
சீர்திருத்தவாதம் தீர்வாகாது!
ஏப்ரல் 22: மாமேதை லெனின் பிறந்த நாள்
சமூக பிணிகளுக்கு ஆறுதலாக சீர்திருத்த நடவடிக்கைகள் இருக்கும்போதிலும், அவைமட்டுமே முழுத்தீர்வாக சீர்திருத்த இயக்கங்களால் முன்வைக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் காணப்படும் இந்தப் போக்கை நாம் தமிழ்நாட்டிலும் பார்க்கிறோம். அந்த சீர்திருத்தவாத இயக்கங்களை மார்க்சியர்கள் எப்படி அணுக வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் என்பதை மாமேதை லெனின் சொற்களில் காண்போம்:
‘மார்க்சியர்கள் சீர்திருத்தங்களுக்கான போராட்டத்தை அங்கீகரிக்கின்றனர். அதாவது, ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்தை அழிக்காமல், உழைக்கும் மக்களின் நிலைமைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கான போராட்டத்தை அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். அதேநேரத்தில், சீர்திருத்தவாதிகளுக்கு எதிராக, மார்க்சியர்கள் மிகவும் உறுதியான போராட்டத்தை நடத்துகின்றனர். ஏனெனில், அந்த சீர்திருத்தவாதிகள், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, உழைக்கும் வர்க்கத்தின் இலக்குகளையும் செயல்பாடுகளையும் சீர்திருத்தங்களை வெல்வதோடு மட்டுப்படுத்துகிறார்கள். சீர்திருத்தங்களால் தனிநபர் முன்னேற்றங்கள் சாத்தியமாகும் போதிலும், மூலதனத்தின் ஆதிக்கத்திற்கு முடிவுகாணாத வரை, தொழிலாளர்கள் எப்போதும் கூலி அடிமைகளாகவே இருப்பார்கள் என்பதால், அவை ஒருவகையில் முதலாளித்துவத்தின் ஏமாற்று வேலைகளே ஆகும்.
தாராளவாத முதலாளித்துவம் ஒரு கையால் சீர்திருத்தங்களை வழங்குகிறது; மறுகையால் எப்போதும் அவற்றை மீண்டும் பறித்துக் கொண்டு, அவற்றைப் பயனற்றதாக்குகிறது, தொழிலாளர்களை அடிமைப்படுத்தவும், அவர்களை தனித்தனி குழுக்களாகப் பிரித்து, கூலி அடிமைத்தனத்தை நிலைநிறுத்தவும், சீர்திருத்த அம்சங்களை பயன்படுத்துகிறது. அதனால்தான் சீர்திருத்தவாதம், முற்றிலும் நேர்மையாக முன்னெடுக்கப்பட்டாலும் கூட, , நடைமுறையில் அது தொழிலாளர்களை ஊழலடையச் செய்து பலவீனப்படுத்தும் ஒரு முதலாளித்துவ ஆயுதமாக மாறுகிறது…
மார்க்சின் கோட்பாட்டை உள்வாங்கிக் கொண்ட பாட்டாளிகள்… எந்த முதலாளித்துவ சீர்திருத்தங்களாலும் ஏமாற்றப்பட மாட்டார்கள். முதலாளித்துவம் நீடிக்கும் இடத்தில் சீர்திருத்தங்கள் நிலைக்காது; அல்லது ஆழமானதாக இருக்காது என்பதைப் புரிந்துகொண்டு, தொழிலாளர்கள் இன்னும் மேம்பட்ட நிலைமைகளுக்காகப் போராடுகிறார்கள்; மேலும் அவற்றை கூலிஅடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சீர்திருத்தவாதிகளோ தொழிலாளர்களைப் பிரித்து ஏமாற்ற முயல்கிறார்கள்; சிறு சிறு சலுகைகளால் அவர்களை வர்க்கப் போராட்டத்திலிருந்து திசைதிருப்ப முயல்கிறார்கள். ஆனால் சீர்திருத்தவாதத்தின் பொய்மையைக் கண்டறிந்துவிட்ட தொழிலாளர்கள், தங்கள் வர்க்கப் போராட்டத்தை வளர்த்தெடுக்கவும் விரிவுபடுத்தவும் சீர்திருத்தங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
தொழிலாளர்களிடையே சீர்திருத்தவாதத்தின் செல்வாக்கு எவ்வளவு வலிமையாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவர்கள் பலவீனமாக இருக்கிறார்கள். முதலாளித்துவத்தைச் சார்ந்திருப்பது அதிகமாகிறது; மேலும் பல்வேறு சூழ்ச்சிகளால் சீர்திருத்தங்களை பயனற்றதாக்குவது முதலாளித்துவத்திற்கு எளிதாகிறது. தொழிலாளர் இயக்கம் எவ்வளவு சுயேச்சையாக இருக்கிறதோ, அதன் இலக்குகள் எவ்வளவு ஆழமாகவும் விரிவாகவும் இருக்கின்றனவோ, மேலும் அது சீர்திருத்தவாதக் குறுகிய பார்வையிலிருந்து எவ்வளவு விடுபட்டுள்ளதோ, அவ்வளவுக்கு முன்னேற்றங்களைத் தக்கவைத்துக் கொள்வதும் பயன்படுத்திக் கொள்வதும் தொழிலாளர்களுக்கு எளிதாகிறது.
(1913 பிராவ்தா இதழில் வெளியான மார்க்சியமும் சீர்திருத்தவாதமும் என்ற கட்டுரையின் பகுதிகள்…)
தொகுப்பு: இரா. சிந்தன்
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply