இயக்கவியல் பொருள்முதல்வாதம் – மத்திய கட்சி கல்வி பாடக்குறிப்பு
அறிமுகம்
மார்க்சிய தத்துவம், மற்ற அனைத்து தத்துவ இயல்களைக் காட்டிலும் மிகச் சிறந்த, விஞ்ஞான முறையிலான புரட்சிகர தத்துவமாகும். மார்க்சிய தத்துவம், தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைப் போராட்டத்தை கோட்பாட்டு வழியிலும் சித்தாந்த வழியிலும் ஆகச் சிறந்த விதத்தில் ஆற்றல்மிக்க ஆயுதப்பாணியாக்குகிறது. பல சிக்கல்கள் நிறைந்த சமூக, அரசியல் நிலைமைகளை சரியான முறையில் அணுகுவதற்கு ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை தகுதிப்படுத்துகிறது. நடைமுறையை விஞ்ஞான வழியில் பகுத்தாய்வு செய்வதற்கும், வரையறுக்கப்பட்ட முன்னுரிமை கடமைகளை தெளிவாக விளங்கிக் கொள்வதற்கும், அவற்றை நிறைவேற்றுவதற்கான மிகப் பயனுள்ள வழிமுறைகளை கண்டறிவதற்கும், அது உதவுகிறது. எனவே, மார்க்சிய தத்துவத்தை பற்றிய முழுமையான அறிவைப் பெறுவது ஒரு மார்க்சியவாதிக்கு மிக முக்கியமான ஒன்றாகும். மேலும், புரட்சிகர சமூக மாற்றத்திற்காக நடைபெற்றுக் கொண்டிருக்கும் கடினமான வர்க்கப் போராட்டத்தில் ஒருவர் தம் பங்கினை புரிந்துக் கொள்ளவும் இது தேவையாகிறது.
தத்துவம் என்றால் என்ன?
இயற்கை, சமூகம், மனித சிந்தனை ஆகியவை குறித்தும், அதன் வளர்ச்சிப் போக்குகள் பற்றியும் தீர்மானிக்கிற பொதுவான விதிகளை அணுகிடும் ஓர் ஆய்வுமுறையே தத்துவம் ஆகும்.
ஒவ்வொரு மனிதரும் உணர்வுப்பூர்வமாகவோ, அல்லது ஆழ்சிந்தனையின் வாயிலாகவோ, தன்னை சுற்றியுள்ளவை பற்றியும், அதன் நிகழ்வுப் போக்குகளை பற்றியும் அறிய – விவரிக்க முயற்சிகளை மேற்கொண்டு, அதில் பொதுவான கருத்துகளை உருவாக்குகிறார்கள். இந்த வகையில், ஒவ்வொரு மனிதருமே ஒரு தத்துவவாதியே. அதே சமயம், இந்தக் கருத்துகளில் பொதுத்தன்மை இருப்பினும், அவை வேறுபாடுகள் நிறைந்த கலவையாகவும், முரண்பாடுகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. பொதுவான ஒத்திசைவு இல்லாதபோதும் அவை தத்துவார்த்த உள்ளடக்கம் கொண்டவைகளாகும்.
வர்க்க சமூகமும்- தத்துவமும்
தத்துவம் என்பது வர்க்க சார்பற்ற நடுநிலையான ஒன்றல்ல. ஆளும் வர்க்கம் அல்லது ஆளப்படும் வர்க்கம் ஆகியவற்றின் நலன்களை பாதுகாக்கும் முனைப்புடன் உருவானதே தத்துவம் ஆகும். அதனால், தத்துவம் என்பது வர்க்கச் சார்பான ஒன்றே ஆகும்.
தத்துவம் இரு வகைகளில் பங்காற்றுகிறது. 1. சுரண்டல் சமூக அமைப்பு முறையை தூக்கிப் பிடிக்கிறது. 2. இந்தச் சுரண்டல் சமூக அமைப்பு முறையை மாற்றம் காண விழைபவர்களை ஊக்கப்படுத்தி, ஆற்றல் தரும் பணியைச் செய்கிறது.
வரலாறு நெடுகிலும், பொதுவாக ஆளும் வர்க்கத்துக்கு ஆதரவாக, கருத்து முதல்வாத அடிப்படையிலான பலவகை கண்ணோட்டங்கள் செயல்படுகின்றன. ஆனால், உழைக்கும் மக்களின் தத்துவமாக பொருள்முதல்வாத சிந்தனையே எப்பொழுதும் இருந்து வருகிறது.
அடிமை சமூக அமைப்பில் தன்னெழுச்சியான பொருள்முதல்வாத சிந்தனையே, சுரண்டப்பட்டு வந்த மக்களின் தத்துவமாக இருந்துள்ளது. 17, 18ஆம் நூற்றாண்டுகளில் உருவான முதலாளித்துவ சமூகத்தில், இயக்க மறுப்பியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது. அதன் பின்னர், 19ஆம் நூற்றாண்டில் உருவான இயக்கவியல் பொருள்முதல்வாத தத்துவ இயலே, முதலாளித்துவ சமூக அமைப்பில் பெரும் எண்ணிக்கையில் உள்ள உழைக்கும் தொழிலாளி வர்க்கத்தின் தத்துவமாக இருந்து வருகிறது. இந்த காரணத்தால் தான் முதலாளிய வர்க்கம் தனக்கு உள்ள மிகப் பெரிய ஆபத்தாக மார்க்சீய தத்துவத்தைப் பார்க்கிறது.
லெனின் இவ்வாறு கூறினார் :
நாகரீக உலகம் எங்கிலும், (அதிகாரப்பூர்வ மற்றும் தாராளவாத) முதலாளித்துவ அறிவியலானது, மார்க்சின் போதனைகளுக்கு எதிராக, விரோதத்தையும், வெறுப்பையுமே தூண்டுகிறது. மார்க்சிய தத்துவம் ஒரு ‘தீய வகைப்பிரிவு’ என்று சொல்கிறது. வர்க்க போராட்டத்தை அடிப்படையாக கொண்ட ஒரு சமூகத்தில் ‘பாரபட்சமற்ற’ சமூக அறிவியல் இருக்க முடியாது எனும்போது, வேறு விதமான அணுகுமுறையை எதிர்பார்க்க வேண்டியதில்லை. அனைத்து அதிகாரப்பூர்வ மற்றும் தாராளவாத அறிவியலும், கூலி அடிமைத்தனத்தை ஏதாவது ஒரு விதத்தில் பாதுகாக்கிறது. ஆனால் மார்க்சியமானது, அடிமைத்தனத்தின் மீது இடைவிடாத போரை அறிவித்துள்ளது. கூலி-அடிமைச் சமூகத்தில் விஞ்ஞானம் பாரபட்சமற்றதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பது, மூலதனத்தின் லாபத்தைக் குறைப்பதன் மூலம் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிக்கக் கூடாதா என்ற கேள்விக்கு உற்பத்தியாளர்களிடமிருந்து பாரபட்சமற்ற பதிலை எதிர்பார்ப்பது போன்ற, முட்டாள்தனமான அப்பாவித்தனமாகும்”
தத்துவ ஞானத்தின் இரண்டு பெரும் பிரிவுகள்
வரலாறு மற்றும் தத்துவ ஞான இயலின் வளர்ச்சிப் போக்குகள் பற்றிய ஆய்வு இரு வகையான தத்துவ ஞானப் பிரிவுகள் எல்லாக் காலத்திலும் இருந்து வந்துள்ளதை நமக்கு உணர்த்துகிறது. அவையாவன, கருத்து முதல்வாதம், பொருள்முதல்வாதம். இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவும், கருத்தியல்ரீதியாக வேறுபட்டதாகவும் உள்ள, தத்துவ ஞான முறைகளாகும். வேறுபாடு எதன் அடிப்படையிலானது என்றால் – பொருளா அல்லது கருத்தா எது முன்னது என்கிற கேள்வியும், அதற்கான பதிலும் தான். இது தத்துவஞான இயலின் அடிப்படையான கேள்வியாகும். பொருள்தான் முன்னது; அது எல்லையற்றது. உணர்வையும் உணர்வின் நுட்பமான பல அடுக்குகளையும் உருவாக்கியதும் பொருள்தான் என்று பொருள்முதல்வாதம் சொல்கிறது.
கருத்துமுதல்வாதமோ, பொருளற்ற, ஆன்மா சார்ந்த சிந்தனையே முதலானது; பொருளானது இரண்டாம்பட்சமானது என்றும், பொருளே சிந்தனையின் அல்லது கருத்தின் வெளிப்பாடுதான் என்றும் சொல்கிறது. இயற்கைக்கும் மனித சமூகத்திற்கும் அப்பால் ஓர் உணர்வு உள்ளது என்ற கருத்தை முன் வைக்கிறது.
கருத்து முதல்வாதம் பொருள்முதல்வாதம் இரண்டையும் பிரித்துக் காட்டும் அடுத்த மையமான கேள்வி என்னவென்றால், புறநிலையில் உள்ள பொருளை நாம் அறிய முடியுமா?
சரியான அணுகுமுறை, வழிமுறைகள் மூலம் உண்மையிலேயே பொருள்கள் பற்றி அறிய வாய்ப்புள்ளது என்கிறது பொருள்முதல்வாதம். ஆனால் கருத்துமுதல்வாத சிந்தனையோ, பொருளைப் பற்றி நாம் அறிவது சாத்தியமல்ல; ஏனென்றால் அது யாருடைய கைகளுக்கும் எட்டாத, அறுதியான ஆழ்நிலை சிந்தனையினால் படைக்கப்பட்டது என்று சொல்கிறது.
கருத்து முதல்வாதம்
கருத்து முதல் வாதத்தை பற்றி விவாதிப்பதற்கு முன்னர், ஒன்றை குறிப்பிட்டே ஆக வேண்டும். அதைக் குறிப்பிடாமல், விவாதம் முழுமை அடையாது. கருத்துமுதல் வாதம் மதம் சார்ந்த சிந்தனைகளுக்கு தலைமை தாங்கும் ஒரு தத்துவ பிரிவாகும். மதம் சார்ந்த பல கோட்பாடுகள், மூட நம்பிக்கைகள் கருத்து முதல்வாதத்தின் வடிவங்களாகும். மறுபுறம் மதம் சார்ந்த சிந்தனைகள் கருத்துமுதல்வாதத்தை வளர்த்தெடுக்கவும் செய்தது.
கருத்து முதல் வாதத்தை பற்றி பேசும்போது, இருமைவாதம் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். கருத்து முதல் வாதத்தையும் பொருள் முதல்வாதத்தையும் சமரசம் செய்வது இருமை வாதம் ஆகும். இது ஆன்மீக உலகம், பொருள் சார்ந்த உலகம் இரண்டையும் ஏற்றுக் கொள்கிறது. இரண்டு தத்துவ இயல் பிரிவுகளையும் சமப்படுத்தியும், இரண்டும் தனித்தனியாக இருக்கிற உண்மைகள் என்றும் ஏற்றுக்கொள்கிறது. நவ-நேர்மறைவாதம் என்பதும் (neo-positivism) கருத்துமுதல் வாதக் கண்ணோட்டத்திற்கு எடுத்துக்காட்டாகும். வெறும் கோட்பாட்டு ரீதியான (புறநிலையை கணக்கில் கொள்ளாத) சிந்தனையின் வளர்ச்சி என்பது ஆரம்ப நிலையில் சுருக்கமான முறையில் கருத்து முதல் வாதத்தையே முன்னிறுத்தும். பொருள்களில் இருந்து அதன் கோட்பாட்டுகளை பிரித்தெடுக்கும் அளவிற்கு, மனித குலத்தின் அறிவு வளர்ச்சி பெறாத காலத்தில் உருவான, தவிர்க்க முடியாத பிரச்சனைகளை எதிர்கொள்ளாத சூழலில், கருத்து முதல் வாதம் ஒரு கோட்பாடாகிறது. எனவே, அது விஞ்ஞான வளர்ச்சிக்கு எதிரான ஒன்றாகும்.
எல்லா வகையான கருத்து முதல்வாத கோட்பாடுகளையும் இரண்டு வகையாக பிரித்து விடலாம்.
அவை, புறநிலை கருத்து முதல் வாதம், அகநிலை கருத்து முதல் வாதம் ஆகியவையாகும். புற நிலை கருத்து முதல் வாதம்.
முதன்மையானது ஆன்மா; இரண்டாவது தான் பொருள் அதுவும் ஆன்மாவிலிருந்து உருவானது என்பது புறநிலை கருத்து முதல் வாதம் ஆகும். அந்த முதன்மையான ஆன்மா தனிப்பட்ட அல்லது மனித மனம் சார்ந்ததோ அல்ல. மாறாக அது ஒரு பிரபஞ்ச காரணி. எல்லாவற்றிற்கும் அடிப்படையானதே ஆன்மா மற்றும் அது ஒரு வகையான பிரபஞ்ச உணர்வு நிலை என்று புறநிலை கருத்து முதல் வாதம் கருதுகிறது.
யாருடைய கைக்கும் எட்டாத, ஆழ்நிலை படிமமான அதிசயத்தக்க சக்தி. அதுவே எல்லாவற்றிற்கும் பின்னால் உள்ள பிரபஞ்ச உண்மையாகும் என்று முன்வைக்கிறது. புறநிலையில் நாம் காணும் பொருள் வகைப்பட்ட உலகம் என்பது அந்த அதிசய சக்தியின் படைப்பே ஆகும். மனிதனும் மனித சமூகம் கூட அந்த புறநிலை உலகில் இருப்பதால் அவையும் கூட மேற் சொன்ன சூழ்நிலை வகைப்பட்ட அனைத்திற்கும் மேலான அந்த சக்தியே ஆகும். எனவே அனைத்தும் மாயமானதே. எல்லா பொருட்களும் அந்த சக்தியின் செல்வாக்கிற்கு உட்பட்டவையே. எனவே புற உலகைப் பற்றி அறிய முயற்சிப்பதே ஒரு வீணான வேலையாகும் என்கிறது.
இதற்கு உதாரணமாக பிளேட்டோ, அஃஹினோ, ஹெகல் போன்ற தத்துவஞானிகளை குறிப்பிடலாம்.
அக நிலை கருத்து முதல் வாதம்
சிந்தனையுடன் பிணையாமல் சுதந்திரமாக புறநிலை உண்மையாக பொருள்கள் இருப்பதையே இந்த அகநிலை கருத்து முதல் வாதம் மறுக்கிறது. இக்கோட்பாட்டை பொறுத்த மட்டிலும், உணர்வு நிலைக்கு அப்பால், எந்த புறநிலை எதார்த்தத்தமும் உலகில் இல்லை. உணர்வின் நிலையான, ஒருங்கமைக்கப்பட்ட வெளிப்பாடுகளே, புற உலகமாகும். பொருட்களை பற்றி, பிரபஞ்சத்தைப் பற்றி, ஆய்ந்து அறிய கூடிய அறிவு கூட பொய்யானது. ஏனெனில் கண்முன் தோன்றுவது எல்லாம் உண்மையல்ல; மாயத் தோற்றமே. உணர்வு என்ற ஒன்று இல்லாமல் பொருட்கள் கிடையாது. பொருட்களை சிவப்பாகவும் பச்சையாகவும், மஞ்சளாகவும், நான் பார்க்கிறேன் என்றால், நான் அவ்வாறு விருப்பப்பட்டதால்தான் பார்க்கிறேன். அந்த வண்ணங்களோ அவற்றை தாங்கிய பொருட்களோ உண்மை இல்லை. மரங்களோ, கட்டிடங்களோ, அனைத்தும் எனது உணர்வின் அடிப்படையில், என் விருப்பத்தால்தான் என்னால் முடிகிறது. எனவே பொருட்கள் நிறைந்த புற உலகம் என்பது உண்மையில் இல்லை. ஒருவருடைய உணர்வை, எண்ணங்களைத் தாண்டி, எதுவுமே இல்லை.
பெர்க்லி பாதிரியார், ஹியூம், பாச் மற்றும் சர்ட்ரே போன்ற தத்துவஞானிகள் அக நிலைவாதத்தை முன்வைத்தவர்கள்.
பொருள் முதல் வாதம்
பொருள் என்பதே நிச்சயமான உண்மை. அதுவே முதன்மையானது என்று பொருள் முதல்வாதம் கருதுகிறது. பொருள்களின் வளர்ச்சிப் போக்கில் உணர்வு உருவானது. மேலும் உணர்வு என்பது மனித மூளை என்ற தனித்துவமான ஒரு பொருளின் விளைவே. இயற்கை விஞ்ஞானத்தில் ஏற்பட்ட பல சகாப்தங்களை உருவாக்கிய கண்டுபிடிப்புகளோடும், மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சி போக்கோடும் இணையாக பொருள் முதல்வாதம் வளர்த்தெடுக்கப்பட்டது. திட்டவட்டமான உலகக் கண்ணோட்டத்தை அது மனித சமூகத்திற்கு அளித்தது. அது ஒரு உலக கண்ணோட்டமாகும்.
மனித வாழ்வில் ஏற்படும் அன்றாட கஷ்டங்களை, பிரச்சனைகளை தாண்டி முன்னேற தீர்மானகரமான வழிமுறைகளை அது நமக்கு வழங்குகிறது. உலகத்தில் உள்ள ஒவ்வொரு பொருள்களைப் பற்றியும், நடைபெறும் நிகழ்ச்சி போக்குகள் குறித்தும், விளக்கம் அளிக்க முடியும் என்று பொருள் முதல்வாதம் உறுதியிட்டு கூறுகிறது. நடைமுறை, அனுபவம், பரிசோதனைகளின் வழியாக, அவ்வாறு அறிய முடியும் என்று நம்புகிறது. அது எதார்த்த நிலைமைகளில் இருந்து மட்டுமே அறிய முயற்சிக்கிறது.
மனித சமூகம், அது வளரும்போது, மனித சமூகத்தின் உணர்வு நிலையையும் வளர்த்தெடுத்து ஒழுங்கமைக்கிறது. பொருள்களுக்கும் உணர்வுக்கும் இடையே உள்ள உறவு நிலையை அது வெளிப்படுத்துகிறது. கடவுள் கோட்பாட்டை இயற்கைக்கு அப்பால் உள்ள சக்தி என்று முன் வைக்கப்படும் கருத்துக்களை, பொருள் முதல்வாதம் நிராகரிக்கிறது. மனித குலம் மண்ணில் தோன்றுவதற்கு முன்னர் இருந்தே, பொருள்கள் வியாபித்து இருந்தன. அதுவேதான் பொருள்கள் படைப்பு பற்றியோ, அவற்றைப் படைத்த படைப்பாளர் (கடவுள்) பற்றியோ கேள்விக்கே இடமில்லை. குறிப்பிட்ட நோக்கத்திற்காக, திட்டமிடப்பட்ட வகையில் இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்ற கருத்தை நிராகரிப்பதோடு, இப்பிரபஞ்சம் எல்லையற்றது என்றும் பொருள் முதல்வாதம் விவரிக்கிறது. மனித குலம் தனது நடவடிக்கைகளை அதுவே உணர்வுபூர்வமாக தீர்மானிக்கிறது; மேற்கொள்கிறது. பிரபஞ்சத்தில் உள்ள பிற உயிர்ப் பொருட்களோடும் பரஸ்பரம் உறவு கொண்டு, அதன் அடிப்படையில், மனித சிந்தனைகள், உணர்ச்சிகள், இலட்சியங்கள், எதிர்பார்ப்புகள் இவை எல்லாம் இணைந்து, ஒரு குறிப்பிட்ட உயிர்ப் பொருளாக, மனித சமூகம் வளர்கிறது. அதே சமயம், அத்ததைய சிந்தனைகளோ, உணர்ச்சிகளோ, லட்சியங்களோ மற்றும் எதிர்பார்ப்புகளோ, குறிப்பிட்ட காலகட்டத்தில் மனித சமூகத்தின் பொருளாதார – சமூக வளர்ச்சி போக்கோடு இணைந்தே வளர்கிறது. விஞ்ஞானத்தின் வழியாக இந்த பிரபஞ்சத்தை பற்றி நம்மால் அறிய முடியும்; அது சாத்தியமான ஒன்றுதான் என்பதை பொருள் முதல்வாதம் முன் வைக்கிறது.
விஞ்ஞானம்
மனித இனம் உருவான காலத்தில் இருந்து உயிர் வாழ்வதற்கும், தனது இருப்பை நிலைநாட்டவும், அயராத போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது. உற்பத்தி நடவடிக்கைகளில் மனித உழைப்பு ஈடுபடும்போது, இயற்கையை மாற்றி அமைக்க முடிந்தது. இந்த உற்பத்தி நடவடிக்கை நிகழ்வதின் மூலமாகத்தான் விஞ்ஞானம் உருவானது. விஞ்ஞானம் என்பது இயற்கை நிகழ்ச்சி போக்குகளை புரிந்து கொள்வதும், அதனுள் செயல்படும் விதிகளை பற்றி அறிந்துக் கொள்வதுமே ஆகும். பொருள்களைப் பற்றியும், அதன் தொடர்புடைய நிகழ்வு போக்குகளைப் பற்றியும் புரிந்துக் கொள்வதை, விஞ்ஞானத்தின் பல வழிமுறைகள் சாத்தியமாக்கின. மனித குலத்தின் நேரடி நடவடிக்கைகளோடு தொடர்புடைய விஞ்ஞானம் மட்டுமே அறிவை பெறுவதற்கு சரியான வழி வகையாகும். பொருள் மற்றும் நிகழ்வு போக்குகள் (இயற்கை சமூகம் சார்ந்த) இவற்றிற்கிடையில் உள்ள இதுவரை கண்டிராத, புதிய, ஒன்றுக்கொன்றான உறவுகளை விஞ்ஞானம் தொடர்ந்து புலப்படுத்துகிறது. பொருளின் உள்ளுறையாக இருக்கும் புதுப்புது முரண்பாடுகளைப் பற்றியும், ஞானத்தை விஞ்ஞானத்தின் முன்னேறிய வளர்ச்சியின் மூலமாக நாம் அறிய முடிகிறது. சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் எழக்கூடிய பல புதிய புதிய கேள்விகளுக்கும், அவைகளுக்கு விடை காண வேண்டிய மனித அறிவின் போதாமைகளுக்கும், இடையில் ஏற்படும் முரண்பாடுகளை தீர்த்து வைப்பது, விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சிப் போக்குதான்.
அதேசமயம் பொருள் முதல்வாத சிந்தனையை பலவீனப்படுத்துவதற்கு, இதே விஞ்ஞானத்தில் பல்வேறு வகையிலான வளர்ச்சி நிலைகளை தவறுதலாக திசை திருப்பக் கூடிய வகையில் முன்வைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 21 ஆம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில் (1901-1920) தோழர் லெனின் இந்த திசை திருப்பும் முயற்சிகளுக்கு எதிரான, வலிமையான தத்துவ போராட்டத்தை மேற்கொண்டு, பொருள் முதல் வாதத்தை காத்து நின்றார்.
1. தற்செயல் பொருள் முதல்வாதம்
ஆதி காலத்தில் மனிதனுடைய அன்றாட அனுபவங்களிலிருந்து பெறும் அறிவை பொதுமைப் படுத்தி தான் தற்செயல் பொருள் முதல்வாதம் உருவானது. இந்தியாவின் சார்வாகம் எனும் தத்துவ பிரிவினை பின்பற்றியவர்கள் இவ்வகையை சேர்ந்தவர்கள். சீன தேசத்தில் ஃபேன் வான் சூ (Fan Wan Xu) என்ற தத்துவ ஞானி தற்செயல் பொருள் முதல்வாத பாரம்பரியத்தை சேர்ந்தவர். கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஹெராக்ளிட்டஸ், டெமாக்ரிட்டஸ் ( Heraclitus and Democritus) இருவரும் தற்செயல் பொருள் முதல்வாதிகளே. இவர்கள் எல்லாம் இந்த பிரபஞ்சம் பொருள்களால் ஆனது என்பதை வலியுறுத்திய அதேசமயம், அதன் வளர்ச்சிப் போக்கை உள்வாங்கி புரிந்து கொள்ள இயலாதவர்களாக விளங்கினர்.
2. இயக்க மறுப்பியல் பொருள் முதல் வாதம்
17, 18ஆம் நூற்றாண்டுகளில் உருவான ஒரு தத்துவ இயலாகும். இந்த தத்துவ இயலை முன்வைத்தவர்கள் இங்கிலாந்தை சேர்ந்த பிரான்சிஸ் பெக்கன், ஜான் லாக், டச்சு நாட்டை சேர்ந்த ஸ்பினாசோ, பிரான்சை சேர்ந்த ஜூலியன் மெட்ரீ, டிடரோட், ஹெல்விசியஸ் மற்றும் ஜெர்மனியரான ஃபெயர்பெக் ஆகியோர் ஆவர். பொருள்களைப் பற்றியோ, அதன் வளர்ச்சி போக்குகள் பற்றியோ, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல், தனித்தனியாக, அளவு ரீதியாக மட்டும் குணரீதியாக இல்லாமல் ஆய்வு செய்யும் ஒரு அணுகுமுறையே இயக்க மறுப்பியல் பொருள் முதல் வாதம் ஆகும். பிரபஞ்சம் இயங்குவதின் மூலம் பல மாற்றங்களுக்கு உட்பட்டு பல புதிய வளர்ச்சி நிலைகளுக்கு மாற்றம் பெறுகிறது என்ற உண்மையை, இயக்க மறுப்பியல் பொருள் முதல் வாதம் ஏற்பதில்லை.( இயற்கை மற்றும் சமூகத்தில் நிலவும் இயக்கத்தினை மறுக்கும் தத்துவமாகும்) இன்றைக்கும் கூட, இந்த இயக்க மறுப்பியல் சிந்தனை முறை பல்வேறு வடிவங்களில், மனிதர்களிடையே இருக்கிறது என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டி உள்ளது.
3. இயந்திரவியல் பொருள் முதல்வாதம்
எதிரே உள்ள பிரபஞ்சம் இயந்திரகதியான இயக்கத்தில் உள்ளது. ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஒரு இயந்திரத்தை போன்றது என்றும், அதை ஓட விட வெளியிலிருந்து ஒரு சக்தி தேவைப்படுகிறது என்றும், இயந்திரவியல் பொருள் முதல் வாதம் முன்வைக்கிறது. ஒரு முதன்மையான இயக்குவிப்பான் இல்லாமல் பிரபஞ்சத்தில் இயக்கமோ, அதன் காரணமாக ஏற்படும் மாற்றங்களோ நடைபெற முடியாது. இயற்கைக்கு வெளியே இருக்கும் ஒன்றின் மூலமாக, அல்லது ஒருவரின் மூலமாக மட்டுமே இயக்கத்தை உருவாக்க முடியும். இது வளர்ச்சியை மறுதலிக்கிறது. பொருள் மற்றும் நிகழ்வு போக்குகளில் ஏற்படும் மாற்றங்களை இயந்திரவியல் பொருள் முதல்வாதம் கணக்கில் கொள்வதில்லை.
சர் ஐசக் நியூட்டன் கண்டுபிடித்த இயக்க விதிகள் பற்றிய கோட்பாடுகள் இத்தகைய ஒரு தத்துவ பிரிவு உருவாவதற்கு அடிகோலியது எனலாம். முன் சொன்ன இயக்க மறுப்பியல் பொருள் முதல்வாதத்திற்கும் இயந்திரவியல் முதல்வாதத்திற்கும் நிறைய ஒருமைப்பாடு உள்ளது.
4. சிந்தனை வயப்பட்ட அல்லது சிந்தனையை முன்னிறுத்தும் பொருள் முதல் வாதமும் (Contemplative Materialism) மார்க்சின் விமர்சனமும்
மனித குலம், மனித சமூகம் என்பது அதைச் சுற்றியுள்ள இயற்கையின் சுற்றுச்சூழலில் படைப்பு என்ற வாதத்தை பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்த, எந்திரகதியாக அல்லது சிந்தனை வயப்பட்ட பொருள் முதல் வாதிகள் ஆணித்தரமாக முன்வைத்தனர். அதேசமயம் கருத்து முதல்வாதிகள், இவ்வாதத்திற்கு நேர் எதிராக, சிந்தனை ஆற்றலே இயற்கையை படைத்தது என்ற வாதத்தை முன்வைத்தனர். ஆனால் இயக்கவியல் பொருள் முதல் வாதமோ இவ்விரண்டு வாதங்களின் போதாமையை எடுத்துக்காட்டியது. மனித சமூகத்திற்கும் இயற்கைக்கும், மனிதர்களுக்கு இடையிலும் தொடர்ச்சியாக இடைவிடாது வினையும் எதிர்வினையும் என தொடர் செயல்பாடுகள் உள்ளன. இந்த தொடர் பரஸ்பர தாக்கங்களின் விளைவே, மனித அறிவு என்ற வாதத்தை, இயக்கவியல் பொருள் முதல் வாதம் முன்வைக்கிறது. மனித குலம், தான் பெற்றிருக்கும் அறிவின் மூலம் வளர்ந்த சிந்தனை ஆற்றலின் மூலம், இயற்கையை மாற்றும் வல்லமை படைத்தது என்பதை, இயந்திரகதியாக சிந்திக்கும் பொருள் முதல்வாதிகள் ஏற்றுக்கொள்வதில்லை. மறுபுறத்தில், மனித சமூகத்தின் சிந்தனையும் அனுபவ அறிவும், எதார்த்தமான உண்மையான வாழ்வியலில் இருந்துதான் பெறப்படுகிறது என்ற உண்மையை, கருத்து முதல் வாதிகள் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களைப் பொருத்தமட்டில் ஒவ்வொன்றும் புனிதமான, ஒரு கருப்பொருளால், அதன் செயல்பாட்டால் விளைந்தவையே.
5. இயக்க இயல் பொருள் முதல் வாதம்
மார்க்சிய தத்துவம் என்று நாம் குறிப்பிடுவது இயக்க இயல் பொருள் முதல் வாதத்தை தான். இது 19ஆம் நூற்றாண்டில் உருவானது. இந்த தத்துவம் உருவாவதற்கு முன்னர், அதாவது பதினெட்டாம், 19ஆம் நூற்றாண்டு காலங்களில் இயற்கை பற்றிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் வியத்தகு வகையில் முன்னேற்றம் அடைந்தன. இந்தப் பின்னணியில், மார்க்ஸ் தன் மிகச்சிறந்த அறிவாற்றல் மூலம், தனக்கு முன் மனித குலத்தின் ஒரு மொத்த அறிவுப்புலன் எழுப்பிய கேள்விகளுக்கு எல்லாம் விடை அளித்தார். தத்துவம் பற்றியும், அரசியல் பொருளாதாரம் குறித்தும், சோசலிசம் சம்பந்தமாகவும், முன்வைக்கப்பட்ட, அக்காலத்தில் மனித குலத்தின் மிகச்சிறந்த உயர்வான போதனைகளின் சிந்தனைப் போக்குகளின் நேரடியான உடனடியான கோட்பாடாக மார்க்ஸின் போதனை உருவானது. (மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்கள் – லெனின்)
பொருள் முதல்வாத கண்ணோட்டமும் இயக்க இயல் அணுகுமுறையும் இணைந்ததே இயக்க இயல் பொருள் முதல் வாதம் ஆகும். மார்க்சியம் பொருள் முதல்வாதப்பட்டது. ஏனென்றால் எது முதலானது? என்ற கேள்விக்கு பொருளே முதலானது என்று அது முன்வைக்கிறது.
அதேசமயம், அதற்கு முன் சொல்லப்பட்ட இயந்திரவியல் மற்றும் இயக்க மறுப்பியல் பொருள் முதல்வாத கருத்தாக்கங்களில் இருந்து, மார்க்சியம் வேறுபட்டது அல்லது முரண்பட்டது. ஏனென்றால், அது புறவுலக எதார்த்தத்தை இயற்கையை இயக்க இயல் அணுகுமுறை கொண்டு ஆய்வு செய்கிறது. புறவயத்தில் உள்ள பொருட்கள் எல்லாம், எப்பொழுதும் இயக்கத்திலேயே இருக்கின்றன என்பதும், பொருளையும் இயக்கத்தையும் பிரிக்க முடியாது என்பதும், பொருள் இல்லாமல் இயக்கம் இல்லை என்பதும், இயக்க இயல் கோட்பாட்டின் அடிப்படையான கருத்துகள் ஆகும்.
இயக்க இயல் பொருள் முதல் வாதமானது, மிகச்சிறந்த, ஆழமான, அகலமான வளர்ச்சி குறித்த தத்துவமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. லெனினின் வார்த்தைகளில் சொல்லப் போனால், “இயக்க இயல் பொருள் முதல்வாதம் வளர்ச்சி பற்றி மிக விரிவாகவும், செறிவான உள்ளடக்கத்தோடும், ஆழமான புரிதலோடும் விளக்குகின்ற தத்துவமாகும். மேலும் முழுமையாக உள்ள அனைத்தையும், இயற்கை சமூகம் சார்ந்து பகுத்தாய்வு செய்து, அவற்றுள் இருக்கும் எதிர்மறையான கூறுகளை கண்டறிந்து கூறுவது இயக்க இயலின் சாராம்சமாகும்”.
ஏங்கல்ஸ் வார்த்தைகளில் “இயக்க இயல் என்பது சதா இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய பிரபஞ்சம் பற்றியும், மனித சமூகத்தின் உணர்வு நிலை குறித்தும் விஞ்ஞான ரீதியாக பொதுமைப்படுத்தப்பட்ட கோட்பாடு ஆகும்”. மேலும் ‘இயற்கை மற்றும் மனித சமூக வரலாற்று வளர்ச்சி போக்கில் இருந்து இயக்க இயல் பற்றிய விதிகள் பெறப்பட்டது.’ எங்கெல்ஸ் இவ்வாறு விரித்துரைத்தார்: ‘ஏனெனில் அவை வரலாற்று வளர்ச்சி போக்குகள் மற்றும் சிந்தனை ஆகிய இரண்டு அம்சங்களை குறித்த பொதுவான விதிகளே ஆகும். இயங்கியல் என்பது பொருளிலேயே பொதிந்துள்ளது. இயக்கம் இல்லாத ஒன்று, புரிந்துகொள்ள முடியாதது. அதுமட்டுமல்ல; அவ்வியக்கத்திற்கு பொருளில் உள்ளுறையாக மறைந்திருக்கும் எதிர்மறை தன்மையான முரண்பாடே காரணமாகும்.
அடுத்ததாக, மனித சமூகம், அதன் வளர்ச்சி பற்றி, இயக்க இயல் பொருள் முதல்வாத தத்துவ அடிப்படையில் ஆய்வு செய்து அணுகுவதே, வரலாற்று பொருள் முதல் வாதம் ஆகும். மார்க்சிய தத்துவம் என்று நாம் அழைப்பது, இயக்க இயல் பொருள் முதல்வாதம் மற்றும் வரலாற்று பொருள் முதல் வாதம் என இரண்டும் உள்ளடக்கியதாகும்.
பொருள் என்றால் என்ன?
இயக்கவியல் பொருள்முதல் வாத விளக்கத்தின் படி புறநிலையான இருப்பை உடைய அனைத்தும் பொருளே. நமது உணர்தலில் பிரதிபலிப்பை ஏற்படுத்தக் கூடியதும், நம்முடைய உணர்வினை சாராத ஒன்றும் ‘பொருள்’ ஆகும். நம்மை சுற்றியுள்ள அனைத்தையுமே பொருள் என அழைக்கலாம்.
நம்முடைய உணர்தலில் பிரதிபலிக்கும் அந்தப் பொருள், சிக்கலான – பொருத்தமான உபகரணங்களைக் கொண்டு உணரக்கூடிய ஒன்றாகவும் இருக்கலாம்.
மனிதர்களின் ஐம்புலன்களின் நடவடிக்கையும், செயல்பாடுகளும், புறநிலையில் நிலவும் உண்மையின் அங்கமே. இவ்வகையில் பார்க்கும்போது, மனித சமூகத்தின் நடவடிக்கைகள் அனைத்தும், அரசியல் நடவடிக்கைகள் உள்பட, புறநிலை உண்மையின் அங்கம் என்பதால், அவையும் பொருளோடு தொடர்புடையவை. நம்மால் உணரக்கூடியவை; அறிய முடிந்தவை மட்டுமே பொருள் என்று புரிந்து கொள்ள கூடாது. பொருள் என்பது நம்மை தாண்டியும் மனித அறிவுக்கும் அல்லது சிந்தனைக்கு அப்பாற்பட்டு சுதந்திரமாகவும் நிலைகொண்டுள்ளது. நம் கண்களுக்கு தெரிவது மட்டும் பொருள் அல்ல. எனவே பொருள் என்பதே தத்துவ துறைக்கான ஒன்றாகும்.
இயக்கம்
அனைத்து பொருட்களும் மாறிக்கொண்டும், மேம்பட்டுக் கொண்டும் உள்ளன. முன்னேற்றம் என்பது இயக்கம் மற்றும் வளர்ச்சி இரண்டும் இணைந்ததாகும். இயக்கம் என்றால் பொதுவாக மாற்றம், அத்துடன் அது எல்லா பொருள்களுக்கு இடையிலும் பொருள்களுக்குள்ளாகவும் நடைபெறும் பரஸ்பர செயல்பாடாகும். நம்மை சுற்றியுள்ள இயற்கையிலும், மனித சமூகத்திலும் நடக்கும் அனைத்து விதமான செயல்முறைகளுமே இயக்கம். ஒரு பொருளின் இருப்பே இயக்கம்தான். அதாவது பொருளின் மிக அடிப்படையான குணமே இயக்கம். பொருளைப் பற்றியும் அதன் செயல்பாடுகளைப் பற்றியும் புரிந்து கொள்வது, தீர்மானிப்பது என்பது, அவற்றின் தொடர்ச்சியான இயக்கம் மற்றும் வளர்ச்சியால் ஏற்படும் மேம்பாட்டை அறிவதே ஆகும்.
இயக்கவியல் பொருள் முதல்வாத தத்துவம்தான், முதன்முதலில் இயக்கமில்லாமல் பொருள் எதுவும் பிரபஞ்சத்தில் இல்லை என்பதை முன் வைத்தது. ஆகையால் நிலையாக இருக்கும் பொருள்களாக ஐம்புலன்களுக்கு தெரியக்கூடியவையும் கூட, உண்மையில் இயங்கிக் கொண்டே உள்ளன. அவை நிலையாக இருப்பது போன்று தோன்றுவது கூட ஒப்பீட்டளவில்தான். இயங்காத பொருள் என்று ஒன்றுமில்லை.
பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருக்கிறது. சூரியனையும் நீள் வட்டப்பாதையில் பூமி சுற்றி வருகிறது. பால்வெளி மண்டலத்தில், ஒரு குறிப்பிட்ட வேகத்தில், மற்ற கிரகங்களோடு பூமியும் சுழன்று கொண்டு, அதாவது இயங்கிக் கொண்டே இருக்கிறது. அதன் காரணமாக பூமி மேல் வாழும் அத்தனை பொருட்களும் உயிர் இனங்களும் நாமும் தொடர்ச்சியான இயக்கத்தில்தான் இருக்கிறோம். நாம் செயல்படாத போதும், தூங்கும் போதும், நம் உடம்பிற்குள் ரத்தம் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. வளர்ச்சிதை மாற்றம் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. உயிரோடு இருக்கும் மனித உடலில் பழைய செல்கள் அழிந்து, புதிய செல்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறது. மனித சமூகம் கூட ஒரே நிலையில் இருப்பதில்லை. அத்தோடு நிரந்தரமான குறிப்பிட்ட வகையான இயக்கத்திலும் இருப்பதில்லை.
முடுக்கி விடப்பட்ட வேகமான இயக்கம் என்பது பொருளின் இன்னொரு குணம்சமாகும். நாம் வாழும் பூமி பல அடுக்குகளால் (தட்டுகளால்) ஆனது. அதன் அடி மூலக்கூறிலிருந்து மேல் பகுதி வரை பல தட்டுக்கள் இருக்கின்றன. இத்தட்டுகள் கூட இயக்கத்தில் இருக்கின்றன. இவ் இயக்கத்தை கண்டத்தட்டு இயக்க கோட்பாட்டின் (Plate Tectonic Movement) மூலம் விஞ்ஞானம் நமக்கு விளக்குகிறது. பூமியின் நிலநடுக்கம் (Earth Quake) இவ்வியக்கங்களால் ஏற்படுகிறது. பூமிப் பந்தில் உள்ள கண்டங்களின் எல்லைகள் மற்றும் கடற்பரப்பின் எல்லைகள் எல்லாம் எல்லா காலத்திலும் ஒரே தன்மையில் இருப்பதில்லை. மேற்சொன்ன இயக்கத்தின் காரணமாக, எல்லைகள் மாறுகின்றன. உலக வரைபடம் என்பது மாறிக்கொண்டே வருகிறது. மிக மிகக் குறைவான வேகத்தில் இம்மாற்றம் நடைபெறுவதால் நம்மால் உணர இயலவில்லை.
விஞ்ஞானத்தில் நிலையான ஆற்றல் பற்றி நாம் அறிகிறோம். எனினும் அதுவும் இயக்கத்திற்கு உட்பட்டதே ஆகும்.
வெளி (இடம்) மற்றும் காலம்
ஒரு பொருளின் அல்லது பொருட்களின் இருத்தலுக்கு வெளியும் காலமும் மிக அடிப்படையான தேவையான கூறுகளாகும். பொருளிலிருந்து இவ்விரண்டையும் பிரிக்க இயலாது. ஒரு காலத்தின் அடிப்படையில் பரந்துபட்ட பொருள்களின் இருப்பை வெளி உணர்த்துகிறது. பொருள்கள் ஒன்றிலிருந்து ஒன்றாக மாறி மாறி வரும் நிகழ்வு போக்கை அதன் வரிசையை காலம் உணர்த்துகிறது. அனைத்து வகையான பொருள்களின் மாற்றங்களுக்கும் இரண்டு கால வரிசைகள் உள்ளன. ஒன்று அதன் கடந்த காலம். மற்றொன்று அதன் எதிர்காலம். காலம் திரும்பி வராது. காலமும் வெளியும் பொருளின் சாரமாகும். எனவே பொருள், இயக்கம், வெளி, காலம் இவை பிரிக்க முடியாத வகையில் இணைந்தே உள்ளன.
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
