
உறுதியான கம்யூனிஸ்ட் கட்சிக்கு லெனினியம் காட்டிய பாதை!
ஸ்ரீதிப் பட்டாச்சார்யா
உலகமெங்கும் பரவலாக ‘லெனின்’ என்று அறியப்பட்ட தோழர் விளாதிமிர் இல்லிச் உல்யானோவ், தனது மகத்தான பங்களிப்பால், சமூகப் புரட்சிக்கான மார்க்சிய கோட்பாட்டை வளப்படுத்தினார். மார்க்சியத் தத்துவம், மார்க்சியப் பொருளாதாரம், மார்க்சியப் புரட்சிக் கோட்பாடு – ஆகியவை மார்க்சியத்தின் மூன்று உள்ளடக்கக் கூறுகளாகும். இந்த மூன்று கூறுகளிலும் லெனின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்ததாகும். அவர் இயக்கவியல் பொருள்முதல் வாதத்தைப் பாதுகாத்து வளப்படுத்தினார். அவர் ஏகாதிபத்தியத்தை விளக்கியதன் மூலம் மார்க்சியப் பொருளியலை வளப்படுத்தினார். ‘அரசும் புரட்சியும்’ என்ற அவரது நூல் உலகம் முழுவதும் உள்ள புரட்சியாளர்களுக்கு கையேடாக மாறியது.
முதலாளித்துவ சுரண்டலை ஒழித்துக் கட்டுவதுதான் மார்க்சியத்தின் இலக்கு. முதலாளித்துவச் சுரண்டலே, மனித சமுதாயம் காண்கிற இறுதியான சுரண்டல் வடிவமாகும். முதலாளித்துவம் ஒழிக்கப்பட்டாக வேண்டும். உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் நடைபெறுகிற, பாட்டாளி வர்க்கப் புரட்சி மட்டுமே முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்ட முடியும். முதலாளித்துவம் ஒழிக்கப்பட்டால், அத்துடன் வர்க்கச் சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பு முற்றாக முடிவுக்கு வரும். தங்களின் இந்தக் கடமையை நிறைவேற்றிட, உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு சொந்த கட்சி அவசியம். அதுவே கம்யூனிஸ்ட் கட்சி.
ஒவ்வொரு நாட்டிலும் அமைந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், தங்கள் நாடுகளில் முதலாளித்துவ அமைப்பை ஒழித்துக் கட்டி, சோசலிச அரசை (பாட்டாளி வர்க்க அரசை) நிர்மாணிக்கும் வரலாற்று பாத்திரத்தை ஆற்றிட வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும், சோசலிச புரட்சியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதே கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்றுக் கொண்ட பணி. தங்கள் நாடுகளில் புரட்சியை வெற்றியடையச் செய்திட, அந்த நாடுகளின் திட்டவட்டமான சூழ்நிலைகளில் மார்க்சியத்தை அமலாக்க வேண்டும்.
இந்த சூழ்நிலையில், எல்லா கம்யூனிஸ்டுகளும் தோழர் லெனினின் மிகவும் பொருளுள்ள முக்கியமான பாடங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ‘திட்டவட்டமான சூழ்நிலைகள் பற்றிய திட்டவட்டமான ஆய்வு’ என்பதே இயக்கவியலின் சாரமாகும். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியும், அங்கு நிலவும் திட்டவட்டமான சூழ்நிலையை ஆய்வு செய்து, அந்த திட்டவட்டமான சூழ்நிலையில், புரட்சிகரக் கோட்பாடான மார்க்சியத்தை அமலாக்குவது அதன் பொறுப்பு. கட்சியின் திட்ட ஆவணத்தில்தான் நாம் குறிப்பிட்ட நாட்டின் சூழ்நிலையில் மார்க்சியத்தை அமலாக்குவதை பார்க்கிறோம். ஒவ்வொரு நாட்டிலும் புரட்சிக்கான கட்சித் திட்டம் உள்ளது. அதன் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் திட்டவட்டமான புரிதலின் அடிப்படையில் தங்கள் செயல்பாடுகளை மேற்கொள்கின்றன.
உழைக்கும் வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரம்
கம்யூனிஸ்ட் கட்சி, அதாவது உழைக்கும் வர்க்கத்தின் கட்சியின் அவசியத்தையும், அதன் வரலாற்று பாத்திரத்தையும் முதன் முதலில் தனித்துக் குறிப்பிட்டவர்கள் மார்க்சும் எங்கெல்சும்தான்.
1848ஆம் ஆண்டு, கார்ல் மார்க்சும் எங்கெல்சும் எழுதி வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையில், “கம்யூனிஸ்டுகளுடைய உடனடி நோக்கம், மற்றெல்லாப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் உடனடி நோக்கம் எதுவோ அதுவேதான். பாட்டாளிகளை ஒரு வர்க்கமாகக் கட்டியமைத்தல்; முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துதல்; பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தல் ஆகியவைதாம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
கம்யூனிஸ்ட் கட்சியின் தேவை
மேலும் அவர்கள், “கம்யூனிஸ்டுகள் ஒருபுறம் நடைமுறை ரீதியில், ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தொழிலாளி வர்க்கக் கட்சிகளில், மிகவும் முன்னேறிய, மிகவும் உறுதி வாய்ந்த பிரிவாக, மற்றவர்கள் அனைவரையும் முன்னோக்கி உந்தித் தள்ளுகின்ற பிரிவாக உள்ளனர். மறுபுறம் தத்துவ ரீதியில், கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்கத்தின் பெருந்திரளினருக்கு இல்லாத ஓர் அனுகூலத்தை, அதாவது, பாட்டாளி வர்க்க இயக்கத்தின் திசைவழியையும், நிலைமைகளையும், இறுதியில் ஏற்படும் பொதுவான விளைவுகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் அனுகூலத்தைப் பெற்றுள்ளனர்.” எனவும் கூறுகின்றனர்.
எனவே, இதில் கம்யூனிஸ்ட் கட்சிக்கான தேவையை விளக்கும் அம்சங்கள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ரஷ்யாவில் புரட்சியை முன்னெடுத்து சோசலிசத்தை நிறுவும் போராட்டக் களத்தில், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதன் செயல்பாட்டுக்கும் திட்டவட்டமான வடிவம் கொடுத்தார் தோழர் லெனின் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
கட்சி அமைப்பு என்பது உறுப்பினர்களால் ஆகியது. கட்சியின் வலிமை அதன் உறுப்பினர்களைச் சார்ந்ததே. எனவே ஒருவர் கட்சிக்குள் இடம்பெறும் முன்னர் தனது தரத்தை மேம்படுத்திக் கொள்ளும் நடைமுறைகளுக்கு, தத்துவ – அரசியல் பயிற்சிக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் ஒருவர் கட்சி உறுப்பினராவதற்கு முன் மார்க்சிய கோட்பாட்டின் அடிப்படைகளை உள்வாங்க முடியும். அதே சமயத்தில் அவர்கள் கம்யூனிச பாணியில் வேலை செய்ய பயிற்றுவிக்கப்பட வேண்டும். கட்சி உறுப்பினர்கள், வெகுமக்களிடம், குறிப்பாக உழைக்கும் மக்கள் திரளிடம், செல்வதும், அவர்களை அமைப்பாக்கப் பணியாற்றுவதும், சமூக வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் முன்னேற்றத்திற்கான போராட்டத்திற்கு அவர்களை தயார்ப்படுத்துவதும் பற்றிய விழிப்புணர்வினைப் பெற்றிட வேண்டும்.
ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியில் [RSDLP], உறுப்பினர் சேர்ப்பு குறித்தும், ஒருவர் கட்சியில் எப்படி உறுப்பினராவது என்பதைக் குறித்தும் கடுமையான விவாதங்கள் நடைபெற்றன. அந்த விவாதத்தில் லெனினும் அவரது தோழர்களும் ஈடுபட்டு, உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியை கட்டமைத்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் முழுமையான நம்பிக்கையுள்ள எவரும், கட்சியின் அமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டால், அவர் கட்சி உறுப்பினராக தகுதியானவரே என்ற கருத்தை மார்ட்டோவ் என்பவர் முன்வைக்க, கம்யூனிஸ்ட் கட்சி தலைமைக் குழுவில் கணிசமானவர்கள் அதை ஏற்ற நிலையில் இருந்தனர். லெனின் அங்கே எதிர்க்குரல் எழுப்பினார். புரட்சிகர கட்சி அமைப்பில், அனுதினமும் நடக்கும் புரட்சிகரப் போராட்டத்தில் ஈடுபடாத வாய்ச்சொல் வீரர்கள் நிரம்பி விடுவார்கள் என்று அவர் சொன்னது தனித்துக் குறிப்பிட வேண்டியது. கம்யூனிஸ்ட் கட்சி புரட்சியாளர்களின் கட்சியாகும். எனவே, அன்றாட புரட்சிகரப் போராட்டங்களில் ஈடுபடக் கூடியவர்களும், புரட்சிகர மார்க்சிய கோட்பாட்டின் சாரத்தை உள்வாங்கியவர்களுமே, கட்சியில் உறுப்பினராக தகுதியானவர்கள். இந்தப் புரிதலை நீர்த்துப் போகச் செய்தால், கட்சியின் புரட்சிகரத் தன்மையை சிதைக்கும் என்பதை லெனின் அழுத்தமாக குறிப்பிட்டார். இறுதியில், நீண்ட வாதங்களுக்கு பின்னர் லெனின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்களை கட்சியின் பெரும்பான்மையானோர் ஏற்றார்கள்.
வெகுமக்களிடம் ஆற்றும் பணி
முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களும், ஏகாதிபத்திய சக்திகளும், இன்ன பிற வகையான பிற்போக்கு சக்திகளும் முன்னெடுக்கும் தாக்குதல்களை எதிர்கொண்டே, எப்போதும் கம்யூனிஸ்டுகள் பணியை முன்னெடுக்க வேண்டியுள்ளது. பெரும் தாக்குதல்களை கம்யூனிஸ்டுகள் எதிர்கொண்டு நிற்க வேண்டும். இப்படியான சூழலில், மக்கள் சக்தி மட்டுமே, அதிலும் குறிப்பாக உழைக்கும் மக்களின் முழு மனதுடன் கூடிய ஆதரவு மட்டுமே, கம்யூனிஸ்டுகளை வெல்லற்கரியவர்களாக ஆக்கும். இதில்தான் கம்யூனிஸ்டுகள் வெகுமக்களிடையே ஆற்றும் பணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தப் பணி மிக முக்கியமானதாகும்.
2015ஆம் ஆண்டில் நடந்த சி.பி.ஐ(எம்) கொல்கத்தா பிளீனம், நமது கட்சியை வெகுமக்கள் நிலையுடன் கூடிய புரட்சிகர கட்சியாக மாற்ற வேண்டுமென அழைப்பு விடுத்தது. இந்த பிளீனத்தில் நமது வெகுமக்கள் அமைப்புகளுடைய அணுகுமுறை வெகுமக்களுக்கேற்ற தன்மையோடு இருக்க வேண்டும் என்பதற்கும், நம்முடைய கட்சி தோழர்கள், அதிலும் குறிப்பாக கட்சித் தலைவர்கள், மக்களோடு மென்மேலும் நெருங்கிய உறவோடு இருக்க வேண்டும் என்பதற்கும் சிறப்பான அழுத்தம் தரப்பட்டது. அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே, நமது கட்சியை உழைக்கும் மக்கள் உள்ளிட்டு, அனைத்து பிரிவு மக்களோடு வலிமையான, உயிரோட்டமான தொடர்பு கொண்டதாக உறுதி செய்திட முடியும்.
லெனின், புரட்சியை (1971, நவம்பர் புரட்சியை) எவ்வாறு அணுகினார் என்பதை இந்தப் பின்னணியோடு விவாதிப்பது நன்மை தரும். 1921ஆம் ஆண்டில், கம்யூனிஸ்ட் அகிலத்தின் மூன்றாவது மாநாட்டில் லெனின் பேசினார். அப்போது, வலுவான தீவிர இடதுசாரி போக்குக்கு எதிராக அவர் உறுதி காட்டினார். மில்ஸ் என்பவர் முன்வைத்த அந்த கருத்தாக்கத்தின்படி, இறுக்கமாக அமைக்கப்பட்ட கட்சி ஸ்தாபனமானது, புரட்சியை முன்னெடுக்கும் “பாட்டாளி வர்க்கத்தின் தன்னெழுச்சியான வரலாற்று பாத்திரத்திற்கு மாற்றாக அமையும்” என்று நம்பப்பட்டது. இதற்கு மாறாக, லெனின் முன்வைத்த வாதத்தின் போது இவ்வாறு கூறினார்: “ஐரோப்பாவை போல, கிட்டத்தட்ட எல்லா பாட்டாளிகளும் ஒருங்கைமைக்கப்பட்டுள்ள நிலைமையில், உழைக்கும் வர்க்கத்தின் பெரும்பான்மையை கம்யூனிஸ்ட் இயக்கம் வெற்றி கொண்டாக வேண்டும் என்பதை உணரத் தவறக்கூடியவர் யாராக இருந்தாலும், மூன்று ஆண்டு கால பெரும் புரட்சியின் காலகட்டத்தில் இதைக் கூட கற்றிருக்கவில்லை என்றால், அவர் ஒரு போதும் எதையும் கற்றுக்கொள்ள மாட்டார்…. நாங்கள் ரஷ்யாவில் அடைந்த வெற்றியானது, எங்களின் பக்கம் சந்தேகத்திற்கிடமில்லாமல் உழைக்கும் வர்க்கத்தின் பெரும்பான்மையினர் இருந்ததால் மட்டுமல்ல; (1917 தேர்தல்களில் தொழிலாளர்களின் மகத்தான பெரும்பான்மையானவர்கள் மென்சுவிக்குகளுக்கு எதிராக எங்களுக்கே வாக்களித்தனர்). நாங்கள் அதிகாரத்தை கைப்பற்றிய உடனேயே ராணுவத்தில் பாதியும், சில வாரங்களில் விவசாயிகளில் பத்தில் ஒன்பது பங்கினரும் எங்கள் பக்கம் வந்ததால்தான்” . இவ்வாறு குறிப்பிடுவதன் மூலம், வெகுமக்களோடு கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமான அரசியல் பிணைப்பு அவசியம் என்பதை லெனின் வலியுறுத்துகிறார். இதன் மூலம், கட்சியால் உயிரோட்டமான தொடர்பை ஏற்படுத்த முடியும் என்பதை லெனின் எடுத்துக் காட்டுகிறார்.
கம்யூனிஸ்டுகள் தங்கள் நீடித்த பணிகளையும், போராட்டங்களையும் முன்னெடுத்து உழைக்கும் மக்களிடமும், பொதுவான மக்களிடமும் நம்பிக்கையை சம்பாதிக்க வேண்டும்.
24 வது கட்சிக் காங்கிரஸ், உள்ளூர் போராட்டங்களை வலியுறுத்தியது. மக்கள் வாழக்கூடிய உள்ளூர் பகுதிகளில் (நகரங்களிலும், கிராமங்களிலும்) பல்வேறுபட்ட சிக்கல்களும், பிரச்சனைகளும் உள்ளன. கம்யூனிஸ்டுகளாகிய நாம், அவற்றிற்கு தீர்வு காணும் விதத்தில் மக்கள் இயக்கங்களை கட்டியெழுப்ப வேண்டும். நிச்சயம் இது நமது கட்சிக்கு மக்களிடம் உயிரோட்டமான பிணைப்பினை ஏற்படுத்த உதவும்.
லெனினின் போதனைகளை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். முன்னணியாகத் திகழும் அமைப்பில் (Vanguard organization) செயல்படும் கணிசமான சிறுபான்மையினர், மெய்யான தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், புரட்சிகர இளைஞர்கள், புரட்சிகர பெண்கள், ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் புரட்சிகர பகுதியினர், கட்சியை தங்களின் சொந்த முன்னணியாக அங்கீகரித்து, அதன் நடவடிக்கைகளை பின்பற்றும்போது நமது கட்சியும் ஒரு முன்னணிக் கட்சியாக (vanguard party) மாறுகிறது. அது பத்து சதவீதமா அல்லது பதினைந்து சதவீதமா என்பது முக்கியமில்லை; ஆனால் அது வர்க்கத்தின் உண்மையான பகுதியாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபோது, அங்கே உண்மையான கட்சியும் இருக்காது. எதிர்கால கட்சிக்கான கரு மட்டுமே இருக்கும். அப்படியான கரு என்னவாக ஆகும் என வரலாற்றில் தேடும்போது, இதுவரை பதில் தெரியாத கேள்வியாகவே அது நீடிக்கும் எனலாம். ஒரு முன்னணி அமைப்பினை, வர்க்க வேர்களைக் கொண்ட, வர்க்கப் போராட்டத்தில் தம்மை இறுத்திக் கொண்ட, உண்மையான வர்க்கங்களில் சிறு பகுதியாக இருந்தாலும் அவர்களின் ஏற்பை பெற்ற உண்மையான முன்னணிக் கட்சியாக மாற்றுவதற்கு, வர்க்கப் போராட்டத்தில் நிரந்தரமாக ஈடுபடுவது அவசியமாகும்.
ஜனநாயகமும், ஜனநாயக மத்தியத்துவமும்
கம்யூனிஸ்ட் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் மிக உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கட்சியில் எப்போதும் கூட்டுச் செயல்பாடு வலியுறுத்தப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி என்பதே ‘கூட்டு விவாதமும், கூட்டு முடிவும், தனிப் பொறுப்பும்’ தான். அவ்வாறு கூறுவதன் பொருள், கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாட்டில் தனி நபரும், அவருடைய பங்களிப்பும் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது என்பதாகும். கட்சியின் எந்தவொரு உறுப்பினரும், புரட்சிகர கட்சி அமைப்பின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் மதிப்பு மிக்க பங்களிப்பைச் செலுத்தி அதன் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு தயாராக்கிட ஒரு கட்சியில் முழுமையான ஜனநாயகமும், கூட்டுச் செயல்பாடும் உறுதி செய்யப்படுவது போதுமானதாகும்.
கட்சியை, கூட்டுச் செயல்பாட்டின் மூலம் வழிநடத்த வேண்டும். (கிளை முதல் மத்தியக் குழு, அரசியல் தலைமைக்குழு வரை) எந்த நிலையில் மேற்கொள்ளப்படும் முடிவும், அந்த மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கூட்டான விவாதத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பிட்ட சூழலின் தேவைக்கேற்ப சில முடிவுகளை ஒரு சிலர் மட்டும் விவாதித்து எடுக்கலாம். அவ்வாறான சமயத்தில் அந்த முடிவுகளை கூடிய விரைவில் அந்த மட்டத்தில் விவாதத்திற்கு உட்படுத்திவிட வேண்டும். தனிநபர் வாதத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியில் இடம் இருக்கக் கூடாது.
கூட்டுச் செயல்பாடுதான் ஜனநாயக மத்தியத்துவத்திற்கு அவசியத்தை ஏற்படுத்துகிறது. உட்கட்சி ஜனநாயகம் என்பது கூட்டு விவாதங்களின் நேரத்தில் உயர்ந்த மட்டத்தை அடைகிறது. கூட்டு விவாதத்தின் வழியாகவே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறு எடுக்கப்படும் முடிவு ஒரே மனதாகவோ, அல்லது பெரும்பான்மைக் கருத்து என்ற அடிப்படையிலோ எடுக்கப்படலாம். கம்யூனிஸ்ட் கட்சி என்பது புரட்சிக்கான கட்சி, அது அரட்டை அரங்கமல்ல என்று லெனின் மீண்டும் மீண்டும் நினைவூட்டி வந்தார்.
எந்தவொரு பிரச்சனையிலும் ஒருமனதாக முடிவுகள் எடுக்கப்பட்டால் சரிதான். இல்லையென்றால் முடிவெடுப்பதை தாமதிக்க முடியாது. அப்போது பெரும்பான்மையின் அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்பட வேண்டும். ஒரு முடிவு எடுக்கப்பட்ட பின்னர் அது ஒருமனதாக மேற்கொள்ளப்பட்டதா அல்லது பெரும்பான்மை அடிப்படையிலா என்ற கேள்விக்கு இடமில்லை. சம்பந்தபட்ட கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அதை கட்டாயம் அமலாக்க வேண்டும். மேல் கமிட்டியின் முடிவுகள் அதற்கு அடுத்த நிலையில் உள்ள எல்லா கமிட்டிகளும் கட்டாயமாக அமலாக்க வேண்டியவை.
ஜனநாயக மத்தியத்துவமே கட்சியின் உயிரோட்டமும், சாராம்சமும் ஆகும். ஜனநாயக மத்தியத்துவம் பலவீனப்படுமானால், கட்சியின் புரட்சிகர செயல்பாடு ஆபத்தில் சிக்குகிறது. முதலாளித்துவத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் வலிமை, ஜனநாயக மத்தியத்துவத்தை கடைப்பிடிப்பதில் அதற்குள்ள திறமையில்தான் மறைந்துள்ளது. கட்சியின் அடிப்படையாக ஜனநாயக மத்தியத்துவமே அமைய வேண்டும் என்பதற்காக லெனின் தன் வாழ்நாளெல்லாம் போராடினார். ஜனநாயக மத்தியத்துவம் நீர்த்துப்போகும்போதெல்லாம், கட்சியே அழிவுக்குள்ளாகிறது என்பதுதான் அனுபவம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஜனநாயக மத்தியத்துவத்தில் பயிற்சி பெற்றுவது, ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் மிக மிக முக்கியமானது. விமர்சனம், சுய விமர்சனம் இரண்டும் கட்சிக்குள் உறுதியாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். [சி.பி.ஐ(எம்) உள்ளிட்டு ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் இதனை கடைப்பிடிக்க போதுமான இடம் உள்ளது. கட்சிக்கு வெளியே இதற்கு இடமில்லை. அவ்வாறு வெளியில் பேசினால், அது கட்சிக்கு கடும் பாதிப்பை உருவாக்கும் ஒழுங்கீனம் ஆகும்]
இந்தக் கோட்பாட்டிலிருந்து விலகலைக் கண்டபோதெல்லாம், லெனின் அதற்கு எதிராக ஓயாத போராட்டத்தை நடத்தினார். கருத்தியலாகவும், அரசியலாகவும் அவர் தீவிரமான போராட்டங்களை இடது திரிபுவாதத்திற்கும், திருத்தல்வாதத்திற்கும், குறுங்குழுவாதத்திற்கும் எதிராக முன்னெடுத்தார். இது உள்கட்சி போராட்டம் ஆகும். கட்சி அமைப்பு என்ற துறையில், எல்லா விதமான தவறான, திசைமாறிய போக்குகளுக்கும் எதிராக தனது போராட்டத்தை அவர் தொடர்ந்து முன்னெடுத்தார். தோழர் லெனினிடம் இருந்து போதனைகளைக் கற்றிடுவோம்; கட்சியின் அனைத்து உறுப்பினர்களும், ஆதரவாளர்களும், நலன் விரும்பிகளும், நமது கட்சியை வெகுஜன நிலைப்பாட்டில் நிற்கும் உண்மையான புரட்சிகர கட்சியாக உருவாக்கிட உறுதியேற்போம்.
தமிழில்: இரா.சிந்தன்
You may also like
1 comment
Leave a Reply Cancel reply
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

விவாதிக்க வேண்டிய கட்டுரை, லெனின் காலம் வேறு, நாடாளுமன்ற ஜனநாயகம் மலராதகாலம், மக்களின் பொது அறிவும் இன்று போல் அன்று இல்லை . அன்று கட்சி அமைப்பு கோட்பாடு நடைமுறைபடுத்தப்பட்டவிதம் இன்று பொருந்தாது. லெனினே பிரிட்டீஷ் தொழிலாளர்களுக்கு வெகுஜன புரட்சி கட்சியின் கூறுகளை விளக்குகிறார் கட்சி இதழ் விற்பனை ஒரு அளவு கோலாகும் . கட்சி முடிவுகள் மேலிருந்து திணிப்பதுவும் தவறு, பெரும்பாண்மை கருத்தென வைப்பதுவும் எல்லா மட்டங்களிலும் விவாதித்து கருத்தொற்றுமையை உருவாக்கி செயலொற்றுமைக்கு வழி அமைக்கும் சிரமமான பணி என்பதை உணர வேண்டும் . மொழி பெயர்ப்பை தவிர்த்து ஆசிரியரின் கருத்தை உள்வாங்கி மேற் கோளாக காட்டி சொந்தமாக எழுதுவது அவசியம் அது வாசகர்களை ஈர்க்கும் லெனினை மறுவாசிப்பிற்கு தூண்டும்