இந்திய அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ள சமூக நீதி அம்சங்கள்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
முன்பின் முரணற்ற இடதுசாரி நிலைப்பாடு
பெரியார் ஒரு மிகச்சிறந்த சமூக செயல்பாட்டாளர். இந்திய சமூகத்தை மிக ஆழமாக ஆய்வு செய்தவர். பெரியார் மகத்தான பணிகளை நம்மிடையே செய்திருக்கிறார். சாதி ஒடுக்குமுறையைக் கடுமையாகச் சாடினார். சாதி ஒடுக்குமுறை, சமத்துவம், பாலின சமத்துவம் பற்றி அவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. பாலின சமத்துவத்தில் பெரியாருக்கு நிகர் பெரியார் தான். மிகச்சிறந்த அறிஞர்கள், சமத்துவத்திற்காக போராடியவர்கள் என்கிற பட்டியலில் பெரியார், அம்பேத்கர், போன்றோர் முக்கியமானவர்கள். அதேநேரம், அவர்களின் நடவடிக்கைகளோ கருத்துக்களோ விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்று நாம் வாதிட இயலாது.
இது பெரியாரைப் பற்றிய விவாதத்தை முன்னெடுக்கும் கட்டுரை அல்ல என்கிறபோதும், டிசம்பர் 25, 1968 இல் ஒடுக்கப்பட்ட சமூகம் சார்ந்த 44 பெண்களும் குழந்தைகளும் நில்ப்பிரபுக்களின் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்ட கொடிய கீழவெண்மணி படுகொலை நிகழ்வு தொடர்பான பெரியாரின் நிலைப்பாடு, அவரது அடிப்படை சிந்தனைகளுக்கே முரணாக இருந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் நிலப்பிரபுக்களால் தாக்கப்பட்டபோது, சாதிக்கொடுமையும் வர்க்கச் சுரண்டலும் ஒருசேர நிகழ்ந்தபோது, சாதிய ஒடுக்குமுறையையும் வர்க்கச் சுரண்டலையும் ஒருசேர எதிர்க்க வேண்டும் என்கிற முன் பின் முரணற்ற நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கட்சி கொண்டிருந்தது.
அதன் அடிப்படையில் அங்கு நடைபெற்ற போராட்டங்களே, அங்கு நிலவிய நிலவுடமை உறவுகளை மாற்றியது. இப்படிப்பட்ட பல வர்க்க போராட்டங்களும் சமூக சமத்துவத்திற்கான போராட்டங்களும் விடுதலை போராட்டம் நெடுகிலும் பொது உடைமை இயக்கத்தால் நடத்தப்பட்டன. சில முற்போக்கு இயக்கங்களும் பங்காற்றின. இவைதான் இந்திய அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ள முற்போக்கு விழுமியங்களுக்கு முக்கிய பின்புலமாக இருந்தன என்பதைத்தான் இதன்மூலம் குறிப்பிடுகிறேன்.
அரசியல் சாசனத்திற்கு முன்னோடியான ஆவணம்
இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதன் பின்னணியில் உள்ள அம்சங்களை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். அம்பேத்கருக்கு அதில் மகத்தான பங்கு உண்டு. அதேநேரம், விடுதலை போராட்டக் களத்தில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்து செயலாற்றிக் கொண்டிருந்த பொதுவுடைமைவாதிகள் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்களும் அதில் கணிசமான பங்காற்றினர்.
விடுதலை இந்தியா எத்தகையதாக அமையவேண்டும் என்கிற விவாதங்கள் அரசியல் சாசனம் உருப்பெருவதற்கு முந்தைய பல பத்தாண்டுகளாகவே நடந்து கொண்டிருந்தது. 1920-களில் இந்திய தேசிய காங்கிரஸ், பூரண சுதந்திரம் குறித்துப் பேசத் தயங்கிக் கொண்டிருந்த காலத்திலே, சுதந்திரத்திற்கான நகல் அறிக்கை (Draft Platform for Independence) என்று ஒரு ஆவணத்தை முதலில் வைத்தவர்கள் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தினர்தான். 1922 வரை பூரண சுதந்திரம் என்பதையே காங்கிரஸ் தலைமையிலான தேசியஇயக்கம் கோரவில்லை; அது காங்கிரஸின் குறைபாடல்ல; அன்றைய அரசியல் சூழல் அப்படி இருந்தது. அப்படிப்பட்ட சூழலில் சுதந்திரத்திற்கான நகல் அறிக்கை எனும் அந்த ஆவணம் பல விஷயங்களை முன்வைத்தது.
நாம் கோருவது வெறும் அரசியல் விடுதலை மட்டுமல்ல. இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறை உள்ளது; அது தகர்க்கப்பட வேண்டும். இந்தியாவில் சொத்துடைமையில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு இருக்கிறது; எனவே நிலச்சீர்திருத்தம் தேவை. கிராமப்புறத்தில் நிலப்பரப்புகளின் ஆதிக்கத்தைத் தகர்க்கவேண்டும்; நகர்ப்புறங்களில் ஒரு சுயச்சார்புடைய பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு நாம் ஒரு பொருளாதாரப் பாதை வகுக்க வேண்டும். எழுத்தறிவின்மை, கல்வி உரிமை மறுக்கப்படுவது பற்றிக் கூறப்பட்டுள்ளது. தொலைநோக்கு பார்வைகொண்ட அம்சங்களை அது கொண்டிருந்தது.
இந்திய விடுதலை இயக்கத்தில் பல நீரோட்டங்கள்
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல நீரோட்டங்கள் இருந்தன; ஒன்று பெரும்பான்மையான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான நீரோட்டம்; இதற்கு சரிசமமான முக்கியத்துவம் பெற்றதாக இல்லாவிட்டாலும், போர்க்குணம் மிக்க இடதுசாரி நீரோட்டமும் கணிசமான அளவில் இருந்தது. அன்று முதல் இன்று வரை விடுதலைப் போராட்டத்திற்கு சம்பந்தமே இல்லாமல் இருந்தவர்கள், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஏற்காதவர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர்தான்.
ஆர்.எஸ்.எஸ்., இப்போதும், அதே நிலைப்பாடுடன்தான் உள்ளது. சமீபத்தில் நடந்த மகா கும்பமேளாவில், சாமியார்கள் ஒரு மாற்று அரசியலமைப்புச் சட்டத்தை முன்வைத்துள்னர். அது முழுக்க முழுக்க இந்து மத வெறி கூட்டத்தின் முன்மொழிவுகளை கொண்டதாகும்.
இவர்களை நாம் எப்படி எதிர்ப்பது?
மதவெறி விஷயத்தில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் பாஜகவை எதிர்த்தால் போதாது. சாதி ஒடுக்குமுறையை எதிர்ப்பது, வர்க்கச் சுரண்டலை எதிர்ப்பது, அனைத்து வகையான அநீதிகளையும் எதிர்ப்பது என்று ஒரு முழுமையான கண்ணோட்டத்துடன் எதிர்த்து களமாடினால்தான் நாம் இவர்களை எதிர்க்கமுடியும். அதைத்தான் இந்தியாவில் உள்ள பல முற்போக்கு இயக்கங்கள் செய்கிறார்கள்; அதில் பலருக்கும் பங்குண்டு. ஆனால், இது வெறும் சில நல்ல மனிதர்களின் கருத்துகளினால் மட்டும் அடையக்கூடிய விஷயமல்ல. விவசாயிகளுக்கு எதிரான சட்டம் எப்படி உடைக்கப்பட்டது? நல்ல மனிதர்கள் அவர்கள் கருத்துக்களை கூறியதாலா? கடுமையான போராட்டத்திற்குப் பிறகே உடைக்கமுடிந்தது.
வரலாறு தரும் பாடம்
வரலாறு நமக்குக் கற்றுக்கொடுக்கும் படிப்பினை, போராட்டங்கள் இல்லாமல் வெற்றிகள் இல்லை என்பதே. இந்திய அரசியல் சாசனம் மக்களுடைய போராட்டங்களின் பின்புலத்தில் உருவாக்கப்பட்டது. 1945 – 1947 ஆண்டுகளில், ஒன்றுபட்ட வங்காளத்தில் தெபாகா போராட்டம் நடந்து கொண்டிருந்தது. சாகுபடி செய்யும் விவசாயிக்கு பங்கை உயர்த்தித்தர வேண்டும் எனக் கோரிய வங்கப் போராட்டம், அசாம் சுமேர் பள்ளத்தாக்கில் சாகுபடி உரிமைகளுக்கான விவசாயிகளின் போராட்டங்கள் நடந்தன. நாக்பூருக்கு வெகு அருகில் இருந்த வார்லி பகுதியில் ஆதிவாசிகளை வெளியேற்றுவதற்கான ஒரு தந்திரமாக, அவர்களின் நிலங்களை ஆங்கில அரசு, அரசின் சொத்தாக அறிவித்தது. அங்கு ஆதிவாசிகள் நடத்திய மகத்தான போராட்டம் நிலங்களை ஆதிவாசிகளுக்கு மீட்டுக் கொடுத்தது.
அரசியலமைப்புச் சட்டத்தின் வரலாற்றுப் பின்புலம்
அரசியல் அமைப்புச் சட்டம் உருவானதற்கு பின்னால் எந்த சமூக சக்திகள் செயல்பட்டன என்பதை பார்க்கும் பொழுது, 40களில் நடந்த பல மக்கள் போராட்டங்களின் பங்கை காணமுடியும். விடுதலைப் போராட்டம் என்பது ஆங்கிலேயரை எதிர்த்த அரசியல் விடுதலைக்கான போராட்டம் மட்டுமல்ல; உழைப்பாளி மக்களின் விடுதலைக்கான போராட்டமும் அதில் இணைந்திருந்தது. அப்படி இணைந்ததனால்தான் போராட்டத்திற்கு மக்கள் சக்தியால் பெரும் வலிமை கிடைத்து, அது வெற்றியும் அடைந்தது. கேரளாவில் புன்னப்புரா வயலார், தமிழ்நாட்டில் கீழத்தஞ்சையில், நிலவுடமையாளர்களின் சவுக்கடி, சாணிப்பால் கொடுமைகளை எதிர்த்த மகத்தான போராட்டம் என விவசாயிகளின் போராட்டங்கள் நடந்தன. உழைக்கும் மக்களின் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்படடன. சீனிவாசராவ் தலித் விவசாயத் தொழிலாளர்களிடம் “துண்டைத் தோளில் போடு; அடித்தால் திருப்பி அடி” என்றார். சாதி, வர்க்க ஒடுக்குமுறைகள் என இரண்டுமே பேசப்படவேண்டியவை என்பதை இவை எடுத்துக்காட்டின. இத்தகைய போராட்ட பாரம்பரியத்தை நமது அரசியல் சாசனத்தின் பின்புலமாகப் பார்க்கவேண்டும். இவையே நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கான உருவாக்கத்திற்கு அடித்தளம் இட்டன.
1940 களில் விவசாயிகள் போராட்டத்தோடு, நாடு முழுவதும் போராட்ட கொந்தளிப்பு இருந்ததது. 1946-இல், ராயல் நேவி கலகம் என அழைக்கப்பட்ட கப்பற்படைப் புரட்சி நடந்தது. அந்தப் போராட்டத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள் என இணைந்து போராடினார்கள்; வெள்ளை அரசு கதிகலங்கியது. இந்திய தேசிய காங்கிரஸ் எப்படி இதைக் கையாள்வது என்று குழம்பி நின்றது. சிலர் வெள்ளையருக்கு ஆதரவாக அவர்கள் பக்கம் நின்றனர். மகாத்மா காந்தி, கலகத்தை நாம் ஆதரிக்க முடியாது; நாளைக்கு நாம் ஆட்சிக்கு வருவோம் என்ற பாணியில் பேசினார். ஆனால், கப்பற்படை புரட்சியை முழுமையாக ஆதரித்தது பம்பாய் தொழிலாளி வர்க்கம்.
இந்த வரலாற்றுப் பின்புலத்தில் அரசியல் சாசனம் எழுதப்பட்டது என்பதை புத்தகங்களில் படிக்க முடியாது. அரசியல் சாசனம் உள்ளடக்கம் என்பது தற்செயலான நிகழ்வோ, அறிஞர்களின் படைப்போ மட்டுமல்ல. அறிஞர்களுக்கு அதில் பங்கு உண்டு; ஆனால், ஒரு முற்போக்கு திசைவழியில் அவர்களைச் சிந்திக்க வைத்தது, களத்தில் நிகழ்ந்த மக்கள் போராட்டங்களே.
இந்திய அரசியல் சாசனத்தின் தனித்துவம்
அரசியல் சாசனத்தின் பிரிவுகளில் என்ன உள்ளன என்பது கல்விப்புலம் சார்ந்து தெரிந்து வைத்திருப்பது மட்டுமின்றி, அதன் மையக்கரு என்ன என்பதைப் பார்க்கவேண்டியது மிக முக்கியம். இந்திய அரசியல் சாசனம், அது எழுதப்பட்ட காலகட்டத்தில் உலகிலேயே மிகவும் முற்போக்கான ஆவணம். ஐரோப்பிய நாடுகளில் இவ்வளவு முற்போக்கான ஆவணம் இல்லை. 1789-இல், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று பிரான்ஸில் பேசியிருக்கலாம். ஆனால், அன்று நடந்துவந்த அடிமை வியாபாரத்தில் பிரான்சும் பங்கேற்றது. அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று எல்லாம் பிரகடனம் செய்தாலும் இந்த விழுமியங்கள் வெள்ளைக்காரர்களுக்கு மட்டுமே. கருப்பின மக்களையும் ஏகாதிபத்திய வல்லரசுகள் கைப்பற்றி ஆட்சி செய்த காலனி நாடுகளின் மக்களை அவர்கள் நடத்திய விதத்தை நாம் அறிவோம்.
நல்ல இலக்கியங்களை ரசிப்பதும், பிரஞ்சு புரட்சி வியந்து பாராட்டுவதும் மட்டும் போதாது. அவை கூறும் செய்தி என்ன என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். சமூகத்தில் கொடிய ஏற்றத்தாழ்வுகளும் வர்க்க சுரண்டலும் உள்ளன எனும் விமர்சனப் பார்வையும் தேவை. அமெரிக்க இலக்கியத்தில் உப்டன் சிங்க்ளேர் போன்ற பல எழுத்தாளர்கள் அமெரிக்க சமுதாயத்தின் கேடுகளைத் தங்கள் எழுத்துகளில் வெளிக் கொண்டுவந்தனர். இந்தியாவிலும் அப்படிப்பட்ட எழுத்துகள் உள்ளன. இங்கு பிரேம்சந்த்தின் எழுத்துகள் அந்தப் பணியைச் செய்தன. இன்னும் பலர் உள்ளனர். தமிழ் மொழியில் முற்போக்கு எழுத்தாளர்கள் உழைப்பாளி மக்களின் வாழ்வை பற்றியும் வர்க்க வெகுஜன போராட்டங்கள் பற்றியும் பல படைப்புகளை நமக்கு அளித்துள்ளனர்.
இன்று நாம் அரசியல் சாசனத்தின் விழுமியங்கள் குறித்துப் பேசும்போது, மிக நவீனமான சமத்துவக் கொள்கைகள் அதில் உள்ளன. வரவேற்கத்தக்க பல அம்சங்கள் உள்ளன. அதில் அம்பேத்கரின் பங்கு மகத்தானது. இட ஒதுக்கீடு, ஒடுக்கப்பட்ட மக்களின் நிலைமை, அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அம்பேத்கர் வெளிக்கொண்டு வரவில்லையென்றால் அவை குறித்த கவலை யாருக்கும் பெரிதாக இருந்திருக்காது. அதுபோல இந்தியாவில் பல சமூக சீர்திருத்தவாதிகள் இருந்தனர்.
இடதுசாரி இயக்கத்தின் மகத்தான பங்களிப்பு
பைத்தியக்காரர்களின் கூடாரம் என்று விவேகானந்தரால் சொல்லப்பட்ட கேரளாவில் இந்த நிலைமை மாறியது எப்படி? எப்படி அவர்கள் நம்மை விட இது போன்ற விஷயங்களில் முன்னேறி உள்ளனர்? அங்கு நடந்த சமூக சீர்திருத்த இயக்கமும், பொதுவுடமை இயக்கமும் தான் கேரளாவை ஒரு நவீன நாடாக, நாகரீக நாடாக மாற்றியது. இங்கே தமிழ்நாட்டில் சில முன்னேற்றகரமான அம்சங்கள் உள்ளன; அதை நான் மறுக்கவில்லை. கேரளாவையும் தமிழ்நாட்டையும் ஒப்பிட்டால், அனைத்து பகுதி மக்களையும் மேம்படுத்திய மாடல் எது என்று பரிசீலிக்கப்பட வேண்டும். எது சிறந்தது என்று தீர்ப்பு வழங்கவில்லை. ஆனால், கேரளாவில் மகத்தான நிலச்சீர்த்திருத்தம் நடந்தது. இந்தியாவில் மூன்று மாநிலங்களில் நிலச்சீர்திருத்தம் நடந்தது. மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா என இடதுசாரிகள் ஆட்சி செய்த மாநிலங்களில் நிலச் சீர்திருத்தம் முழுமையாகச் செய்தார்கள். அதனால் கிராமப்புறங்களில் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தைத் தகர்க்கமுடிந்தது. சாதி ஆதிக்கத்தை தகர்க்க அது உதவியது.
தமிழகத்தில், கிராமப்புறங்களில் பெரும் நிலவுடமையாளர்களின் ஆதிக்கம் இல்லை என்று சொல்லமுடியுமா? முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்கமுடியாது. ஆனாலும் முழுவதுமாக நிலப்பிரபுத்துவம் அழிந்துவிட்டதா?. ஜெயரஞ்சன் அவர்கள் ‘தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம வீழ்ந்த கதை’ என்று புத்தகம் எழுதியிருக்கிறார். நல்ல புத்தகம். காவிரி பாசனப் பகுதிகளில் நடந்த மாற்றங்கள் என அவர் சொல்வதில் பல உண்மைகள் உள்ளன. ஆனால், நிலப்பிரபுத்துவம் அழிந்து விட்டது என்று சொல்வது கதை. இன்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பெரும் நிலவுடைமையாளர்கள் உள்ளனர் என்பது மட்டுமல்ல; நிலவுடைமையாளர்கள் கீழ் உள்ள குத்தகை விவசாயிகளில் ஒரு பகுதியினருக்கு உறுதியான நில உரிமை கிடைத்துள்ளது. ஆனால், குறிப்பிடத்தக்க பகுதியினருக்கு நிலமும் இல்லை. சாகுபடி செய்யும் வாய்ப்பும் இல்லை. கணிசமான பகுதி கிராம மக்கள் விவசாயத் தொழிலாளிகளாக, இதர உடல் உழைப்பு தொழிலாளிகளாக மாறியுள்ளனர்.
தமிழக கிராமங்களில், சாதிய ஒடுக்குமுறை உட்பட, பல ஜனநாயக உரிமைகள் இன்றும் மறுக்கப்படுவதற்கான காரணங்களை, நிலவுடைமை உறவுகளோடு பொருத்திப் பார்க்காமல் நாம் புரிந்துகொள்ள முடியாது. பொதுவாக, சாதிய வன்மம் என ஒரு வரியில் கடந்துவிட முடியாது. நிலவுடைமை உறவுகளுக்குப் பக்கபலமாக சாதிய ஒடுக்குமுறையும், சாதிய ஒடுக்குமுறைக்கு பக்கபலமாக நிலவுடைமையாளர் ஆதிக்கமும் இருந்தது. இவை இரண்டையும் எதிர்த்து தமிழகம் முழுவதும், இனாம் பகுதி, ஜமீன் பகுதி என அனைத்து நிலவுடைமைப் பகுதிகளிலும் போராடியது இடதுசாரி இயக்கம்.
காலத்தின் தேவை
அம்பேத்கரின் சிறப்பு என்னவென்றால், அவர் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் இணைக்கப் பாடுபட்டார். இன்று மிக வருத்தமான விஷயம், கிராமங்களில் முக்கியமான முரண்பாடு சாதி அமைப்பால் ஒடுக்கப்பட்ட இரு பிரிவு மக்களிடையே நிலவுகிறது. நிலங்கள் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் கைகளில் பெரும்பாலும் வந்துள்ளது. ஆனால், தலித் மக்கள் இன்னும் குறிப்பிடத்தக்க அளவிற்கு நிலமற்றவர்களாகவே உள்ளனர்.
கிராமப்புறங்களில் பழைய ஆதிக்க சாதியினர்களில் பெரும் பகுதியினர் நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இடம் பெயர்ந்துவிட்டனர். இன்று கிராமங்களில், நிலவுடைமையாளர்களான இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், அந்த நிலங்களில் வேலைசெய்யும் தலித் மக்களுக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளன. உழைப்பாளி மக்களை சாதி வேறுபாடுகளைத் தகர்த்து அவர்களை ஒன்றுபடுத்தி, அவர்களது உடமைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் இணைந்த போராட்டங்களை நடத்தச் செய்வதுதான் இன்று காலத்தின் தேவையாக உள்ளது. அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு உறுதி அளித்த விஷயங்களை அடைய, இத்தகைய அணுகுமுறை நமக்குத் தேவை. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஊரக உழைக்கும் மக்களை ஒன்றிணைத்து ஓரணியில் சேர்ப்பதும், சாதிய ஒடுக்குமுறையையும், வர்க்கச் சுரண்டலையும் சேர்த்தே எதிர்ப்பதும் நம்முன் உள்ள பணி.
இந்தியாவைப் பாதுகாக்க
நாம் தமிழகத்தில், சமூகநீதி பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சாதி மறுத்து திருமணம் செய்தவர்களை, அவர்களது பெற்றோர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் நாம் பார்க்கிறோம். தமிழகத்தில் இன்னும் நெடிய போராட்டம் நடத்தவேண்டிய தேவை இருக்கிறது. பெரியாரின், அம்பேத்கரின் மகத்தான பங்களிப்புகளை முழுமையாக்க வேண்டுமென்றால், வர்க்கச் சுரண்டல், சாதிய ஒடுக்குமுறை இரண்டையும் இணைத்தே எதிர்க்கவேண்டும். சாதி மத வேறுபாடின்றி உழைப்பாளி மக்களை ஒன்றுதிரட்ட வேண்டும்.
இன்றைக்கு நம் முன் இருக்கும் மிகப்பெரிய அபாயம், மதவெறி ஆர்.எஸ்.எஸ். என்பதை மறுப்பதற்கு இல்லை. அரசியலமைப்புச் சட்டம் வெளியான அன்று ஆர்.எஸ்.எஸ்.-இன் ‘ஆர்கனைசர்’ பத்திரிக்கை ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வரவே கூடாது; நமக்குத் தேவை மனுநீதி தான். மனு சாஸ்திரம் தான் இந்தியாவின் அரசியல் சாசனமாக இருக்கவேண்டும் என்று அக்கட்டுரை கூறுகிறது. அவர்கள் இன்றும் கும்ப மேளாவில் அதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த எதிரியை இனம் கண்டு வீழ்த்த வேண்டிய முக்கியமான தேவை இருக்கிறது. அதற்கு மக்களின் கோரிக்கைகளைக் கையிலெடுக்க வேண்டும்; இந்துத்துவா எதிர்ப்பு மட்டும் போதாது.
கார்ப்பரேட் – இந்துத்துவா கூட்டணி
இந்துத்துவா சக்திகள் கார்ப்பரேட்களை முழுமையாக ஆதரிக்கிறார்கள். கார்ப்பரேட் – இந்துத்துவா ஆட்சி இங்கு நடக்கிறது. ஏராளமான சலுகைகளும் நிலங்களும் அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. நாம் இங்கு நிலச் சீர்திருத்தம் பற்றிப் பேசுகிறோம். அவர்கள் வேறொரு நிலச் சீர்திருத்தம் பற்றி பேசுகின்றனர். தாராளமயக் கொள்கை என நிலத்தை அவர்களிடம் ஒப்படைக்கச் சொல்கிறார்கள். சாகுபடி செய்வது உங்களுக்கு நஷ்டம். நாங்கள் திறமையான முறையில் அதைச் செய்கிறோம். நீங்கள் எங்களிடம் கூலி வாங்கிக் கொள்பவராக வேலை செய்யுங்கள் என்கின்றனர். இதுதான் கார்ப்பரேட் நிலச்சீர்திருத்தம். “பல திட்டங்களை செயல்படுத்த, எந்த மறுப்பும் இன்றி நிலத்தை அவர்களுக்குத் தந்துவிட வேண்டும்; இல்லையெனில் பெருமுதலாளிகள் முதலீட்டை வேறு நாடுகளுக்குக் கொண்டு சென்றுவிடுவார்கள்; வெளிநாட்டு முதலாளிகளை காலில் விழுந்து கெஞ்சி இந்தியாவிற்கு அழைக்க வேண்டும்”, என்றே நமக்குச் சொல்லப்படுகிறது.
சாம்சங் போராட்டத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு சமூக நீதி மாநிலத்தில் சாம்சங் போராட்டம் நடக்கிறது. தொழிற்சங்கத்தைப் பதிவு செய்யவே அரசு யோசிக்கிறது. போராட்டம் மூலமாக அதை சாதித்துவிட்டனர் என்பது வேறு. தமிழக அரசும் இடதுசாரிகளும் இணைந்து பா.ஜ.க. அரசை எதிர்க்க வேண்டியுள்ளது. அது காலத்தின் கட்டாயம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மகத்தான விழுமியங்களைப் பாதுகாக்க அது அவசியம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சமத்துவம், சமூக நீதிக் கருத்துகள் ஏராளம். அந்தப் போராட்டத்தை நடத்தும்போது உழைப்பாளி மக்களை ஒன்றுதிரட்டாமல், மதவெறியர்களைத் தனிமைப்படுத்தாமல் கார்ப்பரேட் கொள்ளையர்களைத் தனிமைப்படுத்தாமல், இந்திய ஒற்றுமையையும் பாதுகாக்க முடியாது; இந்திய ஜனநாயகத்தையும் பாதுகாக்கமுடியாது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
