கம்யூனிஸ்ட் கட்சியில் மாநாடுகளின் முக்கியத்துவம்
உ. வாசுகி
பொதுவாக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஸ்தாபன கட்டமைப்பில் மாநாடுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது. அந்தந்த மட்டத்தில் மாநாடே உயர்ந்த பட்ச அமைப்பாகும். அனைத்து அதிகாரங்களும் மாநாட்டுக்கு உண்டு. குறிப்பாக, கட்சிக் காங்கிரஸ் என அழைக்கப்படும் அகில இந்திய மாநாட்டுக்கு அதிகபட்ச அதிகாரம் உள்ளது. அமைப்பு விதிகள் திருத்தம், பொதுச் செயலாளர், மத்திய குழு, அரசியல் தலைமை குழு தேர்வு என்பதோடு, கடந்த மாநாட்டின் அரசியல் நடைமுறை உத்தி பரிசீலிக்கப்பட்டு, வரும் 3 ஆண்டுகளுக்கான அரசியல் திசை வழி ஆகியவை அங்கு உருவாக்கப் படும்.
நீண்ட காலமாக கட்சி காங்கிரசில், எதிர்வரும் 3 ஆண்டுகளுக்கான புதிய அரசியல் தீர்மானம் முதலில் விவாதித்து ஏற்கப்படும். அடுத்து சமர்ப்பிக்கப்படும் அரசியல் ஸ்தாபன அறிக்கையின் முதல் பகுதி முந்தைய அரசியல் நடைமுறை உத்தியின் அமலாக்கத்தைப் பரிசீலிக்கும். புதிய அரசியல் தீர்மான நகல் மட்டுமே மாநாட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் கிளை வரை சுற்றுக்கு விடப்படும். அவற்றின்மீதான கருத்துக்கள் வரவேற்கப்படும். கடந்த உத்தியைப் பரிசீலிப்பது முதலிலும், புதிய அரசியல் தீர்மானத்தை விவாதிப்பது அடுத்ததாகவும் வருவது தான் சரியாக இருக்கும் என்பது தோழர் இ.எம்.எஸ். பொது செயலாளராக இருந்த போதே பேசப்பட்டது. பல்வேறு காரணங்களால் அந்த முறை மாறவில்லை. 24வது கட்சி காங்கிரசில் இது மாற்றப்படும் என மத்தியக் குழு முடிவு செய்துள்ளது.
அதன்படி, முந்தைய அரசியல் உத்தி அமலாக்கம் குறித்த பரிசீலனை, புதிய அரசியல் தீர்மானம் ஆகிய இரண்டுமே கிளை வரை சுற்றுக்கு விடப்பட்டு, கருத்துக்கள் கேட்கப்படும். இது கடந்த அரசியல் நடைமுறை உத்தி அமலாக்கத்தின் நிறை- குறைகள் மீது கிளை மட்ட தோழர்கள் வரை கருத்து பதிவு செய்ய உதவும். உட்கட்சி ஜனநாயகத்தின் மிக உயர்ந்த வடிவம் இது. மாநாட்டில், முதலில் முந்தைய அரசியல் உத்தி அமலாக்க நகல் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு, பின்னர் புதிய அரசியல் தீர்மான நகல் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகள் முதலாளித்துவ கட்சிகளின் மாநாடுகளைப் போல அல்ல. தனிநபர் துதிகளுக்கு இதில் இடமில்லை. விமர்சன பூர்வமான விவாதங்கள் நடைபெறும். உயர் மட்ட தலைவர்கள் உட்பட யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. கடந்து வந்த பாதையைப் பரிசீலித்து முன்னேறும் முக்கியமான இடமே மாநாடு. ஏனெனில் கம்யூனிஸ்ட் கட்சி அவ்வாறு அமைப்பு ரீதியாக கட்டமைக்கப்பட்டு உள்ளது.
முதல் அகில இந்திய மாநாடு 1943இல் நடந்தது. தேச விடுதலைக்கு முன்னர் நடந்த ஒரே மாநாடு இதுதான். இதன் வழிகாட்டுதலில்தான் ஏகாதிபத்திய மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு போராட்டங்கள், குறிப்பாக புன்னப்புரா வயலார், தெலுங்கானா ஆயுதப் போராட்டம் போன்றவை, கம்யூனிஸ்டுகள் தலைமையில் நடந்தன.
மார்க்சிஸ்ட் கட்சி உருவான பின் 1964இல் நடந்த 7வது மாநாடு, திருத்தல் வாதப் பாதை மற்றும் வர்க்க சமரசப் போக்கிலிருந்து விலகி மக்கள் ஜனநாயகப் புரட்சியை இலக்காகக் கொண்ட கட்சி திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இன்னும் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது.
1968இல் நடந்த 8வது மாநாடு, மேற்கு வங்கம், கேரளாவில் ஐக்கிய முன்னணி அரசாங்கங்களில் பங்கேற்று செயல்படுவது குறித்த வழிகாட்டுதலை அளித்தது. இம்மாநாட்டின் அரசியல் ஸ்தாபன கடமைகள், வெகுஜன போராட்டங்களைக் கட்டவும், கட்சியின் செல்வாக்கை வளர்க்கவும் இத்தகைய அரசாங்கங்களைப் பயன்படுத்துவதற்கு வழிவகுத்தன.
மதுரையில் 1972இல் நடந்த 9வது மாநாடு, முன்னெழுகிற எதேச்சாதிகார அபாயத்தைத் துல்லியமாக கணித்து, அதனை எதிர்க்க பரந்த மேடை ஒன்றை அமைக்க வழிகாட்டியது. 1974இல் நிகழ்ந்த அவசரநிலை பிரகடனம் கட்சியின் எச்சரிக்கையை சரியென நிரூபித்தது.
இவ்வாறாக, நாட்டின் அரசியல் சூழலை எதிர்கொண்டு, கட்சியை வளர்த்தெடுத்து, வர்க்க சேர்மான மாற்றம் நோக்கி பயணிக்க அகில இந்திய மாநாடுகளின் அரசியல் தீர்மானம் உதவுகிறது.
கட்சி துவக்கம்:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முதல் கிளை 1920இல் தாஷ்கென்ட் நகரில் துவங்கப்பட்டது. ஏகாதிபத்திய எதிர்ப்பும், தேச விடுதலை, புரட்சிகர உணர்வும் கொண்டு, நவம்பர் புரட்சியால் ஈர்க்கப்பட்ட கம்யூனிஸ்டுகளின் சிறு குழு (7 பேர்) இதற்கான முயற்சியை எடுத்தது. இந்திய பொருளாதாரம், அரசியல், தத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் தாஷ்கென்ட் கம்யூனிஸ்ட் குழு சிறந்த பங்களிப்பை செய்தது. அரசியல் நிகழ்ச்சி போக்குகள் மார்க்சிய கண்ணோட்டத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டன. குறிப்பாக, எம்.என்.ராய் அவர்கள் வகுப்புவாத பிரச்சனை குறித்தும், காந்தி குறித்தும் எழுதியது (India in transition) இந்திய கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தியது. அத்துடன் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் ரஜனி பாமி தத், சர்வதேச மற்றும் இந்தியாவின் தேசிய சூழல்கள் குறித்து மாதா மாதம் எழுதிய குறிப்பும் (India Today) சேர்ந்து இந்தியாவின் அடிப்படையான சமூக, பொருளாதார, பண்பாட்டு, அரசியல் பிரச்சனைகள் குறித்த அடிப்படை பாட நூல்களாக அமைந்தன என்றால் மிகையாகாது. இவைதான், பின்னாளில் முறையாக உருவாக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதன் மத்திய குழு, அரசியல் தலைமை குழு உள்ளிட்ட அமைப்புகளின் சித்தாந்த அஸ்திவாரமாக அமைந்தன.
குறிப்பாக, 1920களின் துவக்கத்தில் M.N.ராய் அவர்கள், வகுப்பு வாதம் பற்றி எழுதிய கட்டுரையில், வர்க்க ஒற்றுமைதான் வகுப்புவாத விஷத்துக்கான முறிவு என்று குறிப்பிட்டார். ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், அனைத்து சாதி மற்றும் மதங்களில் உள்ள பெரும் பணக்காரர்களுக்கு எதிராகவும், அனைத்து சாதி மதங்களிலும் உள்ள உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என எழுதினார்.
இதன் தொடர்ச்சியாகவே, முகமது அலி ஜின்னா இரு தேச கோட்பாட்டை முன்வைத்தபோது, கம்யூனிஸ்டுகள் அதை எதிர்த்தனர். காங்கிரஸ் கட்சி அதை எதிர்த்த அதே சமயத்தில், இந்தியா என்கிற ஒரு தேச கோட்பாட்டை முன் வைத்தது. இந்தியா, பல தேசிய இனங்களைக் கொண்டது; மொழிவழி மாநிலங்களின் தேவை போன்றவற்றைக் கம்யூனிஸ்டுகள் முன்மொழிந்தனர். இதன் நீட்சியாகவே ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் 1951 திட்டமாக இருந்தாலும் சரி, 1964 சி.பி.ஐ(எம்)மின் திட்டமாக இருந்தாலும் சரி, அவை அதிகபட்ச மாநில உரிமைகளை வலியுறுத்துபவையாக அமைந்தன. மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி கோட்பாட்டுக்கும் நமது கட்சி அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்றால், அதில் இந்தியாவின் பல்வேறு தேசிய இனங்கள் குறித்த புரிதல் முக்கிய பங்கு ஆற்றுகிறது.
இதை ஒட்டியே, கட்சியின் 9வது மாநாட்டில், ‘இந்தியாவில் தேசிய இனப்பிரச்சினை – மார்க்சிஸ்ட் அணுகுமுறை’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கட்சி திட்டத்தில் திருத்தமும் செய்யப்பட்டது. அதாவது, இந்திய உபகண்டம் ஒரே தேசம் என்ற உணர்ச்சிவச தத்துவம், இந்து நாடு, முஸ்லிம் நாடு என்ற வகுப்புவாத தத்துவம் இரண்டுமே உண்மைக்கும், அறிவியல் கண்ணோட்டத்துக்கும் புறம்பானவை என வரையறுத்து, இந்தியா ஒரு ஒன்றியம் என்பதை விளக்கி, இந்திய ஒன்றியத்தில் உள்ள ஒரு தேசிய இனம் மற்ற தேசிய இனங்களை ஒடுக்குகிறது என்ற சூழல் இல்லை. நடக்கும் போராட்டங்கள் பின்தங்கிய நிலையையும், பொருளாதார சார்புத் தன்மையையும் ஒழித்துக் கட்டுவதற்கான அனைத்து தேசிய இனங்களின் பொது போராட்டத்தின் ஒரு பகுதியாகும், பல்வேறு தேசிய இனங்களைச் சார்ந்த பெருமுதலாளி, நிலப்பிரபு வர்க்கங்கள் அரசியல் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பதும், அந்நிய நிதி மூலதனத்துடன் மென்மேலும் கூட்டு வைத்துக் கொண்டு, முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றுவதும்தான் நிலைமையாக உள்ளது. எனவே, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, பிரிந்து போகும் உரிமை எனப்படும் பிரச்சனை இங்கு எழவில்லை. பிரிவினைவாதம் ஆளும் வர்க்கங்களுக்கும், ஏகாதிபத்தியத்திற்கும்தான் உதவும் என்ற தெளிவான முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வந்தது. பிரிவினை வாதத்தை எதிர்த்த சமரசமற்ற போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி நடத்துவதும் இத்தகைய புரிதலின் அடிப்படையில்தான்.
1925இல் கான்பூரில் இந்தியாவின் பல பகுதிகளில் செயல்பட்டுக் கொண்டிருந்த, சிதறிக் கிடந்த கம்யூனிஸ்டுகள் சந்தித்து, அமைப்பை உறுதிப்படுத்தினர். புரட்சிகர உணர்வுள்ள தலைசிறந்த தோழர்கள் பலரும் இதில் இணைந்தனர். 500 பேர் வரை பங்கேற்றதாக உளவுத்துறை தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் எம்.பி. ஷாபூர்ஜி சக்லத்வாலா வாழ்த்து செய்தி படிக்கப்பட்டு, அடுத்து வரவேற்பு குழு தலைவர் ஹசரத் மொஹானி பேசினார் (1921 அகமதாபாத் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பூரண சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானத்தை அவர் முன்மொழிந்தார் என்பது நினைவுகூறத் தக்கது). தோழர் சிங்காரவேலர் தலைமை உரை நிகழ்த்தினார். கட்சியின் பெயர், நோக்கம், உறுப்பினராகும்போது பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவம் போன்றவை இறுதிப்படுத்தப்பட்டு, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மிக மிகத் துவக்க கட்டமாக இது நடந்தது. இது நடந்த விதம் மற்றும் உள்ளடக்கம் குறித்து கடும் விமர்சனங்களும் உள்ளன.
இதற்கிடையே கம்யூனிஸ்டுகள் மீது பெஷாவர், கான்பூர், மீரட் சதி வழக்குகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் தொடுக்கப்பட்டன. சுமார் 20 ஆண்டுகள் கட்சி தடை செய்யப்பட்டது. தடையின்போது தோழர்கள் தலைமறைவாகப் பணியாற்றினர். தேச பக்தி என்று வாய் வீச்சு காட்டும் பாஜகவின் வேரும், வழிகாட்டியுமான ஆர்.எஸ்.எஸ். 1925இல் துவங்கி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் சமரச அணுகுமுறையையே கடைப்பிடித்தது. ஆர்.எஸ்.எஸ் உருவாக்கத்திற்கு முன், இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டாலும், வி.டி.சாவர்க்கர், பின்னர் பிரிட்டிஷ் அரசிடம் பலமுறை மண்டியிட்டு மன்னிப்பு கடிதம் அனுப்பினார் என்பதையும், வேறு ஆர்.எஸ்.எஸ் தலைவர் எவரும் விடுதலை போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை என்பதையும் இங்கு பதிவிட வேண்டும்.
கட்சி கடந்து வந்த பாதை சவால்களும், அரசு வன்முறையும், ஆளும் வர்க்கங்களின் தாக்குதல்களும் நிறைந்தவை. பல சிக்கலான பிரச்னைகளைக் கையாண்டு, தீர்வுகளை முன்வைத்த பெருமை கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு உண்டு.
அரசியல் நடைமுறை உத்தி
புரட்சிகர இலக்கு நோக்கிய பயணத்தில் எதிர்ப்படும் தடைகளை, சவால்களை சந்தித்து முன்னேற தற்காலிக உத்திகள் தேவைப்படும். முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சக்திகளிடையே ஏற்படும் முரண்பாடுகளைப் பயன்படுத்த வேண்டி வரும். இதற்கு அரசியல் சூழலைப் பரிசீலித்து பொருத்தமான அரசியல் நடைமுறை உத்தி உருவாக்கப்பட வேண்டும்.
7,8,9வது மாநாடுகள் வரை, காங்கிரசின் எதேச்சாதிகார ஆட்சி முறியடிக்கப்பட ஜனநாயக சக்திகள் அணி திரள வேண்டும் என்ற அரசியல் உத்தி முன்வைக்கப்பட்டது. 10வது மாநாடு 1978இல் ஜலந்தரில் நடந்த போது, அவசரகால நிலையின் அடக்குமுறை உக்கிரத்தை எதிர்கொண்டு வீழ்த்தி, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு, ஜனதா அரசாங்கம் அமைக்கப்பட்ட சூழல் நிலவியது. காங்கிரஸ் என்ற பெருமுதலாளித்துவ பிரதிநிதிக்கு பதிலாக, ஜனதா கட்சி என்ற மற்றொரு பெரு முதலாளித்துவ கட்சி அதிகாரத்தில் இருக்கிறது என்ற நிலை பரிசீலிக்கப் பட்டது. இது புரட்சிகர இலக்குக்கு உதவாது. எனவே இத்தகைய முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கும், கொள்கைகளுக்கும், முற்றிலும் மாறானதாக இடது ஜனநாயக சக்திகளும், கொள்கைகளும் முன்னிறுத்தப்பட வேண்டும். இடது ஜனநாயக அணி கட்டப்பட வேண்டும் என 10வது கட்சி காங்கிரஸ் தீர்மானித்தது. கட்சிகள், தலைவர்கள் என்பதைத் தாண்டி, இரு வேறு கொள்கைகள் என்பது முன்னுக்கு வந்தால் மக்கள் தேர்வு செய்வதும் கொள்கை சார்ந்து இருக்கும். இடது ஜனநாயக முன்னணி என்பது மக்கள் ஜனநாயக அணியை கட்டமைப்பதற்கான பயணத்தில் இடைக்கால அணி என முன்வைக்கப்பட்டது.
1980களில் பாஜக வளர்ச்சி அடைந்து வந்த சூழலில் மதவெறி வகுப்புவாத பேரபாயம் முன்னுக்கு வந்தது. எனவே, மதச்சார்பற்ற சக்திகளைத் திரட்ட வேண்டிய நிர்ப்பந்தம், அதே சமயம் காங்கிரசின் நவீன தாராளமய ஆதரவு, எதேச்சாதிகாரம் ஆகியவற்றுக்கு எதிரான அணி சேர்க்கையின் தேவை போன்றவை இடது ஜனநாயக அணியைக் கட்டமைக்கும் கடமையைப் பின்னுக்கு தள்ளி, மூன்றாவது மாற்று (பாஜக அல்லாத/காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளைக் கொண்டது. அப்போதைய சூழலில் அவை பெரும்பாலும் மாநில முதலாளித்துவ கட்சிகளாக அமைந்தன) என்பதை முன்னுக்கு கொண்டு வந்தது. 13வது மாநாட்டில் (1998) பாஜக/ காங்கிரஸ் அல்லாத மூன்றாவது மாற்று என்ற இந்தக் கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது.
சென்னையில் நடந்த 14வது மாநாடு சோஷலிச பின்னடைவிலிருந்து பாடம் கற்பது; அதே சமயம் மார்க்சிய லெனினிய கோட்பாடுகளைப் பற்றி நிற்பது என்ற வழிகாட்டலை உருவாக்கியது.
13வது மாநாட்டில் உருவான மூன்றாவது மாற்று என்ற கருத்தாக்கம் சில பலன்களை அளித்தது உண்மையே. ஆனால் அது தேர்தல் அணியாகத் துவங்கி, பின்னர் ஒரு குறைந்தபட்ச திட்டத்தின் அடிப்படையிலான தேர்தல் அணி (17வது மாநாடு) என்பது வரை கொண்டு செல்லப்பட்டு, 19வது மாநாடு வரை தொடர்ந்தது.
முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சக்திகளையே இரண்டு மாற்றாக வைப்பதும், நம்மை உள்ளடக்கிய மதச்சார்பற்ற அணியை மூன்றாவது மாற்று என்பதும் பொருத்தமற்றது, இது இடது ஜனநாயக அணியைக் கட்டும் கடமையைப் பின்னுக்கு தள்ளும் என்பது 20வது மாநாடு (2012 கோழிக்கோடு) முதலே விவாதிக்கப்பட்டு வந்தது. அதாவது, 20வது மாநாட்டின் அரசியல் ஸ்தாபன அறிக்கையில், 19வது மாநாட்டு உத்தி அமலாக்கம் குறித்த பரிசீலனையில் இதன் சாத்தியப்பாடு குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன.
21வது மாநாட்டில் (2015 விசாகப்பட்டினம்) முந்தைய மாநாட்டு அரசியல் நடைமுறை உத்தி மட்டுமல்ல; (13வது மாநாடு துவங்கி) கடந்த 25 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த அரசியல் உத்திகள் ஒட்டுமொத்தமாகப் பரிசீலிக்கப்பட்டன. நவீன தாராளமயக் கொள்கைகளின் மூலம் உருவான மாநில முதலாளிகளின் வளர்ச்சி, அதன் காரணமாக ஏற்பட்ட மாநில முதலாளித்துவ கட்சிகளின் குணாம்ச மாற்றம், ஒன்றிய அரசாங்கத்தில் அவர்கள் இடம் பெறும் சூழல், பாஜகவுடன் அவ்வப்போது இக்கட்சிகள் கூட்டணி அமைக்கும் சாத்தியக்கூறு போன்றவை கணக்கில் எடுக்கப்பட்டு, மாநில முதலாளித்துவ மதச்சார்பற்ற கட்சிகள் அடங்கிய தேசிய அளவிலான மூன்றாவது மாற்று கைவிடப்பட்டது. இடது ஜனநாயக அணி கட்டமைப்பு என்பது அரசியல் உத்தியில் மீண்டும் முன்னுரிமையும், கூடுதல் அழுத்தமும் பெற்றது. அதே சமயம் மக்கள் பிரச்சனைகளுக்காக, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை மாண்புகளைப் பாதுகாப்பதற்காக, இக்கட்சிகளுடன் கூட்டு இயக்கம் நடத்துவது தொடரப்பட வேண்டும் என்பதும் முடிவானது.
அடுத்து 1990களில் இருந்து நவீன தாராளமயக் கொள்கைகள் அடுத்தடுத்து வருகிற அரசாங்கங்களால் அமல்படுத்தப்படுகின்றன. இவை, நமது வர்க்கங்களின் (தொழிலாளி வர்க்கம், விவசாய வர்க்கங்கள், நடுத்தர வர்க்கம் மற்றும் நகர்ப்புற ஏழைகள்) மீது ஏற்படுத்திய தாக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டு, கொல்கத்தா பிளீனத்தில் (2015) அது குறித்த மதிப்பீடு செய்யப்பட்டது.
அண்மைக்கால அரசியல் நடைமுறை உத்திகள்
இந்துத்துவ சித்தாந்தத்தைப் பின்பற்றும் பாஜக கையில் ஆட்சி அதிகாரம் உள்ளது என்பதும், அவர்களது ஆபத்தான நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் பணியை துரிதப்படுத்துகிறார்கள் என்பதும், பாஜகவைத் தனிமைப்படுத்த வேண்டும்; தோற்கடிக்க வேண்டும்; இதுவே பிரதான அரசியல் கடமை என்ற அரசியல் உத்தியை அண்மைக்கால மாநாடுகள் உருவாக்கியுள்ளன. காங்கிரசும் பெருமுதலாளி வர்க்கப் பிரதிநிதி என்ற அடிப்படையில், காங்கிரசுடன் புரிந்துணர்வோ, தேர்தல் கூட்டணியோ கூடாது என 21வது மாநாடு வரையறுத்தது.
பாஜக அபாயம் அதிகரிக்கும் சூழலில், 22வது மாநாடு, (புரட்சியின் இலக்கான ஏகபோக, நிலப்பிரபுத்துவ, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது அவ்வர்க்கங்களின் பிரதிநிதிகளை உறுதியாக எதிர்க்காமல் நிறைவேறாது) என்ற கட்சி திட்டத்தை மேற்கோள் காட்டி காங்கிரசைக் கூட்டாளியாகப் பார்க்க முடியாது; ஆயினும் பாஜக அபாயத்தோடு காங்கிரசை சமப்படுத்த முடியாது. பாஜகவைத் தோற்கடிப்பதே முதன்மை கடமை. அதே சமயம் காங்கிரசுடன் (political alliance) அரசியல் கூட்டணி இல்லாமல் இது செய்யப்பட வேண்டும் எனப் பணித்தது.
23வது மாநாட்டின் அரசியல் தீர்மானம் பத்தி 2.138, முந்தைய அரசியல் தீர்மான மதிப்பீட்டை மீண்டும் வலியுறுத்துகிறது.
மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களின் வன்முறை நிறைந்த பிரத்தியேக சூழலில் காங்கிரசுடன் நேரடியான தொகுதி உடன்பாடு அனுமதிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில், பிரதான மாநில முதலாளித்துவ கட்சி தலைமையில் ஏற்படும் தொகுதி உடன்பாட்டில் காங்கிரசும், நாமும் இடம் பெறுவதுண்டு. 24வது மாநாடு இதனை மேற்கொண்டு விவாதிக்கும்.
பாஜக அரசு, கார்ப்பரேட் வகுப்புவாத அரசு. எனவே கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகள் நடவடிக்கைகள், வகுப்பு வாதம் இரண்டுக்கும் எதிரான போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அவை நடத்தப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சியின் சுயேச்சையான இயக்கம், இடதுசாரிகளுடன் கூட்டு இயக்கம், இதர மதச்சார்பற்ற கட்சிகளுடன், சக்திகளுடன் அரசமைப்பு சட்ட பாதுகாப்பு, மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் போன்றவற்றிற்கான இயக்கங்களை முடுக்கி விட வேண்டும். இவற்றை செய்வதற்கு கட்சியின் சொந்த பலம் அதிகரிக்க வேண்டும் என்கிற இடத்துக்குத்தான் மீண்டும் வரவேண்டியுள்ளது.
இடதுசாரிகளின், குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியின், வலிமை அதிகரிக்காமல், கட்சியின் அரசியல் உத்தியை நிறைவேற்ற முடியாது. எனவே, கட்சியின் சொந்த பலம் அதிகரிப்பு என்பது தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இந்துத்துவ வகுப்புவாதத்தை எதிர்கொள்ள விரிவான நடவடிக்கைகளும், இடது ஜனநாயக அணியின் திட்டமும் முன்வைக்கப் படுவதும் தொடர்ந்து நடக்கிறது. ஸ்தாபன பிளீனம், அரசியல் ஸ்தாபன அறிக்கைகள் இதற்கான செயல் திட்டத்தைத் தொடர்ந்து முன் மொழிந்து வருகின்றன. வர்க்க, வெகுஜன அமைப்புகளின் வளர்ச்சி, செயல்பாடு, அவற்றின் உறுப்பினர்களை அரசியல்படுத்துவது , கட்சிக் கிளைகளை உள்ளூர் மட்ட பிரச்சனைகளில் ஈடுபடுத்துவது, கோரிக்கைகள் நிறைவேறும் வரை நீடித்த போராட்டங்கள் நடத்துவது, கட்சி விரிவாக்கம் போன்றவை கட்சித் திட்டத்தின் அடிப்படையில் முன் வைக்கப்படுகின்றன. இவற்றை செய்யாமல் வர்க்க சேர்மானத்தில் மாற்றம் நிகழாது.
கட்சியின் 20வது மாநாட்டிலேயே வர்க்க, வெகுஜன போராட்டங்களின் முக்கியத்துவமும், நமது நாடாளுமன்ற சட்டமன்ற நடவடிக்கைகள் இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் அமைந்திட வேண்டுமென்பதும் சுட்டிக்காட்டப்பட்டது என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
தமிழ்நாட்டில் கட்சி காங்கிரஸ்
24வது கட்சி காங்கிரஸ் தமிழ்நாட்டின் மதுரையில் நடக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம். ஏற்கனவே, 9வது காங்கிரஸ் மதுரையிலும், 14வது காங்கிரஸ் சென்னையிலும், 19வது காங்கிரஸ் கோவையிலும் நடந்துள்ளன.
இப்பின்னணியில், கிளை மாநாடு துவங்கி, விமர்சன, சுய விமர்சன அடிப்படையில், ஸ்தாபன பலவீனம், மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு, கட்சியின் அரசியல் நிலைபாட்டை மக்களிடம் எடுத்து செல்வது, வாக்கு பலம் அதிகரிப்பு, வர்க்கத் திரட்டல், மதச்சார்பற்ற திரட்டலில் கவனம், அடையாளஅரசியலின் தாக்கம், இந்துத்துவத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள், நவீன தாராளமய கொள்கைகளின் தாக்குதல் உள்ளிட்ட அம்சங்களை ஆழமாக ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும்.
தேர்தல் கூட்டணி, இதர கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு, கூட்டு இயக்கங்கள் போன்றவை தவறு என ஒரு கருத்து உருவாகிக் கொண்டே வருகிறது. பல்வேறு நாடுகளில் இத்தகைய உடன்பாடுகள் நடந்து கொண்டுதான் உள்ளன. அது தவறல்ல. பிரதான வர்க்க எதிரியை முறியடிக்க இது தேவை. கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, ஐக்கிய முன்னணி உத்தி என்பது ஒரு முக்கிய கோட்பாடு. தொகுதி உடன்பாடு, கூட்டு இயக்கம் போன்றவை ஐக்கிய முன்னணி உத்தியின் ஒரு பகுதி என்ற புரிதலுடன் செய்யப்பட வேண்டும். அதில், நமது அரசியலுக்கும், ஸ்தாபனத்துக்கும் பலன் கிடைத்திட வேண்டும். மறுபக்கம், கட்சியின் சுயேச்சையான அடையாளத்தைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். வர்க்க பிரச்னைகளில், மக்களை பாதிக்கும் பிரச்சினைகளில், உடன்பாடு காணும் மாநில முதலாளித்துவ கட்சியின் நிலைபாடுகளிலிருந்து கண்டிப்பாக வேறுபடுத்திக் காட்ட வேண்டும்.
இவற்றையெல்லாம் ஆய்வு செய்யவும், பரிசீலிக்கவும், எதிர்வரும் மாநாடுகள் நிச்சயம் உதவும்.
You may also like
1 comment
Comments are closed.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

நெறிப்படுத்தும் இயக்கம் என்ன ஆனது?