
கலாச்சார ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்
பினராயி விஜயன்
(கேரளா எர்ணாகுளம் நகரில் கேரள மாநில கலாச்சாரத் துறை ஏற்பாடு செய்திருந்த இந்திய கலாச்சார மாநாட்டினை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் கேரள மாநில முதல்வருமான தோழர் பினராயி விஜயன் தொடங்கி வைத்து ஆற்றிய உரையின் தமிழாக்கம் – ஆசிரியர் குழு)
இந்த நிகழ்வின் அமைப்பாளர்களே, பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர்களே, கலாச்சார செயல்பாட்டாளர்களே, அன்பிற்குரிய நண்பர்களே, அனைவருக்கும் வணக்கம்.
ஒரு கலாச்சார காங்கிரஸ் என்றதொரு நிகழ்வு நம் அனைவருக்கும் புதுமையான ஒன்று என்பதை அனைவரும் அறிவீர்கள். அறிவியல் காங்கிரஸ், வரலாற்றுக் காங்கிரஸ் போன்ற பலவற்றையும் நாம் நடத்தியிருக்கிறோம். ஆனால் கலாச்சாரத் துறையில் இதுபோன்ற ஒரு காங்கிரஸை நாம் இதுவரை நடத்தியதில்லை. எனினும், இந்தியாவின் தற்போதைய நிலைமை, இதுபோன்றதொரு காங்கிரஸை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு நம்மை ஆளாக்கியுள்ளது. பல்வேறுபட்ட வாழ்க்கையை நடத்தி வரும் மக்களின் அமைதியான வாழ்க்கையை உறுதிப்படுத்தும் நமது கலாச்சாரம் என்ற மதசார்பற்ற நிலையை உடைத்தெறியும் பணியில் வகுப்புவாத சக்திகள் மிகத்தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
அனைவரையும் உள்ளடக்கிய வகையிலான நமது சமூக வாழ்க்கையே இப்போது அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. இத்தகைய அச்சுறுத்தலானது நமது நாட்டின், ஒட்டுமொத்த சமூகத்தின் ஒற்றுமையை மிக மோசமாக சீர்குலைக்க வல்லது என்பது சொல்லாமலே விளங்கும். இத்தகையதொரு பின்னணியில்தான், இந்தக் காங்கிரஸ் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது. இந்தச் சூழ்நிலையின் அவசரத்தை உணர்ந்த வகையில், பல்வேறு கலாச்சார நிறுவனங்கள், அகாதெமிகள் ஆகியவற்றின் கூட்டு ஆதரவுடன் இத்தகைய மிகப்பெரும் கலாச்சார மாநாட்டை கேரள அரசின் முழு மனதான ஆதரவோடு கலாச்சாரத் துறை ஒருங்கிணைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
வகுப்புவாத அடிப்படையில் நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சிகளை இந்திய மக்கள் உறுதியாக எதிர்ப்பார்கள் என்ற தெளிவானதொரு செய்தியை இந்த மாநாட்டு நாடு முழுவதற்கும் தெரிவிக்கும் என்றும் நான் நம்புகிறேன். மதசார்பற்ற நற்சான்றுகளின் வளமான பாரம்பரியம், வகுப்புவாதத்திற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டங்கள் ஆகிய நீண்ட வரலாற்றைக் கொண்ட மாநிலமான கேரளா இத்தகைய நிகழ்வை மேற்கொண்டு நடத்துவது மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.
நம்நாட்டின் வாழ்க்கைப்பயணத்தில் மிகவும் தீர்மானகரமான ஒரு தருணத்தில் நாம் இங்கு சந்திக்கிறோம். இந்தியா இன்று மிகவும் ஆபத்தான ஒரு நாற்சந்தில் நிற்கிறது. நம் அரசியல் சாசனத்தின் மாண்புகளை முற்றிலுமாக நிராகரிக்கும் சக்திகள் படிப்படியாக வலுப்பெற்று வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்ஸின் நூற்றாண்டைக் குறிக்கும் 2025ஆம் ஆண்டு, சுயபரிசோதனைக்கான ஒரு தருணமாக இல்லாமல், நாட்டைப் பிளவுபடுத்தும் ஓர் அரசியல் திட்டத்தை மிகுந்த ஆக்ரோஷத்தோடு முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு வாய்ப்பாகவே பயன்படுத்தப்படுகிறது. இந்த அரசியல் திட்டம், ஒரு குறுகிய, மக்களை விலக்கி வைக்கும் ஒரு நாடாக இந்தியாவை மறுவடிவமைக்க முயல்கிறது. மதச்சார்பின்மை, ஜனநாயகம், சமூகநீதி ஆகியவற்றின் அடித்தளங்களை வலுவிழக்கச் செய்கிறது.
இந்தத் தாக்குதல் என்பது சுருக்கமான ஒன்றல்ல. இது உறுதியானதாகவும், முறையானதாகவும், பொதுவாழ்க்கையின் ஒவ்வொரு பிரிவிலும் நன்கு வெளிப்படும் வகையிலானதாகவும் இருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்ற சட்டங்கள், மத அடிப்படையில் குடியுரிமையை மறுவரையறை செய்ய முற்படுகின்றன. ‘ஒரே நாடு- ஒரே தேர்தல்’ போன்ற முன்மொழிவுகள், கூட்டாட்சித் தன்மையை வலுவிழக்கச் செய்து, அதிகாரத்தை ஒரே இடத்தில் குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் தன்னிச்சையான, பெரிய அளவிலான திருத்தங்கள் உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கைகள் பல லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமைக்கு அச்சுறுத்தலாக எழுந்துள்ளன. அறிவுபூர்வமான, கலாச்சார ரீதியான, வரலாற்றுத்தொடர்பான விஷயங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் இப்போது குறிப்பிடதொரு தத்துவார்த்த நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப மறுவடிவமைக்கப்படுகின்றன. நாட்டின் பன்முகத் தன்மையை பலவீனப்படுத்தவும், கருத்து வேறுபாட்டை அடக்கி வைக்கவும், வெறுப்புணர்வை இயல்பான ஒன்றாக ஆக்கவும் அரசே ஒரு கருவியாக மாறும்போது, இத்தகைய முயற்சிகளுக்கு எதிரான எதிர்ப்பு என்பது நம் முன்னால் உள்ள ஒரு தேர்வு அல்ல; மாறாக, அது நமக்கான ஒரு கடமையாகவே மாறிவிடுகிறது.
இத்தகைய தருணங்களில் கலாச்சாரம் என்பது மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது. வரலாறு நமக்கு தெளிவானதொரு பாடத்தைக் கற்பித்துள்ளது. பாசிச, சர்வாதிகார சக்திகள் எப்போதுமே முதலில் கலாச்சாரத் துறையைத்தான் குறி வைக்கின்றன. முசோலினி, எதிர்ப்புக் குரலுக்கான பொறி உள்ளடங்கியிருக்கும் நாட்டின் தொன்மங்கள் குறித்த அறிவிற்குத் தடைவிதித்தார். ஹிட்லரோ ஓவியத்தைக் கண்டு அஞ்சினார். நாஜிக்கள் நூல்களையும் கலைப்படைப்புகளையும் தீயிட்டு எரித்தனர். ஏனெனில், மகத்தான கலை என்பது குறுகிய உலகக் கண்ணோட்டங்களுக்குச் சவால் விடுகின்றது என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். எழுத்தாளர்கள், கலைஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள், பகுத்தறிவு சிந்தனையாளர்கள் தாக்கப்பட்டனர். ஏனெனில், கலாச்சாரமானது விமர்சனபூர்வமான சிந்தனை, கூட்டு நினைவு, தார்மீகமான உறுதி ஆகியவற்றைப் பேணிக் காக்கிறது; வளர்க்கிறது. அது அதிகார மையத்தை நோக்கிக் கேள்வி எழுப்புகிறது; எந்தவொரு விஷயத்தையும் எளிமைப்படுத்துவதை மறுதலிக்கிறது. எனவேதான் அது (ஆள்பவர்களின்) அச்சத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது.
இந்த அச்சமானது வன்முறையாக மாற்றம் அடைந்ததையும் நாம் பார்த்தோம். மூடநம்பிக்கை, சாதியப் படிநிலை, வகுப்புவாத அரசியல் ஆகியவற்றிற்கு எதிராகக் கேள்வி எழுப்பியதற்காக பகுத்தறிவாளர்களும் அறிவுஜீவிகளுமான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம். கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்றவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பகுத்தறிவு சிந்தனையை முன்னெடுத்துச் சென்றமைக்காக தபோல்கர் கொல்லப்பட்டார். சங்கப் பரிவாரின் கட்டுக்கதைகளுக்கு சவால் விடும் எழுத்துக்களை எழுதியதற்காக பன்சாரே இலக்காகினார். மதப் பழமைவாதத்திற்கு எதிராகக் கேள்வி எழுப்பியதற்காக கல்புர்கி படுகொலை செய்யப்பட்டார். சாதியவெறி, பெரும்பான்மைவாதம் ஆகியவற்றுக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்பட்டமைக்காக கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பெருமாள் முருகன் போன்ற எழுத்தாளர்கள் மிரட்டல் மூலமாக மவுனமாக இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். தன் படைப்புகள் மீதான இத்தகைய தாக்குதல்களுக்குப் பிறகு, தாங்கள் எழுதுவதையே நிறுத்தப் போவதாக அவர்கள் அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஸ்டான் ஸ்வாமி போன்ற சமூக ஆர்வலர்களுக்கு அவர்களின் இறுதி நாட்களில்கூட கண்ணியமும் நீதியும் மறுக்கப்பட்டன. கருத்து வேறுபாட்டை நசுக்குவதற்கு அரசு இயந்திரம், இட்டுக் கட்டப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்துவதையே இது நினைவூட்டுகிறது. இவை அனைத்துமே எங்கோ தனியாக நடைபெறுகின்ற சம்பவங்கள் அல்ல. அவை நமக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளே ஆகும். சுதந்திரமான சிந்தனை என்பதே ஒரு குற்றமாகக் கருதப்படும் சூழலையே அவை குறிக்கின்றன.
கலாச்சார செயல்பாட்டாளர்கள், தங்களின் இருப்பிற்கே சிறியதொரு இடத்தைக் தேட வேண்டிய ஒரு காலம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அவர்களின் தனிப்பட்ட தேர்விற்காக கலைஞர்கள் அச்சுறுத்தப்படுவதையும், சமூக விதிமுறைகளுக்கு சவால் விட்டதற்காக திரைப்பட இயக்குநர்கள் தாக்கப்படுவதையும், அவர்களது கருத்துக்களுக்காக எழுத்தாளர்கள் விரட்டப்படுவதையும் நாம் பார்த்து வருகிறோம். நாம் எதைப் பார்க்கவேண்டும்; எதை உண்ண வேண்டும்; எதைப் படிக்க வேண்டும்; எதை நம்ப வேண்டும் என்பதற்காக உரிமையும் கூட படிப்படியாக சுருங்கிக் கொண்டே போகிறது.
அதேநேரத்தில், வரலாற்றையும் அறிவையும் திட்டமிட்ட வகையில் காவி மயமாக்குவதையும் நாம் காண்கிறோம். புகழ்பெற்ற, மதசார்பற்ற, பொருள்முதல்வாத கண்ணோட்டம் கொண்ட வரலாற்றாசிரியர்கள் கல்வி அமைப்புகளிலிருந்து நீக்கப்படுகின்றனர். டி.டி. கோசாம்பி, இர்ஃபான் ஹபீப், கே.என். பணிக்கர் போன்ற அறிஞர்களால் முன்னெடுக்கப்பட்ட அறிவுசார் மரபு இப்போது தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் போன்ற நிறுவனங்கள் ஆலோசனைக் குழுக்களைக் கலைத்துவிட்டு, அவற்றுக்குப் பதிலாக, குறிப்பிட்டதொரு தத்துவத்தில் அனுதாபம் கொண்ட நபர்களை நியமிப்பதன் மூலம் மறுவடிவமைப்பிற்கு ஆளாகியுள்ளன. புறநிலை சார்ந்த, ஆதாரங்களின் அடிப்படையிலான விசாரணையைக் கைவிடுமாறு ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. சிக்கலான சமூக வரலாறுகள் இப்போது மிக எளிமையான வகுப்புவாத சித்தரிப்புகளாக சுருங்கிப் போயுள்ளன. இது கடந்த காலத்தைப் பற்றிய விஷயம் மட்டுமல்ல; எதிர்கால சந்ததியினர் நிகழ்காலத்தை எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள் என்பதைக் கட்டுப்படுத்தும் விஷயமும் ஆகும்.
நாட்டிலுள்ள கலாச்சார நிறுவனங்களின் சுயாட்சி திட்டமிட்ட வகையில் சீர்குலைக்கப்படுகிறது. சமீபத்திய சம்பவம் இந்தப் போக்கை சந்தேகத்திற்கு இடமின்றி நமக்குத் தெளிவுபடுத்துகிறது. இலக்கியத்தின் சுதந்திரத்தை நிலைநாட்டும் தன்னாட்சி நிறுவனமான சாகித்ய அகாதெமி தனது வருடாந்திர இலக்கிய விருதுகளுக்கான பரிந்துரைகளை மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியிருப்பது மிகுந்த வருத்தத்திற்குரிய ஒன்றாகும். இந்தச் சம்பவம் அதன் வரலாற்றில் முன் எப்போதும் நடைபெறாத ஒன்று. இலக்கியத் தகுதியால் மட்டுமே வழிநடத்தப்பட்டு, சுயேச்சையாகச் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம், முறையாக நியமிக்கப்பட்ட செயலாளர் கூட இல்லாமல் இயங்கும் நிலையில், இப்போது ஆளும் நிர்வாகத்தின் அனுமதியை நாடி நிற்கிறது. இது ஒன்றும் தனித்த ஒரு குறைபாடல்ல. மாறாக, கலாச்சார, கல்வி, அறிவுசார் நிறுவனங்கள் படிப்படியாக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் தற்போதைய ஆட்சியின் கீழ் நிலவும் தீயதொரு வடிவத்தின் ஒரு பகுதியே ஆகும். இது கருத்து சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதலே ஆகும்.
இத்தகையதொரு பின்னணியில், எழுத்தாளர்கள், கலாச்சார செயல்பாட்டாளர்கள் ஆகியோரின் பங்கு தீர்மானகரமான ஒன்றாக மாறுகிறது. கலாச்சாரம் என்பது சமூகத்தை அலங்கரிக்கின்ற அலங்கார அணிகலன் அல்ல; அது சமூகத்தின் மனசாட்சி ஆகும். ஜனநாயகத்திற்கான வெளி சுருங்கிக் கொண்டே போகும்போது, அத்தகைய போக்கிற்கு எதிரான எதிர்ப்புணர்வை, கலாச்சாரம் விரிவடையச் செய்ய வேண்டும். இதுபோன்ற தருணங்களில் நடுநிலைமை வகிப்பது என்பது அநீதிக்குத் துணை போவதாகவே இருக்கும்.
அடுத்தவரை விலக்கி வைப்பது என்ற அரசியலுக்கு, வலுவான மாற்று முன் உதாரணத்தை கேரள மாநிலத்தின் வரலாறே எடுத்துக் காட்டுகிறது. கேரள மாநிலம் வென்றெடுத்துள்ள சமூக முன்னேற்றம் என்பது அதன் உயிர்த்துடிப்பான, அறிவுபூர்வமான பாரம்பரியங்களிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும். நமது வாசிப்புக் கலாச்சாரம், நமது நூலகங்கள், நமது இலக்கியம், நமது நாடகம் ஆகிய அனைத்துமே தனித்தனியாக வளர்ந்துவிடவில்லை. சாதிய ஒடுக்குமுறை, நிலப்பிரபுத்துவச் சுரண்டல், சமத்துவமற்ற சமூக நிலை ஆகியவற்றுக்கு எதிராக ஆழமாகக் கிளர்ந்தெழுந்த முற்போக்கான மக்கள் இயக்கங்களின் ஒரு பகுதியாகவே அவை வளர்ந்தன.
ஸ்ரீநாராயண குரு, அய்யங்காளி, அய்யா வைகுண்டசுவாமிகள், சட்டாம்பி சுவாமிகள் ஆகியோர் தலைமையிலான மறுமலர்ச்சி இயக்கங்களால் வடிவமைக்கப்பட்ட பூமிதான் கேரளா. பளியம் போராட்டம், கல்லுமலைப் போராட்டம், மறுமரக்கால் போராட்டம் போன்ற போராட்டங்கள் சமூகத்தில் நிலவி வந்த படிநிலைகளை நேருக்கு நேராக எதிர்கொண்டன. அருவிப்புரத்தில் ஸ்ரீநாராயண குருவின் கும்பாபிஷேகம், மிஸ்ரபோஜனத்திற்கான சகோதரன் ஐயப்பனின் அறைகூவல் ஆகியவை சாதி, வகுப்புவாத தடைகளுக்கு விடப்பட்ட சவால்களைக் குறிக்கின்றன. நிர்வாக சீர்திருத்தங்களும், மக்கள் போராட்டங்களும் இணைந்தே கேரள முன்மாதிரியை வடிவமைத்தன. கண்ணியம், சமத்துவம், பொதுமக்கள் பங்கேற்பில் வேரூன்றிய மக்களை மையமாகக் கொண்ட நல்வாழ்வுக்கான ஒரு முன்மாதிரியாக அது திகழ்கிறது.
கேரளாவைப் பொறுத்தவரையில், கலாச்சாரம் என்பது உயரடுக்குகளோடு நின்றுவிடவில்லை. அது, கிராமங்கள், பணியிடங்கள், தெருக்களில் நுழைந்தது. சாதி மற்றும் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திற்கு எதிரான தொடக்க கால எதிர்ப்பு இலக்கியம் மற்றும் நாட்டுப்புற வடிவங்களில் அது தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. பண்டிட் கருப்பனின் ‘ஜாதிக் கும்மி’ (1905) முறையான சட்டசீர்திருத்தங்கள் உருவெடுப்பதற்கு வெகுகாலத்திற்கு முன்பே வேரூன்றிய சமூகப் படிநிலைகளுக்கு சவால் விடவும், சமூக – மத மேலாதிக்கத்தை கேள்விக்கு உள்ளாக்கவும் மிகப் பிரபலமான சொலவடைகளை பயன்படுத்தியது.
இந்த வகையில் முற்போக்கு இலக்கிய இயக்கமானது தீர்க்கமானதொரு திருப்பத்தைக் குறிப்பதாக இருந்தது. 1937இல் திருச்சூரில் நடந்த மாநாட்டில் தொடங்கி, 1944இல் ஷோரனூரில் வலுப்படுத்தப்பட்ட ‘மனித இனத்தின் நலனுக்காகவே’ கலை உள்ளது என்ற அதன் அறைகூவல் சாதாரண மக்களின் வாழ்க்கையை இலக்கிய வெளிப்பாட்டின் மையத்திற்குக் கொண்டுவந்தது. இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், கே. தாமோதரன், பி. கேசவதேவ் போன்ற அறிவுஜீவிகள் இந்த இயக்கத்திற்கு ஒரு தத்துவார்த்தத் தெளிவை வழங்கினர். தொழிலாளர்கள், விவசாயிகள், விளிம்புநிலை மக்களின் போராட்டங்கள் அதன்பிறகும் கண்ணுக்குத் தெரியாதவையாக இருக்கவில்லை. எழுத்தாளர்களும் இந்த சமூக மாற்றத்திற்கு வெளியே நிற்கவில்லை. அவர்களும் அதில் பங்கேற்றனர். இலக்கியம் நடைமுறை யதார்த்தத்தின் கண்ணாடியாகவும், மாற்றத்திற்கான கருவியாகவும் மாறியது. தகழி சிவசங்கர பிள்ளையின் ‘தோட்டியின் மகன்’ மனித மாண்பை முன்னெடுத்துச் சென்ற நிலையில் என்றும் நிலைத்து நிற்கும் ஓர் இலக்கியம் என்ற பெருமையைப் பெற்றது.
நிகழ்த்துக் கலைகள் இந்தத் தாக்கத்தை மேலும் பெருக்கின. நாடகமும் கதை சொல்லலும், முறையான கல்வி மறுக்கப்பட்ட மக்களைச் சென்றடைந்தன. கதா பிரசங்கம் போன்ற கதை சொல்லும் மரபுகளும், முற்போக்கான ஆன்மீக இயக்கங்களிலிருந்து புத்துயிர் பெற்று வெளிப்பட்டன. நாடகங்கள் வெறுமனே பொழுதுபோக்கிற்கு ஆனவையாக இருக்கவில்லை; அவை கற்பித்தன; அணிதிரட்டின; அரசியல் மயமாக்கின. கேரள மக்கள் கலை மன்றம் போன்ற கலாச்சார அமைப்புகள், மாநிலம் முழுவதும் முற்போக்கான கருத்துக்களை கொண்டுசென்று, கலாச்சாரத்தை ஒரு வெகுஜன இயக்கமாக மாற்றின. அடக்குமுறை, தணிக்கை ஆகியவற்றுக்கு ஆட்பட்ட போதிலும், கலைஞர்கள் தொடர்ந்து ஆட்சியாளர்களுக்கு எதிராக உண்மையை உரக்கப் பேசினர்.
புரோகமனா கலா சாகித்ய சங்கத்தால் இந்தத் தீப்பந்தம் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. ஏகபோக முதலாளித்துவமும் உலகளாவிய ஊடகங்களும் மனிதாபிமானத்தை அழிக்க முயல்கின்றன என அதன் செயல்பாட்டு ஆவணங்கள் மக்களை எச்சரித்தன. தற்போதைய தருணத்தில் இந்தச் சவால் மேலும் தீவிரமாகியுள்ளது.
கேரள கம்யூனிஸ்ட் இயக்கமானது இந்தக் கலாச்சார நீரோட்டங்களுக்குத் தொடர்ச்சியையும் திசையையும் வழங்கியது. இது சமூக சீர்திருத்தத்திலிருந்து பொருளாதார நீதி வரையிலான போராட்டத்தை விரிவுபடுத்தியது. நிலச் சீர்திருத்தங்கள், கல்விச் சீர்திருத்தங்கள், தொழிலாளர்களின் உரிமைகள் ஆகியவை வெறும் கொள்கை முடிவுகள் அல்ல; அவை சமூக உணர்வை மாற்றியமைத்த கலாச்சார மைல்கற்கள் என்றே கூற வேண்டும். வெளியேற்றங்கள் மீதான தடை, குறைந்தபட்ச ஊதிய உத்திரவாதங்கள், தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்தல் போன்றவை பல லட்சக்கணக்கான மக்களுக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பையும் வழங்கின. இலக்கியமும் கலைகளும் இந்த மாற்றங்களை பிரதிபலித்து அவற்றை மேலும் வலுப்படுத்தின. சமூகநீதியும் கலாச்சார சுதந்திரமும் பிரிக்க முடியாதவை என்பதையும் அவை உறுதிப்படுத்தின.
எனினும், இந்தப் பாரம்பரியத்தை மிகச் சாதாரணமாக நாம் எடுத்துக் கொண்டுவிட முடியாது. இன்று அரசியலமைப்பு விழுமியங்களை எதிர்க்கும் அதே சக்திகள்தான் கலாச்சாரத்தை அரசியல்மயமாக்க முயல்கின்றன. கலையானது நடுநிலையானதாகவும், சமூக யதார்த்தத்தில் இருந்து விலகிச் செல்லவும் வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. இது ஆபத்தானதொரு மாயை. ஒவ்வொரு கலாச்சார செயல்பாட்டிற்கும் பின்னால் ஓர் அரசியல் பின்னணி உள்ளது. அநீதி நிலவும் காலங்களில் மவுனம் கடைப்பிடிப்பது என்பது தற்போதைய சமூக நிலையை ஆதரிப்பதே ஆகும்.
எதிர்ப்புகளைத் துண்டாடும் உத்திகள் குறித்தும் நாம் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். அடையாள அடிப்படையிலான பிளவுகள் வேண்டுமென்றே பெரிதாக்கப்படுகின்றன. வரலாற்றுபூர்வமான அநீதிகள் ஒப்புக் கொள்ளப்பட வேண்டுமெனினும், அரசியலை குறுகிய அடையாள அறிகுறிகளாகக் குறைப்பதென்பது, இறுதியில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கே பயனளிக்கிறது. சுரண்டலுக்கும் நீதிக்கும் இடையே, குவிந்துகிடக்கும் செல்வத்திற்கும் மறுபங்கீட்டிற்கும் இடையேதான் உண்மையான மோதல் உள்ளது. கலாச்சாரம் ஒடுக்கப்பட்டவர்கள் இடையே ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டுமே தவிர, அதை பலவீனப்படுத்தக் கூடாது.
கேரளாவின் நூலக இயக்கமும், வாசிப்புக் கலாச்சாரமும் இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. அறிவையும், அரசியல் விழிப்புணர்வையும் ஜனநாயகப்படுத்துவதில் நூலகங்கள் முக்கிய பங்கினை வகித்தன. 2016ஆம் ஆண்டிலிருந்தே பொது நூலகங்களுக்கு மானியங்களை அதிகரிப்பதன் மூலமும், அவற்றின் உள்கட்டமைப்பினை நவீனப்படுத்துவதன் மூலமும், டிஜிட்டல் மயமாக்கலை விரிவுபடுத்துவதன் மூலமும், வாசிப்புத் திட்டங்களை ஊக்குவிப்பதன் மூலம் இடது ஜனநாயக முன்னணி அரசு இந்த மரபை மேலும் வலுப்படுத்தியுள்ளது. கேரள மாநில நூலக கவுன்சில், பழங்குடி மற்றும் விளிம்புநிலை பகுதிகளை சென்றடைவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைத்து வருகிறது. இத்தகைய தலையீடுகளே ஜனநாயகத்திற்கான பாதுகாப்பு ஆகும். வாசிக்கின்ற, கேள்வி கேட்கின்ற, விவாதிக்கின்ற ஒரு சமூகத்தை தவறாக வழிநடத்துவது கடினம் என்பதோடு, அதைப் பிளவுபடுத்துவதும் கடினமாகும்.
எனவே, நம் முன்னால் உள்ள கேள்வி நேரடியானதும், தவிர்க்க முடியாததும் ஆகும். கலாச்சார ஊழியர்களும் நிறுவனங்களுமாகிய நாம், இந்தக் காலத்தின் நெருக்கடிக்குப் போதுமான பதிலளிக்கிறோமா? ஜனநாயக விழுமியங்கள் அரித்துச் செல்லப்படுகையில், அத்தகைய நிலைமை நம்மிடம் கோருகின்ற தீவிரத்துடன் நமது எழுத்துக்கள், கலைப்படைப்புகள், கலாச்சார வெளிப்பாடுகள் அவற்றை எதிர்கொள்கின்றனவா? இத்தகைய மவுனத்தை வரலாறு ஒருபோதும் விடுதலை செய்வதில்லை.
அரசியல்ரீதியான அர்ப்பணிப்பு கலையின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது என்று சிலர் வாதிடுகின்றனர். வரலாறு அதற்கு நேர்மாறான ஒன்றையே நிரூபிக்கிறது. பாப்லோ நெரூடா முதல் பிரேம் சந்த் வரை மாபெரும் கலைஞர்களும் எழுத்தாளர்களும் தங்கள் நம்பிக்கைகளிலிருந்தே உத்வேகம் பெற்றனர். அர்ப்பணிப்பு அவர்களின் பார்வையை மேலும் கூர்மைப்படுத்தியது. சமூகத்தில் அவர்களுக்கு உள்ள பொருத்தப்பாட்டையும் மேலும் விரிவுபடுத்தியது. யதார்த்தத்தோடு செயல்பட மறுக்கும் கலையானது இறுதியில் அதன் உயிரோட்டமான சக்தியை இழந்து நிற்கிறது.
இன்று நமது கடமை மிகவும் தெளிவானதாக உள்ளது. மதச்சார்பின்மை, ஜனநாயகம், சமூக நீதி ஆகியவற்றை அறிவுசார் நேர்மையுடனும் தார்மீக துணிவுடனும் நாம் பாதுகாக்க வேண்டும். எழுத்தாளர்களும் கலைஞர்களும் வெறுப்பு, அச்சம் ஆகியவற்றின் மூலம் லாபம் ஈட்டுபவர்களை அம்பலப்படுத்த வேண்டும். வகுப்புவாதத்தையும் சர்வாதிகாரத்தையும் இயல்பான ஒன்றாக ஆக்குவதற்கான முயற்சிகளை கலாச்சார மேடைகள் எதிர்த்து நிற்க வேண்டும்.
இது, வெறுமனே கலாச்சாரத்திற்கான போராட்டம் மட்டுமல்ல; இது, பன்முகத்தன்மை, சமத்துவம், அரசியலமைப்பு நெறிமுறைகள் ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு சிந்தனையாகும். ஒவ்வொரு தலைமுறையும் வரலாற்றினால் சோதிக்கப்படுகிறது. இப்போது நம் முன்னால் உள்ள சோதனையும் அத்தகைய ஒன்றேயாகும்.
சிந்தனைத் தெளிவோடும், துணிவோடும், பற்றுறுதியோடும் அதை எதிர்கொள்வோம். நன்றி.
தமிழில்: வீ. பா. கணேசன்
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply