ஈரானை சீண்டும் ஏகாதிபத்திய கொக்கரிப்பு : எத்தனை காலம் அமைதி நீடிக்கும்?
– பிரபீர் புர்கயஸ்தா
இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர்நிறுத்தம் நீடிக்கிறதென்றால், ஈரானின் அணுசக்தி நிறுவனங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டிரம்ப் இனி தாக்குதல் போதும் என்று முடிவு செய்தால், இஸ்ரேல்-ஈரான் இடையிலான போரில் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று தெரியக்கூடும்.
இப்போதும் காசாவில் இனப்படுகொலை தொடர்கிறது. அங்கு இரண்டு மில்லியன் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலியப் படைகளின் தாக்குதல் மரணத்தை வேகப்படுத்தும்; அல்லது பட்டினியால் மெல்ல மெல்ல சாகச் செய்யும். இந்த இரண்டு வாய்ப்புகள்தான் அந்த மக்கள் முன்னே உள்ளன. காசாவில் நடந்துவரும் இனப்படுகொலை தினமும் நம் திரைகளில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. இந்த இனப்படுகொலையால் ஏற்படும் எந்த விளைவுகளிலிருந்தும் மேற்குலகம் தம்மை பாதுகாக்குமென இஸ்ரேல் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறது.
இருள் சூழ்ந்த இந்த நேரத்திலும், நேர்மறையான நம்பிக்கை கொள்ளவே நான் விரும்புகிறேன். ஈரானை இஸ்ரேல் இரத்தக் களமாக்கி இருக்கலாம். அவர்களின் பல உயர்மட்ட இராணுவ அதிகாரிகளையும் விஞ்ஞானிகளையும் கொன்றிருக்கலாம். அவர்களின் சில அணுசக்தி வசதிகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்களை அழித்திருக்கலாம். ஆனால் போரின் 12வது நாளிலும் கூட, இஸ்ரேலின் நகரங்கள், இராணுவ தளங்கள், முக்கிய உள்கட்டமைப்புகளைத் தாக்கும் ஈரானின் திறன் தொடர்ந்தது. இஸ்ரேல் நாடு, டிரம்ப் சொல்லியபடி போர் நிறுத்த முடிவை ஏற்க இந்த வலிமையே வழிவகுத்தது. இஸ்ரேலிடம் ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் தீர்ந்துவிட்டதாகவும், அமெரிக்கா தன்னுடைய தளங்கள் மீது ஈரான் முன்னெடுக்கும் சாத்தியமான ஈரான் தாக்குதல், உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிரான தொடர்ச்சியான போர் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இஸ்ரேலுக்கு மேலும் ஆயுதங்கள் தர முடியாத நிலையில் இருப்பதாகவும் மேற்கத்திய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்தன.
ஈரானில் உள்ள பெரும்பாலான அணுசக்தி வசதிகளை இஸ்ரேல் தகர்த்திட முடியும் என்றாலும், ஒரு மலையின் அடியாழத்தில் கட்டப்பட்டுள்ள ஃபோர்டோ யுரேனியம் செறிவூட்டல் ஆலையை தகர்ப்பதற்கு அமெரிக்காவின் உதவி தேவைப்படும் என்பது ஆரம்பத்திலிருந்தே தெளிவாக இருந்தது. 13,605 கிலோ எடையுள்ள GBU-57 மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டர் (MOP) என்ற ஆயுதம் மட்டுமே ஃபோர்டோவின் யுரேனியம் செறிவூட்டல் ஆலையை அழிக்கத் தேவையான ஆழத்திற்குச் செல்ல முடியும். மேலும் அமெரிக்க B2 குண்டுவீச்சு விமானங்கள் மட்டுமே இந்த குண்டுகளை சுமந்து செல்ல முடியும். ஃபோர்டோவை அழிக்கும் பணியை நிறைவேற்ற அமெரிக்காவின் உதவி தேவைப்படும் என்பதை இஸ்ரேல் தெளிவாக முன்னறிவித்திருந்தது. இது ஆரம்பத்திலிருந்தே டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டமாக இருக்கலாம். இதில் அமெரிக்கா-ஈரான் இடையில் நடந்து வந்த பேச்சுவார்த்தைகள் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை முன்னெடுக்க முடியாத ஒரு தடுப்பாக இருந்தன. இப்போது எஞ்சியிருக்கும் ஒரே கேள்வி, போரை நிறுத்துவதிலும், ஈரானுடன் உண்மையாக அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதிலும் டிரம்ப் எவ்வளவு தீவிரம் காட்டக்கூடும் என்பதுதான்.
மற்ற பல பிரச்சனைகளை இப்போது நான் விவாதிக்கவில்லை. ஃபோர்டோ ஆலை மிக அடியாளத்தில் அமைக்கப்பட்டிருப்பதால், எம்.ஓ.பி குண்டுகள் பயனளிக்காமல் தோல்வியடையவும் சாத்தியங்கள் உள்ளன. அமெரிக்க ஊடக கூற்றுகளின்படி, ஈரானிய அணுசக்தி திட்டம் சில மாதங்கள் அளவிலான பின்னடைவையே சந்தித்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை கருதுகிறது. ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள புதிய வசதிகள் மிகவும் ஆழமாக தோண்டப்பட்டிருப்பதாகவும், அமெரிக்க எம்.ஓ.பி குண்டுகளால் தகர்க்க முடியாத அளவுக்கு அதன் கூரைகள் சிறப்பாக வலுவூட்டப்பட்டிருப்பதாகவும் வல்லுநர்கள் ஏற்கனவே கூறி வந்தனர். ஃபோர்டோ மற்றும் நடான்ஸில் உள்ள ஈரானிய அணுச் செறிவூட்டல் ஆலைகள் இடிக்கப்பட்டிருந்தாலும், ஈரானியர்கள் அதனை காலி செய்திருந்தனர். அவர்கள் 9-10 குண்டுகளை உருவாக்குவதற்கான வலிமையை பெற்றுள்ளனர். ஈரான் நாடு அணு ஆயுதங்களை உருவாக்க விரும்புகிறதா என்ற கேள்வி எப்போதும் சந்தேகத்திற்க்குரிய ஒன்றே. அது தனக்கும், ஒரு பெரிய மேற்கு ஆசிய நாடு என்ற முறையிலும், பெரிய பொருளாதாரம் என்ற நிலையிலும் ஒரு அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான பேரத்தில் இதனை மேற்கொள்கிறதா? டிரம்ப் நிர்வாகத்தின் முன் உள்ள கேள்வியே இது. அமெரிக்காவின் உதவி இல்லாமல், இஸ்ரேல் மட்டுமே ஈரானை அடக்கிட முடியாது என்பதை இந்த போர் காட்டியுள்ளது. மேலும் அமெரிக்கா இந்த போரில் ஈடுபட்டால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்களும் பாதிக்கப்படும் என்பதும் தெரிகிறது
அமெரிக்கா தன்னுடைய கப்பல்களைத் தவிர, குறைந்தது 19 தளங்களில் இராணுவப் படைகளை வைத்துக் கொண்டுள்ளது. மேற்கு ஆசியாவில் சுமார் 40,000-50,000 இராணுவ வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. 12 நாள் போரில், சிறிய தலையீட்டை மட்டுமே அமெரிக்காவால் செய்ய முடிந்தது. ஒரு சில அணு சக்தி கட்டமைப்புகளின் மீது மட்டுமே அது தலையிட்டது. ஈராக் போரில் ஈடுபட்ட ஜார்ஜ் புஷ் போலல்லாமல், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த தாக்குதலை ஃபோர்டோ, இஸ்பஹான் மற்றும் நடான்ஸில் உள்ள அணுசக்தி வசதிகள் மீதான ஒரு வரையறுக்கப்பட்ட தாக்குதல் என்றே கவனமாக அழைத்தார். பின்னர் போர் நிறுத்தத்திற்கான அழைப்பினையும் விரைவாக மேற்கொண்டார். மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள், அந்தப் பிராந்தியத்தில் இராணுவ ரீதியாக தலையிடும் சக்தியை அமெரிக்காவிற்கு அளிப்பது போலவே, இவை ஏவுகணை தாக்குதல்களில் இலக்காகக் கூடியவை ஆகும். ஜெனரல் சுலைமானி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவிடம் முன்னறிவிப்பு செய்து, அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்த ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் நடத்தியது. அமெரிக்க வீரர்கள் அனைவரும் பதுங்கு குழிகளில் இருந்தபோதிலும், ஈரானின் ஏவுகணை தாக்குதல்களுக்குப் பிறகு சுமார் 50 அமெரிக்க வீரர்கள் அதிர்ச்சியால் ஏற்பட்ட மூளைக் காயத்திற்கான சிகிச்சையை பெற்றுக் கொள்ள நேர்ந்தது.
போர் குறித்து சில மதிப்பீடுகளை செய்வதற்கு முன், எழுப்பப்படும் அடிப்படையான பிரச்சனைகளைப் பற்றி பார்த்திடுவோம். G7 மற்றும் நேட்டோ நாடுகளின் ஆதரவு பெற்ற இஸ்ரேல் நாடு, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை ஈரான் (NPT) மீறிவிட்டது என்று வாதிடுகிறது. எனவே ஈரானின் அணுசக்தி மற்றும் பிற உள்கட்டமைப்புகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்கி அழிப்பது “சட்டபூர்வமானது” என்று வாதிடுகிறது. இவை அப்பட்டமான பொய்களே ஆகும். NPT ஒப்பந்தம் அணுச் செறிவூட்டலை தடை செய்யவில்லை. அணு ஆயுதங்களை உருவாக்குவதை மட்டுமே தடை செய்கிறது. மேலும், இஸ்ரேல் நாடு NPT ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. மேலும், 90-200 அணு ஆயுதங்களை தன் வசம் வைத்துள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று IAEA தலைவர் க்ரோசி, அல் ஜசீரா , CNN ஆகிய ஊடகங்களிடம் தெரிவித்தார். IAEA அணுசக்தி வல்லரசுகளுடன் நெருக்கமாக செயல்படுவதால், IAEA உடன் ஈரான் நாடு மேலும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்பது க்ரோசியின் வாதம். ஈரான் அவ்வாறு செய்யுமென்றால், அந்த தகவல்கள் ஈரான் நாட்டின் அணு சக்தி அமைப்புகளை இஸ்ரேல் குறிவைத்து தாக்குவதற்குத்தான் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று தோன்றுகிறது. ஆம், ஈரான் யுரேனியத்தை 60% அளவிற்கு செறிவூட்டியது. அதிலிருந்து 90% செறிவூட்டல் செய்வதற்கு சில வாரங்கள் ஆகும். ஆனால் இதை வைத்து பிளவுபடும் அணு எரிபொருள் கிடைக்கலாம். ஆனால் ஒரு அணு குண்டை உருவாக்க வேண்டுமென்றால், ஈரான் அதற்கான ஒரு முன்மாதிரியை சோதிப்பது உட்பட பல படிக்கட்டுகளை தாண்ட வேண்டும். அனைத்து பகுதிகளும் வடிவமைக்கப்பட்டபடியே செயல்படுகின்றன என்பதை உறுதி செய்வதற்கும், அணு ஆயுதத்தை உருவாக்கவும் பல மாதங்கள், ஒரு வருடத்துக்கு மேலும் ஆகலாம் என்று வல்லுநர்களும், மேற்கத்திய அதிகாரிகளும் கூறுகின்றனர். அயதுல்லா கமேனி அணு ஆயுதங்களுக்கு எதிராக விதித்திருக்கும் மதத் தடையை நீக்கினால்தான் அது சாத்தியம். அதை அவர் செய்யவில்லை.
30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரான் ஒரு குண்டுக்கு மிகக் குறுகிய தூரத்தில் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுய் பிரச்சாரம் செய்து வருகிறார். 2012 இல் ஐ.நா.வில் அவர் அளித்த கார்ட்டூன் கிராஃபிக் படி, ஈரான் குண்டுக்கு சில மாதங்கள் மட்டுமே தொலைவில் இருந்தது என்பதை யாரும் மறக்கவில்லை. அந்த வாதத்தை முன்வைத்துதான் இஸ்ரேல் தனது தாக்குதலையும், அமெரிக்க தாக்குதலையும் நியாயப்படுத்துகிறார்கள். டிரம்பும் அதை நம்புகிறார்.
ஈரானின் குண்டு தயாரிப்புத் திறனை அமெரிக்கா “அழித்துவிட வேண்டும்” என்று விரும்பும், ட்ரம்ப் உள்ளிட்டு, அனைவருக்கும் உள்ள பிரச்சனை என்னவென்றால், அதுதான் சரியாக JCPOA அமைப்பின் நோக்கம். JCPOA அமைப்பில் இருந்து ட்ரம்ப் 2018இல் வெளியேறினார்! பல்வேறு பொருளாதாரத் தடைகள், ஈரானின் அணுசக்தித் திறன் மீதான இஸ்ரேல்-அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் ஏன் JCPOA-வின் திருத்தப்பட்ட பதிப்பில் மீண்டும் நுழைய வேண்டும்? அல்லது தனது கூடுதல் வசதிகளை IAEA மேலாண்மைக்கு ஏன் திறந்து விட வேண்டும்? அதன் மூலம் எதிர்கால தாக்குதல்களுக்கு அவை இலக்காகக் கூடும் என்ற அச்சம் உள்ளதே! பிரச்சனை என்னவென்றால், இஸ்ரேல் வசமுள்ள அணு ஆயுதங்களை கொண்டாடியபடியே, மேற்கு ஆசியாவில் வேறு எந்த நாட்டிற்கும் அணு ஆயுதம் வேண்டாம் என்று சொல்லும் அமெரிக்கா மற்றும் முக்கிய ஐரோப்பிய சக்திகளின் கருத்துக்களை அவர்கள் எப்படி ஏற்பார்கள்?
இஸ்ரேலின் அணு ஆயுதங்களை பற்றி சுருக்கமாகப் பார்ப்போமென்றால், இஸ்ரேலில், அமெரிக்க உதவியுடன் கட்டப்பட்ட டிமோனா அணு உலைகள் உள்ளன. மதிப்பீடுகளின்படி, இஸ்ரேலின் ஆயுதக் களஞ்சியத்தில் 100-150 அணு ஆயுதங்களும் , 2-3 மடங்கு அதிகமான ஆயுதங்களை உருவாக்குவதற்கான கூடுதல் புளூட்டோனியம் இருப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில், தான் விரும்பிய அளவுக்கு அணு ஆயுதங்களை இஸ்ரேல் உருவாக்கி வருவதை மேற்கு நாடுகள் சட்டப்பூர்வமானதாகவே பார்க்கின்றன. பிரான்சும், அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு அதன் குண்டுகளை உருவாக்கிட உதவி செய்தன என்பது ஊரறிந்த ஒன்றாகும். இது மோர்டெகாய் வனுனு, சண்டே டைம்ஸ் இதழில் வெளியிட்ட புகைப்படங்கள், ஆவணங்களின் வழியாக அம்பலமானது. இந்தச் செயலுக்காக அவர் பெரிய விலை கொடுக்க நேர்ந்தது. 18 ஆண்டுகள் சிறையில் வாடினார். அதுவும் அதில் 11 ஆண்டுகள் தனிமைச் சிறையில் இருந்தார். இஸ்ரேல் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு உடந்தையாக இருந்த நாடுகள், ஈரான் நாடு தன் வசம் அணு ஆயுதங்களை வைத்திருக்கக்கூடாது என்று சொல்வது மட்டுமல்லாமல், அதன் அணுசக்தி உள்கட்டமைப்பு முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் என்று கூப்பாடு போடுவதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது?
தமிழில்: இரா. சிந்தன்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
