டிஜிட்டல் பொருளாதாரத்தில் பணி உறவுகள் மற்றும் ஒழுங்குமுறையில் உள்ள சிக்கல்கள்
ஆர். எஸ். செண்பகம்
2025ஆம் ஆண்டில், 850 லட்சம் வேலைகள் மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையிலான உழைப்புப் பிரிவின் மாற்றத்தால் இடமாற்றம் செய்யப்படலாம் என்றும், 970 லட்சம் புதிய வகை வேலைகள் மனிதர்கள், இயந்திரங்கள் மற்றும் அல்காரித முறைகளுக்கு இடையிலான புதிய உழைப்புப் பிரிவுக்கு ஏற்றதாக மாற்றமடையச் செய்யப்படும் என்றும், உலகப் பொருளாதார மன்றம் (WEF) மதிப்பிட்டுள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டில், மனிதனும் இயந்திரமும் சமமான நேரத்தை வேலையில் செலவிடுவார்கள் எனவும், உலகப் பொருளாதார மன்றம் (WEF) மதிப்பிட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் டிஜிட்டல் தொழிலாளர்களுக்கான இயங்குதளங்கள் ஐந்து மடங்கு உயர்ந்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் ஆணையத்தின் 2021ஆம் ஆண்டறிக்கை தெரிவிக்கிறது. G20 நாடுகளில் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இயங்குதளங்களின் எண்ணிக்கை 128இல் இருந்து 611ஆக உயர்ந்துள்ளது. இதில் அமெரிக்கா 37 சதம், ஐரோப்பிய யூனியன் 22 சதம், இந்தியா 10 சதம், இங்கிலாந்து 6 சதம். ஆனாலும் இந்தியா சிறப்பு கவனத்தைப் பெறுகிறது. இந்தியத் தொழிலாளர்களிடம் உள்ள மேன்மையான மென்மை குணங்கள் – அதாவது நேர மேலாண்மை, மனரீதியாக, உணர்வுப் பூர்வமாக மாறி வரும் கடுமையான சவாலான சூழல்களை பொறுத்துக் கொண்டு அதற்கேற்ற வகையில் அகத்திலும் புறத்திலும் தங்கள் நடவடிக்கைகளை மாற்றித் தகவமைத்துக் கொள்ளும் திறன் பெற்றிருப்பது, மன அழுத்தத்தைக் கூட சகித்துக் கொள்ளும் சகிப்புத் திறன், கற்றுக் கொள்வதில் உள்ள அதிக ஈடுபாடு போன்றவையே இந்தியத் தொழிலாளர்களை முதலீட்டாளர்கள் விரும்புவதற்கான காரணங்களாக சொல்லப்படுகிறது.
இந்தியாவின் தேசிய வளமாக இருக்கிற demographic dividend அதாவது மொத்த மக்கள் தொகையில் இளைஞர்களின் கணிசமான விகிதாச்சாரம், நகர்மயமாதலின் வேகம், ஸ்மார்ட் ஃபோன்களின் அதிகப் பயன்பாடு, அதையொட்டிய தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவையே இந்தியா இயங்குதள பொருளாதாரத்தில் முன்னிலை சிறப்பு கவனம் பெறுவதற்கான காரணங்களாகும். நிதி ஆயோக்கின் 2022ஆம் அண்டு அறிக்கையின்படி, 2019-20ஆம் ஆண்டில் மொத்தத் தொழிலாளர்களில் 1.3 சதம் இந்தியத் தொழிலாளர்கள். அதாவது 680 லட்சம் தொழிலாளர்கள் வலைதளம் மற்றும் இருப்பிடங்களை மையமாகக் கொண்டு இயங்கும் இயங்குதள தொழிலாளர்களாவர். 2029-30ஆம் ஆண்டில் இந்தத் தொழிலாளர்களின் விகிதாச்சாரம் 4.1 சதமாக உயரும் என்று நிதி ஆயோக் கணிக்கிறது.
இந்தியா ஸ்டாஃபிங் ஃபெடரேஷன் அறிக்கை (2019) மற்றும் ASSOCHAM 2021, இந்தியாவின் பல்வேறு தொழில்களில் உள்ள கிக் தொழிலாளர்களின் சராசரி வயது சுமார் 24-38 என்று தெரிவிக்கின்றன. மேலும், நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய வேலைகளில் இந்தியா உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்கின்றன. பாஸ்டன் கன்சல்டிங் குரூப் மற்றும் மைக்கேல் & சூசன் டெல் அறக்கட்டளை (2021) ஆகியவற்றின் ஆய்வு அறிக்கை இந்தியாவில் இந்தத் துறையில் தற்போது 80 இலட்சமாக இருக்கும் கிக் வேலைகள் இன்னும் பத்தாண்டுகளில் 900 லட்சமாக மிகக் கூர்மையான வளர்ச்சியை அடையும் என கணித்துள்ளது. 50% க்கும் அதிகமான கிக் வேலைகள் குறைந்த ஊதியம் உடையவைகளாகவும், குறைந்த திறன் தேவைப்படும் வேலைகளாகவும் உள்ளன எனவும், சுமார் 30% வேலைகள் மட்டுமே சிறப்பு திறன்களைக் கோரும் வேலைகளாக உள்ளன என்றும் கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. டெலிவரி மற்றும் சவாரி ஆகியவை இந்தியாவில் கிக் பொருளாதாரத்தில் பரவலாக இருக்கும் சேவைகளாகும். உயர் திறன் தேவைப்படும் சேவைகளான டிசைனிங், மார்க்கெட்டிங், உத்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஃப்ரீலான்ஸ் முறை வளர்ந்து வருகிறது. உபெர், ஓலா, சொமாட்டோ, ஸ்விக்கி, டெல்லிவரி, டன்சோ, அர்பன் கம்பெனி, ஹவுஸ்ஜாய், ஹேண்டி, மிஸ்டர் ரைட், போர்டியா, ஃப்ளெக்சிங்ல்ட் மற்றும் அப்வொர்க் ஆகியவை இந்தத் துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நமது நாட்டில் இந்தத் துறையில்தான் (குறுகியகால, பாதுகாப்பற்ற வேலைகள் என்றாலும்) இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன.
திறன் மேம்பாட்டு பயிற்சிகளின் தேவையும் அவசியமும்
தற்போதைய புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் திறன் இடைவெளி குறித்தும், பணியிலிருக்கும் தொழிலாளர்களுக்கு புதிய திறன்களை அளித்து புதிய வேலைப் பாத்திரத்திற்கேற்றவாறு மேம்படுத்துவது (reskilling) குறித்தும், அல்லது ஊழியர்களின் தற்போதைய வேலைப் பாத்திரத்தையே மேம்படுத்துவதற்குத் தேவையான புதிய திறன்களைக் கற்பிப்பது குறித்தும், எக்கனாமிஸ்ட் குரூப் ஊடகத்தின் – எக்கனாமிஸ்ட் இம்பேக்ட், ஆசிய பசிபிக் பகுதியின் 14 சந்தைகளில், பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சார்ந்த 1375 தொழிலாளர்களிடமும், சில முதலாளிகள் மற்றும் தொழில் நிபுணர்களிடமும் நவம்பர் 2022 முதல் ஜனவரி 2023 வரை ஒரு ஆய்வினை நடத்தியது. இந்த ஆய்வில் இந்தியாவைச் சார்ந்த 100 தொழிலாளர்களும் சில முதலாளிகளும், தொழில் நிபுணர்களும் அடங்குவர். இப்படி ஆய்வு செய்யப்பட்டவர்களில் 1997க்கும் 2012க்கும் இடையில் பிறந்த Gen Z 11.8 சதம் பேரும், 1981க்கும் 1996க்கும் இடையில் பிறந்த மில்லியனியல்கள் 63.2 சதம் பேரும், 19965க்கும் 1980க்கும் இடையில் பிறந்த Gen X 25 சதமும் அடங்குவர். தொழில்நுட்ப வளர்ச்சியில் திறன் சார்ந்த ஆய்வு என்பதால், இப்படி பல்வேறு ஜெனரேஷனைச் சேர்ந்தவர்களிடையே இந்த ஆய்வு நடத்தப்பட வேண்டியது அவசியம் என்ற முறையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் மூலம் ஒட்டு மொத்தமாகத் தெரிய வந்த விஷயங்கள் அரசுகளின் கவனத்திற்கும், தொழிற்சங்கங்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட வேண்டியவையாகும்.
டிஜிட்டல் தொழில் வளர்ச்சிக்கேற்ற வகையில் திறன் பெற்ற தொழிலாளர்கள் போதுமான அளவில் இந்த பகுதியில் இல்லை. தேவைக்கும் இருப்பிற்கும் (கிராக்கிக்கும் அளிப்பிற்கும்) இடையே இடைவெளி உள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில் டிஜிட்டல் ஏணியில் வெகு வேகமாக ஏறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் தொழிலாளர் சந்தையில் 67 சதமானம் பேருக்கு தொழில் நுட்பத் திறன் தேவைப்படுகிறது. தற்போதைய சூழலில், தற்போது நாம் எட்டியுள்ள இந்த தூரத்தில் இதுதான் உண்மை நிலை. மேலும், “தரவு பகுப்பாய்வு திறன் (data analysis)மற்றும் காட்சிப்படுத்துதல் (visualisation) திறன் பெற்றவர்கள் 66 சதமும், “இணைய பாதுகாப்பு” சம்பந்தமான திறன் பெற்றவர்கள் 60 சதமும், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரங்களை படித்துணரும் திறன் பெற்றவர்கள் 37.3 சதமும், coding and programming திறன் பெற்றவர்கள் 49.3 சதமும், cloud computing மற்றும் Internet of Things(IoT) திறன் பெற்றவர்கள் 40.3 சதமும் தேவைப்படுகிறார்கள். தற்போது பணியிலிருப்பவர்களில் 70 சதமானம் பேர் டிஜிட்டல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ற தங்கள் திறன் மேம்பாட்டிற்கு, upskill and reskill செய்து, தங்கள் வேலைகளை தக்கவைத்துக் கொள்வதற்குத் தங்களுடைய நிறுவனங்களையே நம்பியுள்ளனர். தொழிலாளர்களின் திறன் மேம்பாட்டில் அரசின் பங்கு மிக முக்கியமானது. ஸ்கில் இந்தியா மிஷன் 2015இல் துவங்கப்படும்போது 400 மில்லியன் மக்களை சென்றடைவது நோக்கம் என்று சொல்லப்பட்டது.
கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் APAC ன் நாடுகளில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வள்ர்ச்சிக்கேற்ற திறன் பெற்றவர்கள் (digital capabilities) ஏராளம் கிடைப்பார்கள். எனினும், போட்டிச் சூழல் இருந்த போதும், குறைந்த செலவில் அவுட்சோர்சிங் செய்வதில் இந்தியா முதன்மைப் பாத்திரம் வகிக்கிறது. இந்தியத் தொழிலாளர்களின் digital capabilities குறைவாக இருந்தாலும், மலிவான உழைப்புச் சக்தியை இந்தியத் தொழிற்சந்தையில் இருந்து பெற முடியும் என்பதும், இந்தியாவில் உயர் டிஜிட்டல் திறன் கட்டமைப்புகள் – குறிப்பாக மொபைல் இணைய அணுகலின் விரைவான விரிவாக்கம், வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் இருப்பதும், Gig பொருளாதாரத்தினை கவர்ந்திழுப்பதற்கான காரணங்கள் என்று தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC)இன் தலைமைச் செயல் அதிகாரி வேத் மணி திவாரி தெரிவிக்கிறார். Flipkart-இன் இந்தியத் தலைமை மக்கள் அதிகாரி ”கொரோனா காலத்தில் நிறுவனங்களை – அவற்றின் அளவு சிறியதோ, பெரியதோ, எதுவாக இருந்தாலும் அவற்றின் தொடர் செயல்பாட்டிற்காக டிஜிட்டல் மாற்றத்தை நோக்கி நகர்த்தியது” என்று குறிப்பிடுகிறார். சீனாவிற்கு அப்புறம், venture company முதலீட்டாளர்கள் இந்திய ஸ்டார்ட் அப் கம்பெனிகளை நோக்கி வருகிற காரணத்தினால், இந்தியத் தொழிலாளர்களுக்குத் தேவையான திறன் மேம்பாட்டினை அளிப்பதென்பது உடனடி அவசியமாகிறது.
பணி நியமனக் கட்டமைப்பிலேயே மாற்றம்
இந்தத் துறையில் பணி நியமனக் கட்டமைப்பிலேயே மாற்றம் ஏற்படுவதால், ஒரு குறிப்பிட்ட வேலையை குறுகிய காலத்தில் செய்து முடித்திடும் வகையில் இயங்குதளங்களில் சிறு சிறு பணிக் கூறுகளாக்கி, அவற்றை குறை திறன் மற்றும் நடுத்தர திறன் கொண்ட நவீனத் தொழிலாளர்களை (independent and atomised workers) வைத்து செய்து முடிக்கும் ஏற்பாடும் இதில் அடங்கியுள்ளது. செய்து முடிக்கும் பணியின் அடிப்படையில் ஊதியம் பெறும் வகையில், தொழிலாளர்கள் தங்கள் உழைப்பு சக்தியை விற்பதற்கான தளங்கள்/ஆப்களின் வருகையானது, நிரந்தர வேலைகளை துண்டு வேலைகளாக – துண்டு துண்டான ஒப்பந்த வேலைகளாக உடைப்பதற்கு வழிவகுக்கிறது. (உதாரணமாக, சர்வதேச பிராண்டாக முன்னிறுத்தப்படும் ஒரு காரின் உதிரிப்பாகங்கள், மொபைலின் உதிரிப்பாகங்கள், வீடுசார் தொழில்களில் பீஸ் ரேட்டில் உற்பத்தி செய்யப்படுவது). எனவே, கூலி என்பது செய்து முடிக்கப்படும் வேலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
தகவல் தொழில்நுட்பங்களின்(ICT) பரவலான ஊடுருவல் மூலம் 1992 முதல் செயல்படுத்தப்படும் அவுட்சோர்சிங் வேலைகளும், ஏஜென்சி வேலைகளும் இன்றைய தொழிலாளர் சந்தையில் முக்கிய ஆதிக்கம் செலுத்துகின்றன. டிஜிட்டல் வேலைகள் வடக்குலகிலிருந்து அவுட்சோர்சிங் செய்யப்படுகின்றன. தெற்குலகில் உள்ள தொழிலாளர்கள் இந்த அவுட்சோர்சிங் வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதாவது, உலகளாவிய டிஜிட்டல் தொழிலாளர் தளங்களில் பெரும்பாலானவைகள் அதிக வருமானம் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவை. அதே நேரத்தில் அவை பணியமர்த்தும் தொழிலாளர்கள் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வசிக்கின்றனர். சர்வதேச தொழிலாளர் ஆணையத்தின் (ILO) ஆய்வறிக்கையின்படி, வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் மற்றும் உக்ரேன் போன்ற நாடுகளின் தொழிலாளர்கள் இந்த அவுட்சோர்சிங் வேலைகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், ஆண்கள்தான் மிகப் பெருமளவில் இயங்குதள தொழிலாளர்களாக இருக்கின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் 2018ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இயங்குதள தொழிலாளர்களில் 30 சதமானம் பேர் மட்டுமே பெண்கள்.
இருதரப்பு தளங்களில் முத்தரப்பு உறவுகள்
கிக் பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்துவதில் சிக்கல்களைக் கொண்டுவரும் கிக் வேலையின் ஒரு தனித்துவமான அம்சம் என்னவென்றால், தொழிலாளி (உற்பத்தியாளர்), இறுதி பயனர் (வாடிக்கையாளர்) மற்றும் டிஜிட்டல் இடைத்தரகர் (இயங்குதளம் வழங்குநர் அல்லது ஒருங்கிணைப்பாளர்) இடையே உள்ள முக்கோண உறவு ஆகும். உற்பத்தியாளருக்கும் ஒருங்கிணைப்பாளருக்கும் இடையிலான உறவை நிர்வகிக்கும் ஒருவித ஒப்பந்தம் மட்டுமே இதில் இருக்கும். அது நீண்டகால, நிலையான வேலைவாய்ப்பு ஒப்பந்தமாக இருக்காது. உதாரணமாக, Uber டிரைவர்கள் தங்கள் நிறுவனங்களுடன் மிகவும் எளிமையான பயனர் ஒப்பந்தத்தை வைத்துள்ளது போன்றது அது. அதாவது சேவை ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மட்டுமே என்பதால், தொழிலாளியே தனது வருமானத்தின் உறுதியற்ற தன்மைக்கு பொறுப்பேற்கும் நிலையை ஏற்படுத்தும் வேலைகளாக இவை இருக்கின்றன. கிக் பொருளாதாரத்தில் முதலாளித்துவத்தின் சுரண்டல் அதிகமாக உள்ளது.
மங்கிப் போகும் வேலைவாய்ப்பு/பணியிட உறவு
டிஜிட்டல் மயமாகக்கப்பட்ட வேலைகள் பாரம்பரிய பணியிட உறவுகளுடன் இருப்பதில்லை. மாறாக, அவை ”நிரந்தர வேலைவாய்ப்பு” போன்றில்லாமல், ”இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழான வேலை” என்ற வரைமுறைக்குள்ளும் வராமல், கேசுவல் வேலைகளாக, அல்லது ஃபிரீலான்ஸ் வேலைகளாக, மரபுசாரா வேலைகளாக இருக்கின்றன. ஒரு கேசுவல் தொழிலாளி, ஒரு குறிப்பிட்ட தனிப்பட்ட முதலாளியால் பணியமர்த்தப்படுவதில்லை. மாறாக ஒரு ”முதலாளிகள் குழுவால்” கூட்டாக பணியமர்த்தப்படுகிறார். அதிகமான தொழிலாளர்கள் ‘ஃப்ரீலான்சர்களாக’ அல்லது ‘கிக் தொழிலாளர்களாக’ மாற்றப்படுவதால், பாரம்பரிய பணியிட உறவு கடுமையான சவாலுக்குள்ளாகி வருகிறது. இப்படிப்பட்ட மரபுசாரா வேலை வடிவங்களில் தொழிலாளர்கள் திடீரென வேலையின்மைக்கு தள்ளப்படுவதற்கான அபாயம் அதிகமுள்ளது. வேலைவாய்ப்பு/பணியிட உறவு மங்கிப் போவதால், பெரும்பாலும் இந்தத் தொழிலாளர்களின் பாதுகாப்பும் பணியிட பாதுகாப்பும் கூட கேள்விக்குள்ளாகிறது. பெரும்பாலான இயங்குதளங்கள் 50க்கும் குறைவான பணியாளர்களை மட்டுமே பணியமர்த்துகின்றன. பல்லாயிரக்கணக்கான நபர்களுக்குப் பணிபுரியும் அந்த 50 பேரும், ஃப்ரீலான்ஸர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சுயாதீன ஒப்பந்தக்காரர்கள் என வகைப்படுத்தப்படுகின்றனர். எனவே “தொழிலாளர்” என்ற அங்கீகாரத்துடன் பணியமர்த்தப்படுபவர்களுக்கு உரிய சமூக நலப்பயன்கள் (எ.கா. மகப்பேறு விடுப்பு), வேலை நேரம் மற்றும் ஊதிய விகிதங்கள் போன்றவை இவர்களுக்கில்லை.
தொலைந்து போகும் சமூகப் பாதுகாப்பு
பாரம்பரிய வேலைவாய்ப்புகளில், தொழிலாளர்களுக்கு அரசால் வழங்கப்படக்கூடியது சமூகப் பாதுகாப்பு. சமூக நல உதவி, சமூகக் காப்பீடு, சமூகப் பராமரிப்பு சேவைகள் மற்றும் தொழிலாளர் சந்தை திட்டங்கள் போன்ற நான்கு வகைகளில் வழங்கப்படுகிறது. டிஜிட்டல் மயமாக்கல் மாற்று முறையிலான வேலைவாய்ப்புகளின் பெருக்கத்திற்கு வழிவகுத்துள்ளதால், சமூகப் பாதுகாப்பு குறித்த புதிய கோரிக்கைகள் உருவாக்கப்பட வேண்டியுள்ளது. டிஜிட்டல் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கலில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கான சில புதுமையான வழிமுறைகளை சில நாடுகள் கண்டறிந்து செயல்படுத்தியுள்ளன. அமலாக்க முறைகளில் இடைவெளிகள் இருந்தாலும், அர்ஜென்டினா, கபோ வெர்டே மற்றும் சீனா ஆகியவை உலகளாவிய ஓய்வூதியத் திட்டங்களையும், உருகுவே மற்றும் உக்ரைன் (போருக்கு முன்) உலகளாவிய மகப்பேறு பாதுகாப்புத் திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளன. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் எதிர்கால வேலைகளுக்கான நூற்றாண்டு பிரகடனம், டிஜிட்டல் தொழிலாளர்களுக்கு இதுபோன்ற சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றம் ஆபத்திற்குள்ளாகும் என்பதால், நாடுகள் சமூகப் பாதுகாப்புக் கொள்கைகளை வகுக்கவும் செயல்படுத்தவும் வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.
கூட்டுப் பேர உரிமை
கூட்டுப் பேர உரிமை என்பது மிக நீண்ட காலமாக முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான சமத்துவமற்ற உறவை சமநிலைப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும். கூட்டு நடவடிக்கைகளின் மூலமாக, தொழிலாளர்கள் தங்கள் வேலை மற்றும் பணி நிலைமைகள் மீதான தாக்குதல்களை எதிர்த்தும், பாதுகாப்பான பணிச்சூழல் உள்ளிட்ட இன்ன பிறவற்றிற்காகவும் பயனுள்ள செல்வாக்கினை செலுத்த முடியும். ஆனால், டிஜிட்டல் தொழிலாளர்கள் பல ‘முதலாளிகளுக்கு’ பணிபுரியக்கூடும் என்பதால், வழக்கமான பணியாளர் உறவுமுறை பொருந்தாதன் விளைவாக, கூட்டாகப் பேரம் பேசுவதற்கான தெளிவான வழிமுறை இல்லாதவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். டிஜிட்டல் பொருளாதாரத்தில் தொழிலாளர்களை ஒழுங்கமைப்பதற்கும், கூட்டாக பேரம் பேசுவதற்கும் உதவும் சூழலை மேம்படுத்துவதற்கு ஏதுவாக, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில், சில நாடுகளில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு புவியியல் ரீதியாக சிதறடிக்கப்பட்டுள்ள இந்தத் தொழிலாளர்களுக்கு கூட்டு நடவடிக்கையை வளர்ப்பதற்கான முக்கிய ஆதாரமாக ஆன்லைன் மன்றங்கள் உள்ளன. முக்கியமாக அமெரிக்காவில், இந்த ஆன்லைன் மன்றங்கள், தொழிலாளர் உரிமைகளுக்காக வாதிடும் ஒரு புதிய வகை அமைப்பு முறைகளாக உருவாகியுள்ளன. இருப்பினும், இந்த முன்முயற்சிகள் முன்னேற்றம் காண்பதில் பல சிரமங்கள் உள்ளன. மேலும் அடிப்படையில் பிரச்சனையை தீர்ப்பதற்கான வாய்ப்புகளும் இந்த முறைகளில் மிகக் குறைவாகவே உள்ளது. எனவே, டிஜிட்டல் பொருளாதாரத்தில் தொழிலாளர்களை ஒழுங்கமைப்பதற்கும், கூட்டாக பேரம் பேசுவதற்கும் உதவும் சூழலை மேம்படுத்துவதற்கு ஏதுவாக, சட்டரீதியான, கொள்கைரீதியான சீர்திருத்த மாற்றங்களும் அணுகுமுறையும் அவசியம் தேவைப்படுகிறது.
டிஜிட்டல் இந்தியாவில் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் சவால்கள்
சமூகப் பாதுகாப்புச் சட்டத் தொகுப்பு 2020இல் Gig தொழிலாளர்கள் முதன்முறையாகக் கொண்டு வரப்பட்டுள்ளனர். சமூகப் பாதுகாப்புச் சட்டத் தொகுப்பு 2020இன் அத்தியாயம் 1இன் பிரிவு 2(35)இன் படி, Gig தொழிலாளர் என்பவர் ”ஒரு பாரம்பரியமான முதலாளி-தொழிலாளி உறவிற்குப் புறம்பான வேலைகளை ஏற்றுக் கொண்டு, அந்த வேலைகளின் மூலமாக வருமானம் ஈட்டுபவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தில் போதுமான தெளிவு இல்லை. மேலும், உற்பத்தித் துறையின் டிஜிட்டல் ஆட்டோமேஷன் மற்றும் குறைந்த ஊதியம் தரும் சேவைப் பணிகளின் இயங்குதளம் ஆகியவை, இந்தியச் சூழலில், இந்திய தொழிலாளர் சந்தைகளின் ஒரு நீடித்த நிலையாக “முறைசாரா தன்மையை” மாற்றக்கூடும் என்று ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் தெரிவிக்கின்றன. மேலும், கிக் தொழிலாளர்களின் பணியிட அனுபவங்கள், அவர்கள் மீதான நெருக்கமான நெருக்கடி தரும் கண்காணிப்பு முறைகள், உரிமை மீறல்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பின்மை போன்ற பல அம்சங்கள் குறித்து அரசு அதிக அக்கறையுடன் பார்க்க வேண்டியுள்ளது. மேலும், அவர்களுடைய பணி குறித்த வரையறையை வரையறுப்பது என்பதும் அரசின் மிக முக்கியமான கடமையாகும்.
இந்தியாவில் பெண்களின் பொருளாதார பங்களிப்பு
அரசியல் பொருளாதாரத்தில், இந்தியாவின் முறைசாரா துறையினர் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றனர். அதிலும் முறைசாரா துறையில் பெரும்பான்மையினராக உள்ள பெண்கள் குறித்த சிறப்பு கவனம் அரசுக்குத் தேவைப்படுகிறது. சுய தொழில் புரிபவர்களாக, குடும்ப உழைப்பில் பெரும்பான்மை பங்கினை ஆற்றுபவர்களாக, கட்டுமானத் தொழிலாளர்களாக, வணிக ரீதியான வாடகைத்தாயாக்கப்படுபவர்களாக உள்ள பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பு குறித்த கவனம் உலக அரசியல் பொருளாதாரத்திற்கே தேவைப்படுகிறது. இந்திய சமூகத்தில் பெண்களின் இரண்டாம்பட்ச அந்தஸ்து, சாதி, பாலினம், இனம், வர்க்கம் என அனைத்தும் தொழிற்சந்தையில் பெண் தொழிலாளர்களின் அந்தஸ்தில் செய்யும் குறுக்கீடுகள், அவற்றின் காரணமாக பணியிடங்களில் பெண் தொழிலாளர்களுக்கிருக்கும் அசமத்துவ நிலை, இவற்றைப் பயன்படுத்தி, பெருமளவு பெண்களை பணியிலமர்த்தி முதாலாளித்துவம் எப்படி லாபம் பார்க்கிறது என்பதற்கு நம் நாட்டில் பல உதாரணங்கள் (உதாரணமாக இந்திய ஜவுளித் துறை) உள்ளன. கடந்த இரண்டு தசாப்தங்களாக, இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் படிப்படியாக குறைந்து 27.2 சதத்திற்கு வந்துள்ளது. தற்போது உலகிலேயே மிகக் குறைவான பங்கேற்பு விகிதம் இது. 2005-2012க்கும் இடையில் மட்டும், 190 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பணியிலிருந்து வெளியேறியுள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 53 சதம் பேர் கிராமப்புறப் பெண்கள்.
பெண் தொழிலாளர்கள் மீது டிஜிட்டல் பொருளாதாரத்தின் தாக்கங்கள்
உலகளவில் 400 முதல் 1600 லட்சம் பெண்கள் 2030 ஆம் ஆண்டில் அதிக திறன் தேவைப்படும் புதிய வேலைகளுக்கு மாற வேண்டியிருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும், அவர்களின் ஒரு நாளில் வேலை நேரத்தில் மிக அதிக நேரம் ஊதியம் இல்லாத பராமரிப்பு வேலைகளுக்கு ஒதுக்கப்படுகிறது. வேலையில் இத்தகைய சமத்துவமின்மை ஆழமாக வேரூன்றியுள்ளதன் காரணமாக, பெண்கள் புதிய மாற்றங்களுக்குத் தயாராவதென்பது கடினமாகிறது. அதுமட்டுமல்லாமல், பெண்களுக்கான பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் சட்டரீதியான சவால்கள், அவர்களுக்கிருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான குறைவான அணுகல் வசதிகள் போன்ற பல காரணிகளும் பெண்கள் அதிக திறன் தேவைப்படும் புதிய வேலைகளுக்கு மாறுவதற்குத் தடையாக உள்ளன. பொதுவாக, அதிக டிஜிட்டல் திறன்கள் தேவைப்படும் துறைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது. உலகப் பொருளாதார அமைப்பின் 2021 அறிக்கையின்படி, 2020இல், கிளவுட் கம்ப்யூட்டிங் பணியாளர்களில் 14 சதவீதம் பேர் மட்டுமே பெண்களாக இருந்தனர். தரவு மற்றும் செயற்கை தொழில்நுட்பப் பணியாளர்களில் முறையே 20 சதவீதம் மற்றும் 32 சதவீதம் பேர் மட்டுமே பெண்களாக இருந்தனர். ஆணாதிக்க கலாச்சாரங்கள், தொழில்நுட்பத்தின் ஒரே மாதிரியான ஆண்மயமான வேலைகள், சமூக மற்றும் கல்விச் சூழல் ஆகியவை டிஜிட்டல் திறன்களில் பாலின இடைவெளியின் முக்கிய காரணிகளாகும். டிஜிட்டல் கல்வியறிவு திட்டங்களை பெண் கல்விக்கான விரிவான உத்தியுடன் இணைத்தல் அவசியமாகிறது. உயர்கல்வியில், குறிப்பாக மேம்பட்ட தொழில்நுட்ப திறன்கள் துறையில், இளம் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க ஊக்கத்தொகை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதிக அளவிலான தொழில்நுட்பம் எதிர்பார்க்கப்படும் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு, மாதாந்திர உதவித்தொகையுடன் ஸ்கில் இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் குறுகிய கால மறுதிறன் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
சமூகத்தின் பொதுப்புத்தியில் பதிந்துள்ள பாலினம் சார்ந்த தொழில்கள்
நிர்வாக மற்றும் சமூகவியல் ஆராய்ச்சி, இந்த சமூகத்தின் பொதுப்புத்தியில் “குறிப்பிட்ட சில தொழில்கள் பாலினம் சார்ந்தவை” என்று பதியப்பட்டுள்ளது என்று தெரிவிக்கிறது. எடுத்துக்காட்டாக, பொதுமக்களுடன் உறவுகள் தேவைப்படும் வேலைகள், நர்சிங் மற்றும் கற்பித்தல் ஆகியவை “பெண் பாலின” தொழில்களாகக் கருதப்படுகின்றன. அதேசமயம் பங்கு வர்த்தகம், பொறியியல், கட்டுமானம் போன்றவை “ஆண் பாலின” தொழில்களாகக் கருதப்படுகின்றன. வேலையின் எதிர்காலம் குறித்த ஆராய்ச்சி, பொருளாதாரத்தின் தற்போதைய டிஜிட்டல் மறுசீரமைப்பு, தற்போதுள்ள பாலினம் சார்ந்த வேலை வாய்ப்புகளை சீர்குலைக்கும் என்று தெரிவிக்கிறது. டிஜிட்டல் ஆட்டோமேஷனின் காரணமாக, தொழிலாளர் சந்தைகளில் பெண்கள் அதிகமாக உள்ள வேலைகளில் தொழில்நுட்பம் புகுத்தப்படும்போது, அவர்கள் தங்களுடைய வேலைகளை இழக்கும் அபாயம் அதிகம் உள்ளது என்று பல நாடுகளின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில், தெற்குலகைச் சேர்ந்த பெண்கள் குறைந்த வருமானம் கொண்ட சேவைப் பணிகளுக்குத் தள்ளப்படுகிறார்கள் என்றும், அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
டிஜிட்டல் சமூகத்தில் ஊடுருவும் தொழிலாளர் கண்காணிப்பு நடைமுறைகளின் புதிய வடிவங்களாக வீடியோ கண்காணிப்பு, நிகழ்நேர கண்காணிப்புக்கான ஹாப்டிக் கைக்கடிகாரங்கள் போன்றவை உள்ளன. மேலும், பதவி உயர்வுகள், செயல்திறன் மதிப்பாய்வு மற்றும் ஒழுங்குமுறை தொடர்பான நிர்வாக முடிவுகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் கருவிகள் தொழிலாளர்களை உட்படுத்துகின்றன. இந்தப் போக்குகள் இந்தியாவில் மிக வேகமாகப் பரவி வருகின்றன. (உதாரணமாக, மருந்து விற்பனை பிரதிநிதிகள் உள்ளிட்ட விற்பனை பிரதிநிதிகள் சமீப காலமாக சந்திக்கும் சவால்கள்). மேலும், வீடியோ கண்காணிப்பு ஒரு ஆழமான பாலினக் கூறுகளைக் கொண்டிருப்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. பெரும்பாலும் ஆண் மேற்பார்வையாளர்களால் ‘ஒழுக்கம்’ என்ற போர்வையில் பாலியல் துன்புறுத்தலுக்கு பெண் தொழிலாளர்கள் உட்படுத்தப்படுவதற்கு இவை வழிவகுக்கின்றன.
தற்போது, நான்காம் தொழிற்புரட்சியின் தொழில்நுட்பங்களை உற்பத்தித் துறையில் புகுத்துவதில் மூலதனம் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது. உற்பத்தித் துறை பெருமளவில் ஆண்மயமான துறையாகும். ஆனால் அதே உற்பத்தித் துறையில், உழைப்பின் தீவிரம் அதிகம் தேவைப்படும் பெண்மயமான துறைகளாக உள்ள, குறிப்பாக ஆடை தயாரிப்பில் (apparel/ garments) நான்காம் தொழிற்புரட்சியின் தாக்கம் பெருமளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண் தொழிலாளர்கள் நிறைந்துள்ள சுத்தம் செய்தல், சமையல் மற்றும் அழகுக்கு அழகு செய்தல் போன்ற வீடு சார் சேவைப் பணிகளில் 270க்கும் மேற்பட்ட தளங்கள் 2011க்கும் 2016க்கும் இடையில் மட்டும் உருவாக்கப்பட்டுள்ளன. இயங்குதள நிறுவனங்கள் தொழில்களை முறைப்படுத்துதல் மற்றும் வேலைகளை எளிமைப்படுத்துதல் என்ற முகமூடியை போட்டுக் கொண்டுள்ளன. ஆனால், இதில் உள்ள பெண் தொழிலாளர்களின் வேலை நிலைமைகள் மற்றும் பேரம் பேசும் சக்தியில் எந்தவொரு முன்னேற்றத்திற்கும் இவை வழிவகுக்கவில்லை என்பது தான் உண்மை.
டிஜிட்டல் மயமாகும் விவசாயத் துறை பெண்களுக்கு வாய்ப்பா? வரமா?
இந்தியாவில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் விவசாயத் துறையும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களால் விரைவாக மறுசீரமைக்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், பல டிஜிட்டல் ஸ்டார்ட்-அப்கள், விவசாய மதிப்புச் சங்கிலிகளில் செயல்திறனை அதிகரிக்கவும், மதிப்பை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. விவசாயத்திற்கான ஆலோசனைகள், நிதியுதவி அணுகல் முறைகள், ஒருங்கிணைப்பு மற்றும் செயலாக்கம், விலை நுண்ணறிவு மற்றும் விவசாய உற்பத்தித் தளவாட அளிப்பு என சகலத்திற்குள்ளும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் ஊடுருவியுள்ளன. இதேபோல், சந்தை விலைகள் மற்றும் கொள்முதல் செயல்முறைகளில் அரசு நிறுவனங்களும் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தும் முயற்சிகள் துவங்கியுள்ளன. ஆயினும்கூட, இந்த நடவடிக்கைகள் உண்மையில் பெண்களின் சமத்துவமற்ற பொருளாதார நிலையை மாற்றுமா என்பது மிகப் பெரிய கேள்வி. நிலம், கடன் வசதி மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றிற்கான அணுகல் இல்லாத சமுதாயக் கட்டமைப்பில் பெண்களுக்கு இவை எந்த அளவிற்கு உதவ முடியும் என்ற கேள்வி எழுவதில் வியப்பேதுமில்லை. விளிம்பு நிலைப் பெண் விவசாயிகள் உண்மையில் சந்தை விலைத் தகவல்களால் பயனடைய மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு வேறு வழியில்லை என்பதால், கூலி வேலை செய்பவர்களாக, நில உரிமையாளர்களை அல்லது உள்ளூர் இடைத்தரகர்களை நம்பியவர்களாகவே வாழ வேண்டிய நிலைதான் இந்தியாவில் உள்ளது. டிஜிட்டல் முறை விவசாயம் நிச்சயம் அவர்களுக்கான தீர்வுகளை தராது. வேளாண் விநியோகச் சங்கிலிகளில், பெண்கள் மேலோங்கியிருக்கும் சிறிய அளவிலான சாகுபடி முறைகள் கார்ப்பரேட் விவசாயத்தால் இடப்பெயர்வு செய்யப்படுகின்றன. உயிர்வாழ்வதையே ஒரு போராட்டமாக மாற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பாலின விளைவுகளை சரி செய்ய, விளிம்பு நிலை பெண் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையிலான மாற்று இயங்குதள மாதிரிகள் அரசால் உருவாக்கப்பட வேண்டும். மேலும், தரமான விவசாய உள்ளீட்டுப் பொருட்கள், அரசு கிட்டங்கிகள், மானிய விலையிலான போக்குவரத்து, குறைந்தபட்ச ஆதார விலை போன்றவை உள்ளிட்ட விவசாயத்திற்கான பொதுக் கொள்கையையும் அரசு செயல்படுத்த வேண்டும்.
சில்லறை வர்த்தகத்தில்
சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் பெண்களில் 90%க்கும் அதிகமானோர் முறைசாரா தெரு வியாபாரத்தில் ஈடுபட்டுபவர்கள் ஆவர். இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம் நிறுவனங்களின் ஏகபோக மற்றும் போட்டி-எதிர்ப்பு நடைமுறைகளால் அவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்த ஆய்வுகள் மிகக் குறைவாகவே உள்ளன. அமேசான் மற்றும் (வால்மார்ட்டுக்குச் சொந்தமான) பிளிப்கார்ட் போன்ற இயங்குதள நிறுவனங்களின் தள்ளுபடி தந்திரங்கள், கொள்ளையடிக்கும் விலை நிர்ணயங்கள் போன்றவற்றின் பாதகமான பாதிப்புகள் பற்றி இந்தியாவில் எதிர்க்குரல்கள் கிளம்பியுள்ளன. டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான மாற்றத்தில், பெரும்பகுதி டிஜிட்டல் மாற்றங்களும் வேலை இழப்புகளும், உற்பத்தித்துறையின் வீடு சார் தொழில்களில், சேவை அடிப்படையிலான (பெரும்பாலும்) பராமரிப்புப் பணிகளில், விவசாயம் மற்றும் சில்லறை வர்த்தகத்திலேயே நிகழ்கிறது. சில்லறை மற்றும் விவசாயத்தில் இயங்கும் தளங்களை ஒழுங்குபடுத்துவதும், இ-காமர்ஸ் தளங்களின் போட்டிச் சட்ட மீறல்களைக் கட்டுப்படுத்துவதம், இ-காமர்ஸ் நிறுவனங்களின் ஏகபோக மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் இருந்து பெண் தெரு வியாபாரிகளைப் பாதுகாப்பதற்கேற்ற வகையில் டிஜிட்டல் சந்தையை சம நிலையுடன் பராமரிப்பதும், தரவு நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதும் உடனடியாக அரசால் செய்யப்பட வேண்டும். இந்தியாவில் விவாதத்தில் உள்ள தேசிய இ-காமர்ஸ் கொள்கையில் இதற்கான தெளிவான விதிமுறைகளை வகுக்க வேண்டும்.
பெண் தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மாற்றுவதற்கு அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்
- டிஜிட்டல் பொருளாதாரத்தில் பெண் தொழிலாளர்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதற்கு உரிய சட்டங்கள் இயற்றப்படுதல் அவசியம்.
- குறைந்தபட்ச ஊதியம், கண்ணியமான வேலை, சமூகப் பாதுகாப்பு மற்றும் பணியிட பாகுபாடுகளைத் தடுப்பது உள்ளிட்டு, இருக்கிற தொழிலாளர் சட்டங்களை மேம்படுத்துவது மிக முக்கியம்.
- வீட்டு வேலைத் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதி செய்யும் வகையில், வீட்டு வேலைக்கான இயங்குதளங்களில் தொழிலாளர்களை ஈடுபடுத்தும் ஒப்பந்த விதிமுறைகள் பற்றிய விவரங்களை வெளியிடும் எந்தக் கடமையும் தற்போது இல்லை. தொழிலாளருக்கும் வாடிக்கையாளருக்கும் போதுமான பொருத்தப்பாடு உள்ளதா என்பது உள்ளிட்டு, பொருந்தும் செயல்முறை, நியாயமான ஊதியம் மற்றும் பாதுகாப்பான வேலை நிலைமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இயங்குதளங்களின் கடமைகள் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
- பாலியல் துன்புறுத்தல் மற்றும் பணியிடச் சுரண்டல் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பதற்காக தற்போதுள்ள சட்டங்களைப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், இயங்குதள பொறுப்புணர்வை உள்ளடக்கிய ஒழுங்குமுறை அவசரமாகத் தேவைப்படுகிறது.
- இயங்குதள அடிப்படையிலான சேவைப் பணியில் உள்ள பெண் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகள் பற்றிய தகவல்களைக் அணுகுவதற்கான வசதிகளும் இருக்க வேண்டும்.
- முறைசாரா துறையில் அனைத்து பெண்களுக்கும் பயனுள்ள சமூக பாதுகாப்பு வலையை வழங்குவதற்காக, அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கான பொது நிதியுதவி சமூக பாதுகாப்பு திட்டங்களின் பட்ஜெட் ஒதுக்கீடு, தற்போதைய 0.57% என்ற அற்ப மட்டத்திலிருந்து கணிசமாக விரிவுபடுத்தப்பட வேண்டும்.
- முதலாவதாக, அரசின் பங்களிப்பிற்கான ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இரண்டாவதாக, சில ஐரோப்பிய நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைப் போல, கிக் இயங்குதளங்களில் இருந்து பணியிலமர்த்தும் முதலாளியின் மீது ஒரு குறிப்பிட்ட சதத்தில் வரி விதிக்கும் ஏற்பாட்டின் மூலம் பொது நிதி உருவாக்கப்பட வேண்டும்.
- பணியிடச் சுரண்டல் மற்றும் செயற்கை நுண்ணவு தொடர்பான பாகுபாடு ஆகியவற்றிலிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்கான கொள்கை நடவடிக்கைகள் அவசியம்.
- டிஜிட்டல் பொருளாதாரத்தில் பெண்களின் சம பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் டிஜிட்டல் பொதுப் பொருட்கள் உருவாக்கப்பட வேண்டும்.
- டிஜிட்டல் பொதுப் பொருட்களில் அரசு முதலீடு செய்வதும், மலிவு விலை இணைப்புக்கான அணுகலை ஏற்படுத்திக் கொடுப்பதும், டிஜிட்டல் மயமாக்கலின் பின்னணியில் பெண்களின் பொருளாதார மேம்பாட்டை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய உத்தியாகும் என்று “பெண்களின் பொருளாதார அதிகாரம்” குறித்த ஐ.நா பொதுச் செயலாளரின் உயர்மட்டக் குழுவால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
- உள்ளூர் பெண் உற்பத்தியாளர்கள், குறு தொழில்முனைவோர் மற்றும் கைவினைஞர்களுக்கு முன்னுரிமை விதிமுறைகளை வழங்கும் பொது நிதியுதவியுடன் கூடிய இ-காமர்ஸ் சந்தைகளை தேசிய மற்றும் மாநில அரசாங்கங்கள் அமைக்க வேண்டும்.
- இதேபோல், பல்வேறு நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுடன் சேவைப் பணியாளர்களை இணைக்க அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட தேசிய தொழிலாளர் போர்டல், நாடு தழுவிய அளவில் பெண்கள் வேலை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள உதவும்.
- போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட பெண்களை பொருத்தமான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுடன் இணைக்க வேண்டும். மேலும் குறை தீர்க்கும் வழிமுறைகளும் அமைக்கப்பட வேண்டும்.
- டிஜிட்டல் பொருளாதாரத்தில் பாலின வேலை வாய்ப்புகள் குறித்த ஆராய்ச்சிக்கான பொது நிதியுதவி செய்யப்பட வேண்டும்.
இந்தியச் சட்டங்களில் கிக் தொழிலாளர்கள்
இயங்குதள பொருளாதாரம் தொழிலாளர்களுக்கு பணிநேரத்தில் நெகிழ்வுத் தன்மையையும் அவர்களுக்கான சுய அதிகாரத்தையும் வழங்குகிறது என்பது மிக முக்கியமான நேர்மறை வாதமாக முன்வைக்கப்படுகிறது. ஆனால், தொழிலாளர்களின் பணி நியமனத்தின் சட்டப்பூர்வ அங்கீகாரம் குறித்து அரசு கவனிக்கத் தவறுகிறது. உலகம் முழுவதுமே இன்றைக்கு உச்ச நீதிமன்றங்கள் சுய தொழில் புரியும் தொழிலாளர்களுக்கும், பிற தொழிலாளர்களுக்கும் அந்தஸ்து ரீதியான இடைவெளியை நிர்ணயம் செய்ய கடும் முயற்சி எடுத்து வருகின்றன. சமூகப் பாதுகாப்புச் சட்டத் தொகுப்பு 2020இல் Gig தொழிலாளர்கள் முதன்முறையாகக் கொண்டு வரப்பட்டுள்ளனர். சமூகப் பாதுகாப்புச் சட்டத் தொகுப்பு 2020இன் அத்தியாயம் 1இன் பிரிவு 2(35)இன் படி, Gig தொழிலாளர் என்பவர் ”ஒரு பாரம்பரியமான முதலாளி-தொழிலாளி உறவிற்குப் புறம்பான வேலைகளை ஏற்றுக்கொண்டு, அந்த வேலைகளின் மூலமாக வருமானம் ஈட்டுபவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தில் போதுமான தெளிவு இல்லை. எனவே, அரசின் முதல் கடமை, அவர்களுடைய பணி வரையறையை வரையறுப்பதாகும். கண்ணியமற்ற வேலைகளாக, பாதுகாப்பற்ற வேலைகளாக, பல நேரங்களில் குறை ஊதியமுள்ள வேலைகளாக அல்லது நிரந்தரமற்ற வருமானமுள்ள வேலைகளாக, தொழில்சார் ஆரோக்கிய அபாயங்கள் – குறிப்பாக மன அழுத்தம் நிறைந்தவையாக, தொழிலாளர் என்ற அங்கீகாரம் மறுக்கப்பட்டவையாக, இயங்குதள தொழில் வேலைவாய்ப்புகள் மாறியுள்ளன என்பதையும் அரசு கவனிக்க வேண்டியுள்ளது.
சமீபத்தில், ஆப்-அடிப்படையிலான போக்குவரத்து தொழிலாளர்களின் இந்திய கூட்டமைப்பு (WP [C] 1068/2021) உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில் “அமைப்புசாரா தொழிலாளர்களின்” சட்ட வரையறையின்கீழ், கிக் மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்களை முறைசாரா தொழிலாளர்களாக அங்கீகரித்து, அமைப்புசாரா துறை சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இயங்குதள தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்கு அரசை பொறுப்பாக்குவதன் மூலம், UWSS சட்டத்தின் கீழ் அவர்களை உள்ளடக்கி, இயங்குதளப் பொருளாதாரத்தில் “தொழிலாளர்” என்ற அந்தஸ்த்தை பெறுவதற்கான மாற்று உத்தியாகும் இது.
இயங்குதள தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வ உரிமைகள் எதுவும் இல்லாத சூழ்நிலையில், இவர்களுக்கான நல வாரியம் அமைக்க ராஜஸ்தான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்பது, அவர்களைத் தொழிலாளர்களாக அங்கீகரிப்பதற்கான முதல் படியாகும். இதே மாதிரியான முயற்சியில் தமிழகத்திலும் சிறு வெற்றி காணப்பட்டுள்ளது. நிலையற்ற, நிச்சயமற்ற சந்தை நிலைமைகளில் தொழிலாளர்களுக்கு ஒரு பாதுகாப்பு வலையை வழங்குவதற்கான பொறுப்பை ஏற்க, மாநில அரசுகள் முன்வந்துள்ளன. ஆயினும்கூட, அரசின் இந்த அறிவிப்பில், அதன் தொழிலாளர்களுக்கு கண்ணியமான பணிச்சூழல் மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை வழங்குவதற்கு முதலாளியை சமமாகப் பொறுப்பேற்கச் செய்வதற்கான எந்த முயற்சியும் இல்லை. 2021 பிப்ரவரி 19 அன்று Uber ஓட்டுநர்கள் ‘தொழிலாளர்களாக’ அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், ஊதியத்துடன் கூடிய விடுமுறைகள் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும், நோய்வாய்ப்பட்டால் விடுப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும், ஓய்வூதியம் அளிக்கப்பட வேண்டும் என்றும், இங்கிலாந்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஐரோப்பிய பாராளுமன்றம் ‘நியாயமான பணி நிலைமைகள், உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு’ குறித்த வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதே போன்று, நமது நாட்டிலும் அதிகபட்ச வேலைநேர வரையறை மற்றும் பணியிட பாதுகாப்பு நடவடிக்கைகள், தொழில் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் கண்ணியமான வேலைநிலைமைகளை உறுதிப்படுத்துவது உள்ளிட்டவற்றை இணைத்து கிக் தொழிலாளர்களுக்கான ‘நியாயமான பணி நிலைமைகள், உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு’ வரைவு அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். தேசிய சமூக பாதுகாப்பு வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படுவதும், வாரியத்தில் தொழிலாளர் பிரதிநிதித்துவத்தில் வெளிப்படைத்தன்மை இருப்பதை உறுதிப்படுத்துவதும் இங்கு தேவைப்படுகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
