
ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் ‘தர்மம்’, சாதியை ஒழிக்குமா?
இரா.சிந்தன்
“சாதி முறை ஒரு காலத்தில் இருந்தது; ஆனால், இன்று அதற்கு எந்தப் பொருத்தமும் இல்லை. சாதி என்பது இனி ஒரு முறை அல்ல; அது காலாவதியானது, அது போக வேண்டும்… காலாவதியான முறை நீக்கப்படும்போது, அது சமூகத்தின் மீது அழிவு விளைவிக்கும் தன்மை கொண்டிருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்” இவ்வாறு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாக்வத் பேசியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, பாஜகவின் பல தலைவர்களும், ஊடகங்களில் பேசும் ஆதரவாளர்களும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சாதிகளை ஏற்கவில்லை என்றும், அனைவரும் அர்ச்சகர் ஆவது உள்ளிட்ட பல முக்கிய சமூக நீதி முழக்கங்களை ஆர்.எஸ்.எஸ் அமைப்பே முன்னெடுப்பதாகவும் ஊடகங்களில் பேசி வருகிறார்கள்.
சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளும், வன்கொடுமைகளும் தீவிரமடைந்து வரும் காலத்தில், ஆர்.எஸ்.எஸ் தனது நிலைப்பாட்டை இவ்வாறு தீவிரமாக மாற்றிக் கொண்டதா? என்று வியப்புடன் நோக்கினால், மோகன் பாகவத் உரை அப்படியில்லை என்று புரியும். அவர் சாதிவெறியும் வன்கொடுமைகள் அதிகரிக்கும் சமகாலத்தை, அதன் கடுமையை மறுத்து, சாதி கடந்த காலத்தின் அம்சமாகிவிட்டது என்கிறார். அதே சமயம் சாதி அமைப்புமுறை நீக்கப்பட்டாலும், தற்போதைய சமுதாயத்தை அழித்துவிடக் கூடாது என்கிறார். முள் குத்தியிருப்பதை ஒப்புக்கொள்ளவும் மாட்டோம், அதை அகற்றினால் ரத்தம் வரக்கூடாது என்பது எப்படிப்பட்ட நிலைப்பாடு? இதனைப் புரிந்துகொள்ள சாதி பற்றிய ஆர்.எஸ்.எஸ் நிலைப்பாடு என்னவென்று திரும்பிப் பார்க்கலாம்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, கற்பனையான ‘தூய’ வடிவத்தில் சாதியைப் பார்ப்பதுடன், அதை வைத்து திரட்டலை மேற்கொள்ள விரும்புகிறது. எனவே, சாதிகளின் ஒடுக்குமுறைகளின் மீது பாராமுகமாக உள்ளது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கருத்தியல்
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தமான இந்துத்துவா, சாதிக்கு எதிரானதல்ல. சாதி அடுக்குகளை உறுதிப்படுத்துவதுதான் அதன் நோக்கமாகும். ஒவ்வொரு சாதியும், படிநிலையில் அவரவர் இடத்திற்கேற்ப தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும். புகார்களின்றி கடமையாற்ற வேண்டும். இந்து தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில் பட்டியல் சாதியினரும், பிற்படுத்தப்பட்ட மக்களும் கடமையாற்றுவதையே அவர்கள் ‘தர்மம்’ என்கிறார்கள்.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி எஸ். ராதாகிருஷ்ணன் எழுதிய “The Hindu View of Life” என்ற புத்தகத்தில் இந்து சமூகம் பற்றிய ஒரு கவர்ச்சிகரமான தோற்றத்தை முன்வைத்தார். அதன்படி இந்து சமுதாயம் என்பது நான்கு வர்ணங்களால் ஆனது. அதில் பிராமணர்கள் மேலேயும், சூத்திரர்கள் கீழேயும் அமைந்துள்ளனர். இவ்வாறாக ஒவ்வொரு வர்ணத்திற்கும் அதன் சொந்த தர்மங்கள் (கடமைகள்), விதிகள் உள்ளன என்றார். இதை ஒரு நேர்த்தியான, சமச்சீரான அமைப்பாக விவரித்தார். ஆர்.எஸ்.எஸ் விவரிப்பும் இவ்வாறே அமைகிறது.
முதல் பார்வைக்கு இது அழகாகத் தோன்றினாலும், வரலாற்று அனுபவத்தில் இது மிகவும் கொடூரமான, மனிதத் தன்மையற்ற அமைப்பாகும். ஒருவர் ஆற்றும் கடமைகளின் அடிப்படையில் அவரின் வர்ணம் தீர்மானிக்கப்படுகிறது என்று அவர்கள் முன்வைக்கிறார்கள். ஆனால் அதற்கும் உண்மைக்கும் தொடர்பேதும் இல்லை. பிறப்பின் அடிப்படையில்தான் வர்ண பேதங்களும், அதன் தொடர்ச்சியாகச் சாதி அமைப்பும் இருக்கிறது. சாதி விவஸ்தை என்றால், பிறப்பின் அடிப்படையிலான கடமை என்று பொருளாகும்.
சாதி அமைப்பு, இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமே காணப்படுகிறது. மேலும் இந்த அமைப்பின் பிரிக்க முடியாத அம்சமாகப் பெண் அடிமை நிலையும், படிநிலைப் பாகுபாடும் அமைந்துள்ளன. நான்கு வர்ணங்கள் தவிர, வர்ண அமைப்புக்கு வெளியே உள்ள கோடிக்கணக்கான மக்களை ‘கடைசிப் பிறப்பு’ என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. பட்டியல் சாதியினரும், பழங்குடியினரும் வர்ணக் கோட்பாட்டின் அடிப்படையில் இந்து மதத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல. அதே சமயத்தில் படிநிலை அமைப்பில் மனிதாபிமானமற்ற சுரண்டலை, அவலமான வாழ்நிலையை எதிர்கொள்கிறார்கள்.
வரலாற்றில் வர்ணம் – சாதி
ரிக் வேதத்தின் புருஷ சூக்தம் என்ற பகுதியே இந்த நான்கு வர்ண அமைப்பின் தொடக்கமாகும். மிகவும் பழமையான அந்த ரிக் வேதம் கி.மு. 1500 வாக்கில் உருவாகியிருக்கலாம். பல நூற்றாண்டுகளாக அது இயற்றப்பட்டிருக்கலாம். ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலம் கி.மு. 800 வாக்கில் இயற்றப்பட்டிருக்கலாம்.
ரிக்வேதத்தின் புருஷ சூக்த பாடல் இவ்வாறு கூறுகிறது: “பிரம்மனோஸ்ய முகமாசித் பாஹூ ராஜன்யா: க்ரித:, உரு தத்அஸ்ய யத் வைஷ்ய: பத்ப்யாம் சூத்ரோ அஜாயத்.” [யாகத்தில் புருஷன் (பிரபஞ்சப் புருஷன்) பலியிடப்பட்டபோது, பூசாரிகள் “இந்த பலியிடப்பட்ட புருஷனின் உடல் உறுப்புகள் எதைக் குறிக்கின்றன?” என்று கேட்டனர். அவரது தலை – பிராமணன், அவரது கைகள்/தோள்கள் – க்ஷத்திரியன், அவரது தொடைகள் – வைஷ்யன், அவரது பாதங்கள் – சூத்திரன்] (பிரம்மனின் தலையில் இருந்து பிராமணன் தோன்றினான், புஜங்களிலிருந்து (தோள்களிலிருந்து) ராஜன்யா (க்ஷத்திரியன்) உருவானான், தொடைகளிலிருந்து வைஷ்யன் பிறந்தான், பாதங்களிலிருந்து சூத்திரன் தோன்றினான்.)
இதில் மட்டுமே நான்கு வர்ணங்களைப் பற்றிய குறிப்பு உள்ளது. எனவே கி.மு. 800 வாக்கில் வர்ண பேதங்களுக்கு வேதங்களின் அங்கீகாரம் உறுதிப்படத் தொடங்கியது எனலாம். ரிக் வேதம் தாசர், தஸ்யூ என இருவகையான அடிமைகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது. இவ்வகை அடிமைச் சுரண்டல் கெட்டிப்பட்டது மாமன்னர்களின் ஆட்சிக் காலத்திலேயே ஆகும். பெரும் நிலவுடைமை கெட்டிப்பட்டதற்கும், வர்ண அமைப்பு சாதிப் படிநிலையாக பரிணமித்து இறுக்கமானதற்கும் நேரடித் தொடர்பு உள்ளது.
மனுவின் கொடுமையான சட்டங்கள்
தர்ம நடைமுறையைச் சட்டமாக்கும் நூல்களில் ஒன்று மனுஸ்மிருதி ஆகும். இந்த நூல், சுரண்டலுக்கு வசதியாக, சூத்திரர்களை வைத்துக் கொள்ளும் விதத்தில் பல மனிதாபிமானமற்ற சட்டங்களை உருவாக்கியது. உதாரணமாக: அவர்கள் சொத்துக்களை வைத்திருக்க முடியாது, ஏனெனில் அவர்கள் மூன்று உயர் வர்ணங்களின் சொத்துக்களாகவே இருந்தனர். தனி நபர்களை அடிமையாக நடத்திய ஐரோப்பிய வரலாற்றைப் போல் அல்லாமல், மனுவின் அடிமை முறை குறிப்பிட்ட சமுதாயத்தை மொத்தமாக அடிமைச் சுரண்டலுக்கு ஆளாக்கியது.
மேலும், அது பாகுபாடுகளை இன்னும் வெளிப்படையாக்கியது. மனு சட்டத்தின்படி ஒரு சூத்திரன் ஒரு பிராமணனைத் திட்டினால் அவரது நாக்கு வெட்டப்பட வேண்டும், அதேசமயம் ஒரு பிராமணன் ஒரு சூத்திரனைத் திட்டினால் ஒரு சிறிய தண்டனை பரிந்துரைக்கப்பட்டது; ஒரு சூத்திரன் ஒரு பிராமணனை அடித்தால் அவரது கைகள் வெட்டப்பட வேண்டும்; அவர் வேதத்தைக் கேட்டால், உருகிய ஈயம் அவரது காதுகளில் ஊற்றப்பட வேண்டும்; அவர் வேதத்தை ஓதினால் அவரது நாக்கு வெட்டப்பட வேண்டும்.
மனுஸ்மிருதியின் கட்டளைகள் ‘சூத்திரர்கள் உயர் வர்ணங்கள் உடுத்திய கிழிந்த / தூக்கி எறியப்பட்ட ஆடைகளை அணிய வேண்டும், உயர் வர்ணங்களின் மீதமுள்ள உணவைச் சாப்பிட வேண்டும், உடைந்த மண்பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும்’ என்று சொன்னதுடன் ‘சூத்திரர்களின் பெயர்கள் அழுக்காக இருக்க வேண்டும்’ என்று அறிவிக்கும் அளவிற்குச் சென்றது. இந்தச் சட்டங்கள் குறிப்பாகப் பட்டியல் சாதியினர், பெண்கள் மீது கட்டாயப்படுத்தப்பட்டன. தனிப்பட்ட பெயர்களின் இந்தச் சட்டம் உண்மையில் இந்திய சமூகத்தில் நடைமுறையில் இருந்தது. இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு கூட, மகார் சாதியினருக்கு ஹக்ர்யா (மலம்), பிகார்யா (பிச்சைக்காரன்), ஜங்ல்யா (காட்டுமிராண்டி), ஃபகீர்யா (பிச்சைக்காரன்) போன்ற ‘பெயர்கள்’ சூட்டப்பட்டன. தமிழ்நாட்டிலும் நாம் இவ்வாறு மோசமான பெயர் சூட்டலைப் பார்த்திருக்கிறோம். அதற்கு எதிரான எழுச்சியாக, தமிழ் பெயர் சூட்டும் நடவடிக்கைகளையும் வரலாற்றில் நாம் பார்த்தோம்.
மனுவைக் கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ்
எம். எஸ். கோல்வால்கர் எழுதிய ‘சிந்தனைக் கொத்து’ என்ற புத்தகத்தில் தர்மம் என்பது வாழ்க்கை முறை என்று எழுதினார். வர்ணா அமைப்பைப் புகழ்ந்து பேசும் வகையில் அந்த நூலில் பகுதி-2, அத்தியாயம் 10 இல் இவ்வாறு கூறினார்: “பண்டைய காலங்களிலும் சாதிகள் இருந்தன, நமது மகிமைமிக்க தேசிய வாழ்க்கையின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்தன… அவை சமூக ஒருங்கிணைப்பின் ஒரு பெரிய பிணைப்பாகச் செயல்படுகின்றன.”
“உலகில் உள்ள அனைத்து மக்களும் இந்துஸ்தானுக்குச் சென்று, அந்த நாட்டிலுள்ள முதலில் பிறந்தவர்களின் (பிராமணர்களின்) புனிதக் காலில் விழுந்து வணங்கி, தங்களுடைய கடமைகள் என்ன என்பதைக் கற்றுத் தெளிய வேண்டும்” என மனு கூறுவதை கோல்வால்கர் மேற்கோள் காட்டுகிறார்; ராமர் கோயில் விழாவில் அதையே மோகன் பகவத்தும் கூறுகிறார்.
கோல்வால்கரின் சாதிவாத எழுத்துக்கள் எதையும் ஆர்.எஸ்.எஸ் மறுத்ததோ, மாற்றியதோ இல்லை. மேலும் அது சமரசதா (ஒருங்கிணைப்பு) பற்றித்தான் பேசுகிறது. சமூக நீதி பற்றி அது பேசியதில்லை. ஒவ்வொரு சாதியும் தனது அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், அவை தழைக்க வேண்டும், அழிக்கப்படக்கூடாது என்றும் சொல்கிறது. சாதிய ஒடுக்குமுறைகளை கண்டுகொள்வதில்லை.
பட்டியல் சாதிகள் பற்றி ஆர்.எஸ்.எஸ்
பட்டியல் சாதியினர் மேம்பாட்டிற்கான எந்தவொரு சீர்திருத்தத்தையும் ஆர்.எஸ்.எஸ் முன்வைப்பதில்லை. இந்திய அரசியல் சட்டத்தை எதிர்க்கிறது. அரசியலமைப்புச் சபை இந்தியாவின் அரசியல் சட்டத்தை இறுதி செய்தபோது, ஆர்.எஸ்.எஸ் செய்தித்தாள் ஆர்கனைசர் எழுதிய நவம்பர் 30, 1949 இதழின் தலையங்கத்தில் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியது. “நமது அரசியலமைப்பில் பண்டைய பாரதத்தில் அந்தத் தனித்துவமான அரசியலமைப்பு வளர்ச்சியைப் பற்றிய குறிப்பு இல்லை. மனுவின் சட்டங்கள் ஸ்பார்ட்டாவின் லைகர்கஸ் அல்லது பெர்சியாவின் சோலோனுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே எழுதப்பட்டன. இன்றுவரை மனுஸ்மிருதியில் விளக்கப்பட்டுள்ள அவரது சட்டங்கள் உலகின் பாராட்டுதலைப் பெறுகின்றன. தாமே கீழ்ப்படிதல் மற்றும் இணக்கமாக இருப்பதை வெளிப்படுத்துகின்றன. ஆனால் நமது அரசியலமைப்பு அறிஞர்களுக்கு அது எதுவுமில்லை.” என அது குறிப்பிட்டது.
பிப்ரவரி 6, 1950 அன்று ஆர்கனைசர் இதழில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சங்கர் சுபா ஐயர் ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் மனு தற்போதும் தங்கள் இதயங்களை ஆட்சி செய்வதாகக் கூறினார். இவ்வாறு அவர்கள் மனுநீதியைச் சட்டமாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் ராஷ்டிராவைத்தான் தொடர்ந்து முன்வைக்கிறார்கள். கோயில்களில் நுழையும் வழிபாட்டு உரிமைப் போராட்டங்களை ஆர்.எஸ்.எஸ் எப்போதும் ஆதரித்ததில்லை.
இட ஒதுக்கீடும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும்
மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டபோது, அத்வானி தலைமையிலான பாஜக இராம் ஜென்ம பூமி இயக்கத்தைத் தொடங்கியது. அது இந்தியா முழுவதும் மதவெறித் தாண்டவத்திற்குத் தூபம் போட்டது. இவை அனைத்திற்கும் பின்னால் இந்துத்துவா சக்திகள் இருந்தன. பாஜக வி. பி. சிங் அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெற்று, அந்த அரசாங்கத்தை வீழ்த்தியது.
2015 ஆம் ஆண்டில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாக்வத் ‘இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என அவர்களுடைய ஆர்கனைசர் பத்திரிக்கையில் குறிப்பிட்டார். இப்படி அவர் பேசியதன் நோக்கம் என்ன? குஜராத் மாநிலத்தில், பட்டேல் சாதியினர் நடத்திய போராட்டத்தில், இட ஒதுக்கீட்டை எங்களுக்கும் தாருங்கள் அல்லது முற்றாக நீக்கிவிடுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள். அந்தப் பின்னணியில், இட ஒதுக்கீட்டுக்கு முற்றாக முடிவுகட்டும் தன்னுடைய உண்மையான கொள்கையை ஆர்.எஸ்.எஸ் பேசும் தைரியம் பெற்றது. தற்போதும் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டுக்கு முடிவுகட்டும் பரிந்துரைகள் அரசின் பரிசீலனைக்கு அவ்வப்போது எடுக்கப்படுகின்றன. சாதி அமைப்புமுறையில் கோரமாக நிலவும் வேலைப் பிரிவினைக்கு மாற்றாக ஒரு சிறு ஆறுதலாகவே இட ஒதுக்கீட்டுக் கொள்கைகள் அமைகின்றன. இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி அரசுத் துறைகளிலும், கல்வியிலும் ஒடுக்கப்பட்ட பிரிவினரால் வாய்ப்புகளைப் பெற முடிகிறது.
பட்டியல் சாதியினரும், பழங்குடியினரும் மிகக் கொடூரமான அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் நிலைமை இப்போதும் கூட நம் நாட்டில் பரவலாக நிலவுகிறது. இட ஒதுக்கீட்டில் கிடைக்கும் வேலைகளில் கூட ஒடுக்கப்பட்ட பிரிவினர் கீழ்நிலை பணிகளிலேயே இருத்தப்படுகிறார்கள். ஆனால், மேல் மட்டத்தில் உள்ள சாதிகள், உயர் மட்ட வேலைகளை ஆக்கிரமித்திருக்கிறார்கள். நிலமற்ற கூலித் தொழிலாளர்களில் ஆகப் பெரும்பான்மையாக இருப்பவர்கள் பட்டியல் சாதியினரே. பட்டியல் சாதியினருக்கும், மேலடுக்கு சாதிகளுக்கும் இடையில் வருமான வேறுபாடு மிகக் கூர்மையாக வெளிப்படுகிறது. மேலும், பட்டியல் சாதியினரை, பழங்குடிகளைக் குறிவைத்து நடக்கும் கலவரங்கள், பாலியல் வன்கொடுமைகள், தீவைப்புச் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. ஆனால், இவை பற்றியெல்லாம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கவலைப்பட்டதோ, எதிர்த்துக் கிளர்ந்ததோ கிடையாது.
எனவே, ஆர்.எஸ்.எஸ் தர்மம் சாதியை ஒழிக்காது. அது சாதிச் சுரண்டலை நவீனப்படுத்தி, தீவிரமாக்கும். மனுவை ஆதாரமாகக் கொண்ட, ஆர்.எஸ்.எஸ் ராஷ்டிரத்தின் பயணம் அதை நோக்கியதுதான். எனவே, அவர்களின் உண்மை நோக்கத்தை மறைத்த போலி வேடங்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்துவதுடன், சாதிச் சுரண்டலுக்கும், பெண்ணடிமைச் சுரண்டலுக்கு எதிராக மெய்யான சமூக நீதிப் போராட்டங்களை வேகப்படுத்த வேண்டும். இந்தப் போராட்டங்களின் களத்தில் போலித்தனங்கள் வேகமாக உடைபடும்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply