
நவ தாராளமய எதிர்ப்பில் ஒரு சிறிய கிராமம் : கூத்துப்பறம்பா தியாகிகள்
இரா. சிந்தன்
நவம்பர் 25, கூத்துப்பறம்பா தியாகிகள் தினம்
கேரள மாநிலம் கண்ணூரில், நவம்பர் 25, 1994ஆம் ஆண்டு நடைபெற்ற அமைதியான போராட்டத்தில், காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். கொடும் வன்முறையை சந்தித்த ‘கூத்துப்பறம்பா’ என்ற சிறு கிராமம், அதன் பெரும் தாக்கத்தால் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துவிட்டது.
1990களில் நவதாராளமய கொள்கைகளை ஒன்றிய அரசு அதிவேகமாக முன்னெடுக்கத் தொடங்கியது. இதனால் விவசாயமும், பாரம்பரியத் தொழில்களும் பாதிப்புகளை எதிர்கொண்டன. கல்வி கடைச்சரக்கானது. அரசு வேலைக்கான கதவுகள் மென்மேலும் குறுகின. இப்படியான சூழலில், நவதாராளமய கொள்கைகளை வீறுகொண்டு எதிர்க்கத் தொடங்கியது கேரள மாநிலம்.
அப்போது அங்கே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசாங்கம், எதிர்ப்புகளைப் புறந்தள்ளியது. கல்வியிலும், வேலையிலும் தனியார் ஊக்குவிக்கப்பட்டனர். இதனால், சமூக நீதியும், கல்வித் தகுதியும் பின்னுக்குத் தள்ளப்பட்டன. குறிப்பாக, உயர் கல்வி கட்டணச் சுரண்டலுக்கான களமாக மாற்றப்பட்டது. சுயநிதிக் கல்லூரிகள் காளான் போல் முளைக்கத் தொடங்கின.
அதில் ஒரு பகுதியாக, கண்ணூர் மாவட்டத்தில், சுயநிதி மருத்துவக் கல்லூரிக்கான அனுமதியைப் பெற்றார் ஐக்கிய ஜனநாயக முன்னணி அமைச்சர் எம்.வி. ராகவன். அரசு நிலத்தில் கல்லூரியை கட்டமைக்க முயற்சிகள் தொடங்கின. இந்த முறைகேட்டுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன.
அப்போது ஒரு வங்கியின் கிளைத் திறப்புக்காக வந்திருந்த அமைச்சர் எம்.வி. ராகவனுக்கு எதிராக, கருப்புக் கொடிகளோடு ஆயிரக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் திரண்டார்கள். அமைச்சர் வருவதை தவிர்க்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்திய போதும், அங்கே வந்தார் அமைச்சர். முழக்கங்கள் கடுமையாக எழுந்துவந்த சூழலில், போராட்ட வீரர்களை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.
இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தோழர்கள் ராஜீவன், ரோஷன், பாபு, மது மற்றும் சிபுலால் ஆகியோர் கொல்லப்பட்டார்கள். புஷ்பன் என்ற முன்னணிப் போராளி முற்றிலும் ஊனமடைந்தார். ஏராளமானவர்கள் காயமடைந்தார்கள்.
கூத்துப்பறம்பாவின் தீரம் மிக்க அடையாளமாக மாறிப்போன புஷ்பனுக்கு கழுத்துக் கீழே உறுப்புகள் அசையவில்லை. அடுத்த முப்பதாண்டுகள் அவ்வாறே அவர் நம்மோடு வாழ்ந்தார். ஆனால், அந்த நிலையிலும் மிக உறுதியான போராளியாக வழிகாட்டினார். அவரின் உறுதி பல தலைமுறைகளுக்கு பாடமாகியது.
கூத்துபறம்பா போராட்டத்தைத் திரித்துக்காட்ட வலதுசாரி ஊடகங்கள் பலவித முயற்சிகளை எடுத்தார்கள். ஆனால் புஷ்பன் ஒரு வாழும் சாட்சியாக அந்தப் பொய் பிரச்சாரங்களை முறியடித்தார். கேள்விகளுடன் அவரை நெருங்கிய ஊடகங்களிடம், தங்கள் போராட்டத்தின் நியாயத்தை எடுத்து வைத்தார். கொல்லப்பட்ட தியாகிகளின் நினைவாக ஒரு நூலகம் உருவாக்க வேண்டும் என்ற புஷ்பனின் அறிவுறுத்தல் சில ஆண்டுகளில் நனவாகியது.
நவதாராளமய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்பு இயக்கங்கள் நடந்து வருகின்றன. அந்த வரலாற்றில் கண்ணூரின் ஒரு சிறிய கிராமமான கூத்துபறம்பா தன்னுடைய தியாகத்தை இப்படி உறுதியாக பதிய வைத்தது.
இப்போது கேரள மாநிலத்தை வழிநடத்தும் சி.பி.ஐ(எம்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, நவதாராளமய நெருக்கடியின் சுழலிலும் தனது மாற்றுக் கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கிறது. இணையம் அடிப்படை உரிமை என்பதில் தொடங்கி, அரசு சேவை உறுதிச் சட்டம் வரை ஏராளமான சாதனைகளை படைத்துள்ளது. வேலை நியமனத் தடை என்ற நிலைக்கு மாறாக, புதிய பதவிகளை உருவாக்கி, சமூக நீதியை, வேலை உரிமையை நிலைநாட்டுகிறது. புதிய கேரளத்தை உருவாக்கும், அடுத்த தலைமுறைக்கான திட்டமிடலை மக்கள் பங்கேற்புடன் முன்னெடுத்து வருகிறது.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply