
சாதியும் வர்க்கமும்
சீத்தாராம் யெச்சூரி
(சீத்தாராம் யெச்சூரி முதலாண்டு நினைவு தினம்)
கம்யூனிஸ்டுகள் சமுதாயத்தில் உள்ள வர்க்கப் பிரிவினைகளைத்தான் பார்க்கிறார்கள்; சாதிக் கட்டமைப்பு பற்றி கவலைப்படுவதில்லை. இது கம்யூனிஸ்டுகள் மீது சாதிய அமைப்புகள் மற்றும் சில சுயநல சக்திகளின் குற்றச்சாட்டு. கம்யூனிஸ்டுகள் பொருளாதாரப் போராட்டத்திற்கே முக்கியத்துவம் தருகிறார்கள்; சாதீய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு முக்கியத்துவம் தரவில்லை என்று மேலே கூறப்பட்ட குற்றச்சாட்டையே வேறு விதமாகக் கூறுவோரும் உள்ளனர்.
இது உண்மையல்ல. “பொருளாதாரக் கூறுகளே அடிப்படையில் தீர்மானிக்கும் சக்தி படைத்தவை” என்று மார்க்ஸ் கூறியது உண்மைதான். ஆயினும், பொருளாதாரக் கட்டமைப்பில் மாறுதல் நிகழ்ந்தாலும், சமூகத்தில் பழமைக் கண்ணோட்டம் என்பது உடனடியாக நீங்கிவிடாது. இதை, தொடர்ச்சியான தத்துவப் போராட்டத்தின் மூலமே நீக்க முடியும் என்று மார்க்ஸ் – எங்கெல்ஸ் ஆகியோர் பல கட்டங்களில் வலியுறுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.
ஆகவே சாதி அமைப்பைப் பற்றியோ, வர்க்கங்களைப் பற்றியோ எந்திரகதியில் புரிந்து கொள்வதோ, சாதீய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும், வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும், ஒன்றுக்கொன்று எதிராகப் பார்ப்பதோ பயனற்றது; தவறானது என்பதே நமது நிலை. நமது சமூக அமைப்பில் உள்ள “சாதிப் பாகுபாடுகள்” காலங்காலமாக நீடித்துவரும் ஒரு சாபக்கேடாக திகழ்கிறது. 2,500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சாதீய ஒடுக்குமுறையும், பிரிவினையும் இடைப்பட்ட காலத்தில் சில மேம்பாடுகளையும், மாற்றங்களையும் கண்டாலும், அடிப்படையில் அப்படியே நீடிப்பது ஏன் என்பது முதலில் பரிசீலிக்க வேண்டிய கேள்வியாகும்.
முதலாளித்துவ நிலைக்கு முந்தைய அமைப்பான நிலப்பிரபுத்துவ பொருளாதார அடித்தளத்தின்மீது கட்டப்பட்ட கட்டமைப்பே சாதீய முறையாகும். அதாவது, அன்றைக்கு நிலவிய நிலம் சம்பந்தப்பட்ட உறவின் அடிப்படையிலேயே, சாதீய உறவுகள் ஆளும் வர்க்கங்களாலும் அவர்களின் தத்துவகர்த்தாக்களாலும் உருவாக்கப்பட்டது. அந்த நில உறவில் அடிப்படை மாற்றம் நிகழாமல், சாதீய அமைப்பில் அடிப்படை மாற்றம் சாத்தியம் இல்லை என்பதே உண்மை.
இன்றுவரை இந்த சாதீயக் கொடுமைகள் தொடருவதற்கு காரணமான மநு தர்மத்தை முழுமையாக ஆராயவில்லையெனினும் – அதன் அடிப்படையை உணர்ந்துகொள்வது நல்லது. பிராமண, வைசிய, சத்திரியர்கள் என்று முறையே மேல் சாதிகளும், வேதம் ஓதுதல், வியாபாரம் செய்தல், போர் புரிதல் (நாட்டை ஆளுதல்) என்று வேலைப் பிரிவினையையும் செய்த மநுதர்மம், மற்ற பெரும்பான்மை மக்களை, அதாவது, விவசாயம் மற்றும் கைத்தொழில் புரிந்த பெரும்பான்மை உழைப்பாளி மக்களை, அடிமைகள் என்று பறைசாற்றியதும், அவர்களுக்கு என்று சொத்துரிமை ஏதும் கிடையாது; மேலே சொல்லப்பட்ட ஏதாவது ஒரு சாதியினருக்கு தொண்டூழியம் செய்து வாழ்வதே நியமம் என்று அவர்கள் பறைசாற்றியுள்ளதையும் பரிசீலித்தால், நிலப்பிரபுத்துவத்தோடு ஒட்டிப்பிறந்த இந்த சாதீய அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும் எனில், முதலில் நிலப்பிரபுத்துவம் முற்றுமாக ஒழிக்கப்படவேண்டும் என்றும், விவசாயப் புரட்சியின்றி சாதீய அமைப்பு முற்றாக தொலைவதற்கு வழியில்லை என்றும் அறிவது நமது கடமை.
இந்திய சமூகத்தில் உள்ள சாதி அமைப்புகள் பற்றிய இந்த வித்தியாசமான நிலையை நாம் ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. நமது சமூக அமைப்பில், சுரண்டப்படும் மக்களில் பெரும்பாலோர், சமூக ரீதியாக ஒடுக்கப்படும் சாதிகளைச் சேர்ந்தவர்களே. இவர்கள் இரட்டைக் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். எனவே, சுரண்டும் வர்க்கத்துக்கு எதிரான கிளர்ச்சியும், சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான கிளர்ச்சியும் ஒன்றோடொன்று தொடர்புடையதே.
மாற்றமில்லா காலனி ஆட்சி
நமது நாடு பிரிட்டிஷ் ஆளுகைக்குள் அடிமைப்பட்டு கிடந்தபோது, நவீனமயமாக்கம் உருவானபோது, குறிப்பாக, ரயில் போக்குவரத்து நாடு முழுவதும் வலுவாக உருவானபோது, கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட பலரும் “ஏற்பட்டுவரும் புதிய மாற்றங்கள் -பழைய சாதீய அமைப்பைப் பொடிப்பொடியாய் தகர்த்து புதிய வர்க்க அமைப்பு பிறக்கும்’ என்று கருதினர். ஆனால் அது நடைபெறவில்லை.
ஆம்! ரயில்வே, தகவல் தொடர்பு, வளரும் சந்தை முறை, புதிய தொழிற்சாலைகள், வர்த்தகம் ஆகியவை பழைய அமைப்பினை அழிக்கும் போக்கினை வேகப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இது நிகழாததற்கு பிரதான காரணம், காலனி ஆட்சி தனது நலன்களைக் காக்க, இந்திய நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்து கொண்டதே ஆகும்.
பழைய நில உறவுகள் மாற்றமின்றி நீடிக்கவும், சாதீயக் கட்டமைப்புகள் தொடர்வதையும், பிரிட்டிஷ் ஆட்சி ஆதரித்தது. இந்திய முதலாளித்துவம் சக்தி வாய்ந்ததாக வளரக்கூடாது என்ற பிரிட்டனின் தேவையும், அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியச் சந்தையையும், இந்திய கிராமங்களில் இருந்து கிடைக்கும் நில வருவாயையும், உத்தரவாதப்படுத்திக் கொள்ள சாதீய அமைப்புகள் பெரும் மாற்றம் இன்றி தொடர்வதையே பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள் விரும்பினார்கள். ஆகவேதான் இந்தியாவில் நவீன தகவல் தொடர்பு உள்ளிட்ட மாற்றங்கள், கிராமங்களில் அடிப்படை மாற்றங்களை நிகழ்த்தவில்லை. மாறாக, சிறிதளவு மாறுதலோடு பழைய ஏற்பாடே தொடர்ந்தது.
இன்னொருபுறம், காலனி ஆதிக்கத்தை எதிர்த்த விடுதலைப் போராட்டத்துடன் விவசாயப் புரட்சியையும் இணைத்து நடத்திடும் வாய்ப்பு இருந்தது. ஆனால் தேசிய போராட்டத்திற்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் இயக்கமோ, நிலப்பிரபுக்களுடன் சமரசம் செய்து கொள்வதையே தனது கொள்கையாக கொண்டிருந்தது. தீண்டாமை பற்றியும், சாதீய ஒடுக்குமறை பற்றியும் உபதேசங்களே போதுமானது என்று அது கருதியது. சாதி அடக்குமுறையின் ஆணிவேரை ஆராய்ந்து, அதனைப் பிடுங்கியெறிய சுதந்திரப் போராட்டத் தலைமை தயாராக இல்லை. அதற்கான துணிச்சலும் இல்லை. இதனால், நிலப்பிரபுத்துவ விவசாய உறவுகளை அகற்ற, சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் மறுத்தது. இப்படி சாதிய ஒடுக்குமுறையை ஒழிக்காதது மட்டுமின்றி, அதற்கு ஆதரவளிக்கவும், பிற்காலத்தில் அது நீடித்திருக்கவும் அனுமதித்தது.
இதன் விளைவாக, சுதந்திரப் போராட்ட காலத்தில் காலனியாதிக்க எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சி ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதைப்போலவே, சுதந்திர இந்தியாவிலும் விவசாயப் புரட்சியிலிருந்து சாதிக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தின் வளர்ச்சியும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.
சாதிக் கட்டமைப்பு நீடித்திருப்பது பற்றி தெளிவாக புரிந்து கொள்வதற்கு மற்றொரு போக்கையும் நாம் ஆய்ந்தாக வேண்டும். சமூக சீர்திருத்த இயக்கங்கள் பற்றியதே அது. நம் நாட்டில் சாதி எதிர்ப்பு இயக்கத்தை இவை வேகப்படுத்தியதோடன்றி, அந்தந்த காலங்களில் அவ்வியக்கங்கள் கணிசமான அரசியல் செல்வாக்கையும் பெற்றிருந்தது.
இந்த இயக்கங்களை நடத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜோதிபா பூலே. சமயச் சார்பற்ற ஜனநாயகவாதியான ஜோதிபா, தீண்டப்படாதவர் மீது பற்று கொண்டதும், அவர்களுக்கு நியாயம் வழங்கிட விருப்பு கொண்டதும், இதுவரை கேள்வியுறாதது. தனிப்பட்ட முறையில் அவர் சாதிகள் பற்றி சார்பு நிலையற்றவர். “சத்ய சோதல்’ என்ற அவரது இயக்கம் அனைவருக்கும் சம உரிமை தரப்படவேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தது. பொய்மை, அநீதி, போலித்தனம் நிறைந்த இந்துத்துவ நெறிமுறைகளுக்கும், பிராமணர்களின் ஆதிக்கப் போக்கிற்கும் எதிராக இவ்வியக்கம் இருந்தது.
தத்துவார்த்த ரீதியாக ஜோதிபா அவர்களது இயக்கம் சமரசமேதுமின்றி பழைமைவாதத்திற்கும் நிலப்பிரபுத்துவ கட்டமைப்பிற்கும் எதிராக தாக்குதல் நடத்தியது. நிலப்பிரபுத்துவ உறவுகளின் மீதான விவசாயக் கட்டமைப்பின் அடிப்படைதான் சாதிப் பாகுபாடு. எனவே சாதிக் கட்டுமானத்தை தகர்த்திட வேண்டுமெனில் இவ்வுறவுகளை தகர்த்திட வேண்டும் என அவர் வற்புறுத்தினார். ஆனால் சமரசம் செய்து கொள்ளாத ஜோதிபாவின் இயக்கம் அடிப்படையை தகர்த்திடும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. சாதி அடக்குமுறைக்கு எதிராக வலுமிக்க கருத்தோட்டத்தை உருவாக்கியபோதும், சத்ய சோதக் இயக்கத்தால் விவசாயப் புரட்சிக்காக விவசாயிகளை அணிதிரட்ட முடியவில்லை.
அம்பேத்கரின் அனுபவங்களும்கூட இதேபோன்றவைதான். தலித்துக்களின் மிகப்பெரும் போராளியான அவர், உயர்சாதி போலித்தனத்தை தோலுரித்ததோடன்றி, காங்கிரசையும் அதன் கொள்கைகளையும் கடுமையாக சாடினார். ஆயினும், இறுதியில், இந்து சமூகத்தின் அநீதியிலிருந்து தப்பிக்கும் வழியாக, தனது ஆதரவாளர்களை புத்தமதத்தில் இணையச் செய்தார்.
அசமத்துவமான நில உறவு முறைகளின் அடிப்படையில் உள்ள கடுமையான சமூக அமைப்பு, புத்த மதத்தில் இணைவதால் மட்டும் மாறிவிடப் போவதில்லை. சாதிச் சுரண்டலை ஒழிப்பதற்குரிய உறுதியான நடவடிக்கையின் முதல்படியாக, தற்போதுள்ள சமூக – பொருளாதார அமைப்பினை தகர்ப்பதற்கு பதிலாக, கல்வி, வேலையில் ஒதுக்கீடு போன்ற பிரகடனங்களே, இவ்வியக்கத்தினரால் சமத்துவத்திற்கான வழியாக காட்டப்பட்டது. தன்னிகரற்ற தலைவராக அம்பேத்கரும் அவருக்குப் பின்னால் உறுதிமிக்க அணியும் இருந்தபோதிலும், சாதிய அடக்குமுறையின் அடித்தளமான நிலப்பிரபுத்துவ நில உறவு முறைகளை தகர்க்கும் இலக்கு இல்லாததால், இந்த உயரிய நோக்கங்கள் நிறைவேறவில்லை.
பெரியார் ஈ. வே. ரா. தலைமை வகித்த திராவிட இயக்கமும் இதே அனுபவங்களைத்தான் பெற்றது. பெரியாரால் சாதியக் கொடுமைக்கு எதிரான கருத்துக்களை வெற்றிகரமாக உருவாக்க முடிந்தது. தீண்டாமைக்கெதிரான அவரது குரல் ஓங்கி ஒலித்தது. ஆனாலும், முன்னர் நிகழ்ந்ததைப் போலவே, இவரது இயக்கமும், மிருகத்தனமான, அநீதியான சாதிக் கட்டுமானத்தின் பொருளாதார அடித்தளத்தை தாக்குவதற்கு பதிலாக, மேற்கட்டுமானத்தைத்தான் பார்த்தது. அதனால்தான், அது ஒரு கட்டத்தைத் தாண்டி முன்னேறிச் செல்ல முடியவில்லை.
என்னதான் சமரசப் போக்கற்ற தலைவர்களைக் கொண்டிருந்தாலும், சமூக சீர்திருத்த இயக்கங்களால் அவர்களது பிரகடனப்படுத்தப்பட்ட இலக்கை எட்ட முடிவதில்லை. காரணம், அவை விவசாயப் புரட்சிக்கான செயல்பாடுகளை அறிந்தோ அறியாமலோ மேற்கொள்ளாததுதான். அதிகாரத்தை கைப்பற்றும் வேட்கையில், ஒரு பக்கத்தில் ஏகாதிபத்தியத்துடனும், மற்றொரு புறத்தில் நிலப்பிரபுத்துவ சக்திகளுடனும் சமரசம் செய்து கொண்ட ஆளும் வர்க்க அணியில் நிலப்பிரபுத்துவ சக்திகளும் இணைந்து அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொண்டது.
கீழிருந்து பழைய அடிப்படைகளை தகர்ப்பதற்கு பதிலாக, விடுதலைக்குப் பிந்தைய ஆண்டுகளில், வரைமுறைக்குட்பட்ட முதலாளித்துவ முறைகள் விவசாயத்தின் மேல் திணிக்கப்பட்டது. அதுவும், சமூக ரீதியிலான மாற்றங்கள் நிகழ்த்தப்படாமல், ஒரு சில பகுதிகளில் மட்டுமே திணிப்பு நடைபெற்றது. இச்செயலால் அரைகுறை நிலப்பிரபுத்துவ முறைகளான சாதி, வகுப்பு போன்றவை பற்றிய சமூக கண்ணோட்டம் பழைய நிலையில்தான் நீடிக்கிறது. மேலும், நமது நாடாளுமன்ற ஜனநாயகமும் சாதிக் கண்ணோட்டத்தை வலுப்பெற செய்யும் விதத்தில் அமைந்துவிட்டது. எந்த சாதியாயிருப்பினும் சமத்துவத்தை உத்தரவாதப்படுத்துவதற்குப் பதிலாக, நமது தேர்தல் முறை சாதிய கண்ணோட்டத்தை வளர்ப்பதோடு, என்றும் இதேநிலை நீடித்திருக்கும் வகையிலும் இருந்து வருகிறது.
விகிதாச்சார பிரதிநிதித்துவம் பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் சிபாரிசை ஆளும் வர்க்கங்கள் ஏற்க மறுத்து தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது. தனிநபர்களுக்காக இல்லாமல் கட்சிக்காக மக்கள் வாக்களித்தல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் கொண்ட நமது ஆலோசனை ஏற்கப்பட்டிருந்தால், சாதி, மதம், வகுப்பு போன்றவற்றின் பின்னணியில் வாக்களிக்க வேண்டுகோள் விடுப்பது மட்டுப்படும். ஆனால் இது ஆளும் வர்க்கங்களால் நிராகரிக்கப்பட்டதால், நமது தேர்தல் அமைப்பு சாதிய சக்திகளை வலுப்படுத்தவே பயன்படுத்தப்படுகிறது.
அதே சமயத்தில், காங்கிரஸ் கட்சி, வழக்கம்போல் சாதிக் கொடுமையை உதட்டளவில் கண்டிக்கிறது. அடக்குமுறையை வளர்க்கும் வகையில் அமைந்துள்ள பொருளாதார அடித்தளத்தை தாக்குவதற்கு பதிலாக, மக்களை தங்கள் வாழ்வியல் முறைகளை மாற்றிக்கொள்ள, அறிவுரை கூறுகிறது. நிலப்பிரபுத்துவத்துடன் கொண்ட தொடர்பின் விளைவாய், குறைந்தபட்ச நிலச்சீர்திருத்த சட்டங்களை நிறைவேற்றும் திசைவழியில்கூட இந்த முதலாளித்துவம் செல்ல முடியவில்லை. கடந்த காலங்களைப் போலவே இப்போதும் ஜனநாயகப் புரட்சி நடைபெறுவதை இந்த நிலப்பிரபுத்துவ தொடர்பு தடுத்து நிறுத்துகிறது.
தலித் பிரிவில் இருந்து உருவாகும் காங்கிரஸ் தலைவர்களிடமும் இதே போக்குதான் நீடித்திருக்கிறது. இதற்கு சான்றாக ஜெகஜீவன்ராம் தனது அனுபவங்களையும், கருத்துக்களையும் வெளியிட்டுள்ள “இந்தியாவில் சாதி சவால்கள்” என்ற நூலை எடுத்துக்காட்ட முடியும். பெரும்பாலான மற்றைய தலித் தலைவர்களைப் போல், விடுதலைப் போராட்டத்தில் ஜெகஜீவன்ராம் ஒதுங்கி நின்றவரல்ல; விடுதலைப் போரட்டத்தில் தீவிர செயல்பாட்டுடன் பலமுறை சிறை சென்ற அனுபவமும் பெற்ற சிறப்பான தலைவர் அவர். நியாயமான ஆதங்கத்துடன், தலித்துக்கள் மற்றும் ஒடுக்கப்படும் சாதியினரின் நிலையை அவர் நினைவு கூர்கிறார்.
இந்தியாவில் சுரண்டப்படும் வர்க்கங்களின் கிளர்ச்சியுடன் சாதிச் கரண்டலுக்கு எதிரான கிளர்ச்சியையும் இணைத்து நடத்துவதன் மூலம்தான் வெற்றிபெற முடியும் என்பதை அறிவுபூர்வமாக அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த அடிப்படை விஷயத்தை தொடர்ச்சியாக அவர் அந்நூலில் விவாதித்தபோதும், முதலாளித்துவ தலைவருக்குரிய இயல்பான தொனியில், இறுதித் தீர்வை தந்துள்ளார். வர்க்கப் போராட்ட வழியை வெறுத்தொதுக்கும் அவர், மக்களை காந்திய வழியை ஏற்கச் சொல்கிறார். அதாவது, நன்னடத்தையுடன் செயல்படுவது, சாதி அடக்குமுறையை அகற்றி விடும் என்கிறார். பிரச்சனைகளை சரிவர புரிந்துகொண்டு, நிலைபாடுகளை தெள்ளத்தெளிவாய் விளக்கக்கூடிய சுதந்திர இந்தியாவின் புதுயுகத் தலைவர்களும், முன்னாளில் செய்த அதே தவறுகளைத்தான் செய்கிறார்கள். பிரச்சனைகளின் அடிப்படை தீர்வாக, மக்களை அணிதிரட்டி, வீச்சு மிகுந்த விவசாயப் புரட்சியை நடத்தாமல் விலகிச் செல்கிறார்கள்.
இதற்கான தீர்வாக சாதி அமைப்பு முறையின் குறியீடாகத் திகழும் சமூக கொடுமைகளை, அடியோடு அழிக்கக்கூடிய மக்கள் இயக்கத்தைக் கட்ட வேண்டும். ஆனால், இதற்குப் பதிலாக, இப்பிரிவினரின் துன்பங்களுக்கான காரணங்களை ஆழமாக ஆராயாமல், உடனடி வலி நிவாரணியாக உள்ள கல்வி மற்றும் வேலையில் ஒதுக்கீடு சலுகைகள் கேட்கப்படுகிறது.
இச்சலுகைகளால் பெரும்பாலான ஒடுக்கப்படும். மக்களின் வாழ்க்கை நிலையில் மாற்றம் ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்தும் தகவல்கள் ஏராளமாய் குவிந்து கிடக்கும் நிலையில், நிரந்தர தீர்வாக ஒதுக்கீடுகள் சித்தரிக்கப்படுவது வேடிக்கையே. உறவுகளில் அரத்தமுள்ள மாற்றம் ஏதும் நிகழாத நிலையில், இச்சலுகைகளுக்கு ஆதரவளிக்க வேண்டியதுதான். ஆனால் இதுவே தீர்வாகிவிடும் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். இந்த உடனடி வலி நிவாரணங்கள் வறுமை, வேலையின்மை போன்ற பிரச்சனைகளை தீர்க்கப் போவதில்லை) அதேபோன்று (தீண்டத்தகாதவர் மற்றும் கீழ்சாதி மக்களின் வாழ்நிலையை மாற்றப்போவதில்லை) இவை நிச்சயமாக இச்சமூகத்தைச் சார்ந்த சில தனிநபர்களின் துயர் தீர்க்கும். அவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தி முன்னேற வைக்கும். ஆனால் அவர்களது சமூக நிலையை, அந்தஸ்தை மாற்றப்போவதில்லை.
ஆளும் வர்க்கத்தின் நிலைபாட்டிற்கு சலுகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முதலில் வேலை போன்றவற்றிற்கான பொதுவான போட்டியில் உழைப்பாளிகளில் ஒரு பிரிவினரை மற்றொருவருக்கு எதிராக நிறுத்துகிறது. இரண்டாவதாக, சமூகத்தின் ஒரு சில பிரிவினருக்கு இந்த அரசு அவர்களின் உண்மை நண்பன் என்கிற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அச்சமூகத்தைச் சார்ந்தவர்களிடம் முதலாளித்துவ அமைப்பு முறைக்குள்தான் தங்கள் பிரச்சனைக்காக போராட வேண்டும் என்று சொல்லாமல் சொல்லப்படுகிறது. மிகவும் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த சமூக பொருளாதார அமைப்பிற்கெதிராக திரண்டெழுவது தடுக்கப்படுகிறது. விடுதலைப் போராட்ட காலங்களிலும், பின்னர் சுதந்திர இந்தியாவிலும், ஒரு இணையான வளர்ச்சிப்போக்காய் நவீன அரசமுறை உருவாயிற்று. பல்வேறு தேசிய இனங்களைக் கொண்டதாய் அமைந்த இவ் அரசில், நாட்டில் பல்வேறு சாதி, மதம், இனம், பகுதி போன்றவற்றின் பிரதிநிதிகள், புதிய அரசியலில் தங்களது நியாயமான பங்கையும் சமத்துவத்தையும் கோரினர். சுதந்திரத்திற்கு பிந்தைய ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடி ஆழமாகிறது. இதன்விளைவாய், பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாதது மட்டுமின்றி, வித்தியாசங்கள் மலரத் துவங்கின.
இது, பல்வேறு தரப்பினரிடையே தங்கள் பங்கிற்காக முட்டி மோதும் நிலையை ஏற்படுத்தியதோடு, தொடரவும் செய்துள்ளது. எனவே புதிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும், அதற்கு மற்றோர் பிரிவினர் எதிர்ப்பு தெரிவிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
சாதி இயக்கங்கள்
நாட்டில் வளர்த்து வரும் நெருக்கடியின் பின்னணியில் இன்றைய சாதி நிலைபாடுகளை புரிந்துகொள்ள வேண்டும். அதிலும் இரண்டு அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன. விடுதலைக்குப் பிந்தைய வளர்ச்சி எப்படி இருந்தபோதிலும், ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகரீதியாக அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழும் போக்கு அதிகரித்தது. இப்போக்கு சரியானதே. இத்தகைய கிளர்ந்தெழும் உணர்வு இல்லாமல், அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான கிளர்ச்சியை உறுதியாக நடத்த முடியாது. இன்றைய சமூக பொருளாதார அமைப்பிற்கு எதிரான கிளர்ச்சியை இணைக்கும் விதத்தில், கம்யூனிஸ்டுகள் இந்த உணர்வோட்டத்தைப் பேணிக் காப்பதோடு, வலிமைப்படுத்த வேண்டும். (சமூக அடக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சியையும், நவீன வர்க்கச் சுரண்டலுக்கெதிரான கிளர்ச்சியையும் இணைப்பதன் மூலம்தான், விவசாய புரட்சிக்கான போராட்டத்தை வலுப்படுத்தி உச்சநிலையை எட்டமுடியும்).
இன்றைய சாதி நிலைபாட்டில் உள்ள மற்றோர் அம்சத்தையும் பார்க்க வேண்டும். அந்தந்த சாதி எல்லைக்குள்ளேயே அவரவர் சாதி பற்றிய உணர்வுகளை தூண்டிவிடும் போக்கு உள்ளது. இந்த தலைவர்கள் சாதிகளுக்குள்ளேயே புகலிடம் தேடுகிறார்கள். இத்தகைய போக்கு முன்னதாக நாம் விவாதித்த செயல்களுக்கு மாறுபட்டதல்ல. நடைமுறையில் இருக்கும் விவசாய அமைப்பு முறைக்கெதிராக கிளர்ந்தெழாமல், சாதி உணர்வுகளை தட்டி எழுப்புகிறார்கள். இந்த தலைவர்கள் அடித்தளத்தை அசைக்காது, மேல்கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்று அறைகூவலும் விடுக்கிறார்கள்.
பிரச்சனைகளுக்கான சரியான தீர்வை நோக்கி செல்வதற்குப் பதில், இத்தலைவர்கள், இப்படி தனித்தனியாக தலித்துகளையும் பிற்படுத்தப்பட்ட மக்களையும் அணிசேர்ப்பது, அவர்களது அரசியல் வாழ்விற்கான வாக்கு வங்கிகளை உருவாக்கத்தான் பயன்படுகிறது; அம்மக்களின் வாழ்வை வளப்படுத்த அல்ல!
தற்போதைய சமூக பொருளாதார அமைப்பிற்கெதிரான, பொதுக்கிளர்ச்சியை உருவாக்க, சாதித் தலைவர்கள் தத்தம் மக்களுக்கு அறைகூவல் விடுப்பதில்லை. மாறாக, தங்களது உடன்பிறப்புகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வாக்களிக்க கோருகிறார்கள். இன்றைய சமூக பொருளாதார அமைப்பைப் பாதுகாக்கக் கூடிய அதிகார அமைப்பை தேர்தல் முறையில் கைப்பற்றுவதன் மூலம், அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்து விட முடியுமென்ற மாயத்தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது அதிகார வேட்கை கொண்ட தலைவர்களது பசியைத் தவிர்க்கலாம். ஆனால் பெரும்பாலான மக்களின் வாழ்நிலையை உயர்த்தாது. அவர்களை எப்போதும்போல் பின்தங்கிய நிலையில்தான் இருக்கச் செய்யும்.
பீகாரிலும், உத்தரப்பிரதேசத்திலும் ஆட்சியை கைப்பற்றிய அரசாங்கங்களின் அனுபவங்கள் இதைத்தான் காட்டுகிறது. இந்த அரசுகள், எழுத்தில் இருக்கின்ற நிலச்சீர்திருத்த சட்டங்களை அமுல்படுத்தும் முயற்சியையே தொடங்கவில்லை. ஆனால், இச்சீர்திருத்தங்களை இடதுமுன்னணி அரசாங்கம் மேற்குவங்கத்தில் அமுல்படுத்திவிட்டது. தற்போதைய சமூக பொருளாதார அமைப்பின் அடித்தளமான வலுவான சுரண்டல் நீடித்திருக்கும் வகையில், சாதி தலைவர்கள் சமூகரீதியாக ஒடுக்கப்படும் மக்களின் வளர்ந்து வரும் உணர்வோட்டத்தை, தங்களின் சுயநலத்துக்கு தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இருப்பினும், ஒடுக்கப்படும் மக்களில் ஒரு கணிசமான பிரிவினர், அவர்களது தலைவர்களின் வாய்வார்த்தைக்கு செவிசாய்க்கிறார்கள். தற்போது சாதிக்குள் ஒற்றுமை எனும் கோஷம் மேலோங்கியுள்ளது குறித்தும் நாம் புரிந்துகொண்டாக வேண்டும். மேல்சாதியினரின் வன்முறைக்கு எதிராக எதிர்ப்பையும், தற்காப்பையும் தரவல்ல ஒரேவழி சாதிக்குள் ஒற்றுமைதான் என்று அவர்கள் கருதுகிறார்கள். குறிப்பாக தலித்துக்களிடம் இந்தப் போக்கு பரவலாக உள்ளது. பொதுவான அடக்குமுறையின் விளைவாக அடிமைப்பட்டுக் கிடக்கும் உணர்வின் அடிப்படையில் இவர்கள் ஒன்றுபடுகிறார்கள்.
உயர்சாதியினர் இறுமாப்புடன் கூறுவதைப்போல், இந்த ஒன்றிணைப்பு கல்வி மற்றும் நாகரீகக் குறைபாட்டின் விளைவாய் ஏற்பட்டதல்ல. பல்வேறு வழிகளிலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் மக்கள், தங்கள் பாதுகாப்புக்கான கட்டாயத் தேவையின் அடிப்படையில்தான் இந்த ஒன்றிணைப்பு உருவாகியுள்ளது.
கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு இதுபற்றி ஏராளமான அனுபவங்கள் உண்டு செங்கொடியின் கீழ் பொருளாதார கோரிக்கைகளுக்கான போராட்டங்களில், பிற்படுத்தப்பட்ட மக்கள் போலீசின் கொடூரமான அடக்குமுறையை துணிச்சலுடன் எதிர்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேர்தல் என்று வந்துவிட்டால், அவர்கள் சமூகம், உறவுக் கண்ணோட்டம், சாதித் தொடர்புகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் வாக்களிக்க விரும்புகிறார்கள். சாதித் தலைவர்கள், தங்களது தேர்தல் கால சுயநலனுக்காக, சமூக உணர்வுகளின் இத்தகைய தன்மையை பாதுகாத்து வருகிறார்கள்.
இத்தகைய நடவடிக்கைகளின் விளைவாக, நவீன வர்க்க சுரண்டலுக்கு எதிரான கிளர்ச்சியை ஒதுக்கித்தள்ளும் போக்கு நிலவுகிறது. சமூக பொருளாதாரக் கட்டமைப்பிற்கு எதிராக, உழைப்பாளி மக்களின் ஒற்றுமையை பலப்படுத்துவதற்கு பதிலாக, அவர்கள் இந்த இரண்டு போராட்டங்களையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கிறார்கள். சாதித் தலைவர்களின் இச்செயல்களால், அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ள மக்களின் ஒற்றுமை நிலைகுலைகிறது.
சமூக கொடுமைகளுக்கு எதிரான கிளர்ச்சியையும், பொருளாதார சுரண்டலுக்கு எதிரான கிளர்ச்சியையும் ஒன்றிணைக்க வேண்டிய பணி கம்யூனிஸ்டுகளின் முன்பாக உள்ளது. இந்த ஒரு வழியில்தான் அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் உட்படுத்தப்பட்ட நமது கோடானுகோடி சகோதர, சகோதரிகளை முழுமையாக விடுதலை பெறச்செய்ய முடியும்.(1999ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் யெச்சூரி ஆற்றிய உரையி
You may also like
7 comments
Comments are closed.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

மிக சிறப்பு… பிரமிக்க வைக்கிறது. கற்றலைவிட கேட்டலே நன்று என்பதைப்போல் படிக்கத் தெரியாதவர்கள்கூட கேட்டறியலாம் தோழர்… வாழ்த்துக்கள்!
இட ஒதுக்கீடு, தீண்டாமைக்கு எதிரான போராட்டம் போன்றவை தற்காலிக தீர்வு.. சாதிய வாதமும், சாதியக் கட்சிகளும் உழைக்கும் வர்க்கத்தினரையும்,, அதே சாதிப் பிரிவைச் சேர்ந்த சுரண்டும் வர்க்கத்தினரையும் ஒரே நேர்கோட்டில் சில தருணங்களில் நிறுத்திவிடுகின்றன. வர்க்கம் எனும் கருத்தினம் சாதி எனும் கருத்தினத்தை விட வலி மையமானது . வர்க்க அமைப்புகளில் உழைக்கும் வர்க்கத்தினர் அனைவரையும் இணைத்து போராடுவதே தீர்வு. சிறப்பான உரை.
பயனுள்ள அருமையான கட்டுரைகள்
வாழ்த்துக்கள்
Verynice
சிறப்பு
அருமையான உரை