
இயற்கை மற்றும் ஆதிவாசிகள் மீதான நவ தாராளமய தாக்கம்
அர்ச்சனா பிரசாத்
ஆதிவாசி அல்லது பழங்குடி மக்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் குறித்த சமகால விவாதங்கள், அரசு தலைமையிலான பொருளாதாரக் காலத்தில் (dirigiste era) பின்பற்றப்பட்ட ‘பழங்குடி நலன் மற்றும் மேம்பாட்டுக்’ கொள்கைகளின் குறைபாடுகளின் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும். இந்த அரசு தலைமையிலான வளர்ச்சிக் கோட்பாடு, நேருவின் பழங்குடி பஞ்சசீலக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. இது ஒருபுறம் பழங்குடியினரின் பொருளாதார முன்னேற்றத்திலும், மறுபுறம் அவர்களின் கலாச்சாரம், மொழி, நிலங்கள் மற்றும் வளங்களுக்கான உரிமைகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தியது.
இந்த அணுகுமுறை, சுய-சார்பு தொழில்மயமாக்கலுக்கான ஒட்டுமொத்த வளர்ச்சிக் கொள்கையுடன் ஒத்துப் போனது. இதில், அரசு, பழங்குடிப் பகுதிகளிலிருந்து கனிமங்கள் மற்றும் வன வளங்களைப் பயன்படுத்திக் கொண்டது. இது, பழங்குடி உரிமைகளை ஆக்கிரமிப்பதன் மூலமும், பழங்குடி மக்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றுவதன் மூலமும் நிறைவேற்றப்பட்டது. இந்த கட்டமைப்பிலிருந்து வெளிப்பட்ட முரண்பாடுகள், ஒருபுறம் பழங்குடியினரை மலிவான உழைப்பாளர்களாக தேசியப் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைப்பதற்கும், மறுபுறம் சமமற்ற வளர்ச்சியின் விளைவுகளுக்கு எதிராக வலுவான எதிர்ப்பியக்கங்கள் உருவாவதற்கும் வழிவகுத்தன.
இந்த இயக்கங்கள் பெரும்பாலும் பழங்குடி உயரடுக்கினரால் வழிநடத்தப்பட்டன. அவர்கள் பாரம்பரிய குறியீடுகளையும், சமூக அணிதிரட்டலையும் போராட்ட முறைகளாகப் பயன்படுத்தினர். மேலும், அரசு தலைமையிலான வளர்ச்சியின் கட்டமைப்பிற்குள் சிறப்புச் சலுகைகளைக் கோரினர். நேருவியக் கோட்பாடு, பழங்குடியினருக்கான (STs) சுரண்டல் நடைமுறைகளிலிருந்து சில பாதுகாப்புகளுக்கு வழி வகுத்தாலும், அது, இந்தப் பகுதிகளில் சந்தை பொருளாதாரத்தின் கோர முகத்தின் ஊடுருவலைக் கட்டுப்படுத்தவில்லை என்று அவர்கள் வாதிட்டனர். இது பழங்குடியினருக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான அமைப்பு ரீதியான ஏற்றத்தாழ்வுகளை மேலும் ஆழப்படுத்தியது. இதைச் சிறப்புச் வழிமுறைகளால் மூலமாக மட்டுமே தீர்க்க முடியும் என்றும் கூறினர்.
இதன் விளைவாக, 1980களின் நடுப்பகுதியில், ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம், இந்தப் பகுதிகளில் உள்ள வளர்ச்சிக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக, பழங்குடியினருக்கான துணைத் திட்டத்தை (TSP) நிறுவியது. ஆனால், TSP ஆனது பழங்குடியினர் எதிர்கொண்ட வரலாற்று ரீதியான இல்லாமையை கையாள்வதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, அது அரசு முதலாளித்துவத்தின் தற்போதைய கட்டமைப்பிற்குள் மேம்பாட்டுக் கோரிக்கைகளை மட்டுமே நிவர்த்தி செய்தது. இதன் மூலம், அமைப்பு ரீதியான பாகுபாட்டின் செயல்முறைகளை மேலும் ஆழப்படுத்தியது. 1990களின் முற்பகுதிக்கு முன்னர், பழங்குடிப் பகுதிகள் மூலப்பொருட்களையும் உழைப்பையும், மூலதனப் பொருட்கள் மற்றும் பிற தொழில்களுக்கு வழங்கியபோதிலும், பெருமூலதனத்தின் பங்கு அரசின் கட்டுப்பாட்டின் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இருப்பினும், 1980களின் நடுப்பகுதியில் இருந்து ஏற்பட்ட அரசு முதலாளித்துவத்தின் நெருக்கடி, பல மாற்றங்களுக்கும், 1990களில் நவ தாராளமயக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கும் வழிவகுத்தது. இது ‘தொழில் செய்வதை எளிதாக்குதல்’ (ease of doing business) என்ற நோக்குடன், பெருநிறுவன சார்பு (pro-corporate) நிலைப்பாட்டை நோக்கி மாறியது. கடந்த ஒன்றரை தசாப்தங்களாக, கொள்கை வகுப்பாளர்கள் இந்தப் பகுதிகளைப் பெருமூலதனத்திற்காகத் திறந்துவிட்டதால், பழங்குடிப் பகுதிகளில் முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டன.
சட்டங்கள் மற்றும் கொள்கைகளில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும், பழங்குடி நலன்கள் கணிசமாக மறுசீரமைக்கப்பட்டு, பெரும்பாலும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் (NGOs) தலையீடுகளுடன் இணைக்கப்பட்டன. அரசாங்கத்தின் நோக்கம், பழங்குடியினரை இந்துத்துவத் திட்டத்தில் இணைப்பதற்கான ஒரு கருத்தியல் உந்துதலை நோக்கி இருந்ததால், இந்தக் கொள்கைகள் ஆர்.எஸ்.எஸ். (RSS) உடன் இணைக்கப்பட்ட அமைப்புகளின் செல்வாக்கை ஆழப்படுத்த ஒரு இடத்தைத் திறந்தன. இந்த அமைப்புகள், 1940களின் முற்பகுதியில் இருந்தே, மத்திய இந்தியப் பகுதிகளில் தங்கள் மதமாற்ற எதிர்ப்பு மற்றும் கல்வித் திட்டங்களுடன் தீவிரமாகச் செயல்பட்டு வந்தன. 1950களின் நடுப்பகுதியில் இந்தப் பகுதிகளிலிருந்து தடை செய்யப்பட்ட கிறிஸ்தவ மிஷனரிகளை இந்தத் திட்டங்கள் குறிவைத்தன.
பழங்குடிப் பகுதிகளில் இந்துத்துவ சக்திகளின் பணிக்கான ஒரு முக்கிய அமைப்பான அகில பாரதிய வனவாசி கல்யாண் ஆசிரமம் (VKA) உருவானது. 1980களின் பிற்பகுதியில், VKA மற்றும் ஏகல் வித்யாலயா சங்கதன் போன்ற ஆர்.எஸ்.எஸ். உடன் இணைக்கப்பட்ட அமைப்புகள், தொலைதூரப் பழங்குடிப் பகுதிகளுக்குள் ஊடுருவ உதவும் வகையில், ஒற்றை ஆசிரியர் பழங்குடிப் பள்ளிகளின் ஒரு பெரிய இணைப்பைத் தொடங்கின. ஆனால், பழங்குடி நலத் திட்டங்களின் குறைபாடுகளும், அமைப்பு ரீதியான ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதில் அவற்றின் தோல்வியுமே, மதவாத துருவமயமாக்கலின் மெதுவான செயல்முறைக்கு வழிவகுத்தது. பழங்குடி மக்கள் மீதான நவ தாராளமயத் தாக்குதலை, ஒன்றோடொன்று தொடர்புடைய இந்த இரட்டைப் போக்குகளின் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும்.
பழங்குடிப் பகுதிகளில் நவ தாராளமயத்தின் வெளிப்பாடுகள்
பெருவணிகத்தின் தலைமையிலான தொழில்துறை மூலதனத்தின் ஊடுருவல், வன (பாதுகாப்பு) சட்டம், 1980 இயற்றப்பட்டதன் மூலம் 1980களில் தொடங்கியது. இந்தச் சட்டம், சிறப்பு அனுமதிகள் மூலம் பெரிய திட்டங்களுக்காக வன நிலங்களைத் திசைதிருப்ப ஒரு வழிமுறையை உருவாக்கியது. ஆனால், தலைமுறை தலைமுறைகளாக வனப்பகுதிகளில் வசித்து வந்த பழங்குடியினரின் நில உரிமைகளைச் சட்டப்பூர்வமாக்குவதற்கு இது அதே போன்ற சலுகையை வழங்கவில்லை. இதனால், 1980 டிசம்பருக்கு முன்னர் காடுகளில் வசித்த அனைத்து பழங்குடியினரும், அவர்களின் சொந்த வாழ்விடங்களிலேயே ‘சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள்’ என்று அறிவிக்கப்பட்டனர்.
சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வழங்கிய தரவுகளின்படி, குறிப்பாகப் பெரிய திட்டங்களுக்காக வன நிலங்களைத் திசைதிருப்புவது, 1990களிலிருந்து கணிசமாக அதிகரித்துள்ளது. 2008 மற்றும் 2023-க்கு இடையில், மூன்று லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலம் வனமற்ற பயன்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்டது. இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை 2014-2023-க்கு இடையில் திசைதிருப்பப்பட்டன. கடந்த நான்கு ஆண்டுகளில் (2020 மற்றும் 2024-க்கு இடையில்) மட்டும் திசைதிருப்பலின் விகிதம் 30.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும், பெருநிறுவன மற்றும் பலதரப்பு நிறுவனங்களின் அழுத்தத்தின் கீழ், சுற்றுச்சூழல் மற்றும் வன அனுமதி விதிகளில் பெருநிறுவன சார்பு சட்ட மற்றும் நடைமுறை மாற்றங்கள் செய்யப்பட்டதன் மூலம் காடுகளின் ஆக்கிரமிப்பு எளிதாக்கப்பட்டது. பெருநிறுவன மூலதனத்திற்கும் பழங்குடியினருக்கும் இடையிலான முரண்பாடு, சுற்றுச்சூழல் தாக்க விதிமுறைகள் 2005-2006 மற்றும் பின்னர் 2021-இல் மாற்றப்பட்டபோது தெளிவாகத் தெரிந்தது. சமீபத்திய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளின்படி, சிறிய திட்டங்கள், ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் விரிவாக்கம் ஆகியவை சுற்றுச்சூழல் தாக்கங்களின் சுய-மதிப்பீட்டை வழங்கினால் போதும். மேலும், கட்டுமானப் பணிகளுக்கு மதிப்பீடுகளிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டன.
கூடுதலாக, மத்திய அரசு 2015-இல் சுரங்கங்களுக்கான ஏலக் கொள்கையைத் தொடங்கியது. மேலும், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு) ஒழுங்குமுறைச் சட்டத்தை 2021-இல் திருத்தி, அங்கீகாரம் தேவை இல்லாத வழிகளின் மூலம் சுரங்கத் தொழிலில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை (FDI) அனுமதித்தது. 2019 மற்றும் 2024-க்கு இடையில் 18,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலம் சுரங்கங்களுக்காகத் திசைதிருப்பப்பட்டது. 2015 முதல், இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஈட்டுவதற்காக சுமார் 395 சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டன. இது 2006-க்குப் பிறகு நான்கு மடங்கு அதிகரிப்பாகும். 2022 முதல், சுரங்க மேம்பாட்டாளர்-இயக்குநர்களுக்கான (Mine Developer Cum Operators) ஒப்பந்தங்கள் உலகளாவிய சுரங்க நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. இதில் அதானி, எஸ்ஸல் மற்றும் ஜிண்டால் ஆகிய நிறுவனங்கள் மிகப்பெரிய பயனாளிகள்.
மூன்றாவதாக, இந்திய வனச் சட்டம் மற்றும் வனப் பாதுகாப்புச் சட்டம் (2022) விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்கள், காடுகளின் வரையறையை மறுவரையறை செய்தன. மேலும், பழங்குடிப் பகுதிகளில் உள்ள வன நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்கான அடித்தளத்தை அமைத்தன. இந்த முன்னேற்றங்கள் பழங்குடி மக்களின் உரிமைகளை கணிசமாகப் பலவீனப்படுத்தின. மேலும், பஞ்சாயத்து (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கு நீட்டிப்பு) சட்டம், 1996 (PESA) மற்றும் வன உரிமைகள் சட்டம் (2006) (FRA) ஆகியவற்றின் மூலம் நீண்ட காலப் போராட்டங்களால் அடையப்பட்ட வெற்றிகளைத் தலைகீழாக மாற்றின.
PESA, தேர்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு வன விளைபொருட்களின் வழக்கமான உரிமையையும், நிலங்கள் மீதான கட்டுப்பாட்டையும் உறுதி செய்தது. இந்த உரிமைகள் FRA மூலம் விரிவாக்கப்பட்டன. இது பழங்குடியினரின் காடுகள் மீதான தனிநபர் மற்றும் சமூக உரிமைகளை அங்கீகரித்தது. மேலும், நிலங்களை மாற்று பயன்பாடுகளுக்கு திசைதிருப்புவதற்கான சில கட்டுப்பாட்டு நிபந்தனைகளையும் பரிந்துரைத்தது. ஆனால், இது இயற்றப்பட்ட போதிலும், கடந்த ஒன்றரை தசாப்தங்களில் இந்தச் சட்டத்தின் விதிகளைப் பலவீனப்படுத்தும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இந்த சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்குத் தீர்வு காண்பதில் ஏற்பட்ட பிழைகள் காரணமாக, தனிநபர் மற்றும் சமூக உரிமைக் கோரிக்கைகள் அதிக அளவில் நிராகரிக்கப்பட்டன. பிப்ரவரி 2025-க்குள், தனிநபர் மற்றும் சமூக உரிமைக் கோரிக்கைகளில் 49 சதவீதம் மட்டுமே வன நிலங்களில் பட்டாவுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதேசமயம், இந்தக் கோரிக்கைகளில் சுமார் 36 சதவீதம் நிராகரிக்கப்பட்டன. தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கைகளில் 14 சதவீதம் இன்னும் அதிகாரிகளிடம் நிலுவையில் உள்ளன. இந்தச் சூழலில், 2022-இல், உச்ச நீதிமன்றம், கிட்டத்தட்ட 2 கோடி பழங்குடியினரின் உரிமைகோரல் விண்ணப்பங்ககள் நிராகரிக்கப்பட்டதால், அவர்களை காடுகளிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, இந்தச் சட்டத்தின் கீழ், கிட்டத்தட்ட பாதி உரிமைகோரல்கள் அங்கீகரிக்கப்படாதது, வெளியேற்றப்படும் அபாயத்தில் பழங்குடியினரை ஆழ்த்தியுள்ளது.
பெருநிறுவன சார்பு மாற்றங்களின் தாக்கம்
மேலே குறிப்பிடப்பட்ட அமைப்பு ரீதியான மாற்றங்கள், பழங்குடி விவசாயிகளில் ஒரு பெரிய பகுதியினருக்கு நில இழப்பை ஏற்படுத்தியுள்ளன. பல்வேறு தரவுகள் காட்டுவது என்னவென்றால், பழங்குடியினரிடையே அதிகரித்து வரும் நில அபகரிப்பு எப்போதும் நிலமற்ற நிலைக்கு வழிவகுக்கவில்லை என்பதைக் காட்டுகின்றன. மாறாக, இது 1990களுக்குப் பிறகு, குறிப்பாக பகுதி நிலங்களின் விற்பனை அல்லது கையகப்படுத்துதல் காரணமாக, மிகச் சிறிய நில உடைமைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அவை, பழங்குடியினரின் நிலங்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை நீர்த்துப்போகச் செய்தல்; வன நிலங்களைத் திசைதிருப்புதல் ஆகியவற்றின் பரந்த மாற்றங்களின் வெளிப்பாட்டையும் பிரதிபலிக்கின்றன.
1995-96 மற்றும் 2012-16-க்கு இடையில், பழங்குடி விவசாயிகளிடையே மிகச் சிறிய நில உடைமையாளர்கள், 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தனர் (அகில இந்திய அளவில் சுமார் 7 சதவீதம்). இது பழங்குடியினர் மற்றவர்களை விட அதிக நிலத்தை இழந்துள்ளனர் என்பதைக் குறிக்கிறது.
இருப்பினும், பழங்குடியினரில் ஒரு பெரிய பகுதியினர், அரசியல் சாசனத்தில், குறிப்பாக ஐந்தாவது மற்றும் ஆறாவது அட்டவணைகளில் அவர்களுக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்புப் பாதுகாப்புகள் காரணமாக, தங்கள் நிலங்களின் சிறிய பகுதியையாவது தக்க வைத்துக் கொண்டனர். இதன் பொருள், பழங்குடியினரில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் இன்னும் தங்கள் பிழைப்புக்காக விவசாயப் பொருளாதாரத்தைச் சார்ந்துள்ளனர். இருப்பினும், இந்த விகிதம் 1993-94 மற்றும் 2011-12-க்கு இடையில் சுமார் 86 சதவீதத்திலிருந்து 76 சதவீதமாகக் குறைந்தது. 2012 மற்றும் 2018-க்கு இடையில், பழங்குடி கிராமப்புற உழைப்பாளர்களின் எண்ணிக்கை 5.6 லட்சம் நிகர அதிகரிப்பு இருந்தது (1.18 சதவீதம் அதிகரிப்பு). ஆனால், இந்த அதிகரிப்பு பெரும்பாலும் படித்த பழங்குடி இளைஞர்களின் வேலைவாய்ப்பு அதிகரிப்பால் ஏற்பட்டது. சேவைத் துறைகளில் அவர்கள் 25.5 லட்சம் பேர் உழைப்பாளர்களாக சேர்ந்தனர். பழங்குடி ஆண்களுக்கான கிராமப்புற வேலைவாய்ப்பு கிட்டத்தட்ட அதே அளவில் இருந்தது. அதேசமயம், பழங்குடிப் பெண்களுக்கான வேலைவாய்ப்பு கிட்டத்தட்ட 19.9 லட்சம் குறைந்தது. எனவே, தொடர்ச்சியான வேளாண் நெருக்கடி வேலைவாய்ப்பு நெருக்கடிக்கு வழிவகுத்தது என்று ஊகிக்க முடியும். இதில் பல விவசாயத் தொழில்கள் பெண்களின் ஊதியம் இல்லாத உழைப்பைச் சார்ந்து இருந்தன.
மோதலும் எதிர்ப்பும்
முடிவுரையாக, இந்த பெருநிறுவன ஊடுருவலுக்கு எதிரான எதிர்ப்பின் வளர்ந்து வரும் போக்குகளைச் சுட்டிக்காட்டுவது பொருத்தமானது. மேலே எடுத்துக்காட்டப்பட்ட போக்குகளின் இரண்டு முக்கிய தாக்கங்களைச் சுட்டிக்காட்டுவது பொருத்தமானது. முதலாவதாக, சட்ட மாற்றங்கள் மற்றும் பழங்குடியினருக்கான பாதுகாப்புகளை நீர்த்துப்போகச் செய்தல் மூலம் பெருநிறுவன மூலதனத்திற்காகப் பழங்குடிப் பகுதிகளைத் திறந்துவிடுவது, நாட்டில் பழங்குடி அடையாள அரசியலின் தன்மையை மாற்றியுள்ளது. 1980களில் பழங்குடி ஆளும் வர்க்கங்கள் இந்த அரசியலில் ஆதிக்கம் செலுத்திய நிலையில், 1990களின் பிற்பகுதியில் இருந்து அவர்கள் தற்போதுள்ள அதிகார கட்டமைப்புகளில் இணைக்கப்பட்டதால், பழங்குடி இயக்கங்கள் அவற்றின் வர்க்கத் தன்மையின் அடிப்படையில் பல துருவங்களாக பிளவுபட்டன.
வேதாந்தாவுக்கு எதிரான இயக்கம், பல்வேறு திட்டங்களுக்கு எதிராண போராட்டங்கள், குறிப்பாகச் சுரங்கத் திட்டங்களுக்கு (பஸ்தர், ஹஸ்டியோ ஆர்கண்ட் போன்ற பகுதிகளில்) எதிரான உள்ளூர் போராட்டங்கள் போன்ற நன்கு அறியப்பட்ட மோதல்கள் இந்த உண்மையைத் திரும்பத் திரும்ப நிரூபித்துள்ளன. இரண்டாவதாக, ஆர்.எஸ்.எஸ். உடன் இணைக்கப்பட்ட அமைப்புகளின் நீண்ட காலத் தாக்கம், அடையாள அரசியலின் மதவாத துருவமயமாக்கலையும் பாதித்துள்ளது. இது கந்தமால் கலவரங்கள் (2008), போடோலாந்து மற்றும் மணிப்பூர் மோதல்கள் (2012 முதல்), பழங்குடி கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் போன்ற பல நிகழ்வுகளில் தெளிவாகத் தெரிந்தது. இந்த இயக்கங்கள், 1990களிலிருந்து இத்தகைய பெருநிறுவன ஊடுருவலுக்கு எதிரான எதிர்ப்பைத் தகர்க்கும் ஆதிக்க சக்திகளாக செயல்பட்டுள்ளன.
இந்த இரண்டு போக்குகளுக்கும் இடையிலான சிக்கலான உறவு கடுமையான சவால்களை முன்வைக்கிறது. மேலும், பழங்குடி உரிமைகளுக்கான போராட்டம், நவ தாராளமயக் கொள்கை சீர்திருத்தங்களுக்கு எதிரான பரந்த போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
தமிழில்: அபிநவ் சூர்யா
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply