மானுட எதிரி ஏகாதிபத்தியம்; வர்க்கப் புரட்சியே தீர்வு !
என். குணசேகரன்
ரஷ்ய சோசலிசப் புரட்சி இன்றைக்கும் பல பாடங்களை மனித சமூகத்திற்கு கற்றுத் தருகிறது. முதலாளித்துவம் உலகளாவிய ஒரு அமைப்பு முறையாக செயல்பட்டு வந்தாலும் அது சமச்சீரற்ற முறையில் வளர்கிறது.
உலகின் பல பிரதேசங்கள் வளர்ச்சியில் பின்தங்கி, வறுமை, வேலையின்மை பிரச்சனைகளால் கடும் துயரங்களை அனுபவித்து வருகின்றன. ஆனால் உலகின் ஒரு பகுதி மேலும் மேலும் செல்வக் குவிப்புக்கான தளங்களாக உள்ளன. ஒரு சிறு முதலாளித்துவ கூட்டம் பெரும்பான்மை மக்களை சுரண்டி வேட்டையாடி வருகிறது. இந்த சமச்சீரற்ற வளர்ச்சி பல பகுதிகளில் புரட்சிகர எழுச்சிகளை ஏற்படுத்துகிறது.
1917நவம்பரில் மானுட வரலாற்றில் ஒரு திருப்பமாக ஏற்பட்ட ரஷ்யப் புரட்சியும் உலக முதலாளித்துவத்தின் ஒரு பலவீனமான பகுதியில் வெடித்து எழுந்தது. முதலாளித்துவத்தின் சமச்சீரற்ற வளர்ச்சி என்பது ஒரு விதியாகவே நிகழ்ந்து வருகிறது. முதலாளித்துவத்தின் இன்றைய கட்டமான ஏகாதிபத்தியமும் அந்த விதிக்கு உட்பட்டு இயங்கிவருகிறது. எனவே புரட்சிகர எழுச்சிக்கான வாய்ப்புகள் மங்கிவிடவில்லை. மாறாக, மேலும் மேலும் சோசலிசத்திற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்து வருகின்றன.
ஏகாதிபத்தியத்தின் தோற்றம்
லெனின் 1916- ஆம் ஆண்டில் சூரிச் நகரில் தலைமறைவு வாழ்க்கையின்போது “ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சகட்டம்” என்ற நூலை எழுதினார். அதில் கடந்த நூற்றாண்டில் முதலாளித்துவம் வந்தடைந்த புதிய கட்டத்தினை லெனின் விளக்கியிருந்தார்.
முதலாளித்துவத்தின் வளர்ச்சி நீண்ட வரலாறு கொண்டது. வெகு நீண்ட பாதையைக் கடந்து தற்போதைய நிலைக்கு இன்றைய முதலாளித்துவம் வந்துள்ளது. பல வளர்ச்சிக் கட்டங்களை தாண்டித்தான் இன்றைய முதலாளித்துவம் உருப்பெற்றது.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியது. இதனை லெனின் ஏகாதிபத்திய கட்டம் என்று விவரித்தார். இந்தக் கட்டத்தில் உலகம் முழுவதும் அரசியல், பொருளாதார வளர்ச்சி பல வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாக இருந்தது.
அரசியல் வளர்ச்சியை எடுத்துக் கொண்டால் பல நாடுகளில் ஜனநாயக அமைப்பு முறையும், பல நாடுகளில் சர்வாதிகார முறையும் இருந்தன. பல நாடுகளில் ஒரு ஜனநாயக அமைப்பு வளர்ச்சி பெறாத சூழலும் இருந்துவந்தது. பொருளாதாரத்திலும் வேறுபாடுகள் இருந்தன.சில நாடுகள் பெரும் வளர்ச்சி பெற்றிருந்தன. பல நாடுகள் வளர்ச்சி குன்றிய நிலையில் இருந்தன.
உலகின் முன்னணி நாடுகள் தங்களது பொருளாதார ஆதிக்கத்தை வெளிநாடுகளில் வலுப்படுத்திக் கொள்ளவும் , நாட்டின் எல்லைகளை பங்கு போட்டுக் கொள்ளவும் முனைந்தன. இதற்கான நாடுகளின் கூட்டணி அமைந்தன. இவை பொருளாதார ஆதிக்கத்திற்கும் பல நாடுகளை ஆக்கிரமிப்பதற்கும் ஏற்படுத்திக்கொண்ட கொள்ளைக்கார கூட்டணிகள். இந்த கூட்டணிகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான போட்டி , இரண்டு உலகப் போர்களுக்கு இட்டுச் சென்றது.
கடந்த இருபதாம் நூற்றாண்டின் முதல் ஐம்பது ஆண்டுகளில் நிகழ்ந்தளுக்கு இரண்டு உலகப் போர்களின் பாதிப்பை ஆசிய நாடுகளும் , ஏழை நாடுகளும் எதிர்கொண்டன.
கடுமையான வறுமையும், மோசமான பொருளாதார நிலைமைகளும் அந்த நாடுகளை வாட்டி வதைத்தன. போர்களால் உலகத்தின் முன்னேறிய நாடுகளின் முதலாளித்துவ வர்க்கங்கள் அதிகமாக பலன் பெற்றன.
சில நாடுகள் புரட்சிகரமாக உலக முதலாளித்துவ பிடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டன. அவை பொருளாதாரத்தில் வளர்ச்சியடையாத நாடுகளாக இருந்தாலும், சோசலிச வளர்ச்சிப் பாதையை பின்பற்றத் தொடங்கின. அந்த சோஷலிச நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் காலனி ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட முன்னேற்றம் கண்டது.
உலகில் முதலாளித்துவ முகாமிற்கும் சோசலிச முகாமிற்கும் முரண்பாடுகள் தீவிரமடைந்தன. இதனால், உலக முதலாளித்துவம் கடும் நெருக்கடிகளுக்கு ஆளானது. எனினும் முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. 1980-90-களில் நவீன தாராளமய காலம் துவங்கியது. இந்தக் கொள்கைகள் முதலாளித்துவ மூலதன வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமைந்தன.
சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு ஏகாதிபத்திய உலக மேலாதிக்கம் மேலும் வலுப்பெற்றது. பொருளாதார சுரண்டல் மட்டுமல்லாது இயற்கை வளங்களை கொள்ளையடித்தல், பாட்டாளி வர்க்க புரட்சி மீண்டும் எழுந்திடாமல் தடுக்க வலதுசாரி, பிற்போக்கு சக்திகளை வலுப்படுத்துவது, இன்றுள்ள சீனா உள்ளிட்ட சோசலிச நாடுகளுக்கு எதிராக பல நடவடிக்கைகளையும், பல கூட்டணிகளையும் உருவாக்குவது என பல வழிகளில் அமரிக்கா உள்ளடங்கிய உலக ஏகாதிபத்தியம் தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த இடைவிடாது முயற்சித்து வருகிறது.
ஏகாதிபத்தியத்தின் இயல்புகள்
லெனின் தனது ஏகாதிபத்தியம் நூலின் ஏழாவது அத்தியாயத்தில் ஏகாதிபத்தியத்தின் ஐந்து இயல்புகளை விளக்குகிறார்.
1) உற்பத்தியும் மூலதனமும் ஒன்றுகுவியும் நிலை வளர்ந்து, ஏகபோகங்கள் உருவாகின்றன. இவை பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக வளர்கின்றன.
2) வங்கி மூலதனம் தொழில்துறை மூலதனத்துடன் ஒன்று சேர்கின்றன. இந்த “நிதி மூலதனம்” அடிப்படையில் நிதியாதிக்கக் கும்பல் உருவாகிறது.
3) அதுவரை முக்கியத்துவம் கொண்ட சரக்கு ஏற்றுமதி என்ற நிலையிலிருந்து மாறி, மூலதன ஏற்றுமதி முக்கியத்துவம் பெறுகிறது.
4) சர்வதேச அளவில் ஏகபோக முதலாளித்துவக் கூட்டுகள் உருவாகின்றன; அவை உலகையே தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்கின்றன.
5) முன்னணி முதலாளித்துவ அரசுகள் உலகப் பரப்பினையே தங்களுக்குள் பங்குபோட்டுக் கொள்கின்றன.
இது கடந்த நூற்றாண்டில், நூற்றாண்டின் துவக்கத்தில் ஏகாதிபத்தியம் வளர முற்பட்ட சூழலில், அதன் இயல்புகளைப் பற்றி லெனின் வழங்கியுள்ள ஆய்வு. அவர் குறிப்பிட்டுள்ள அந்த ஐந்து அடிப்படை இயல்புகளும் இன்றைக்கும் நீடிக்கிறதா? இன்றைய ஏகாதிபத்தியத்திற்கும் அவை பொருந்துவதாக உள்ளதா? மார்க்ஸ் முதலாளித்துவ இயக்கத்தையு ஆராய்ந்து விளக்கியது போன்று, அவருக்குப் பிறகு லெனின், முதலாளித்துவத்தின் புதிய வளர்ச்சிப் போக்குகளை ஆராய்ந்து விளக்கினார். இவர்கள் வகுத்தளித்த பாதையில் இன்றைய ஏகாதிபத்தியத்தையும், அதன் இயல்புகளையும் அறிதல் அவசியம். ஏனெனில், முதலாளித்துவத்தை வீழ்த்தி, உழைக்கும் வர்க்கத்தின் அதிகாரத்தை நிலைநாட்டவும், சோசலிச மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் இந்தப் புரிதல் மிக அவசியமானது.
லெனின் குறிப்பிட்ட ஏகாதிபத்தியத்தின் அந்த ஐந்து இயல்புகளும் இன்றைய ஏகாதிபத்தியத்திற்கும் பொருந்தும் ; எனினும் கடந்த நூற்றாண்டிற்கும், இந்த 21-வது நூற்றாண்டிற்கும் இடையில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. புதிய சூழல், புதிய நிலைமைகளை உள்வாங்கி, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை சோஷலிச சக்திகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
லெனின் உற்பத்தியும் , மூலதனமும் மையப்படுவது ஏகாதிபத்தியத்திற்குரிய தன்மையாக குறிப்பிடுகிறார். தீவிரமான போட்டி முதலாளித்துவ சமூகத்தில் நடப்பதால் உற்பத்தியும் மூலதனமும் மையப்படுகிறது. போட்டியினால் பெரிய சில கம்பெனிகள் உற்பத்தியின் குவி மையமாக மாறுகின்றன. இவ்வாறு மையப்படுவது ஒரு கட்டத்தில் தொழில் ஏகபோகங்களை உருவாக்குகிறது. சுதந்திரமான போட்டி என்ற இடத்தில் ஏகபோக கூட்டணிகள் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் நிலை வருகிறது. இந்த ஏகபோகங்கள் பொருளாதார வாழ்வில் நிர்ணயிக்கும் சக்திகளாக விளங்குகின்றன. இதற்கு லெனின் தனது காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்து விளக்குகிறார்.
மூலதனக் குவியல்
லெனின் காலத்திற்குப் பிறகு முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன.1970-ஆண்டுகளின் துவக்கத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக கடும் நெருக்கடியையும் தேக்கத்தையும் உலகப் பொருளாதாரம் சந்தித்தது. அதன் வளர்ச்சி விகிதமும் வீழ்ந்தது. உள்நாட்டு சந்தை வீழ்ச்சியால் ஏகபோக மூலதனம் வெளிநாடுகளில் வாய்ப்புக்கள்ளை தேய்ந்த நிலையில்யாது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, தகவல் தொடர்பு வளர்ச்சி ஆகியவற்றின் உதவியுடன் நேரடி அந்நிய முதலீட்டு வாய்ப்புக்களை பயன்படுத்தி முதலாளித்துவம் புதிய வளர்ச்சியை அடைந்தது. உற்பத்தியும் விநியோகமும் மேலும் கடந்த காலங்களை விட மேலும் சர்வதேசமயமானது.
மேலும் மேலும் மூலதனம் குவிந்து, மிகப்பெரும் பிரம்மாண்டமான, ஏகபோக, பன்னாட்டு கார்ப்பரேஷன்கள் வளர்ந்தன. அவற்றில் பல, நாடுகள் பலவற்றின் சொத்துக்களை விட அதிக சொத்து படைத்ததாக வளர்ச்சி பெற்றன. உண்மையில், சர்வதேச, ஏகபோக முதலாளித்துவத்தின் இன்றைய பிரதிநிதிகளாக இந்த பன்னாட்டு கார்ப்பரேஷன்கள் விளங்குகின்றன.
உலக அளவில் இந்த வகையிலான கார்ப்பரேஷன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவை நேரடி அந்நிய முதலீட்டுக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தி தங்களுடைய கிளைகளையும், ,இணைப்பு நிறுவனங்களையும் உலகம் முழுதும் அமைத்து செயல்படுகின்றன.1980-லிருந்து 2008 வரை உலக பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்திலிருந்து 82 ஆயிரமாக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு கிளை நிறுவனங்களின் எண்ணிக்கையும் சேர்த்துப் பார்த்தால் 35 ஆயிரத்திலிருந்து 8 லட்சத்து பத்தாயிரம் வரை உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும்பான்மையான நாடுகள் பெரும் பன்னாட்டு கார்ப்பரேஷன்களின் சர்வதேச உற்பத்தி மற்றும் வர்த்தக இணைப்புகளில் இணைந்துள்ளனர். உலகப் பெரும் கார்ப்பரேஷன்களின் இந்த வளர்ச்சி ஏகாதிபத்தியத்தின் நவீன கட்டமாக உருவாகியுள்ளது. இது மூலதனத்தின் சர்வதேச தன்மையை வலுப்படுத்தியுள்ளது.,உற்பத்தி மற்றும் மூலதனம் மேலும் மேலும் ஓர் இடத்தில் குவியும் நிலை மிகப்பெரும் அளவிற்கு தீவிரமடைந்துள்ளது. வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் சில ஆயிரம் பன்னாட்டு கார்ப்பரேஷன்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பன்னாட்டு ஏகபோக மூலதனம் மேலும் மேலும் குவிந்து பெருகி வருகிற நிலையில் ஒரு பன்னாட்டு கார்ப்பரேட் பேரரசு உருவாகியுள்ளது.
பன்னாட்டு முதலாளித்துவ கார்ப்பரேஷன்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவை மிகப்பெரும் பலம் வாய்ந்தவையாக விளங்குகின்றன. அவை வளர்ச்சிப் பணிகளில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. புதிய தொழில்நுட்பங்களின்ள் பயன்பாடு, சந்தை செயல்பாடு, இயற்கை வளங்கள், நிதியாதாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இதனால்தான் உற்பத்தி பொருட்கள் மற்றும் அவற்றின் விநியோகத்தில் ஏகபோக கட்டுப்பாடும், போட்டியில் பெரும் கார்பரேஷன்களுக்கு சாதகமான நிலையும் உள்ளது. இந்த பெரும் கார்ப்பரேஷன்கள் அரசு அதிகாரம், மற்றும் அரசு நிறுவனங்களுடன் வலுவான கூட்டணி கொண்டுள்ளன.
உலகமயமாக்கலும், ஏகபோக மூலதனம் நிதிமயமாக்கலும் இந்த கம்பெனிகளின் சொத்துக் குவியலுக்கு உதவுகின்றன. எடுத்துக்காட்டாக, வால்மார்ட் நிறுவனம் உலகின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம். 2017- ஆம் ஆண்டு அதனுடைய மொத்த வருமானம் 500 பில்லியன் டாலரை தாண்டியது. இது பெல்ஜியம் நாட்டினுடைய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி தொகையைவிட மிக அதிகம்.
இந்த கம்பெனிகளின் கிளைகளின் பொருளாதார செயல்பாடுகள் உலகம் முழுவதும் பல மையங்களில் பரவியிருந்தாலும், அதிக அளவிலான லாபம் வளர்ந்த நாடுகள் சிலவற்றுக்கு மட்டுமே சென்று சேர்கிறது. ஏனென்றால் முன்னணி பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் முன்னேறிய நாடுகளை மையப்படுத்தியே உள்ளன. 2017- ஆம் ஆண்டில் உலகின் முன்னணி 500 கம்பெனிகளில் 250 கம்பெனிகள் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சார்ந்த பெரும் கார்ப்பரேஷன்கள். உலகின் முதல் 100 பன்னாட்டு கம்பெனிகளில் மூன்றில் ஒரு பங்கு முன்னணி நிறுவனங்கள் இந்த நாடுகளைச் சார்ந்தவை.
கடந்த 30 ஆண்டுகளாக அனைத்து நாடுகளும் முதலீட்டை ஊக்குவிப்பதற்கான கொள்கை முடிவுகளை எடுத்துள்ளன. அன்னிய நேரடி முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளை அவை தளர்த்தி உள்ளன. இந்திய நாட்டில் 1990-களில் கொண்டுவரப்பட்ட நவீன தாராளமயம் இதற்கோர் எடுத்துக்காட்டு. பிரதமர் மோடி ஆட்சி காலத்தில் இன்றுவரை பொருளாதாரத்தை அந்நிய பன்னாட்டு கம்பெனிகளுக்கு திறந்து விடுகிற கொள்கைகள் வேகமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. சமீபத்திய பணமயமாக்கல் கொள்கை, பொதுத்துறை நிறுவனங்களை உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கை ஆகியவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அனைத்து நாடுகளிலும் மிகப்பெரிய அளவிலான தனியார்மயமாக்கல் இன்றுவரை தீவிரமாக நடந்து வருகிறது. இதன் விளைவாக மூலதனக் குவியல் மேலும் அதிகரித்து வந்தது. பல கம்பெனிகள் மேலும் மேலும் பெரிய கம்பெனிகளுடன் இணைக்கப்பட்டன. சிறிய, நடுத்தர கம்பெனிகள் பன்னாட்டு கம்பெனிகளுடன் இணைய வேண்டியந்திடும் கட்டாயத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது. பல சிறிய நடுத்தர கம்பெனிகள்ளில் திவாலாகி மூட வேண்டிய நிலை ஏற்பட்டன.
பெரும் கார்ப்பரேட்டுகளின் மேலாதிக்கம்
ஒவ்வொரு தொழிலிலும் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள் மேலாதிக்கம் செலுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, விதை, பூச்சிக்கொல்லி மருந்தின் உலக சந்தை, ஆறு பன்னாட்டு கம்பெனிகளின்ள் கட்டுப்பாட்டில்டுக்குள் உள்ளது. டூபாண்ட், மான்சான்டோ, சின்ஜென்டா, பாயர், டவ், பிஎஎஸ்எப் ஆகிய கம்பெனிகள் 2015 விவரங்கள் அடிப்படையில், 75 சதம் பூச்சிக்கொல்லி மருந்தின் உலக சந்தையையும், 63 சதம் விதைக்கான உலக சந்தையையும் மும், 75 சதம் உலக தனியார் ஆராய்ச்சியையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தன. 10 பெரும் பன்னாட்டு கம்பெனிகள் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களில் உலக சந்தையில் 47 சதம் அளவிற்கு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன.
இந்த வகையில் தனியார் பகாசுர முதலாளித்துவ கம்பெனிகள் அதிக அளவிலான சமூக சொத்தினை கையகப்படுத்திக் கொண்டு வரும் நிலையில், அவை தொழிலாளர் உழைப்பின் மீது கடுமையான கட்டுப்பாட்டை செலுத்துகின்றன. அத்துடன், சுரண்டலையும் மேலும் மேலும் தீவிரப்படுத்தி வருகின்றன. இது உலக அளவில் மூலதனக் குவியலை அதிகரிக்கிறது. உலக அளவில் ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரித்து ஏற்றத்தாழ்வு தீவிரமடைந்துள்ளது.
பெரும் கம்பெனிகளின் மூலதனக் குவியல் அதிகரிப்புக்கு முக்கிய காரணம், குறைந்த ஊதிய செலவில் உலக அளவில் தொழிலாளர் உழைப்பு கிடைப்பதுதான். பன்னாட்டு கம்பெனிகள் சிறந்த முறையில் வலுவான அமைப்பாக செயல்படுகின்றன. உலக உழைக்கும் மக்களால் ஒன்று சேர்வதற்கும், தங்களுடைய உரிமைகளை பாதுகாப்பதற்கும் வாய்ப்பு இல்லாமல் உள்ளது. கடந்த பல பத்தாண்டுகளாக பன்னாட்டு கம்பெனிகள் தங்களது தொழில்களை வளரும் நாடுகளிலும், வளரும் ஏழை நாடுகளிலும்ல் அமைத்தன. அங்கு வேலையில்லாப் பட்டாளம் அதிக அளவில் இருப்பதால், குறைந்த ஊதியத்திற்கு ஆட்கள் கிடைத்து வருகின்றனர். இந்த கம்பெனிகளில் பொதுவாக குறைந்த ஊதியம், கடுமையாக வேலை வாங்குவது, அதிக வேலை நேரம், மோசமான வேலைச் சூழல் போன்ற கொடுமையான நிலைமைகள் உள்ளன.
வளரும் நாடுகளின் அரசாங்கங்களை தங்களது கைக்குள் போட்டுக் கொண்டு தங்களது மூலதன தேவை மற்றும் முதலீட்டுக்கு ஏற்ற கொள்கைகளை பின்பற்ற தூண்டுகின்றனர். சர்வதேச முதலீடுகள் வழியாக மொத்த உள்நாட்டு வளர்ச்சியை பெருக்கிடலாம் என்ற நோக்கில் ஏழை நாடுகளின் அரசாங்கங்கள் இந்த சூழ்ச்சிக்கு பலியாகின்றனர். இதற்கு விலையாக தங்களது மக்களுக்கான சமூக நல திட்டங்களை குறைப்பது, தொழிலாளர் உரிமைகள் பறிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அத்துடன் உள்நாட்டு வெளிநாட்டு காப்பரேட் கம்பெனிகளுக்கு ஏராளமான வரிச்சலுகைகள், கடன் ஏற்பாடு போன்றவற்றை இந்த அரசாங்கங்கள் உறுதி செய்கின்றன. இத்தகையந்த மக்கள் விரோத நடவடிக்கைகள் இந்தியாவிலும் நடந்து வருவது கண்கூடானது. இதனால் இந்தப் பெரும் கம்பெனிகள் கொள்ளை லாபம் அடிக்கின்றன. அமெரிக்க கம்பெனிகளுக்கு கிடைக்கும் மொத்த லாபத்தில் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் இலாபம் 1950-இல் 4 சதம் மட்டுமே இருந்தது ஆனால் 2019இல் இது 29 சதமாக உயர்ந்து, இன்று பெரும் கொள்ளை லாபமாக வடிவெடுத்துள்ளது.
குறைந்த எண்ணிக்கையிலான பன்னாட்டு வங்கிகள் உலகப் பொருளாதாரத்தை ஆதிக்கம் செலுத்துகின்றன. நிதி மூலதன கூட்டமும் அவர்களின் ஏஜெண்டுகளும் வர்த்தகம் மற்றும் முதலீடுகளின் விதிகளை நிர்ணயிப்பவர்களாக உள்ளனர். பல பொருளாதார நிபுணர்களும் உலக நிதி மூலதனத்தின் குரலாக தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்வார்கள். உலகமயமாக்கல், நிதிமயமாக்கல் போன்றவற்றிற்கு ஆதரவாக கருத்துக்களை வெளிப்படுத்தி, ஏகபோகங்கள் பல நாடுகளின் பொருளாதாரத்தில் மேலாதிக்கம் செலுத்த அவர்கள் உதவுகின்றனர். நிதி ஏகபோக மூலதனம் ஊக வணிகத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு உடனடி லாப வேட்டையை துரிதப்படுத்துகிறது.
மதிப்பிழந்த ஜனநாயகம்
கடந்த 30 ஆண்டுகளில் நிதி மூலதனம், தொடர்ச்சியான தொழில்மயத்தை தடுத்து வந்துள்ளது. இதனால் உற்பத்தி சார்ந்த முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறைந்து போனது. பெரிய கம்பெனிகளின் மூலதனம் நிரந்தர தொழில் முதலீட்டிலிருந்து மாறி, அதிகமாக ஊக வணிக நிதி பரிமாற்ற செயல்பாடுகளாக மாறின.
மக்களின் வாக்குகள், ஜனநாயக அமைப்பு முறை எதுவுமே பெரும் கம்பெனிகளின் கொள்ளை லாபத்திற்கு தடையாக இருப்பதில்லை. உண்மையில், அமெரிக்காவின் கொள்கைகளை நிர்ணயிப்பது வால் ஸ்ட்ரீட் நிதி மூலதன கும்பல் மற்றும் ராணுவ தொழில் கம்பெனிகள்தான். அவற்றின் நலன்கள்தான் நாட்டின் நலன்களானாக முன்னிறுத்தப்படுகின்றனது. அரசு பெரும் கம்பெனிகளின் சேவகனாக செயல்பட்டு வருகிறது. இது அனைத்து முதலாளித்துவ நாடுகளுக்கும் பொருந்தும்.
உலக பொருளாதாரத்தில் அமெரிக்க நாணயமான டாலர் ஆதிக்கம் செலுத்துகிறது. உலகின் எண்பது சதவீதமான அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளும் 90 சதவீதமான சர்வதேச வங்கி பரிவர்த்தனை களும் டாலரில் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை அமெரிக்கா தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது. டாலர் மதிப்பை குறைத்து அமெரிக்கா தனது அந்நிய கடன்களை குறைக்கிறது. இந்த வகையிலும் ஏழை நாடுகள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றன.
லெனின் ஏகாதிபத்தியம் நூலில் முதலாளித்துவ கூட்டணிகள் வளர்ந்து உலகம் பங்கு போடப்படுவதை குறிப்பிடுகிறார். இது இன்றைய உலகுக்கும் பொருந்துகிறது. சர்வதேச பொருளாதார நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றவைக்கிற பிரிட்டன்வுட் ஓட்ஸ் அமைப்புநிறுவனம் முறை என்று சொல்லப்படுகின்லுகிற உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம், உலக வர்த்தக அமைப்பு போன்றவைகளும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலதன குவியலுக்கு ஏற்ற வகையில் தங்களது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்கின்றன. சர்வதேச முதலாளித்துவ ஏகபோக கூட்டணி நலன்களுக்கு ஏற்ப இந்த அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
அமெரிக்கா தலைமையில் ஏகாதிபத்திய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ(NATO) இராணுவக் கூட்டணி உண்மையில் ஏகபோக முதலாளித்துவ நலன்களை பாதுகாப்பதற்கானக இராணுவக் கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. சீனா உள்ளிட்ட சோஷலிச நாடுகளுக்கு எதிராகவும் பல கூட்டணிகளை அமெரிக்கா அமைத்து வருகிறது.
பல விஷயங்களில் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான சர்வதேச கருத்தை உருவாக்குவதற்கு ஊடகங்களைள்யும், பண்பாட்டு தளங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். ஏகாதிபத்திய கலாச்சார மதிப்பீடுகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதரவுடன் பரப்பி வருகின்றனர்.
இராணுவ கூட்டணிகள்
ஏகாதிபத்திய நாடுகள் தங்களது ராணுவத்தை பெருமளவுக்கு பலப்படுத்தி வருகின்றனர். சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு அதிக அளவில் அமெரிக்கா தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு, வளைகுடாப் போர், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா போர்கள் என ஆறு ஆக்கிரமிப்பு போர்களை அமெரிக்கா மேற்கொண்டது. அவையும், தற்போது நடந்து வரும் ராணுவ மோதல்கள் அனைத்தும் ஏகபோக மூலதனத்தை பாதுகாக்கவே நடைபெறுகின்றன. மனித சமூகத்திற்கு மிகப்பெரும் அழிவையும் நாசத்தையும் அவை ஏற்படுத்தியுள்ளன.
இயற்கை வளங்களை சூறையாடும் அமைப்பாக ஏகாதிபத்தியம் வளர்ந்துள்ளது. காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு என ஏராளமான பாதிப்புகளை ஏகபோக மூலதனத்தின் இலாப வேட்டையும், சுரண்டலும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த பூமிப்பந்தின் இருப்பே இன்றைக்கு கேள்விக்குறியாகியுள்ளது.
ஏகபோக மூலதனத்தின் நலனுக்காக தங்களுடைய நாடுகளில் நவீன தாராளமயத்தை பின்பற்றிய பல நாடுகளில் தற்போது இனவெறி, நிறவெறி, வகுப்புவாத வெறி போன்ற சமூகப் பிளவு ஏற்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. வாழ்வாதார பாதிப்பு, வேலையின்மை,வறுமை போன்ற ஏகாதிபத்திய கொள்கைகளின் விளைவுகள் இப்படிப்பட்ட சமூகப்பிளவுகளுக்கு வழியஅமைக்கின்றன. குறிப்பாக பல மூன்றாம் உலக நாடுகளில்ள் இவைதைத் திட்டமிட்டு தூண்டப்படுகின்றன.
லெனின் குறிப்பிட்டதுபோல் ஏகாதிபத்தியம் பல வகைகளில் இன்று ஒரு பெரும் அழிவு சக்தியாக உள்ளது. மனித நாகரிகத்தை அழிக்கும் இந்த கொடூரமான அமைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உலகப் பாட்டாளி வர்க்கம் சோசலிச இலக்கை நோக்கி முன்னேற வேண்டும். இதற்கு மார்க்சிய-லெனினியமும், ரஷிய புரட்சி வரலாறும் பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு வழிகாட்டும்.
===============================================================.
கட்டுரை உதவி:
Five Characteristics of Neo-imperialism: Building on Lenin’s Theory of Imperialism in the Twenty-First Century by Cheng Enfu and Lu Baolin; (Monthly Review; May 01, 2021)
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
