வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, வேலை: மூன்றிலும் முழு தோல்வி அடைந்த மோடி அரசு
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
அறிமுகம்
2024 தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை ஒருவருடத்திற்கு முன்பே துவக்கி விட்டது மோடி அரசு. சுழற்சி முறையில் நடத்தப்படும் ஜி20 மாநாட்டை தடபுடலாக நடத்தி இந்தியாதான் அண்மை ஆண்டுகளில் உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் நாடு என்ற பிம்பத்தை விற்க மோடி அரசு தீவிரமாக செயல்பட்டது. இது உண்மையல்ல என்று அறிந்திருந்த பணக்கார ஏகாதிபத்திய நாடுகள், சீனாவிற்கு எதிராக இந்தியாவை நிறுத்தும் தமது அரசியல் உத்தியின் பகுதியாக கூட நின்று கைதட்டினர். ஆனால் அவர்கள் முதலீடுகளை இங்கு கொண்டுவந்து கொட்டவில்லை. மாறாக, பெரும் தொற்று அனுபவத்தில் சீனாவை விட்டு பல ஆயிரம் கம்பனிகள் இந்தியாவிற்கு பறந்துவரும் என்று கட்டப்பட்ட புனைவு கதையாடல்கள் பெரும்பாலும் புனைவாகவே உள்ளன. பெரும்தொற்று காலத்தையும் உள்ளடக்கிய ஆர் எஸ் எஸ் – பாஜக அரசின் பத்து ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, மக்கள் வாழ்க்கைத்தர மேம்பாடு ஆகிய முக்கிய அம்சங்களில் மோடி அரசு கடும் தோல்வியையே கண்டுள்ளது. இதன் விவரங்களை அறிய தில்லியில் உள்ள IHD என்ற மனித மேம்பாடு நிறுவனம் (Institute for Human Development) அண்மையில் வெளியிட்டுள்ள இந்தியா வேலைவாய்ப்பு அறிக்கை 2024 (India Employment Report 2024) நமக்கு பெரிதும் உதவும்.
ஒன்றிய அரசின் பொய்நிறை கதையாடல் – வளர்ச்சி
2024-25இல் இந்தியாவின் ஜிடிபி 5 டிரில்லியன் அமெரிக்க டாலராகும் என்று மோடி 2019இல் அறிவித்தார். (டிரில்லியன் என்றால் ஒரு லட்சம் கோடி; ஜிடிபி என்பது நாட்டு உற்பத்தியின் சந்தை மதிப்பு). “விகசித் பாரத்” ஆவணம் இது 2047இல் 30 டிரில்லியன் ஆகும் என்கிறது. இவை அபத்தமான, மக்களின் வாழ்நிலைக்குத் தொடர்பே இல்லாத கட்டுக்கதைகள். உண்மை என்ன? தலா வருமானப்படி (per capita GDP) உலகில் 138 ஆவது நாடாக உள்ளது என்கிறது பன்னாட்டு நிதி நிறுவனம் (IMF)! பெரும் வருமான ஏற்றத்தாழ்வுகளையும் அதனைவிட மிகவும் அதிகமான சொத்து ஏற்றத்தாழ்வுகளையும் கொண்ட நாடு இந்தியா என்பதை கணக்கில் கொண்டால், கணிசமான மக்கள் வறுமையில் வாடுவதும், பொதுவாக பெரும்பகுதி இந்தியர்களுக்கு வாழ்க்கை தரம் மகிழ்ச்சி கொள்ளும்படி இல்லை என்பதும் தெளிவாகும். டிசம்பர் 2023இல் பாராளுமன்ற பட்ஜட் கூட்டத்தொடரில் ஒன்றிய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் வழக்கமான பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இன்றைய ஒன்றிய அரசின் புகழ்பாடும் ஆவணத்தை முன்வைத்தார். பின்னர் 2024 ஜனவரியில் “வெள்ளை அறிக்கை” என்ற பெயரில் முந்தைய யூபிஏ அரசை விமர்சித்து, மோடி அரசை மிக சிறப்பாக செயல்பட்டதுபோல் காட்டும் முயற்சியும் நடந்தது.
வளர்ச்சி தரவுகளில் தில்லுமுல்லு
ஒன்றிய அரசின் தேசிய வருமான கணக்கில் பொய்யும் புரட்டும் நிறைய உள்ளன. ஜூலை 2018இல் யுபிஏ ஆட்சிக்காலமான 2005-14இல் வளர்ச்சி விகிதம் 8% என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் நவம்பர் 2018இல் இது குறைக்கப்பட்டது; 6.7% என்று திருத்தப்பட்டது.
2016 செல்லாக்காசு நடவடிக்கை, 2017 ஜிஎஸ்டி ஆகிய இரண்டும் இந்தியாவின் முறைசாராத் துறைகளை அழித்த பின்பும், நாடே நாசமான பின்பும், 2014-18 மோடி ஆட்சி காலத்தில் ஆண்டு வளர்ச்சி விகிதம் 7.7% என மிகையாக அறிவிக்கப்பட்டது. எனினும் பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்ந்து சரிந்ததை அரசால் மறைக்க முடியவில்லை. 2019-20 வளர்ச்சி விகிதம் 4% ஆக குறைந்தது. 2020-21இல் இது பெரும் தொற்று, நாட்டடங்கு காரணமாக மைனஸ் 6.6% என வீழ்ச்சி அடைந்தது.
மோடி அரசின் புள்ளிவிவர தில்லுமுல்லுகளை கணக்கில் கொண்டால் 2014-23 என்ற மோடி அரசின் 9 ஆண்டு காலத்தில் மொத்தமாகவே தேச உற்பத்தி மதிப்பு வளர்ச்சி விகிதம் கிட்டத்தட்ட ஆண்டுக்கு 1% ஐ தாண்டவில்லை எனலாம். இதேகாலத்தில் ஏற்றத்தாழ்வுகளும் அதிகரித்துள்ள பின்னணியில், இந்த குறைந்த வளர்ச்சியின் பயனும் பெரும்பகுதி மக்களுக்கு போய்ச்சேரவில்லை என்பதையும் நாம் பதிவு செய்ய வேண்டும்.
வறுமை ஒழிந்ததா?
2024 பிப்ரவரி மாதம் இந்திய அரசின் கைப்பாவை நிறுவனமான நித்தி ஆயோக் இந்திய மக்களில் 5%க்கும் குறைவானவர்கள்தான் வறுமையில் உள்ளவர்கள் என்று முற்றிலும் தவறான செய்தி வெளியிட்டது. இதற்கு ஆதாரம் 2022-23இல் நடத்தப்பட்ட குடும்ப நுகர்வு செலவு ஆய்வு என்றது. உண்மையில் இந்தியாவில் வறுமை என்பது குடும்பத்தின் சராசரி தினசரி தலா கலோரி நுகர்வு (per capita daily calorie intake) என்பதன் அடிப்படையில்தான் வரையறுக்கப்பட்டுள்ளது. நுகர்வு செலவு அடிப்படையில் அல்ல. வறுமை கோட்டை ஒரு குடும்பம் எட்டவோ தாண்டவோ இது போதும் என்று அரசு கணக்கிட்டுள்ள மாதாந்திர தலா நுகர்வு செலவு, தேவைப்படும் கலோரிகளில் பாதியைப் பெறக்கூட போதாது.
ஜனவரி 2024இல் நிதி ஆயோக் 2014-23 காலத்தில் கிட்டத்தட்ட 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவித்தது. இதற்கு ஆதாரமாக தேசிய வறுமை குறியீட்டை (NMPI – National Multi-Dimensional Poverty Index) மேற்கோள் காட்டியது. ஆனால் அந்த குறியீடு வறுமை பற்றியது அல்ல. மாறாக, ஆரோக்கியம் தொடர்பான 3 குறியீடுகள், கல்வி சார்ந்த 2 குறியீடுகள் மற்றும் “வாழ்க்கை தரம்” சார்ந்த 7 குறியீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. இதில் இருந்து அரசு நீண்ட காலமாக பின்பற்றும் கலோரி நுகர்வு அடிப்படையிலான வறுமைக்கோட்டு வரையறைக்கும், நித்தி ஆயோக் முன்வைக்கும் வரையறைக்கும் சம்பந்தமே இல்லை எனலாம்.
2014-16 ஆண்டுகள் கணக்குப்படி இந்தியாவில் உணவு பாதுகாப்பு இல்லாதவர்கள் 36.8 கோடிப்பேர். இது அன்றைய மக்கள் தொகையில் 28.1 % . 2019-21 ஆண்டுகளில் இது 56.4 கோடியாக அதிகரித்தது. உயர்ந்திருந்த மக்கள் தொகையில் இது 40.8%. உணவு பாதுகாப்பு நிலைமையை அரசின் கொள்கைகள் பலவீனப்படுத்தின. உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் நெறிமுறைகளை பின்பற்றி, உணவு உரிமைக்கான இயக்கம் நடத்திய 2021 ஆய்வும் பட்டினி பிரச்சினை பரவலாக இருப்பதை கண்டறிந்துள்ளது. 2023 ஆண்டில் உலக பட்டினி குறியீடு அடிப்படையிலான வரிசையில், 125 நாடுகளில் 111 ஆம் நாடாக இந்தியா உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.
வேலையின்மை
நாம் இக்கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட இந்தியா வேலைவாய்ப்பு அறிக்கை 2024 (India Employment Report 2024) இந்தியாவின் வேலையின்மை பிரச்சினை பற்றி முக்கிய தரவுகளை நமக்கு அளிக்கிறது. அந்த அறிக்கையையும் வேறு சில ஆய்வுகளையும் பரிசீலித்த பின்பு நாம் கீழ்க்காணும் முடிவுகளுக்கு வரலாம்:
- சிறு சிறு முன்னேற்றங்கள் இருந்தாலும் இந்தியாவில் வேலை நிலைமைகள் உழைப்பாளிகளுக்கு மோசமாகவே உள்ளன.
- பொதுவாக நாட்டு வளர்ச்சியில் உழைப்பாளிகள் வேளாண் துறையில் இருந்து தொழில் மற்றும் இதர துறைகளுக்கு மாறுவது மெதுவாகவே இருந்துள்ளது. வேலைப்படையில் ஒரு சிறிய பகுதிதான் (12-14%) ஆலை உற்பத்தியில் இருந்தனர். வேளாண்மையை விட்டு பிற துறைகளுக்கு வந்தவர்கள் பெரும்பாலும் கட்டுமானத்துறையிலும் சேவை துறையிலும் வேலை செய்தனர்.
- ஆனால் 2019இல் இருந்தே, பெரும்தொற்று காலத்தில் இருந்தே, இதற்கு மாறாக, உழைப்பாளிகளில் ஒருபகுதி எதிர் திசையில், அதாவது பிற துறைகளில் இருந்து வேளாண்மைக்குள் தள்ளப்படுவது நிகழ்கிறது.
- கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, வேலைப்படை (Labour Force) பெருக்கம் என்பது பெரும்பாலும் பெண்களால் நிகழ்ந்துள்ளது. இதன் தன்மை சுய வேலை மற்றும் ஊதியம் இல்லாத குடும்ப உழைப்பாகவே உள்ளது.
- இந்தியாவில் வேலை என்பது பெரும்பாலும் சுய வேலை அல்லது அத்தக்கூலி வேலைதான். உழைப்பு படையில் 82% முறைசாரா துறையில் பணியாற்றுகின்றனர். கிட்டத்தட்ட 90 சதம் வேலைகள் முறைசாரா தன்மை கொண்டவைதான். 2019க்குப்பிறகு முறைசார் துறை மற்றும் முறைசார் வேலை ஆகியவற்றின் பங்குகள் மேலும் குறைந்துள்ளன.
- முறைசார் பணியில் உள்ளோரின் கூலியும் வருமானமும் குறைந்து வருகின்றன; அல்லது தேக்கமாக உள்ளன. 2019க்குப்பின் சுயவேலை நிலைமையும் இதுவே. அத்தக்கூலி விகிதத்தில் 2021-22இல் சிறிது முன்னேற்றம் இருந்தாலும், பொதுவாக கூலி மற்றும் சுயவேலை வருமானம் மிகவும் குறைவாகவே உள்ளது. விவசாயமாகட்டும், கட்டுமானமாகட்டும், சட்டத்தில் உள்ள குறைந்தபட்ச கூலி கூட பெரும்பாலானவர்களுக்கு கிடைப்பதில்லை. உற்பத்தி மேலும் மேலும் இயந்திரமயமாகியுள்ளது. வேலை வாய்ப்பை கூட்டுவதில்லை.
- ஸ்விக்கி, ஓலா, ஊபர் போன்ற மேடை/கிக் வேலைகள் விரிவடைந்துள்ளன. இவை முறைசாரா வேலைகள், இவற்றில் சமூக பாதுகாப்பு அம்சங்கள் கிட்டத்தட்ட இல்லை எனலாம்.
- புலம் பெயர் தொழிலாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும். இந்த தொழிலாளிகள் கிழக்கு, வடக்கு மற்றும் மத்திய பகுதி மாநிலங்களில் இருந்து தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு நோக்கி செல்வர்.
- 2012 முதல் 2019 வரை ஆண்டு உற்பத்தி மதிப்பு வளர்ச்சி விகிதம் 6.7 % ஆகிய இருந்தது. ஆனால், வேலை படை 0.01% அளவுதான் அதிகரித்தது.
- 2019-22 காலத்தில் நாட்டடங்கு பின்னணியில் ஏராளமானோர் வேலை இழந்து, பிற துறைகளில் வேலை வாய்ப்பின்றி விவசாயத்திற்கு வர நேர்ந்தது.
- கட்டுமானத்துறையில் கிடைக்கும் வேலைகள் பெரும்பாலும் முறைசாரா வேலைகள். மேலும் கூலியும் குறைவு.
- 2019-22 காலத்தில் உற்பத்தி மதிப்பு வளர்ச்சி 3.5% ஆக சரிந்தது. வேலை வாய்ப்பு 3% என இருந்தது. ஆனால் இவை பெரும்பாலும் மிகவும் குறைந்த வருமானம் தரும் வீட்டு வேலை, விவசாயக்கூலி வேலை, நட்டம் தரும் வேளாண்மையில் செலுத்தப்படும் கடும் உழைப்பு போன்ற வேலைகள் தான்.
இளைஞர் மத்தியில் வேலையின்மை
- 2021இல் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்கள் 27% என்று மதிப்பிடப்படுகிறது. ஆண்டு தோறும் சுமார் 70-80 லட்சம் இளைஞர்கள் புதிதாக உழைப்பு படையில் நுழைகின்றனர். இளைஞர்களில் கணிசமான பகுதியினர் வெகுமதி இல்லாத வீட்டு வேலைகளில் உள்ளனர். பெரும்பாலும் இளைஞர்களுக்கு தரம் குறைவான வேலைகளே கிடைக்கின்றன. பெரும்பகுதி விவசாயத்தில் வேலை செய்கின்றனர்.
- படித்தவர்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் அதிகம். 2022இல் வேலையின்மை விகிதம் சராசரி 6% என்றும் பள்ளிப்படிப்பை முடித்த இளைஞர்கள் மத்தியில் 18% என்றும், பட்டப் படிப்பு முடித்தவர்க்கு 29.1% என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. படித்த இளம் பெண்கள் மத்தியில் இன்னும் அதிகம்.
- ஆண்களில் வேலைக்கும் செல்லாமல், கல்வியிலும் இல்லாமல் பயிற்சியிலும் இல்லாதவர்கள் மொத்தத்தில் சுமார் 10%. பெண்கள் மத்தியில் இது மிக அதிகமாக கிட்டத்தட்ட 50%.
- மொத்தத்தில் இளைஞர்களில் 42% பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள்.
மனித மேம்பாடு நிறுவன அறிக்கையின் பரிந்துரைகள்
மனித வளர்ச்சிக்கான நிறுவனம் தனது ஆய்வின் அடிப்படையில் சில பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது
- உற்பத்தி வளர்ச்சி வேலை வாய்ப்பை கூட்டுவதாக இருக்கவேண்டும்
- வேலைகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும்.
- உழைப்பு சந்தையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் குறைக்கப்படவேண்டும்.
- திறன் வளர்ப்பும் வேலை சந்தை கொள்கைகளும் மேம்படவேண்டும்.
- உழைப்பு சந்தை மற்றும் இளைஞர் வேலை வாய்ப்பு பற்றி கூடுதல் தகவல்கள் பகிரப்படவேண்டும்.
நிலவும் பொருளாதார அமைப்பின் மீதும், அரசுகளின் கொள்கைகள் மீதும் வர்க்க நிலைபாட்டில் இருந்து இந்த பரிந்துரைகள் வந்ததாக கூற இயலாது!
வேலை நிலமை குறித்த ஒன்றிய அரசின் பொய்யும் புரட்டும்
மோடி அரசு ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாக அறிவித்த வாக்குறுதி, உலகெங்கும் உள்ள இந்திய கருப்பு பணத்தை மீட்டு நம் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவதாக அளித்த வாக்குறுதியை போன்றதுதான். 2012-18 காலத்தில் வேலையில் இருப்போர் எண்ணிக்கையே குறைந்தது. இது பணமதிப்பிழப்பு நடவடிக்கை, மோசமான ஜிஎஸ்டி திட்ட திணிப்பு ஆகியவற்றின் விளைவு.
பெரும் தொற்றில் நாடு சிக்கியிருந்த 2020-21 ஆண்டில் ஜிடிபி 6%க்கும் அதிகமாக சரிந்த பொழுதும், வேலையின்மை விகிதம் குறைந்ததாக மோடி அரசு கணக்கு காட்டியது. இது எதனை பிரதிபலிக்கிறது? சமூக பாதுகாப்பே இல்லாத நாட்டில், உழைப்பாளி மக்கள் வருடம் முழுவதும் வேலைக்கு செல்லாமல் இருக்க இயலாது என்ற உண்மை இதன்பின் உள்ளது. ஆனால் சராசரி வேலை நாட்களும் வருமானமும் சரிந்து வருகிறது என்பதே, கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய உழைப்பாளி மக்களின் கசப்பான அனுபவம்.
அரசு தரவுகளை திரித்து வெளியிட்டாலும், வெளியிடவே மறுத்தாலும், சில உண்மைகளை மறைக்க அதனால் இயலவில்லை. 2019 தேர்தலுக்கு முன்பாக தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு 2017-18 ஆண்டின் வேலை-வேலையின்மை அறிக்கையை சிறப்பாக ஆய்வு செய்து தயாரித்திருந்தது. தேர்தல் நேரத்தில் அரசுக்கு அது பாதகமாகி விடும் என்பதால், அதை வெளியிட ஒன்றிய அரசு மறுத்தது. அந்த ஆய்வு முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு வேலையின்மை விகிதம் கூடி இருந்ததை சுட்டிக்காட்டியது. அண்மை ஆண்டுகளில் தேசிய புள்ளிவிவிவர ஆய்வு நிறுவனங்களின் ஆய்வுகளில் ஒன்றிய அரசு தலையிட்டுள்ளது. இருந்தாலும் வேறு நிறுவனங்களும் களத்தில் உள்ளன. CMIE என்ற நிறுவனம் தொடர்ந்து வேலை-வேலையின்மை ஆய்வுகளை மேற்கொண்டு தரவுகளை வெளியிடுகிறது. CMIE விவரப்படி வேலையின்மை விகிதம் 2017-18இல் 4.6%, 20-21இல் 10%, 23-24இல் 8.1% என்றுள்ளது.
பிரச்சினை வேலையின்மை கணக்கு மட்டுமல்ல. தொழிலாளிகளின், சுய உற்பத்தியாளர்களின் வேலை நாட்கள் மட்டுமின்றி வருமானமும் முக்கியம். 2022இல் முறையான பணியில் இளைஞர்கள் பெற்ற சராசரி மாத சம்பளம் ரூ. 14,583 தான். சுயவேலையில் இன்னும் குறைவாக ரூ. 10,100 தான். அத்தக்கூலியில் ரூ. 8,315. இன்னொரு ஆய்வின்படி, 78% அத்தக்கூலி தொழிலாளிகள் பெறும் மாத ஊதியம் ரூ. 7,500 தான். பெண் தொழிலாளிகளில் வருமானமின்றி சுய வேலை செய்வோர் சதவிகிதம் 2017-18இல் 31.7% 2022-23இல் 37.5%. பெண் உழைப்பாளிகளின் வேலைவாய்ப்பு, கூலி/வருமானம் போன்றவற்றில் பெரும் முன்னேற்றம் தேவை. 2014-15 முதல் 2021-22 வரையிலான காலத்தில் விவசாயம், கட்டுமானம் மற்றும் இதர விவசாயமல்லாத தொழில்களில் உண்மைக் கூலி ஆண்டுக்கு 1%க்கும் குறைவாகத்தான் அதிகரித்தது. இவையெல்லாம் தொழிலாளர் குடும்பங்கள் கடும் வறுமையில் உள்ளதை காட்டுகிறது.
படித்தவர்கள் மத்தியில் வேலையின்மை
படித்தவர்கள் மத்தியில் வேலையின்மை என்பது மிகப்பெரிய பிரச்சினையாக முன்வந்துள்ளது. இதன் விளைவுகளை நாடு சந்தித்து வருகிறது. உழைப்பாளி மக்களை சாதி, மதம் உள்ளிட்ட அடிப்படைகளில் பிளவுபடுத்த ஆளும் வர்க்கங்களுக்கு இப்பிரச்சினை உதவுகிறது.
2022இல் உ பி பீகார் மாநிலங்களில் ஆறு மாத இடைவெளிக்குள் இரண்டு வேலை வாய்ப்பு சார்ந்த கலகங்கள் நிகழ்ந்தன. 2014 -2022 காலத்தில் ஒன்றிய அரசால் 22.06 கோடி பணி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 7.22 லட்சம் பேருக்கு பணி தரப்பட்டது. இவை 2020-21 ஆண்டில் முறையே 1.8 கோடி மற்றும் 78,000 என இருந்தன. 2021-22 இல் 1.87 கோடி மற்றும் 38,000 ஆகிய இருந்தன. நாளுக்கு நாள் நிலைமை மேலும் மோசமாவதை பார்க்கலாம்.
இதேபோல மாநிலங்களின் சில துறைகளுக்கு விண்ணப்பங்கள் மற்றும் காலி பணியிடங்கள் விவரம் (2022 ஆம் ஆண்டில்):
விண்ணப்பங்கள் காலி பணி இடங்கள்
குஜராத் 17 லட்சம், 3400;
மகாராஷ்டிரா 11 லட்சம், 18,300;
படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கிட பத்தாண்டு ஆட்சியில் மோடி தலைமையிலான ஆர்எஸ்எஸ் – பாஜக அரசு உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பதையே இவ்விவரங்கள் உணர்த்துகின்றன.
நிறைவாக
நமது நாடு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதாரத்தில் தாராளமய பாதையில் பயணித்து வருகிறது. தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய இப்பாதையில் விவசாயிகளும் தொழிலாளிகளும் சிறு குறு தொழில் முனைவோரும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். நாமெல்லாம் விரும்பும் மாற்றம் 2024 தேர்தலில் நிகழ்ந்தாலும் கடந்த பத்தாண்டு ஆட்சியின் மோசமான மதவெறி அரசியல் விளைவுகளை முற்றிலும் துடைத்தெறிய ஒருபுறம் நாம் போராட வேண்டியிருக்கும். அதேசமயம் மோடி அரசின் அதிதீவிர தாராளமய கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை நிராகரித்து, உழைக்கும் மக்களுக்கும் நாட்டு வளர்ச்சிக்கும் அத்தியாவசியமான இடது ஜனநாயக மாற்று கொள்கைகளை முன்னெடுத்துச்செல்ல வேண்டிய பெரும் சவால் நம்முன் உள்ளது. இந்த கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ள விவரங்களும் வாதங்களும் மாற்றுப் பாதையின் அவசியத்தை நமக்குக் கோடிட்டுக் காட்டுகின்றன.
இக்கட்டுரைக்கு பயன்பட்ட கட்டுரைகள்/ஆய்வறிக்கைகள்
- India Employment Report 2024 published by the Institute for Human Development, New Delhi
- Neeraj Jain’s three-part article in Janata Weekly:
Part 1: The Economic Situation in 2023-24: Is India Becoming a $5 Trillion Economy Soon?
Part 2: The Economic Situation in 2023-24: India’s Appalling Unemployment Crisis, accessible at https://countercurrents.org/2024/04/the-economic-situation-in-2023-24-part-2-indias-appalling-unemployment-crisis/
Part 3: The Economic Situation in 2023–24: India’s Grim Poverty Situation, accessible at https://countercurrents.org/2024/04/the-economic-situation-in-2023-24-part-3-indias-grim-poverty-situation/
You may also like
1 comment
Comments are closed.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

கிளைகளில் வாசித்து விவாதிதக்கவேண்டிய கட்டுரை, பொருளாதாரத்தை எப்படி
பார்க்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது, மாநிலங்களுக்கு
ஓரவஞ்சகம் என்பதை தவிற வேறுபிரச்சினை இலலை என்பது போல் பரப்பும் ஊடக
சித்தரிப்புகளின் மாயையிலிருந்து விடபட உதவும்