COP28 – படிம எரிபொருள் பயன்பாடுகளும், சவால்களும்
பேரா. டி. ஜெயராமன்
2023 ஆம் ஆண்டு நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை COP28 மாநாடு துபாயில் நடைபெற்றது. இது உலக வெப்பமயமாதலில் இருந்து வரும் ஆபத்துக்களை எப்படி சந்திப்பது என்பது குறித்து அனைத்து நாடுகளும் இணைந்து நடத்திய மாநாடு.
உலக வெப்பமயமாதலை தடுக்க 1992ஆம் ஆண்டு 192 க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து செய்துகொண்ட ஒரு ஒப்பந்தம்தான், காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு என்றறியப்படுகிறது. (United Nations Framework Convention on Climate Change)
1995இல் இருந்து இந்தப் பேரவை ஒவ்வொரு வருடமும் காப் (COP) மாநாடு நடத்துகிறது. காப் என்பது ஆங்கிலத்தில் உள்ள Conference of Parties என்பதின் சுருக்கமாகும். சட்ட மொழியில் பார்ட்டி என்பது உடன்படிக்கையில் கையொப்பமிட்டவர்களைக் குறிக்கிறது. இங்கு அந்த சொல் 197 நாடுகளைக் குறிக்கிறது.
காப் மாநாட்டில் அனைத்து நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். இது புவி வெப்பமயமாதலைத் தவிர்ப்பதற்கு உலகளாவிய அளவில் முடிவுகள் எடுக்கும் ஓர் உயர்மட்ட அமைப்பாகும். ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்த மாநாட்டில்தான், சூழல் சார்ந்து நாடுகள் எடுக்க வேண்டிய திசைவழியை தீர்மானிக்கும்.
ஒருங்கிணைப்புடன் செயல்படுவது
நாடுகள் தங்களின் உணவு, விவசாயம், மருத்துவம், எரிபொருள், தொலைத்தொடர்பு, வான் போக்குவரத்து என பல்வேறு தேவைகளுக்கும், சர்வதேச அளவிலான ஒருங்கிணைப்புடன் செயல்படுவதென்பது உலகமயமாக்கலில் தவிர்க்க இயலாததாக மாறியுள்ள சூழலில், காலநிலை மாற்றம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாண அதுபோன்ற ஒரு ஒருங்கிணைப்பென்பது இன்றியமையாதது. இது போன்ற நடவடிக்கைள் தேவையில்லை என்பது அர்த்தமற்றது என்றும் சிலர் கருதுகிறார்கள். இது அறியாமை மட்டுமல்ல; தவறான முடிவுமாகும்..
பசுமை இல்ல வாயுக்கள்(greenhouse gases) வளி மண்டலத்தில் இருப்பது என்பது பூமியின் தட்ப வெட்ப நிலைகள் சரியான அளவிற்கு இருப்பதற்கு அவசியம். பசுமை இல்ல வாய்க்கள் வளிமண்டலத்தில் இல்லாதிருந்தால் பூமியில் உயிரினங்கள் இருப்பதே கடினம். வரம்பு மீறி அதிக அளவில் பசுமை இல்ல வாயுக்கள் வளிமண்டலத்தில் இருப்பதுதான் இங்கு பிரச்சனைக்குரியதாகிறது.
பல பசுமை இல்ல வாயுக்கள் பூமியில் இருந்தாலும் கார்பன் டை ஆக்ஸைடுதான் அவற்றில் மிக முக்கியமானது. இயற்கையிலேயே கார்பன் டை ஆக்ஸைடு உமிழப்படுவதும் உட்கிரகிக்கப்படுவதும் பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இது கார்பன் சுழற்சி என்று அறியப் படுகிறது. கார்பன் டை ஆக்ஸைடின் அளவு குறிப்பிட்ட வரம்பிற்குள் இருந்தால்தான் பூமிக்கு நல்லது.
கடந்த 200 ஆண்டுகளாக நடந்த அறிவியல் புரட்சி மற்றும் தொழிற்புரட்சி காரணமாக இந்த வரம்பைத் தாண்டி மிக அதிக அளவில் கார்பன் டை ஆக்ஸைடு உமிழப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிக அளவில் உமிழப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது மனிதர்களின் செயல்பாட்டால் விளைவது.
தீர்வை எட்டுவதில் உள்ள முரண்பாடு
அறிவியல் மூலமும் தொழில் நுட்பம் மூலமும் நாம் மகத்தான பயன்களைப் பெற்றுள்ளோம். இவை பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்தது. இந்தப் பயன்பாடுகளுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் படிம எரிபொருள்களை (fossil fuel) எரிப்பதன் மூலம் கிடைக்கும் ஆற்றலுக்கு முக்கியமான பங்கு உண்டு. ஆனால் படிம எரிபொருள்களை அதிகமாக எரிப்பது பசுமை இல்ல உமிழ்வை அதிகரித்து, அதன் மூலம் புவி வெப்பமடைதலை அதிகரிக்கிறது. ஒரு புறம் புவி வெப்பமயமாதலைத் தவிர்ப்பதற்காக படிம எரிபொருள்கள் எரிப்பதைக் கட்டுப்படுத்த முயன்றால் வளர்ச்சி பாதிக்கப்படும். மறுபுறம் வளர்ச்சியை மையப்படுத்தி கட்டுப்பாடில்லாமல் படிம எரிபொருள் எரித்தால் புவி வெப்பமடைதலை நிறுத்த முடியாது. இந்த முரண்பாடுதான் புவிவெப்பமடைவதைத் தவிர்ப்ப்பதற்கான தீர்வு காண்பதில் வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்குமிடயே இருக்கும் முரண்பாட்டை பிரதிபலிக்கிறது. இதனால்தான் ஒவ்வொரு காப் மாநாட்டிலும் இரவு பகலாய் கடும் வாதங்களும் இறுதி அறிக்கையில் என்ன விதமான சொற்கள் அல்லது சொல்லாடல்கள் பயன்படுத்தப் பட வேண்டும் என்பதற்காக மிகக் கடினமான பேச்சு வார்த்தையும் நடக்கின்றன.
பின்னணிக் கருத்துக்கள்
காப் 28 மாநாட்டில் எட்டப்பட்ட முடிவுகளைப் புரிந்து கொள்வதற்கு சில பின்னணிக் கருத்துக்கள் தேவை. கடந்த 15 ஆண்டுகளில், நமக்கு கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் படிம எரிபொருள்களின் பயன்பாட்டைப் பற்றி மிக தீர்மானகரமாக ஒரு முடிவுக்கு வரமுடியும். அது, புவி வெப்பமயமாதலுக்கும் மற்றும் மனித செயல்பாடுகளால் வெளியிடப்படும் CO2 மற்றும் பிற பசுமையில்ல வாயுக்களுக்கும் உள்ள நேரடி தொடர்பாகும். தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலையை விட இப்போது புவியின் சராசரி வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. ஏனெனில் தொழிற்புரட்சிக்கு பிந்தைய காலகட்டங்களில் வெப்பநிலை உயர தொடங்கியது. மேலும் புவியின் வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் அல்லது 2 டிகிரி செல்சியஸ்க்குள் உயராமல் தடுக்கவேண்டுமெனில் CO2 உமிழ்வினை கட்டுப்படுத்த வேண்டும்.
புவியின் வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் அல்லது 2 டிகிரி செல்சியஸ்க்குள் உயராமல் இருப்பதற்கு குறிப்பிட்ட காலத்தில் (பொதுவாக 1850 முதல்) அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவிலான கார்பன் உமிழ்வினை “கார்பன் பட்ஜெட்” என்று அழைக்கிறார்கள்.(ஒரு வருடத்திற்கு அதிகபட்சமாக கார்பன் உமிழ்வதைக் குறிக்கும் வரம்பல்ல. பல வருட கால உமிழ்வின் கூட்டுத்தொகை)
புவியின் வெப்பநிலை உயர்வினை 1.5 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலை அளவுக்குள் கட்டுப்படுத்தவென தீர்மானிக்கப்பட்ட கார்பன் பட்ஜெட் இதுவரை 5இல் 4 பங்கு ஏற்கனவே உமிழப்பட்டு விட்டது..
1850 ஆம் ஆண்டு முதல் 1990 வரை உமிழப்பட்ட ஒட்டுமொத்த பசுமை வாயு அளவில் ( அனைத்து பசுமை வாயு உமிழ்வையும் CO2 அலகில் கூறுவது ) வளர்ந்த நாடுகள் மட்டும் சேர்ந்து வெளியிட்ட CO2 அளவு 71%. இதர நாடுகள் அனைத்தும் சேர்ந்து வெளியிட்ட CO2 உமிழ்வின் அளவு 29%. 1991 ஆம் ஆண்டு முதல் 2018 வரை வளர்ந்த நாடுகள் உமிழ்ந்த CO2 அளவு 46%, வளரும் நாடுகள் வெளியிட்ட அளவு 54%. இங்கு நாம் உன்னிப்பாக கவனிக்கவேண்டிய விஷயம், இன்று உலக மக்கள் தொகையில் வளர்ந்த நாடுகளின் ஒட்டுமொத்த சதவிகிதம் 18%. வளரும் நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகை 82% என்பது குறிப்பிடத்தக்கது. சராசரியாக கணக்கிட்டால் உலகில் 18% பேர் 56% கார்பன் உமிழ்விற்கு காரணமாயுள்ளனர். உலக மக்கள்தொகையில் சராசரியாக 5% உள்ள அமெரிக்கா மட்டும் 25% கார்பன் உமிழ்விற்கு பங்களித்துள்ளது. ஒருவகையில் கணக்கிட்டோமேயானால், வளர்ந்த நாடுகள் உலகின் மற்ற நாடுகளுக்கு 30 டிரில்லியன் டாலர் கடன்பட்டுள்ளது என கூறவேண்டும்.
மற்றொரு பதம் உபயோகப்படுத்தப்படுவது யாதெனில், “நிகர பூஜ்ஜியம்” (Net Zero). இது குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் CO2 உமிழ்வினையும் உட்கிரகித்தலுக்குமிடையேயான சமநிலைக்கு கொண்டுவருதல். அதாவது உற்பத்தி செய்யப்படும் பசுமையில்ல வாயு (GHG) மற்றும் வளிமண்டலத்தில் இருந்து அகற்றப்படும் அளவு ஆகியவற்றுக்கு இடையே உள்ள சமநிலை. இன்றைய தேதியில், இந்த நிகர புஜ்ஜியத்தை அடைய வளர்ந்த நாடுகள் 2050 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றி விடுவோம் என வாக்குறுதி கொடுத்துள்ளனர். இதற்குள் அவர்கள் மீதமுள்ள உலகளாவிய கார்பன் பட்ஜெட்டில் 25% பூர்த்திசெய்து விடுவார்கள். இந்தியா அதனை 2070 ஆம் ஆண்டுக்குள் அடைவதாக கூறியுள்ளது. குறிப்பாக கூறப்படுவது என்னவெனில், உலகின் அனைத்து நாடுகளும் 2025 ஆம் ஆண்டுக்குள் அவர்களது GHG உமிழ்வினை கட்டாயமாக குறைக்க வேண்டும்.
மேலும் 2019ஆம் ஆண்டை ஒப்பீட்டாண்டாக எடுத்துக் கொண்டால், அந்த ஆண்டில் உமிழப்பட்ட பசுமை இல்ல வாயுக்களின் அளவின் 43% என்ற அளவிற்கு 2030 ஆண்டுக்குள் உமிழ்வைக் குறைக்க வேண்டும் என COP மாநாட்டிற்கு முன்னரே கணிக்கப்பட்டது. அது நடந்தால்தான் 1.5 டிகிரி செல்ஸியஸ் இலக்கை அடைய முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த 43% என்பது பல கணித மாடல்களின் இடைநிலை (median) எண்ணாகும். நானும் எனது சக ஆராய்ச்சியாளர்களும் இந்த மாடல்களை ஆராய்ந்ததில் சில விஷயங்கள் நியாயமில்லாமல் இருப்பதைக் கண்டோம்.
திறன்களும் பொறுப்புகளும்
காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பில் (UNFCCC) ஈக்விட்டி (equity) என்ற கருத்தும் CBDR –RR (Common but differentiated Responsibilities – Respective Capabilities) என்ற கருத்தும் முதலில் இருந்து ஒப்புக்கொள்ளப் பட்டன. இவற்றின் சாரம்சம் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளின் தன்மை வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறானவை என்று உணர்வதும், பாதிப்புகளுக்கான நிவாரணங்களை நியாயமான முறையில் பங்கிடுவதும், காலநிலை மாற்றத்தை நிவர்த்திப்பதில் தனிப்பட்ட நாடுகளின் வெவ்வேறு திறன்கள் மற்றும் வெவ்வேறு பொறுப்புகளும் உள்ளன என்று ஒப்புக்கொள்வதுமாகும். இந்தக் கருத்துக்கள் இந்த மாடல்களில் பிரதிபலிக்கப்படவில்லை. இதன் விளைவு, புவி வெப்பமடைதலை தணிப்பதற்கு (mitigation) உலக நாடுகள் ஒவ்வொன்றும் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும்போது, வளர்ந்து வரும் நாடுகள் எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் குறைப்பது, அதாவது, தங்கள் வளர்ச்சியைப் பாதிக்கும் என்றபோதும் அதை செய்ய வேண்டும் என்பதாகும்.
இந்த மாடல்களில் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதில் வளர்ந்த நாடுகளுக்கும் வளராத நாடுகளுக்குமிடையே பங்கிடும் வகையும் நியாயமற்றது. இது குறிப்பிட்ட பொருளாதார மற்றும் அரசியல் சிந்தனைகளைப் பிரதிபலிக்கிறது. இது காலநிலை அறிவியலில் உள்ள அரசியலாகும். இந்த மாடல்களில் கூறும் முடிவுகள் வளரும் நாடுகளை பெரிதும் பாதிக்கக்கூடியன. எடுத்துக்காட்டாக கூறவேண்டுமானால், SSA (Sub Saharan Africa) நாடுகள் இந்தப் பத்தாண்டுகாலத்தில் 80% உமிழ்வினை குறைக்க வேண்டும் என்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குறைக்க வேண்டிய 50% அளவினை விட மிக அதிகம்.. ஆண்டுக்கு, 8 ஆப்பிரிக்க நாடுகளின் சராசரி தனிநபர் ஆற்றல் பயன்பாடு என்பது, அமெரிக்க நாட்டில் உள்ள ஒரு குளிர்சாதனப்பெட்டியின் சராசரி ஆற்றல் நுகர்வுக்குக் கீழே என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. உலக மக்கள் தொகையில் 50% பேரால் ஏற்படும் உமிழ்வு என்பது வெறும் 15%. அவர்களில் பெரும்பான்மையானோர் ஒரு நாளைக்கு 3 டாலருக்கும் குறைவாக ஊதியம் பெறக்கூடியவர்கள். இந்த மாடல்களின் படி போனால் SSA (Sub Saharan Africa) நாடுகளில் உணவுப் பாதுகாப்பு குலையும். ஏழ்மை அதிகமாகும்.
காப் 28 மாநாடு
இந்தப் பின்னணியில்தான் காப் 28 மாநாட்டில் நடந்த விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
காப் 28யின் ஒரு முக்கியமான நிகழ்வு உலகளாவிய ஸ்டாக்டேக்கிங் (Global Stocktaking அல்லது GST) ஆகும்.இங்கு ஜிஎஸ்டி என்பது புவிவெப்பமயமாதலைத் தவிர்ப்பதற்காக பாரிஸ் மாநாட்டில் ( காப் 21; 2015) என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டவை எந்த அளவிற்கு அமுல் படுத்தப்பட்டிருக்கின்றன என்றும், என்ன குறைபாடுகள் உள்ளன என்றும், மற்றும் மேற்கொண்டு செய்ய வேண்டியதும் குறித்த மறு சீராய்வு.
ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு மற்றும் பாரிஸ் உடன்படிக்கையில் இருந்த லட்சியங்களும் விழுமியங்களும் பெரிய அளவில் ஜிஎஸ்டி அறிக்கையில் மாற்றப்படவில்லை
புவிவெப்பமயமாதலைத் தவிர்க்கும் நடவடிக்கைகளில் ஈக்விட்டி என்ற கருத்தும் வெவ்வேறு நாடுகளுக்கான பங்கில் வேறுபட்ட அளவில் இருக்க வேண்டும் (வளரும் நாடுகளை விட வளர்ந்த நாடுகளின் பொறுப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்பதே இதன் சாராம்சம்) என்ற கருத்தில் இருந்த வலியுறுத்தலும் குறையவில்லை.
1.5 டிகிரி செல்சியஸ் வரம்பிற்கான பசும் இல்ல வாயுக்கள் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் கார்பன் பட்ஜட்டில் ஐந்தில் நான்கு பங்குகள் உமிழப்பட்டுவிட்டன என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.
1.5 டிகிரி செல்சியஸ் வரம்பை சிறிய மீறல் கூட இல்லாமல் எட்டுவதற்கு மிக அதிக அளவில் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதற்காக ஒப்பீட்டளவில் 2019ஆம் ஆண்டிற்கான கார்பன் உமிழ்வின் 43% என்ற அளவிற்கு 2030க்குள் அளவிற்கு குறைக்கப் பட வேண்டும் என்றும், 2050இல் நிகர பூஜ்ஜிய கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வை எட்ட வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப் பட்டன.
50களிலேயே எண்ணெய் மற்றும் எரிவாயு (அதிக செயல்திறன் (efficiency) உள்ள எரிபொருள்கள் என்ற காரணத்தால்) பயன்பாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மாறின. ஆனால் அவற்றின் பயன்பாடு புவி வெப்ப மயமாதலை விரைவுபடுத்தின. எண்ணெய் மற்றும் எரிவாயு பயன்பட்டால் ஏற்படும் வெப்பமயமாதல் என்பது நிலக்கரி உபயோகத்தைவிட அதிகமாக உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. காப் 28 மாநாட்டில் இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளில் மீண்டும் மீண்டும் புதுப்பிக்க கூடிய ஆற்றலின் ( renewable energy )பயன்பாட்டை மூன்று மடங்காக்குவது. இது எந்த அளவிற்கு புவிவெப்பமாயலைத் தடுப்பதில் பங்களிக்கும் என்று தெரியவில்லை. புவி வெப்பமயமாதலை தடுக்கும் மாற்றுவழிகளுள் முக்கியமானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகள் தங்களின் படிம எரிபொருள் திறனை முற்றிலுமாக குறைத்து, மாற்று எரிபொருள் உபயோகத்திற்கு செல்லவேண்டும். இதுவே நியாயமான பங்கீடாக இருக்க முடியும். இந்தியா 2070 ஆம் ஆண்டுக்குள் 500GW திறன் அளவிற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டிற்கு மாறிச்செல்ல தீர்மானித்துள்ளது. ஆனால் அமெரிக்கா இதுவரை அதுபோன்ற எந்த ஒரு குறிக்கோளையும் தீர்மானித்து கூறவில்லை.
சொல்லாடல்களுடன் கூடிய முடிவுகள்
படிம எரிபொருள் பயன்பாட்டை குறைக்க மேலும் சில முன்மொழிவுகள் COP28 மாநாட்டில் வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று, படிப்படியாக மீத்தேன் பயன்பாட்டை 2030குள் குறைப்பது. இது இந்தியாவை மிகவும் பாதிக்கும். மீத்தேன்(CH4) 20 ஆண்டுகளே வளிமண்டலத்தில் நிலைத்திருக்கக்கூடியது. மீத்தேன் படிம எரிபொருள்களில் இருந்து உமிழப்படுவதில்லை, மாறாக விவசாய செயல்பாடுகளாலும் கால்நடைகள் மூலமும் வெளிவரக்கூடியவை. வெப்பமயமாதலுக்கு அவையும் பங்களிக்கின்றன என்றாலும் அவற்றின் பங்கு கார்பன் டை ஆக்ஸைடின் பங்கை விடக் குறைவு. ஆகவே CO2 உடன் ஒப்பிட்டு CH4 பயன்பாட்டை குறைக்க வற்புறுத்துவதென்பது முற்றிலும் தவறான புரிதல். இதுபோன்ற முடிவுகள் வளரும் நாடுகளை கடுமையாக பாதிக்கக்கூடியதும், உண்மையான பிரச்சனையில் இருந்து திசை திருப்புவதுமாகும்.
படிம எரிம வாயுக்களைப் பற்றி காப்28 இல் எடுக்கப்பட்ட இறுதி முடிவுகளின் வடிவம் கீழே கொடுக்கப் பட்டுள்ளன. இவை கடினமான பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு பல சட்ட நுணுக்கமான சொல்லாடல்களுடன் கூடிய முடிவுகள் ஆகும்.
1.5 டிகிரி செல்சியஸ் பாதைகளுக்கு ஏற்ப பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் ஆழமான, விரைவான மற்றும் நீடித்த குறைப்புகளின் அவசியத்தை மேலும் அங்கீகரித்து, பாரிஸ் ஒப்பந்தம் வெவ்வேறு தேசிய சூழ்நிலைகள், வழிமுறைகள் (pathways) மற்றும் அணுகுமுறைகள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு, தேசிய அளவில் உறுதியான முறையில் பின்வரும் உலகளாவிய முயற்சிகளுக்கு பங்களிக்க கட்சிகளுக்கு (அனைத்து நாடுகளுக்கும்) அழைப்பு விடுக்கிறது.:
(அ) உலகளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை மூன்று மடங்காக உயர்த்துதல் மற்றும் 2030க்குள் உலகளாவிய சராசரி ஆண்டு ஆற்றல் திறன் மேம்பாடுகளின் வீதத்தை இரட்டிப்பாக்குதல்;
(ஆ) தடையற்ற நிலக்கரி சக்தியின் பயன்பாட்டை பல கட்டமாக குறைப்பதற்கான முயற்சிகளை துரிதப்படுத்துதல்;
(இ) இந்த நூற்றாண்டுக்கு முன்னரோ அல்லது நடுப்பகுதியிலோ பூஜ்ஜிய மற்றும் குறைந்த கார்பன் எரிபொருட்களைப் பயன்படுத்தி நிகர பூஜ்ஜிய உமிழ்வு ஆற்றல் அமைப்புகளை நோக்கி உலகளவில் முயற்சிகளை துரிதப்படுத்துதல்.
(ஈ) எரிசக்தி அமைப்புகளில் புதைபடிவ எரிபொருட்கள் என்ற நிலையிலிருந்து படிப்படியாக நிலை மாறி (transition), நியாயமான, ஒழுங்கான மற்றும் அனைவருக்கும் சமத்துவமான (equitable) முறையில், அறிவியலுக்கு ஏற்ப 2050க்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைவது என்பதை நோக்கி இந்த முக்கியமான தசாப்தத்தில் நடவடிக்கையை துரிதப்படுத்துவது.
(உ) கார்பன் பிடிப்பு (carbon capture) மற்றும் பயன்பாடு மற்றும் சேமிப்பு, குறிப்பாக கடினமான-குறைப்புத் துறைகள் மற்றும் குறைந்த கார்பன் ஹைட்ரஜன் உற்பத்தி ஆகிய கார்பன் குறைப்பு மற்றும் நீக்குதல் தொழில்நுட்பங்களையும் புதுப்பிக்கத்தக்கவை, அணுசக்தி உள்ளடக்கி பூஜ்ஜிய மற்றும் குறைந்த உமிழ்வுத் தொழில்நுட்பங்களையும் முடுக்கிவிடுதல்
(ஊ) 2030 ஆம் ஆண்டளவில்ம் குறிப்பாக மீத்தேன் வெளியேற்றம் உட்பட, உலகளவில் கார்பன்-டை-ஆக்சைடு அல்லாத வெளியேற்றத்தை துரிதப்படுத்துதல் மற்றும் கணிசமாகக் குறைத்தல்;
(ஐ) உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் பூஜ்ஜிய மற்றும் குறைந்த மாசு உமிழ்வு வாகனங்களை விரைவாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பாதைகளில் சாலைப் போக்குவரத்தில் இருந்து வெளியேற்றப்படும் உமிழ்வைக் குறைப்பதை துரிதப்படுத்துதல்;
(ஒ) ஆற்றல் வறுமை அல்லது மாற்றங்களைச் சமாளிக்காத திறனற்ற புதைபடிவ எரிபொருள் மானியங்களை விரைவில் நிறுத்துதல்;
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது காப் 28இல் ஒப்புக்கொள்ளப்பட்ட முடிவுகள் நம்முடைய விருப்பங்களிலிருந்து அதிகமான தூரத்திலிருந்தாலும், அவை முற்றிலும் மோசமானவை அல்ல. பெரும்பாலும் பாரிஸ் உடன்படிக்கையை ஒட்டியே இருந்தன.
அனைத்து நாடுகளும் பாரிஸ் உடன்படிக்கையின் கீழ், நவம்பர் 2024-மார்ச் 2025க்குள், COP 30 க்கு 9 முதல் 12 மாதங்களுக்கு முன்பு தங்கள் திருத்தப்பட்ட தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை ( NDC- Nationally determined contribution) சமர்ப்பிக்க வேண்டும்
அடுத்து வரும் காலங்களில் விஞ்ஞானிகளின் அறிக்கைகள், ஊடகப் பிரச்சாரம் போன்றவற்றின் மூலம் புவி வெப்பமயமாவதை தணிக்கும் (mitigation) நியாயமற்ற சுமைகளுக்காக வளரும் நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதுதான் வளர்ந்த நாடுகளின் ஜிஎஸ்டிக்குப் பிந்தைய நிகழ்ச்சி நிரலாக இருக்கும்.
NDC களில் துறை சார்ந்த, எரிவாயு சார்ந்த மற்றும் எரிபொருள் சார்ந்த இலக்குகளுக்கான தொடர்ச்சியான அழுத்தம் தொடரும்.
யதார்த்தமாகப் பார்த்தால் இன்றிருக்கும் சூழ்நிலைகளில் 1.5 டிகிரி வெப்பநிலை இலக்கை அடைய முடியாது என்பதை உணர வேண்டும். பெரிய வளரும் நாடுகளுக்கு இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது கடினம். வளர்ந்த நாடுகளும் அவற்றின் (துரதிர்ஷ்டவசமான) வளரும் நாடுகளின் கூட்டாளிகளும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் .
இந்தியாவின் நிலை
இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு விஷயத்தை நம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவை மட்டும் கணக்கில் கொண்டு பார்த்தால், IPCC (Intergovernmental Panel on Climate Change) கணக்குப்படி ஒட்டுமொத்த தெற்காசியாவில் இந்தியா வெளியிடும் உமிழ்வென்பது 4 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது. உலக மக்கள் தொகையில் தெற்காசிய மக்கள் தொகையின் அளவு 25%. உதாரணமாக கூறவேண்டுமானால் இந்தியாவால் ஏற்படும் உமிழ்வினை இன்றோடு நிறுத்தினால் கூட அது 2 கிகா டன் (giga ton) கார்பன் உமிழ்வைத்தான் குறைக்கும். வளர்ந்த நாடுகளின் உமிழ்வோடு ஒப்பிட்டால், நம்முடைய உமிழ்வு மிக சொற்பமானது. இந்தியா போன்ற நாடுகளில் தனிநபர் படிமஎரிபொருள் பயன்பாடு என்பது இன்றும் குறைவாகவே உள்ளது. இந்தியாவின் தனிநபர் படிமஎரிபொருள் பயன்பாடு வளர்ந்த நாடுகளுக்கு இணையாக வரவேண்டும் என்றால், தனிநபர் எரிபொருள் பயன்பாடு இப்போதைய நிலையிலிருந்து 4 மடங்காவது உயரவேண்டும்.
படிம எரிபொருளால் உண்டாகும் வளர்ச்சிக்கும் படிம எரிபொருளைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாட்டிற்கும் முரண் வந்தால் வளர்ச்சிக்கு முதன்மையான முக்கியத்துவம் தருவதுதான் இந்தியாவைப் பொறுத்தவரை சரியாகும். இன்றைக்கு நமக்கு வளர்ச்சி என்பது உடனடியாக வேண்டிய முக்கியமான தேவை.
இந்த கண்ணோட்டத்தில் இந்தியா NDCகளையும் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் காலநிலை கொள்கையையும் திட்டமிட வேண்டும் – 1.7 முதல் 2 டிகிரி செல்சியஸ் இலக்கையும் கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டும்.
(தமிழில் மொழிபெயர்ப்பும் சுருக்கமும்: ஜெயமுருகன்)
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
