளர்ந்த நாடுகளிலும் இதே நிலை. அங்கு அதிகரித்து வரும் வேலையின்மையால், கடுமையான வாழ்வாதார சரிவில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தியா போன்ற நாடுகளில், ஒருபுறம் கார்ப்பரேட் மூலதன, நில உடைமை சக்திகள் வலுவடைந்து, ஒரு சிறிய கூட்டம் ஏற்றம் கண்டு வருகிற நிலை உள்ளது. சாதாரண மக்களின் வாழ்வாதாரம் சரிந்து வருகிறது. சமத்துவமின்மை தீராத நோயாக நீடிக்கிறது. ஏழை நாடுகள் பல வறுமையை விரட்டுவதற்கு வழியற்று தத்தளித்து வருகின்றன.
மக்களிடையே இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் நீடிப்பதற்கு காரணம் என்ன? அந்தந்த நாட்டு ஆளும் வர்க்கம், ஏகாதிபத்திய அரசுகளுடன் கைகோர்த்துக் கொண்டு, தங்கள் நாட்டில் முதலாளித்துவப் பாதையில் பயணப்பட்டு வருவதுதான். ஆக, இன்று உலக ஏகாதிபத்தியமும், உள்ளூர் முதலாளித்துவமும் மானுடத்தின் எதிரிகளாக உள்ளன.
இந்நிலையில், இன்றைய ஏகாதிபத்திய முறையை அகற்றுவதும், சோசலிச சமூகம் அமைவதும்தான், மானுட வளர்ச்சிக்கான விடியல்.
இதற்கு, ஏகாதிபத்தியத்தின் ஒவ்வொரு அங்க அசைவுக்கும் எதிராக, மக்களைத் திரட்டிய போராட்டங்கள் அதிகரிக்க வேண்டும். இதற்கு ஏகாதிபத்தியத்தின் இயங்குதன்மைகளை அறிதல் வேண்டும்.
கம்யூனிஸ்டுகளின் கருவி: கிளர்ச்சி – பிரச்சாரம்
கம்யூனிஸ்டுகள் முழுமையான ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள். கிளர்ச்சி -பிரச்சாரம் கம்யூனிஸ்டுகள் செயல்பாடு. இதன் வழியாக ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுபட்ட போராட்டம் கட்டமைக்கப்படுகிறது.
கிளர்ச்சி – பிரச்சாரம் பற்றி சரியான புரிதல் அவசியம். ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாக்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்த பிளக்கனாவ் கிளர்ச்சி – பிரச்சார செயல்பாட்டிற்கான அடிப்படைகளை வகுத்தமைத்தார். லெனின் அதை மேம்படுத்தி, கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளில் பிரிக்க முடியாத அங்கமாக அதனை மாற்றினார்.
லெனின் கிளர்ச்சியையும், பிரச்சாரத்தையும், கம்யூனிஸ்ட் கட்சியின் கருவிகள் என அழுத்தம் அளித்தார்:
- கிளர்ச்சி- பிரச்சாரம் கம்யூனிஸ்டுகளின் முதன்மையான கடமையாக இருக்க வேண்டும்
- கம்யூனிஸ்டுகளின் நிரந்தரமான இடைவிடாத செயல்பாடாக கிளர்ச்சி- பிரச்சாரம் இருக்க வேண்டும்.
ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, உழைக்கும் மக்களுக்கு அவர்களது சமூக நிலைமைகள் குறித்த கல்வியை கிளர்ச்சி – பிரச்சாரம் புகட்டுகிறது. அவர்களை பெருந்திரளாக அமைப்பு ரீதியாக அணிதிரட்டி, புரட்சி இலட்சியத்தை முன்னெடுக்கிறது.
கிளர்ச்சி என்பது ஒன்று அல்லது ஒரு சில கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று, அவர்களை களச் செயல்பாட்டுக்கும், போராட்டத்திற்கும் கொண்டு வரும்.
எடுத்துக்காட்டாக, உடனடி மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் நிகழும் ஒரு இறப்பு, கம்பெனியில் ஒரு தொழிலாளியின் வேலை இழப்பு, காவல்துறை அத்துமீறல், தீண்டாமை கொடுமை, ஆணவப் படுகொலை போன்ற குறிப்பிட்ட ஒரு நிகழ்வை கையிலெடுத்து, மக்களின் ஆவேசத்தை, அதிகார வர்க்கங்களுக்கு எதிராக திருப்புவதும், மக்களை போராட்டக்களத்தில் கொண்டு வருவதும், கிளர்ச்சி ஆகும். மக்கள் உணர்வுகள் மேலிட இதில் இணைந்திடுவார்கள். வெகுமக்கள் ஊர்வலம், முழக்கங்கள், பேச்சு போன்றவை கிளர்ச்சி வடிவங்கள்.
எனவே, நடந்த ஒரு நிகழ்வையொட்டி, அது சார்ந்த ஒன்று இரண்டு கருத்துக்களை மட்டும் முன்னெடுத்து, மக்களைத் திரட்டுவது கிளர்ச்சி எனப்படும். இங்கு “முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் ஒழிக” போன்ற முழக்கங்கள் இடம் பெறாது.
கிளர்ச்சியை தொடர்ந்து பிரச்சாரம்
கிளர்ச்சி போராட்டங்களில் எழுகிற அதிருப்தியும் ஆவேசமும் அதிகார வர்க்கத்திற்கு எதிராக திரும்பும். அதை முதலாளித்துவ முறைக்கு எதிராக திருப்பும் வகையில், பல்வேறு கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வது, பிரச்சாரம். இதில் முதலாளித்துவத்தின் சமத்துவமின்மை, வறுமை, வேலையின்மை போன்ற பிரச்சனைகள் இடம் பெறும்; அவற்றின் நீட்சியாக, மார்க்சிய சோசலிச இலட்சியமே தீர்வு என்பது அழுத்தமாக இடம் பெறும்.
சாதாரணமாக, பரப்புரை என்ற அர்த்தத்தில், பிரச்சாரம் என்ற சொல் நடைமுறையில் பயன்படுத்தப்படுகிறது. தெருமுனைக் கூட்டத்தில் உரையாற்றுவதையும் பிரச்சாரம் என்றுதான் நாம் சொல்கிறோம். ஆனால் கிளர்ச்சி-பிரச்சாரம் எனும்போது, பிரச்சாரம் என்பதற்கு ஆழமான பொருள் உள்ளது. மக்களின் அரசியல் உணர்வை மேம்படுத்துவதற்கு, கருத்தியல் அல்லது சித்தாந்த நிலைபாடுகளை விளக்கிப் பேசுவதும், எழுதுவதும் பிரச்சாரம். (Propaganda).
கிளர்ச்சி, உடனடி பிரச்னை குறித்த ஒரு கருத்தை முன்வைக்கிறது. பிரச்சாரம், பல பின்னணி கருத்துகளை உள்ளடக்கி, அரசியல் தத்துவார்த்த விளக்கங்களை விரிவாக முன்வைக்கும். கிளர்ச்சி, பாதிக்கப்பட்ட அதிகமான மக்களை ஈர்த்திடும். ஆனால் பிரச்சாரம், பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு பகுதியினர் மத்தியில் மேற்கொள்ளப்படும். அவர்களிடம் உயர்ந்த அரசியல் உணர்வு ஊட்டி,சித்தாந்தக் கல்வியை அது முன்னெடுக்கும். பிரசுரங்கள், நூல்கள், செய்தித்தாள்கள் என எழுத்து வடிவில் பிரச்சாரம் நடைபெறும்.
சமாதானம், உணவு, நிலம்
ரஷ்யக் கம்யூனிஸ்டுகள் புரட்சிக்கு முன்பு மக்கள் தேவையாக இருந்த, “சமாதானம், உணவு, நிலம்” போன்றவற்றை முழக்கங்களாக முன்வைத்தனர். இதற்காக மக்களை அணி சேர்த்தபோது, கூடவே புரட்சிகர நோக்கங்களையும் பிரச்சாரம் செய்தனர். உலக ஏகாதிபத்திய எதிர்ப்பு (சமாதானம்), ரஷ்ய முதலாளித்துவ எதிர்ப்பு (உணவு), நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு (நிலம்) என்று கிளர்ச்சிக் கோரிக்கைகளை முன்னெடுத்து, சோசலிசத்திற்காக மக்களை அணிதிரட்டினர். கிளர்ச்சியையும் பிரச்சாரத்தையும் ஒருங்கிணைந்து கொண்டு சென்றதுதான், ரஷ்யப்புரட்சி வெற்றிக்கு வழிவகுத்தது.
கிளர்ச்சி – பிரச்சாரம் இரண்டும் ஒருங்கிணைத்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்று லெனின் வலியுறுத்தினார். இந்த இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். பிரச்சாரம் இல்லை எனில் கிளர்ச்சி வெறும் உணர்ச்சி வெளிப்பாடாக முடிந்துவிடும்; கிளர்ச்சி இல்லாமல் பிரச்சாரம் ஒரு சித்தாந்தப் பயிற்சியாக நின்றிடும்.
அதாவது, கிளர்ச்சி என்ற வகையில் பிரச்சனைகளுக்கான இயக்கம் மட்டும் நடத்திவிட்டு, அவற்றுக்கு அடிப்படையாக உள்ள சமூக அமைப்பு பற்றிய அரசியல், தத்துவார்த்தப் பிரச்சாரத்தை கைவிடுவது தவறு.
அதேபோன்று, அன்றாடப் பிரச்சனைகளுக்கான கிளர்ச்சி இயக்கம் நடத்தாமல், வெறும் நீண்டகால இலட்சியப் பிரச்சாரம் பயன் தராது. இரண்டையும் ஒருங்கிணைத்து, கம்யூனிஸ்ட்கள் செயலாற்ற வேண்டும்.இந்தக் கலையில் ஒரு கம்யூனிஸ்ட் தேர்ச்சி பெற வேண்டும்.
கிளர்ச்சி பிரச்சாரம் என்பதில் கிளர்ச்சி முதலில் சொல்லப்பட்டாலும் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாட்டாளர்களிடம் பிரச்சாரம் பற்றிய ஆழமான புரிதல் இருந்தால், கிளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்க முடியும். எனவே முதலில் பிரச்சாரம் பற்றிய சில விளக்கங்கள்.
பிரச்சாரமும், ஏகாதிபத்தியமும்
லெனின் எழுதிய “ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சகட்டம்” நூல், ஒரு முக்கியமான தத்துவ கருவூலம். ஏகாதிபத்தியம் குறித்த பிரச்சாரத்திற்கு இது அடிப்படை.
முதலாளித்துவம் தனது வளர்ச்சியில், ஏகாதிபத்தியமாக ஒரு புதிய கட்டத்தினை எட்டியது. அதன் இயங்குமுறை, அதன் பல்வேறு தன்மைகளை விளக்குகிற அற்புதமான அறிவுச்செல்வமாக லெனின் நூல் திகழ்கிறது.
எந்த சூழலில் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்கிறது? உலக அளவிலும் தேசிய அளவிலும் உற்பத்தி ஒருங்கிணைக்கப்பட்டு, ஒன்று குவிக்கப்படுகிறது. வங்கி மூலதனமும் தொழில் மூலதனமும் சங்கமமாகி பெரும் நிதி மூலதனமாக உருவெடுக்கிறது. நிதி மூலதன குழுக்கள் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. கொள்ளை லாபம் கிடைக்கும் இடம் தேடி மூலதன ஏற்றுமதி நடைபெறுகிறது.
பெரிய தொழில் நிறுவனங்கள் சிறு நிறுவனங்களை விழுங்கி, ஏகபோக நிறுவனங்களாக உருவெடுக்கின்றன. பல தொழில்களில் சில பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி, மிகப்பெரும் இலாபத்தை அடைகின்றன.
இத்தகைய போக்குகளால், முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவமாக வளர்கிறது. இதனை ஏகாதிபத்திய கட்டம் என்கிறார் லெனின்.
ஏழை மற்றும் வளரும் நாடுகளை சுரண்டி ஏகாதிபத்தியம் வளர்வதால் அதனை ஒட்டுண்ணி முதலாளித்துவம் எனவும் அது இறக்கும் தருவாயில் உள்ளது என்கிறார் லெனின். ஒட்டு மொத்த வளர்ச்சியும், மக்களின் வாழ்நிலை மேம்பாடும் தடைபட்டு நெருக்கடிகள் முற்றுகின்றன.
ஏகாதிபத்திய கட்டத்திற்கு வந்த பிறகு, முதலாளித்துவம் தனது வளர்ச்சியின் எல்லையை தொட்டுவிட்டது. இவ்வாறு சொல்வதால், தனது எல்லையை எட்டிவிட்ட முதலாளித்துவம் நாளையே வீழ்ச்சி அடையும் என்று புரிந்து கொள்ளக் கூடாது. ஏகாதிபத்தியம் அழிவை நோக்கி செல்லுகிறது என்பது வரலாற்று நோக்கில் அறிவியல் பார்வை. தனது அழிவை நெருங்கும்வரை முதலாளித்துவம் பல சாகசங்களை செய்து, நீடித்திருக்கும்.
அண்மைய தொழில்நுட்பங்கள், உற்பத்தி திறனை பயன்படுத்தி, தனது சுரண்டலையும், மூலதனக் குவியலையும், அது இடைவிடாது முன்னெடுக்கும்.
ஏகபோக முதலாளித்துவத்தில், நிதி மூலதனம் ஆதிக்கம் செலுத்தும். உலகம் முழுவதும் அது தனது பிடிப்பை அதிகரிக்கிறது. உற்பத்தி மூலதனம் தேக்கமடைகிறது. ஏழை நாடுகளின் தொழில்களும் வேலை வாய்ப்புகளும் நசிவடைகின்றன.
முதலாளித்துவ வல்லரசுகள் உலக எல்லைகளை பிரித்து பங்கிட்டு கொள்கின்றன. இந்த போட்டாபோட்டியால், ஏகாதிபத்திய போர்கள் மூண்டு உலகில் பெரும் நாசம் ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், தீர்க்க முடியாத ஏகாதிபத்திய நெருக்கடிகள் உலகப் பொருளாதாரத்தை ஆட்டிப் படைக்கின்றன. இந்த நிலைமையிலிருந்து உலகம் மீள்வதற்கு சோசலிசப் புரட்சியே தீர்வாக அமைகிறது.
எனவே “இன்றைய சகாப்தம் சோசலிச மாற்றத்திற்கான சகாப்தம்” என லெனின் விளக்குகிறார். இந்த முக்கியமான தத்துவார்த்த கருத்து பிரச்சாரத்தின் மையமானது.
சமூகமயமான உற்பத்தி
மார்க்ஸ் சொன்னது போல நவீன காலத்தில் உற்பத்தி சமூகமயமாகி விடவில்லை; மையப்படுத்தப்பட்டுள்ளது என அவரின் கருத்தை மறுத்தனர். இவ்வாறு, மார்க்சியத்தை திரித்த காவுத்ஸ்கி போன்றவர்களின் கருத்துக்களை மறுத்து, ஏகாதிபத்திய கட்டத்திலும் உற்பத்தி சமூகமயமாகியுள்ளது என்று லெனின் நிறுவுகிறார்.
பெரிய தொழிற்சாலைகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் உற்பத்தி என்பது, தனிநபரால் நடப்பதில்லை. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான அல்லது இலட்சக்கணக்கான தொழிலாளர்கள், பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், வல்லுநர்கள் என பலரது கூட்டு முயற்சியின் விளைவாக உற்பத்தி நடக்கிறது. மையப்படுத்தப்பட்ட திட்டமிடுதல் இருந்தாலும், உற்பத்தி சமூக செயல்பாடாக நடைபெறுகிறது.
ஆனால், இந்த சமூக உற்பத்தியின் ஒட்டுமொத்த கட்டுப்பாடு, சில தனிநபர்கள், முதலீட்டாளர்கள் கொண்ட பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் மட்டுமே உள்ளன. உற்பத்தியால் கிடைக்கும் இலாபத்தை இவர்கள் அபகரித்துக் கொள்கின்றனர். உற்பத்தி சமூகமயமாகிற நிலையில், அதன் மீதான உரிமை, தனி நபர்களான முதலாளிகளிடம் உள்ளது.
கூகிள் ஒரு உதாரணம்
லெனின் இதனை 1916-இல் எழுதினாலும், இன்றைக்கும் அது பொருந்துகிறது. கூகிள் நிறுவனம் மிகப் பெரிய தனியார் நிறுவனம். ஆனால், அது பிரம்மாண்டமான சமூக உற்பத்தி அமைப்பு. 2025-இல் அதன் ஊழியர்களின் எண்ணிக்கை 1,87,103. உலகளவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில், 200-க்கும் அதிகமான நகரங்களில் அலுவலகங்கள், டேட்டா சென்டர்கள் உள்ளன. ஆசிய பசிபிக், ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்கா என ஆறு கண்டங்களிலும் கூகுள் பரவியுள்ளது.
இந்த லட்சக்கணக்கான ஊழியர்களின் கூட்டு உழைப்பின் விளைவாகவே, அது உலகின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனமாக செயல்படுகிறது.
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் உழைப்பில் கிடைக்கும் பெருத்த இலாபம், ஒரு சிலரின் தனி உடைமையாக உள்ளது. அதன் மூலதன உரிமை மற்றும் கட்டுப்பாடு, ஒரு சிலரின் கைகளில் தனியுடைமையாக உள்ளதால், இலாபம் அவர்களிடம் சேருகிறது.
அதாவது உற்பத்தி 100% சமூக மயமாகி உள்ளது. அதன் பலன்கள் 1% பேருக்கு மட்டும் சொந்தமாகிறது. இது கார்ப்பரேட் உலகின் சுரண்டல் ஆகும்.
தீவிரமடையும் முரண்பாடு
முதலாளித்துவத்தின் இந்த அடிப்படை முரண்பாடு, ஏகாதிபத்தியக் கட்டத்தில் தீவிரமடைகிறது. தொழிலாளர்கள் உழைப்பு கொடூரமாக சுரண்டப்படுகிறது. அதே நேரத்தில், அவர்களின் வாங்கும் சக்தியும், வருமானமும் வீழ்ச்சி அடைகிறது. தனிநபர் கொள்ளை லாபம் அதிகரிக்கிறது.
இந்த முரண்பாட்டைத் தீர்க்க, உற்பத்தியின் மீதும் சமூக கட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டும்; அதன் மீதான உரிமை, உழைப்பு செலுத்துவோரின் உரிமையாகிட வேண்டும். உற்பத்தியும், அதன் பலன்களும் சமூக உடைமை என்பது முக்கிய தத்துவப் பிரச்சாரம்.
பல அறிஞர்கள் ஏகாதிபத்தியத்தை ஆய்வு செய்தனர். லெனினது ஆய்வு மேலானதாக இன்றளவும் இருப்பதற்கு காரணம், அது அரசியல் பொருளாதார கோட்பாடுகளை மட்டும் பேசவில்லை. புரட்சிகர நடைமுறையையும், தீர்வுகளையும் விளக்குகிறது.
சோசலிசப் புரட்சி நோக்கில் ஏகாதிபத்திய வளர்ச்சியை ஆய்வு செய்து லெனின் வந்தடைந்த முடிவுகளே, கம்யூனிஸ்டு பிரச்சாரத்தின் கருப்பொருள் ஆகும்.
கிளர்ச்சிக்கான வாய்ப்புகள்
ஏகாதிபத்திய வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டத்தில் நவ தாராளமய கொள்கைகள் கொண்டுவரப்பட்டன. தாராளமயம், தனியார்மயம், உலகமயமாக்கல் கொள்கைகள், ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளன.
இதனால், ஏழை மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தையும், வளங்களையும் சூறையாடி, கார்ப்பரேட் மூலதனம் வலுவடைந்துள்ளது. உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் போன்ற அமைப்புகள், நிபந்தனைகள் என்கிற பெயரால், மேற்கண்ட சூறையாடலை நிகழ்த்தி ஏகாதிபத்தியங்களுக்கு சேவையாற்றி வருகின்றன.
ஊதியவெட்டு, வேலை இழப்பு, கடும் வரிவிதிப்பு, கல்வி, பொது சுகாதாரம், மக்கள் நலம் போன்ற திட்டங்களுக்கான நிதிக் குறைப்பு தொடர்கதையாகி வருகிறது.
இந்தியாவில் “வேலை வாய்ப்பில் அதிக பங்களிப்பு நல்கி வந்த உற்பத்தி துறை (manufacturing) தற்போது மொத்த வேலை வாய்ப்பில் 12 சதவீதம் என்ற அளவில் சுருங்கி விட்டது. அற்ப ஊதியத்திற்காக கிராமங்களை நோக்கி மக்கள் செல்லுகிற நிலை ஏற்பட்டு வருகிறது. இவை, கிளர்ச்சி இயக்கத்தை முன்னெடுக்க வாய்ப்பை ஏற்படுத்துகின்றன.
உருவாகும் நெருக்கடிகள்
தகவல் தொழில்நுட்ப துறையிலும் இதே நிலை. TCS நிறுவனம் 12,000 பேரை வேலையிலிருந்து நீக்க, நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு வருகை, ஒயிட் காலர் எனப்படும் வேலைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். வேலை சார்ந்த கோரிக்கைகள், கிளர்ச்சி போராட்டங்களை வேகப்படுத்தும்.
உழைக்கும் மக்களை பாதுகாக்க, பல்வேறு முழக்கங்களையும், கோரிக்கைகளையும் முன்வைத்து, மக்களை திரட்டுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. இந்த முழக்கங்களை முன்வைத்து உழைக்கும் மக்கள் உலகம் முழுவதும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.
வேலை பாதுகாப்பு, ஊதிய உயர்வு, வேலை நேரம் போன்ற பல கோரிக்கைகளுக்காக போராட்டங்கள் நடைபெறுகின்றன. தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள், சிறுகுறு தொழில் முனைவோர், பெண்கள், இளைஞர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் என பல தரப்பினரும் போராடி வருகின்றனர். இந்தப் பகுதி மக்களின் வெகுஜன அமைப்புகள், பல நூற்றுக்கணக்கான கிளர்ச்சி கோரிக்கைகளை முன்வைத்து இயங்கி வருகின்றன.
தற்போது தீவிரமடைந்து வருகிற கால நிலை மாற்ற நெருக்கடிகள், புவி வெப்பமயமாதல் பிரச்சனைகள், இயற்கையை சூறையாடும் ஏகாதிபத்திய கொள்கைகளால் விளைந்தவை. இது தொடர்பான கிளர்ச்சி கோரிக்கைகளை எழுப்புவதும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளோடு ஒருங்கிணைந்த போராட்டங்களும் அவசியம். உலகின் பல பகுதிகளில் இந்தியா, தமிழகம் உள்ளிட்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிற பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நில ஆக்கிரமிப்பு, வாழ்வாதாரங்களைப் பறிக்கும் வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். மக்கள் நலனை முன்னிறுத்தியே வளர்ச்சி என்ற கண்ணோட்டத்தோடு, இவை எல்லாம் ஒருங்கிணைந்த கிளர்ச்சி போராட்டமாக முன்னெடுத்தல் அவசியம்.
பிரச்சாரம் இல்லாத குறைபாடு
இந்தியாவிலும், தமிழகத்திலும் இயங்கி வருகிற அமைப்புகள், தாங்கள் திரட்டும் மக்களின் நூற்றுக்கணக்கான கோரிக்கைகளை முன்வைத்து செயல்பட்டு வருகின்றன. ஆனால், தொடர்ச்சியான குறைபாடு ஒன்று உள்ளது. கிளர்ச்சியின் ஊடாக, பிரச்சாரத்தை அவை முன்னெடுப்பதில்லை. இது குறித்து அவ்வப்போது விவாதித்து, சில முன்னெடுப்புகள் நிகழ்ந்து வருகின்றன.
தற்போது நடந்து வரும் போர்களுக்கு எதிராக குரல் எழுப்புவது முக்கியமான ஒரு கிளர்ச்சி போராட்டம். போர்கள் ஏகாதிபத்தியவாதிகளுக்கு பயன்பட்டு வருகின்றன. போரின் போது தரைமட்டமாக்கப்பட்ட அனைத்தையும் மறு நிர்மாணம், மறு கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்று, கொள்ளை லாபம் அடைகின்றன.
ஆசியாவில் நேட்டோ ராணுவ கூட்டணியின் முழுமையான விரிவாக்கத்திற்கு ஏகாதிபத்திய அரசுகள் முனைப்புடன் முயற்சிக்கின்றனர். இதனால்தான் ரஷ்ய உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஏகாதிபத்திய ராணுவ கூட்டணி விரிவாக்கத்திற்கு எதிராகவும், போருக்கு எதிராகவும் கிளர்ச்சி முழக்கங்கள் ஒலித்து வருகின்றன.
உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள தொழிலாளர்கள் பல நுட்பமான கோரிக்கைகளை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் எழுப்பி எதிர்ப்புக் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு மைக்ரோசாப்ட், கூகுள், அமேசான் போன்ற கம்பெனிகள் தொழில்நுட்ப ரீதியாக துணை நிற்பதைக் கண்டித்து தொழிலாளர்கள் குரல் எழுப்பினார்கள். தாங்கள் வடிவமைக்கும் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இஸ்ரேல் ,பாலஸ்தீனர்களை வேவு பார்த்து படுகொலை செய்வதை அவர்கள் கண்டித்தனர்.
கொடூரமான மனித உரிமை மீறலுக்கு தங்களது பணிகளை பயன்படுத்தக் கூடாது என்று நிர்வாகங்களிடம் கோரிக்கை எழுப்பினர். இதனால் பலர் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், இந்த கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இதுவும் கிளர்ச்சி கோரிக்கையே. இதற்கு பின்னாலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளது.
எனவே, வேறுபட்ட பல துறைகளில் குறிப்பிட்ட கோரிக்கைகளுக்கு கிளர்ச்சி போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது அவசியம். புதிய வடிவங்களில் கிளர்ச்சி செயல்பாடுகள் அமைதல் வேண்டும். மக்களின் அதிக அளவிலான பங்கேற்பே முக்கியமானது.
1967-க்கு முந்தைய எல்லைகளுடன் கிழக்கு ஜெருசலேமை தலைநகராக கொண்ட, இறையாண்மை கொண்ட, பாலஸ்தீன நாட்டை நிறுவிட வேண்டுமென்பது முக்கியமான கிளர்ச்சி கோரிக்கை.
டொனால்டு டிரம்ப் இந்தியாவின் மீதும், இதர நாடுகள் மீதும், நடத்துகிற வரி விதிப்பு தாக்குதல், ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை நிலை நிறுத்துகிற நடவடிக்கைதான். இவை உலகம் முழுவும் வேலையின்மை, மக்களின் வருமான வீழ்ச்சியை அதிகப்படுத்துகிறது.
இந்திய விவசாயிகளையும், தொழிலாளர்களையும் பாதிக்கிற இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகவும், டிரம்பின் நடவடிக்கைகளுக்கு பணிந்து போகிற மோடி அரசுக்கு எதிராகவும், மேற்கொள்ளுகிற போராட்டங்கள் இன்றைய சூழலில் முக்கியமான ஏகாதிபத்திய எதிர்ப்பு கிளர்ச்சி முன்னெடுப்புகள்.
சோசலிச மாற்றை நோக்கி
ஏகாதிபத்தியவாதிகளின் கொள்கைகளுக்கு எதிரான கிளர்ச்சிப் பிரச்சார செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டால், மத அடிப்படைவாதம், இனவெறி, பயங்கரவாதம் உள்ளிட்ட வலதுசாரி போக்குகள் கோலோச்சும். இந்தியாவில் மதவாதம், சாதியவாதம் மக்களை பிளவுபடுத்துகிறது. இந்த போக்குகளால் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி, நவபாசிச நடவடிக்கைகள் அதிகரிக்கும். இவற்றைத் தடுக்க கிளர்ச்சி இயக்கங்களில் பெருந்திரளான மக்களை திரட்டிட வேண்டும். திரட்டப்பட்ட மக்களிடையே வர்க்க விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.
அன்றாட கோரிக்கைகளில் திரட்டப்பட்ட மக்களின் அரசியல் உணர்வை சோசலிச உணர்வாக உயர்த்திட, படைப்பாற்றல்மிக்க புதிய வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். உள்ளூர் அளவில் மக்களை சந்திக்கக்கூடிய படிப்பகங்கள், விவாத மன்றங்கள், இரவுப் பள்ளிகள் போன்றவை பிரச்சார களங்கள்.
பேராசிரியர்கள் பிரபாத் பட்நாயக், உட்சா பட்நாயக் இருவரும் விவசாயிகள், தொழிலாளர்கள் நிர்வகிக்கும் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவுப் பண்ணைகள் உருவாக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர். இது சோசலிச பிரச்சாரத்திற்கும், சோசலிச அமைப்பு உருவாவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் விவரிக்கின்றனர். (“சோசலிச மாற்றத்தில் தொழிலாளர் விவசாய ஒற்றுமை” – மன்த்லி ரிவ்யு )
கிளர்ச்சி பிரச்சாரத்தின் வழியாக தொழிலாளர் – விவசாயி வர்க்கக் கூட்டணியை வலுப்படுத்த முடியும். சோசலிச மாற்றத்திற்கு இது இன்றியமையாத தேவை.
மார்ச்சிஸ்ட் கட்சியின் தீர்மானம்
மார்க்சிஸ்ட் கட்சி 24-வது கட்சி காங்கிரசின் அரசியல் தீர்மானம் ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னெடுப்புகளை வலியுறுத்துகிறது.
இளைஞர்களை, ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்டவர்களாகவும், சோசலிசத்தில் பிடிப்பு கொண்டவர்களாகவும் வளர்த்திட, அரசியல் தீர்மானம் வலியுறுத்துகிறது.
“இளைய தலைமுறையினரின் சமூக, பண்பாட்டு வாழ்வில் வெற்றிடம் உருவாகியுள்ளது. ஆரோக்கியமான, முற்போக்கான சமூக, கலாச்சார விழுமியங்களை உள்வாங்குவதற்குப் பதிலாக, அவர்கள் தீய வணிக-நுகர்வும், தன்முனைப்பும் கொண்ட மதிப்பீடுகளால் வளர்த்தெடுக்கப் படுகிறார்கள். இந்துத்துவா ஆட்சியின் கீழ், தீவிர வகுப்புவாத உணர்வும், பிளவுவாத உணர்வும் தொடர்ந்து ஊட்டப்படுகிறது. சிறந்த கல்வி, தரமான வேலைவாய்ப்பு, நிறைவான சமூக, கலாச்சார வாழ்க்கைக்கான மாற்றுத் திட்டங்களை இளைஞர்களுக்கு வழங்குவது இன்றியமையாததாகும். அத்தகைய அரசியல் மேடையை முன்வைக்கும் அதே வேளையில், சமூகத்தில் ஒரு அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தவல்ல, சோசலிச லட்சியத்தையும் இளைஞர்கள் முன் இடதுசாரிகள் வைக்க வேண்டும்”. (பத்தி :2.56)
அனைத்துப் பகுதி மக்கள் மத்தியிலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை வலுப்படுத்துவதற்கு அரசியல் தீர்மானம் கீழ்க்கண்டவாறு வழிகாட்டி உள்ளது.
“இந்திய மக்கள் மத்தியில் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை அதிகரித்திட, பணியாற்ற வேண்டும்; மற்றும் மோடி அரசாங்கத்தின் அமெரிக்க ஆதரவு வெளிநாட்டுக் கொள்கை, மற்றும் அமெரிக்காவுடனான ராணுவ சூழ்ச்சிக் கூட்டணிக்கு எதிராக வெகுஜனக் கருத்தை அணிதிரட்டவும் கட்சி பணியாற்ற வேண்டும்.”
சோசலிச மாற்று சமூகம் பற்றிய பிரச்சாரத்தையும் முன்னெடுக்க அரசியல் தீர்மானம் அழுத்தம் அளிக்கிறது.
“இடது ஜனநாயக முன்னணியைக் கட்டி எழுப்பவும், இடது ஜனநாயக முன்னணியே மாற்று என்பதை முன்னிறுத்தவும், கட்சி பாடுபட வேண்டும். இது, இந்தியாவின் நிலைமைகளுக்குப் பொருந்திப் போகும் விதத்தில் “சோசலிசமே மாற்று” என்ற பிரச்சாரத்துடன் இணைக்கப்பட வேண்டும்.” (பத்தி: 2.97).
நிறைவாக…
அரசியல் தீர்மானத்தில் இடது ஜனநாயக சக்திகளை அணி திரட்டுவதற்கான மாற்றுக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, தமிழகத்தில் இடது ஜனநாயக சக்திகளை திரட்டுவதற்கு, தமிழகத்துக்கு ஏற்ற கிளர்ச்சி கோரிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது அவற்றை மேம்படுத்தி, மக்கள் அணி திரட்டலும், அதன் தொடர்ச்சியாக, கருத்தியல் பிரச்சாரமும் நடக்க வேண்டும். இந்த மாற்று கோரிக்கை சாசனங்கள், பல்வேறு பகுதி மக்களை திரட்டி, கிளர்ச்சி பிரச்சார பாதையில் முன்னேறிடவும், சோஷலிசம் நோக்கி பயணிக்கவும் உதவிடும்.
மாமேதை லெனின் அறிவுறுத்தியவாறு, கிளர்ச்சி – பிரச்சாரம் கம்யூனிஸ்டுகளின் முதன்மை கடமையாகவும், தொய்வற்ற, இடையறாத, நிரந்தரமான, செயல்பாடாகவும் இருந்திட வேண்டும். இது, ஏகாதிபத்திய வீழ்ச்சியையும், சோசலிசத்தையும் சாத்தியமாக்கும்.
You may also like
3 comments
Leave a ReplyCancel reply
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

மரியாதைக்குரிய தோழர் அவர்களே, தங்களுடைய கட்டுரை என்னை புரட்சிகர சோசியலிசத்தை நோக்கி பயணிக்க வைக்கிறது… இது போன்ற கட்டுரைகள் தான் மனித குளத்திற்கு தேவை என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்….
Lal salam comrade
முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே
பறித்துக் கொள்ளும்
it’s great comrade