
செப்.2 – ஹோ சி மின் நினைவுதினம்: தனித்துவமானதொரு புரட்சியாளர்
வீ.பா.கணேசன்
உலகில் இதுவரை நடைபெற்ற புரட்சிகளிலேயே, தனித்துவமான ஒன்றாகத் திகழ்வது வியட்நாம் புரட்சியாகும். இதற்கான அடிப்படைக் காரணம், வியட்நாம் புரட்சி என்பது, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய இரு பெரும் ஏகாதிபத்திய நாடுகளின் ராணுவங்களை நேரடியாக எதிர்த்தும், இரண்டாம் உலகப் போரின்போது இந்தோசீனப் பகுதியைக் கைப்பற்றிய ஜப்பானிய ஆக்கிரமிப்புப்படைகளை எதிர்த்தும் தீர்மானகரமான வகையில் ஆயுதம் தாங்கிப் போராடி, வெற்றிவாகை சூடிய மகத்தான ஒரு புரட்சியாகும். அத்தகையதொரு புரட்சிக்குத் தலைமையேற்று நடத்தி, வழிகாட்டிய ஹோ சி மின் தன்னளவில் தனித்துவமான புரட்சியாளராகவும் திகழ்ந்தவர்.
பிரான்ஸின் கீழிருந்த வியட்நாமில், பிரான்ஸ் காலனி ஆட்சியாளர்களுக்கு உதவும் வகையில் செயல்பட்ட, மிகுந்த அதிகாரம் மிக்க ஒரு தந்தைக்கு 1890ஆம் ஆண்டில் நிகுயென் சின் குங் என்ற இயற்பெயருடன் பிறந்தவர் ஹோ. இதில் நிகுயென் என்பது வியட்நாம் அரச குலத்தைச் சார்ந்த குடும்பத்தினர் என்பதைக் குறிப்பதாகும். பின்னாளில் தனது புரட்சி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், சுமார் 50 முதல் 200 புனைபெயர்களில் அவர் உலகம் முழுவதிலும் செயல்பட்டு வந்தபோதிலும், இறுதியில், ஹோ சி மின் என்ற பெயரே நிலைத்து நின்றது. வியட்நாம் மக்களாலும், உலகம் முழுவதிலும் உள்ள புரட்சிகர இளைஞர்களாலும் ‘ஹோ மாமா’ (அங்கிள் ஹோ) என்றே அவர் அழைக்கப்பட்டு வந்தார்.
அவரது குடும்பச் செழிப்பின் காரணமாக பிரெஞ்சு, ஆங்கிலம் நன்கு கற்கும் வாய்ப்பைப் பெற்றார். 1911ஆம் ஆண்டில் ஒரு பிரெஞ்சுக் கப்பலில் சமையல்காரரின் உதவியாளராக வேறு ஒரு பெயரில் தன் பயணத்தைத் தொடங்கிய ஹோ, 1917ஆம் ஆண்டு வரை உலகின் பல நாடுகளுக்கும் பயணம் செய்தார். 1912-13ஆம் ஆண்டுகளில் அவர் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் புகழ்பெற்ற ஒரு ஓட்டலில் ரொட்டி தயாரிப்பவராக பணிபுரிந்தார். 1913-1919 காலப்பகுதியில் பிரிட்டனில் ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வந்தார். இக்காலப்பகுதியில் வியட்நாமில் இருந்து வந்து குடியேறிய இளைஞர்களுடன் தொடர்பு கொள்வதில் தீவிரம் காட்டினார்.
1917ஆம் ஆண்டிலிருந்து பிரான்ஸில் வசிக்கத் தொடங்கிய ஹோ, விடுதலை உணர்வுமிக்க வியட்நாம் இளைஞர்களை அணிதிரட்டத் தொடங்கினார். இதற்கென ஒரு பத்திரிக்கையையும் நடத்தி வந்தார். இந்தப் பத்திரிக்கையில் நிகுயென் அலி குவாக் என்ற புனைபெயரில், பிரான்ஸின் ஆதிக்கத்தில் இருந்து வியட்நாம் விடுதலை பெற வேண்டியதன் அவசியம் குறித்து உணர்ச்சி பொங்கும் கட்டுரைகளை எழுதி வெளிநாடுகளில் வசிக்கும் வியட்நாம் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்து வந்தார்.
முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்து, போரில் வெற்றி பெற்ற நாடுகள், தோல்வியுற்ற நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்த மற்ற காலனி நாடுகளை தங்களுக்குள் பங்குபோட்டுக் கொள்ள பிரான்ஸின் வெர்செய்ல்ஸ் நகரில் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, இந்த இளைஞர்கள் குழுவின் சார்பில் ஒரு வேண்டுகோள் எழுத்துபூர்வமாக வைக்கப்பட்டது. அதில் வியட்நாம் மக்களின் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், பிரான்ஸின் காலனியாதிக்கத்திலிருந்து வியட்நாமை விடுவித்து, சுயேச்சையான ஓர் அரசை அங்கு உருவாக்குவதை உறுதி செய்ய வேண்டுமென்றும் அவர்களால் கோரிக்கை எழுப்பப்பட்ட போதிலும், மேற்கத்திய நாடுகள் அதைச் சற்றும் மதிக்கவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பாக, இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனுக்கும், பிரான்ஸ் நாட்டுப் பிரதமர் க்ளெமென்க்யூவிற்கும் இக்குழுவினர் கடிதம் எழுதியிருந்தனர். இத்தகைய முயற்சிகளே, பின்னாளில் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான உறுதியான, வீரஞ்செறிந்த போரை மேற்கொள்ள ஹோவிற்கு உத்வேகம் அளித்தது. அதுவே வியட்நாம் விடுதலையின் முன்னணி வீரராகவும் அவரை முன்னிறுத்தியது.
தாய்மொழியான வியட்நாமிய மொழி தவிர, பிரெஞ்சு, ஆங்கிலம், ருஷ்யன், சீன மொழியில் இரண்டு பிரிவுகளான மாண்டரீன், காண்டனீஸ் ஆகிய மொழிகளை நன்கு அறிந்து பயன்படுத்துபவராகவும் ஹோ இருந்தார். வியட்நாமிய, பிரெஞ்சு, சீன மொழிகளில் தொடர்ந்து பல நூல்களையும் அவர் எழுதினார்.
ஹோ, தன் வாழ்நாளில், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவராக, மூன்றாம் அகிலத்தின் தலைவர்களில் ஒருவராக, இந்தோ சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனராக, பின்னர் வியட்நாம் தொழிலாளர் கட்சி, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் நிறுவனராகவும் திகழ்ந்ததன் காரணமாக, உலகின் தனித்துவம் மிக்க தலைவர்களில் ஒருவரானார்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் வியட்நாமின் விடுதலைக்கான ஆதரவைத் திரட்டி விட்டு 1941ஆம் ஆண்டில் தாய்நாட்டிற்குத் திரும்பிய ஹோ, இரண்டாம் உலகப்பெரும்போரின்போது வியட்நாம் உள்ளிட்ட இந்தோசீனப் பகுதியைக் கைப்பற்றியிருந்த ஜப்பானிய படைகளை விரட்டியடிக்க வியட் மின் என்ற கெரில்லா படைகளை நிகுயென் கியாப் – உடன் இணைந்து உருவாக்கினார்.
இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பிறகு நேச நாடுகள் பல்வேறு திட்டங்களைத் தீட்டி வியட்நாமை துண்டாடின. இதன் விளைவாக, வட வியட்நாமில் ஹனாய் -ஐ தலைநகராகக் கொண்டு 1945 செப்டெம்பர் 2ஆம் நாள் உருவான வியட்நாம் ஜனநாயகக் குடியரசின் தலைவராக ஹோ தேர்ந்தெடுக்கப்பட்டார். தன் வாழ்நாள் முழுவதும் வடக்கு- தெற்கு ஆகிய இரண்டு வியட்நாம்களை ஒன்றிணைக்கப் பாடுபட்டார். மறுபுறத்தில், தெற்கு வியட்நாமை கைப்பற்ற வியட் மின் கெரில்லா படைகள் லாவோஸ், கம்போடியா எல்லைப் பகுதிகளில் முகாமிட்டு, படிப்படியாக கிராமங்களை தங்கள் வசமாக்கிக் கொண்டு வந்தனர். 1954ஆம் ஆண்டில் டை பின் பூ என்ற இடத்தில், ஜெனரல் கியாப்-இன் விடுதலைப்படை, எதிரிகளின் மீது நம்புவதற்கு அரிய வகையில் தாக்குதல் தொடுத்து, பிரான்ஸ் நாட்டுப் படைகளை திக்குமுக்காடச் செய்து சரணடைய வைத்தது. இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் நாட்டின் ஆட்சி முற்றிலுமாக முடிவுக்கு வந்தது.
அதன்பிறகு, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் எடுபிடியாக இருந்த தெற்கு வியட்நாம் அதிபர் இளவரசர் டியெம்-உம் ஒரு கட்டத்தில் படுகொலை செய்யப்பட, அதன் விளைவாக உருவான குழப்பமான சூழ்நிலையில், 1964ஆம் ஆண்டு இறுதியில் அமெரிக்கப் படைகள் தெற்கு வியட்நாமில் நிலை கொண்டதோடு, வட வியட்நாமின் மீது இடையறாது குண்டுகளை வீசி பேரழிவை ஏற்படுத்தி வந்தன.
அமெரிக்காவின் இத்தகைய ராணுவத் தாக்குதலை நிறுத்தி, இரண்டு வியட்நாம்களையும் ஒன்றுபடுத்தும் முயற்சியில் தொடர்ந்து சர்வதேச அளவில் செயல்பட்டு வந்த ஹோ சி மின், 1969 ஆம் ஆண்டு செப்டெம்பர் 2 அன்று உயிர்நீத்தார். அமெரிக்க ஏகாதிபத்திய ராணுவத்தை எதிர்த்த வியட் மின் கெரில்லா வீரர்களின் அயராத போராட்டங்களுக்குப் பிறகு, அவரது கனவு, இறுதியில் 1975 ஏப்ரல் 30ஆம் தேதியன்றுதான் நனவானது. அமெரிக்காவின் இந்த வெறியாட்டத்தை எதிர்த்து உலகமெங்கும் குரல்கள் எழுந்தன. இந்தியாவிலும் ‘உன் பெயரும் என் பெயரும் வியட்நாம்!’ என்ற முழக்கம் எதிரொலித்தது. அமெரிக்காவிலும், இந்த வியட்நாம் போருக்கு எதிராக எண்ணற்ற நகரங்களில் இளைஞர்கள் அணிதிரண்டு போராடினார்கள். அமெரிக்காவின் ஏகாதிபத்திய நடவடிக்கையை கண்டித்த இவர்களில் பலரும் பின்னாளில் கம்யூனிஸ்டுகளாகவும் உருவெடுத்தார்கள் என்பதை, மறைந்த தோழர் மைதிலி சிவராமன் போன்றோரின் வாழ்க்கை நமக்கு எடுத்துக் கூறுகிறது.
அமெரிக்கப் படைகள் இறுதியில் தோல்வியுற்று, சைகோன் நகரை விட்டு காலி செய்த அன்றைய நிகழ்வை ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளரான டென்னிஸ் வார்னர் என்பவர் மிக அழகாகச் சித்தரித்திருந்தார்: “சைகோன் நகரத் தெருக்களில் வட வியட்நாம் படைவீரர்கள் அணிவகுத்துச் சென்றபோது, அங்கே கண்ணுக்குப் புலப்படாத ஒரு தலைவர் அவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தார் என்பதைப் போலத்தான் தோன்றியது. அணிவகுத்து வந்த அந்தப் படை வீரர்களோ “ஹோ மாமா! நீங்களும் எங்களோடு அணிவகுத்து வருகிறீர்கள்!” என்ற புகழ்பெற்ற பாடலை பாடிக்கொண்டே வந்தார்கள்.”
மக்களின் ஆதரவோடு உலக ஏகாதிபத்தியங்களுக்கு சவால் விட்டு, ராணுவ ரீதியாக அவற்றைத் தோல்வியுறச் செய்த, புரட்சிகர வழிகாட்டியான தோழர் ஹோ சி மின் அவர்களின் நினைவிற்கு மார்க்சிஸ்ட் இதழ் தன் அஞ்சலியை செலுத்துகிறது.
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
