
சொல்லகராதி : தொழிலாளி – விவசாயி கூட்டணி
கூட்டணி என்றாலே தேர்தல்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் தொழிலாளி – விவசாயி கூட்டணி என்பது புரட்சிக்கான வர்க்கக் கூட்டணியாகும். புரட்சியின் இலக்கைப் பொறுத்தே, அதற்கான வர்க்கக் கூட்டணி அமையும்.
முதலாளித்துவம் முன்னதாக நிறுவப்பட்டு, தொழிலாளி வர்க்கமும் வளர்ச்சியடைந்த நிலையில் உள்ள நாடுகளில் நிலவும் புரட்சிக்கான வாய்ப்பு குறித்தே பிரதானமாக மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் கவனம் குவிந்திருந்தது. இருப்பினும், விவசாய வர்க்கப் பிரிவுகளின் நேர்மறை – எதிர்மறை அம்சங்களையும் அவர்கள் சுட்டிக்காட்டி வந்தனர். கம்யூனிஸ்ட் அறிக்கையிலேயே, தமது இருப்பைப் பாதுகாக்க முதலாளித்துவத்தை எதிர்க்க வேண்டிய வர்க்கங்களில் விவசாய வர்க்கங்களையும் குறிப்பிட்டிருந்தனர். 1871 பாரிஸ் கம்யூன் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம், முதலாளிகள் விவசாயிகளைத் தம் பக்கம் இழுத்துக் கொண்டு, தொழிலாளிகளுக்கு எதிர் நிலை எடுக்க வைத்தது என்ற விமர்சனத்தை அவர்கள் முன்வைத்தனர். தனி உடைமை ஒழிப்பு என்ற பேரில் தொழிலாளிகள் தம் உடைமைகளைக் கையகப்படுத்துவர் என்ற அச்சத்தில் இருந்த முதலாளிகள், விவசாயிகளின் உடைமையும் கைப்பற்றப்படும் என்று பிரச்சாரம் செய்து விவசாயிகளின் ஆதரவைப் பெற்றனர்.
பொதுவாக, ஒரு சமூகம், நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையிலிருந்து முதலாளித்துவத்துக்கு மாறிச் செல்லும்போது, முந்தைய சமூக அமைப்பான நிலப்பிரபுத்துவம் முற்றாகத் தகர்க்கப்படும். வளர்ச்சி அடைந்த நாடுகளில் நிகழ்ந்த சமூக மாற்றங்கள் இதற்கு உதாரணம். ஆனால், முதலாளித்துவ கட்டத்தைத் தாமதமாக அடையும் நாடுகளில், நிலப்பிரபுத்துவத்தைத் தகர்க்கும் வலிமை அதற்கு இருக்காது. தொழிலாளி வர்க்கம் குறித்த அச்சமும் அதற்கு இருக்கும். எனவே, அது, நிலப்பிரபுத்துவ சக்திகளுடன் சமரசம் செய்து கொள்ளும் இடத்துக்குத்தான் வரும். இது, விவசாயிகளின் இதர பிரிவுகளின் பிரச்னைகள், சமூக ஒடுக்குமுறை, நில விநியோகம் உள்ளிட்ட சிக்கல்கள் நீடிக்கும் நிலைமையை ஏற்படுத்தும். அதாவது, நிலப்பிரபுத்துவத்திலிருந்து விவசாயிகளை விடுவிக்கும் ஜனநாயகக் கடமையிலிருந்து முதலாளித்துவம் தவறியிருக்கும்.
இத்தகைய நாடுகளில் முதலாளித்துவம் செய்யத் தவறிய ஜனநாயக புரட்சியை தொழிலாளி வர்க்கமே பூர்த்தி செய்ய வேண்டி வரும். ரஷ்யா அத்தகைய நிலையில் இருந்தது. இதனைப் பரிசீலித்து, ஜனநாயக புரட்சி வெற்றியடைய, தொழிலாளி வர்க்கமும் விவசாய வர்க்கங்களும் அணி சேர வேண்டும் என்ற கருத்தாக்கத்தை லெனின் முன்வைத்தார். இது மார்க்சியத்துக்கு செழுமை சேர்த்த அம்சமாகும். ஜனநாயகப் புரட்சிக்கு அடுத்து, சோஷலிச புரட்சியை நோக்கி முன்னேறும்போது, வர்க்க அணி சேர்க்கையில் மாற்றம் ஏற்படும்; பழைய அணி சேர்க்கை தொடராது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். லெனின் அவர்களின் தத்துவார்த்த பங்களிப்பில் இது முக்கியமானது. இந்த மதிப்பீடு, பல மூன்றாம் உலக நாடுகளில் புரட்சிக்கான உத்திகளை வகுக்க உதவியது.
1919இல் கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாம் மாநாட்டில் மற்றும் 1920இல் ஆசிய நாடுகள் மாநாட்டில், சுரண்டலுக்கு எதிராக உறுதியான வகையில் வெல்ல வேண்டும் என்றால், தொழிலாளி – விவசாயி கூட்டணி தேவை என்று விவாதிக்கப் பட்டது. 1922இல் நடந்த கம்யூனிஸ்ட் அகிலத்தின் 4வது மாநாட்டில் காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில், புரட்சிகர இயக்கம் விவசாயிகளின் ஆதரவு இல்லாமல் வெற்றி பெற முடியாது; அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் விவசாய புரட்சிக்கான தனிப்பட்ட திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும் என வழிகாட்டப்பட்டது.
சீனா, வியட்நாம், வட கொரியா, கியூபா புரட்சியிலும் தொழிலாளி – விவசாயி கூட்டணி வெற்றிக்கு வழிகோலியது. அந்த நாடுகளில் இருந்த முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ சக்திகளையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்துப் போராட இந்தக் கூட்டணி உதவியது.
இந்தியாவிலும், மார்க்சிஸ்ட் கட்சி தனது திட்டத்தில் தொழிலாளி – விவசாயி கேந்திர கூட்டணி என்பதை வர்க்கக் கூட்டணியின் அடித்தளமாக முன்வைக்கிறது. இந்திய முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தைத் தகர்ப்பதற்கு பதிலாக அவர்களுடன் சமரசம் செய்து கொண்டது. எனவேதான், இந்திய அரசின் வர்க்கத் தன்மையை வரையறுக்கும்போது, முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சி எனக் குறிப்பிடுகிறது. இந்திய முதலாளித்துவம் செய்யத் தவறிய ஜனநாயக புரட்சியை, தொழிலாளி வர்க்கம் செய்து முடிக்க வேண்டும் என்ற புரிதலின் அடிப்படையிலேயே, மக்கள் ஜனநாயக புரட்சி என்பது இலக்காக, புரட்சியின் கட்டமாக வரையறுக்கப்படுகிறது. மேலும் இதன் அச்சாணியாக விவசாய புரட்சி என்பது அமையும். இதன் மூலம் விவசாய உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிலப்பிரபுத்துவ தளைகளை அகற்ற முடியும். மறுபக்கம் முதலாளித்துவத்துக்கு முந்தைய அமைப்பு முறைகளின் மிச்சமாக நீடிக்கும் சாதிய, பாலின பாகுபாடுகளை ஒழிக்க முடியும்.
மக்கள் ஜனநாயக அணியின் தலைமையாக தொழிலாளி வர்க்கம் விளங்குகையில், விவசாய தொழிலாளிகளும் ஏழை விவசாயிகளும் தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படை கூட்டாளிகள். நடுத்தர விவசாயிகள் நம்பகத்தன்மையுள்ள கூட்டாளிகள். பணக்கார விவசாயிகள் ஊசலாட்டம் இருப்பினும், சில தருணங்களில் இந்த அணிக்கு கொண்டு வரப்பட முடியும் என்ற நிர்ணயிப்பை கட்சித் திட்டம் முன்வைக்கிறது.
நவீன தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, தொழிலாளி வர்க்கமும், விவசாய வர்க்கங்களும் கூடுதலாக சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு, நெருக்கடியில் தள்ளப்படுகின்றன. ஊரகப் பகுதிகளில் நிகழ்ந்துள்ள மாற்றங்களின் அடிப்படையில், ஊரகத் தொழிலாளிகள் என்ற ஒரு பகுதி உருவாகியுள்ளது. எனவே, கடந்த காலத்தை விட தற்போது தொழிலாளி – விவசாயி கூட்டணிக்கான வாய்ப்புகள் அதிகம். புரட்சிகர சக்திகள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேற வேண்டும்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply