செயற்கை நுண்ணறிவு மற்றும் வேலை உலகம்
சுதீப் தத்தா
(சிஐடியுவின் அகில இந்திய பொதுக்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட
அறிக்கையின் சுருக்கமான வடிவம்)
செயற்கை நுண்ணறிவு (AI) வேலை உலகத்தை ஆழமாக மறுவடிவமைத்து வருகிறது. இது எதிர்காலம் பற்றிய கருத்து மட்டுமல்ல; AI ஏற்கனவே நமது அன்றாடப் பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு இடையிலான தொழில்நுட்பப் போட்டியில் காணப்படுவது போல, குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.
சிஐடியு போன்ற தொழிலாளர் அமைப்புகளுக்கு, வேகமாக வளர்ந்து வரும் இந்தத் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். இந்த மாற்றங்களை எதிர்கொள்ளவும், நமது பங்கை வரையறுக்கவும் நமக்கு ஓர் ஒன்றுபட்ட பார்வை தேவை.
ரோபாட்டிக்ஸ் & AI: அடிப்படைகளைப் புரிந்துகொள்வது
முதலில் பாரம்பரிய ரோபாட்டிக்ஸிலிருந்து AI ஐ வேறுபடுத்துவோம். தொழில்துறை ரோபோக்கள் என்பது உற்பத்தித் துறையில் குறிப்பிட்ட உடல்சார்ந்த பணிகளுக்காக (உதாரணமாக, அசெம்பிளி அல்லது வெல்டிங்) நேரடி மனிதக் கட்டுப்பாடு இல்லாமல் திட்டமிட்டபடி செயல்படும் இயந்திரங்கள். அவை கட்டமைக்கப்பட்ட சூழல்களில் சிறந்து விளங்குகின்றன, ஆனால் நெகிழ்வுத் தன்மை அற்றவை.
இயந்திரங்கள் சூழலுக்கு ஏற்ப தங்களின் பணிகளை மாற்றியமைத்துக் கொள்ளவும், சுயாதீனமாக முடிவுகளை எடுக்கவும் அனுமதிக்கும் மென்பொருளை உருவாக்குவதே உண்மையான முன்னேற்றமாகும் – இது நெகிழ்வான பணிகளைச் செய்ய உதவுகிறது. இது செயற்கை நுண்ணறிவுக்கு (AI) வழிவகுத்தது.
AI என்பது அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளவும், தானியங்கு முடிவுகளை எடுக்கவும் திறன் கொண்ட இயந்திரங்களுக்கான ஒரு குடைச் சொல்லாகும். இது அடிப்படையில் கற்றல் மற்றும் சிக்கலைத் தீர்ப்பது போன்ற மனித அறிவாற்றல் செயல்பாடுகளைப் பிரதிபலிக்கிறது. முன்-திட்டமிடப்பட்ட கட்டளைகள் தேவைப்படும் பாரம்பரிய ரோபோக்களைப் போலல்லாமல், AI அமைப்புகள் கற்றுக் கொள்கின்றன; தங்கள் செயல்பாட்டை மாற்றியமைத்துக் கொள்கின்றன. இது தானியங்கு அமைப்புகளுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது, மொழிபெயர்ப்பு முதல் வாகனங்களைக் கட்டுப்படுத்துவது வரை முன்பு மனித சிந்தனை தேவைப்பட்ட பணிகளைச் செய்ய உதவுகிறது.
ChatGPT போன்ற உருவாக்கும் AI (GenAI), தரவை பகுப்பாய்வு செய்வது மட்டுமல்லாமல், கற்றுக்கொண்ட வடிவங்களின் அடிப்படையில் புதிய விஷயங்களை (உரை, படங்கள் போன்றவை) உருவாக்கும் ஒரு மேம்பட்ட வடிவமாகும்.
AI எவ்வாறு கற்றுக்கொள்கிறது மற்றும் செயல்படுகிறது?
பாரம்பரியமாக, மேலாளர்கள் பணிகளை ஆய்வு செய்து, அதன் அங்கமாக உள்ள குறியிடப்பட்ட இயக்கங்களாகப் பிரிப்பதன் மூலம், தொழிற்சாலைப் பணிகளை மேம்படுத்தினர். மென்பொருள் உருவாக்கம் போன்ற அறிவுப் பணிகள் அவ்வாறு முறைப்படுத்த இயலாததாகக் காணப்பட்டன.
AI இன் ஒரு முக்கிய பகுதியான இயந்திர கற்றல் (Machine Learning), இதை மாற்றியது. ML அமைப்புகள் பெரும்பாலும் விரைவான சோதனை முறையைப் பயன்படுத்துகின்றன. ஒரு மாறாத, படிப்படியான கட்டளைகள் கொடுக்கும் முறை என்று இல்லாமல், வடிவங்களையும் போக்குகளையும் கற்றுக்கொள்ளவும் பணிகளைச் செய்யவும் பரந்த அளவிலான தரவைச் செயலாக்குகின்றன. கணினிகள் ஒரு காலத்தில் மனித அறிவுசார் தொழிலாளர்களுக்கு மட்டுமே உரிய சிக்கலான, வழக்கத்திற்கு மாறான அறிவாற்றல் என்பதை மாற்றி, இது போன்ற பணிகளையும் எந்திரமயமாக்க இது அனுமதிக்கிறது.
பெரிய மொழி மாடல்கள் போன்ற AI செயலிகள் நம்மோடு “பேசும்போது,” அவை அடிப்படையில் அதிநவீன ஒப்பிப்பான், அவ்வளவு தான். அவை உலகெங்கும் உள்ள எழுத்து வடிவ தரவுத்தொகுப்புகளை பகுப்பாய்வு செய்து, அவை கற்றுக்கொண்ட வடிவங்களின் அடிப்படையில், மனித மொழியை ஒத்திருக்கும் ரீதியாக, மிகவும் சாத்தியமான சொற்களின் வரிசைகளை உருவாக்குகின்றன. அவை மனிதரைப் போல “சிந்திப்பதில்லை” அல்லது புரிந்துகொள்வதில்லை.
இருப்பினும், அவை கொடுக்கும் உரைகளும், தரவுகளும் வியக்கத்தக்க வகையில் இருக்கலாம்; புத்திசாலித்தனமாகத் தோன்றலாம். முக்கியமாக, மருத்துவம், சட்டம் மற்றும் சாப்ட்வேர் கோடிங் போன்ற சிக்கலான களங்களில் AI திறன்கள் வேகமாக முன்னேறி வருகின்றன. இந்த அமைப்புகள் மகத்தான கணினி சக்தி மற்றும் பரந்துபட்ட தரவுத் தொகுப்புகளை நம்பியுள்ளன. ஆனால் இந்த தரவுகள் அனைத்தும் பெரும்பாலும் மனிதனால் உருவாக்கப்பட்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். AI இன் “நுண்ணறிவு” என்பது, கூட்டு மனித அறிவு மற்றும் உழைப்பின் பிரதிபலிப்பாகும். நகைமுரணாக, AI ஐ உருவாக்கும் தொழில்நுட்பத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த வேலைகளின் அம்சங்களையும் எந்திரமயமாக்குகிறார்கள்.
உண்மையில் சிந்திக்கவில்லை என்றாலும், AI தொழிலாளர் உற்பத்தித் திறனை வியத்தகு முறையில் அதிகரிக்க முடியும். இது கணிசமாக குறைவான தொழிலாளர்களுடன் பணிகளைச் செய்ய உதவும்.
பணியிடத்தில் AI இன் மாற்றம்
AI ஆனது எந்திரமயமாக்கல் (தொழிலாளர்களை நீக்குதல்) மற்றும் தொழில் திறனை பெருக்குதல் (தொழிலாளர் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்) மூலம் வேலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதில் முழுமையான தானியங்குமயமாக்கல் (automation), மனிதர்கள் முடிவுகள் எடுக்க உதவி புரிதல், AI மனிதர்களுடன் இணைந்து செயல்பட்டு மற்றும் கற்றுக்கொண்டு, தொழில் திறனை பெருக்கும் முறை, மற்றும் முழுமையான தன்னாட்சி அமைப்புகள் ஆகியவை அடங்கும்.
AI ஆனது தயாரிப்பு மேம்பாடு, சிக்கலான செயல்பாடுகள், மற்றும் அனைத்து துறைகளிலும் நுகர்வோர் சார்ந்த உத்திகளை மேம்படுத்துகிறது:
உற்பத்தி/விநியோகச் சங்கிலி: AI/ML ஆனது பண்டங்களின் கையிருப்பு, பராமரிப்பு, கிராக்கியை கணித்து முன்னறிவிப்பு மற்றும் குறைபாடு கண்டறிதல் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. செயல்திறனை அதிகரிக்கிறது. ஆனால் தொழிலாளர்களை இடம்பெயரச் செய்யக்கூடும். IoT, பிளாக்செயின் மற்றும் கூட்டு ரோபோக்கள் (“கோபோட்கள்”) போன்ற தொழில்நுட்பங்கள் பொதுவாக காணப்படுகின்றன. சில தொழிற்சாலைகள் மனித தொழிலாளர்கள் இல்லாமலும் (“இருண்ட தொழிற்சாலைகள்”) இயங்குகின்றன.
போக்குவரத்து: AI நிகழ்நேரத் தரவைப் பயன்படுத்தி பயணிக்கும் வழிகளை மேம்படுத்துகிறது. தானியங்கு வாகனங்கள் சரக்கு போக்குவரத்திற்கு உதவுகின்றன. முழுமையான தன்னாட்சி அமைப்புகள் எதிர்காலத்தில் ஓட்டுநர் வேலைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
சுகாதாரம்: AI ஆனது நோயறிதலில் (படங்கள்/அறிக்கைகளை பகுப்பாய்வு செய்தல்), தனி நபர்களுக்கு ஏற்ற சுகாதார கண்காணிப்பு, சாட்போட்கள் வழியாக நோயாளி-மருத்துவர் தொடர்பு, ரோபோ அறுவை சிகிச்சை உதவி ஆகியவற்றில் உதவுகிறது, இது மருத்துவம் மற்றும் தொடர்புடைய சேவை வேலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நிதிச் சேவைகள்: AI/ML பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கிறது, வாடிக்கையாளர் சேவைக்கு உதவுகிறது, நிதி சொத்துக்களை நிர்வகிக்கிறது, கணினிமய உத்தி சார்ந்த வர்த்தகத்தை எளிதாக்குகிறது; மோசடிகளைக் கண்டறிகிறது. அதிக கணினித் தேவைகள் காரணமாக, இந்த துறையில் AI விரைவாக அமலாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வி: ரோபோ கற்பித்தல் உதவியாளர்கள் மற்றும் தனி நபர்களுக்கு ஏற்றார் போல இயங்கும் கற்றல் தளங்கள் பரந்துபட்ட அளவில் இயங்குபவையாக மாறக்கூடும். மனித ஆசிரியர்களுடன் சேர்ந்து செயல்படுகின்றன.
நுகர்வோர்/சில்லறை விற்பனை: டிஜிட்டல் உதவியாளர்கள், வாடிக்கையாளர் சேவை ரோபோக்கள் மற்றும் ஈ-காமர்ஸ்/பொழுதுபோக்கு பரிந்துரைகள் மேற்கொள்ளும் இயந்திரங்கள் உட்பட பரவலான பயன்பாடு உள்ளது.
வேளாண்மை: AI/ML ஆனது சரக்கு விலை கணித்து அறிவித்தல், மற்றும் “ஸ்மார்ட் விவசாய” ஆலோசனைக்கு (உகந்த விதை விதைப்பு நேரம், பயிர் ஆரோக்கிய கண்காணிப்பு) பயன்படுத்தப்படுகிறது, இது பெரிய அளவிலான தரவு சேகரிப்பை செயல்படுத்துகிறது.
கிட்டத்தட்ட அனைத்து வேலைத் துறைகளையும் பாதிக்கும் ஒரு தொழில்நுட்பப் புரட்சியில் நாம் நுழைகிறோம். மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வு திறன்கள் உழைப்பாளர்களுக்கு வேலை செயல்முறைகளை இறுக்கமாக்கலாம், தொழிலாளர் பேரம் பேசும் சக்தியை குறைக்கலாம் மற்றும் பணிச்சுமையை அதிகரிக்கலாம்.
தொழிலாளர் மீதான தாக்கம்: வேலை இழப்பு, புதிய வேலை உருவாக்கம் மற்றும் மாற்றம்
செயற்கை நுண்ணறிவு (AI) மனித உழைப்பை அகற்றிவிடுமா? குறுகிய காலத்தில், அநேகமாக இல்லை. தற்போதைய AI க்கு உண்மையான விழிப்புணர்வு, முடிவெடுத்தல் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளைக் கையாளும் திறன் இல்லை. சமீபத்திய பென்டகன் சோதனை, சில சிக்கலான பணிகளில் ரோபோக்கள் மனித வேகம் மற்றும் தகவமைப்புத் திறனை ஒப்பிடுகையில் பின்தங்கியிருப்பதாகக் காட்டியது. இருப்பினும், AI உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது; குறைவான தொழிலாளர்களுடன் பணிகளை முடிக்கலாம் என்பதை சாத்தியமாக்குகிறது.
வழக்கமான நிர்வாகம், தகவல் தொடர்பு, வாடிக்கையாளர் சேவை, தரவு மேலாண்மை மற்றும் தகவல் செயலாக்கம் (அடிப்படை மொழிபெயர்ப்பு அல்லது உள்ளடக்க வரிசைப்படுத்தல் போன்றவை) சம்பந்தப்பட்ட பல பணிகள் தானியங்குமயமாக்கலின் ஆபத்தை அதிக அளவில் எதிர்கொள்கின்றன. இவை பெரும்பாலும் திரும்பத் திரும்பச் செய்யப்படும், அதிக தரவுகள் சார்ந்த, குறிப்பிட்ட வடிவங்களைப் பின்பற்றும் பணிகளாகும்.
உயர் வருமான நாடுகளுடன் ஒப்பிடும்போது, குறைந்த வருமானமுள்ள நாடுகளில் தானியங்கு மயமாக்கலின் உடனடி ஆபத்து குறைவாகத் தோன்றுகிறது. இது தொழிலாளர் ஊதிய செலவின வேறுபாடுகள் காரணமாக இருக்கலாம். இருப்பினும், AI மனித வேலையை மேம்படுத்துவதற்கான சாத்தியம் உலகளவில் அதிகமாகக் கருதப்படுகிறது. பல துறைகளில் முழு எந்திரமயமாக்கலை விடவும் இவ்வாறு உற்பத்தி திறனை விரைவாக கூட்டுவது அதிகமாக இருக்கலாம்.
தொழில்நுட்பம் உழைப்பை மாற்றும் இந்த முறை முற்றிலும் புதியதல்ல. ஆனால் AI இன் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட அனைத்துப் பொருளாதாரத் துறைகளையும் (உற்பத்தி, சேவைகள், படைப்பாற்றல் வேலை, அறிவு வேலை) பாதிக்கும் திறன் முன்னெப்போதும் காணப்படாதது. முந்தைய தொழில்நுட்ப மாற்றங்கள் பெரும்பாலும் தொழில் துறைகளை படிப்படியாகப் பாதித்தன.
கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் கணிப்பின்படி, AI உலகளவில் 30 கோடி முழுநேர வேலைகளை (தொழிலாளர் படையில் ஐந்தில் ஒரு பங்கு) சீர்குலைக்கக்கூடும். இதன் தாக்கம் ஒரே மாதிரியாக இருக்காது. குறைந்த ஊதியம் பெறும் பராமரிப்பு வேலைகள் அதிகரிக்கக்கூடும், அதே நேரத்தில் வங்கி, உற்பத்தி, அலுவலக நிர்வாகம், விற்பனை மற்றும் படைப்பாற்றல் துறைகளில் உள்ள வேலைகள் குறையக்கூடும். தொழில் வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மேலாளர்கள் தற்போது அதிக ஆபத்தில் இருப்பதாகத் தெரிகிறது, அதே நேரத்தில் உடலுழைப்பு/வர்த்தக வேலைகள் இப்போதைக்கு குறைவாகவே பாதிக்கப்படுகின்றன. சில தொழில்களில் எந்திரமயமாக்கல் வரும் சாத்தியம் இருந்தபோதிலும், மேற்பார்வைக்கான தேவை தொடரலாம். மேலும் விரும்பத்தகாத/ஆபத்தான வேலைகள் தானியங்குமயமாக்கப்படலாம்.
சில துறைகளில் வேலை இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் ஒட்டுமொத்த உற்பத்தித்திறன் மற்றும் புதிய வேலைகளின் உருவாக்கம் என்னவாகும்? நிறுவனங்களின் முதலீட்டு முடிவுகள் இலாபத்தால் இயக்கப்படுகின்றன. சுகாதாரம் அல்லது சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பரந்த சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை விட, ஒரு நிறுவனத்தின் இலாபத்தை அதிகரிக்கும் துறைகளில் (விற்பனை, விளம்பரம் அல்லது கணக்கியல் போன்ற துறைகள்) தானியங்குமயமாக்கல் பெரும்பாலும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
மேலும், தற்போதைய உலகப் பொருளாதார சூழலில், மெதுவான வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தின் மத்தியில், உற்பத்தித்திறன் அதிகரித்தாலும், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கிராக்கி மெதுவாகவே வளரக்கூடும். இது ஒட்டுமொத்தமாக உழைப்புக்கான தேவையைக் குறைக்க வழிவகுக்கும் (குறைந்த உழைப்பு நேரம், குறைந்த வேலை வாய்ப்புகள் அல்லது குறைந்த ஊதியம்). கடந்த 30 ஆண்டுகளில் தானியங்குமயமாக்கல், வருமான ஏற்றத்தாழ்வு உயர்வுக்கு பெருமளவில் பங்களித்துள்ளது என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) குறிப்பிட்டுள்ளது.
மாறும் பணியிட உறவுகள்
நவீன உற்பத்திப் போக்குகள் மிகவும் பலவீனமான, தற்காலிகமான மற்றும் “கிக்” (ஸ்விக்கி டெலிவரி போன்ற, குறிப்பிட்ட பணியை முடித்தால், அதற்கு ஒரு கூலி) அடிப்படையிலான வேலைவாய்ப்பை நோக்கி நகர்கின்றன. விரைவான தானியங்குமயமாக்கல் நிகழ வேண்டும் என்றால், சமீபத்திய தொழில்நுட்பங்கள் விரைவாக அமலாவது தேவைப்படுகிறது. இதன் பொருள், பெரும்பாலும் புதிய பயிற்சியாளர்கள் மற்றும் நிரந்தரமற்ற, குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வேலைக்கு எடுக்கப்படும் ஊழியர்கள் நிலையற்ற சூழ்நிலைகளில் பணியமர்த்தப்படுகிறார்கள். எனினும், முக்கிய உற்பத்திப் பொறுப்புகளின் சுமை அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. AI மேற்பார்வை மற்றும் கண்காணிப்புப் வேலைகளிலும் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணிகள் தானியங்குமயமாக்கப்படுவதால் அந்தப் பகுதிகளில் வேலைவாய்ப்புகள் குறைகிறது.
இந்தப் சூழ்நிலை பயிற்சியாளர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைத்து மட்டங்களிலும் உள்ள ஊழியர்கள் தங்கள் நலன்களைப் பாதுகாக்க கூட்டாக ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை உணரக்கூடிய ஒரு பொதுவான தளத்தை உருவாக்குகிறது. கூடுதலாக, உற்பத்தியானது டிஜிட்டல் வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்து இருப்பதால், புதிய தலைமுறை தொழிலாளர்களுக்கு முழு உற்பத்தி செயல்முறை பற்றிய சிறந்த புரிதல் கிடைக்கக்கூடும்.
தொழிற்சங்கங்களின் பங்கு
இந்தத் தொழில்நுட்பப் புரட்சியின் தாக்கம் குறித்த நமது புரிதல் இன்னும் வளர்ந்து வருகிறது, ஒவ்வொரு நாளும் புதிய அம்சங்கள் வெளிப்படுகின்றன. சிஐடியு போன்ற தொழிற்சங்கங்கள் பல முக்கிய துறைகளில் நிர்வாகம் மற்றும் அரசாங்கத்திற்கான முன்மொழிவுகளை முன்கூட்டியே உருவாக்க வேண்டும்:
ஒழுங்குமுறை: பணியிடத்தில் AI ஐ நிர்வகிக்கும் வலுவான விதிமுறைகளுக்காக வாதிடுங்கள். தனிநபர்/தொழிலாளர்கள் தரவு தனியுரிமை (privacy), அல்காரிதமில் (எந்திரமயமாக்கலை செயல்படுத்தும் மென்பொருள் வழிமுறை) வெளிப்படைத்தன்மை (தொழிலாளர்களைப் பாதிக்கும் முடிவுகளை AI எவ்வாறு எடுக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது) மற்றும் ஒரு சாராருக்கு மட்டும் சார்பாக செயல்படும் தீங்குகளைத் தடுக்க AI அமைப்புகளுக்கான பொறுப்புகளை விவரித்தல், ஆகியவற்றைச் சுற்றியுள்ள விதிகள் ஆகியவை இதில் அடங்கும்.
திறன் மேம்பாடு: தொழிலாளர்கள் வாழ்நாள் முழுவதும் புதிய விஷயங்களை கற்றல் போன்றவற்றை நோக்கிய முயற்சிகள் உட்பட விரிவான பயிற்சி மற்றும் மாற்று திறன் அளிக்கும் திட்டங்களை ஊக்குவித்து பங்கேற்கவும், தொழிலாளர்கள் புதிய வேலைகளுக்கு ஏற்ப, அல்லது AI உடன் திறம்பட வேலை செய்ய இது முக்கியமானது.
நியாயமான மாற்றத்திற்கான ஆதரவு: தானியங்குமயமாக்கல் வேலை இழப்புக்கு வழிவகுக்கும் இடங்களில், தொழிற்சங்கங்கள் வலுவான சமூகப் பாதுகாப்பு வலைகள் மற்றும் மாற்றம் நிகழும் போது தொழிலாளர்களுக்கான ஆதரவைக் கோரி போராட வேண்டும். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் சமூகங்களுக்கு நியாயமான பணிநீக்க இழப்பீடுகள், மறுபயிற்சி வாய்ப்புகள் மற்றும் வேலை வாய்ப்பு உதவி ஆகியவை இதில் அடங்கும்.
அனைவருக்குமான வளர்ச்சியின் பயன்: AI இலிருந்து வரும் உற்பத்தித்திறன் அதிகரிப்பு மூலதன உரிமையாளர்களுக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் பயனளிக்க வேண்டும். சிறந்த ஊதியங்கள், சாத்தியமான வேலை நேரக் குறைப்பு (ஊதிய இழப்பு இல்லாமல்), மேம்பட்ட பணி நிலைமைகள் மற்றும் தானியங்கு மயமாக்கல் மூலம் உருவாகும் அதிக வருவாயை பயன்படுத்தி, நிதி சேகரித்து பொதுச் சேவைகளில் முதலீடு செய்யக் கோரி வாதிடுவதன் மூலம் தொழிலாளர்கள் இந்த வளர்ச்சியால் பயன்பெற தொழிற்சங்கங்கள் போராட வேண்டும்.
பணியிடக் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு: AI ஆனது தொழிலாளர் கண்காணிப்பை புதிய நிலைக்கு கொண்டு செல்கிறது. ஊடுருவும் கண்காணிப்புக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட வேண்டும் மற்றும் AI ஆனது வேலையை நியாயமற்ற முறையில் தீவிரப்படுத்தவோ, தொழிலாளர் சுயாட்சிக்கு பாதகம் ஏற்படுத்தவோ அல்லது பாரபட்சமான முடிவுகளை எடுக்கவோ பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். AI வழியாக சேகரிக்கப்பட்ட தொழிலாளர் தரவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்த தெளிவான விதிகள் தேவை.
கூட்டு பேரம்: தொழிற்சங்கங்கள் AI தொடர்பான சிக்கல்களை நேரடியாக எதிர்கொள்ள தங்கள் கூட்டுபேர உத்திகளை மாற்றியமைக்க வேண்டும். இதன் பொருள், AI அமலாக்கும் செயல்முறைகள், தொழிலாளர் தரவு உரிமைகள், பயிற்சி அளிப்பதற்கான உறுதிகள், வேலைப் பாதுகாப்பு விதிகள் மற்றும் AI -ஐ அறவழியில் பயன்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு ஒப்பந்தங்களில் குறிப்பிட்ட உட்பிரிவுகளில் பேச்சுவார்த்தை நடத்துவது.
AI -ஐ ஜனநாயகப்படுத்துதல்: பணியிடத்தில் AI எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது; உருவாக்கப்படுகிறது மற்றும் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தீர்மானிப்பதில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். தொழிலாளர் நலன்கள் கருத்தில் கொள்ளப்படுவதை உறுதிசெய்ய, தொழில்நுட்ப மதிப்பீட்டு செயல்முறைகளில் பங்கேற்பது மற்றும் ஆலோசனை கூறும் உரிமைகளை வென்றெடுப்பது போன்றவை இதில் அடங்கும்.
முதலாளித்துவத்திற்கு AI உயிர்காக்கும் மருந்தாக இருக்குமா?
நெருக்கடியில் சிக்கியுள்ள முதலாளித்துவ முகாம் ஒரு விசித்திரமான அனுமானத்தின் கீழ் உள்ளது: இயந்திரங்கள் போன்ற பௌதீக சொத்துக்கள் மீதான செலவை அதிகரிக்காமல் AI உற்பத்தித்திறனை அதிகரிக்கும்; அதைத் தொடர்ந்து உழைப்புச் செலவில் சிக்கனம் ஏற்படும்; இதனால் ஒரு பண்டத்தை உற்பத்தி செய்ய குறைவான மனித உழைப்பு தேவைப்பட்டாலும், இலாப விகிதம் உயரும் என்பதே இந்த அனுமானம்.
அவர்கள் தவறவிடுவது என்னவென்றால், தரவு சேமிப்பு மற்றும் இணைய செலவுகளைத் தவிர, AI ஐ இயக்கத் தேவையான கணினி வன்பொருள் அமைப்புகளுக்கு பெரும் செலவாகும். ஏற்கனவே, தரவு சேமிப்பு மையங்கள் உலகின் மின்சாரத்தில் சுமார் 3% ஐப் பயன்படுத்துகின்றன. சிப்களின் உற்பத்திக்கு அதிக அளவு ஆற்றலும் தண்ணீரும் தேவை. ஜிகாபிட் வேகத்திலான இணைய இணைப்புக்கு உலகளாளிவிய ஃபைபர் நெட்வொர்க்குகள் தேவை. AI அறிமுகம் அசையா சொத்துக்களை எளிதாக மலிவாக்குவதற்கு வழிவகுக்காது. இதனால் பொதுவாக இலாப விகிதம் தானாகவே உயராது.
இருப்பினும், ஏகபோக தொழில்நுட்பக் குழுமங்கள் இந்த புதிய தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் இலாப விகிதத்தை மேம்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது, ஆனால் அது தானாக நிகழாது. அதை உறுதிப்படுத்த, தொழிலாளர் வருமானம் மீது மேலும் கீழ்நோக்கிய அழுத்தம் திணிக்கப்படும் மற்றும் வேலையின்மை அதிகரிக்கும்.
முன்னோக்கிய பாதை
ஆனால் நிச்சயமாக, மூலதனத்திற்கான இலாபத்தின் ஒரே ஆதாரமாக உழைப்பு மட்டுமே இருக்கும். அல்காரிதத்தில் தரவை உள்ளிடுவதற்கும் AI க்கு பயிற்சி அளிப்பதற்கும் கூட பணிகளைச் செய்யும் தனிநபர்களான “கிளிக்-தொழிலாளர்கள்” என்று அழைக்கப்படும் கணினிசார் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது ஒரு பெரிய சார்பு உள்ளது. வன்பொருள் முதல் அல்காரிதம் வரை AI மதிப்புச் சங்கிலியின் அனைத்துப் பிரிவுகளிலும், மனித உழைப்பே இன்னும் உந்து சக்தியாக உள்ளது.
இருப்பினும், சமூக அமைப்பைப் பொறுத்தவரை, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை அறிவியல் அடிப்படையிலான மத்திய திட்டமிடலில் பெரிய முன்னேற்றங்களை வழங்க முடியும். இது முன்பு தீர்க்க மிகவும் கடினமாக இருந்த சிக்கல்களைச் சமாளிக்க வழி அளிக்கிறது. AI புரட்சி, மனித உழைப்பு முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் இயந்திரங்களால் மாற்றப்படும் ஒரு சகாப்தத்தில் நாம் நுழைகிறோம் என்பதை வெளிப்படுத்துகிறது. அங்கு அதிக படைப்பாற்றல் சார்ந்த பங்களிப்பிற்கான வாய்ப்பு மனிதகுலத்தின் முன் உருவாகும். அதிக ஓய்வு மற்றும் வாழ்க்கையின் ஆடம்பரத்துடன் கூடிய சமத்துவ சகாப்தம் பிறக்கும். ஆனால் இவை அனைத்திற்கும் அவசியம், பிற்போக்கு முதலாளித்துவ சமூக ஒழுங்கை கடந்து செல்வதுதான். நமது முக்கியப் போராட்டம் அந்த திசையை நோக்கியே உள்ளது.
வேலைகளும், மனித உற்பத்தி அனைத்தும் அனைவருக்கும் உரிமையாக இருக்கும் ஒரு சமூகத்திற்கு AI ஒரு பிரச்சனையல்ல. இன்றைய முதலாளித்துவ கட்டத்தில் உற்பத்தி சக்தியின் வளர்ச்சி இனி இந்த அமைப்புடன் ஒத்துப் போகாது. வரும் நாட்கள் மேலும் சவாலானதாக இருக்கும்; புதிய பாதைகளில் பயணிக்க வேண்டும். இந்த புதிய சூழ்நிலையில் முற்போக்கான முறையில் தலையிட ஆயிரக்கணக்கான வழிகள் இருக்கும். நமது வர்க்கச் சிந்தனை மட்டுமே இந்த நெருக்கடியான கட்டத்தில் நம்மை வழிநடத்த முடியும். வர்க்க ஆர்வத்துடன், நாம் தொழில்துறை சார்ந்த ஆய்வுகளைத் தொடங்கி, வேலை செயல்முறை, பணி நிலை மற்றும் வேலைவாய்ப்பு உறவுகள் மீதான தாக்கத்தையும் அறிய முயற்சிக்க வேண்டும். நம்மைப் போன்ற வர்க்க நோக்குநிலை கொண்ட தொழிற்சங்க இயக்கத்தின் கடமை என்பது, அதிநவீன அறிவைக் கொண்டு நம்மை மேம்படுத்திக் கொள்வதும், இந்த AI புரட்சியை ஒரு கற்பனாவாத வழியில் அல்லாமல், ஓர் அறிவியல்பூர்வமான வழியில் சமூக மாற்றத்திற்கான ஆயுதமாக மாற்றுவதுமே ஆகும்.
தமிழில்: அபிநவ் சூர்யா
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
