இந்திய மார்க்சிய ஆய்வின் முன்னோடி டி.டி. கோசாம்பி
அன்வர் உசேன்
டி.டி.கோசாம்பி என அழைக்கப்படும் தாமோதர் தர்மானந்த் கோசாம்பியின் நினைவு தினம் ஜூன் மாதம் 29 ஆகும். 1907ஆம் ஆண்டு ஜூலை 31இல் பிறந்த அவர் 1966ஆம் ஆண்டு 60 வயதை நிறைவு செய்வதற்கு முன்பே இறந்தார். இந்திய வரலாற்றை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்து முன்வைத்ததில் அவர் முன்னோடி எனில் மிகை அல்ல. இந்திய வரலாற்றை பொருள்முதல்வாத அடிப்படையில் கற்பதற்கு கோசாம்பியின் எழுத்துகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன என தோழர் இ.எம்.எஸ். குறிப்பிடுகிறார். இந்திய வரலாற்றை மார்க்சிய நோக்கில் உள்வாங்க விரும்பும் எவர் ஒருவரும் கோசாம்பி/ ஆர்.எஸ்.சர்மா/ ரொமிலா தாப்பர்/ இர்ஃபான் ஹபீப்/ அமர் பரூக்கி/ ஷிரிமாலி/ டி.என்.ஜா/ சுவிரா ஜெய்ஸ்வால் போன்றோரின் ஆய்வுகளை கற்பது அவசியமாகிறது.
கோசாம்பி பன்முக திறமைகளை கொண்டவர். அடிப்படையில் கணித நிபுணரான அவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கணிதம் பயின்றார். கணிதத்தில் மிகச்சிறந்து விளங்கிய அவர் பல நூல்களை கணிதத்துறையில் எழுதியுள்ளார். அதே சமயத்தில் புள்ளியியல்/ நாணயவியல்/ தொல்லியல்/ வரலாற்றியல் என பல துறைகளில் தனது முத்திரையை பதித்தவர். 1937ஆம் ஆண்டு நடந்த தேர்தல்களில் சில பகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்த பொழுது மார்க்சிய நூல்கள் மீது இருந்த தடை தளர்த்தப்பட்டது. அப்பொழுது இந்தியா பற்றி மார்க்ஸ் எழுதிய நூல் பரவலாக வெளிவந்தது. இதனை படித்த கோசாம்பி 1939ஆம் ஆண்டில் புனேவிலிருந்து வெளிவந்த ஒரு புகழ்பெற்ற பத்திரிக்கையில் மார்க்சிய அடிப்படையில் ஒரு கட்டுரை எழுதினார். அதுவே அவரின் மார்க்சிய பாதையின் தொடக்கமாக அமைந்தது.
மார்க்சிய ஆய்வுமுறை
கோசாம்பி இந்திய வரலாற்றை ஆய்வு செய்தபொழுது இரு தனித்துவமான அணுகுமுறைகளை உருவாக்கினார். ஒன்று தனது கணித நிபுணத்துவத்தை பொருத்தினார். அதாவது கணிதத்தில் எப்படி ஒரு கருத்தாக்கம் எந்த பிழையுமின்றி நிரூபிக்கப்படுகிறதோ, அப்படியே வரலாற்றிலும் எவ்வித அகநிலை கருத்துக்கும் ஆட்படாமல், முற்றிலும் தரவுகள் அடிப்படையில் உண்மையை தேடினார். மற்றொன்று, வரலாற்றை மார்க்சிய பொருள்முதல்வாத அடிப்படையில் ஆய்வு செய்தார்.
“வரலாறு என்பது உற்பத்தி சாதனங்கள் மற்றும் உற்பத்தி உறவுகளில் அடுத்தடுத்து ஏற்படும் மாற்றங்களை காலவரிசைப்படி முன்வைப்பது ஆகும்” என்பது அவரது தாரக மந்திரமாக இருந்தது. அதே சமயத்தில் மார்க்சியத்தை எந்திரகதியில் பொருத்துவதையும் அவர் கடுமையாக எதிர்த்தார். குறிப்பாக இந்திய சமூகத்தை ஆய்வு செய்யும் பொழுது, அதன் தனித்துவத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார். பொருளாதாரம் மட்டுமே மற்ற அனைத்தையும் தீர்மானிக்கிறது; மற்ற எதுவுமே பொருளாதாரத்தின் மீது தாக்கம் உருவாக்குவது இல்லை எனும் தவறான மார்க்சிய புரிதலை அவர் நிராகரித்தார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சமூகத்தின் அடித்தளம் உற்பத்திமுறையின் பொருளாதார காரணிகள்தான்; எனினும் மேல்கட்டுமானத்தின் சில அம்சங்கள் பொருளாதார அடித்தளத்தின் மீதும் தாக்கத்தை உருவாக்கும் என்பதை அவர் திரும்பத் திரும்பக் கூறினார். மார்க்சியம் என்பது ஆய்வுக்கான ஓர் அற்புதமான கருவி; வரலாற்று புதிர்கள் எனும் மூடப்பட்ட அறையை திறக்க உதவும் சாவி. ஆனால் சுயேச்சையான சிந்தனைக்கு மாற்று என மார்க்சியத்தை கருதிவிடக்கூடாது என கூறினார். அதாவது நமது சுயேச்சையான சிந்தனையின் அடிப்படையில் மார்க்சிய ஆய்வு எனும் கருவியை பயன்படுத்த வேண்டும். நமது சுயேச்சையான சிந்தனை உண்மையான தரவுகள் அடிப்படையில் இருக்க வேண்டும் என கருதினார்.
இந்திய சமூகத்தின் தனித்துவம்
ஆதி பொதுவுடமை – அடிமை உற்பத்திமுறை – நிலப்பிரபுத்துவம் – முதலாளித்துவம் எனும் வரிசைப்படிதான் இந்திய சமூகம் பரிணமித்தது என்பதை கோசாம்பி ஏற்கவில்லை. ஐரோப்பாவில் ரோமானிய அல்லது கிரேக்க சமூகம் அவ்வாறு பரிணமித்தது. அங்கு அடிமைகள் இருந்தனர் என்பது மட்டுமல்ல; அடிமைகள்தான் உபரி மதிப்பை உருவாக்கினர். அதனை, ஆளும் வர்க்கங்கள், அதாவது அடிமைகளின் எஜமானர்கள், பறித்துகொண்டனர். அத்தகைய அடிமை உற்பத்திமுறை அங்கு நிலவியது. அதனை அப்படியே இந்தியாவுக்கும் பொருத்த இயலாது என அவர் ஆழமாக கருதினார். அடிமை உற்பத்திமுறை இந்தியாவில் பரிணமிக்கவில்லை என்பது அவரது ஆய்வின் அடிப்படையில் உருவான மதிப்பீடு ஆகும். இந்த முக்கிய மதிப்பீடை முதன் முதலில் முன்வைத்தது கோசாம்பிதான்!
- யார் உணவு பொருட்களை சேகரிக்கின்றனர் அல்லது உற்பத்தி செய்கின்றனர்?
- எத்தகைய கருவிகள் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன?
- பிறர் உற்பத்தியில் தம்மை வாழவைத்து கொள்ளவும் கொழுக்கவும் செய்து கொள்பவர்கள் யார்?
- அவ்வாறு எதன் அடிப்படையில் அவர்கள் மற்றவர்களின் உழைப்பின் பலனை அபகரித்து கொள்வது ஏற்றுக்கொள்ளப்படுகிறது? சட்டத்தின் அடிப்படையிலா அல்லது ஆன்மீகத்தின் அடிப்படையிலா?
- உற்பத்தியாளரின் கருவிகள்/ நிலம்/ சில சமயங்களில் அவர்களின் உடல் மற்றும் மனதையும் சொந்தம் கொண்டாடுபவர்கள் யார்?
- உபரி உற்பத்தியின் விநியோகத்தை கட்டுப்படுத்துவது யார்?
- ரோம் அல்லது கிரேக்கத்தைப் போல ஆயிரக்கணக்கான அடிமைகளை சொந்தம் கொண்டாடும் எஜமானர்கள் எனும் முறை ஏன் இந்திய சமூகத்தில் இருக்கவில்லை?
- எப்பொழுது நாணயங்கள் சீரான முறையில் அமலுக்கு வந்தன?
- பவுத்தம்/ சமணம்/ ஆசிவகம் மற்றும் இவற்றை போல பல மதப்பிரிவுகள் ஏன் மகத தேசத்தில் அதுவும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் உருவாகி பிரபலமடைந்தன?
- ஏன் குப்த பேரரசு சமஸ்கிருதத்தை வளர்த்தது? ஏன் மவுரிய பேரரசில் அது நடைபெறவில்லை?
இவையெல்லாம் கோசாம்பி எழுப்பிய சில கேள்விகள். அதற்கு அவர் பதில்களை தேடினார்.
இந்திய சமூகத்தின் பல கட்டங்களில் அடிமைகள் உருவாயினர். உதாரணத்துக்கு, சிந்துசமவெளி மக்கள் மெசபடோமியாவுடன் அடிமைகள் வர்த்தகம் செய்தனர் என்பது வரலாற்று பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேபோல வேத காலத்தில் பல சமயங்களில் பெண்கள் அடிமைகளாக ஆளும் வர்க்கங்களுக்கும் மேல்தட்டு வர்ணத்தை சார்ந்தவர்களுக்கும் வீட்டுப்பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளனர். கி.மு. 400-100 குப்தர்கள் காலகட்டத்தில் அடிமைகள் உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டனர் என கவுடில்யரின் அர்த்த சாஸ்திரம் வெளிப்படுத்துகிறது. அடிமைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் அர்த்தசாஸ்திரம் குறிப்பிடுகிறது. வேத காலத்துக்கு பின்னரும், குறிப்பாக மவுரியர் காலத்தில், அடிமைகள் உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டனர் என வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. பின்னாட்களில் சுல்தான்கள் ஆட்சி காலத்தில் அடிமைகள் இருந்துள்ளனர். ஆனால் ஒரு சமூக உற்பத்தி முறை எனும் அடிப்படையில் பண்டைய இந்தியாவில் அடிமை சமூகம் இருந்தது இல்லை என்பது கோசாம்பியின் மதிப்பீடு ஆகும். இதனை அனேகமாக அனைத்து மார்க்சிய ஆய்வாளர்களும் ஏற்றுக்கொண்டனர். இந்திய வரலாற்றின் மார்க்சிய ஆய்வில் இது கோசாம்பியின் மிக முக்கிய பங்களிப்பு ஆகும்.
ஆசிய உற்பத்திமுறை
கோசாம்பி காலத்தில் மார்க்ஸ் “ஆசிய உற்பத்திமுறை” என்பதை முன்வைத்தார் என்பது பரவலாக விவாதிக்கப்பட்டது. கோசாம்பியும் ஏனைய சில மார்க்சிய ஆய்வாளர்களும் ஆசிய உற்பத்திமுறை என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆசிய உற்பத்திமுறை என்பது என்ன?
கிராமம் போன்ற சிறிய உற்பத்தி பகுதியில் நிலம் என்பது தனிப்பட்ட நபருக்கு இல்லாமல் சமூகத்துக்கு சொந்தமாகவும், அந்த குறிப்பிட்ட கிராமம் தனது சுய தேவைகளை தானாகவே பூர்த்தி செய்து கொள்ளும் அமைப்பாகவும், விவசாயமும் சிறு இயந்திர உற்பத்தியும் ஒன்றிணைந்த தன்மையும் இருந்தது என்பதே “ஆசிய உற்பத்திமுறை” என வரையறுக்கப்பட்டது. மார்க்சியம் முன்வைக்கும் பொருள்முதல்வாத அணுகுமுறையை அடிநாதமாக கொண்ட கோசாம்பி, மார்க்ஸ் முன்வைத்த “ஆசிய உற்பத்திமுறையை” ஏற்றுக்கொள்ள தேவையான தரவுகள் இல்லை என கருதியது என்பது கோசாம்பியின் சுயேச்சையான சிந்தனை மற்றும் ஆய்வை வெளிப்படுத்துகிறது.
1949ஆம் ஆண்டு கம்யூனிஸ்டு தலைவர் எஸ்.ஏ.டாங்கே “ஆதிபொதுவுடமையிலிருந்து அடிமை சமூகத்தின் பயணத்தில் இந்தியா” எனும் புத்தகத்தை எழுதினார். இந்த புத்தகத்தை கோசாம்பி மிகக் கடுமையாக விமர்சித்தார். டாங்கே போன்ற பிரபல கம்யூனிஸ்டு தலைவர் எவ்வித தரவுகளும் ஆதாரங்களும் இல்லாமல் மனம் போன போக்கில் மார்க்சியத்தை வறட்டு சூத்திரம் போல பயன்படுத்தினார் என குற்றம்சாட்டினார். இந்த விமர்சனத்தில்தான் முதன்முதலாக இந்தியாவில் அடிமை சமூக உற்பத்திமுறை உருவாகவில்லை எனும் மதிப்பீடை கோசாம்பி வெளிப்படுத்தினார். எவ்வளவு பெரிய கம்யூனிஸ்டாக இருந்தாலும், தான் முன்வைக்கும் மதிப்பீடுகளுக்கு ஆழமான, மிகவும் பொருத்தமான தரவுகள் அடிப்படையாக இருக்க வேண்டும் என கோசாம்பி வலியுறுத்தினார். இந்த விமர்சனத்தில்தான் “மார்க்சியம் ஆய்வுக்கு ஒரு கருவியாக இருக்க வேண்டுமே தவிர, சுய சிந்தனைக்கு மாற்றாக மார்க்சியத்தை பயன்படுத்த கூடாது” என வலுவாகக் கூறினார்.
அதே சமயம் மார்க்ஸ் ஆசிய உற்பத்திமுறையை விரிவாக விளக்கவில்லை என்பது மட்டுமல்ல; பின்னர் அந்த கோட்பாடை எங்கும் பயன்படுத்தவே இல்லை. அத்தகைய கோட்பாடுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என ஏங்கெல்ஸ் கருதியதாகவும், அதனால் மார்க்ஸ் அதை வலியுறுத்தவில்லை எனவும் மார்க்சிய பேராசிரியர் இர்ஃபான் ஹபீப் ஓர் இடத்தில் குறிப்பிடுகிறார். அந்த காலத்தில் மார்க்சின் கோட்பாடை கூட பொருத்தமான தரவுகள் இல்லையெனில் அதனை நிராகரிக்கும் கோசாம்பியின் துணிவையும் சுயேச்சையான சிந்தனையும் பெரிதும் வியக்காமல் இருக்க இயலாது. எனினும் “ஆசிய உற்பத்திமுறை” என்பதை மார்க்ஸ் வலியுறுத்தவில்லை என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.
சாதியே வர்க்கமாக!
இந்திய சமூகத்தில் அடிமை உற்பத்தி முறை இல்லையெனில் உபரிமதிப்பை உருவாக்கியவர்கள் யார்? இந்த கேள்விக்கு ஆய்வுகளின் அடிப்படையில் கோசாம்பி அளித்த பதில் மிக முக்கியமானது.
இந்திய சமூகத்தின் பண்டைய காலத்தில் உற்பத்தியின் தொடக்க கட்டத்தில் சாதி, வர்க்கமாகவும் உள்ளது என கோசாம்பி குறிப்பிடுகிறார். சாதி என்பது மத அடிப்படையில் உருவாகிற சமூக உணர்வு எனவும், தொடக்க உற்பத்தியாளரிடமிருந்து உபரி பறிக்கப்பட்டது; ஆனால் அதில் வன்முறை மிகக் குறைவாகவே பயன்படுத்த வேண்டிய சூழலை சாதி உருவாக்கியது; அதாவது சாதிய உணர்வு காரணமாக உபரி உற்பத்தியாளர் தான் சுரண்டப்படுவது நியாயமான ஒன்றுதான் என சிந்திக்கும் அளவுக்கு அவரது உணர்வு உருவாக்கப்பட்டது என கோசாம்பி குறிப்பிடுகிறார். சாதியம் என்பது வர்க்க சுரண்டலை நிலைநிறுத்தும் ஓர் அடிப்படையான ஏற்பாடு எனவும், இதன் மூலம் உற்பத்தியாளரிடமிருந்து உபரி பறிக்கப்படுகிறது எனவும் கோசாம்பி குறிப்பிடுகிறார். சாதியம் அல்லது வர்ணம் எனும் சமூக உணர்வு மூலம் பாதிக்கப்படுகிற உற்பத்தியாளரே, தனது உழைப்பை ஒரு பிரிவினர் சுரண்டுவது நியாயம்தான் என நினைக்கும் அளவுக்கு சமூக உணர்வு உருவாக்கப்பட்டது. எனவே அங்கு அடிமை உற்பத்தி சமூக முறைக்கு தேவை எழவில்லை. வர்க்க முரண்பாடுகள் அல்லது வர்க்க போராட்டத்துக்கான சூழலும் மிகக் குறைவாகவே இருந்தது.
வர்ண வேறுபாடுகளுக்கு ஆரியர்களே காரணம்
ஆரியர்களின் வருகைக்கு பின்னர்தான் வர்ண வேறுபாடுகள் உருவாயின. முதலில் போரில் தோற்றவர்களை ஆரியர்கள் தசாயுக்கள் அல்லது தாசர்கள் என வேறுபடுத்தினர். ஆரியர்கள் அல்லாதவர்கள் ஆரியர்களுக்கு சேவகம் செய்ய நிர்ப்பந்தப்படுத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் அடிமைகளாக இருக்கவில்லை. ஆரியர்கள் நாடோடிகளாக இருந்த காலம் அது. ஒரு நிலையான இடத்தில் விவசாயம் என்பது தொடங்கவில்லை. எனவே தாசர்கள் அல்லது தசாயுக்கள் ஒட்டு மொத்த ஆரிய சமூகத்துக்கும் சொந்தமானவர்களாக இருந்தனர். பின்னர் ஒரு கட்டத்தில் பழங்குடி இன மக்கள் ஆரிய சமூகத்தின் உறுப்பினர்களாக, ஆனால் கீழ்மட்டத்தில் நிறுத்தப்பட்டனர். அகமண முறை என்பது வலியுறுத்தப்பட்டது. ஆரியர்கள்- ஆரியரல்லாத தசாயுக்கள்/தாசர்கள் எனும் இரு வர்ண முறை நால் வர்ணமாக பரிணமித்தது எப்படி என்பதையும் கோசாம்பி விளக்கினார்.
நால் வர்ணமும் பிராமணியமும்
பிராமண வர்ணம் குறித்து கோசாம்பி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
“இந்திய மக்களை அடிமைப்படுத்தியதில் உள்ளூர் மற்றும் அன்னிய ஆளும் வர்க்கங்களுக்கு பிராமண பிரிவுதான் மிக இசைந்த கருவியாகப் பயன்பட்டது.”
இரு வர்ணங்களாக இருந்த ஆரியமுறையை நால் வர்ணங்களாக மாற்றியதிலும், அதனை வலுவாக நிலைநிறுத்தியதிலும், பிராமண பிரிவினர் மிகப்பெரிய பங்கை ஆற்றினர் என கோசாம்பி குறிப்பிடுகிறார். இரு வர்ணங்களாக இருந்தபொழுது அனைத்து வளங்களும் ஆரியர்களுக்கு (தாசர்கள் அல்லது தசாயுகளுக்கு அல்ல) பொதுவானதாக இருந்தது. ஆனால் நால் வர்ணம் நிலைநின்ற பொழுது அது சுரண்டல் கொண்ட வர்க்க சமூகமாக முற்றிலும் மாறியிருந்தது. பிராமண பிரிவு உண்டானது குறித்து ஒரு கருதுகோளை கோசாம்பி முன்வைக்கிறார். ஆரியர்களிடையே ஏற்கெனவே சடங்குகளை வழிநடத்தும் பூசாரிகள் இருந்தனர். சிந்து சமவெளி உட்பட, ஆரியர்களுக்கு முந்தைய பிரிவினரிடமிருந்து, பல பூசாரிகள் ஆரியத்துக்கு மடைமாறினர். அவர்களின் சடங்குகள் நடத்தும் திறமை காரணமாக, ஆரியமும் அவர்களை அரவணைத்து கொண்டது. ஆரிய பிரிவு பூசாரிகளும், ஆரியரல்லாத, ஆனால் ஆரியம் அரவணைத்து கொண்ட பூசாரிகளும் இணைந்து நாளடைவில் பிராமண பிரிவாக பரிணமித்தது. இவர்கள் அகமுறை மணம் வலுவாக முன்வைத்த நால் வர்ணத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தனர். பண்டைய இந்திய வரலாறு முழுதும் ஆரியரல்லாத பழங்குடி இன மக்கள் எப்படி ஆரிய சமூகத்தினுள் கரைந்தனர் என்பதை கோசாம்பி விளக்குகிறார். சடங்கு நடத்தும் பூசாரிகள் மேல் வர்ணத்தில் இணைந்த பொழுது ஏனையோர் கீழ்மட்ட வைசியர் அல்லது சூத்திரர்களாக ஆக்கப்பட்டனர். ஒரு குறிப்பிட்ட பழங்குடி இனம் பெரியதாகவும் அதன் தலைவன் ஆற்றல் கொண்டவனாகவும் இருந்தால் என்ன செய்வது? அதற்கும் பிராமணியம் வழியை கண்டுபிடித்தது. அந்த தலைவன் சத்திரியனாகவும், ஏனையோர் வைசியர்கள் அல்லது சூத்திரர்களாக இணைக்கப்பட்டனர்.
சாஸ்திரங்களின் வரையறுப்பு காரணமாக, பிராமணர்கள் ஏர் கலப்பை அல்லது வில்லை சுமக்க கூடாது. அதாவது உழவு தொழில் அல்லது போர் தொழிலில் ஈடுபடக்கூடாது. எனவே அவர்கள் வனப்பகுதிகளுக்குள் சென்று உணவு சேகரிக்கும் பழங்குடி இன மக்களின் சடங்குகளை கவனித்து உள்வாங்கினர். அதனை ஆரிய சடங்குகளுடன் இணைக்க முனைந்தனர். அந்த வழியில் பழங்குடி இன மக்களும் ஆரியத்துக்குள் நால் வர்ண முறையில் இணைக்கப்பட்டனர். ஆனால் கீழ்மட்டத்தில்தான் அனுமதிக்கப்பட்டனர்.
குப்தர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னால் வந்த ஆட்சியாளர்களால் இன்னொரு புதிய சூழல் உருவானது. மன்னர்கள் ஏராளமான நிலங்களையும் கிராமங்களையும் வரிகள் இல்லாமல் பிராமணர்களுக்கு தானமாக வழங்கி, அவற்றை அவர்களோ அல்லது சூத்திரர்களை கொண்டோ உழவேண்டும் என பணிக்கப்பட்டனர். பிராமணர்கள் பெரும்பாலும், சில விதிவிலக்குகள் தவிர, சூத்திரர்களை நிலத்தில் உழைக்க பயன்படுத்தினர். இது இரு விளைவுகளை உருவாக்கியது. ஒருபுறம் முதன் முதலாக சூத்திரர்களின் ஒரு பிரிவினர் வர்ணாசிரம கொடுமைகளிலிருந்து விடுதலை பெற்றனர். விவசாயிகளாக மாறினர். மறுபுறத்தில் பிராமணர்களைவிட கீழ்மட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாக அவர்கள் பிராமணிய கோட்பாடுகளில் இழுக்கப்பட்டனர்.
இந்திய உற்பத்திமுறை என்பது முதன்மை உற்பத்தியாளரிடருந்து உபரி உற்பத்தியை மிகக்குறைந்த வன்முறை மூலம் பறிக்கும் விதத்தில் கட்டமைக்கப்பட்டது என கோசாம்பி கூறுகிறார். இதில் வர்ணமும் சாதியமும் மிகப்பெரிய பங்கை வகித்தது. உபரி பறிப்பில் “அம்பு அல்லது வாளை விட (மனு) ஸ்மிருதிகளும் சாதியமும் மிக வலுவாக செயல்பட்டன. எனவே அடிமை சமூக உற்பத்தி முறைக்கான தேவையை அது உருவாக்கவில்லை” என கோசாம்பி கூறுகிறார்.
இந்திய சமூகத்தில் சமூக உற்பத்தி சூழல்கள்தான் சாதியை உருவாக்கியது. ஆனால் அதே சமயத்தில் உற்பத்திமுறையில் நவீன மாற்றம் வந்துவிட்டால் தானாக சாதி மறையும் என்பதையும் கோசாம்பி ஏற்கவில்லை. ஜப்பான் மிக நவீன உற்பத்தி சாதனங்களை உருவாக்கியது. ஆனால் அது நிலப்பிரபுத்துவ சிந்தனையில் எவ்வித மாற்றத்தையும் உருவாக்கவில்லை என குறிப்பிடுகிறார். சமூக வள்ர்ச்சியின் மீது சிந்தனை உருவாக்கும் தாக்கத்தை எந்த பொருள்முதல்வாதியும் குறைத்து மதிப்பிட கூடாது என்பது கோசாம்பியின் கருத்து. இந்த மதிப்பீடு இந்திய வரலாற்றை மார்க்சிய கோணத்தில் புரிந்து கொள்ள மிக முக்கியமானது என்பதை கூறத் தேவையில்லை.
மகத தேசத்தின் வினோத அரசுமுறை
கி.மு. 6 முதல் 3ஆம் நூற்றாண்டு வரை இருந்த மகத தேசத்தின் அரசு இயந்திரமுறை பற்றி கோசாம்பி பல முக்கிய தகவல்களை வெளிப்படுத்துகிறார். பொதுவாக நிர்வாக அதிகாரிகள் பிரிவு என்பது ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும். ஆனால் அதிகாரிகளே ஆளும் வர்க்கமாக இருந்தால்? அத்தகைய அரசுமுறைதான் மகத தேசத்தில் இருந்தது என கோசாம்பி குறிப்பிடுகிறார்.
- நிலங்களில் மிகப்பெரும்பான்மை அரசுக்கு சொந்தமாக இருந்தது.
- காடுகளை அழித்து விளை நிலங்களை உருவாக்கும் பணி அரசிடமிருந்தது.
- விளை பொருட்களை அரசுதான் வர்த்தகர்களுக்கும் ஏனையோருக்கும் விற்றது.
- தொழில்கள் முற்றிலுமாக அரசுக்கு சொந்தம்.
- கனிமவளங்கள், குறிப்பாக விவசாயம் மற்றும் போருக்கு தேவையான இரும்பினை வெட்டி எடுக்கும் அதிகாரம் அரசின் கைகளில்!
- சரக்கு உற்பத்தியும் அரசே செய்தது.
- அந்த காலத்திலேயே 10 லட்சம் வீரர்கள் கொண்ட படை இருந்தது.
- மிக வலுவான சிறந்த ஒற்றர்படை உருவாக்கப்பட்டது.
இத்தகைய அரசில் ஏற்கெனவே இருந்த வர்க்கங்கள் என எந்த வர்க்கமும் அதிகாரத்தில் இருக்கவில்லை. ஆனால் முற்றிலும் அதிகாரிகளே மன்னரின் கீழ் செயல்பட்டனர். அவர்களே ஆளும் வர்க்கமாகவும் இருந்தனர் என கோசாம்பி குறிப்பிடுகிறார்.
இந்த காலகட்டத்தில் வர்க்க பேதமற்ற பழங்குடி இனப்பிரிவினர் வர்க்க பேதமுள்ள சமூகத்தில் இழுக்கப்பட்டனர். அதற்கு பெரும் வழி வகுத்தது பிராமணர்கள். இதற்காக ஒரு புதிய அணுகுமுறை உருவாக்கப்பட்டது. உயர் வர்ணத்தினரின் கடவுள்கள் மற்றும் சடங்குகளை பழங்குடியினர் ஏற்றுக்கொள்ள வைக்கும் அதே சமயத்தில் பழங்குடியினத்தவரின் கடவுள்களும் சடங்குகளும் அரவணைக்கப்பட்டன. அவ்வாறு பழங்குடி இனப்பிரிவு ஆரியத்தில் கரையும்பொழுது அந்த இனத்தின் தலைவன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சத்திரியர்களாகவும் சாதாரண மக்கள் வைசியர்கள் அல்லது சூத்திரர்களாகவும் இணைக்கப்பட்டனர். ஒரு இனம் இன்னொரு இனத்துடன் இணையும்பொழுது சிலர் மேல் தட்டிலும் பலர் கீழ் தட்டிலும் இணைக்கப்படும் வினோதம் மகத தேசத்தின் காலத்தில் நடந்தது. இந்த வகையில் பழங்குடி இனத்தவரிடம் பிராமணிய சித்தாந்தத்தின் மேலாதிக்கம் பெரிய அளவுக்கான வன்முறை இல்லாமல் நிறுவப்பட்டது. வாள் அல்லது வில் மூலமாக அல்ல; மாறாக பரஸ்பர கடவுள்கள்/ சடங்குகள் பரிமாற்றம் மூலம் மேலாதிக்கம் நிறுவப்பட்டது. இந்த பரஸ்பர பரிமாற்றம் சமமானதாக இருக்கவில்லை.
இதில் இரண்டு முறைகளில் பிராமணிய மேலாதிக்கம் நிறுவப்பட்டது என கோசாம்பி குறிப்பிடுகிறார். வர்ணாசிரமத்துக்குள் கரைக்கப்படுபவர்களிடம் மட்டுமல்ல; கரைக்கும் வர்ணத்திடமும், அதாவது சத்திரியர்களிடமும் பிராமணிய மேலாதிக்கம் நிறுவப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை பிராமணர்களைவிட மேலாதிக்கம் பெற்றிருந்த சத்திரிய வர்ணம் இப்பொழுது பிராமணியத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வேன்டிய நிலை ஏற்பட்டது என கோசாம்பி குறிப்பிடுகிறார்.
இத்தகைய மதிப்பீடுகள் மூலம் இந்திய பொருள் முதல்வாதத்தின் எல்லைகளை கோசாம்பி விரிவுபடுத்தினார் என பிரபாத் பட்நாயக் குறிப்பிடுகிறார்.
சமஸ்கிருதத்தின் சார்புநிலை
சமஸ்கிருதத்தை கோசாம்பி கற்றது அவரது ஆய்வின் தேவைக்காக! ஏராளமான நாணயங்களை ஆய்வு செய்த கோசாம்பி பல நாணவியலாளர்கள் செய்வது போல அவற்றின் தொன்மை தன்மையை மட்டும் பார்க்கவில்லை. மாறாக, அந்த நாணயத்தை வெளியிட்ட மன்னன் அல்லது அரசு எது? என்பதை ஆய்வு செய்தார். நாணயம் வெளிப்படுத்தும் அதன் கால சூழலின் பொருளாதார நடவடிக்கைகள் என்ன என்பதை அறிய முற்பட்டார். அத்தகைய ஒரு முயற்சியில்தான் ஏராளமான நாணயங்கள் மகத தேசத்தில் பதுக்கிவைக்கப்பட்டன என்பதை அறிந்தார். அது மகத தேசத்தின் வர்த்தகத்தை பாதிக்க செய்தது. வர்த்தக வீழ்ச்சியின் விளைவாகவும் இருந்தது என்பதை கோசாம்பி கண்டுபிடித்தார்.
நாணயங்களை வெளியிட்ட மன்னரின் பெயரை அறிந்து கொள்ள முயற்சி செய்த பொழுது அவருக்கு குழப்பமே மிஞ்சியது. ஏனெனில் ஒரே மன்னர் பல பெயர்களால் அழைக்கப்பட்டார். வேதங்களில் ஒரு பெயர்; புராணங்களில் ஒரு பெயர்; சமண பவுத்த ஆவணங்களில் ஒரு பெயர்; வேறு ஆவணங்களில் மற்றொரு பெயர் என இருந்தது. எனவே அதன் உண்மைத் தன்மையை அறிய சமஸ்கிருதம் கற்றார். அது அவரது வரலாற்று ஆய்வுக்கு பல வகைகளில் பயன்பட்டது. அர்த்தசாஸ்திரம் போன்ற முக்கிய ஆவணங்களை அறிந்து கொள்ளவும் கோசாம்பிக்கு இது பயன்பட்டது.
சமஸ்கிருதத்தை வரலாற்று முதல்வாத அடிப்படையில் ஆய்வு செய்த முதல் ஆய்வாளர் கோசாம்பி எனில் மிகை அல்ல. சமஸ்கிருதத்தின் வர்க்க சார்பை கீழ்கண்டவாறு கோசாம்பி கூறுகிறார்:
“களத்தில் உயிரோடு இருக்கும் பல சமஸ்கிருத இலக்கியங்கள் மற்றும் ஆவணங்கள் பிராமணர்களால் உருவாக்கப்பட்டது; அல்லது அவர்களின் உடமையில் உள்ளது.”
ஒரு கட்டத்தில் சிறந்து விளங்கிய சமஸ்கிருதம் பின்னால் பிராகிருத மொழிக்கு வழிவிட வேன்டியதாயிற்று. அசோகர், குஷாணர் மற்றும் சதாவஹானா காலத்திய செப்பேடுகளும் கல்வெட்டுகளும் இதனை தெளிவாக வெளிப்படுத்தின. அதன் பின்னர்தான் மீண்டும் சமஸ்கிருதம் தலையெடுத்தது. இதற்கான காரணம் என்ன என்பதை ஆய்வு செய்த கோசம்பி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
“சமஸ்கிருதத்தின் மொழி மற்றும் கலாச்சாரம் என்பது இந்தியாவின் உற்பத்தி சக்திகளின் பரிணாமத்தோடு பின்னி பிணைந்திருந்தது; குறிப்பாக பிராமண சாதிய பிரிவுக்கு தனித்துவ இடம் உருவானதுடன் இது இணைந்திருந்தது”
பிராமணர்/ சத்திரியர்/ வைசியர்களுக்கு சடங்குகள் மற்றும் வேதம் கற்கும் உரிமை இருந்த பொழுது, அது சூத்திரர்களுக்கு மறுக்கப்பட்டது. மூன்று மேல்தட்டு வர்ணங்களையும் இணைக்கும் புதிய கருவியாக சமஸ்கிருதம் செயல்பட்டது. அதன் மூலம் சூத்திரர்களிடமிருந்து இந்த மூன்று பிரிவினரும் வேறுபட்டவர்கள் மற்றும் மேம்பட்டவர்கள் என்பதை இது நிலைநாட்டியது.
இன்னொரு இடத்தில் சமஸ்கிருதம் என்பது ஒரு வர்க்கத்தின் மொழி; மக்களுக்கான மொழி அல்ல; சமஸ்கிருதத்தின் நூல்கள் பொற்கொல்லருக்கோ/ தச்சருக்கோ/ குயவர்களுக்கோ/ நெசவாளிக்கோ/ உழுபவருக்கோ எந்த பலனையும் தரவில்லை என ஆழமான விமர்சனத்தை முன்வைக்கிறார் கோசாம்பி. ஒரு காலத்தில் மிகச்சிறந்த இலக்கிய நடையை கொண்டிருந்த சமஸ்கிருதம் பின்னர் இந்த மேல்தட்டு சார்பு நிலை காரணமாகவே சரிவை கண்டது. இந்த சமஸ்கிருதத்தைத்தான் மீண்டும் உயிர்ப்பிக்க இதர மொழிகளை சிதைக்கும் பணியில் சங் பரிவாரம் ஈடுபட்டுள்ளது.
சிந்து சமவெளி நாகரிகம்
சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் அல்ல என்பதை பல ஆதாரங்கள் மூலம் கோசாம்பி விளக்கினார். இந்தியாவின் முதல் நகர நாகரிகம் ஆரியர்கள் காலத்தில்தான் உருவானது எனும் கருத்தாக்கத்தை சிந்து சமவெளி நாகரிகம் குறித்த தொல்லியல் கண்டுபிடிப்புகள் வலுவாக மறுத்தன என்பதை குறிப்பிடும் கோசாம்பி, சிந்து நாகரிகம் உருவாக்கிய பிரமிக்கத்தக்க நகர அமைப்புகளை துல்லியமாக படம்பிடித்து காட்டுகிறார். சமகால நாகரிகங்களான சுமேரிய/ மெசபடோமியா/ எகிப்து ஆகியவற்றில் கூட இல்லாத அளவுக்கு, சிந்து சமவெளி நகரங்கள் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டன என்பதை ஒப்பிட்டு நிலைநாட்டுகிறார் கோசாம்பி. சிந்து சமவெளியின் தொல்லியல் ஆதாரங்கள் பெரும் எண்ணிக்கையில் கிடைத்தன; ஆனால் அதன் மொழி குறிவிலக்கு செய்யப்படாததால் அதன் முழுமையான விவரங்களை அறியமுடியவில்லை என்பதையும் பதிவு செய்கிறார். ஆரிய நாகரிகத்தின் பண்பாடும் சிந்து சமவெளி பண்பாடும் முற்றிலும் வேறுபட்டது என்பதை கோசாம்பி விளக்குகிறார். சிந்து நாகரிகத்தில் நிலவிய அரசு முறை, வர்க்க வேறுபாடுகள், ஆன்மீக செயல்பாடுகள் ஆகியவற்றையும் விளக்குகிறார். ஒரு சிறந்த நாகரிகம் ஏன் ஒரு மூலையில் சிறிய அளவில் மட்டும் இருந்தது; ஏன் இந்திய உபகண்டத்தின் மற்ற பகுதிகளுக்கு விரிவடையவில்லை எனும் நியாயமான கேள்வியையும் கோசாம்பி எழுப்புகிறார்.
எனினும் சிந்து சமவெளி நாகரிகம் குறித்த கோசாம்பியின் இரு மதிப்பீடுகள் பின்னர் கிடைத்த தரவுகள் மூலம் தவறு என நிரூபணம் ஆனது. சிந்து சமவெளியில் கலப்பை பயன்படுத்தப்படவில்லை என கோசாம்பி மதிப்பிட்டார். பின்னர் கலிபங்காண் எனும் இடத்தில் கலப்பை பயன்பாடு கண்டுபிடிக்கப்பட்டது. ஆரியர்களின் படையெடுப்பும் வன்முறையும்தான் சிந்து சமவெளி நாகரிகம் அழிந்ததற்கு காரணம் என கோசாம்பி மதிப்பிட்டார். சிந்து நாகரிகம் மறைவுக்கு அடிப்படை காரணம் இயற்கை பேரிடர்கள்தான் என்பதே இன்றைய ஆய்வாளர்களின் மதிப்பீடு ஆகும்.
கோசாம்பி-யும் கம்யூனிச இயக்கமும்
கோசாம்பி மார்க்சிய ஆய்வுமுறைகளை ஆழமாக பயன்படுத்தினார். இரண்டாம் உலகப்போரின் பின்னர் உருவான சமாதான இயக்கத்தில் கம்யூனிச இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டார். மாஸ்கோவிற்கு பயணித்து பல விவாதங்களை நடத்தினார். சோவியத் யூனியனில் அவர் சிறந்த ஆய்வாளர் என மதிக்கப்பட்டார். சீனா சென்று சூ-யென்-லாயை சந்தித்து விவாதம் நடத்தினார். எனினும், அவர் கம்யூனிஸ்டு கட்சியில் உறுப்பினராகவோ அல்லது ஊழியராகவோ இருந்தது இல்லை. அவர் காலத்தில் கம்யூனிச இயக்கத்தில் நடந்த சித்தாந்த விவாதங்களும் முரண்பாடுகளும் அவரை தள்ளி நிற்க வைத்தன. எனினும் கடைசிவரை சீனப்புரட்சியின் ஆதரவாளராகவே இருந்தார். இடதுசாரி சிந்தனையாளராகவே செயல்பட்டார். குறிப்பாக இந்திய வரலாற்றை “பழைய பெருமிதம்” என வலதுசாரிகள் உருவாக்க முனைந்த கட்டமைப்பை அவர் கடுமையாக எதிர்த்தார். இந்திய வரலாற்றை மார்க்சிய ஆய்வு மூலம் புதிய வெளிச்சத்தை தந்த கோசாம்பி இந்திய பொருள்முதல்வாதத்திற்கு பெரும் பங்களிப்பை செய்துள்ளார் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.
ஆதார நூல்கள்:
1. The many careers of Kosambi- M.N.Jha.
2. Culture, Civilisation of ancient India-Kosambi
3. An introduction to study of Indian History-Kosambi
4. History and Society-problems of interpretation-Kosambi.
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
