சி.டி. குரியன்: கிராமப்புற மக்களின் மேன்மைக்குக் குரலெழுப்பிய அறிஞர்
வீ. பா. கணேசன்
93 ஆண்டுகளை நிறைவுசெய்துவிட்டு, நம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்ற பொருளாதார அறிஞரான சி.டி. குரியன் தன் வாழ்நாள் காலத்தில் செய்த சாதனைகள் எண்ணற்றவை. 1931ஆம் ஆண்டு ஜூலை 2 அன்று பிறந்த அவர், 1953ஆம் ஆண்டில் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். பின்பு, அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து 1962ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார்.
1962 முதல் 1978ஆம் ஆண்டு வரை சென்னை கிறித்துவக் கல்லூரியில் பொருளாதாரத் துறையில் ஆசிரியராகவும், பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணிபுரிந்த தருணத்தில் அவரது மாணவர்களாக இருந்த பலரும் பின்னாளில் புகழ்பெற்றவர்களாக இருந்தனர். அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், கேரள மாநில திட்டக் குழுவின் துணைத்தலைவரான பேராசிரியர் வி. கே. ராமச்சந்திரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
1965 முதல் 1968 வரை ஒரு பொருளாதாரத் துறை மாணவராக அவரிடம் பயின்ற காலத்தை நினைவு கூர்ந்த தோழர் பிரகாஷ் காரத் “மாணவர்களிடையே இந்தியப் பொருளாதாரப் பிரச்சனைகள், சமூகத்துடனான அதன் தொடர்பு குறித்த கருத்துகளைத் தூண்டி விட்ட பேராசிரியராக அவர் இருந்தார். பால் பரன், பால் ஸ்வீசி போன்ற மார்க்சியப் பொருளாதார நிபுணர்கள் எழுதிய ஏகபோக மூலதனம் என்ற புத்தகத்தை அவர்தான் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
பேரா. வி. கே. ராமச்சந்திரன், தனது இரங்கல் கட்டுரையில் “ஒரு மாணவனாக, பொருளாதாரத்தைக் கற்பிப்பதில் புதியதொரு மாற்றீட்டை அவர் உருவாக்கினார். இளங்கலை படிப்பின்போது பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள மூன்று கேள்விகள் அவசியம் என்று அவர் எடுத்துக் கூறினார்: ‘யாருக்கு எது சொந்தம்? யார் என்ன செய்கிறார்கள்? யாருக்கு என்ன கிடைக்கிறது?’ இதற்கெனவே ‘இந்திய பொருளாதார பிரச்சினைகள்’ (Indian Economic Problems) என்ற தலைப்பில் முக்கியமானதொரு பாடத் திட்டத்தையும் அவர் வடிவமைத்துக் கற்பித்தார். இந்த வகுப்பில், 1969-72 காலத்தில், ஒரு மாணவனாக நான் இருந்தது எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பு என்றே கூறுவேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
1974ஆம் ஆண்டில் ‘நில ராணுவம்’ என்ற பெயரில் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் ஒன்றை முன்மொழிந்த முதல் நபரும் அவரே. 2021ஆம் ஆண்டு ஜூலை 2 அன்று பேரா. குரியனின் 90 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி, பெங்களூரில் இருந்து செயல்பட்டு வரும் விவசாய ஆய்வுகளுக்கான அறக்கட்டளை இணைய வழி நடத்திய பாராட்டுக் கூட்டத்தில் வாழ்த்துரை வழங்கிய கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த அம்சத்தை சுட்டிக் காட்டி, ‘பெரும்பான்மையான மக்களுக்குப் பயனளிக்கும் கொள்கைகளுக்கு நிலையான ஆதரவாளராக’ பேராசிரியர் குரியன் இருந்தார் என்று குறிப்பிட்டார். இந்தப் பாராட்டுக் கூட்டத்தில் பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா, ஆர். கோபிநாத், ஜான் ஹாரிஸ், பார்பரா ஹாரிஸ்-ஒயிட், பிரகாஷ் காரத், எஸ். நெல்சன் மண்டேலா, மிசுஷிமா டுஸ்கஸா, கே. நாகராஜ், என். ராம், வி.கே. ராமச்சந்திரன், வி. சுர்ஜித், மதுரா சுவாமிநாதன் ஆகியோர் பேராசிரியர் குரியன் அவர்களின் அறிவார்ந்த பங்களிப்பை விரிவாக விவரித்தனர்.
பொருளாதார அறிஞரும் சென்னை பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தருமான மால்கம் ஆதிசேஷய்யா நிறுவிய சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (MIDS) இயக்குநராக 1978ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற அவர், சமூகத்தின் பல்வேறு தளங்களில் இருந்தும் ஆராய்ச்சியாளர்களை கவர்ந்திழுத்து, தமிழ்நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்த ஆய்வுகளை தொடர்ந்து முன்னெடுத்து வந்தார். இத்தகைய முன்னெடுப்பில் இயங்கியவர்தான் இப்போது தமிழ்நாடு திட்டக் குழுவின் உதவித் தலைவரான பேரா. ஜெயரஞ்சன்.
அவரது குறிப்பிடத்தக்க நூல்களில் ஒன்றான தமிழக கிராமப்புற மாறுதல்கள் என்ற ஆங்கில நூலை பாரதி புத்தகாலயம் தமிழில் வெளியிட்டுள்ளது.
அவரது கூர்த்த அறிவை சுட்டிக் காட்டி பேரா. வி.கே. ராமச்சந்திரன் கூறுகையில், “பேராசிரியர் குரியன் எங்களுக்கு இந்திய பொருளாதார பாடத்திட்டத்தை கற்பித்தபோது, தொடங்கும்போதும் முடிக்கும்போதும், அவர் கேட்கும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்: ‘இன்றைய இந்திய பொருளாதாரத்தின் முக்கிய பிரச்சினை என்ன?’ இதற்கு அவர் அளித்த பதிலில் எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இருந்ததில்லை. அது, நமது சமூகத்தில் உள்ள பல கோடிக்கணக்கான மக்களின் வறுமையும், புறக்கணிப்புமே ஆகும். 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியப் பொருளாதார மாணவர்களிடம் இப்போது உரையாற்றி, அவர்களிடம் இதே கேள்வியைக் கேட்டால், நமது நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் தொடர்ந்து வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு, பற்றாக்குறை, முற்றிலுமாக தவிர்க்கக்கூடிய நோய்கள் ஆகியவற்றுக்கு ஆளாகிறார்கள். அதைப் போலவே, இலவசமான, அனைவருக்குமான, கல்வியை, சுகாதார வசதியை இழக்கிறார்கள். வர்க்கம், சாதி மற்றும் பாலின ஒடுக்குமுறையின் மோசமான வடிவங்களுக்கு அவர்கள் ஆட்படுத்தப்படுகிறார்கள் என்று சொல்ல வேண்டிவரும் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
பணி ஓய்விற்குப் பிறகு ஃப்ரண்ட்லைன் இதழில் நூல் விமர்சனப் பகுதியில் தொடர்ந்து பங்களிப்பு செய்து வந்த பேராசிரியர் குரியன், இத்தகைய நூல்களின் மூலமாக நடப்பு கால சிந்தனைப்போக்கினை தன்னால் தெளிவாக உணர முடிந்தது என்று ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். சென்னையில் 1970களில் இருந்து செயல்பட்டு வரும் இந்திய சமூக விஞ்ஞானக் கழகத்தின் ஆலோசகர்களில் ஒருவராகவும் இருந்த அவர், குறிப்பிட்ட சமகாலத் தலைப்புகளை பரிந்துரைத்ததோடு, அதற்குப் பொருத்தமான பேச்சாளர்களை தேர்ந்தெடுக்கவும் உதவி செய்து வந்தார் என்பதும், இத்தருணத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.
1960களில் இருந்து தொடங்கி, 21ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை சென்னை மாநகர அறிவுலகில் குறிப்பிடத்தக்கதோர் ஆளுமையாகவும், தன்னளவில் மிகப்பெரிய ஆளுமைகளை உருவாக்கி, தன் சிந்தனைப் போக்கை பரவச் செய்தவராகவும் விளங்கிய பேராசிரியர் சி.டி. குரியன் அவர்களின் நினைவிற்கு மார்க்சிஸ்ட் மாத இதழ் தன் நெஞ்சார்ந்த செவ்வணக்கங்களை உரித்தாக்கிக் கொள்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
