கேரளா LDF அரசாங்கத்தின் சாதனைகளும் சந்திக்கும் சவால்களும்!
அன்வர் உசேன்
கேரளாவில் பினராயி விஜயன் அரசாங்கம் 9 ஆண்டுகளை நிறைவு செய்து பத்தாவது ஆண்டில் நுழைந்துள்ளது. 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் வென்ற LDF மீண்டும் 2021இல் வென்றது. இது ஒரு வரலாற்று சாதனை ஆகும். ஏனெனில் கேரள மக்கள் ஒரே கூட்டணியை இரண்டாவது முறை தேர்வு செய்தது இல்லை. இப்பொழுது 2026ஆம் ஆண்டு கேரளாவிற்கு சட்டமன்ற தேர்தல்கள் நடக்க உள்ளன. பினராயி விஜயன் அரசாங்கம் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர் என எதிரிகள் ஓயாது பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் கள நிலவரம் அப்படி அல்ல. ஏனெனில் LDF அரசாங்கம் பல சாதனைகளை படைத்துள்ளது. கேரளாவின் சமூக பொருளாதார முகத்தை மாற்றியுள்ள இந்த சாதனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. எனவே எதிரிகள் பல அரசியல் உபாயங்களை உருவாக்கி வருகின்றனர். இதனை நிலம்பூர் இடைத்தேர்தல் நிகழ்வுகள் வெளிப்படுத்தின. ஒருபுறம் காங்கிரசும் முஸ்லீம் லீகும் ஜமாயத்-இ-இஸ்லாமி மற்றும் SDPI ஆகிய மதவாத அமைப்புகளுடன் கை கோர்க்கிறது. மறுபுறம் பா.ஜ.க. வேட்பாளர் தாங்கள் LDFஐ தோற்கடிக்க தமது வாக்குகளின் ஒரு பகுதியை காங்கிரசுக்கு மடைமாற்றினோம் என பகிரங்கமாக வெளிப்படுத்தினார். கேரளாவில் LDF ஒரே சமயத்தில் பெரும்பான்மை, சிறுபான்மை வகுப்புவாத அபாயத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த சவால்களை LDF முறியடிக்கும் என்பது நிச்சயம். அதற்கு LDFஇன் சாதனைகள் பக்கபலமாக நிற்கும்.
மாநில அரசாங்கத்தின் வாய்ப்புகளும் வரையறைகளும்
இந்தியாவில் ஒரு மாநில அரசாங்கம் செயல்படுவதன் வாய்ப்புகளும் வரையறைகளும் என்ன? நமது கட்சியின் திட்டம் 7.71 பத்தி இதுபற்றிக் கீழ்கண்டவாறு தெளிவாகக் கூறுகிறது:
“மக்களுக்கு நிவாரணங்களை தரும் திட்டங்களை அமலாக்குவதற்கு கடமைப்பட்டுள்ள அரசாங்கங்களை உருவாக்கும் வாய்ப்புகள் தன் முன்னே வரும் பொழுது கட்சி அவற்றை பயன்படுத்தும். தற்பொழுது உள்ள வரையறைகளுக்குள் மாற்று கொள்கைகளை முன்வைக்கவும் அவற்றை அமலாக்கவும் கட்சி கடுமையாக உழைக்கும். அத்தகைய அரசாங்கங்களை அமைப்பது என்பது உழைக்கும் மக்களின் புரட்சிகர இயக்கங்களை வலுப்படுத்தும். அதன் மூலம் மக்கள் ஜனநாயக முன்னணி கட்ட ஏதுவாக அமையும். எனினும், இத்தகைய அரசாங்கங்கள் நாட்டின் அடிப்படை பொருளாதார அரசியல் பிரச்சனைகளை எவ்விதத்திலும் தீர்க்க இயலாது”
ஒரு மாநில அரசாங்கம் மாற்று கொள்கைகளை முன்வைத்து அவற்றை அமலாக்குவதன் மூலம் மக்களுக்கு சில முக்கிய நலத்திட்டங்களை அமலாக்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்பதை கட்சி திட்டம் தெளிவாக்குகிறது. இந்த அரசாங்கத்தின் நோக்கம் உடனடியான நிவாரணங்களை தருவது மட்டுமல்ல; மக்கள் ஜனநாயக முன்னணியை வலுப்படுத்துவதும் அடிப்படை இலக்கு ஆகும். அதே சமயத்தில் சமூகத்தில் எவ்வித அடிப்படை மாற்றங்களையும் மாநில அரசாங்கம் செய்துவிட இயலாது. உதாரணத்துக்கு சோசலிசத்தின் முதல் படியான மக்கள் ஜனநாயக சமூக மாற்றத்தை CPI(M) தலைமையிலான மாநில அரசாங்கம் உருவாக்க இயலாது. இந்த அடிப்படையில்தான் கேரளாவின் LDF அரசாங்கத்தின் செயல்பாடுகளை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
கூட்டாட்சி சிதைவும் அதிகார குவிப்பும்
ஒரு மாநில அரசாங்கம் எத்தகைய வரையறைகளை சந்திக்கிறது?
நமது அரசியலமைப்பு சட்டம் கூட்டாட்சி தத்துவத்தை வலியுறுத்துகிறது. வளமான மாநிலங்கள்தான் வலிமையான ஒன்றியத்தை உருவாக்க இயலும். ஆனால் மத்தியில் ஆண்ட அரசாங்கங்கள் மாநிலங்களுக்கான அதிகாரங்களை தொடர்ந்து பறித்து வந்துள்ளன. இந்த மையப்படுத்தும் போக்கு பா.ஜ.க. ஆட்சியில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. பா.ஜ.க. ஆட்சியில் அரசியல் சுயாட்சி மட்டுமல்லாது நிதி சுயாட்சி உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன. தனது “இந்துத்துவா ஒற்றை தன்மையுள்ள ஆட்சி” அமைய கூட்டாட்சி தத்துவம் தடையாக உள்ளது என பா.ஜ.க.வும் அதன் வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் நினைக்கின்றன. எனவே அதிகார குவிப்பு அதீதமாக நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம் மக்கள் நல திட்டங்களை அமலாக்கும் பொறுப்பு மாநில அரசாங்கங்களுக்கு! மறுபுறம் அதற்கான நிதி அதிகாரம் ஒன்றிய அரசின் கைகளில்! இத்தகைய முரண்பாடான, அநீதியான சூழலில்தான் ஒரு மாநில அரசாங்கம் செயல்பட வேண்டியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதியையும் திட்டங்களையும் மறுப்பதன் மூலம் ஒன்றிய அரசு மக்களின் அதிருப்தியை மாநில அரசாங்கங்கள் மீது திசைதிருப்புவதற்கான அனைத்து வழிகளையும் பயன்படுத்துகிறது.
தாராளமயத்துக்கு மாற்று கொள்கைகள்
இந்த மையப்படுத்தும் போக்குகளுடன் LDF அரசாங்கம் சந்திக்கும் இன்னொரு மிகப்பெரிய சவால், நாசகார நவீன தாராளமய பொருளாதார கொள்கைகளின் வலையில் சிக்காமல் மாற்று பொருளாதார கொள்கை அடிப்படையில் மாநில அரசாங்கத்தை வழி நடத்தும் கடமை ஆகும். பா.ஜ.க.வை எதிர்க்கும் பல முதலாளித்துவ கட்சிகள், தமது அரசாங்கங்களின் பொருளாதார கொள்கைகளை நாசகார, நவீன தாராளமய கொள்கைகளின் அடிப்படையிலேயே வகுக்கின்றன. இந்த பொருளாதாரக் கொள்கைகளுக்கும் பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கும் அடிப்படையில் எவ்வித வேறுபாடும் இல்லை. ஆனால் ஒரு LDF அரசாங்கம் இந்த திசைவழியில் பயணிக்க இயலாது. எனவே, நவீன தாராளமய கொள்கைகளுக்கு மாற்றான கொள்கைகளை வகுப்பதும், அதன் அடிப்படையில் மக்களுக்கு நிவாரணம் தேடுவதும் அவசியமாகிறது. இது ஒரு மிகப்பெரிய சவால் எனில் மிகை அல்ல.
நவீன தாராளமய கொள்கைகளுக்கு எதிரான வாக்குகளை பெற்று கிரீஸ் நாட்டில் ஆட்சி அமைத்த சிர்சியா எனும் இடதுசாரி இயக்கம் அதே தாராளமய கொள்கைகளின் வலையில் சிக்கி ஆட்சியை இழந்தது சமீபத்திய உதாரணம். இதே நிலை லத்தீன் அமெரிக்க இடதுசாரி அரசுகளுக்கும் ஏற்பட்டது. எனவே நாசகார நவீன தாராளமய கொள்கைகளுக்கு மாற்றாக செயல்படுவது அவ்வளவு சுலபமானது அல்ல. இத்தகைய சவாலின் பின்னணியில்தான் கேரள LDF அரசாங்கத்தின் சாதனைகளை நாம் மதிப்பிட வேண்டும்.
முன்மாதிரியாக முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கம்
1957ஆம் ஆண்டு கேரளாவில் முதல் முறையாக தேர்தல் மூலம் கம்யூனிஸ்டு அரசாங்கம் தேர்வு செய்யப்பட்டது. தோழர் இ.எம்.எஸ். அவர்கள் தலைமையில் ஆட்சி அமைந்தது. 28 மாதங்களே ஆட்சியில் இருந்த அவரது ஆட்சி பல முக்கியமான சாதனைகளை படைத்தது. நிலச்சீர்திருத்தம் வலுவாகக் கொண்டுவர விரிவான திட்டங்கள் தீட்டப்பட்டன; குத்தகை விவசாயிகள் நில வெளியேற்றம் செய்யப்படுவது தடை செய்யப்பட்டது; விவசாயிகளின் கடன்சுமை தீர்க்க திட்டங்கள் உருவாயின; ஒப்பந்தகாரர்களின் ஊழலை ஒழிக்க உழைப்பாளிகள் தலைமையில் சொசைட்டிகள் உருவாக்கப்பட்டன; உழைப்பாளிகளுக்கு தொழில் மற்றும் விவசாய பிரிவுகளில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. போனஸ் உத்தரவாதப்படுத்தப்பட்டது; கல்வியில் தனியார் மேலாதிக்கத்தைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; தாய்மார்களுக்கு பிரசவ விடுமுறை முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. மே தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த முயற்சிகள் அனைத்தும் தொழிலாளர்கள்/ விவசாயிகள்/ விவசாய தொழிலாளர்கள் மற்றும் முற்போக்காளர்களின் ஆதரவை பெற்றது. இ.எம்.எஸ். ஆட்சிக்கு ஆதரவு பெருகியது. இது அடுத்து வந்த தேவிகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் உள்ளாட்சி தேர்தல்களிலும் கம்யூனிஸ்டு கட்சியின் வெற்றி மூலம் பிரதிபலித்தது. கேரளாவின் ஆட்சிமுறை தங்களது மாநிலங்களிலும் தேவை என்ற குரலை உழைப்பாளிகள் நாடெங்கிலும் எழுப்பினர். எனினும் வர்க்க எதிரிகள் ஒரு மாநிலத்தில் பெற்ற இந்த வெற்றியை கூட சகித்து கொள்ள தயாராக இல்லை. அவர்கள் “விமோசன் சமர் சமிதி” (விடுதலை போராட்ட குழு) எனும் அமைப்பை உருவாக்கினர். இந்த அமைப்புக்கு பிரிட்டிஷ் தோட்ட முதலாளிகள்/ கேரள முதலாளிகள்/ நிலப்பிரபுக்கள்/ கத்தோலிக்க தேவாலயங்கள்/ நாயர் சமூக அமைப்புகள் என பலரும் ஏராளமான உதவிகள் செய்தனர். இந்த அமைப்புக்கு பின்னால் காங்கிரஸ் செயல்பட்டது. “ஆசியாவின் ஜோதி” ஜவஹர்லால் நேருவின் துணையுடன் 1959ஆம் ஆண்டு இ.எம்.எஸ். ஆட்சியை டிஸ்மிஸ் செய்தனர். முதலாளித்துவ ஜனநாயகத்தின் குறுகிய எல்லையை இது அம்பலப்படுத்தியது. 1959ஆம் ஆண்டு இ.எம்.எஸ். ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டாலும் மாற்றுக் கொள்கைகள் எந்த திசைவழியில் இருக்க வேண்டும் என்பதற்கு அது ஒரு முன்மாதிரியாக அமைந்தது. பின்னர் ஆட்சி அமைத்த அனைத்து LDF அரசாங்கங்களுக்கும் இதுவே வழிகாட்டியாக அமைந்தது.
தீவீர வறுமையை ஒழிக்கும் முதல் மாநிலம்
2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கேரளா LDF அரசாங்கம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது. அறிவிப்பு என்பதைவிட மகத்தான சாதனை என சொல்வது தவறாகாது. ஆம்! இந்தியாவிலேயே தீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலம் எனும் பெருமையை கேரளா பெறப்போகிறது. தற்சமயம் குறைந்த வறுமை உள்ள 5 மாநிலங்களில் கீழ்கண்டவாறு நிலைமைகள் உள்ளன:
- கேரளா- 0.55%
- கோவா- 0.84%
- தமிழ்நாடு- 2.2%
- சிக்கிம்- 2.6%
- பஞ்சாப்- 4.75%.
வறுமை அதிகமாக உள்ள மாநிலங்கள்:
- பீகார்- 33.67%
- ஜார்க்கண்ட்- 28.81%
- மேகாலாயா- 27.79%
- உ.பி.- 22.93%
- மத்திய பிரதேசம்- 20.63%
அதீத வறுமை நிலவும் இந்த ஐந்து மாநிலங்களில் மூன்று மாநிலங்களில் பா.ஜ.க. தனியாகவோ அல்லது கூட்டணியிலோ ஆட்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்துறையில் முன்னேறிய மாநிலங்களில் தீவிர வறுமை:
- குஜராத்- 11.66%
- மகாராஷ்ட்ரா- 7.81%
- கர்நாடகா-7.58%
- ஹரியானா- 7.07%
(தகவல்கள்: ஐ.நா. வின் UNDP)
தொழில் வளர்ச்சி என்பது தானாகவே வறுமையை ஒழித்து விடாது என்பதையே மேற்கண்ட நான்கு தொழில் துறையில் முன்னேறிய மாநிலங்களின் அனுபவம் எடுத்து காட்டுகிறது.
வறுமை ஒழிப்பு மக்கள் இயக்கமாக!
இங்குதான் வறுமை ஒழிப்பில் கேரள LDF அரசாங்கத்தின் தனித்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும் முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது. ஒப்பீட்டளவில் தொழில்துறையில் கேரளா பின் தங்கியிருந்தாலும் வறுமை ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்தியதால்தான் இதனை சாதிக்க முடிந்தது. இதனை LDF அரசாங்கம் தனது நிர்வாக அமைப்பினால் மட்டும் சாதிக்கவில்லை. அது சாத்தியமும் அல்ல. மாறாக, இதனை ஒரு மக்கள் இயக்கமாக LDF மாற்றியது. உள்ளாட்சி அமைப்புகள்/ குடும்பசிறீ/ (ASHA) ஆஷா ஊழியர்கள்/ அங்கன்வாடி ஊழியர்கள்/ ஏனைய சமூக அமைப்புகள் என சுமார் 14 லட்சம் பேர் தீவிர வறுமையில் உள்ள குடும்பங்களை அடையாளம் காண்பதில் ஈடுபட்டனர். வறுமையில் வாடும் ஒவ்வொரு குடும்பமும் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டன. அவர்களிடையே ஏன் வறுமை நிலவுகிறது என்பது நுணுக்கமாக ஆய்வு செய்யப்பட்டது. வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பெரும்பாலும் வீடற்றவர்களாகவும் நிலமற்றவர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கு உணவு/ வீடு/ துணி/ மருத்துவ வசதி ஆகியவை கிடைக்க, விசேட திட்டங்கள் உருவாக்கப்பட்டன. மேலும் வருமானத்திற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டன. வருமான வாய்ப்பு இல்லையெனில், மீண்டும் அவர்கள் வறுமைக்குள் சிக்க நேரிடும். எனவே, இந்த குடும்பங்களுக்காக விசேட 100 நாள் பணி திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருமானம் உத்தரவாதம் செய்யப்பட்டது. நிர்வாக மதிப்பீடுகளை மட்டும் சார்ந்திராமல், வறுமை ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்றியதன் மூலம்தான் LDF அரசாங்கம் இந்தச் சாதனையை படைத்துள்ளது.
சமூக குறியீடுகளில் LDF அரசாங்கத்தின் மகத்தான சாதனைகள்
வறுமை ஒழிப்பு மட்டுமின்றி ஏனைய சமூக குறியீடுகளிலும் கேரளாவின் சாதனைகள் இந்தியாவிற்கே முன்மாதிரியாக உள்ளன. உற்பத்தியின் பலன்கள் ஓரளவிற்காவது உழைப்பாளிகளுக்கு சரிசமமாக மறுவிநியோகம் செய்யப்பட வேண்டும் எனும் வழிகாட்டலின் கீழ் பினராயி விஜயன் தலைமையிலான LDF அரசாங்கம் கல்வி/ மருத்துவம் போன்ற சமூக குறியீடுகளில் மகத்தான சாதனைகளை படைத்துள்ளது. சில விவரங்கள் கீழே:
| கேரளா | இந்திய சராசரி | |
| கல்வியறிவு | 96.2% | 77.7% |
| பிறந்த குழந்தை இறப்பு (IMR) / 1000க்கு | 7 | 32 |
| பிரசவிக்கும் தாய்மார் இறப்பு (MMR)/ 1,00,000க்கு | 43 | 113 |
| ஆயுட் காலம் | 76.4 | 70.9 |
| பாலின விகிதாச்சாரம் (பெண்/ஆண்) | 1082 | 945 |
| பிறப்பு விகிதம்/ 1000க்கு | 12.2 | 16 |
| மக்கள் தொகை அதிகரிப்பு | 5.2 | 9 |
| தனி நபர் சராசரி வருமானம் | 2,16,749 | 1,45,680 |
| கிராமப்புற உழைப்பாளியின் தின ஊதியம் | ரூ 764 (இந்தியாவிலேயே அதிகபட்சம்) | ரூ 323 |
- புற்று நோய்க்கு ரோபோ மூலம் அறுவை சிகிச்சை.
- இந்தியாவிலேயே அதிகபட்ச மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்ததற்கு ஆரோக்கிய மந்தன் விருது.
- வெளி மாநில தொழிலாளர்களுக்கு மலையாள மொழியில் முழு எழுத்தறிவு திட்டம்
- விவசாய வருமானத்தை அதிகரிக்க சொத்து மதிப்பு கூட்டு விவசாய இயக்கம்
- முழுமையான மின்னணு நிர்வாக மாநிலம்.
- 3.4 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள்.
- மாற்று பாலினத்தவருக்கு அதிகாரம் வழங்கல்
- இரண்டாவது LDF அரசாங்கம் முதல் இரு வருடங்களில் மட்டும் 1,21,604 பேருக்கு நிலப்பட்டா வழங்கியது.
- அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் இணைத்து கேரளா வங்கி துவங்கப்பட்டது. இந்த வங்கி முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது.
- MNREGA உழைப்பாளிகளுக்கு நாட்டிலேயே முதல்முறையாக நலவாரியம். ஓய்வூதியம்/ மருத்துவம் உள்ளிட்ட பல வசதிகள்.
- இந்தியாவிலேயே முதன் முதலாக நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை உருவாக்கிய கேரளாவில் 42 லட்சம் மனித நாட்கள் கொண்ட வேலைகள் உருவாக்கப்பட்டன. 96,000 குடும்பங்கள் பலன் அடைந்தன. அய்யன் காளி நகர்புற வேலை வாய்ப்பு திட்டம் நாட்டிற்கே ஒரு முன்மாதிரி.
மிக முக்கியமாக தொடர் வளர்ச்சி இலக்குகள் (SDG)/ பள்ளி கல்வி தர குறியீடு/ மனித வள மேம்பாடு குறியீடு/ குழந்தை வளர்ச்சி குறியீடு ஆகிய ஒன்றிய அரசின் நிதி ஆயோக் வடிவமைத்த அனைத்து அம்சங்களிலும் தர வரிசையில் முதலிடம் வகிக்கிறது கேரளா.
நாசகர தாராளமய கடலுக்கு நடுவில் தீவாக LDF அரசாங்கம்
நாசகர நவீன தாராளமய கொள்கைகள் உலகம் முழுவதும் ஆக்டோபஸ் போல தனது நச்சுக் கொடுக்குகளை பரப்பியுள்ளது. உலக அரசியலில் சில பகுதிகளில் இடதுசாரி சக்திகள் வலுவடைந்திருந்தாலும், ஒட்டு மொத்தமாக வலதுசாரி சாய்மானம் அதிகரித்து வருகிறது. அர்ஜெண்டினா/ ஈக்குவேடர் போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இந்த போக்கு வலுவாகியுள்ளது. இதற்கு முத்தாய்ப்பு வைத்தது போல டிரம்பின் ஆட்சி அமைந்து, உலகின் வர்த்தக முறைகள் கடும் சீர்குலைவு மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன. டிரம்பின் நிர்வாகம் நாசகார நவீன தாராளமய கொள்கைகளை மேலும் தீவிரமாக்கவே செய்யும். இன்றைய உலக அரசியலில் நாசகார நவீன தாராளமய கொள்கைகளுக்கு மாற்று இல்லை எனும் சூழல் உருவாகியுள்ளது (சீனா/ வியட்நாம்/ கியூபா போன்ற சில விதிவிலக்குகள் தவிர).
டிரம்ப் வர்த்தக போரின் ஒரு பகுதியாக விவசாயம்/ மருந்து உற்பத்தி/ பால் பொருட்கள்/ ராணுவ கொள்முதல்கள் ஆகியவற்றுக்கு இந்தியா தனது சந்தையை திறந்துவிட வேண்டும் எனவும் இறக்குமதி வரிகளைக் குறைக்க வேண்டும் எனவும் அமெரிக்கா இந்தியாவை நிர்பந்திக்கிறது. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் 500% வரி என அமெரிக்கா மிரட்டுகிறது. அமெரிக்காவின் நிர்ப்பந்தத்துக்கு இந்தியா பணிந்துவிடுமோ எனும் சூழல் உருவாகியுள்ளது. இவையெல்லாம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் பாதிக்கும். கேரளாவையும் பாதிக்கும். முதலாளித்துவ கட்சிகளால் தலைமை தாங்கப்படும் மாநில அரசாங்கங்கள் பொதுவாக நவீன தாராளமய கொள்கைகளை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் LDF அரசாங்கம் இதனை ஏற்றுக்கொள்ள இயலாது.
உலக அளவிலும் சரி; இந்திய அளவிலும் சரி; தாரளமய கொள்கைகள் தீவிரமாக அமலாகும் சூழலில் அதற்கு எதிரான திசைவழியில் கேரளாவின் LDF அரசாங்கம் செயல்படுவது மட்டுமல்ல; பல வரையறைகள் இருந்தாலும், அவற்றையும் மீறி மாற்று பொருளாதார சமூக கொள்கைகளை LDF அரசாங்கம் அமலாக்குகிறது. LDFஇன் இந்த கடும் போராட்டம் இரு கூறுகளை கொண்டது. ஒன்று, LDF அரசாங்கத்தின் நிர்வாக ரீதியான, சட்ட ரீதியான தலையீடுகள் எனில், இன்னொன்று உழைப்பாளி வர்க்கப் போராட்டங்கள். இவை இரண்டும் இணைந்துதான், அதுவும் குறிப்பாக, உழைப்பாளிகளின் போராட்டங்கள்தான், இந்த மாற்றுக் கொள்கைகளின் அமலாக்கத்தை சாத்தியமாக்கின எனில் மிகை அல்ல. அதனால்தான் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் அமையும் பொழுதும் சமூக நல திட்டங்களை அவர்கள் கை விட இயலவில்லை.
சிறப்பான பொது விநியோகம் மூலம் உணவு பாதுகாப்பு/ அரசு கல்வி நிலையங்களை உருவாக்கி கல்வியை கற்பிக்கும் உத்தரவாதம்/ மிகச்சிறந்த அரசு மருத்துவமனைகள் உருவாக்கியதன் மூலம் இலவச மருத்துவ வசதிகள்/ நில உரிமை/ வீடற்றவர்களுக்கு இருப்பிட வசதிகள் ஆகியவற்றை LDF மாற்று கொள்கைகள் சாத்தியமாக்கின. இன்னொரு முக்கிய அம்சமாக, டிஜிட்டல் இடைவெளியை அகற்ற KFON மூலம் ஏழை குடும்பங்களுக்கு இலவச இணைய வசதிகள் உருவாக்கியதன் மூலம், இன்னொரு சாதனையையும் LDF அரசு சாத்தியமாக்கியது. இவை தாராளமய கொள்கைகளுக்கு மாற்றாக, LDF அரசாங்கத்தின் மக்கள் சார்ந்த கொள்கைகளின் அமலாக்கத்தை சாத்தியமாக்கின. தன்னை சுற்றி நாசகர தாரளமய கொள்கைகள் எங்கெங்கும் இயங்கும் சூழலில் LDF நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போடுகிறது எனில் மிகை அல்ல.
பிரித்து கொடுக்க ரொட்டி எங்கே?
கேரளாவின் தனித்தன்மை சமூகத்தின் உற்பத்தி பலன்கள் என்பது ஓரளவுக்கு சரிசமமாக மறுவிநியோகம் செய்யப்பட்டன. உழைப்பாளிகளின் வர்க்க போராட்டங்கள்/ தொழிற்சங்கங்களின் இயக்கங்கள்/ நிலச்சீர்திருத்தம் ஆகியவை மூலம் இது சாத்தியமாயிற்று. தொழிலாளர்களின் ஊதியம்/ விவசாய தொழிலாளர்களின் தின ஊதியம்/ விவசாயிகளின் அதிகரித்த வருமானம் ஆகியவற்றில் இது பிரதிபலித்தது. இத்தகைய வர்க்க போராட்டங்களின் மூலமும், LDF அரசாங்கங்களின் தலையீடு காரணமாகவும் இது நடந்தது. எனினும், கேரளா வேறு ஒரு அடிப்படை பிரச்சனையை சந்தித்தது. சில விமர்சகர்கள் குறிப்பிட்டது போல “நீங்கள் ரொட்டியை சரியாக பிரித்து தருகிறீர்கள். நல்ல விஷயம். ஆனால் பிரித்து கொடுப்பதற்கு ரொட்டி உற்பத்தி செய்ய வேண்டுமல்லவா?”
தோழர் இ.எம்.எஸ். அவர்கள் இந்த பிரச்சனை குறித்து கீழ்கண்டவாறு கடுமையாக எச்சரித்தார்:
“கேரளாவின் சமூக குறியீடுகள் குறித்து பல நிபுணர்களின் பாராட்டு மழை என்பது நாம் சந்திக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நமது கவனத்தை திசை திருப்பக் கூடாது. பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை நாம் ஏனைய மாநிலங்களுடன் ஒப்பிடும் பொழுது பின்தங்கியுள்ளோம். இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதை சிறிது கூட தள்ளி போட முடியாது. உற்பத்தியிலும் வேலை வாய்ப்புகளிலும் நாம் பின்தங்கியுள்ளோம் என்பதை உதாசீனப்படுத்துவது ஆபத்தானதாக அமையும்.”
உற்பத்தியின் பலன்களை மறுவிநியோகம் செய்வதில் கேரளா முதலிடத்தில் உள்ளது. ஆனால் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் அல்லவா? அதற்கு தொழில்மயமும் விவசாயத்தில் நவீன அம்சங்களும் தேவைப்படுகின்றன. இங்குதான் கேரளா மிகப்பெரிய சவாலை சந்தித்தது. இந்த சவாலை பினராயி விஜயன் அரசாங்கம் எப்படி எதிர்கொள்கிறது என்பது மிக முக்கியமான ஒன்று.
தொழில் வளர்ச்சியில் வஞ்சிக்கப்பட்ட கேரளா
தமிழ்நாடு/ தெலுங்கானா/ ஆந்திரா / கர்நாடகா ஆகிய மாநிலங்களுடன் ஒப்பிடும்பொழுது தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலமாக கேரளா உள்ளது. கல்வி/ மருத்துவம்/ சுகாதாரம் உட்பட பல சமூக குறியீடுகளில் கேரளா இமாலய சாதனை செய்திருந்தாலும் தொழில் வளர்ச்சியில் அத்தகைய சாதனைகள் கேரளாவுக்குக் கைகூடவில்லை. அதற்கு மிக முக்கிய காரணம், கடந்த கால மற்றும் இன்றைய ஒன்றிய அரசுகளின் மாற்றாந்தாய் அணுகுமுறையும், தனியார்துறையின் பாராமுகமும் ஆகும். கேரளாவில் கம்யூனிஸ்டு இயக்கம் வலுவாக இருந்தது எனவும், அங்கு போராட்டங்களை நடத்தி தொழில் நடத்த கம்யூனிஸ்டுகள் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் பொய் கற்பிதம் பரப்பப்பட்டது. ஒருபுறம் அடுத்தடுத்து வந்த ஒன்றிய அரசாங்கங்கள் கேரளாவில் பெரிய அளவுக்கு பொதுத்துறைகளை உருவாக்கவில்லை. தமிழ்நாட்டில் BHEL/NLC/ONGC/ ஆவடி-அரவங்காடு-திருச்சி என ஆயுத தள்வாட தொழிற்சாலைகள் என பல தொடங்கப்பட்டன. கர்நாடகத்தில் BHEL/ HMT/ BEML/ HAL/ உருக்காலை என பல பொதுத்துறைகள் உருவாயின. ஆந்திராவில் BHEL/ உருக்காலை என பல திட்டங்கள் தொடங்கப்பட்டன. கேரளாவில் கொச்சி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தவிர வேறு பெரிய தொழிற்சாலை எதுவும் இல்லை. தொடங்கப்பட்ட இன்ஸ்டுருமெண்டேஷன் லிமிடெட்/ இந்துஸ்தான் காகித நிறுவனம் போன்ற சில சிறிய ஆலைகளும் செயல்படாதவாறு முடக்கப்பட்டன. மறுபுறத்தில் பழைய முதலாளிகள், டாட்டா – பிர்லா குழுமங்களோ அல்லது புதிய முதலாளிகளான அம்பானி/ அதானி/ ஜிண்டால் குழுமங்களோ கேரளாவில் முதலீடு செய்ய முன்வரவில்லை. பிர்லா தொடங்கிய ஒரு பஞ்சாலை பின்னர் மூடப்பட்டது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பாலக்காடு ரயில்வே கோட்டத்தை பிரித்து சேலம் கோட்டம் உருவாக்க முயற்சிகள் நடந்தன. ஏற்கெனவே தொழில் வளர்ச்சி குறைவாக இருந்த காரணத்தால் அன்றைய தோழர் அச்சுதானந்தன் அரசாங்கம் இதற்கு ஆட்சேபித்தது. பின்னர் சமரச முயற்சியாக சேலம் கோட்டம் உருவாக்குவது எனவும், கேரளாவுக்கு ரெயில் பெட்டி தொழிற்சாலை ஒதுக்கீடு செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. எனினும் இன்றுவரை ரெயில் பெட்டி தொழிற்சாலை கேரளாவுக்கு வரவில்லை. பாலக்காடு ரயில்வே கோட்டத்தை மீண்டும் பிரித்து ஒரு பகுதியை மங்களூர் கோட்டமாக மாற்ற மோடி அரசாங்கம் முயற்சி செய்கிறது. இவையெல்லாம் தொழில் வளர்ச்சியில் கேரளா சந்திக்கும் சவால்களை வெளிப்படுத்தும் உண்மைகள் ஆகும்.
பொதுத்துறைகளை காக்கும் பணியில் LDF
இத்தகைய சூழலில்தான் 2016இல் ஆட்சி அமைத்த பினராயி விஜயன் அரசாங்கம் கேரளாவின் தொழில் முன்னேற்றத்துக்கு சில முக்கியமான முனைப்புகளை முன்னெடுத்தது. கேரளாவில் உள்ள மத்திய பொதுத்துறைகளான இந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட்/ இன்ஸ்டுருமென்டேஷன் லிமெடெட் மூடப்படுவதை தடுத்து LDF அரசாங்கமே ஏற்றுக்கொண்டு புனரமைத்தது. மூடப்படும் தருவாயில் இருந்த ஒன்றிய அரசின் உரம் தயாரிக்கும் FACT நிறுவனம் LDF அரசின் தொடர் முயற்சியால் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. நட்டத்தில் இயங்கிய 20க்கும் மேற்பட்ட மாநில பொதுத்துறைகளை தொழிலாளர் ஒத்துழைப்போடு லாபத்தில் இயங்கவைப்பதில் LDF அரசாங்கம் வெற்றி கண்டுள்ளது. LDF அரசாங்கம் பொதுத்துறைகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கிய காரணத்தால்தான் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்த கேரள அரசின் பொதுத்துறையான KELTRON டெண்டர் போட்டியில் பெரும் கார்ப்பரேட் நிறுவனமான L&T ஐ தோற்கடிக்க முடிந்தது. அதே போல KELTRON நார்வேயில் உள்ள ELTORQUE எனும் நிறுவனத்துடன் இணைந்து நவீன உற்பத்திக்கு திட்டமிட்டுள்ளது. ஒன்றிய அரசும் பல மாநில அரசுகளும் தனியார்மய திசையில் பயணிக்க, கேரளாவின் LDF அரசாங்கம் பொதுத்துறைகளை வலுவாக்கியது.
இந்தியாவிலேயே விமான நிலையங்களை நடத்தும் ஒரே மாநிலம் கேரளாதான். ஏற்கெனவே கொச்சி விமான நிலையத்தை நடத்திவரும் மாநில அரசாங்கம், கூடுதலாக கண்ணூர் விமான நிலையத்தையும் செயல்படுத்தியுள்ளது. விமான நிலையங்களை அதானியிடம் ஒப்படைக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடும் விமான நிலையங்களை நடத்தும் கேரள அரசின் செயல்பாடுகளும் நேர்மாறானவை. LDF அரசாங்கம் பொதுத்துறைகள் பக்கம் நிற்கிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசாங்கம் கார்ப்ப்ரேட்டுகள் பக்கம் நிற்கிறது. கேரளாவில் உள்ள நீண்ட கடற்கரையையும் நீர் நிலைகளையும் கணக்கில் கொண்டு “வாட்டர் மெட்ரோ” திட்டம் அமலாக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன் முதலாக உருவான இந்த திட்டம் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இன்று பல மாநிலங்கள் இந்த வாட்டர் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த கேரளா முன்மாதிரியாக விளங்குகிறது. கேரளா தனது சொந்த லிதியம் டைட்டனேட் பாட்டரியை தயாரித்துள்ளது. இதன் மூலம் மின் வாகனங்கள் பலன் அடைய இயலும். மேலும் கேரள அரசாங்கம் தனது சொந்த கூரியர் வசதியை KSRTC மூலம் நடத்துகிறது.
மேலும் துபாயை சேர்ந்த Zettfly எனும் நிறுவனத்தின் “ஏர் கேரளா” எனும் விமான சேவையும் விரைவில் தொடங்கப்படவுள்ளது. தனியார்துறையில் மூடப்பட்ட பல முந்திரி தொழிற்சாலைகளையும் LDF அரசாங்கம் திறக்க வைப்பதில் வெற்றி கண்டது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ 91,575 கோடி முதலீடும் அதன் பயனாக 5 லட்சம் வேலை வாய்ப்புகளும் LDF அரசாங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. பெரும் கார்ப்பரேட்டுகள் முதலீடு செய்ய முன்வராத சூழலில் சிறு/நடுத்தர தொழிற்சாலைகளை உருவாக்குவதில் கூடுதல் கவனத்தை LDF அரசாங்கம் செலுத்துகிறது. மேலும் ரூ. 72,000 கோடி மதிப்புள்ள பசுமை ஹைட்ரஜன் மற்றும் அம்மோனியா ஆலைகளுக்கான முதலீடு திட்டங்களும் அமலாக்கப்பட உள்ளன.
விழிஞ்ஞம் துறைமுகம்- இமாலாய சாதனை!
விழிஞ்ஞம் துறைமுகம் திட்டம் பினராயி விஜயன் அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனை எனில் மிகை அல்ல. தோழர் இ.கே. நாயனார் அவர்கள் முதல்வராக இருந்த பொழுது இந்த திட்டம் உருவானது. பின்னர் LDF அரசாங்கத்தின் பொழுது இந்த திட்டம் வலுவாக முன்னெடுக்கப்பட்டு 11.08.2010 அன்று முதல்வர் தோழர் அச்சுதானந்தன் அவர்கள் அதிகாரபூர்வமாக பணியை தொடங்கிவைத்தார். எனினும் இடையில் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2016ஆம் ஆண்டு LDF அரசாங்கம் அமைந்த பின்னர் இந்த பணிகள் அசுர வேகத்தில் தொடங்கப்பட்டன. எதிர்கட்சிகளும் ஒன்றிய அரசும் பல தடைகளை உருவாக்கின. மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டங்களுக்கு தேவாலாயங்கள் ஆதரவு அளித்தன. போராட்டக்காரர்களை பினராயி விஜயன் அவர்கள் நேரடியாக சந்தித்து பேச்சு வார்த்தைகளை நடத்தி சுமுக முடிவு கண்டார்.
விழிஞ்ஞம் துறைமுகம் பல இயற்கை சாதகங்களை கொண்டுள்ளது. இதன் இயற்கை ஆழம் மிகவும் அதிகமானது. மேலும் கிழக்கு – மேற்கு கடல் வழியை இணைக்கும் சர்வதேச பாதையிலிருந்து இது மிகவும் குறைவான தூரத்தில் உள்ளது. சர்வதேச துறைமுகங்களான துபாய்/ ஷாங்காய்/ ஹாங்காங்/ கொழும்பு/ சிங்கப்பூர் ஆகியவற்றுக்கு விழிஞ்ஞம் துறைமுகம் கடும் போட்டியை தரும் என்பது தெளிவு. மாநில அரசாங்கத்தை எதிரிபோல பார்க்கும் ஒரு ஒன்றிய அரசின் கீழ் மிகக்குறைந்த அதிகாரங்களை கொண்ட ஒரு இடதுசாரி மாநில அரசாங்கம் தொழில் வளர்ச்சிக்கு எத்தகைய சிரமங்களையும் சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது என்பதற்கு கேரளா LDF அரசின் அனுபவம் ஒரு உதாரணம்.
அறிவுசார் பொருளாதாரம்
அறிவுசார் பொருளாதாரம் மற்றும் தொழில் முனைவுகளுக்கான அனைத்து பணிகளையும் ஒருங்கிணைக்க “கேரளா வளர்ச்சிக்கான நவீன கண்டுபிடிப்புகளின் மைய அமைப்பு கவுன்சில்” (Kerala Development Innovation Strategy Council) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுசார் பொருளாதாரம் கீழ்கண்ட மூன்று தூண்களில் உருவாக்கப்படுகிறது:
1. K-Fon இணைய வசதியை மையமாக கொண்ட டிஜிட்டல் கட்டமைப்பு.
2. இதற்கான உன்னதமான உயர் கல்வி முறை
3. கேரள நவீன கண்டுபிடிப்பு சமூகத்தை உருவாக்குவது.
அறிவுசார் பொருளாதரம் எனும் இலக்கை மையமாக கொண்ட கல்விமுறையின் கீழ் உயர்தர டிஜிட்டல் வசதிகளுடன் ஆரம்ப பள்ளிகளும் உயர் கல்வி நிலையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 50%லிருந்து 75% ஆக அதிகரிப்பது எனும் இலக்குடன் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போதைய தேசிய சராசரி 26%தான். இதன் ஒரு பகுதியாகவே பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சியும் ஒரு நவீன கண்டுபிடிப்புக்கான ஆலோசனை முன்வைக்க ஊக்கப்படுத்தப்படுகிறது. இந்த ஆலோசனைகளை பதிவு செய்ய விசேட இணைய தளங்கள் K-SIDC சார்பாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆலோசனைகள் அல்லது திட்டங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொருத்தமான திட்டங்களை முன்னெடுத்து செல்ல நிதி உதவியும் தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. அறிவுசார் பொருளாதார திட்டத்தை முன்னெடுத்து செல்ல K-SIDC கீழ்
- கேரளா அறிவுசார் பொருளாதார குறிக்கோள் பணி திட்டம் (Kerala Knowledge Economy Mission)
- டிஜிட்டல் உழைப்பாளர் நிர்வாக முறை ( Digital Workforce Management System)
- அறிவுசார் பொருளாதார நிதி (Knowledge Economy Fund )
ஆகிய கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கல்வியறிவு பெற்றிருந்தும் வீடுகளில் முடங்கியுள்ள சுமார் 60 லட்சம் பெண்களை இந்த திட்டங்களில் ஈடுபடுத்த பல்வேறு ஊக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொச்சி தொழில்நுட்ப பூங்கா 323 ஏக்கரில் வெறும் 4 நிறுவனங்களுடன் செயல்பட்டு வந்தது. ஆனால் LDF அரசாங்கம் அதை விரிவாக்கம் செய்ததன் மூலம் இன்று 92 லட்சம் சதுர அடியில் 582 தொழில் நிறுவனங்கள் 70,000 நிபுணர்களுடன் செயல்படுகின்றன. ஸ்டார்ட்-அப் எனும் புத்தாக்க தொழில்களில் கேரளா இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்றுள்ளது. ஐ.பி.எம். நிறுவனத்துடன் இணைந்து கேரளா அரசாங்கம் செயற்கை நுண்ணறிவு மாநாட்டை கொச்சியில் நடத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் ரோபோ தொழில்நுட்ப மாநாடும் நடத்தப்பட்டுள்ளது. கேரளாவை 4வது தொழிற்புரட்சியின் தேசிய மையமாக மாற்றுவது என்பதே LDF அரசின் இலக்கு ஆகும். கேரளாவின் தொழில்மய முயற்சிகள் குறித்து சமீபத்தில் நடந்த கட்சியின் மாநில மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
முதலீடுகள்- கேரளாவின் புதிய அணுகுமுறை
கேரளாவில் சாலைகள்/ மின் வசதிகள்/ நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் ஏனைய உள்கட்டமைப்புகள் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது பின் தங்கியும் மோசமானதாகவும் இருந்தன. உள்கட்டமைப்புகளை அதிகப்படுத்தவும் நவீனப்படுத்தவும் முதலீடுகள் தேவை. சமூக குறியீடு தரத்தை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவதால் கேரளாவின் பட்ஜெட்டில் மிகப்பெரும் பகுதி சமூக பணிகளுக்கு செலவிடப்படுகிறது. ஒன்றிய அரசாங்கம் நிதி உதவிட தயாராக இல்லை. ஒன்றிய நிதியில் கேரளா 1.89% மட்டுமே பெறுகிறது. ஆனால் இதே மக்கள் தொகை கொண்ட அசாம் 3.13%ம் ஒடிசா 4.5% நிதியும் பெருகின்றன. இது ஒன்றிய அரசின் ஓர வஞ்சனையை வெளிப்படுத்துகிறது. மேலும் மாநிலம் தனது ஜி.டி.பி.யில் 3%க்கு மேல் வெளிச் சந்தையில் கடனை பெறக்கூடாது என ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இத்தகைய சூழலில் முதலீடுகளை எப்படி உருவாக்குவது என்பது LDF அரசாங்கம் முன்பு ஒரு முக்கிய கேள்வியாக முன்வந்தது.
இதற்கு ஒரு தீர்வை LDF அரசாங்கம் கண்டு பிடித்தது. KIIFB எனப்படும் கேரளா உள்கட்டமைப்பு முதலீடு நிதி வாரியம் எனும் அமைப்பின் விதிகளை திருத்தி தனியார் முதலீடுகளை ஈர்க்க வழிவகைகள் உருவாக்கப்பட்டன. இந்த அமைப்பை முடக்க காங்கிரஸ் பல அடிப்படையற்ற விமர்சனங்களை முன்வைத்தது. ஒன்றிய அரசாங்கம் CAG/ வருமான வரி/ அமலாக்கதுறை/ CBI போன்ற பல அமைப்புகள் மூலம் தடைகளை உருவாக்க முயன்றது. இவை அனைத்தையும் முறியடித்து KIIFB 1172 உள்கட்டமைப்பு திட்டங்களை சுமார் ரூ. 70,000 கோடி செலவில் உருவாக்கியுள்ளது. இவற்றில் சில நிறைவடைந்துள்ளன. சில பணிகள் நடந்து கொண்டுள்ளன. எனினும் பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசாங்கம் இந்த திட்டப்பணிகளை பட்ஜெட் வரவு செலவுக்குள் கொண்டு வர நிர்ப்பந்தித்ததன் காரணமாக வெளிநாட்டு கடனை வாங்க இயலாத சூழல் உருவாகியுள்ளது.
நிபா/ கோவிட்/ மோசமான நிலச்சரிவுகள் போன்ற இயற்கை பேரிடர்களை சந்தித்த பொழுதும் இந்த சாதனைகள் அனைத்தும் சாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதிகார பரவாக்கல்/ குடும்பஸ்ரீ ஆகிய திட்டங்களும் LDF அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் ஆகும். சமூக குறியீடுகளில் உருவாக்கிய சாதனைகளை தொழில்மயம் மற்றும் நவீன விவசாயத்திலும் உருவாக்க வேண்டும் எனும் இலக்கோடு LDF அரசாங்கம் செயல்படுகிறது. நாசகார நவீன தாராளமய கொள்கைகளுக்கு மாற்றாக அமலாக்கப்படும் இந்த நடைமுறைகளை சிதைக்கவும் தடுக்கவும் ஒன்றிய பா.ஜ.க. அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் செய்கிறது. UDF கட்சிகளும் பா.ஜ.க.வின் நிலையை கண்டிப்பது இல்லை. ஒருபுறம் பெரும்பான்மை மதவாதமும் இன்னொருபுறம் சிறுபான்மை மதவாதமும் சவால்களாக உருவெடுத்துள்ளன. கேரள மதச்சார்பின்மை பண்பை மாற்ற பல முயற்சிகள் நடக்கின்றன. LDF மக்களை திரட்டுவதன் மூலம் இந்த சவாலை முறியடிக்கும் என்பதிலும், அதன் மூலம் 2026 தேர்தல்களில் வெல்லும் என்பதிலும் மாற்று கருத்து இருக்க இயலாது.
-ஆதாரம்: Kerala another possible world-Thomas Isaac/ பீப்பிள்ஸ் டெமாக்ரசி கட்டுரைகள்/ கேரள அரசாங்கத்தின் ஆவணங்கள்/ இந்தியன் எக்ஸ்பிரஸ் /பிசினஸ் ஸ்டான்டர்டு/ பிசினஸ் லைன் கட்டுரைகள்/ இ.எம்.எஸ். ஸ்மிருதியில் தோழர் பிரகாஷ் காரத் உரை.
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
