டீப்சீக்கும் – பங்குச் சந்தையும்
பிரசன்ன வெங்கடேஷ்
முதலாளித்துவத்தில் தொழில்நுட்பம்
“உற்பத்திக் கருவிகளையும், அதன்மூலம் உற்பத்தி உறவுகளையும், அவற்றோடு கூடவே ஒட்டுமொத்த சமுதாய உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவ வர்க்கம் உயிர்வாழ முடியாது.” என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.
சந்தையைக் கைப்பற்ற தங்களுக்குள் நிலவும் போட்டியில் முதலாளிகளும் அவர்களது நிறுவனங்களும் உற்பத்தி கருவிகளின் திறனை மேம்படுத்துவதில் எப்போதும் அதீத கவனம் செலுத்திக் கொண்டே இருப்பர். ஒவ்வொரு நிறுவனமும் முதலீடு மற்றும் லாபத்தின் ஒரு பகுதியை இதற்கென ஒதுக்கி தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவர். ஒரு நிறுவனத்தின் முதலாளி மூடநம்பிக்கைகளை பின்பற்றுபவராக இருக்கலாம், ஆனால் அவர் நிறுவனம் ஒருபோதும் அவ்வாறு செயல்படாது.
நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தான் உற்பத்தி நடைபெறும். உற்பத்தி கருவிகளும் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தின் விளைவு தான். இந்த உற்பத்தி கருவிகளை தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலமும், புதிய உற்பத்திக் கருவிகளை கண்டுபிடிப்பதன் மூலமும் ஒரு முதலாளி மற்ற முதலாளிகளை விட வேகமாக, செலவு குறைவாக உற்பத்தி செய்து சந்தையில் எப்போதும் முன்னிலையில் தன் நிறுவனத்தை வைத்துக்கொள்ள முயல்கிறார்.
இதன் விளைவு தான் இயந்திரமயமாக்கல் அல்லது ஆட்டோமேஷன் எனப்பட்டுவது. இது ஒன்றும் புதிதல்ல. 17-ம் நூற்றாண்டில் பிரெஞ்ச் அரசாங்கத்தின் வரி வசூலிப்பவரான தனது தந்தையின் கணக்கு வழக்குகளில் ஏற்படும் தவறுகளை குறைத்து அவற்றை எளிமைப்படுத்தவே கணிதவியலாளர் பாஸ்கல், “பாஸ்கல் கால்குலேட்டர்” என்ற கருவியை உருவாக்கினார்.
இவருடைய இந்த முயற்சி பல கணிதவியலாளர்களுக்கும், அறிவு ஜீவிகளுக்கும் ஆர்வத்தை அதிகரித்தது. இதனை சவாலாக எடுத்துக்கொண்ட ஜான் நேப்பியர், வில்ஹெம் ஷிக்கார்ட், லைப்னிஸ், பொலெனி, டார்ச்சி என பல ஆங்கிலேய மற்றும் ஐரோப்பிய கணிதவியலாளர்களும், கைவினைஞர்களும் ஒவ்வொருவரின் முயற்சியில் உள்ள குறைபாடுகளை தீர்க்க புதிய கால்குலேட்டர்களை உருவாக்கினர்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட கால்குலேட்டர்களை அக்காலத்தில் நிலவிவந்த ஆங்கிலேய மற்றும் ஐரோப்பிய அரசுகள் வரி வசூல் கணக்கு வழக்குகளை எளிமைப் படுத்திக்கொள்ள பயன்படுத்திக் கொண்டனர். இக்கால்குலேட்டர் இயந்திரங்களை இயக்கவும் மனிதர்கள் தேவை.
19-ம் நூற்றாண்டு வரை அனவைரும் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற கண்க்கிடும் கால்குலேட்டர்களை தான் உருவாக்கி வந்தனர். 19-ம் நூற்றாண்டில், “நவீன கணினியின் தந்தை” என அழைக்கப்படும் சார்லஸ் பேபேஜ் இதில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தினார்.
மனித ஆற்றலுக்கு பதிலாக நீராவி ஆற்றலை பயன்படுத்தும் விதமாக இவர் கணித இயந்திரங்களை வடிவமைத்தார். இதன் கட்டமைப்பும் செயல்பாடும் இன்றைய நவீன கணினிகளுக்கு முன்னோடியாக கட்டளைகளை பின்பற்றக் கூடியதாக இருந்தது. தனது தந்தையின் சொத்துக்கள் மூலம் செல்வந்தராகிய பேபேஜ் 19-ம் நூற்றாண்டின் தொழிற்புரட்சி காலத்தில், 1832-ல் “இயந்திரங்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் பொருளாதாரம் பற்றி” என ஒரு நூலை வெளியிட்டார்.
தொழிற்சாலைக்குள் தொழிலாளர்கள் தங்கள் திறமையை விட தகுதி குறைந்த வேலையை மீண்டும் மீண்டும் செய்வதில் நேரத்தை வீணடிக்கிறார்கள், இது உற்பத்தியாளர்களின் லாபத்தை பாதிக்கிறது எனவே இவ்விடத்தில் வேலை பிரிவினையும் இயந்திரங்களையும் புகுத்தினால் உற்பத்தியாளர்களின் லாபம் அதிகரிக்கும் என பரிந்துரைத்தார்.
இது தான் அன்று முதல் இன்று வரை உற்பத்தி கருவிகளின் திறனை தொடர்ந்து மேம்படுத்தவும், உற்பத்தியை இயந்திரமயமாக்கவும் முதலாளிகளை ஊக்கப்படுத்துகிறது. ஆடம் ஸ்மித், உரே மற்றும் பேபேஜ் ஆகிய மூவரின் கருத்துக்களை ஆராய்ந்த மார்க்ஸ், தொழிற்சாலை உற்பத்தி முறை முன்பிருந்த கைவினை உற்பத்தி முறைகளைக் காட்டிலும் சிறப்பாக செயல்படக் காரணம், தொழிற்சாலைக்குள் திட்டமிட்ட வேலைப் பிரிவினையும், இயந்திர புகுத்தலும் தான் என எடுத்துக்காட்டுகிறார். இயந்திர புகுத்தலும், திட்டமிட்ட வேலைப் பிரிவினையும் விரைவில் தொழிற்சாலைகளை தாண்டி விவசாயம் போன்ற பிற துறைகளுக்கும் விரைவில் பரவும் எனவும் கணித்தார்.
தொழிற்சாலை உற்பத்தி முறையை வெகுவாக பாராட்டிய மார்க்ஸ், இதே உற்பத்தி முறைதான் தொழிலாளர்களின் வேதனைகளுக்கும் காரணமாகிறது என்றார். இயந்திரங்கள் உற்பத்தி திறனை அதிகரிப்பது மானுட சமூகத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் முதலாளித்துவத்தில் தொழிலாளர்கள் சிக்குண்டு கிடப்பத்து தான் அவர்களின் வேதைனைக்கு வழிவகுக்கிறது எனவும் தெளிவாக சுட்டிக்காட்டினார்.
முதலாளித்துவமானது ஏகதிபத்தியமாக பரிணமிக்க, இதே நவீன தொழிற்சாலை உற்பத்தி முறையானது, மேற்கத்திய நாடுகள் காலனிய நாடுகளை சுரண்ட வழி வகுத்தது. தொழிற்சாலை உற்பத்தி மூலம் உருவாக்கிய மலிவு விலை பண்டங்களை காலனிய நாடுகளில் நிறப்பிய மேற்கத்திய நாடுகளின் முதலாளிகள், காலனிய நாடுகளில் கைவினைத் தொழில்களை நசுக்க, தொழில் வளர்ச்சியை அழித்தொழிக்கின்றனர். இதனால் காலனிய நாடுகளில் உற்பத்தி திறன் நலிந்து போனது. இதை பயன்படுத்தி, காலனிய நாடுகளின் வளங்களை (கனிம, பயர், தானிய வளங்களை) குறைந்த விலையில் அபகரித்து, சுரண்டிக் கொழுத்தன மேற்கத்திய நாடுகள். இன்றும் மேற்கத்திய நாடுகள் நவீன தொழிற்நுட்பங்களை கட்டுப்படுத்துவது தான் ஏகாதிபத்திய சுரண்டலிண் ஆணிவேராக உள்ளது.
செயற்கை நுண்ணறிவு – தொழில்நுப்ட பாய்ச்சல்
சரி, நாம் இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவத்திற்கு வருவோம். தொழிலாளர்களின் உதவியின்றி, பிழைகளின்றி, ஒரு இயந்திரம் உற்பத்தியில் தங்குத் தடையின்றி செய்லபட வேண்டுமென முதலாளி விரும்புகிறார். இந்த விருப்பம் தான் செயற்கை நுண்ணறிவு என்கிற ஒரு துறை உருவாக காரணமாகிறது.
இவ்வாறு தொடர்ந்து நடைபெறும் முயற்சியில், அவ்வப்போது ஒரு பாய்ச்சல் நிகழும். அதுபோன்ற ஒரு பாய்ச்சல் தான் தற்போது ஏ.ஐ (A.I.) எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறையில் நடந்து வருகிறது.
கணினித் துறை மிக வேகமாக மாறிவரும் துறை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வரை பெருந்தரவு (பிக் டேட்டா), மேகக் கணியம் (க்ளவுட் கம்ப்யூட்டிங்), பொருட்களின் இணைப்பு (இன்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ்) என பயணித்துக் கொணிடிருந்தது போய் தற்போது புதிய செயற்கை நுண்ணறிவு முறைகள் பரவலாகி வருகிறது. சமீபத்தில் கூட சீனாவில் ஒரு தனியார் தொடக்க நிறுவனம் வெளியிட்ட “டீப்சீக்” என்னும் LLM (Large Language Model) உலகம் முழுவதும் வைரலானது.
LLM எனப்படும் இந்த பெருமொழி மாடல்கள் தான் தற்போதைய செயற்கை நுண்ணறிவு பாய்ச்சலுக்கு காரணம் எனப்படுகிறது. “டீப்சீக்” தவிர ChatGPT, கூகுளின் ஜெமினி, மெட்டாவின் லாமா, மைக்ரோசாஃப்டின் ஃபி, ஃப்ரெஞ்ச் நிறுவனத்தின் மிஸ்ட்ரால் ஆகியவை தற்போது புழக்கத்தில் இருக்கும் பிற பெருமொழி மாடல்கள். இந்த செயற்கை நுண்ணறிவு முறை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதால் புழகத்திலுள்ள இவற்றுள் தொடர்ந்து போட்டி நிலவுகிறது.
இந்த பெருமொழி மாடல்கள் என்ன செய்யும்?
இவற்றால் கணிதக் கேள்விகளுக்கு விடையளிக்க முடியும், அவ்விடையை அடையும் வழிகளை விளக்க முடியும், ஒரு ஆவணத்தை கொடுத்து விளக்கச் சொன்னால் அதன் சுருக்கத்தை விளக்க முடியும், கவிதை எழுத முடியும், கணினி கட்டளைகள் மற்றும் நிரல்களை உருவாக்க முடியும், அவற்றில் உள்ள பிழைகளை கண்டறிந்து சரிசெய்ய முடியும், தர்க்கமான கேள்விகளை உள்வாங்கி பதிலளிக்க முடியும், பொது அறிவு கேள்விகளுக்கு விடையளிக்க முடியும், உரையாட முடியும். இதுபோன்ற செயல்கள் மனித அறிவால் மட்டுமே சாத்தியம் என்றிருந்த நிலை மாறி இயந்திரத்தால் செய்ய முடியும் என்பதே இதனை பாய்ச்சல் என கூற காரணமாகிறது.
இந்த பெருமொழி மாடல்களை உருவாக்க மூன்று பொருட்கள் அத்தியாவசியத் தேவை.
1. பிக் டேட்டா எனப்படும் பெருந்தரவுகள். டிஜிட்டல் வடிவ புத்தகங்கள், கட்டுரைகள், செய்திகள், கவிதைகள், படங்கள், காணொளிகள், கணினி நிரல்கள் என மனித படைப்புகள் அனைத்தும் இதில் அடங்கும்.
2. இவற்றைக் கொண்டு இந்த மாடல்களுக்கு பயிற்சி அளிக்க (எந்திரன் படத்தில் சிட்டி ரோபோவுக்கு வசீகரன் பயிற்சி அளிப்பது போல) பெரும் கணினி ஆற்றல் (GPU) தேவை.
3. இந்த பெரும் கணினி ஆற்றலை உண்டாக்க அதீத மின்சார ஆற்றால் தேவை.
இந்த மூன்றையும் கொண்டு நிரலாக்கம் செய்துதான் ஒரு பெருமொழி மாடல் உருவாக்கப்படுகிறது.
அமெரிக்க ஸ்புட்னிக் தருணம்
சரி, டீப்சீக் கதைக்கு வருவோம். சீன தொடக்க நிறுவனம், டீப்சீக் என்னும் பெருமொழி மாடல் வெளியிட்ட பிறகு அது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து ஊடகங்களும் இதனைப் பற்றி எழுதின. டீப்சீக், அமெரிக்க பங்குச் சந்தையில் சில நிறுவன பங்குகளின் குறுகியகால வீழ்ச்சிக்கு காரணமானது. ஏன்? எப்படி?
1940-களில் சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் விண்வெளி ஆய்வில் கடும் போட்டி நிலவியது. யார் முதலில் விண்வெளியை அடைவது எனும் போட்டி. இதில் சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் எனும் உலகின் முதல் செயற்கைகோளை விண்ணிற்கு அனுப்பியது, யூரி ககாரின் எனும் மனிதரை முதலில் விண்ணில் செலுத்தி மீண்டும் தரையிறக்கியது, வாலன்டீன டெரெஷ்கோவா எனும் முதல் பெண்ணை விண்ணிற்கு அனுப்பியது என பல மாபெரும் சாதனைகளை சோவியத் ஒன்றியம் படைத்தது. இதை அமெரிக்கர்கள், ஸ்புட்னிக் தருணம் என அழைக்கின்றனர்.
ஒரு சோசலிச நாடான சோவியத் ஒன்றியம், முதலாளித்துவ நாடான அமெரிக்காவை விட வேகமாக முன்னேறுவதை அவர்களால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. எனவே அமெரிக்காவும் அதன் விண்வெளி ஆராய்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கி வேகப்படுத்தியது.
செயற்கை நுண்ணறிவு துறையில் சீனாவிலிருந்து வெளிவந்துள்ள டீப்சீக் மாடல், மீண்டும் அமெரிக்காவுக்கு ஒரு ஸ்புட்னிக் தருணத்தை கொடுத்துள்ளது. எது நடந்துவிடக் கூடாது என்று அமெரிக்கா நினைத்து சீனா மீது தொழில்நுட்ப ஏற்றுமதி தடைகளை விதித்ததோ அதை நடத்திக் காட்டியிருப்பது சீன அரசோ அல்லது சீனாவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களோ இல்லை, மாறாக யாரும் அதிகம் கேள்விப்பட்டிராத ஒரு சிறிய தொடக்க நிறுவனம்.
தகர்ந்த அமெரிக்காவின் அராஜகம்
ஓப்பன் ஏஐ நிறுவனம், மெட்டா, கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் அவரவர் பெருமொழி மாடல்களை உருவாக்க அதீத கணித ஆற்றல் கொண்ட GPU-க்களை பெற NVIDIA என்கிற அமெரிக்க சிலிகான் நிறுவனத்தைத் தான் சார்ந்து உள்ளது. இந்நிறுவனம் தான் இன்று உலகளவில் சக்திவாய்ந்த் GPU-க்களை தயாரிக்கிறது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்த போது கடந்த 2023-ல், செயற்கை நுண்ணறிவில் சீனா முன்னேறிவிடக் கூடாது என்பதற்காக NVIDIA நிறுவனம் தனது நவீன GPU-களை (A100, H100) சீனாவுக்கும் சில மேற்காசிய நாடுகளுக்கும் விற்கக் கூடாது என தடை விதித்தது. எனவே NVIDIA நிறுவனம் செயல்திறன் குறைந்த H800 என்கிற GPU-களை சீன சந்தைக்கென பிரத்யேகமாக தயாரித்து விற்பனை செய்தது.
ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் தலைவராக உள்ள சாம் ஆல்ட்மேன், கடந்த ஆண்டு இந்தியா வந்திருந்தபோது அவரிடம் ஒரு தொழிலதிபர், “இந்தியா போன்ற நாடுகள், பெருமொழி மாடல்களை உருவாக்க என்ன செய்ய வேண்டும்?” என கேள்வி எழுப்பினார். அதற்கு சாம் ஆல்ட்மேன், “இது வீண் முயற்சி, நாங்கள் பல மைல்கள் முன்னே உள்ளோம். எனவே இது தோல்வியுற்ற ஒரு முயற்சியாகத் தான் அமையும்” என்று பதிலளித்தார்.
அதே நேரம் தற்போது அதிபராக உள்ள ட்ரம்ப், பதிவியேற்ற முதல் நாளே ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது ஒரு சில அமெரிக்க நிறுவனங்கள் (ஓப்பன் ஏஐ, ஆரக்கிள், சாஃப்ட்பேங்க் மற்றும் MGX) ஒன்று கூடி செயற்கை நுண்ணறிவில் அமெரிக்கா முதலிடம் பிடிப்பதை உறுதி செய்ய “ஸ்டார்கேட்” என்னும் புதிய நிறுவனத்தை உருவாக்குவதாகவும், இந்நிறுவனம் அடுத்த 4 ஆண்டுகளில் 600 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை திரட்டி அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவுக்கு தேவையான மிகப்பெரிய கட்டுமானத்தை உருவாக்க உள்ளதாகவும் அறிவித்தார்.
இம்முயற்சிக்கு அதிபராக தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் அவசரகால உத்தரவுகளையும் கூட பிறப்பிக்க தயார் எனவும் அவர் கூறினார். இந்த அறிவிப்பினால் பங்குச் சந்தையில் NVIDIA நிறுவனத்தின் பங்குகள் வேகமாக உயர்ந்தன. அத்தருணத்தில் தான் டீப்சீக்கின் வரவு அமெரிக்காவுக்கு பேரிடியாக இறங்கியது.
டீப்சீக்கின் புதுமை
அமெரிக்க நிறுவனங்களின் புழகத்திலுள்ள மாடல்களான ChatGPT, ஜெமினி, ஃபி, க்ளவுடே சோனட், போன்ற பெருமொழி மாடல்களுக்கு நிகராகவும், சற்று கூடுதலான திறனுடனும் டீப்சீக் செயல்படுவது உறுதியானது. அதுமட்டுமல்ல, ஒரு பெருமொழி மாடலை உருவாக்கி மேம்படுத்த ஸ்டார்கேட் நிறுவனம் மூலம் 600 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட அமெரிக்கா திட்டமிட்டிருந்த நேரத்தில், டீப்சீக் வெறும் 6 மில்லியன் (ஆம் பில்லியன் இல்லை மில்லியன்) அமெரிக்க டாலர் மதிப்பில் இதனை சாத்தியப்படுத்தியது. 600 பில்லியனுக்கும், 6 மில்லியனுக்கும் பெரிய இடைவெளி உள்ளது.
இந்தியா எப்படி செவ்வாய் கிரகத்திற்கு அமெரிக்காவை விட பன்மடங்கு குறைந்த செலவில் விண்கலனை அனுப்பியதோ அது போன்றதொரு சிறப்புமிக்க சம்பவம் இது.
அதுவும் NVIDIA-வின் செயல்திறன் குறைந்த 2000 H800 வகை GPU-க்களைக் கொண்டு இதனை சாத்தியப்படுத்தியது வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சியதாக அமெரிக்காவுக்கு இருந்தது. எதிர்காலத்தில் NVIDIA-வின் உற்பத்தி அதிகரித்து, சந்தை விரிவடையும் என நம்பியிருந்த அமெரிக்க பங்குச் சந்தையாளர்கள் இதன் விளைவாக பங்குகளை உடனடியாக வந்த விலைக்கு விற்கத் தொடங்கியதன் விளைவுதான் இந்த குறுகியகால பங்குச் சந்தை சரிவுக்கு காரணம்.
அதோடு டீப்சீக் பெருமொழி மாடலை யார் வேண்டுமானாலும் எடுத்து தங்கள் தேவைக்கு மாற்றியமைத்துக் கொள்ளும் உரிமத்தில் டீப்சீக் வெளியிடப்பட்டது இதன் பயன்பாட்டையும் மேம்பாட்டையும் இன்னும் வேகப்படுத்தும். உதாரணத்திற்கு இந்தியாவில் சில சிறிய நிறுவனங்கள் டீப்சீக்கை தரவிரக்கம் செய்து தங்கள் சர்வர்களின் பரிசோதித்துக் கொண்டிருக்கின்றனர்.
டீப்சீக்கை உருவாக்கியவர்கள் சில புதுமைகளை தங்கள் ஆராய்ச்சி மூலம் புகுத்தி, பெருமொழி மாடல்களை உருவாக்கி மேம்படுத்த மென்மேலும் அதீத கணினி, மின்சார ஆற்றல் மற்றும் கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்க வேண்டும் என்கிற சாம் ஆல்ட்மேனின் கருத்து தவறு என மெய்பித்திருக்கிறார்கள்.
டீப்சீக் நிறுவனத் தலைவர் லியங் வென்ஃபெங்கிடம், “நீங்களும் ஒரு நிறுவனம் தான் அதுவும் தொடக்க நிறுவனம், இப்படி உங்கள் அறிவியல் உருவாக்கத்தை அனைவரும் எடுத்து மாற்றியமைத்து கொள்ளலாம் என்கிற ஓப்பன் சோர்ஸ் உரிமத்தில் வெளியிட்டால் பிறகு எப்படி நீங்கள் சந்தையில் வியாபாரம் செய்ய முடியும்?” என்கிற கேள்விக்கு, அவர்,
“சீன நிறுவனங்கள் பல காலமாக தொழில்நுட்பத்தில் பின்தொடர்பவர்களாகத் தான் இருந்திருக்கின்றன, இது மாற வேண்டும், நாங்கள் உலகிற்கு பங்களிக்கவும், தொழில்நுட்பத்தில் முன்னோடிகளாக இருக்க விரும்புகிறோம். மேலும் ஓப்பன் சோர்ஸ் என்பது ஒரு கலாச்சார நடவடிக்கை அது வெறும் வியாபார நோக்கிறாக மட்டும் செய்யப் படுவதில்லை. புதுமைகளை படைக்க எப்போதும் வணிகம் மட்டுமே உந்து சக்தியாக இருக்க வேண்டும் என்பதில்லை, அதற்கு ஆர்வமும் ஆக்கப்பூர்வமான லட்சியமும் கூட உதவலாம்.“, என பதிலளித்துள்ளார்.
மார்க்ஸ் சுட்டிக்காட்டியது போல், இயந்திரமயமாக்கலும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் மானுட சமூகத்தை அடுத்த நிலைக்கு உயர்த்திச் செல்லும் தூண்கள். இவை முதலாளித்துவ உற்பத்தி உறவுகளில் தொழிலாளர்களுக்கு எதிராகவும், அறிவுசார் சொத்துரிமையின் கீழ் பிற நாடுகளின் வளர்ச்சியை தடுப்பதிலும் தான் சிக்குண்டு கிடக்கிறது.
“ஓப்பன் சோர்ஸ் வியாபர நோக்கம் சார்ந்ததல்ல, அது கலாச்சார இயக்கம்”எனக் கூறும் டீப்சீக் நிறுவனரும், இப்படி நவீன செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தை ஓப்பன் சோர்ஸ் முறையில் வெளியிட்டு, ஏகாதிபத்திய நாடுகளின் தொழிற்நுட்ப ஏகபோக ஆதிக்கத்தின் மீது பெரும் தாக்குதலை தொடுத்து, தொழிற்நுட்ப வளர்ச்சியில் ஜனநாயகத்துவத்திற்கு வழிவகை செய்துள்ளது. . சீனாவின் டீப்சீக் என்பதை விட சீனாவிலிருந்து வெளிவந்துள்ள டீப்சீக் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
தொடர்ச்சி
இந்த பெருமொழி மாடல்கள் பிரச்சனைகள் இல்லாத ஒன்று அல்ல. குறிப்பாக அமெரிக்க ஸ்டார்கேட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவுக்காக மாபெரும் கட்டுமானத்தை உருவாக்க நினைக்கிறது. இதற்கு வழி வகுக்கத் தான் அமெரிக்கா, பாரிஸ் பருவநிலை மாநாட்டு ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கியது. தடையின்றி படிம எரிபொருட்கள் மூலம் மின்சாரம் உருவாக்கி, அதைக் கொண்டு பெருமொழி மாடல்கள் வளர்ச்சியை பாய்ச்சல் வேகத்தில் கொண்டு செல்ல முனைகிறது ட்ரம்ப் அரசாங்கம். இதனால் பருவநிலை மாற்றம் தீவிரம் அடைந்து, வளரும் நாடுகள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதைத் தவிர, செயற்கை நுண்ணறிவால் கேள்விக்குள்ளாகும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு; பெருமொழி மாடல்கள் குறித்து பிரபல் இடதுசாரியும், மொழியியல் வல்லுநருமான பேராசிரியர் நோம் சாம்ஸ்கியின் கருத்து போன்றவற்றை அடுத்தடுத்த கட்டுரைகளில் காணலாம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
