
ஜனநாயக மத்தியத்துவம் குறித்து
ஸ்ரீதிப் பட்டாச்சார்யா
(அரசியல் தலைமை குழு உறுப்பினர்)
“ஜனநாயக மத்தியத்துவம்” என்பது கம்யூனிச இயக்கத்துடன் இணைந்துள்ள அனைவரும் நன்றாக அறிந்த வார்த்தைகள். கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பின் மிக மிக முக்கிய கோட்பாடு ஜனநாயக மத்தியத்துவம் ஆகும். கம்யூனிஸ்ட் கட்சியின் உயிர்நாடி ஜனநாயக மத்தியத்துவம் என வரையறுக்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை சாராம்சம் ஜனநாயக மத்தியத்துவம்.
ஜனநாயக மத்தியத்துவம் என்பதில் ஜனநாயகம் மற்றும் மத்தியத்துவம் எனும் இரு வார்த்தைகள் ஒன்றிணைந்திருப்பதை நாம் காணலாம். இந்த இரு சொற்களின் பொருள் மிகவும் எதிர்மறை அம்சங்கள் கொண்டவை. ஜனநாயக மத்தியத்துவம் என்பதில் இந்த எதிர்மறை அம்சங்களின் ஒற்றுமையை காண்கிறோம். இது இயக்கவியல். எனவே கட்சி அமைப்புக்குள் இயக்கவியலின் வெளிப்பாடு ஜனநாயக மத்தியத்துவம் என குறிப்பிடலாம்.
விவாதத்துக்கு மிகவும் போதுமான வாய்ப்பு; விவாதத்துக்கு பின்னர் முடிவு எட்டப்படுகிறது; அந்த முடிவு அனைவரையும் கட்டுப்படுத்தும். இதுவே ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படை அம்சம் ஆகும்.
ஜனநாயக மத்தியத்துவம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் அமைப்பு சட்டம்
மார்க்சிஸ்ட் கட்சியின் அமைப்பு சட்டத்தில் ஜனநாயக மத்தியத்துவம் குறித்து ஒரு அத்தியாயம் உள்ளது. அதில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
பிரிவு-13
ஜனநாயக மத்தியத்துவத்தின் கோட்பாடுகள்
- கட்சியின் அமைப்பு ஜனநாயக மத்தியத்துவத்தின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இக்கோட்பாடுகளே கட்சியின் உள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகும். உட்கட்சி ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட மத்தியத்துவப்படுத்தப்பட்ட தலைமையும் மத்தியத்துவப்படுத்தப்பட்ட தலைமை வழிகாட்டலின் கீழ் ஜனநாயகமுமே மத்தியத்துவம் என்பதன் பொருளாகும்.
கட்சி அமைப்பு என்ற முறையில் ஜனநாயக மத்தியத்துவத்தின் வழிகாட்டும் கோட்பாடுகள் வருமாறு:
அ) கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை கட்சியின் சகல அமைப்புகளும் தேர்ந்தெடுக்கப்படும்.
(ஆ) பெரும்பான்மையின் முடிவுகளை சிறுபான்மை நிறைவேற்றும். மேல் மட்டத்திலிருக்கும் கட்சி அமைப்புகளின் முடிவுகளையும் கட்டளைகளையும் கீழ் மட்டத்திலிருக்கும் கட்சி அமைப்புகள் நிறைவேற்றும். கூட்டு முடிவுக்கு தனி நபர் தன்னை உட்படுத்திக் கொள்வார். கட்சியின் எல்லா அமைப்புகளும் கட்சியின் அகில இந்திய மாநாடு மற்றும் மத்தியக் குழுவின் முடிவுகளையும் கட்டளைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
இ) கட்சியின் எல்லா குழுக்களும் முறையாக அதனதன் வேலைகளைப் பற்றி குறிப்பிட்ட கால இடைவெளியில் தனக்கு உடனடியாக கீழுள்ள ஸ்தாபனத்திற்கு ரிப்போர்ட் (அறிக்கை) செய்யவேண்டும். அதேபோன்று எல்லா கீழ்மட்ட குழுக்களும் அடுத்துள்ள மேல்குழுவுக்கும் வேலைகளைப் பற்றி அறிக்கைகள் அனுப்ப வேண்டும்
ஈ) எல்லா கட்சிக் குழுக்களும் குறிப்பாக தலைமை வகிக்கும் கட்சி குழுக்கள் கீழ் மட்டத்திலிருக்கும் கட்சி அமைப்புகள் மற்றும் சாதாரண கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கும் விமர்சனங்களுக்கும் தொடர்ச்சியாக உரிய கவனம் செலுத்த வேண்டும்.
உ) அனைத்து கட்சி குழுக்களும் கூட்டு முடிவுகள் எடுப்பது, கூட்டு கண்காணிப்பு என்பதுடன் கூட்டு முடிவு, தனிப் பொறுப்பு என்ற கொள்கைகளின் அடிப்படையில் கறாராக செயல்படவேண்டும்.
ஊ) சர்வதேசப் பிரச்சனைகள்/ அகில இந்தியத் தன்மையுள்ள பிரச்சனைகள் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அல்லது நாடு முழுவதுக்கும் ஒரே மாதிரியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் அனைத்தையும் கட்சியின் அகில இந்திய ஸ்தாபனங்கள் முடிவு செய்யும். மாநில அல்லது மாவட்டத் தன்மை கொண்ட எல்லா பிரச்சனைகளையும் பொதுவாக, அந்தந்த மட்டத்திலுள்ள கட்சி ஸ்தாபனங்கள் முடிவு செய்யும். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் அம்மாதிரியான முடிவுகள் கட்சியின் எந்தவொரு மேல்மட்ட ஸ்தாபனத்தின் முடிவுகளுக்கும் முரணாக இருக்கக்கூடாது. மாநில அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த எந்தப் பிரச்சனையிலாவது கட்சியின் மத்தியத் தலைமை ஒரு முடிவு எடுக்க வேண்டியபொழுது பொதுவாக சம்பந்தப்பட்ட அந்த மாநில கட்சி ஸ்தாபனத்துடன் கலந்தாலோசித்த பிறகு அம்முடிவு எடுக்கப்பட வேண்டும். மாவட்டம் குறித்து மாநில கட்சி ஸ்தாபனம் இதே போல் கலந்தாலோசிக்க வேண்டும்.
எ) அகில இந்திய அளவில் கட்சியின் கொள்கையை பாதிக்கும் பிரச்சனைகளில் கட்சியின் நிலை முதன்முறையாக வெளிப்படுத்தும் பொழுது கட்சியின் மத்திய தலைமைக்குத்தான் ஒரு கொள்கை அடிப்படையிலான அறிவிப்பை வெளியிட உரிமையுண்டு. இது பற்றிய தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கீழ்மட்ட குழுக்கள் மத்திய தலைமையின் பரிசீலனைக்கு குறித்த காலத்துக்குள் அனுப்ப முடியும். அனுப்பி வைக்கவும் வேண்டும்.
2. கட்சி உறுப்பினர் அனைவரின் அனுபவத்தையும், வெகுஜன இயக்கத்தின் அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டு உட்கட்சி வாழ்க்கையில் கீழ்கண்ட ஜனநாயக மத்தியத்துவத்தின் கோட்பாடுகள் செயல்படுத்தப்படும்:
அ) கட்சியையும் அதன் கொள்கையையும் அதன் பணியையும் பாதிக்கும் எல்லா பிரச்சனைகளின் மீதும் கட்சி யூனிட்டிற்குள் சுதந்திரமான மனந்திறந்த விவாதம் நடத்துவது.
ஆ) கட்சி கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கும் செயல்படுத்துவதற்கும் கட்சி உறுப்பினர்களை இயக்க உறுதியான இடைவிடாத தொடர் முயற்சிகள் மேற்கொள்ளுதல்; கட்சியின் வாழ்க்கையிலும் கட்சியின் வேலையிலும் பயனுள்ள முறையில் கட்சி உறுப்பினர்கள் ஈடுபாடு கொள்ளும் அளவுக்கு அவர்களது தத்துவார்த்த அறிவையும் அரசியல் அறிவையும் உயர்த்துவதுடன் அவர்களின் பொதுக்கல்வியையும் அபிவிருத்தி செய்தல்.
இ) ஒரு கட்சிக் குழுவுக்குள் தீவிர கருத்து வேறுபாடுகள் தோன்றும் பொழுது ஒருமித்த கருத்து உருவாக சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு ஒருமித்த கருத்து ஏற்படாவிட்டால், மேலும் விவாதித்து ஒருமித்த கருத்து உருவாக ஏதுவாக முடிவு எடுப்பதை தள்ளிப் போட வேண்டும். கட்சியின் தேவைகள் அடிப்படையிலும் வெகுஜன இயக்க அடிப்படையிலும் உடனடியாக ஒரு முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இருந்தாலொழிய மேற்கண்ட நடைமுறை பின்பற்ற வேண்டும்.
ஈ) மேலிருந்து கீழ்வரை எல்லா மட்டங்களிலும் விமர்சனத்தையும், சுயவிமர்சனத்தையும் ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக கீழிருந்து வரும் விமர்சனத்தை ஊக்குவிக்க வேண்டும்.
(உ) அதிகார மனோபாவ எதேச்சதிகாரப் போக்குகளை எதிர்த்து கட்சியின் எல்லா மட்டங்களிலும் இடைவிடாது போராட வேண்டும்.
ஊ) எந்த வடிவத்திலும் கட்சிக்குள் கோஷ்டி மனப்பான்மையையும் கோஷ்டிகளையும் அனுமதிக்க முடியாது.
எ) கட்சி தோழர்கள் ஒருவருக்கொருவர் சகோதர உறவுகளை வளர்ப்பதன் மூலமும் பரஸ்பரம் உதவி செய்வதன் மூலமும் தோழமை உணர்வை வலுப்படுத்த வேண்டும். தவறுகளை திருத்தும் பொழுது தோழர்களிடம் நேசத்துடனும் அனுதாபத்துடனும் அணுக வேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாக தோழர்கள் செய்யும் தவறுகள் அல்லது சம்பவங்கள் அடிப்படையில் அல்லாமல், கட்சிக்கு அத்தோழர்கள் செய்திருக்கும் ஒட்டுமொத்தமான சேவையை கணக்கிலெடுத்துக் கொண்டு அவர்களைப் பற்றியும் அவர்களது பணியைப் பற்றியும் ஒரு மதிப்பீடுக்கு வரவேண்டும்.
ஜனநாயக மத்தியத்துவம் எனும் கருத்தாக்கத்தை கம்யூனிஸ்டு கட்சி அமைப்புக்குள் பொருத்தியதில் லெனினின் பங்கு!
ஜனநாயக மத்தியத்துவம் எனும் கோட்பாடை விவாதிக்கும் பின்னணியில் “என்ன செய்ய வேண்டும்?” எனும் லெனினின் அற்புதமான படைப்பை குறிப்பிட வேண்டியது அவசியம். ஒரு புரட்சிகர அமைப்பை உருவாக்குவதற்காக, கட்சி அமைப்பு பற்றிய சித்தாந்தத்தை நடைமுறையில் சாத்தியமாக்க, நடத்தப்பட்ட போராட்டத்தின் பின்னணியில் “என்ன செய்ய வேண்டும்?” எனும் நூலை லெனின் எழுதினார். இந்த நூல் 1901ம் ஆண்டு எழுதப்பட்டு 1902ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதே போல 1904ம் ஆண்டு எழுதப்பட்ட இன்னொரு படைப்பான “ஓரடி முன்னால் ஈரடி பின்னால்” எனும் நூல் பற்றியும் குறிப்பிடுவது அவசியம். இந்த நூலில்தான் (புரட்சிகர) போல்ஷ்விக் மற்றும் (திருத்தல்வாத) மென்ஷ்விக் கருத்துகளிடையே உள்ள வேறுபாடுகள் குறித்து விளக்கப்பட்டன.
கட்சி அமைப்பு குறித்து லெனின் உருவாக்கிய சித்தாந்தத்தின் அடிப்படையான முக்கிய சாரம்தான் ஜனநாயக மத்தியத்துவம். ஒரு புரட்சிகர கட்சி செயல்படுவதன் குறிப்பான சூழலில் மத்தியத்துவத்தையும் ஜனநாயகத்தையும் இரண்டற ஒன்றுபடுத்துவதின் கட்டமைப்புதான் லெனின் உருவாக்கிய இந்த சித்தாந்தம் ஆகும்.
முதலாளித்துவ சமூகத்துக்குள், அந்த முதலாளித்துவ அமைப்பை மாற்ற வேண்டும் எனும் கொள்கை இல்லாமல் செயல்படும் சமூக ஜனநாயக (முதலாளித்துவ) கட்சிகளுக்கு புரட்சிகர அமைப்பின் தேவை எழவில்லை. அவர்களுக்கு ஜனநாயக மத்தியத்துவம் எனும் கோட்பாடு வெறுப்பாகவும் வேப்பங்காயாகவும் கசக்கிறது. வர்க்கப்போராட்டம் என்பது ஒரு கூட்டு செயல்பாடு என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ஜனநாயக மத்தியத்துவம் என்பது கூட்டு முடிவு எடுப்பதையும் மற்றும் கூட்டு செயல்பாடையும் வலுவாக முன்நிறுத்தி வலியுறுத்துகிறது. அது (விவாதத்தின் பொழுது) கருத்தின் சுதந்தரத்தையும் (அமலாக்கத்தின் பொழுது) நடைமுறையின் ஒற்றுமையையும் அனுமதிக்கிறது.
தொழிலாளர்களுக்கு ஒற்றுமை தேவை என்பதை லெனின் அங்கீகரித்தார் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதனுடன் அவர் இன்னொன்றையும் கூடுதலாக சொன்னார். “ஒற்றுமை குறித்து எந்த வாக்குறுதியையும் தர இயலாது; அத்தகைய வாக்குறுதி என்பது எவ்வித அடிப்படையுமின்றி உருவாக்கப்படும் உணர்ச்சியாகவும் சுயஏமாற்றமாகவுமே இருக்க இயலும்; அறிவு ஜீவிகளின் குழுக்களிடையே உருவாகும் ஒப்பந்தம் மூலம் ஒற்றுமையை உருவாக்க முடியாது. இங்குதான் ஜனநாயக மத்தியத்துவம் குறித்து லெனின் முன்வைக்கிறார். “அமைப்பு (ஸ்தாபனம்) இல்லாமல் ஒற்றுமை சாத்தியம் இல்லை; பெரும்பான்மையோர் கருத்துக்கு சிறுபான்மையினர் தம்மை உட்படுத்திக் கொண்டாலொழிய அமைப்பு சாத்தியம் இல்லை.”
லெனின் இரு கருத்தாக்கங்களுக்கு முக்கியத்துவம் அளித்தார். பெரும்பான்மையான தொழிலாளர்களின் ஆதரவு மற்றும் புரட்சிகரமான மார்க்சிய திட்டம். இதில் இரண்டாவது அம்சமான புரட்சிகரமான மார்க்சிய திட்டம் என்பது தீர்மானகரமான முக்கியத்துவம் என லெனின் கருதினார். சரியான புரட்சிகரமான திட்டத்துக்கு ஆதரவாக தொழிலாளி வர்க்கத்தின் பெரும்பான்மை ஆதரவை பெறுவது தேவை எனவும் அது சாத்தியம் எனவும் லெனின் நம்பினார். அதன் இன்னொரு பிரிக்க முடியாத அம்சமாக லெனின் முன்வைத்தது என்னவெனில் அடிப்படை (மார்க்சிய) கொள்கைகளில் சமரசம் இல்லை என்பதாகும். துல்லியமாக சொல்வதானால் இதனைதான் போல்ஷ்விக்குகள் 1914ம் ஆண்டு சாதிக்கும் செயலாக்கத்தில் இருந்தனர். ஆனால் லெனினின் வாதத்தில் மேலும் முக்கிய அம்சங்கள் இருந்தன. அவரது தர்க்க அடிப்படையிலான கருத்து என்னவெனில் மார்க்சிய திட்டம் குறித்த முக்கிய கோட்பாடில் கொள்கை அடிப்படையிலான கருத்து வேறுபாடுகள் இருந்தால், அது தவிர்க்க இயலாமல் ஜனநாயக மத்தியத்துவம் செயல்படுவதை இயலாத ஒன்றாக ஆக்குகிறது.
ஜனநாயக மத்தியத்துவம் இல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சி இருக்க இயலாது!
சர்வதேச கம்யூனிஸ்டு இயக்கத்தின் அனுபவம் என்னவெனில் எப்பொழுதெல்லாம் ஜனநாயக மத்தியத்துவம் பலவீனம் அடைகிறதோ அப்பொழுதெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியும் கலைக்கப்படுகிறது என்பதுதான்! 1950ம் ஆண்டுகளிலிருந்து வலது திருத்தல்வாத சித்தாந்தம் சோசலிச சோவியத் யூனியனில் மேலோங்கிய பொழுது கட்சியும் பலவீனம் அடையத் தொடங்கியது. ஜனநாயக மத்தியத்துவம் கடுமையாக சிதைக்கப்பட்டது. (சோசலிச நிர்மானத்தின்) முதன்மை கருவியான கட்சி பலவீனப்பட்டது. இறுதியில் ‘பெரஸ்ட்ரோய்க்கா’ மற்றும் ‘கிளாஸ்னாட் ‘ எனும் பெயரில் ஜனநாயக மத்தியத்துவம் முற்றிலுமாக அகற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சோசலிசமே அழிக்கப்பட்டது.
ஜனநாயக மத்தியத்துவம் இருப்பதிலும் வலுப்படுத்துவதிலும் கட்சி தலைமையின் பங்கு மிக முக்கியமானது!
கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புக்குள் ஜனநாயக மத்தியத்துவம் செழுமையாகவும் தொடர்ச்சியாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு கட்சி தலைமையின் பங்கு மிக முக்கியமானது. இதுவே சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அனுபவமும் ஆகும். கட்சியின் அன்றாட அமைப்பு செயல்பாடுகளில் கட்சி தலைமையின் செயலூக்கமும் அழுத்தமும் இருந்தால் ஜனநாயக மத்தியத்துவ நடைமுறைகளை வலுவாக்க முடியும்.
கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் ஜனநாயக மத்தியத்துவம் குறித்த முறையான அறிவுசார் சிந்தனையை உருவாக்கினால் கட்சிக்குள்ளும் அதன் செயல்பாடுகளிலும் வலுவான செயலூக்கத்தையும் செயல் வேகத்தையும் பரிணமிக்க வைக்க முடியும். எனவே ஜனநாயக மத்தியத்துவத்தின் பொருத்தமான நடைமுறையை உத்தரவாதப்படுத்துவது கட்சியின் பல்வேறு மட்டத்தில் உள்ள தலைமையின் கடமையும் பங்கும் ஆகும். அதற்காக “ஜனநாயக மத்தியத்துவம்” குறித்து மிகத்தெளிவான புரிதல் கட்சியின் அனைத்து மட்டத்தில் உள்ள தலைமையில் உள்ளவர்களுக்கும் இருக்க வேண்டும். இன்றைய சூழலின் சவாலை எதிர்கொள்ள கட்சியின் அன்றாட நடைமுறையில் ஜனநாயக மத்தியத்துவத்தின் சாரம் மற்றும் உத்வேகத்தை முழுமனதுடன் செயலாக்கத்துக்கு கொண்டு வருவது அவசிய தேவை ஆகும்.
தமிழில்: அன்வர் உசேன்
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply