லெனின்: தொழிலாளர் -விவசாயி கூட்டணியின் சிற்பி
அசோக் தவாலே
ஜனவரி 19: தொழிலாளர் – விவசாயி ஒற்றுமை தினம்
லெனின் நினைவு நூற்றாண்டு
(லெனின் நினைவு நூற்றாண்டை ஒட்டி, தொழிலாளர் – விவசாயி கூட்டணி பற்றிய லெனினின் முன்னெடுப்புகளைச் சுட்டிக் காட்டி, இக்கருத்தாக்கத்தின் முக்கியத்துவம் குறித்து தோழர் அசோக் தவாலே எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தை, ஜனவரி 19 தொழிலாளர் – விவசாயி ஒற்றுமை தின அனுசரிப்பு தருணத்தில் வெளியிடுகிறோம் – ஆசிரியர் குழு)
புகழ்பெற்ற ஹங்கேரி நாட்டு மார்க்சிஸ்டும், ‘வரலாறும் வர்க்க உணர்வும்’ என்ற மகத்தான நூலின் ஆசிரியருமான கியோர்கி லூகாக்ஸ், “பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்டத்தில் உருவான, மார்க்ஸுக்கு இணையான ஒரே தத்துவ ஆசிரியர் ” என்று லெனினைப் பற்றிக் குறிப்பிட்டார். லெனின் நினைவு நூற்றாண்டை நாம் இந்த ஆண்டு கொண்டாடுகிறோம். தத்துவம், நடைமுறை, இயக்கம், அமைப்பு ஆகியவற்றின் மிகவும் அரிதான ஒரு கலவையாக லெனின் இருந்தார். உலகின் வெற்றிகரமானதொரு சோஷலிசப் புரட்சியை வழிநடத்தி, அனைத்து இடையூறுகளுக்கும் எதிராக அதைப் பாதுகாத்து, இந்தப் பணியை நிறைவேற்றும் திறன் படைத்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை கட்டியமைத்ததே, அவரது மகத்தான சாதனையாக அமைந்திருந்தது.
மார்க்சியத்திற்கு லெனின் வழங்கிய முக்கியமான பல தத்துவார்த்த ரீதியான பங்களிப்புகளில் ஒன்று, சோஷலிசப் புரட்சிக்கான தொழிலாளர்-விவசாயி கூட்டணி என்ற முன்னோடி கருத்தாக்கம் ஆகும். இந்தக் கருத்தை, அவர் கோட்பாட்டு ரீதியாக முன்வைத்தது மட்டுமின்றி, ரஷ்யாவில் நடைபெற்ற அக்டோபர் புரட்சியின் வெற்றிக்கு அந்தக் கூட்டணியை நனவாக்கி, சோஷலிசத்தைக் கட்டுவதற்காகவும், அதை நிலைநிறுத்துவதற்கான செயல்முறைக்காகவும், நடைமுறையில் பாடுபட்டார்.
கருத்தாக்கத்தின் தோற்றம்
மார்க்ஸும் எங்கெல்ஸும் தங்களின் செறிவான எழுத்துக்களில், அன்றைக்கு ஒப்பீட்டளவில் முன்னேறியிருந்த, ஐரோப்பாவின் தொழில்வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாடுகளில் இருந்த தொழிலாளி வர்க்கமான பாட்டாளி வர்க்கத்தின் மீதே தம் கவனத்தைக் குவித்திருந்தனர். முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்திற்கு மாறிச் செல்வது என்ற தீவிரமானதொரு சமூக மாற்றத்திற்கான போராட்டத்திற்குப் பாட்டாளி வர்க்கமே தலைமை தாங்கும் என்றும், அவர்கள் பிரகடனம் செய்தனர். அதேநேரத்தில், விவசாய வர்க்கத்தின் பல்வேறு பிரிவினர் வகிக்கக் கூடிய பங்கின் சாதகமான, பாதகமான அம்சங்களையும், அவர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டனர்.
பிரெஞ்சு முதலாளி வர்க்கம், பாட்டாளி வர்க்கத்தால் தலைமை தாங்கப்பட்ட (பாரீஸ்) கம்யூனுக்கு எதிராக, விவசாயிகளின் ஆதரவைப் பெற முடிந்ததே அதன் தோல்விக்கான முக்கிய காரணங்களில் ஒன்று என்பதை 1871ஆம் ஆண்டின் வீரம் செறிந்த பாரீஸ் கம்யூனின் அனுபவம் நமக்கு எடுத்துக் காட்டியது. முதலாளித்துவ சொத்துடைமையின் மீதான தொழிலாளி வர்க்கத்தின் தாக்குதல், அதையடுத்து விவசாயிகளின் சொத்துடைமை மீதான தாக்குதலாகவும் மாறிவிடும் என்ற அச்சத்தை விவசாயிகளிடையே தோற்றுவித்ததன் மூலமே, இந்த ஆதரவு திரட்டப்பட்டது.
எனினும், விவசாயிகளின் சாதகமான ஆற்றலை மார்க்ஸும் எங்கெல்ஸும் நன்கு அறிந்திருந்தனர். 1856 ஏப்ரல் 16 அன்று மார்க்ஸ், எங்கெல்ஸுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இது தெளிவாக வெளிப்படுகிறது. “ஜெர்மனியில் உள்ள முழு விஷயமும், விவசாயிகள் போரின் ஏதோவொரு இரண்டாவது பதிப்பின் மூலம் பாட்டாளி வர்க்கப் புரட்சியை ஆதரிப்பதற்கான சாத்தியத்தைச் சார்ந்திருக்கும். அதன்பிறகு, இந்த விஷயம் மிக அருமையான ஒன்றாக மாறிவிடும்…” இந்த அவதானிப்பை லெனின் மிகத் தொடக்கத்திலேயே தீவிரமாகக் கவனித்திருந்தார். 1923ஆம் ஆண்டு மே 30 அன்று ப்ராவ்தா நாளிதழில் முதலில் வெளியான நமது புரட்சி என்ற அவரது வாழ்க்கையின் இறுதித் தருணங்களில் வெளியான கட்டுரைகளில் ஒன்றில் இதையே அவர் மீண்டும் எடுத்துக் கூறியிருந்தார்.
லெனின், தன் 26வது வயதில், 1896ஆம் ஆண்டில் ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி என்ற நூலை எழுதினார். அந்த நூலில் பாட்டாளி வர்க்கம், விவசாயிகள் ஆகிய தரப்பினரின் புரட்சிகர ஆற்றலை அவர் வலியுறுத்தியிருந்தார். 1901ஆம் ஆண்டிலேயே, தொழிலாளர்களின் கட்சியும் விவசாயிகளும் என்ற கட்டுரையில், லெனின் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களின் புரட்சிகர நோக்கங்கள் குறித்துப் பேசிவிட்டுப் பின்னர் எழுதினார்: “பல லட்சக்கணக்கான விவசாயிகளிடையே வர்க்கப் போராட்டம், அரசியல்ரீதியான உணர்வு ஆகியவற்றின் விதைகளை விதைக்காமல் இந்த நோக்கத்தை நம்மால் அடைய முடியுமா? இந்த விதைகளை நம்மால் விதைக்க முடியாது என்று யாரும் சொல்ல வேண்டாம். இது ஏற்கனவே ஆயிரக்கணக்கான வழிகளில் செய்யப்பட்டு வருகிறது. எனினும் இது நம் கவனத்திலிருந்தும் செல்வாக்கிலிருந்தும் தப்பிச் சென்றுவிடுகிறது.” லெனின், இந்தக் கருத்தாக்கத்தை, ‘கிராமப்புற ஏழைகளுக்கு’ என்ற தன் நூலின் மூலம் பெரிதும் விரிவுபடுத்தியிருந்தார். அது இப்போதும் தன் பொருத்தப்பாட்டை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்றே கூற வேண்டும்.
தொழிலாளி–விவசாயி கூட்டணியின் இரட்டை நோக்கம்
ஜாரின் ஆட்சியால் நசுக்கப்பட்ட 1905ஆம் ஆண்டின் ரஷ்யப் புரட்சி, மிகுந்த மதிப்பிற்குரிய பல படிப்பினைகளை வழங்கியது. அப்போதுதான் போல்ஷ்விக் கட்சி ‘பாட்டாளி வர்க்கம், விவசாயிகளின் புரட்சிகர ஜனநாயக சர்வாதிகாரம்’ என்ற முழக்கத்தை முன்னெடுத்தது. இது மார்க்சியத்தை மேலும் மதிப்புக் கூட்டும் வகையில் செழுமைப்படுத்தியது.
ஸ்தூலமான நிலைமைகளின் மீதான பருண்மையான பகுப்பாய்வின் அடிப்படையில், லெனின் முன்வைத்த இந்தப் புதிய கோஷத்திற்கான அடிப்படையான பகுப்பாய்வும் வாதமும் கீழ்வருமாறு இருந்தன: தொடக்க கால முதலாளித்துவத்திற்கும் பிந்தைய முதலாளித்துவத்திற்கும் இடையே பெரியதொரு வேறுபாடு இருந்தது. தொடக்க கால முதலாளித்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாளித்துவ வர்க்கத்தால் தலைமை தாங்கப்பட்ட 1789ஆம் ஆண்டின் பிரெஞ்சுப் புரட்சி நிலப்பிரபுத்துவத்தை உடைத்தெறிந்தது. நிலப்பிரபுக்களின் ஆளுகையில் இருந்த நிலங்களை விவசாயிகளுக்கு மறுபங்கீடு செய்தது. ஆனால் முதலாளித்துவத்தின் பிற்பகுதியிலும், ரஷ்யாவிலும் இன்னபிற இடங்களிலும் இருந்த முதலாளித்துவ வர்க்கம் தனது முந்தைய வீரியத்தை இழந்திருந்தது. நிலப்பிரபுத்துவத்திற்கு அத்தகைய மரண அடி கொடுக்கும் திறனற்றதாக இருந்தது. உண்மையில், அது விவசாயிகளின் ஜனநாயக ரீதியான விருப்பங்களை விரக்தியடையச் செய்த நிலப்பிரபுத்துவ அமைப்புடன் சமரசம் செய்து கொள்ள முயன்றது. மேலும் அது வளர்ந்துகொண்டு வந்த தொழிலாளி வர்க்கத்தால் அச்சுறுத்தலுக்கும் ஆளானது. எனவே நிலப்பிரபுத்துவ சொத்துடைமையைத் தாக்கினால், அது முதலாளித்துவ சொத்துடைமையின் மீது, உழைப்பாளி மக்கள் தாக்குதல் தொடுப்பதற்கு இட்டுச் செல்லும் என்று முதலாளித்துவ வர்க்கம் மிரண்டுபோய் நின்றது.
இத்தகையதொரு சூழ்நிலையில்தான், தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் ஒரு தொழிலாளர்- விவசாயி கூட்டணி என்ற கருத்தாக்கத்தை லெனின் முன்வைத்தார். அது (நிலப்பிரபுத்துவ எதிர்ப்புத் தன்மை கொண்ட) ஜனநாயகப் புரட்சியை நிறைவு செய்வது மட்டுமல்லாமல், பின்னர் (முதலாளித்துவ எதிர்ப்புத் தன்மை கொண்ட) ஒரு சோஷலிசப் புரட்சியை நோக்கி முன்னேறவும் செய்யும். இவ்வகையில்தான், 1905ஆம் ஆண்டில் லெனின் எழுதிய ‘ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரண்டு நடைமுறை உத்திகள்’ என்ற அவரது புகழ்பெற்ற நூலில், கீழ்க்கண்ட முடிவிற்கு வந்திருந்தார்: “நிலப்பிரபுத்துவத்தின் எதிர்ப்பை பலவந்தமாக நசுக்கவும், முதலாளித்துவ வர்க்கத்தின் உறுதியற்ற தன்மையை முடக்கவும், பெருந்திரளான விவசாயிகளை தன்னுடன் கூட்டு சேர்த்துக் கொண்டு, பாட்டாளி வர்க்கம், ஜனநாயகப் புரட்சியை அது முழுமை பெறும் நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதேபோன்று, முதலாளித்துவ வர்க்கத்தின் எதிர்ப்பை பலவந்தமாக நசுக்கவும், விவசாயிகள் மற்றும் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் உறுதியற்ற தன்மையை முடக்கவும், பெருந்திரளான மக்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, பாட்டாளி வர்க்கம் சோஷலிசப் புரட்சியை நிறைவேற்ற வேண்டும்.”
லெனினும் போல்ஷ்விக் கட்சியும் தொழிலாளர்-விவசாயிகள் கூட்டணியை வலுப்படுத்துவது என்ற மையமான குறிக்கோளின் அடிப்படையில், குறிப்பாக அக்டோபர் புரட்சிக்குப் பிறகும் கூட, அது அதிகாரத்தில் இருந்தவரையிலும், அதற்குப் பின்னரும் கூட தொடர்ந்து தீவிரமான பல கொள்கை நிலைப்பாடுகளையும் நடைமுறை நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
ரஷ்யப் புரட்சியின்போது மக்களை அணிதிரட்டுவதற்கான உன்னதமான முழக்கமாக விளங்கிய ‘சமாதானம்! நிலம்! ரொட்டி!’ என்பது இந்த ஒற்றுமையை பிரதிபலித்தது. தொழிலாளிகள், விவசாயிகள், படைவீரர்களின் சோவியத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றின் பிரதிநிதிகள் மாநாடுகளில் ஒன்றுகூடினர். 1923ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதிய ‘குறைவானதே நல்லது; எனினும், அதுவே சிறப்பானது’ என்ற தலைப்பிலான அவரது இறுதிக் கட்டுரை, தொழிலாளர்கள் – விவசாயிகளின் மேற்பார்வைக்கான கடமைகள் குறித்ததாக இருந்தது. இக்கட்டுரையின் முடிவில், லெனின் இவ்வாறு எழுதியிருந்தார்: “ விவசாயிகளின் தலைமையை, விவசாயிகளின் நம்பிக்கையை தொழிலாளர்கள் தக்கவைத்துக் கொள்ளும்படியான ஓர் அரசைக் கட்டியெழுப்ப நாம் பாடுபட வேண்டும். மிகப்பெருமளவிலான சிக்கனத்தைச் செயல்படுத்துவதன் மூலம், நமது சமூக உறவுகளில் இருந்து ஊதாரித்தனத்தின் ஒவ்வொரு தடயத்தையும் நாம் அகற்ற வேண்டும்.”
ஏகாதிபத்தியமும் புதிய சவால்களும்
லெனின் 1916ஆம் ஆண்டில் ஏகாதிபத்தியம் குறித்து எழுதிய நூலில் அற்புதமானதொரு பகுப்பாய்வை மேற்கொண்டிருந்தார். இன்று, லெனின் கோடிட்டுக் காட்டிய ஏகாதிபத்தியத்தின் அடிப்படைத் தன்மையான – அதன் சுரண்டல், கொள்ளை, ஏற்றத்தாழ்வுகள், போர்கள், அழிவு – ஆகிய அனைத்தும் மேலும் தீவிரமடைந்துள்ளன. சர்வதேச நிதிமூலதனம் இப்போது பேயாட்டம் போட்டு வருகிறது. போர்களாலும் பஞ்சங்களாலும் பல லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். புவி வெப்பமடைதல், சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றின் விளைவாக, இந்த பூமிக் கிரகமே மிகப்பெரும் ஆபத்தில் உள்ளது.
லெனின் முன்னெடுத்த தொழிலாளர்- விவசாயி கூட்டணியின் கொள்கையும் நடைமுறையும் ரஷ்யாவில் மட்டுமின்றி, சீனா, வியட்நாம், கொரியா, கூபா ஆகிய நாடுகளிலும் வெற்றிகரமான சோஷலிசப் புரட்சிகளுக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்த நாடுகள் ஒவ்வொன்றிலும் வெற்றிபெற்ற புரட்சிகர சக்திகள், முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கங்களுக்கு எதிராகவும், அவற்றை முழுமையாக ஆதரித்த ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் போராட வேண்டியிருந்தது.
ஏகாதிபத்திய உலகமயமாக்கல், நவ தாராளவாதத்தின் புதிய சகாப்தத்தில், நவ பாசிச, பேரினவாத, வகுப்புவாத, இனவாதப் போக்குகள் தங்களின் கோரமான தலைகளை உயர்த்தியுள்ள நிலையில், ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்- விவசாயி கூட்டணியை உருவாக்கி வலுப்படுத்துவதன் முதன்மையான முக்கியத்துவம் மேலும் அதிவேகமாக வளர்ந்துள்ளது. ஏனெனில், நிலப்பிரபுத்துவம், அதன் மிச்ச சொச்சங்களோடு கூடவே, தொழிலாளி வர்க்கமும், விவசாயிகளும் இன்று நவீன தாராளமயம், அதனுடன் இணைந்த தீமைகளின் மிகப்பெரும் தாக்குதலை எதிர்கொள்கின்றனர். உற்பத்தித்திறன் பெற்ற வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்கள் ஆகிய இந்த இரு வர்க்கங்களின் மேலும் அதிகமான ஒற்றுமையால் மட்டுமே இதைப் புறந்தள்ள முடியும்.
பேராசிரியர் பிரபாத் பட்நாயக் எழுதுவதைப் போல, “வளரும் நாடுகள் எனப்படும் மூன்றாம் உலகின் பெரும்பகுதியில் ஒரு புரட்சிக்கான சாத்தியக்கூறு என்பது, மிக முக்கியமாக ஒரு தொழிலாளர்-விவசாயி கூட்டணியை வெற்றிகரமாக உருவாக்குவதையே சார்ந்துள்ளது. அத்தகையதொரு கூட்டணி இல்லாமல் அக்டோபர் புரட்சியே சாத்தியமில்லை என்பதைப் போலவே, அத்தகையதொரு கூட்டணி இல்லாமல், முதலாளித்துவத்தைக் கடந்து செல்வதும் சாத்தியமில்லை.
“அத்தகையதொரு கூட்டணிக்கான அவசியம் என்பது, இன்று நிலப்பிரபுத்துவ எதிர்ப்புத் தன்மை கொண்ட ஜனநாயகப் புரட்சியை முழுமைப்படுத்துவதற்கு மட்டுமல்ல; நமது சம காலத்தின் உலகமயமாக்கல், மூன்றாம் உலகின் பெரும்பகுதியின்மீது கட்டவிழ்த்து விட்டுள்ள கடுமையான விவசாய நெருக்கடியையும், பொதுவான சிறு உற்பத்தி நெருக்கடியையும் சமாளிக்கவும் கூட, இன்று எழுகிறது. காலனிய எதிர்ப்புப் போராட்டத்தின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு ஏற்ப, காலனியாதிக்கத்திற்குப் பின்பு வந்த, சலுகைகள் வழங்கும்(டிரிஜிஸ்ட்) ஆட்சிகள் வெவ்வேறு அளவில் சிறு உற்பத்திக்கு வழங்கி வந்த அரசின் ஆதரவை நீக்குவதையும் இது இன்றியமையாத ஒன்றாக ஆக்கியுள்ளது. மேலும் இத்துறையை, உலகளாவிய அளவில் நகர்ந்து கொண்டே செல்லும் பெரு மூலதனத்தின் ஆக்கிரமிப்பு, உலகச்சந்தையின் விலையேற்ற-இறக்கங்களை எதிர்கொள்ளச் செய்துள்ளது.
“இந்தப் பொருளாதாரங்களின் முதலாளித்துவத் துறைகளில் உழைப்பிற்கான தேவையின் வளர்ச்சி வருந்தத்தக்க வகையில் போதுமானதாக இல்லாததாலும், தொழிலாளர் சக்தி தன் இயற்கையான வளர்ச்சியைக் கூட இழந்து நிற்பதாலும், சிறு உற்பத்தித் துறையில் பெருமூலதனத்தின் இந்த ஆக்கிரமிப்பு, முதலாளித்துவத் துறைக்குள்ளேயே வேலை செய்யும் தொழிலாளர்கள் உட்பட, பல லட்சக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு கடுமையான துயரத்தை உருவாக்கியுள்ளது. உதாரணமாக, இந்தியாவில், கடந்த 30 ஆண்டுகளில், 4,00,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.”
இந்தியாவில் சமீப கால முயற்சிகள்
2000ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தின் 7.6வது பத்தி இவ்வாறு கூறுகிறது: “மக்கள் ஜனநாயக முன்னணியின் மையமும் அடிப்படையும் தொழிலாளி வர்க்கம் – விவசாயிகளின் உறுதியான கூட்டணியே ஆகும். இந்தக் கூட்டணி நாட்டின் சுதந்திரத்தைக் காப்பதிலும், நீண்டகால ஜனநாயக மாற்றங்களை அடைவதிலும், ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தை உறுதி செய்வதிலும் மிக முக்கியமான சக்தியாகும். புரட்சியை நடத்துவதில் பிற வர்க்கங்களின் பாத்திரம் என்பது தொழிலாளி-விவசாயி கூட்டணியின் பலத்தையும் உறுதித்தன்மையையுமே முக்கியமாகச் சார்ந்துள்ளது.”
நமது ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்டத்திலும், தொழிலாளி வர்க்கத்தின், விவசாயிகளின் முந்தைய வரலாற்றுச்சிறப்புமிக்க போராட்டங்களிலும் ஆன பல்வேறு புகழ்பெற்ற உதாரணங்களில் இந்தியாவின் தொழிலாளி-விவசாயி ஒற்றுமை வெளிப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில், 2018 முதல் 2023 வரையிலான காலத்தில், சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் நாடு தழுவிய மிகப்பெரும் கூட்டு நடவடிக்கைகள் மூலம், இத்திசைவழியில் உணர்வுபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெரிதும் வெறுக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2020-21ஆம் ஆண்டில் விவசாயிகளின் நாடு தழுவிய ஓராண்டுக்காலப் போராட்டத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க திருப்புமுனை அடையப்பட்டது. இது சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) வால் வழிநடத்தப்பட்டது. மேலும், இது மத்திய தொழிற்சங்கங்களின் தலைமையின் கீழ் தொழிலாளி வர்க்கத்தின் தங்குதடையற்ற, உறுதியான ஆதரவையும் பெற்றது. அதைப் போன்றே, மத்திய தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தங்களும் எஸ்கேஎம்மின் முழு ஆதரவைப் பெற்றன. இந்த இரு வர்க்கக் கூட்டணிகளின் கூட்டுப் போராட்டம் 2024ஆம் ஆண்டிலும் தொடர்கின்றது.
எனினும், இவை அனைத்துமே மிகச் சிறிய அளவிலான தொடக்கம் மட்டுமே. தற்போதுள்ள கார்ப்பரேட் ஆதரவு – வகுப்புவாத – மனுவாத – எதேச்சாதிகார ஆர் எஸ் எஸ் – பாஜக அரசைத் தோற்கடிக்கும் உடனடி இலக்கை அடைய, மேலும் விரிவான, தீவிரமான கிளர்ச்சித் தன்மை கொண்ட, அரசியல் ரீதியான, தத்துவார்த்த ரீதியான, அமைப்புரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். லெனினின் கனவுகளுக்கு உகந்தவகையில், தொழிலாளி-விவசாயி கூட்டணியைக் கட்டியெழுப்ப, இந்தியாவில் இடதுசாரி – ஜனநாயக சக்திகளால் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம் மட்டுமே, நம் நாட்டில் உண்மையிலேயே புரட்சிகரமான, ஒரு சமூக மாற்றத்தைக் கொண்டுவருவதில் நம்மால் வெற்றிபெற முடியும்.
தமிழில்: வீ. பா. கணேசன்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
