
சொல்லகராதி: முரண்பாடுகள்!
இரா. சிந்தன்
பொதுவாக முரண்பாடுகள் என்ற சொல்லுக்கு மோதல், போராட்டம் என்பதே பொருளாகும். மார்க்சிய நோக்கில் முரண்பாடுகள் என்ற சொல் ஒவ்வொரு பொருளின் இருப்புக்கும், கட்டமைப்புக்கும் அல்லது நிகழ்வுப் போக்குகளுக்கும் அடிப்படையாக அமைந்த இயக்க விதியை சுட்டுகிறது.
முரண்பாடு என்றால் என்ன?
எந்தவொரு பொருள் அல்லது நிகழ்வுப் போக்கை எடுத்துக் கொண்டாலும் அவற்றில் எதிர்மறை சக்திகள், எதிரெதிர் பண்புகள் அல்லது பரிணாமங்களை அடையாளம் காண முடியும். உதாரணமாக ஒரு முட்டையை பார்த்தால் அதன் கருவுக்கும், வெளியில் உள்ள ஓட்டுக்கும் இடையில் முரண்பாடு இருக்கிறது. ஓடு உறுதியாக இருந்தால்தான் கரு உயிராகும்; அதே ஓடு உடைந்தால்தான் அந்த உயிர் நிலைத்திருக்கும்.
இப்படி ஒவ்வொரு பொருளின் அங்கமாகவும், நிகழ்வுப் போக்கின் இயக்கமாகவும் எதிரெதிர் அம்சங்கள் இயங்குகின்றன. இந்த எதிர்மறைகளின் ஒற்றுமையையும், போராட்டத்தையும் நாம் முரண்பாடு என்கிறோம். மூலதனமும் உழைப்பும் இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பில் இணைந்துள்ளன. ஆனால், அவற்றின் நலன்கள் எதிரெதிரானவை. குறிப்பிட்ட காலம் வரை அது இணைந்திருந்தாலும், மோதல்கள் இயக்கத்தை வேகப்படுத்தி மாற்றங்களுக்கு காரணமாகின்றன. இவ்வாறு முரண்பாட்டோடு வெளிப்படும் ஒற்றுமை நிரந்தரமல்ல; அது தற்காலிகமானது.
முதன்மை முரண்பாடுகள்
பல முரண்பாடுகள் ஒரே நேரத்தில் நிலவுகின்றன. அதனாலேயே நாம் தீர்மானகரமான பங்கு வகிப்பவைகளை தனியே முதன்மை முரண்பாடுகளாக அடையாளம் காண்கிறோம். அவ்வாறு அடையாளம் காணப்படும் முதன்மை முரண்பாடுகளில், குறிப்பிட்ட காலகட்டத்தில் முன்னுக்கு வரக்கூடிய முரண்பாட்டை நாம் மைய முரண்பாடு (Central contradiction) என்கிறோம். அந்த மைய முரண்பாட்டின் தீர்வு, மற்ற முரண்பாடுகளின் வளர்ச்சியையும் தீர்வையும் பாதிக்கும் என்பதால், நாம் அவ்வாறு சொல்கிறோம்.
மார்க்சிய அரசியல் செயல்பாட்டில், முதன்மை முரண்பாடுகளை அடையாளம் காண்பதும், எந்த முரண்பாடு மையமாக உள்ளது என்பதை சரியாக அறிதலும், மிக முக்கியம் ஆகும்.
பகை முரண்பாடு – பகையற்ற முரண்பாடு
மேலும், முரண்பாடுகள் அனைத்தும் ஒரே தன்மையுடையவை அல்ல.
• பகை முரண்பாடு: சமரசம் செய்ய முடியாத, எதிர்மறையான உறவு. உதாரணம்: மூலதனம் vs உழைப்பு; ஏகாதிபத்தியம் vs சோசலிசம்.
• பகையற்ற முரண்பாடு: பேச்சுவார்த்தை மற்றும் சமரசம் மூலம் தீர்க்கக்கூடியவை. உதாரணம்: ஏழை விவசாயி vs நடுத்தர விவசாயி.
இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்வது சரியான புரட்சிகர இயக்க நடைமுறைகளுக்கு அவசியமாகும்.
உள் முரண்பாடு -வெளி முரண்பாடு
ஒவ்வொரு பொருள் அல்லது சமூகத்திற்குள் உள்ள முரண்பாடுகள் உள் முரண்பாடுகள். இவையே வளர்ச்சியின் முக்கிய காரணியாக உள்ளன. அதே சமயம், வெளியில் இருந்து வரும் தாக்கங்கள் வெளி முரண்பாடுகள் ஆகும். வெளி முரண்பாடுகள், உள் முரண்பாடுகளை பாதிக்கலாம்; ஆனால் வளர்ச்சியை நிர்ணயிப்பது உள் முரண்பாடுகளே. உதாரணமாக, ஒரு நாட்டின் புரட்சிக்கான போராட்டத்தின் வெற்றி அதன் உள் வர்க்க முரண்பாடுகளின் தீவிரத்தன்மையைப் பொறுத்தது; அதே சமயம் அன்றைய உலக சூழ்நிலை அதை வேகப்படுத்தும்/மட்டுப்படுத்தும் வெளிக் காரணியாக செயல்படலாம்.
எனவே, மார்க்சிய நோக்கில், முரண்பாடு என்பது வெறும் மோதல் அல்ல; அது இயற்கை, சமூகம், சிந்தனை ஆகியவற்றில் உள்ளார்ந்து காணப்படும் இயக்கத்தை புரிந்துகொள்வதற்கான முக்கியமான கருதுகோள் ஆகும். எந்தவொரு மாற்றமும் முரண்பாடுகளுக்கு இடையிலான போராட்டத்திலிருந்து உருவாகிறது. எனவே முரண்பாடுகளின் தன்மை, வகை மற்றும் மையத்தைக் கண்டறிவதில் அடையும் தேர்ச்சி, புரட்சிகர செயல்பாட்டாளர்களுக்கு மிக மிக அவசியமாகும்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply