இயக்கவியல் பொருள்முதல்வாதம்
மத்திய கட்சி கல்வி பாடக்குறிப்பு
அறிமுகம்
மார்க்சிய தத்துவம், மற்ற அனைத்து தத்துவ இயல்களைக் காட்டிலும் மிகச் சிறந்த, விஞ்ஞான முறையிலான புரட்சிகர தத்துவமாகும். மார்க்சிய தத்துவம், தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைப் போராட்டத்தை கோட்பாட்டு வழியிலும் சித்தாந்த வழியிலும் ஆகச் சிறந்த விதத்தில் ஆற்றல்மிக்க ஆயுதப்பாணியாக்குகிறது. பல சிக்கல்கள் நிறைந்த சமூக, அரசியல் நிலைமைகளை சரியான முறையில் அணுகுவதற்கு ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை தகுதிப்படுத்துகிறது. நடைமுறையை விஞ்ஞான வழியில் பகுத்தாய்வு செய்வதற்கும், வரையறுக்கப்பட்ட முன்னுரிமை கடமைகளை தெளிவாக விளங்கிக் கொள்வதற்கும் அவற்றை நிறைவேற்றுவதற்கான மிகப் பயனுள்ள வழிமுறைகளை கண்டறிவதற்கும் அது உதவுகிறது. எனவே, மார்க்சிய தத்துவத்தை பற்றிய முழுமையான அறிவைப் பெறுவது ஒரு மார்க்சியவாதிக்கு மிக முக்கியமான ஒன்றாகும். மேலும், புரட்சிகர சமூக மாற்றத்திற்காக நடைபெற்றுக் கொண்டிருக்கும் கடினமான வர்க்கப் போராட்டத்தில் ஒருவருடைய தம் பங்கினை புரிந்துக் கொள்ளவும் இது தேவையாகிறது.
தத்துவம் என்றால் என்ன?
இயற்கை, சமூகம், மனித சிந்தனை ஆகியவை குறித்தும், அதன் வளர்ச்சிப் போக்குகள் பற்றியும் தீர்மானிக்கிற பொதுவான விதிகளை பற்றி அணுகிடும் ஒர் ஆய்வுமுறையே தத்துவம் ஆகும்.
ஒவ்வொரு மனிதரும் உணர்வுப்பூர்வமாகவோ அல்லது ஆழ்சிந்தனையின் வாயிலாகவோ தன்னை சுற்றியுள்ளவை பற்றியும் அதன் நிகழ்வுப் போக்குகளை பற்றியும் அறிய – விவரிக்க முயற்சிகளை மேற்கொண்டு அதில் பொதுவான கருத்துகளை உருவாக்குகிறார்கள். இந்த வகையில் ஒவ்வொரு மனிதருமே ஒரு தத்துவவாதியே. அதே சமயம், இந்தக் கருத்துகளில் பொதுத்தன்மை இருப்பினும், அவை வேறுபாடுகள் நிறைந்த கலவையாகவும் முரண்பாடுகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. பொதுவான ஒத்திசைவு இல்லாத போதும் அவைகள் தத்துவார்த்த உள்ளடக்கம் கொண்டவைகளாகும்.
வர்க்க சமூகமும்- தத்துவமும்
தத்துவம் என்பது வர்க்க சார்பற்ற நடுநிலையான ஒன்றல்ல. ஆளும் வர்க்கம் அல்லது ஆளப்படும் வர்க்கம் ஆகியவற்றின் நலன்களை பாதுகாக்கும் முனைப்புடன் உருவானதே தத்துவம் ஆகும். அதனால், தத்துவம் என்பது வர்க்கச் சார்பான ஒன்றே ஆகும்.
தத்துவம் இரு வகைகளில் பங்காற்றுகிறது. 1. சுரண்டல் சமூக அமைப்பு முறையை தூக்கிப் பிடிக்கிறது. 2. இந்தச் சுரண்டல் சமூக அமைப்பு முறையை மாற்றம் காண விழைபவர்களை ஊக்கப்படுத்தி, ஆற்றல் தரும் பணியைச் செய்கிறது.
வரலாறு நெடிகிலும் பொதுவாக ஆளும் வர்க்கத்துக்கு ஆதரவாக கருத்து முதல்வாத அடிப்படையிலான பலவகை கண்ணோட்டங்கள் செயல்படுகின்றன. ஆனால், உழைக்கும் மக்களின் தத்துவமாக பொருள்முதல்வாத சிந்தனையே எப்பொழுதும் இருந்து வருகிறது.
அடிமை சமூக அமைப்பில் தன்னெழுச்சியான பொருள்முதல்வாத சிந்தனையே சுரண்டப்பட்டு வந்த மக்களின் தத்துவமாக இருந்துள்ளது. 17, 18ம் நூற்றாண்டுகளில் உருவான முதலாளித்துவ சமூகத்தில் இயக்க மறுப்பியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது. அதன் பின்னர் 19ம் நூற்றாண்டில் உருவான இயக்கவியல் பொருள்முதல்வாத தத்துவ இயலே முதலாளித்துவ சமூக அமைப்பில் பெரும் எண்ணிக்கையில் உள்ள உழைக்கும் தொழிலாளி வர்க்கத்தின் தத்துவமாக இருந்து வருகிறது. இந்த காரணத்தால் தான் முதலாளிய வர்க்கம் தனக்கு உள்ள மிகப் பெரிய ஆபத்தாக மார்க்சீய தத்துவத்தைப் பார்க்கிறது.
லெனின் இவ்வாறு கூறினார் :
நாகரீக உலகம் எங்கிலும், (அதிகாரப்பூர்வ மற்றும் தாராளவாத) முதலாளித்துவ அறிவியலானது, மார்க்சின் போதனைகளுக்கு எதிராக விரோதத்தையும், வெறுப்பையுமே தூண்டுகிறது. மார்க்சிய தத்துவம் ஒரு ‘தீய வகைப்பிரிவு’ என்று சொல்கிறது. வர்க்க போராட்டத்தை அடிப்படையாக கொண்ட ஒரு சமூகத்தில் ‘பாரபட்சமற்ற’ சமூக அறிவியல் இருக்க முடியாது எனும்போது, வேறு விதமான அணுகுமுறையை எதிர்பார்க்க வேண்டியதில்லை. அனைத்து அதிகாரப்பூர்வ மற்றும் தாராளவாத அறிவியலும் கூலி அடிமைத்தனத்தை ஏதாவது ஒரு விதத்தில் பாதுகாக்கிறது, ஆனால் மார்க்சியமானது அடிமைத்தனத்தின் மீது இடைவிடாத போரை அறிவித்துள்ளது. கூலி-அடிமைச் சமூகத்தில் விஞ்ஞானம் பாரபட்சமற்றதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பது, மூலதனத்தின் லாபத்தைக் குறைப்பதன் மூலம் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிக்கக் கூடாதா என்ற கேள்விக்கு உற்பத்தியாளர்களிடமிருந்து பாரபட்சமற்ற பதிலை எதிர்பார்ப்பது போன்ற முட்டாள்தனமான அப்பாவித்தனமாகும்”
தத்துவ ஞானத்தின் இரண்டு பெரும் பிரிவுகள்
வரலாறு மற்றும் தத்துவ ஞான இயலின் வளர்ச்சிப் போக்குகள் பற்றிய ஆய்வு இரு வகையான தத்துவ ஞானப் பிரிவுகள் எல்லாக் காலத்திலும் இருந்து வந்துள்ளதை நமக்கு உணர்த்துகிறது. அவையாவன, கருத்து முதல்வாதம், பொருள்முதல்வாதம். இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவும் கருத்தியல்ரீதியாக வேறுபட்டதாகவும் உள்ள தத்துவ ஞான முறைகளாகும். வேறுபாடு எதன் அடிப்படையிலானது? என்றால் – பொருளா அல்லது கருத்தா எது முன்னது என்கிற கேள்வியும் அதற்கான பதிலும் தான். இது தத்துவஞான இயலின் அடிப்படையான கேள்வியாகும். பொருள்தான் முன்னது; அது எல்லையற்றது. உணர்வையும் உணர்வின் நுட்பமான பல அடுக்குகளையும் உருவாக்கியதும் பொருள் தான் என்று பொருள்முதல்வாதம் சொல்கிறது.
கருத்துமுதல்வாதமோ பொருளற்ற, ஆன்மா சார்ந்த சிந்தனையே முதலானது; பொருளானது இரண்டாம்பட்சமானது என்றும் பொருளே சிந்தனையின் அல்லது கருத்தின் வெளிப்பாடு தான் என்றும் சொல்கிறது. இயற்கைக்கும் மனித சமூகத்திற்கும் அப்பால் ஒர் உணர்வு உள்ளது என்ற கருத்தை முன் வைக்கிறது.
கருத்து முதல்வாதம் பொருள்முதல்வாதம் இரண்டையும் பிரித்துக் காட்டும் அடுத்த மையமான கேள்வி என்னவென்றால், புறநிலையில் உள்ள பொருளை நாம் அறிய முடியுமா?
சரியான அணுகுமுறை, வழிமுறைகள் மூலம் உண்மையிலேயே பொருள்கள் பற்றி அறிய வாய்ப்புள்ளது என்கிறது பொருள்முதல்வாதம். ஆனால் கருத்துமுதல்வாத சிந்தனையோ பொருளைப் பற்றி நாம் அறிவது சாத்தியமல்ல; ஏனென்றால் அது யாருடைய கைகளுக்கும் எட்டாத அறுதியான ஆழ்நிலை சிந்தனையினால் படைக்கப்பட்டது என்று சொல்கிறது.
கருத்து முதல்வாதம்
கருத்து முதல் வாதத்தை பற்றி விவாதிப்பதற்கு முன்னர் ஒன்றை குறிப்பிட்டே ஆக வேண்டும். அதை குறிப்பிடாமல் விவாதம் முழுமை அடையாது. கருத்துமுதல் வாதம் மதம் சார்ந்த சிந்தனைகளுக்கு தலைமை தாங்கும் ஒரு தத்துவ பிரிவாகும். மதம் சார்ந்த பல கோட்பாடுகள், மூட நம்பிக்கைகள் கருத்து முதல்வாதத்தின் வடிவங்களாகும். மறுபுறம் மதம் சார்ந்த சிந்தனைகள் கருத்துமுதல்வாதத்தை வளர்த்தெடுக்கவும் செய்தது.
கருத்து முதல் வாதத்தை பற்றி பேசும்போது இருமைவாதம் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். கருத்து முதல் வாதத்தையும் பொருள் முதல்வாதத்தையும் சமரசம் செய்வது இருமை வாதம் ஆகும். இது ஆன்மீக உலகத்தையும் பொருள் சார்ந்த உலகத்தையும் இரண்டையும் ஏற்றுக் கொள்கிறது. இரண்டு தத்துவ இயல் பிரிவுகளையும் சமப்படுத்தியும் இரண்டும் தனித்தனியாக இருக்கிற உண்மைகள் என்றும் ஏற்றுக்கொள்கிறது. நவ-நேர்மறைவாதம் என்பதும் (neo-positivism) கருத்துமுதல் வாதக் கண்ணோட்டத்திற்கு எடுத்துக்காட்டாகும். வெறும் கோட்பாட்டு ரீதியான (புறநிலையை கணக்கில் கொள்ளாத) சிந்தனையின் வளர்ச்சி என்பது ஆரம்ப நிலையில் சுருக்கமான முறையில் கருத்து முதல் வாதத்தையே முன்னிறுத்தும். பொருள்களில் இருந்து அதன் கோட்பாட்டுகளை பிரித்தெடுக்கும் அளவிற்கு மனித குலத்தின் அறிவு வளர்ச்சி பெறாத காலத்தில் உருவான தவிர்க்க முடியாத பிரச்சனைகளை எதிர்கொள்ளாத சூழலில் கருத்து முதல் வாதம் ஒரு கோட்பாடாகிறது. எனவே அது விஞ்ஞான வளர்ச்சிக்கு எதிரான ஒன்றாகும்.
எல்லா வகையான கருத்து முதல்வாத கோட்பாடுகளையும் இரண்டு வகையாக பிரித்து விடலாம்.
அவை, புறநிலை கருத்து முதல் வாதம், அகநிலை கருத்து முதல் வாதம் ஆகியவையாகும். புற நிலை கருத்து முதல் வாதம்
முதன்மையானது ஆன்மா; இரண்டாவது தான் பொருள் அதுவும் ஆன்மாவிலிருந்து உருவானது என்பது புறநிலை கருத்து முதல் வாதம் ஆகும். அந்த முதன்மையான ஆன்மா தனிப்பட்ட அல்லது மனித மனம் சார்ந்ததோ அல்ல. மாறாக அது ஒரு பிரபஞ்ச காரணி. எல்லாவற்றிற்கும் அடிப்படையானதே ஆன்மா மற்றும் அது ஒரு வகையான பிரபஞ்ச உணர்வு நிலை என்று புறநிலை கருத்து முதல் வாதம் கருதுகிறது.
யாருடைய கைக்கும் எட்டாத, ஆழ்நிலை படிமமான அதிசயத்தக்க சக்தி. அதுவே எல்லாவற்றிற்கும் பின்னால் உள்ள பிரபஞ்ச உண்மையாகும் என்று முன்வைக்கிறது. புறநிலையில் நாம் காணும் பொருள் வகைப்பட்ட உலகம் என்பது அந்த அதிசய சக்தியின் படைப்பே ஆகும். மனிதனும் மனித சமூகம் கூட அந்த புறநிலை உலகில் இருப்பதால் அவையும் கூட மேற் சொன்ன சூழ்நிலை வகைப்பட்ட அனைத்திற்கும் மேலான அந்த சக்தியே ஆகும். எனவே அனைத்தும் மாயமானதே. எல்லா பொருட்களும் அந்த சக்தியின் செல்வாக்கிற்கு உட்பட்டவையே. எனவே புற உலகைப் பற்றி அறிய முயற்சிப்பதே ஒரு வீணான வேலையாகும் என்கிறது.
இதற்கு உதாரணமாக பிளேட்டோ, அஃஹினோ, ஹெகல் போன்ற தத்துவஞானிகளை குறிப்பிடலாம்.
அக நிலை கருத்து முதல் வாதம்
சிந்தனையுடன் பிணையாமல் சுதந்திரமாக புறநிலை உண்மையாக பொருள்கள் இருப்பதையே இந்த அகநிலை கருத்து முதல் வாதம் மறுக்கிறது. இக்கோட்பாட்டை பொறுத்த மட்டிலும் உணர்வு நிலைக்கு அப்பால் எந்த புறநிலை எதார்த்தத்தமும் உலகில் இல்லை. உணர்வின் நிலையான ஒருங்கமைக்கப்பட்ட வெளிப்பாடுகளே புற உலகமாகும். பொருட்களை பற்றி, பிரபஞ்சத்தைப் பற்றி ஆய்ந்து அறிய கூடிய அறிவுக்கூட பொய்யானது. ஏனெனில் கண்முன் தோன்றுவது எல்லாம் உண்மையல்ல; மாயத் தோற்றமே. உணர்வு என்ற ஒன்று இல்லாமல் பொருட்கள் கிடையாது. பொருட்களை சிவப்பாகவும் பச்சையாகவும், மஞ்சளாகவும் நான் பார்க்கிறேன் என்றால் நான் அவ்வாறு விருப்பப்பட்டதால் தான் பார்க்கிறேன். அந்த வண்ணங்களோ அவற்றை தாங்கிய பொருட்களோ உண்மை இல்லை. மரங்களோ கட்டிடங்களோ அனைத்தும் எனது உணர்வின் அடிப்படையில் என் விருப்பத்தால் தான் என்னால் முடிகிறது. எனவே பொருட்கள் நிறைந்த புற உலகம் என்பது உண்மையில் இல்லை ஒருவருடைய உணர்வை, எண்ணங்களைத் தாண்டி எதுவுமே இல்லை.
பெர்க்லி பாதிரியார், ஹீயும், பாச் மற்றும் சர்ட்ரே போன்ற தத்துவஞானிகள் அக நிலைவாதத்தை முன்வைத்தவர்கள்.
பொருள் முதல் வாதம்
பொருள் என்பதே நிச்சயமான உண்மை. அதுவே முதன்மையானது என்று பொருள் முதல்வாதம் கருதுகிறது. பொருள்களின் வளர்ச்சிப் போக்கில் உணர்வு உருவானது. மேலும் உணர்வு என்பது மனித மூளை என்ற தனித்துவமான ஒரு பொருளின் விளைவே. இயற்கை விஞ்ஞானத்தில் ஏற்பட்ட பல சகாப்தங்களை உருவாக்கிய கண்டுபிடிப்புகளோடும் மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சி போக்கோடும் இணையாக பொருள் முதல்வாதம் வளர்த்தெடுக்கப்பட்டது. திட்டவட்டமான உலகக் கண்ணோட்டத்தை அது மனித சமூகத்திற்கு அளித்தது. அது ஒரு உலக கண்ணோட்டமாகும்.
மனித வாழ்வில் ஏற்படும் அன்றாட கஷ்டங்களை, பிரச்சனைகளை தாண்டி முன்னேற தீர்மானகரமான வழிமுறைகளை அது நமக்கு வழங்குகிறது உலகத்தில் உள்ள ஒவ்வொரு பொருள்களைப் பற்றியும் நடைபெறும் நிகழ்ச்சி போக்குகள் குறித்தும் விளக்கம் அளிக்க முடியும் என்று பொருள் முதல்வாதம் உறுதியிட்டு கூறுகிறது. நடைமுறை, அனுபவம், பரிசோதனைகளின் வழியாக அவ்வாறு அறிய முடியும் என்று நம்புகிறது. அது எதார்த்த நிலைமைகளில் இருந்து மட்டுமே அறிய முயற்சிக்கிறது.
மனித சமூகம், அது வளரும்போது மனித சமூகத்தின் உணர்வு நிலையையும் வளர்த்தெடுத்து ஒழுங்கமைக்கிறது. பொருள்களுக்கும் உணர்வுக்கும் இடையே உள்ள உறவு நிலையை அது வெளிப்படுத்துகிறது. கடவுள் கோட்பாட்டை இயற்கைக்கு அப்பால் உள்ள சக்தி என்று முன் வைக்கப்படும் கருத்துக்களை பொருள் முதல்வாதம் நிராகரிக்கிறது. மனித குலம் மண்ணில் தோன்றுவதற்கு முன்னர் இருந்தே பொருள்கள் வியாபித்து இருந்தன. அதுவே தான் பொருள்கள் படைப்பு பற்றியோ அவற்றைப் படைத்த படைப்பாளர் (கடவுள்) பற்றியோ கேள்விக்கே இடமில்லை. குறிப்பிட்ட நோக்கத்திற்காக திட்டமிடப்பட்ட வகையில் இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்ற கருத்தை நிராகரிப்பதோடு, இப்பிரபஞ்சம் எல்லையற்றது என்றும் பொருள் முதல்வாதம் விவரிக்கிறது. மனித குலம் தனது நடவடிக்கைகளை அதுவே உணர்வுபூர்வமாக தீர்மானிக்கிறது; மேற்கொள்கிறது. பிரபஞ்சத்தில் உள்ள பிற உயிர்ப் பொருட்களோடும் பரஸ்பரம் உறவு கொண்டு அதன் அடிப்படையில் மனித சிந்தனைகள், உணர்ச்சிகள், இலட்சியங்கள், எதிர்பார்ப்புகள் இவை எல்லாம் இணைந்து ஒரு குறிப்பிட்ட உயிர்ப் பொருளாக மனித சமூகம் வளர்கிறது. அதே சமயம் அத்ததைய சிந்தனைகளோ, உணர்ச்சிகளோ, லட்சியங்களோ மற்றும் எதிர்பார்ப்புகளோ குறிப்பிட்ட காலகட்டத்தில் மனித சமூகத்தின் பொருளாதார – சமூக வளர்ச்சி போக்கோடு இணைந்தே வளர்கிறது. விஞ்ஞானத்தின் வழியாக இந்த பிரபஞ்சத்தை பற்றி நம்மால் அறிய முடியும், அது சாத்தியமான ஒன்றுதான் என்பதை பொருள் முதல்வாதம் முன் வைக்கிறது.
விஞ்ஞானம்
மனித இனம் உருவான காலத்தில் இருந்து உயிர் வாழ்வதற்கும் தனது இருப்பை நிலைநாட்டவும் அயராத போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது. உற்பத்தி நடவடிக்கைகளில் மனித உழைப்பு ஈடுபடும் போது இயற்கையை மாற்றி அமைக்க முடிந்தது. இந்த உற்பத்தி நடவடிக்கை நிகழ்வதின் மூலமாக தான் விஞ்ஞானம் உருவானது. விஞ்ஞானம் என்பது இயற்கை நிகழ்ச்சி போக்குகளை புரிந்து கொள்வதும் அதனுள் செயல்படும் விதிகளை பற்றி அறிந்துக் கொள்வதுமே ஆகும் பொருள்களைப் பற்றியும் அதன் தொடர்புடைய நிகழ்வு போக்குகளைப் பற்றியும் புரிந்துக் கொள்வதை விஞ்ஞானத்தின் பல வழிமுறைகள் சாத்தியமாக்கியது. மனித குலத்தின் நேரடி நடவடிக்கைகளோடு தொடர்புடைய விஞ்ஞானம் மட்டுமே அறிவை பெறுவதற்கு சரியான வழி வகையாகும். பொருள் மற்றும் நிகழ்வு போக்குகள் (இயற்கை சமூகம் சார்ந்த) இவற்றிற்கிடையில் உள்ள இதுவரை கண்டிராத, புதிய ஒன்றுக்கொன்றான உறவுகளை விஞ்ஞானம் தொடர்ந்து புலப்படுத்துகிறது. பொருளின் உள்ளுறையாக இருக்கும் புதுப்புது முரண்பாடுகளைப் பற்றியும் ஞானத்தை விஞ்ஞானத்தின் முன்னேறிய வளர்ச்சியின் மூலமாக நாம் அறிய முடிகிறது. சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் எழக்கூடிய பல புதிய புதிய கேள்விகளுக்கும் அவைகளுக்கு விடை காண வேண்டிய மனித அறிவின் போதாமைகளுக்கும் இடையில் ஏற்படும் முரண்பாடுகளை தீர்த்து வைப்பது விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சிப் போக்கு தான்.
அதேசமயம் பொருள் முதல்வாத சிந்தனையை பலவீனப்படுத்துவதற்கு இதே விஞ்ஞான பல்வேறு வகையிலான வளர்ச்சி நிலைகளை தவறுதலாக திசை திருப்பக் கூடிய வகையில் முன்வைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 21 ஆம் நூற்றாண்டில் முதல் இருபது ஆண்டுகளில் (1901-1920)தோழர் லெனின் இந்த திசை திருப்பும் முயற்சிகளுக்கு எதிரான வலிமையான தத்துவ போராட்டத்தை மேற்கொண்டு பொருள் முதல் வாதத்தை காத்து நின்றனர்.
1. தற்செயல் பொருள் முதல்வாதம்
ஆதி காலத்தில் மனிதனுடைய அன்றாட அனுபவங்களிலிருந்து பெறும் அறிவை பொதுமைப் படுத்தி தான் தற்செயல் பொருள் முதல்வாதம் உருவானது. இந்தியாவின் சார்வாகம் எனும் தத்துவ பிரிவினை பின்பற்றியவர்கள் இவ்வகையை சேர்ந்தவர்கள். சீன தேசத்தில் ஃபேன் வான் சூ (Fan Wan Xu) என்ற தத்துவ ஞானி தற்செயல் பொருள் முதல்வாத பாரம்பரியத்தை சேர்ந்தவர். கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஹெராக்ளிட்டஸ், டெமாக்ரிட்டஸ் ( Heraclitus and Democritus) இருவரும் தற்செயல் பொருள் முதல்வாதிகளே. இவர்கள் எல்லாம் இந்த பிரபஞ்சம் பொருள்களால் ஆனது என்பதை வலியுறுத்திய அதேசமயம் அதன் வளர்ச்சிப் போக்கை உள்வாங்கி புரிந்து கொள்ள இயலாதவர்களாக விளங்கினர்.
2. இயக்க மறுப்பியல் பொருள் முதல் வாதம்
17, 18 ம் நூற்றாண்டுகளில் உருவான ஒரு தத்துவ இயலாகும். இந்த தத்துவ இயலை முன்வைத்தவர்கள் இங்கிலாந்தை சேர்ந்த பிரான்சிஸ் பெக்கன், ஜான் லாக், டச்சு நாட்டை சேர்ந்த ஸ்பினாசோ, பிரான்சை சேர்ந்த ஜூலியன் மெட்ரீ, டிடரோட், ஹெல்விசியஸ் மற்றும் ஜெர்மனியரான ஃபெயர்பெக் ஆகியோர் ஆவர். பொருள்களைப் பற்றியோ அதன் வளர்ச்சி போக்குகள் பற்றியோ ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தனியாக அளவு ரீதியாக மட்டும் குணரீதியாக இல்லாமல் ஆய்வு செய்யும் ஒரு அணுகுமுறையே இயக்க மறுப்பியல் பொருள் முதல் வாதம் ஆகும். பிரபஞ்சம் இயங்குவதின் மூலம் பல மாற்றங்களுக்கு உட்பட்டு பல புதிய வளர்ச்சி நிலைகளுக்கு மாற்றம் பெறுகிறது என்ற உண்மையை இயக்க மறுப்பியல் பொருள் முதல் வாதம் ஏற்பதில்லை.( இயற்கை மற்றும் சமூகத்தில் நிலவும் இயக்கத்தினை மறுக்கும் தத்துவமாகும்) இன்றைக்கும் கூட இந்த இயக்க மறப்பியல் சிந்தனை முறை பல்வேறு வடிவங்களில் மனிதர்களிடையே இருக்கிறது என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டி உள்ளது.
3. இயந்திரவியல் பொருள் முதல்வாதம்
எதிரே உள்ள பிரபஞ்சம் இயந்திரகதியான இயக்கத்தில் உள்ளது ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஒரு இயந்திரத்தை போன்றது என்றும் அதை ஓட விட வெளியிலிருந்து ஒரு சக்தி தேவைப்படுகிறது என்றும் இயந்திரவியல் பொருள் முதல் வாதம் முன்வைக்கிறது. ஒரு முதன்மையான இயக்கு விப்பான் இல்லாமல் பிரபஞ்சத்தில் இயக்கமோ அதன் காரணமாக ஏற்படும் மாற்றங்களோ நடைபெற முடியாது. இயற்கைக்கு வெளியே இருக்கும் ஒன்றின் மூலமாக அல்லது ஒருவரின் மூலமாக மட்டுமே இயக்கத்தை உருவாக்க முடியும். இது வளர்ச்சியை மறுதலிக்கிறது. பொருள் மற்றும் நிகழ்வு போக்குகளில் ஏற்படும் மாற்றங்களை இயந்திரவியல் பொருள் முதல்வாதம் கணக்கில் கொள்வதில்லை.
சர் ஐசக் நியூட்டன் கண்டுபிடித்த இயக்க விதிகள் பற்றிய கோட்பாடுகள் இத்தகைய ஒரு தத்துவ பிரிவு உருவாவதற்கு அடிக்கோலியது எனலாம். முன் சொன்ன இயக்க மறுப்பியல் பொருள் முதல்வாதத்திற்கும் இயந்திரவியல் முதல்வாதத்திற்கும் நிறைய ஒருமைப்பாடு உள்ளது.
4. சிந்தனை வயப்பட்ட அல்லது சிந்தனையை முன்னிறுத்தும் பொருள் முதல் வாதமும் ( Contemplative Materialism) மார்க்சின் விமர்சனமும்
மனித குலம் மனித சமூகம் என்பது அதைச் சுற்றியுள்ள இயற்கையின் சுற்றுச்சூழலில் படைப்பு என்ற வாதத்தை பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்த எந்திரகதியாக அல்லது சிந்தனை வயப்பட்ட பொருள் முதல் வாதிகள் ஆணித்தரமாக முன்வைத்தனர். அதேசமயம் கருத்து முதல்வாதிகள் இவ்வாதத்திற்கு நேர் எதிராக சிந்தனை ஆற்றலே இயற்கையை படைத்தது என்ற வாதத்தை முன்வைத்தனர். ஆனால் இயக்கவியல் பொருள் முதல் வாதமோ இவ்விரண்டு வாதங்களின் போதாமையை எடுத்துக்காட்டியது. மனித சமூகத்திற்கும் இயற்கைக்கும் மனிதர்களுக்கு இடையேலும் தொடர்ச்சியாக இடைவிடாது வினையும் எதிர்வினையும் தொடர் செயல்பாடுகள் இருக்கிறது. இந்த தொடர் பரஸ்பர தாக்கங்களின் விளைவே மனித அறிவு என்ற வாதத்தை இயக்கவியல் பொருள் முதல் வாதம் முன்வைக்கிறது. மனித குலம் தான் பெற்றிருக்கும் அறிவின் மூலம் வளர்ந்த சிந்தனை ஆற்றலின் மூலம் இயற்கையை மாற்றும் வல்லமை படைத்தது என்பதை இயந்திரகதியாக சிந்திக்கும் பொருள் முதல்வாதிகள் ஏற்றுக்கொள்வதில்லை. மறுபுறத்தில் மனித சமூகத்தின் சிந்தனையும் அனுபவ அறிவும் எதார்த்தமான உண்மையான வாழ்வியலில் இருந்துதான் பெறப்படுகிறது என்ற உண்மையை கருத்து முதல் வாதிகள் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களைப் பொருத்தமட்டில் ஒவ்வொன்றும் புனிதமான ஒரு கருப்பொருளால் அதன் செயல்பாட்டால் விளைந்தவையே.
5. இயக்க இயல் பொருள் முதல் வாதம்
மார்க்சிய தத்துவம் என்று நாம் குறிப்பிடுவது இயக்க இயல் பொருள் முதல் வாதத்தை தான். இது 19 ஆம் நூற்றாண்டில் உருவானது. இந்த தத்துவம் உருவாவதற்கு முன்னர் அதாவது பதினெட்டாம் 19ஆம் நூற்றாண்டு காலங்களில் இயற்கை பற்றிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் வியத்தகு வகையில் முன்னேற்றம் அடைந்தன. இந்தப் பின்னணியில் மார்க்ஸ் தன் மிகச்சிறந்த அறிவாற்றல் மூலம் தனக்கு முன் மனித குலத்தின் ஒரு மொத்த அறிவுப்புலன் எழுப்பிய கேள்விகளுக்கு எல்லாம் விடை அளித்தார். தத்துவம் பற்றியும் அரசியல் பொருளாதாரம் குறித்தும் சோசலிசம் சம்பந்தமாகவும் முன்வைக்கப்பட்ட மனித குலத்தின் அக்காலத்தில் மிகச்சிறந்த உயர்வான போதனைகளின் சிந்தனைப் போக்குகளின் நேரடியான உடனடியான கோட்பாடாக மார்க்ஸின் போதனை உருவானது. (மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்கள் – லெனின்)
பொருள் முதல்வாத கண்ணோட்டமும் இயக்க இயல் அணுகுமுறையும் இணைந்ததே இயக்க இயல் பொருள் முதல் வாதம் ஆகும். மார்க்சியம் பொருள் முதல்வாதப்பட்டது. ஏனென்றால் எது முதலானது? என்ற கேள்விக்கு பொருளே முதலானது என்று அது முன்வைக்கிறது.
அதேசமயம் அதற்கு முன் சொல்லப்பட்ட இயந்திரவியல் மற்றும் இயக்க மறுப்பியல் பொருள் முதல்வாத கருத்தாக்கங்களில் இருந்து மார்க்சியம் வேறுபட்டது அல்லது முரண்பட்டது. ஏனென்றால் அது புறவுலக எதார்த்தத்தை இயற்கையை இயக்க இயல் அணுகுமுறைக் கொண்டு ஆய்வு செய்கிறது. புறவயத்தில் உள்ள பொருட்கள் எல்லாம் எப்பொழுதும் இயக்கத்திலேயே இருக்கின்றன என்பதும் பொருளையும் இயக்கத்தையும் பிரிக்க முடியாது என்பதும், பொருள் இல்லாமல் இயக்கம் இல்லை என்பதும் இயக்க இயல் கோட்பாட்டின் அடிப்படையான கருத்துகள் ஆகும்.
இயக்க இயல் பொருள் முதல் வாதமானது மிகச்சிறந்த ஆழமான அகலமான வளர்ச்சி குறித்த தத்துவமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. லெனினின் வார்த்தைகளில் சொல்லப்போனால் “இயக்க இயல் பொருள் முதல்வாதம் வளர்ச்சி பற்றி மிக விரிவாகவும் செறிவான உள்ளடக்கத்தோடும் ஆழமான புரிதலோடும் விளங்குகின்ற தத்துவமாகும். மேலும் முழுமையாக உள்ள அனைத்தையும் இயற்கை சமூகம் சார்ந்து பகுத்தாய்வு செய்து அவற்றுள் இருக்கும் எதிர்மறையான கூறுகளை கண்டறிந்து கூறுவது இயக்க இயலின் சாராம்சமாகும்”.
ஏங்கல்ஸ் வார்த்தைகளில் “இயக்க இயல் என்பது சதா இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய பிரபஞ்சம் பற்றியும், மனித சமூகத்தின் உணர்வு நிலை குறித்தும் விஞ்ஞான ரீதியாக பொதுமைப் படுத்தப்பட்ட கோட்பாடு ஆகும்”. மேலும் ‘இயற்கை மற்றும் மனித சமூக வரலாற்று வளர்ச்சி போக்கில் இருந்து இயக்க இயல் பற்றிய விதிகள் பெறப்பட்டது’ எங்கெல்ஸ் இவ்வாறு விரித்துரைத்தார், ‘ஏனெனில் அவை வரலாற்று வளர்ச்சி போக்குகள் மற்றும் சிந்தனை ஆகிய இரண்டு அம்சங்களை குறித்த பொதுவான விதிகளே ஆகும். இயங்கியல் என்பது பொருளிலேயே பொதிந்துள்ளது. இயக்கம் இல்லாத ஒன்று, புரிந்துகொள்ள முடியாதது. அதுமட்டுமல்ல அவ்வியக்கத்திற்கு பொருளில் உள்ளுறையாக மறைந்திருக்கும் எதிர்மறை தன்மையான முரண்பாடே காரணமாகும்.
அடுத்ததாக மனித சமூகம் அதன் வளர்ச்சி பற்றி இயக்க இயல் பொருள் முதல்வாத தத்துவ அடிப்படையில் ஆய்வு செய்து அணுகுவதே வரலாற்று பொருள் முதல் வாதம் ஆகும். மார்க்சிய தத்துவம் என்று நாம் அழைப்பது இயக்க இயல் பொருள் முதல்வாதம் மற்றும் வரலாற்று பொருள் முதல் வாதம் என இரண்டும் உள்ளடக்கியதாகும்.
பொருள் என்றால் என்ன?
இயக்கவியல் பொருள்முதல் வாத விளக்கத்தின் படி புறநிலையான இருப்பை உடைய அனைத்தும் பொருளே. நமது உணர்தலில் பிரதிபலிப்பை ஏற்படுத்தக் கூடியதும், நம்முடைய உணர்வினி சாராத ஒன்றும் ‘பொருள்’ ஆகும். நம்மை சுற்றியுள்ள அனைத்தையுமே பொருள் என அழைக்கலாம்.
நம்முடைய உணர்தலில் பிரதிபலிக்கும் அந்த பொருள், சிக்கலான – பொருத்தமான உபகரணங்களைக் கொண்டு உணரக்கூடிய ஒன்றாகவும் இருக்கலாம்.
மனிதர்களின் ஐம்புலன்களின் நடவடிக்கையும், செயல்பாடுகளும் புறநிலையில் நிலவும் உண்மையின் அங்கமே. இவ்வகையில் பார்க்கும்போது, மனித சமூகத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் நடவடிக்கைகள் உள்பட புறநிலை உண்மையின் அங்கம் என்பதால் அவையும் பொருளோடு தொடர்புடையவை. நம்மால் உணரக்கூடியவை, அறிய முடிந்தவை மட்டுமே பொருள் என்று புரிந்து கொள்ள கூடாது. பொருள் என்பது நம்மை தாண்டியும் மனித அறிவுக்கும் அல்லது சிந்தனைக்கு அப்பாற்பட்டு சுதந்திரமாகவும் நிலைக் கொண்டுள்ளது. நம் கண்களுக்கு தெரிவது மட்டும் பொருள் அல்ல. எனவே பொருள் என்பதே தத்துவ துறைக்கான ஒன்றாகும்.
இயக்கம்
அனைத்து பொருட்களும் மாறிக்கொண்டும், மேம்பட்டுக் கொண்டும் உள்ளன. முன்னேற்றம் என்பது இயக்கம் மற்றும் வளர்ச்சி இரண்டும் இணைந்ததாகும். இயக்கம் என்றால் பொதுவாக மாற்றம், அத்துடன் அது எல்லா பொருள்களுக்கு இடையிலும் பொருள்களுக்குள்ளாகவும் நடைபெறும் பரஸ்பர செயல்பாடாகும். நம்மை சுற்றியுள்ள இயற்கையிலும், மனித சமூகத்திலும் நடக்கும் அனைத்து விதமான செயல்முறைகளுமே இயக்கம். ஒரு பொருளின் இருப்பே இயக்கம்தான். அதாவது பொருளின் மிக அடிப்படையான குணமே இயக்கம். பொருளைப் பற்றியும் அதன் செயல்பாடுகளைப் பற்றியும் புரிந்து கொள்வது தீர்மானிப்பது என்பது அவற்றின் தொடர்ச்சியான இயக்கம் மற்றும் வளர்ச்சியால் ஏற்படும் மேம்பாட்டை அறிவதே ஆகும்.
இயக்கவியல் பொருள் முதல்வாத தத்துவம் தான், முதன் முதலில் இயக்கமில்லாமல் பொருள் எதுவும் பிரபஞ்சத்தில் இல்லை என்பதை முன் வைத்தது. ஆகையால் நிலையாக இருக்கும் பொருள்களாக ஐம்புலன்களுக்கு தெரியக்கூடியவையும் கூட உண்மையில் இயங்கிக் கொண்டே உள்ளன. அவை நிலையாக இருப்பது போன்று தோன்றுவது கூட ஒப்பிட்டளவில் தான். இயங்காத பொருள் என்று ஒன்றுமில்லை.
பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருக்கிறது. சூரியனையும் நீள் வட்டப்பாதையில் பூமி சுற்றி வருகிறது. பால்வெளி மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் மற்ற கிரகங்களோடு பூமியும் சுழன்று கொண்டு அதாவது இயங்கிக் கொண்டே இருக்கிறது. அதன் காரணமாக பூமி மேல் வாழும் அத்தனை பொருட்களும் உயிர் இனங்களும் நாமும் தொடர்ச்சியான இயக்கத்தில் தான் இருக்கிறோம். நாம் செயல்படாத போதும் தூங்கும் போதும் நம் உடம்பிற்குள் ரத்தம் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. வளர்ச்சிதை மாற்றம் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. உயிரோடு இருக்கும் மனித உடலில் பழைய செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறது. மனித சமூகம் கூட ஒரே நிலையில் இருப்பதில்லை. அத்தோடு நிரந்தரமான குறிப்பிட்ட வகையான இயக்கத்திலும் இருப்பதில்லை.
முடுக்கி விடப்பட்ட வேகமான இயக்கம் என்பது பொருளின் இன்னொரு குணம்சமாகும். நாம் வாழும் பூமி பல அடுக்குகளால்( தட்டுகளால்) ஆனது. அதன் அடி மூலக்கூறிலிருந்து மேல் பகுதி வரை பல தட்டுக்கள் இருக்கின்றன. இத்தட்டுகள் கூட இயக்கத்தில் இருக்கின்றன. இவ் இயக்கத்தை கண்டத்தட்டு இயக்க கோட்பாட்டின் (Plate Tectonic Movement) மூலம் விஞ்ஞானம் நமக்கு விளக்குகிறது. பூமியின் நிலநடுக்கம் (Earth Quake) இவ்வியக்கங்களால் ஏற்படுகிறது. பூமிப் பந்தில் உள்ள கண்டங்களின் எல்லைகள் மற்றும் கடற்பரப்பின் எல்லைகள் எல்லாம் எல்லா காலத்திலும் ஒரே தன்மையில் இருப்பதில்லை. மேற் சொன்ன இயக்கத்தின் காரணமாக எல்லைகள் மாறுகின்றன. உலக வரைபடம் என்பது மாறிக்கொண்டே வருகிறது மிக மிகக் குறைவான வேகத்தில் இம்மாற்றம் நடைபெறுவதால் நம்மால் உணர இயலவில்லை.
விஞ்ஞானத்தில் நிலையான ஆற்றல் பற்றி நாம் அறிகிறோம் எனினும் அதுவும் இயக்கத்திற்கு உட்பட்டதே ஆகும்.
வெளி (இடம்) மற்றும் காலம்
ஒரு பொருளின் அல்லது பொருட்களின் இருத்தலுக்கு வெளியும் காலமும் மிக அடிப்படையான தேவையான கூறுகளாகும். பொருளிலிருந்து இவ்விரண்டையும் பிரிக்க இயலாது. ஒரு காலத்தின் அடிப்படையில் பரந்துபட்ட பொருள்களின் இருப்பை வெளி உணர்த்துகிறது. பொருள்கள் ஒன்றிலிருந்து ஒன்றாக மாறி மாறி வரும் நிகழ்வு போக்கை அதன் வரிசையை காலம் உணர்த்துகிறது. அனைத்து வகையான பொருள்களின் மாற்றங்களும் இரண்டு கால வரிசைகள் உள்ளன. ஒன்று அதன் கடந்த மற்றொன்று அதன் எதிர்காலம். காலம் திரும்பி வராது காலமும் வெளியும் பொருளின் சாரமாகும். எனவே பொருள், இயக்கம், வெளி, காலம் இவை பிரிக்க முடியாத வகையில் இணைந்தே உள்ளன.
ஆதி காலம் தொட்டு அண்டவெளி என்ற ஒன்று இருந்தது. அதில் இயக்க நிலையில் உள்ள பொருட்கள் உருவாக்கப்பட்டன அல்லது நுழைக்கப்பட்டன என்ற கருத்து தவறான ஒன்றாகும். இயக்கத்தில் உள்ள பொருட்கள் இல்லாமல் அண்டவெளி என்ற ஒன்று தனியாக எப்போதும் இருந்ததில்லை. கிரகங்கள் நட்சத்திரங்கள் பால் வெளி மண்டலங்கள் எல்லாம் பிரம்மாண்டமான அளவுடைய இயங்கும் பொருட்களாகும். அதே போல் தான் தேசம் கண்டம் கடல் மலை அனைத்தும் இயக்கத்தில் உள்ள பொருட்களே.
இயங்கும் ஒரு பொருள் தன்னைச் சுற்றி உருவாக்கிக் கொள்வதுதான் வெளி என்பது. அந்த இயங்கும் பொருளின் நீண்ட ஆயுளே காலம் ஆகும். பொருளின் இயங்கும் தன்மை இல்லாமல் அப்பொருளுக்கு காலம் என்பதும் இருக்க முடியாது.
வருடம், மாதம், நாள், மணி, மணித்துளி என்பதெல்லாம் காலம் பற்றிய நமது குறியீடுகளே. உதாரணத்திற்கு ஒரு வருடம் என்பது பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வரும் இயக்கத்தின் அளவைக் குறிப்பது தானே. அதே போல், ஒரு நாள் என்பது பூமி தன்னைத் தானே சுற்றும் இயக்கத்தின் அளவைக் குறிப்பதாகும். இவ்வியக்கத்தின் அளவைகளில் இருந்து தான் ஒரு மணி நேரம்(1/24) ஒரு நிமிடம்(1/60) என்பதெல்லாம் தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே காலம் பற்றிய நமது குறியீடுகள் (கருத்தாக்கம்) பூமியின் இரண்டு வகையான இயக்கங்களில் இருந்து உருவாக்கப்பட்டவையே. ஆதி காலத்தில் மாறுகின்ற நிழல் வடிவத்தை வைத்துக்கொண்டு காலம் என்பது கணிக்கப்பட்டது.
வெளியும் காலமும் இயக்கத்தில் உள்ள பொருளின் பண்புகளாகும். கடந்த காலத்தில் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த சார்பியல் கோட்பாடுகள் மேற்சொன்ன காலத்திற்கும் இயக்கத்திற்குமான உறவு பற்றிய கருத்துக்கு வலு சேர்த்தன. ஒரு பொருளின் நிறைக்கும் அதன் ஆற்றலுக்கும் உள்ள பாஸ்பர தொடர்பு பற்றிய புதிய கோட்பாடு கண்டுபிடிக்கப்பட்டதானது பழைய விதிகளில் இருந்து கிளம்பிய ஒரு புரட்சிகரமான ஒன்று ஆகும். இது காலம் என்பது இயக்கத்தின் அத்தியாவசியமான ஒரு பகுதி என்பதை உறுதிப்படுத்தியது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் வெளியும் காலமும் இயக்கத்தில் இருக்கும் பொருளின் உள் உறைந்த கூறுகளாகும். அதல்லாமல் அவை தனித்து இருப்பதில்லை. சார்பியல் கோட்பாடு என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பு பொருள்களுக்கும் விசை என்ற உட்கூறும் உள்ளது என்பதை நிரூபித்தது. சார்பியல் பொதுக் கோட்பாடு பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சியை கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்தது.
உயிர் (Life) ஒரு வகைப்பட்ட பொருளின் இயக்கம். அது இயற்பியல் மற்றும் ரசாயன வடிவம் சார்ந்து உயர்ந்த வகைப்பட்டதாக இருக்குமானால் சில குறிப்பிட்ட பண்புகள் அதனுள் இருக்கும். மனித உயிர் என்பது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியினால் படைக்கப்பட்டது என்ற கருத்து நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் உயிரற்ற பொருட்களில் இருந்து பரிணாம வளர்ச்சிப் போக்கில் உருவானது தான் உயிர் என்று விஞ்ஞானம் கூறுகிறது. 370 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் உயிர் தோன்றியது. அப்போது நிலவிய சூழலில் உயிரற்ற பொருளிலிருந்து அமினோ என்று அழைக்கப்பட்ட ஒருவகை அமிலமும் வேறு பல கரிமக் கூறுகளும் இணைந்து நடைபெற்ற பல்வேறு ரசாயன மாற்றங்களால் உருவான ஒன்றுதான் உயிர் ஆகும். இன்றைக்கு நாம் காணும் எண்ணற்ற பலவகைப்பட்ட உயிரினங்கள் இத்தகைய பரிணாம வளர்ச்சிப் போக்கில் உருவானவை தான். மனிதனும் அவ்வாறுதான் உருவானான். 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சிறு மூளை உடைய ஆஸ்ட்ரோ லோபிதெசின்கள் என்று அழைக்கப்படக்கூடிய உயிர் வகைகள் தங்களுக்கான கருவிகளை உருவாக்கும் திறன் படைத்திருந்தன என்பதற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுந்து நிற்கும் திறன் கொண்ட குரங்கினம் இருந்ததாக ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வகை குரங்கினத்தில் இருந்து தான் மனிதன் உருவாகி இருக்க முடியும்.
ஏறக்குறைய இன்றைய மனிதர்கள் சுமார் 250000 ஆண்டுகளுக்கு முன் உருவாகினர். தாவரங்களின் தோற்றம் சுமார் 50 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது. நீர்வாழ் உயிரினங்கள் தோன்றி சுமார் 36 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டது. சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன் பறவைகளும் 13 கோடி ஆண்டுகளுக்கு முன் பாலூட்டிகளும் தோன்றின. சுருங்கக்கூறின் பொருளின் பலவகை வெளிப்பாடுகளில் ஒன்றே உயிர் ஆகும்.
1953ம் வருடம் பிரான்சிஸ் க்ரீக் ஜேம்ஸ் வாட்சன் என்ற இரண்டு விஞ்ஞானிகள் உயிரின் மரபணுவின் இரண்டு சுருள் இழை வடிவத்தை கண்டுபிடித்தார்கள். இக்கண்டுபிடிப்பானது இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. தமது கண்டுபிடிப்பின் 50 வது ஆண்டில் ( 2003 ) வாட்சன் இவ்வாறு எழுதினார். ‘எங்கள் கண்டுபிடிப்பு மனித குலத்தின் தோற்றம் முதலே இருந்துவந்த அனுமானங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. அதிசயத்தக்க இயற்கை அப்பாற்பட்ட ஒரு சக்தியால் உயிரினம் உருவானதா? அல்லது விஞ்ஞானம் சொல்வது போல் இயற்பியல் மற்றும் ரசாயன மாற்றங்களால் அது உருவானதா? உயிருக்கு அடிப்படையாக விளங்கும் செல்லுக்குள் தெய்வீக குணம் படைத்த ஏதாவது ஒன்று இருக்கிறதா? இல்லை தெய்வீகமாக ஏதுமில்லை. மாறாக இயற்கையில் நிகழ்ந்த பரிணாம மாற்றங்களின் விளைவே உயிர்’ என்றார் அவர்.
அந்த கண்டுபிடிப்பின் 13 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1963ல் ஹர் கோபிக் குரானா, மார்சல் நிரன்கலர்ஸ் ஆகிய இரு விஞ்ஞானிகள் இக்கண்டுபிடிப்பை மேலும் உறுதிப்படுத்தினார்கள்.
உணர்வு
பொருளின் மேம்பட்ட நன்கு ஒருங்கமைக்கப்பட்ட வெளிப்பாடே மனித மூளை ஆகும். உணர்வும், சிந்தனையும் மூளையின் செயல்பாட்டால் உருவானவை. மூளையின் செயல்பாடுகளை நம்மால் இன்று நவீன விஞ்ஞான வளர்ச்சியின் உதவியால் புரிந்து கொள்ள முடிகிறது. எண்ணற்ற ரசாயன செயல்பாடுகளும், மின்சார மற்றும் மின்காந்த இயக்கமும் வினைகள் மற்றும் எதிர்வினைகளின் வழியே மூளை இயங்குகிறது. இச்செயல்பாடுகளின் விளைவு தான் உணர்வாகும். புறநிலையாக உள்ள அனைத்தும் மூளையில் பிரதிபலிப்பை ஏற்படுத்துகின்றன. புறநிலை எதார்த்தத்திற்கும் அவை மூளையில் ஏற்படுத்தும் பிரதிபலிப்புகளுக்கும் இடையிலான உறவே உணர்விற்கு அடிப்படையாகும். மூளையிலிருந்து உருவாவதுதான் எந்த ஒரு கருத்தும் சிந்தனையும் நினைவும் ஆகும். மூளை இல்லாமல் இவைகள் உருவாவதில்லை. இயற்கையுடனும் சமூகத்துடனும் ஒரு மனிதன் உறவுகொள்ள இந்த உணர்வு தான் வழிவகுக்கிறது. ஒவ்வொரு மனித நடவடிக்கைக்கும் இது பொருந்தும்.
ஆனால் கருத்து முதல் வாதிகள் சிந்தனை என்பது தனித்த அடையாளம் கொண்டது என்றும் அதுதான் ஆன்மா என்றும் பிறகு அதையே தெய்வீகத் தன்மை கொண்ட பரமாத்மா என்றும் கருதுகிறார்கள்.
அறிவும் உண்மையும்
மனித இனம் இந்த பூமியில் உயிர் வாழ தன்னை பாதுகாத்துக் கொள்ள பல நூற்றாண்டுகளாக நீண்ட நெடிய போராட்டங்கள் நடத்தியுள்ளது. மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே பரஸ்பர செயல்பாடுகள் உழைப்பு என்னும் ஊடகத்தின் வழியே நடைபெறுகிறது. உழைப்பை கொண்டு நடத்திய நீண்ட போராட்டத்தின் ஒரு விளைவாகத்தான் மனிதர்களுக்குள் நரம்பு மண்டலம் என்பது உருவானது. இந்த நரம்பு மண்டலத்தின் வாயிலாக மனித மூளையும் வளர்ச்சி பெற்றது. மனிதர்களின் சிந்திக்கும் ஆற்றலும் இவ்வகையில் பரிணமித்தது. மனித இனத்தின் அனைத்து வகை பரிணாம வளர்ச்சியிலும் உழைப்பு தன் பங்களிப்பை செய்துள்ளது. அதுமட்டுமல்ல இவ் வளர்ச்சிப் போக்கில் தான் மனிதர்கள் அறிவைப் பெற்றனர். மனித செயல்பாடுகளின் மூலம் அறிவு உருவானது. மேலும் வளர்ச்சி பெற்றது. இயற்கையோடு மனிதர்கள் ஊடாடி தலையிட்டு தனது உழைப்பை அதன் மீது செலுத்தி தங்கள் செயல்பாடுகளின் மூலம் தமது ஆளுமையை வளர்த்துக் கொண்டனர். மனிதர்கள் சரியான முன்னோக்கு பார்வையுடனும் கூடுதலான தயாரிப்புகளோடும் இயற்கையின் மீது தம் ஆளுமையை செலுத்துவதற்கு அவர்களின் சிந்தனை ஆற்றல் அவர்களை தகுதிப் படுத்தியது. இவ்வகையான சிந்தனைச் செயல்பாடுகள் காரணமாகவும் மனிதர்கள் தன் அறிவை உருவாக்கிக் கொண்டனர். எனவே மனித செயல்பாடுகளுக்கும் மனித அறிவுத்திறனுக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது. புறநிலையாக நிலவிவரும் உலகின் பிரதிபலிப்பே மனிதர்களுக்குள் உருவாகும் சிந்திக்கும் வழிமுறையும், உணர்ச்சிகளும், அறிவும் ஆகும். அவ்வாறு பெறப்படும் அறிவு சரியானதான் என்பதை நடைமுறையைக் கொண்டு தீர்மானிக்கும்.
மார்க்சின் பிரபலமான கூற்று இவ்வாறு சொல்கிறது: புறநிலை உண்மைகளை மனித சிந்தனையின் வெளிப்பாடாகக் காண முடியுமா என்பது முற்றிலும் நடைமுறை சார்ந்த கேள்வி ஆகும். தத்துவார்த்தமானது அல்ல.
மனிதர்கள்தான் உண்மையை அதாவது நடப்பையும், சக்தியையும் நிரூபித்துக் காட்ட வேண்டும். சிந்தனைச் செயல்முறை என அதனை அழைக்கிறோம் ( the this-sidedness of his thinking in practice). உண்மையைத்தான் சிந்திக்கிறோமா அல்லது நடைமுறையில் இருந்து விலகிய, உண்மைக்கு மாறான ஒன்றினை சிந்திக்கிறோமா என்ற பிரச்சனை தெளிவாக கல்விப்புல விவாதத்திற்கான ஒன்றாகும்.
அறிவு என்பது மனித நடவடிக்கைகளோடு நேரடியாக தொடர்புடையது. இயற்கையை தமக்குச் சாதகமாக மாற்றும் அனைத்து மனிதச் செயல்பாடுகளிலும் அறிவின் பங்களிப்பு இருக்கிறது. இங்கு இயற்கையை புறநிலையான பொதுவான பொருளாகவும் மனித இனத்தை இயற்கையின் அகத்தே அமைந்த ஒரு பகுதியாகவும் நாம் கருத வேண்டும்.
அறிவை சேமித்துக் கொள்வதற்கும், அதை பகிர்ந்து கொள்வதற்கும் தேவையான ஒன்றாக மொழிகள் அமைகின்றன.
அறிவைப் பெறும் நடைமுறையில், கருத்தாக்கமும் (abstraction), உறுதிப்படுத்தலும் முக்கியமானவை. புறத்தே நிலவும் பொருட்களின் பொதுவான இயல்புகளில் இருந்து ஒரு சிந்தனையையோ, கோட்பாட்டையோ வடித்தெடுக்கும் செயல்பாட்டை ‘கருத்தாக்கம்’ என்கிறோம். அவ்வாறு பெறப்பட்ட அந்த கோட்பாட்டையோ அல்லது கருத்தையோ நடைமுறை உலகில் உறுதிப்படுத்தி செயலாக்குவது அறிவின் செயல்முறையாகும். உண்மை என்பது, இயல்போடும் நடப்போடும் பொருந்தி இருக்கும் நிலையை குறிக்கிறது. உண்மை என்பதை பொதுவாக பொய்மைக்கு எதிரான நிலையாக காண்கிறோம்.
தத்துவமும் நடைமுறையும் கொண்டிருக்கும் உறவு
மக்களின் சமுதாய – வரலாற்று நடவடிக்கைகளின் கருத்தியல் அம்சங்களையும், பொருளியல் அம்சங்களையும் – இயற்கையும், சமூகமும் அடைந்துவந்த மாற்றங்களையும், அறிவாற்றலையும் இது குறிக்கிறது.
தத்துவம் எனப்படுவது நடப்பின் வழியாக பிரதிபலிக்கப்படும் சிந்தனைகளையும், அந்த சிந்தனைகள் மறுவுருவாக்கம் செய்யப்படுதலையும் குறிக்கிறது. நடைமுறை என்பது மக்கள் தம்மை நீடித்து நிலைக்கச் செய்யவும், சமுதாயத்தை மேம்படுத்தவும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளாக உள்ளது. அனைத்திற்கும் மேலாக அது, மனித இனம் நிலைத்து வாழ அடிப்படையாக அமைந்த, பொருளுற்பத்திச் செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும், வர்க்கங்களின் மாற்றச் செயல்பாடுகளாகவும் உள்ளன. அத்துடன் உலகத்தில் மாற்றங்களை உருவாக்க வல்ல அனைத்து வடிவிலான சமூக நடவடிக்கைகளுமே நடைமுறை எனப்படுகின்றன.
நடைமுறை என்பதே உண்மையின் அளவுகோலாகவும் அறிவாற்றலின் அடித்தளமாகவும் விளங்குகிறது. மனித சமூகத்தின் நடவடிக்கைகள் ஏற்படுத்தும் விளைவுகளின் தொகுப்பாகவும் அவை இருப்பதால் தத்துவத்தின் ஒரு பகுதியாகவும் விளங்குகின்றன.
” எல்லா தத்துவவாதிகளும் உலகை வியாக்கியானம் செய்துள்ளார்கள். ஆனால் பிரச்சனையோ அதை எவ்வாறு மாற்றுவது என்பது ஆகும்”. இது மார்க்சின் புகழ்பெற்ற ஒரு மேற்கோளாகும். மார்க்ஸ் நடைமுறைக்கும் செயல்பாடுகளுக்கும் கொடுக்கக்கூடிய கூடுதல் அழுத்தத்தை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.
” சமூக வாழ்க்கை என்பதே அடிப்படையில் நடைமுறைச் செயல்பாடுதான். தத்துவங்களை மாயாவாத வலைக்குள் தள்ளிய எல்லா மர்மங்களுக்கும் பகுத்தறிவு அடிப்படையிலான தீர்வை நடைமுறை தான் வழங்குகிறது”. என்றும் கூடுதலாக மார்க்ஸ் கூறுகிறார்.
அதே சமயம் தத்துவமும் மிக முக்கியமானது. லெனின் வார்த்தைகளில் கூறுவதென்றால் ” புரட்சிகர தத்துவம் இல்லாமல் புரட்சிகர இயக்கம் என்பது இருக்க முடியாது.” நடைமுறை செயல்பாட்டுக்கான வழிகாட்டியாக தத்துவம் திகழ முடியும் என்பதால் லெனின் தத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.
எனவேதான் தத்துவமும் நடைமுறையும் பிரிக்க முடியாதவை. நெருங்கிய தொடர்பு உள்ளவை. மேலும் ஒரு புரட்சிகர இயக்கத்திற்கு இரண்டும் மிக முக்கிய தேவையாகும். இவ்விஷயத்தில் தோழர் ஸ்டாலின் கூறி இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
“புரட்சிகர இயக்கத்தோடு தொடர்பற்ற எந்த ஒரு தத்துவமும் நோக்கம் இல்லாதது. எதைப் போல என்றால் புரட்சிகர தத்துவத்தால் ஒளி ஏற்றப்பட்டு வழிகாட்ட படாத எந்த ஒரு நடைமுறையும் இருட்டுக்குள் தேடுவதைப் போன்றது தான்.” தத்துவத்தையும் நடைமுறையையும் தனித்தனியாக பிரிப்பது என்பது எல்லாவித தவறுகளுக்கும் இட்டுச் செல்லும். அதுமட்டுமல்ல சந்தர்ப்பவாதம், அதி தீவிரவாதம், நடைமுறை செயல்பாடுகளை மட்டும் உயர்த்தி பிடிப்பது அல்லது வறட்டு கோட்பாட்டுச் சூத்திரத்துக்குள் மூழ்கி விடுவது போன்ற தவறுகளுக்கும் இட்டுச் செல்லும்.
இயக்கவியல் – அனைத்தின் பரஸ்பர தொடர்பு பற்றிய கோட்பாடு
எல்லாப் பொருட்களும், நிகழ்முறைகளும் ஒன்றை ஒன்று சார்ந்தவை, ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவை. அவற்றை தனித்தனியாக மதிப்பிடுவது மிகப்பெரிய தவறாகும். எப்படி ஒரு மனிதரை அவர் குடும்பத்திலிருந்தும், அவன் வாழும் சமூகத்தில் இருந்தும் தனித்துப் பிரித்து மதிப்பிடுவது தவறாகவும், அரைகுறையாகவும் போகும். துகள்களும் வாயு மேகங்களும் இயந்திர இயக்கத்தால் நெருங்கி வருகின்றன. அவற்றின் இயல்பான இயக்கத்தால் உருவாகும் வெப்பத்தின் காரணமாக ஒன்று சேர்ந்து அடர்த்தியான நெருக்கமான பொருளாக மாறுகின்றன. எனவே, இயல்பான இயக்கத்தை மட்டும் தனியாகப் பார்த்து அந்த இயல்பான இயக்கத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி போக்கை புரிந்து கொள்ள முடியாது. பூமி உருவான பின்னர் அதன் உள்ளே நடந்த மாற்றங்களின் காரணமாக நீர் உருவாகிறது. நீருக்குள் உயிரற்ற பொருள்களின் எதிர்வினை நிகழ்கிறது. இதன் காரணமாக பல மூலகங்கள் உருவாகி அதிலிருந்து தான் உயிர் பொருள் உருவாகியது. இந்நிகழ்வு ரசாயன இயக்கத்தை குறிக்கிறது. ரசாயன இயக்கம் இயல்பான இயக்கத்தோடு சம்பந்தப்பட்டுள்ளது. ரசாயன வகைப்பட்ட இயக்கத்தின் காரணமாகவே பூமியில் உயிர் உருவாகியது. உயிர் பொருட்களின் பரிணாம வளர்ச்சியில் தான் ஒரு கட்டத்தில் மனிதர்கள் உருவாகினார்கள். பிறகு மனிதச் சமூகம் உருவாகிறது. வளர்ச்சிப் போக்கில் மனித சமூகம் படிப்படியாக முன்னேற்றம் அடைகிறது. பல்வேறு மனித சமூக அமைப்புகள் அறியப்பட்டுள்ளன. இந்த முன்னேற்றத்தின் ஒரு கட்டத்தில் சோசலிச சமூகம் என்ற ஒரு புதிய சமூக கட்டமைப்பு சில நாடுகளில் உருவானது. மனித சமூகம் இறுதியாக கம்யூனிச சமூகமாக பரிணாமம் அடையும். இந்த ஒட்டுமொத்த பரிணாம வளர்ச்சி சமுதாய வகைப்பட்ட (societal motion) இயக்கத்தின் காரணமாக விளைந்தது. மேலும் அது உயிரியல் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இவ்விரண்டு இயக்கங்களையும் பிரித்துப் பார்த்து மதிப்பிட முடியாது.
பொருளியல் உலகம் மேம்பட்டு வருவது மட்டுமே அதன் ஒரே குணாம்சம் அல்ல. ஒட்டுமொத்த பொருளியல் உலகமும் பிணைந்தது, ஒரே தொகுப்பாக அமைந்தது. ஒரு பொருளோ அல்லது ஒரு நிகழ்வோ தனியாக வளர்வதில்லை. அது மற்ற பொருட்களையும், நிகழ்வுகளையும் சார்ந்ததே. பொருளும், நிகழ்வும் அவற்றின் சர்வ தொடர்புத் தன்மையில் இருந்துதான் மதிப்பிடப் பட வேண்டும். பொருளியல் உலகத்தை ஒரு தொகுப்பாகப் பார்ப்பது இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் முக்கிய பண்புகளில் ஒன்றாகும். எதையுமே அதன் பிணைப்புகளோடு சேர்த்து பார்க்க வேண்டும்.
பொருள் மயமான எதார்த்த உலகில் பொருளும் இயக்கமும் பன்முகத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. எனவே அவ்விரண்டின் இடையே உள்ள உறவும் பன்முகத்தன்மை வாய்ந்ததாகும். ஆகவே ஒட்டுமொத்த பரஸ்பர உறவுகளை ஆய்வு செய்வது என்பதற்கு பதிலாக அனைத்து பொருட்களுக்கும் உள்ள உறவுகளைப் பற்றி அதாவது பொருளுக்கும் இயக்கத்திற்குமான உறவு பற்றி மார்க்சிய இயக்கவியல் ஆய்வு செய்கிறது இந்த ஆய்வின் மூலமாக கற்றறிந்து தெரிந்து கொண்ட அறிவின் உதவி கொண்டு சமூக வாழ்வின் பரஸ்பர உறவுகள் பற்றிய விதிகளை கண்டறிகிறது. அன்றாட மனித வாழ்க்கை நடைமுறைக்கு இவ்வறிவின் பயன்பாடு முக்கியமானதாகும்.
பொருளியல் உலகத்தில், பல பரிமாணங்களைக் கொண்ட பொருட்களும், நிகழ்வுப் போக்குகளும் நிலவுகின்றன. எனவே அவைகளுக்கு இடையில் நிலவும் தொடர்புகளும் பல பரிமாணம் கொண்டவை. எனவே, ஒவ்வொன்றுக்கும் இடைப்பட்ட தொடர்புகளை தனியே ஆய்வு செய்வதற்கு மாறாக, எல்லா பொருட்களிடையிலும் நிலவும் பொதுவான பிணைப்புகளை மார்க்சியம் ஆய்வு செய்கிறது. இந்த ஆய்விலிருந்து கிடைக்கும் அறிவானது வாழ்வின் பொது விதிகளை கண்டறிய உதவுகிறது. அன்றாட மனிதவாழ்வை வழிநடத்த இந்த அறிவு அவசியமாகும்.
அனைத்து பொருட்களுக்கும், நிகழ்வுகளுக்கும் இடையில் நிலவும் பரஸ்பர பிணைப்பில் வேறுபட்ட வகைகள் உள்ளன. அந்த இயக்கவியல் உறவுகளை கற்பது பொருளியல் உலகின் பிணைப்புக்களை பற்றியும், பொதுவான வளர்ச்சி பற்றியும், மார்க்சிய இயக்கவியல் விதிகளை குறித்தும் தெளிவான பார்வையை பெற உதவுகிறது.
இயக்கவியாலானது, பின்வரும் முடிவான கருதுகோள்களுடன் தொடர்புடையது: குறிப்பானதும் பொதுவானதும், வடிவமும் உள்ளடக்கமும், சாரமும் தோற்றமும், காரணமும் விளைவும் (Cause and Effect) , தற்செயலும் அவசியமும், அவசியமும் விடுதலையும், சாத்தியமும் நடப்பும், மொத்தமும் பகுதியும் இன்ன பிறவும் ஆகிய இந்த முடிவான கருதுகோள்களை வகைகள் என்று அழைக்கலாம்.
லெனின் கூறுகிறார், “மனிதர்கள் கருத்தாக்கங்களால் நெய்யப்பட்ட வலைப்பின்னலுக்கு முன்னால் நிறுத்தப்படுகின்றனர் … வகைகள் (categories) வேறுபடுத்துவதற்கான நிலைகள், அதாவது, உலகத்தை அறிந்துகொள்கிற பல நிலைகளாகும். வலைப் பின்னலின் மையப்புள்ளிகள், அவை அறிவதிலும் தேர்ச்சி பெறுவதிலும் உதவுகின்றன” (Lenin Collected Works, Vol. 38)
குறிப்பானதும் பொதுவானதும்
ஒவ்வொரு பொருளும் குறிப்பான தனி இயல்புகளை பெற்றிருக்கிறது. அது மற்ற பொருட்களில் இருந்து அந்த குறிப்பிட்ட பொருளை பிரித்து உணர்ந்திட உதவுகிறது. மேலும். ஒவ்வொரு பொருளுக்கும் சொந்த இயல்புகள் இருந்தாலும், அது மற்ற பொருட்களுடன் சில பொதுவான இயல்புகளை பகிர்ந்தும் கொள்கிறது. அந்த தன்மை பொதுவானது ஆகும். எனவே ஒவ்வொரு சிறப்பான பொருளுக்குள்ளும் பொதுவான தன்மையும் இடம்பெற்றுள்ளது. இவ்விதத்தில் ஒவ்வொரு சிறப்பான பொருளும் பொதுவான தன்மைகளால் மற்ற பொருட்களோடு இணைந்தே உள்ளது.
தனிப்பட்ட எல்லாமே பொதுத் தன்மையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. எனவே, ஒவ்வொரு பொதுத் தன்மையும் தனிப்பட்டவைகளில் இருந்தே உருவம் கொள்கிறது.
ஒவ்வொரு தனி நபருக்கும் தனித்த அடையாளங்கள் உள்ளன. அதே சமயம், அந்த தனி நபர் பொதுவான மமனித சமுதாயத்தின் ஒரு அங்கமாகவும் இருந்தபடி அதனோடு பிணைந்துள்ளார். இரும்பு என்பது உலோகமாக தனித்த பண்புகளை கொண்டிருந்தாலும் அது உலோகம் என்ற பொது வகைப்பாட்டுடன் பிணைந்தே உள்ளது. மனித சமுதாயம் என்பது பொதுவானது, முதலாளித்துவ சமுதாயம் என்பது மனித சமுதாய அமைப்பின் குறிப்பிட்ட பண்புகளைக் கொண்ட வடிவம் ஆகும்.
வளர்ச்சியின் போக்கில் சில சமயம் தனியானது பொதுவானதாகவும், சில சமயம் பொதுவானது தனியானதாகவும் மாற்றமடையும்.
முதலாளித்துவம் என்பது தனியான சமுதாய ஒழுங்கு ஆகும். உழைக்கும் மக்களின் மீதான சுரண்டல், முதலாளித்துவத்தின் பொது இயல்பாக உள்ளது. ஆனால் குறிப்பிட்ட வளர்ச்சிப் போக்கில் முதலாளித்துவமே உலகத்தின் பொது இயல்பாக மாறியுள்ளது. இதே உதாரணத்தை சோசலிசத்திலும் பார்க்க முடியும்.
தனித்த ஒன்றின் இயக்கவியல் மற்றும் பொதுவானதின் இயக்கவியல் ஆகியவை பற்றிய அறிவும் அவைகளுக்கு இடையிலான பிணைப்பும் நமக்கு எதார்த்த வாழ்க்கையின் பல்வேறு புதைகுழிகளுக்கு நடுவில் சரியான பாதையை காட்டுகின்றன. வளர்ச்சியின் விதிகளையும் அந்த விதிகளின் பயன்பாட்டையும் அறிந்துகொள்ள உதவுகின்றன. அந்த அறிவுதான் ஒரு பொருள் மற்றும் நிகழ்வுப் போக்கின் வளர்ச்சி செயல்முறையை அடையாளம் காட்டுகிறது. நமக்குத் தெரியாத பல பொருட்களின் இருப்பை கண்டறிய உதவுகிறது.
உருவமும் உள்ளடக்கமும்
எந்தவொரு பொருள் அல்லது நிகழ்வுப்போக்கின் உள்ளடக்கம் என்பது அதன் அனைத்துக் கூறுகளும், அது தொடர்பான செயல்முறைகளுமே ஆகும். ஒரு உள்ளடக்கத்தின் கட்டமைப்பும், ஒழுங்கமைப்புமே அதன் உருவம் எனப்படுகிறது. அடிப்படைத் துகள்களும் அவற்றின் நிலை மாற்றச் செயல்முறைகளும் அணுவின் உள்ளடக்கம் ஆகும். ஒரு அணுவிற்குள் காணப்படும் அடிப்படைத் துகள்களின் கட்டமைப்பும், ஒழுங்கமைப்புமே அதன் உருவம் ஆகும்.
குறிப்பிட்ட காலத்தில் ஒரு சமுதாயத்தில் நிலவும் உற்பத்திச் சக்திகளும் அவற்றின் வளர்ச்சியும் அந்த சமுதாயத்தின் உள்ளடக்கம் ஆகும். அந்தக் காலகட்ட்டத்தின் நிலவும் உற்பத்தி உறவுகளே அதன் உருவமாகும். உள்ளடக்கம் இல்லாத உருவமோ, உருவமற்ற உள்ளடக்கமோ சாத்தியமானதல்ல. பொருள் எனப்படுவது உள்ளடக்கம் மற்றும் உருவத்தின் ஒருமைப்பட்ட வெளிப்பாடே.
சுரண்டல் சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுவதும், சுரண்டலற்ற சோசலிச சமுதாயத்தை நோக்கி மாறுவதும் கட்டாயம் நடந்தே தீரும்.
உள்ளடக்கமானது, அதன் உள்ளார்ந்த முரண்பாடுகளின் காரணமாக தொடர்ந்து மாறுவதால் வளர்ச்சி ஏற்படுகிறது. உதாரணத்திற்கு நாம் முதலாளித்துவ சமுதாயத்தை எடுத்துக்கொள்வோம். மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான முரண்பாடுதான் ஒரு முதலாளித்துவ சமுதாயத்தின் உள்ளடக்கம் ஆகும். மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான முரண்பாட்டின் தீவிரத்தன்மை தொடர்ந்து அதிகரிக்கிறது. உள்ளடக்கத்தில் ஏற்படும் எல்லா மாற்றமுமே அதன் உருவத்தில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றங்களுடனும் எப்போதும் தொடர்புடையவை அல்ல. உள்ளடக்கம் மாற்றமடைந்து புதிய உள்ளடக்கம் எழும்போது, அந்த புதிய உள்ளடக்கமானது பழைய உருவத்தோடு தீவிரமாக முரண்படுகிறது, அந்த செயல்முறையில்தான் புதிய உருவம் பிறப்பெடுக்கிறது. முதலாளித்துவ அமைப்புமுறையில், சமுதாய உற்பத்தி சக்திகளுக்கும் தனி முதலாளித்துவ உடைமைக்கும் இடையிலான முரண்பாடு அதிகரிக்கிறது, உற்பத்தி மெல்ல மெல்ல சமுதாயமயம் ஆகிறது. சமுதாய உற்பத்தியில் ஏர்படும் முன்னேற்றத்தின் வழியே, முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் அந்த சமுதாய வளர்ச்சிக்கு தடைக்கல்லாகின்றன. எனவே அந்த சமுதாயத்தின் உள்ளடக்கத்தில் ஏற்பட்ட மாற்றம், உருவத்தை மாற்றுவதை அவசியமாக்குகிறது. உள்ளடக்கம்தான் உருவத்தை தீர்மானிக்கிறது. புதிய உருவத்தில் உள்ளடக்கமும் தனக்குள் புதிய வளர்ச்சி நிலைகளை பெறும்.
சாரமும் தோற்றமும்
எந்த ஒரு பொருளானாலும் அல்லது நிகழ்வு போக்கானாலும் அதன் உள்ளடக்கமாக முதன்மையாகவும், ஒப்பீட்டளவில் நிலையானதாகவும் காணப்படும் உள்ளடக்கமே அதன் சாராம்சம் ஆகும். அந்தப் பொருள் அல்லது நிகழ்வுப் போக்கின் பண்புகளும், தொடர்புடைய மற்ற அம்சங்களும் அதன் சாராம்சத்தாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. சாரத்தின் வெளிப்பாடுதான் அதன் தோற்றம் ஆகும். முதலாளித்துவ அமைப்புமுறையின் சாரமானது உபரியை உற்பத்தி செய்வதும் அதனை உடமையாக்கிக் கொள்வதுமே. கூலி முறையினால் உருவாக்கப்படுகிற சமத்துவம் என்ற மாய நிலையே அதன் தோற்றம் ஆகும். ஒரு உயிரின் சாராம்சமாக அதன் வளர் சிதை மாற்றங்கள் உள்ளன. அந்த வளர்சி சிதை மாற்றத்தினால் வரும் உணர்வுக் கிளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு வெளிப்பாடுகளே அதன் தோற்றமாகும்.
சாராம்சமும் தோற்றமும் ஒன்றையொன்று சார்ந்தவை மட்டுமல்ல பிரிக்க முடியாதது. இவை இரண்டும் ஒரு அலகாக ஒன்றாய் இருந்தாலும் ஒன்றுக்கொன்று எதிராகவும் உள்ளன. இரண்டும் எப்பொழுதும் ஒரே மாதிரியாய் இருப்பதில்லை. சாராம் என்பது நேரடியாக பார்க்க முடியாத மறைப்பொருளாய் விளங்குகிறது. ஒரு பொருளின் அல்லது நிகழ்வு போக்கின் சாரத்தை தீவிர ஆய்வின் மூலமே வெளிப்படுத்த முடியும். நிகழ்வுப் போக்குகளில் அதன் சாரம் தொடர்பற்று இருப்பதில்லை. நிகழ்வுப் போக்குகளின் உலகத்தோடும் சாரத்திற்கு தொடர்பு உண்டு, அதன் மாற்றங்களோடும் மாறிய நிமைகளோடும் அது பிணைந்துள்ளது, மேலோட்டமானதைக் கடந்து அதன் அடியாளத்தில் ஊடுருவுகிறது.
காரணமும் விளைவும்
ஒரு நிகழ்வுப்போக்கு நடப்பதற்கு எது அடிப்படையாக உள்ளதோ அதுவே காரணம் எனப்படுகிறது. அந்த நிகழ்வினால் நடப்பது விளைவு ஆகும். காரணத்திற்கும் விளைவிற்கும் இடையிலான உறவு தற்காலிகமானது. முதலில் காரணம் எழுகிறது அதை தொடர்ந்து விளைவு நடக்கிறது. காரணத்திற்கும் விளைவிற்கும் இடையில் ஒரு உறவு கட்டாயமாக இருக்கும். ஏதாவது விளைவு இருக்குமானால், எதுவும் குறுக்கே இல்லாதபோது நிச்சயமாக அங்கே காரணமும் இருக்கும். எனவே, நிகழ்வுப்போக்கை தொடர்ந்து நடப்பது எல்லாமே அதன் விளைவு அல்ல. இரவுக்கு பின் விடியல் வருகிறது; ஆனால் பகல் என்பது இரவின் விளைவு அல்ல, இரவு என்பது பகலின் விளைவும் அல்ல. பகலுக்கும் இரவுக்கும் காரணமாக அமைந்திருப்பது பூமி தன்னுடைய அச்சில் சுற்றி வரும் செயல்பாடுதான்.
காரணமும், கூறுகளும் ஒன்றல்ல. எந்தவொரு கூறும் தானாக எதையும் நடத்த முடியாது ஆனால் அதனால் ஒரு காரணத்தை விரைவுபடுத்த முடியும். காரணத்தால் ஏற்படுத்தும் ஒரு விளைவுக்கு எப்போதுமே வினையூக்கிகள் (தூண்டு சக்திகள்) தேவைப்படுகின்றன.
காரணமும் விளைவும் ஒன்றையொன்று சார்ந்தவை, மாறிக்கொள்ளக் கூடியவை. காரணம் விளைவாகவும், விளைவு காரணமாகவும் மாறும். முதன்மையான, தீர்மானகரமான காரணத்தை அறிந்துகொள்வோமானால் எந்தவொரு விளைவையும் நம்மால் சரியாக புரிந்துகொள்ளவும், நம்முடைய நடவடிக்கைகளை அதற்கேற்ப அமைத்துக்கொள்ளவும் முடியும்.
ஒரு முதலாளித்துவ அமைப்பின் வரம்பில், உற்பத்தி சக்திகளின் தனியுடைமைதான் காரணம் ஆகும். உற்பத்தி அமைப்பில் நிலவும் போட்டியும் அராஜகமும் விளைவு ஆகும். உற்பத்தியை எடுத்துக் கொண்டால் போட்டியும், அராஜமும் காரணங்கள் ஆகும், முதலாளித்துவ அமைப்பு முறையில் ஏற்படும் நெருக்கடியே அதன் விளைவு ஆகும்.
தற்செயலும் அவசியமும்
எல்லா இயற்கை நிகழ்வுப் போக்குகளும் காரணம்-விளைவு இடையிலான உறவின் அடிப்படையிலேயே நடைபெறுவதால், இந்தப் பேரண்டமே அவசியத்தின் அடிப்படையில் இயங்குகிறது. குறிப்பிட்ட சூழல் இல்லாமல் சாத்தியமாகாத ஒரு வளர்ச்சிப் போக்கை ‘அவசிய வளர்ச்சிப் போக்கு’ என்கிறோம்.
சாதாரண மழையோ அல்லது ஆலங்கட்டி மலையோ தற்செயலாக நிகழ்பவை. தற்செயல் என்பது குறிப்பிட்ட சூழலில் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம், அல்லது வேறு வகையிலும் கூட நடக்கலாம் என்பதை குறிப்பிடுகிறது. ஆலங்கட்டி மழையால் பயிர்கள் சேதமடைவதை தற்செயலுக்கான உதாரணமாக பார்க்கலாம்.
தற்செயலுக்கும் அவசியத்திற்கும் இடையில் இயக்கவியல் உறவு உண்டு. முற்போக்கான ஒரு வளர்ச்சிப் போக்கு விதிகளின் பாற்பட்ட அவசிய நிகழ்முறை ஆகும். ஆனால் அந்த அவசியப் போக்கு சில தற்செயல் நிகழ்வுகளின் வழியே வெளிப்படுகிறது. முதலாளித்துவ அமைப்புமுறையில் இருந்து சோசலிசத்திற்கு மாறிச் சொல்வது அவசியமாகும், ஆனால் சோசலிசத்திற்கு ஏற்படும் சரிவு என்பது தற்செயலானதாகும்.
சில குறிப்பிட்ட சூழ்நிலைமைகளில் தற்செயலே அவசியமானதாகவும் மாறும். உதாரணமாக அடிமைச் சமுதாயத்தில் கூலி உழைப்பானது தற்செயலாக இருந்தது. ஆனால், முதலாளித்துவ அமைப்பில் அது அவசியமாக மாறிவிட்டது.
சுதந்திரமும் அவசியமும்
இந்த வகைப்பாடானது மனிதர்களின் செயல்பாட்டுக்கும் இயற்கை மற்றும் சமுதாயத்தின் புறநிலை விதிகளுக்கும் இடையிலான உறவைக் காட்டுகிறது. கருத்துமுதல்வாதிகள் சுதந்திரத்தை கட்டில்லாத விருப்பம் என்பார்கள், அவசியத்தை தீர்மானிக்கப்பட்டது என்பார்கள். மார்க்சியம் இந்த இரண்டுக்கும் இடையிலான உயிரோட்டமான தொடர்பினை பார்க்கிறது. சுதந்திரத்திற்கே அதிகமான முக்கியத்துவம் கொடுத்தால் அது தன்னார்வச் செயல்பாடுகளில் முடிகிறது, அவசியத்தில் அழுத்தம் அதிகமாக இருந்தால் அது விதிக் கொள்கையிலும், தீர்மானிக்கப்பட்டது என்ற முடிவிலும் விட்டுவிடுகிறது. இயற்கையிலும், சமுதாயத்திலும் அவசியம் என்பது புறநிலை விதிகள் என்ற வடிவத்தில் நிலவிக் கொண்டுள்ளது. எனவே மனிதர்கள் அந்த விதிகளை எவ்வளவு கூடுதலாக கற்றுத் தேர்ச்சியடைகிறார்களோ அந்த அளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் சுதந்திரமானதாகவும், சுய உணர்வுடன் கூடியதாகவும் மாறுகிறது. “அவசியத்தின் எல்லையில் இருந்து சுதந்திரத்தின் எல்லையை நோக்கியதொரு பாய்ச்சல் நடக்கிறது” (எங்கெல்ஸ்)
சாத்தியமும், நடப்பும்
வளர்ச்சியின் விதிகளின் அடிப்படையில் நடக்க வாய்ப்பிருந்து, இதுவரை நடக்காத ஒன்றை சாத்தியமானது என்று பார்க்கிறோம். அணு ஆயுதப் போரில் இருந்து பூமியை காத்து உலக அமைதியை நிலைநாட்டுவது சாத்தியமானது. வளர்ந்த நாடுகளின் மீதான வளரும் நாடுகளின் சார்பைக் குறைப்பது சாத்தியமானது. உலகத்தில் சோசலிசத்தை நிறுவுவது சாத்தியமே.
எது நிலவுகிறது என்பதுதான் நடப்பு ஆகும். நிகழ்காலமே நடப்பு. நேர்மறையும் எதிர்மறையும், முற்போக்கும், பிற்போக்கும் குறிப்பிட்ட நடப்பில் நிலவிக் கொண்டுள்ள சாத்தியங்கள் ஆகும். நேர்மறையான முற்போக்கான சாத்தியங்களை வளர்த்தெடுப்பதே மிகவும் முக்கியமாகும்.
மொத்தமும் பகுதியும்
மொத்தமும் பகுதியும் என்பது – ஒரு குறிப்பிட்ட கலவையான பொருட்கள் அல்லது பொருட்களின் பகுதியாக அமைந்த கூறுகளுக்கு இடையிலான உறவும், அந்த கலவையில் உருவாகும் புதிய பண்புகளையும், ஒழுங்கினையும் இது குறிப்பிடுகிறது. அவற்றை தனியாக பார்க்கும்போது அந்த ஒழுங்கையோ, பண்புகளையோ நம்மால் காண முடியாது.
ஒவ்வொரு பொருளும் மொத்தமானது எனிலும் அதில் பல பாகங்கள் உள்ளன. பூமி என்பது முழு மொத்தம், பசிபிக் பெருங்கடலானது அதன் பகுதி. பகுதிகள் இணைந்தே மொத்தமாகிறது. மனிதர்களின் உடல் என்பது மொத்தம், கால்களோ அல்லது குதியோ அதன் பகுதிகள் ஆகும். பகுதிகளில் சிலது மிகவும் முக்கியமானதாக இருக்கலாம். மனித உடலை எடுத்துக் கொண்டால் மூளை மிக மிக முக்கியமானது. ஒரு புரட்சிகர இயக்கத்திற்கு (மொத்தம்) புறவய சூழல் (பகுதி), அகக் காரணிகள் (பகுதி) இரண்டுமே முக்கியமானவை. இன்றைய உலகில் நான்கு முக்கிய சமூக முரண்பாடுகள் நிலவுகின்றன. இந்த நான்கு முரண்பாடுகளில் ஏதாவது ஒன்று மைய முரண்பாடாக இருக்கிறது. அந்த மைய முரண்பாட்டிற்கு தீர்வு காணும் போது அது மற்ற முரண்பாடு களுக்கான தீர்வுகளையும் உருவாக்கும்.
2) இயக்க இயல் – வளர்ச்சியின் தத்துவம்
பொருள் என்பது தொடர்ந்து இயக்கத்தில் இருக்கிறது. இயக்கமில்லாமல் பொருள் இல்லை. பொருள் இல்லாமல் இயக்கம் இல்லை. பொருளின் ஒவ்வொரு செயலுமே இயக்கம் எனப்படுகிறது. அதேசமயம் இயக்கம் என்பது இயந்திரகதியானது அல்ல. மாற்றம் என்பதே இயக்கத்தின் மூலமாக நடப்பதுதாம். நிரந்தரமானது அல்லது முழுமையானது (absolute) என்று எதுவும் கிடையாது, நிலையானது என எதுவும் இல்லை. ஒவ்வொன்றும் இயக்கத்திலோ அல்லது மாற்றத்திலோ ஒரு நிகழ்முறையிலேயே புரிந்துகொள்ளப்பட வேண்டும். பல்வேறு நிகழ்ச்சி போக்குகளின் விரிவந்த வடிவமே உலகம் ஆகும்.
எந்த ஒரு பொருளோ அல்லது நிகழ்வு போக்கோ நிரந்தரமாக மாற்றங்களுக்கு உட்பட்டே வருகிறது. ஆரம்பம், வளர்ச்சி, மேம்பாடு, மற்றும் பின்னடைவு அல்லது முடிவு ஆகிய நிகழ்முறைகள் ஓய்வறியா வகையில் தொடர்ந்தபடி இருக்கின்றன. இந்த தொடர் செயல்முறைகள் இயற்கைக்கு மட்டுமல்ல சமூக வரலாற்று நிகழ்வுகளுக்கும் பொருந்தும். மனித குல வரலாறு இத்தகைய இடைவிடாத மாற்றங்களின் மூலமாகவே முன்னேறி வருகிறது. மனித சமூகத்தின் பழக்கவழக்கங்களின் வடிவங்கள் சமூக நிகழ்வு போக்குகள் எல்லாமே ஒய்வே இல்லாத மாற்றங்களின் மூலமாகவே முன்னேற்றம் காண்கின்றன. இப்படியான முன்னேற்றகரமான மாற்றங்களின் வழியே தான் எத்தகயதொரு நிகழ்வு போக்குகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய தவறான புரிதல்களுக்கு நம்மை விட்டு செல்லும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள உதாரணங்கள் மூலமாக மேற்சொன்னவற்றை நாம் உள்வாங்க இயலும்.
நாம் வாழும் இந்த பூமியின் உருவாக்கமே இயக்கத்தின் ஒரு வடிவம்தான்.
உயிர்களின் தொடக்கம். ஒரு செல் உயிரில் இருந்து பல செல் உயிரினங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்தது. முதுகெலும்பு அற்ற உயிரின வகையிலிருந்து முதுகெலும்பு உள்ள உயிரினங்களாக மாற்றமடைந்தது அதிலிருந்து மனித இனம் தோன்றியது இவை எல்லாமே இயக்கத்தின் மூலமாகத்தான்.
ஆதிப் பொதுவுடமை சமூகத்திலிருந்து பல்வேறு சமூக அமைப்புகள் மாற்றங்களுக்கு உட்பட்டு இன்றைய முதலாளித்துவ சமூகம் வரை பல லட்சம் ஆண்டுகளாக மாறுதல் அடைந்து வந்த மனித குல வரலாறு என்பதும் இயக்கத்தைச் சார்ந்ததே.
பரிணாம வளர்ச்சிப் போக்கில் மூளை என்ற உறுப்பு உருவானதும் அதன் வழியே சிந்தனை என்ற மாபெரும் விளைவு உருவானதும் இயக்கத்தின் வழியே தான்.
3) வளர்ச்சியின் அடிப்படை விதிகள்
எல்லாமே வளர்ச்சிப் போக்கிலே இருந்து வருவதாகவே இயக்கவியல் பார்க்கிறது. எதுவும் நிலையாக இல்லை. துளியூண்டு பொருளில் இருந்து பிரம்மாண்டமான பொருள் வரை எல்லாமே வளர்ச்சிப் போக்கில் உள்ளன. இந்த வளர்ச்சிப் போக்கும் சில விதிகளுக்கு உட்பட்டது. மாற்றத்தையும் வளர்ச்சியையும் உருவாக்க வல்ல இந்த இயக்கம் எங்கிருந்து வந்தது? வளர்ச்சியை வழிநடத்துவதும் அதன் திசை வழியை தீர்மானிப்பதும் எது? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையை வளர்ச்சியின் விதிகளின் வழியாகத் தெரிந்து கொள்ள முடியும். முக்கிய விதிகள் மூன்று உள்ளன.
அ. எதிர்மறைகளின் ஒற்றுமையும் போராட்டமும் – முரண்பாட்டின் விதி
ஒவ்வொரு பொருள் அல்லது நிகழ்வு போக்கிலும் எதிர்மறைகள் அடங்கியுள்ளன. அதாவது ஒன்றுக்கொன்று எதிரான சக்திகளும், பரிணாமங்களும் ஒவ்வொரு பொருளுக்குள்ளும் நிகழ்வு போக்கிற்குள்ளும் இருக்கின்றன. இயக்கம் என்பது இந்த எதிர்மறைகளுக்கு உள்ளான மோதல்களின் காரணமாகவே உருவாகிறது. எதிர்மறைகளின் இந்த மோதல்களே முரண்பாடு எனப்படும். எந்த ஒரு பொருளிலும் அல்லது நிகழ்வு போக்கிலும் இயல்பாகவே எதிர்மறையான குணம் இருக்கிறது. அந்த எதிர்மறை தான் ஒற்றுமைப்படுவதாகவும், மோதிக் கொள்வதாகவும் முரண்பட்ட தன்மையுடன் இருக்கின்றன. ஆனால் ஒற்றுமை என்பது தற்காலிகமானது தான். நம்மைச் சுற்றி உள்ள பொருள்கள் மற்றும் நிகழ்ச்சிப் போக்குகளுக்குள் இவ்வாறான நிகழ்வுகளை அதிகம் பார்க்க முடியும். வேறு வார்த்தைகளில் சொன்னால், எதிர்மறைகளின் ஒற்றுமைக்கு நிறைய உதாரணங்கள் உள்ளன அவற்றில் சிலவற்றை காண்போம்.
| கனிம உலகம் | ||
| அணு | நேர்மறை உட்கரு | எதிர்மறை எலக்ட்ரான் |
| அடிப்படைத் துகள் | பாசிட்ரான் | எதிர்மின்னி |
| கோள்களின் இயக்கம் | ஈர்ப்பு | விலக்கு விசை |
| ஆர்கானிக் உலகம் | ||
| வளர்சிதை மாற்றம் | சீரணித்துக்கொள்ளல் | பிரித்து வெளியேற்றுதல் (dissimilation) |
| இனங்களின் தோற்றம் | பண்புகளில் திடீர்மாற்றம் | பண்புகளின் தொடர்ச்சி |
| நரம்பியல் செயல்பாடு | தூண்டல் | தடுத்தல் |
| மனித சமூகம் | ||
| மோதல் | சுரண்டப்படுவோர் | சுரண்டுவோர் |
| சிந்தனை செயல்முறை | ||
| தர்க்க அறிவு | பகுத்தாய்தல் | தொகுத்துக்கூறல் |
| கருத்தாக்கம் | உறுதிப்பாடு | |
| கணிதம் மற்றும் இயந்திரவியல் | ||
| பிளஸ் (+) | கழித்தல் (-) | |
| வகையீடு | தொகையீடு | |
| வினை | எதிர்வினை | |
| சமூக வளர்ச்சியும் வர்க்கப் போராட்டமும் & பொருளாதாரம் | ||
| உற்பத்தி சக்திகள் | உற்பத்தி உறவுகள் | |
| நிலப்பிரபு | விவசாயி | |
| முதலாளி | பாட்டாளி | |
| பொருளாதாரத் துறையில் | பயன் மதிப்பு | பரிவர்த்தனை மதிப்பு |
அட்டவணையில் பல்வேறு வகையான முரண்பாடுகள் இடம்பெற்றுள்ளன. முக்கிய முரண்பாடுகள், மைய முரண்பாடு ஆகியவற்றை உதாரணமாக பார்க்கலாம்.
தீர்மானகரமான முரண்பாடுகளை நாம் முக்கிய முரண்பாடுகள் என்கிறோம். இன்றைய உலக சமூக அமைப்பில் 4 முக்கிய முரண்பாடுகள் நிலவுகின்றன. அவையாவன,
அ. மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான முரண்பாடு
ஆ. ஏகாதிபத்திய நாடுகளுக்கும் வளரும் நாடுகளில் வாழும் மக்களுக்கும் இடையே உள்ள முரண்பாடு
இ. ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான முரண்பாடு
ஈ. ஏகாதிபத்தியத்திற்கும் சோசியலிசத்திற்கும் இடையே உள்ள முரண்பாடு.
இந்தியச் சமூகத்தில் மூன்று முக்கிய முரண்பாடுகள் உள்ளன. அவை அ) ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான முரண்பாடு. ஆ)
நிலப்பிரபுக்களுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் இடையிலான முரண்பாடு
இ) இந்திய ஏக போக மூலதனத்திற்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடு.
முக்கிய முரண்பாடுகளாக பலவும் இருக்கும்போதும், குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் இவற்றில் ஏதாவதொரு முரண்பாடு முன்னுக்கு வரும். அதை நாம் மைய முரண்பாடு என்கிறோம். இந்த மைய முரண்பாட்டிற்கான தீர்வு, இதர முக்கிய முரண்பாடுகளுக்கான தீர்வுகளை வேகப்படுத்தக்கூடிய பங்கினை ஆற்றுகின்றன.
இவ்வாறு எந்த முரண்பாட்டுக்கான தீர்வு மற்ற முரண்பாடுகளுக்கான தீர்வினைத் தீர்மானிக்கிறதோ அதுவே மைய முரண்பாடு என்று அழைக்கப்படுகிறது. உலகில் நிலவும் நான்கு முக்கிய முரண்பாடுகளுக்குள் ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையிலான முரண்பாடு மைய முரண்பாடாகும்.
மேலும் முரண்பாடுகளில் நட்பு முரண்பாடு பகை முரண்பாடு என இருவகை உள்ளது. இது முரண்பாட்டின் தன்மையைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக இரண்டு எதிர்மறைகளுக்குள் இருக்கின்ற முரண்பாட்டின் தன்மை சமரசம் செய்ய முடியாத ஒன்றுக்கொன்று விரோதமானதாக இருக்குமானால் அது பகை முரண்பாடாகும். உதாரணமாக மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான முரண்பாட்டை பேச்சுவார்த்தை மூலம் அல்லது எந்த வகையிலும் சமரசப்படுத்த இயலாது. அதேபோலத்தான் ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்குமான முரண்பாடும். அதேசமயம் ஏழை விவசாயிக்கும் நடுத்தர விவசாயிக்கும் இடையே ஏற்படும் முரண்பாடு அல்லது தொழிலாளி வர்க்கத்திற்கும் நடுத்தர வர்க்கத்திற்கும் இடையில் ஏற்படும் முரண்பாடு சமரசப்படுத்த கூடியவை ஆகும். ஆகவே அவை நட்பு முரண்பாடாகும்.
பகை முரண்பாடு நட்பு முரண்பாடு இவை பற்றிய மிகச்சரியான புரிதல் இல்லை என்றால் அது ஒரு புரட்சிகர போராட்டத்தை வளர்த்தெடுப்பதற்கு தடையாக மாறும்.
ஒரு பொருளுக்குள் அல்லது நிகழ்வு போக்கிற்குள் இருக்கிற உள் முரண்பாடுகளைப் போல அவற்றிற்கு வெளியே வெளி முரண்பாடுகளும் உள்ளன. உள் முரண்பாடு வளர்ச்சிக்கான முக்கிய காரணியாக அமைகிறது. வெளி முரண்பாடு உள் முரண்பாட்டின் மீது தாக்கங்களை செலுத்துகிறது. ஒரு நாட்டின் புரட்சிகர இயக்கத்தின் வெற்றியானது, அந்த நாட்டில் நிலவும் சமகால உள் முரண்பாடுகளின் தீவிரத்தன்மையைப் பொருத்தே அமையும். அதே சமயம் ஒரு நாட்டின் புரட்சிகரப் போராட்டத்தை வேகப்படுத்தும் வெளி முரண்பாடாக, சர்வதேச சூழ்நிலைகள் பாத்திரம் வகிக்கின்றன.
ஆ. அளவு மாற்றத்தில் இருந்து பண்பு மாற்றம்
இயக்கத்தின் காரணமாகவே மாற்றம் ஏற்படுகிறது. அந்த மாற்றம் வளர்ச்சிக்கு இட்டுச் செல்கிறது. வளர்ச்சியின் பாதையில் முதலில் தோன்றுவது அளவு மாற்றமே. ஆனால் இது மெதுவாக நிகழ்கிறது. அளவு மாற்றத்தின் ஒரு குறிப்பான கட்டத்தில் பண்பு ரீதியான மாற்றம் நிகழ்கிறது. அந்த குறிப்பான கட்டத்தில் மாற்றம் வேகமெடுக்கிறது. இந்த பண்பு மாற்றத்தின் மூலம் ஒரு பொருளோ அல்லது நிகழ்வுப்போக்கோ மற்றொரு புதிய நிலைக்கு மாறிச் செல்கின்றன.
உதாரணமாக, தண்ணீரை சூடேற்றத் தொடங்கும்போது வெப்பம் அதிகமாக இருக்காது. எனவே அது திரவ நிலையிலேயே இருக்கிறது. ஆனால் வெப்பத்தின் அளவு அதிகமாகும்போது, (அழுத்தம் அதிகரித்து) குறிப்பிட்ட கட்டத்தில், அதாவது வெப்ப நிலை 100 டிகிரி செல்சியஸ் ஆகும்போது தண்ணீர் ஆவியாகி புதிய நிலைக்கு மாறிச் செல்கிறது. குறிப்பிட்ட கட்டத்தில் பண்பு மாற்றம் ஏற்படுகிறது. அளவு மாற்றம் இல்லாமல் பண்பு மாற்றம் ஏற்படாது.
மேலும் சில உதாரணங்களைக் காணலாம்…
பூமியிலிருந்து மேலே எறியப்படும் எந்த ஒரு பொருளும் புவி ஈர்ப்பு விசையின் காரணமாக கீழே விழுந்துவிடுகிறது. அதேசமயம் எறியப்படும் பொருளின் வேகத்தை அதிகப்படுத்தி கொண்டே இருந்தால் அப்பொருள் கீழே திரும்பாது. அது பூமியின் புவி ஈர்ப்பு விசையின் வளையத்தை தாண்டி அண்டவெளிக்குள் சென்று விடும். இதுவும் அளவு மாற்றம் பண்பு மாற்றம் அடைவதை குறிக்கிறது.
முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசத்திற்கு சமூகம் புரட்சிகரமான மாற்றத்திற்கு உள்ளாவது ஒரு பண்பு மாற்றம் ஆகும். முதலாளித்துவத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பு போராட்டங்களை அளவு மாற்றமாக கருத வேண்டும். இந்த அளவு மாற்றம் தான் சமூக மாற்றம் எனும் பண்பு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதாவது ஒரு புதிய சோசயலிச சமூகத்தின் உருவாக்கமே பண்பு மாற்றம் ஆகும்.
ஆதிப் பொதுவுடமை சமூகத்தில் இருந்து அடிமைச் சமூகம் உருவானதும் அடிமைச் சமூகத்தில் இருந்து நிலப்பிரபுத்துவ சமூகம் உருவானதும் நில பிரபுத்துவ சமூகத்தில் இருந்து முதலாளித்துவ சமூகம் உருவானதும் முதலாளித்துவ சமூகத்தில் இருந்து முதலில் சோசலிசமும் பின்னர் கம்யூனிச சமூகம் உருவாவதும் இவை எல்லாம் பண்பு மாற்றத்திற்கான எடுத்துக்காட்டுகள் ஆகும்.
பண்பு மாற்றம் காரணமாக ஒரு நிலையிலிருந்து இன்னொரு புதிய நிலைக்கு செல்லும்போது பழையதிலிருந்த சரியான முற்போக்கான கூறுகள் ஒன்று கூட புதிய நிலைக்கு சென்ற பின் பாதுகாக்கப்படாது என்று தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. சரியானவைகள் எதுவாக இருந்தாலும் பாதுகாக்கப்பட வேண்டியவை எதுவாக இருந்தாலும் அவையெல்லாம் புதிய நிலையிலும் பாதுகாக்கப்படும். அடிமைச் சமூக அமைப்பில் உருவாக்கப்பட்ட விஞ்ஞானம் கலை இலக்கியம் எல்லாம் நில பிரபுத்துவ சமூக அமைப்பினால் நிராகரிக்கப்படவில்லை. அவற்றையெல்லாம் பாதுகாத்தது மட்டுமின்றி நில பிரபத்துவ சமூக அமைப்பை மேலும் வளர்த்தெடுத்தது. அதே போல் தான் நில பிரபுத்துவ சமூக அமைப்பின் கருவில் உருவான நேர்மறையான கண்டுபிடிப்புகள் அனைத்தும் முதலாளித்துவ சமூக அமைப்பால் பாதுகாக்கப்பட்டு மேலும் வளர்த்து எடுக்கப்பட்டது.
விஞ்ஞானத்தில் நியூட்டன் மேக்ஸ்வெல் பாயில் ஐன்ஸ்டீன் டார்வின் போன்றோர்களின் கண்டுபிடிப்புகள், இலக்கியத்தில் ஷேக்ஸ்பியர் ஹோமர் காளிதாசன் யூகோ தாகூர் போன்றோர்களின் படைப்புகள், கலையில் ரபேல் டாவின்சி போன்றோர்களின் படைப்புகள் இவை எல்லாமே ஒட்டுமொத்த மனித நாகரீகத்தின் விலைமதிப்பற்ற சொத்துக்களாகும்.
மனித சமூகத்தில் நிலைமறுப்பின் நிலைமறுப்பு
ஆதி பொதுவுடைமை சமுதாயத்தின் நிலையை மறுத்து, அடிமைச் சமுதாயம் உருவானது. அடிமைகளை தனியார் சொத்துடைமையை மாற்றிக் கொண்ட முதல் நிலை சுரண்டல் சமுதாயமாக அடிமைச் சமுதாயம் இருந்தது. அந்த அடிமைச் சமுதாயம் என்ற நிலைமை மறுத்து உருவானதே நிலப்பிரபுத்துவ சமுதாயம். அதன் நிலையை மறுத்து முதலாளித்துவ சமுதாயம் வந்தது. அந்த நிலை மீண்டும் மறுக்கப்பட்டு சோசலிச சமுதாயம் வந்தது. அதன் தொடர்ச்சியாக கம்யூனிச சமுதாயம் உருவாகும். மனித சமுதாய அமைப்பின் முன்னேற்றம் இவ்வாறுதான் நடந்தேறுகிறது. குறிப்பிட்ட சமுதாய அமைப்பிற்கு ஏற்ற உற்பத்தி சக்திகள் முழுமையான வளர்ச்சியை எட்டாமல், எந்த சமுதாய அமைப்பும் அழிவுறாது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். பழைய சமுதாயத்தின் அழிவிற்கான சூழ்நிலைமைகள், அந்த சமுதாயத்திலேயே நிலவுகின்ற உற்பத்தி உறவுகளுக்கு இடையில் நடக்கும் தீவிர மோதலின் விளைவாக, அதன் உற்பத்தி சக்திகள் தங்கள் முழுமையான வளர்ச்சியை எட்டுவதன் மூலம் உருவாகின்றன.
நிலைமறுப்பின் நிலை மறுப்பு வழியாகத்தான் வளர்ச்சி நடந்தேறும். ஆதிப் பொதுவுடைமை சமுதாயத்தில் உருவாகிய மனித நாகரீகமானது, வளர்ச்சியடைந்து கம்யூனிச சமுதாயத்திற்கு நிலை மறுப்பின் நிலை மறுப்பு வழியாகத்தான் மாறிச் செல்கிறது. இதன் பொருள் மீண்டும் பழைய சமுதாய அமைப்பிற்கே திரும்புவது அல்ல. ஆதிப் பொதுவுடைமை சமுதாயத்தில் மனிதர்கள் நாகரீகமாகவும், கரடுமுரடாகவும் இருந்தார்கள். இயற்கையின் விதிகளைப் பற்றிய அறியாமையில் இருந்தார்கள். எதிர்கால கம்யூனிச சமுதாயத்தில் மனித குலமானது மிக உயர்ந்த நாகரீக நிலையை அடைந்திருக்கும். இயற்கையின் விதிகளைப் பற்றிய கூடுதலான அறிவைப் பெற்று, மனித மேம்பாட்டுக்கு அவைகளை பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
நிலைமறுப்பின் நிலை மறுப்பு – இயற்கையில்
விதையானது தனது நிலையை மறுத்து செடியாக புறப்படுகிறது. செடி மறுக்கப்பட்டு மலர்கள் பூத்துக் குலுங்கும் கிளைகள் கொண்ட மரம் ஆகிறது. அவற்றிலிருந்து கனிகள் உருவாகின்றன. கனிகளுக்குள் பல விதைகள் உருவாகின்றன. ஒரு விதை எண்ணிலடங்கா பல விதைகளை உருவாக்குகிறது. நிலை மறுப்பின் நிலை மறுப்பு மூலம் ஏற்படும் வளர்ச்சியை புரிந்து கொள்வதற்கு இது உதாரணமாகும்.
இந்த வளர்ச்சிப் போக்கு என்பது ஒரு நேர்க்கோட்டு வளர்ச்சி அல்ல. மாறாக அது சூழல் ஏணி வளர்ச்சித் தன்மை உடையதாகும். அதன் மூலமாகவே அதன் உச்ச நிலையை அடைகிறது. கடந்த காலத்தில் இருந்து எதிர்காலத்திற்கு செல்லக் கூடிய வகையில் இந்த வளர்ச்சி முறை இருக்கிறது.
நிலை மறுப்பின் நிலை மறுப்பு என்றால்
1. இடையறாத வளர்ச்சி 2. முன்னேற்ற திசையிலான வளர்ச்சி 3. மீண்டும் வருதல் ஆனால் முன்னைக் காட்டிலும் உயர்ந்த நிலைக்கு வருதல்
என்று பொருள் தரும்.
இயக்க இயல் வழிமுறை
நம்முடைய கற்றலையும், ஆய்வு முறையையும், நடைமுறையையும் சரியான திசையில் செலுத்துவதுதான் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை விவாதிப்பதன் முதன்மையான நோக்கம் ஆகும். புதிய நிகழ்ச்சிப்போக்குகளையும், செயல்முறைகளையும் ஆய்வு செய்யும்போதும் விளக்கும் போதும் எழக்கூடிய எந்தவொரு சிக்கலுக்கும் தீர்வைத் தரக்கூடிய விஞ்ஞான அணுகுமுறையை அது நமக்குத் தருகிறது.
இயக்கவியல் அணுகுமுறையை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்
- புறநிலை அணுகுமுறை
நம்மைச் சுற்றியுள்ள செயல்முறைகளையும், நிகழ்ச்சிப் போக்குகளையும் கற்று மதிப்பீடு செய்வதற்கான புறநிலை அணுகுமுறை என்றால், உள்ளதை உள்ளபடியே காண்பதாகும். அதனை எளிமைப்படுத்தவோ, சிக்கலாக்கவோ கூடாது. புறநிலை ஆய்வில்/மதிப்பீட்டில், வாழ்க்கை பற்றிய எதார்த்தமான சித்தரிப்பு அவசியமாகும், வாழ்வின் முன்னேற்றத்திற்கு காரணமாக முக்கியப் போக்குகளை வெளிப்படுத்த வேண்டும். முன்னேற்றத்தை தீர்மானிக்கும் சக்திகளை எடுத்துக்காட்ட வேண்டும். “சமூக நிகழ்ச்சிப் போக்குகள் பற்றிய கண்ணோட்டமானது உண்மைகளையும், வளர்ச்சியின் உண்மையான போக்குகளையும் பற்றிய உறுதியான புறநிலை ஆய்வின் அடிப்படையில் அமைய வேண்டும்” என்று லெனின் குறிப்பிட்டார்.
அக நிலைவாதம்
புறநிலை அணுகுமுறைக்கு நேர்மாறானதுதான் அகநிலை வாதம். இயற்கையிலும், சமுதாயத்திலும் நிலவும் புறநிலை விதிகளைக் கண்டுகொள்வதில்லை. சமுதாய விதிகளைப் பற்றி அலட்சியம் காட்டுவதுடன், சிந்தனையை சர்வ வல்லமை கொண்டதாக கருதுகிறது அகநிலைவாதப் பார்வை. தனிமனித விருப்பங்களும், நோக்கங்களும், சுயநலக் கண்ணோட்டமும், பாரபட்சமும் இன்ன பலவும் கற்றல் நடைமுறையைச் சிதைப்பதன் மூலம், புறநிலை அணுகுமுறையின் அடிப்படையிலான மதிப்பீடுகளை கொச்சைப்படுத்துகிறது. இந்த அகநிலைவாதத்திற்கு எந்த வடிவத்தில் நிலவினாலும், செயல்பாடு மட்டுமே அதற்கு எதிரான ஒரே உத்திரவாதம் ஆகும்.
2.விரிவடைந்த பார்வை (Comprehensiveness)
நடைமுறைகளையும், நிகழ்வுப் போக்குகளையும் புறநிலை அணுகுமுறைக்கு உட்படுத்திட அதனை விரிவடைந்த பார்வையோடு ஆய்வு செய்வது அவசியமாகும். அப்படிப்பட்ட ஆய்வின் வழியாகத்தான் நாம் எடுத்துக்கொண்ட நடைமுறையிலோ, நிகழ்வுப் போக்கிலோ உள்ள தலையான அம்சத்தை தனிமைப்படுத்தி அதன் சாரத்தை புரிந்துகொள்வதும், தீர்வுக்கான பாதையில் பணிகளை முடிவு செய்யவும் முடியும்.
விரிவடைந்த பார்வை என்றால், ஒன்றின் எல்லா வகையான அம்சங்களையும், இயல்புகளையும், சக்திகளையும், செல்வாக்குகளையும் உள்ளடக்கி பார்த்து, அதன் எல்லா வகையான உறவுகளையும், பரஸ்பர தொடர்புகளையும் வெளிக்கொண்டுவரும் பார்வையாகும். சிறப்பு, தற்காலிகம், எளிமை, முழுமையும் – பகுதியும், உருவமும் உள்ளடக்கமும், புறநிலையும் அகநிலையும், தோற்றமும் சாரமும் என எல்லா வகைகளையும் பயன்படுத்தி அந்த விரிவான ஆய்வை மேற்கொள்வதன் மூலம், குறிப்பிட்ட நடைமுறை அல்லது நிகழ்வுப் போக்கின் அவசியமான, குறிப்பான அம்சங்களைக் கண்டறிய வேண்டும். இந்தக் கோட்பாடு மீறப்படுமானால், முடிவு ஒருதலைப் பட்சமானதாகவும், அரைகுறையாகவும், தன்னிச்சையாகவும், மேம்போக்காகவும் இருக்கும். வெண்ணையை வைத்துக் கொண்டே நெய்க்கு அலைவது போல இருக்கும். எடுத்துக்கொண்ட விசயத்தின் முக்கிய அம்சங்களை/ சங்கிலியின் கண்ணிகளை கண்டுகொள்ளும் திறனற்று போகும்.
3.வளர்ச்சிப் போக்கு
குறிப்பிட்ட செயல்முறையும், நிகழ்வுப் போக்குகளும் அவற்றின் வளர்ச்சிப் போக்கையும், அதாவது அகநிலையில் செயல்படும் மாற்றத்திற்கான ஆதாரங்களை கணக்கில் கொண்டே ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செயல்முறை அல்லது நிகழ்ச்சிப் போக்கின் சாரத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்றால் அவற்றின் வளர்ச்சிப் போக்கின் அக ஆதாரங்களை அறிந்தாலே சாத்தியமாகும். அதாவது வளர்ச்சிப் போக்கிற்கு உந்துதலாக அமைந்த முரண்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும். “சிந்தனையும், சமுதாயமும் உள்ளிட்ட இயற்கையின் அனைத்து நிகழ்வுப் போக்குகள் மற்றும் செயல்முறைகளில் முரண்பாடான, ஒன்றையொன்று விலக்கக் கூடிய, எதிரெதிர் போக்குகளை” அறிவதும், “ஒற்றை முழுமையைப் பிளந்து அதன் முரண்பட்ட பகுதிகளை அறிந்துகொள்வதும் இயக்கவியலின் சாராம்சம் ஆகும்” (லெனின்)
4. வரலாற்று அணுகுமுறை
வரலாற்று அணுகுமுறை என்பது உண்மையை சரியாக புரிந்துகொள்வதற்கான தொடக்கப் புள்ளியாகும். இது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செயல்முறை நடைபெறும் காலத்தையும், இடத்தையும் கணக்கில் கொள்வதோடு, “அடிப்படை வரலாற்றுத் தொடர்பை மறக்காமல், ஒவ்வொரு சிக்கலையும் வரலாற்றில் அது எவ்வாறு தோன்றியது என்ற கண்ணோட்டத்திலிருந்து ஆய்வு செய்வதுடன், அதன் வளர்ச்சியின் முக்கிய கட்டங்கள் என்ன, அதன் வளர்ச்சிக் நோக்கில் இன்று அது என்னவாக மாறியுள்ளது என்பதையும் ஆய்வு செய்வது” என்ற அவசியத்தையும் உள்ளடக்கியது. (லெனின்)
தோற்றம், வளர்ச்சி, முடிவு – கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம், தொடக்கம், இடைநிலை, முடிவு, பழமையும் புதுமையும் போன்ற எல்லா கருத்துக்களும் வரலாற்று அணுகுமுறையின் அம்சத்தை வெளிப்படுத்துகின்றன.
“திட்டவட்டமான நிலைமை பற்றிய திட்டவட்டமான ஆய்வு” என்ற லெனினுடைய கருத்து, வரலாற்று அணுமுறையை கச்சிதமாக உள்ளடக்கிய ஒன்றாகும்.
வரலாற்றை நோக்காத அணுகுமுறை மாயாவாதம், விருப்பவாதம், வளரும் போக்குகளை பற்றிய கண்மூடித்தனம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.
தொகுத்துப் பார்த்தால்
‘செயல்முறைகளையும், நிகழ்வுப் போக்குகளையும் பற்றிய விரிவான புறநிலைப் பகுப்பாய்வு மேற்கொள்கையில், குறிப்பிட்ட வரலாற்று நிலைமையில், குறிப்பிட்ட சமூக நடைமுறையில், அவற்றின் வளர்ச்சிக்கான அகக் காரணிகளை ஆய்வு செய்வது அதன் சாரத்தை உள்வாங்கவும், அடிப்படைக் கூறுகளை தனித்துப் பர்க்கவும் வேண்டும். அரசியல், பொருளாதார, பண்பாட்டு மற்றும் கல்விச் செயல்பாட்டின் போது ஒவ்வொரு சமுதாய வளர்ச்சிக் கட்டத்திற்குமான அடிப்படையான பணியையும், அடிப்படையான பிணைப்பையும் தீர்மானிக்கும் திறனே நம்முடைய வெற்றிகரமான செயல்பாட்டுக்கு அவசியமானதாகும்.’
லெனின் வார்த்தைகளில் கூறுவதென்றால் “நாம் பொதுவாக ஒரு புரட்சிகரமான சோசலிசம் அல்லது கம்யூனிச கோட்பாடுகளை கடைப்பிடிக்கின்றவர்களாக இருந்தால் மட்டும் போதாது. மாறாக சமூக வளர்ச்சி என்னும் சங்கிலித் தொடரின் ஒவ்வொரு குறிப்பிட்ட தருணத்திலும் அதன் தொடர்புக் கண்ணியை கண்டறியும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய அனைத்து வகையான அறிவாற்றலையும் கொண்டு இதனை உள்வாங்கிக் கொள்வதன் வழியாகவே சமுதாய வளர்ச்சி என்னும் முழுமையான சங்கிலித் தொடரை பிடித்து இழுத்து அடுத்த நிலைக்கு மாற்றமடைய செய்வதற்கு நாம் தயாராக முடியும்”
இயக்கவியல் அணுகுமுறையை எவ்வாறு பயன்படுத்துவது என்று கற்பதற்கான மிகச் சிறந்த வழி, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலையும் லெனினின் நூல்களையும் படிப்பதுதான். கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவத்தை ஆய்வுக்கு உட்படுத்தும் முறையில் இருந்தும், அரசியல் நடைமுறையின் ஒவ்வொரு திருப்பத்திலும் முக்கிய கண்ணிகளை லெனின் அடையாளம் காணும் முறையில் இருந்தும் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் மேதமையை நாம் உணர்ந்திட முடியும்.
பின்னிணைப்பு:
இயக்கவியலின் சுருக்கம்
இயக்கவியல் முறையில் பயன்படுத்த வேண்டிய அனைத்தையும் மதிப்பிட, தோழர் லெனின் அதன் முறைகளை 16 அம்சங்களில் வகைப்படுத்துகிறார். (Philosophical Notebooks, Volume 38, Lenin’s Collected Works, p221)
இயக்கவியலின் கூறுகள்
- எடுத்துக் கொண்ட பொருளின் புறவயத்தன்மை (குறிப்பிட்ட ஒரு பொருள் அதுவாகவே நிலவுகிறது). நிலவும் எதார்த்தத்தின் வெளிச்சத்தில் பார்த்தல். குறிப்பிட்ட பொருளையும், நிகழ்வுப்போக்கையும் அதுவாகவே காணவேண்டும், இன்னொரு பொருளுக்கோ, நிகழ்வுப் போக்கிற்கோ ஒத்ததாக பார்க்க கூடாது. அதற்காக, பொருளை நாம் மொத்தத்தில் இருந்து பிரித்துப் பார்க்க வேண்டும். இயக்கவியலை பொருத்தமட்டில் எதுவுமே அதன் சூழலில் இருந்து பிரிக்க முடியாது. ஆனாலும், அது உண்மையில் நிலவுவதால், முதலில் அதனை மொத்தத்தில் இருந்து பிரித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். அதன் பிறகுதான் அதன் சூழ்நிலையையும் கணக்கில் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.
- குறிப்பிட்ட ஒரு பொருள் மற்றவைகளுடன் கொண்டுள்ள பன்முக உறவின் முழு மொத்தம். எல்லா பொருளும், நிகழ்வுப் போக்கும் மற்ற பொருட்களோடும் நிகழ்வுப் போக்குகளோடும் கொண்டுள்ள உறவை மொத்தமாக பார்த்து மதிப்பிடப்பட வேண்டும்.
- இந்த பொருளின் வளர்ச்சிதான் அதன் சொந்த இயக்கம் அதன் சொந்த வாழ்வு. அனைத்து எல்லா பொருளும், நிகழ்வுப் போக்கும் பெரும் அண்டத்தின் பகுதிகளே, ஒவ்வொரு பொருளும், நிகழ்வுப் போக்கும் தன்னளவில் மாற்றச் செயல்முறையில்தான் இருக்கிறது. ஒவ்வொரு பொருளும், நிகழ்வுப் போக்கும் வளர்வதை அதன் சொந்த இயக்கத்தையும், வாழ்க்கையையும் கொண்டே மதிப்பிடப்படுகிறது.
- இந்தப் பொருளில் காணப்படும் உள் முரண்பாட்டுத் தன்மை. வளர்ச்சி என்பதே எப்பொழுதும் உள் முரண்பாட்டால் ஏற்படக்கூடிய விளைவாக இருந்தாலும், அது வெளியே கொண்டுள்ள உறவைப் பொருத்தும் அமைகிறது. ஒவ்வொரு பொருளுக்கும், நிகழ்வுப் போக்கும் உள்ளே நிலவும் முரண்பாட்டின் போக்கை கண்டறிய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
- பொருள் என்பது எதிர்மறைகளின் ஒற்றுமை அல்லது தொகுப்பு ஆகும். ஒவ்வொரு பொருளும், நிகழ்வுப் போக்கும் எதிர்மறைகளின் ஒன்றுபட்ட தொகுப்பாக பார்க்க வேண்டும்.
- எதிர்நிலைகளின் முரண்பட்ட இயக்கம், போராட்டமாக வெளிப்படுகிறது. எதிர்மறைகளுக்குள் நிலவும் மோதல் அல்லது அந்த மோதலின் பல்வேறு வடிவங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு பிரச்சனையும் அதனளவில் சிக்கலானது, ஒன்றோடொன்று தொடர்புடைய பல்வேரு அம்சங்களால் ஆனது. பகுப்பாய்வும், தொகுத்துக் கூறலும் ஒருங்கிணைந்த செயல்முறையின் மூலம் சிக்கல்களை புரிந்துகொள்ள முடியும். எனவே தோழர் லெனின் முடிவுகளை கண்டறியும் வழிமுறையை பின்வருமாறு விவரிக்கிறார்.
- பகுத்து ஆய்தல் மற்றும் தொகுத்தளித்தல் இரண்டின் ஒற்றுமை – ஒரு முழுமையின் பல்வேறு பகுதிகளை பிரித்து பார்ப்பதும், பகுதிகளை தொகுத்து அளிப்பதும்.
- ஒவ்வொரு பொருளின் (அல்லது நிகழ்வுப் போக்கு இன்ன பிறவற்றின்) உறவுகள் பல வகைப்பட்டவை மட்டுமல்ல அவை பொதுவானவை, அனைத்தையும் தழுவியவை (universal). (செயல்முறை, நிகழ்வுப் போக்கு உள்ளிட்ட) எல்லாமே மற்றவைகளோடு தொடர்புடையவை. ஒவ்வொரு பொருளும், நிகழ்வுப் போக்கும் மற்ற பொருள் அல்லது நிகழ்வுப் போக்கோடு தொடர்பு கொண்டது ஆகும்.
- எதிர்மறைகளின் ஒற்றுமை மட்டுமல்ல, ஒவ்வொரு உறுதிப்பாடும், பண்பு அம்சங்களும், சாய்மானமும், உட்கூறுகளும் என அனைத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும் ஒருமைப்பட்டு உள்ளன. (Not only the unity of opposites, but the transitions of every determination, quality feature, side, property into every other.
- புதிய பக்கத்தையும், உறவுகளையும் இன்ன பிறவற்றையும் கண்டறியும் செயல்பாட்டிற்கு முடிவே இல்லை.
- பொருள், நிகழ்வுப் போக்குகள், செயல்முறைகள் இன்ன பிறவற்றைக் குறித்த மனிதர்களின் அறிவுக்கு எல்லையில்லை. தோற்றத்தில் இருந்து அதன் சாரத்தை நோக்கியும், குறைவாக அறிந்ததில் இருந்து அதிகம் அறிவதை நோக்கியும் இடையராமல் முன்னேற்றம் நடக்கிறது.
- சேர்ந்து நீடித்திருப்பது தொடங்கி ஒன்றின் மாற்றத்திற்கு காரணமாவது வரை ஒவ்வொன்றும் கொண்டுள்ள தொடர்பும், ஒன்று மற்றொன்றோடு கொண்டிருக்கும் சார்பும் ஆழமான, பொதுவான நிலைமைகள் ஆகும். எதிர்மறைகளுக்கு இடையிலான இந்த மோதல் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பதுடன் புதிய பண்பு நிலையை உருவாக்கும். புரட்சிகர மாற்றத்திற்கும் காரணியாக உள்ளது. ஒரு கட்டத்தில் இருந்து மற்றொரு கட்டத்தை நோக்கிய இந்த புரட்சிகர பாய்ச்சலின் முக்கியமான குண நலன்கள் பின்வருமாறு விவாதிக்கப்படுகின்றன.
- உயர்ந்த நிலைக்குச் செல்லும்போதும், கீழ் நிலையில் நிலவிய சில அம்சங்களும், கூறுகளும் மீண்டும் வரலாம்.
- பழையன கழிதலும் புதியன புகுதலும் (நிலை மறுப்பின் நிலை மறுப்பு)
- உருவத்துடன் உள்ளடக்கம் போராடுகிறது. நேர்மாறான போராட்டமும் நடக்கிறது. உருவம் தூக்கியெறியப்படுகிறது, உள்ளடக்கம் மாற்றமடைகிறது.
- அளவில் ஏற்படும் மாற்றம் பண்பு நிலையில் ஏற்படும் மாற்றமாகிறது, பண்புநிலையில் ஏற்படும் மாற்றம் அளவில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. (15, 16, 9)
சுறுக்கமாக, இயக்கவியல் என்பது எதிர்மறைகளின் ஒற்றுமை பற்றிய கோட்பாடு எனலாம். இது இயக்கவியலின் சாரத்தை எடுத்துக் காட்டுகிறது, அதே சமயம் பல விளக்கங்களும், வளர்த்தெடுப்பும் தேவை.
தமிழில்: வசந்தன், மதுரை.
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
