பொதுவுடைமை உலகை நோக்கிய மானுடப் பயணம் தொடரும், வெல்லும்! – 2
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
அறிமுகம்
இக்கட்டுரை தொடரின் முதல் பகுதி சென்ற இதழில் வெளியானது. அதில் போல்ஷெவிக் கட்சியின் தலைமையில் நிகழ்ந்த மகத்தான ரஷ்ய சோசலிச புரட்சி எதிர்கொண்ட பெரும் சவால்கள், அப்புரட்சி நிகழ்த்திய வரலாற்று சிறப்பு மிக்க சாதனைகள் பற்றி சுருக்கமாகப் பார்த்தோம். பின்னர் 1991இல் அது வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் பற்றி விரிவாக விவாதிக்காவிட்டாலும், சுருக்கமாக குறிப்பிட்டிருந்தோம். அதனை தொடர்ந்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நீண்ட பயணம் மேற்கொண்டு, நெடிய போராட்டங்களை நடத்தி கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்று 1949இல் மக்கள் சீன சோசலிச அரசை உலகிற்கு அறிவித்த மகிழ்ச்சியான தருணத்தை நினைவு கூறினோம். பின்னர், மக்கள் சீனம் தனது முதல் முப்பது ஆண்டுகளில் (1949-1979) சோசலிச பாதையில் எவ்வாறு வேகமாக முன்னேறியது என்பதை மிகவும் சுருக்கமாக விவரித்தோம். சுதந்திர இந்தியாவும் சோசலிச மக்கள் சீனமும் தங்கள் வளர்ச்சி பயணத்தை கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் துவக்கின. ஆனால் இருவேறு பாதைகளில் பயணித்தன. 1980களுக்குள் நுழைகையில் சோசலிச பாதையில் சென்ற மக்கள் சீனம், முதலாளித்துவ இந்தியாவை விட அனைத்துத் துறைகளிலும் மிகப்பெரிய அளவிற்கு முன்னேறி இருந்தது என்பது உலகறிந்த செய்தி. இதையும் நாம் குறிப்பிட்டிருந்தோம்.
1980கள் உலகளவில் பெரும் பொருளாதார மாற்றங்கள் பாய்ச்சல் வேகத்தில் நிகழ்ந்த காலம். அன்று உலகளவில் ஏகாதிபத்திய நிதி மூலதனம் தனது ஆதிக்கத்தை நிறுவிக் கொண்டிருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் முழுமையாக மீட்சி பெற்று, இழந்த காலனி ஆதிக்க சுரண்டல் ஏற்பாடுகளை மீட்டெடுத்து, சோசலிச உலகை அழித்தொழித்து, மேலை நாடுகளின் தொழிலாளி வர்க்கத்தையும் அடிபணிய வைப்பது என்ற முப்பெரும் திட்டத்தை அமலாக்குவதற்கு அமெரிக்க அதிபர் ரீகன், பிரிட்டிஷ் முதல்வர் மார்கரெட் தாட்சர் உள்ளிட்ட ஏகாதிபத்திய முகாமின் தலைமை களம் இறங்கியது. மக்கள் சீனத்தை பொறுத்த வரையில், வளர்ச்சி தொடர்பான சில புதிய சவால்களும் இருந்தன. நவசீனத்தின் முதல் 25 ஆண்டுகளில் நிகழ்ந்த திட்டமிட்ட வளர்ச்சியின் விளைவாக, பொருளாதாரம் எளிய வேளாண்-சார் தன்மையிலிருந்து நவீன தொழில்மய நாடாக மாறிக்கொண்டிருந்தது. மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் மூலமாக மட்டுமே அடுத்தகட்ட வளர்ச்சியின் இலக்குகளை அடைவது கடினம் என்பதை சீன தலைமை உணர்ந்திருந்தது. சீனப் புரட்சியின் தலைவர்களான மாசேதுங், சூ என்லாய் போன்றோர் 1976இல் மறைந்திருந்த சூழலில், “கலாச்சார புரட்சி” ஏற்படுத்திய குழப்பங்களின் பாதிப்பில் இருந்தும், சீன பொருளாதாரத்தை மீட்க வேண்டியிருந்தது. அடுத்தகட்ட வளர்ச்சிக்கான பாதையை இறுதி செய்ய பல களசோதனைகள் நடத்தப்பட்டன; பல விவாதங்கள் நிகழ்த்தப்பட்டன. இறுதியில், சீன கம்யூனிஸ்ட் கட்சி சில தீர்க்கமான முடிவுகளை அறிவித்தது.
சீனத்தின் சோசலிசம்
1978இல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பதினொன்றாவது மத்திய குழுவின் மூன்றாம் அமர்வு நிறைவேற்றிய தீர்மானம் புதிய இலக்குகளை முன்வைத்தது. தொழில் துறை, வேளாண்மை துறை, தேசீய பாதுகாப்பு துறை மற்றும் அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சி ஆகிய நான்கு அம்சங்களில் சீனா தன்னை நவீனப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது கட்சியின் முக்கிய இலக்கு என்று அது கூறியது. (இவை நான்கும் மாவோ மற்றும் சூ என் லாய் இருவரும் 1950-60களில் முன்மொழிந்தவையே). மிக முக்கியமாக, உற்பத்தி சக்திகளின் வேகமான வளர்ச்சிக்கு உதவும் தன்மையில் உற்பத்தி உறவுகள் மாற்றப்படவேண்டும் என்பதை இத்தீர்மானம் வலியுறுத்தியது. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்குள் மக்கள் சீனத்தை வலிமை மிக்க சோசலிச நாடாக மாற்றவேண்டும் என்ற இலக்கையும் இத்தீர்மானம் முன்வைத்தது. அடுத்து, சீனாவின் சோசலிச வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, உலக நாடுகளின் அனுபவங்களையும், இதர சோசலிச நாடுகளின் அனுபவங்களையும் கணக்கில் கொண்டு, திட்டமிடுதலோடு சந்தைசார் அம்சங்கள் கொண்ட பொருளாதார கொள்கை கருவிகளையும் பயன்படுத்துவது அவசியம் என்ற முடிவுக்கு சீனா தலைமை வந்தது. இதன் பொருள் சீனாவின் சோசலிச தன்மையை மாற்றுவது என்பது அல்ல. சீனாவின் புரட்சி பயணம் சோசலிச பாதையில்தான் தொடரும் என்று டெங் சியாவ் பிங் தலைமையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி திட்டவட்டமாக அறிவித்தது.
1981ஆம் ஆண்டு ஜூன் 27 கூடிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பதினொன்றாவது மத்திய குழு தனது ஆறாவது அமர்வில் “மக்கள் சீன குடியரசு 1949இல் அமைக்கப்பட்டபின் நமது கட்சியின் வரலாறு குறித்த சில கேள்விகள் பற்றி” என்ற தலைப்பில் மிக முக்கியமான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. மக்கள் சீனத்தின் முதல் முப்பத்திரண்டு ஆண்டுகளில் கிடைத்த அனுபவங்களையும், நடத்திய சாதனைகளையும் அத்தீர்மானம் சுருக்கமாக விவரித்தது. (தீர்மானம், பத்தி 7). உற்பத்திக் கருவிகளில் தனி உடமை என்பதை முடிவுக்கு கொண்டுவந்து, அவை பெரும்பாலும் பொது உடமை ஆக்கப்பட்டதையும், வர்க்க சுரண்டல் முடிவுக்கு கொண்டுவரப் பட்டுள்ளதையும் அது குறிப்பிடுகிறது. முப்பத்திரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட பிரம்மாண்டமான பொருளாதார வளர்ச்சியின் விவரங்களையும் தீர்மானம் பதிவு செய்கிறது. பிறகு கலாச்சார புரட்சி என்ற பெயரில் நிகழ்ந்த பெரும் தவறுகளையும் அவை ஏற்படுத்திய பின்னடைவுகளையும் குறிப்பிடுகிறது. ஒட்டுமொத்தமாக 1949-1981 காலத்தை மதிப்பீடு செய்து பின்வருமாறு கூறியது:
சீனாவை சோசலிசம் மட்டுமே காப்பாற்றும்… மக்கள் சீனம் அமைக்கப்பட்டபின் முதல் 32 ஆண்டுகளின் அடிப்படை வரலாற்று அனுபவம் இதுதான். சீனா ஒரு சோசலிச அமைப்பை நிர்மாணித்துள்ளது… சோசலிச கட்டத்தை அடைந்துள்ளது. இந்த அடிப்படை உண்மையை மறுப்பது தவறு.
பழைய சீனத்தில் முற்றிலும் சாத்தியமற்றதாக இருந்த பலவற்றை சோசலிச பாதை சாதித்ததை சுட்டிக்காட்டி, இது சோசலிச அமைப்பின் மேன்மையை வெளிப்படுத்துகிறது என்றும் இத்தீர்மானம் கூறுகிறது.
அடுத்து, சோசலிச புரட்சியின் முதல் கட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட பின்னணியில், சில முக்கிய கடமைகளை தீர்மானம் முன்வைக்கிறது:
- சீனத்தின் சமகால பிரதான முரண்பாடு என்பது மக்களின் வளர்ந்து வரும் பௌதீக மற்றும் பண்பாட்டு தேவைகளுக்கும், பின்தங்கிய சமூக உற்பத்திக்கும் ஆனதுதான். எனவே அரசு ஆற்றும் கட்சியின் பணிகளின் குவிமையம் பொருளாதார நிர்மாணத்தை மையப்படுத்தும் சோசலிச நவீனப்படுத்துதல் சார்ந்து இருக்கவேண்டும். உற்பத்தி சக்திகளை ஆகப்பெரிய அளவிற்கு விரிவுபடுத்தி, மக்களின் பௌதீக மற்றும் பண்பாட்டு தேவைகளை படிப்படியாக பூர்த்தி செய்வது அவசியம்.
- அரசு/பொதுப் பொருளாதாரமும் கூட்டுப் பொருளாதாரமும்தான் சீனப்பொருளாதாரத்தின் அடிப்படை வடிவங்கள்.
- திட்டமிட்ட பொருளாதாரம் அவசியம். அதேசமயம் இதன் அடிப்படையில் சந்தைக்கும் ஒழுங்குபடுத்தும் பணி உண்டு.
- ஒவ்வொரு கட்டத்திலும் வளர்ந்துவரும் உற்பத்தி சக்திகளுக்கு உகந்த வகையில், அவற்றை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வகையில், தக்க உற்பத்தி உறவுகளை உருவாக்குவதுதான் நமது பணி.
- சோசலிச புரட்சியின் ஒரு அடிப்படை கடமை, ஜனநாயகத்தன்மை மிகுந்த சோசலிச அரசியல் அமைப்பை உருவாக்குவதாகும். மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், உற்பத்தியிலும் பணிசார் நடவடிக்கைகளிலும் ஒழுங்கை உறுதிப்படுத்தவும், குற்றம் செய்வோரை தண்டிக்கவும், வர்க்க எதிரிகளின் குழப்ப நடவடிக்கைகளை தடுக்கவும், வலுவான கருவியாக சோசலிச சட்ட அமைப்பை ஆக்க வேண்டும்.
1970களின் இறுதியிலும் 1980களிலும் தெளிவான பார்வையுடனும் கொள்கைகளுடனும் சோசலிச மக்கள் சீனம் அனைத்து துறைகளிலும் மிக வேகமான முன்னேற்றத்தை சாதித்தது. இக்கட்டுரையில் முன்பே குறிப்பிட்டதுபோல், 1980கள் வளரும் நாடுகளுக்கு சவால் மிகுந்ததாக இருந்த காலம். ஏகாதிபத்தியம் தனது தாக்குதலை தீவிரப்படுத்திக் கொண்டிருந்தது. உலகவங்கியும் பன்னாட்டு நிதியமும் வளரும் நாடுகளை கடன் வலையில் சிக்க வைத்து, தாராளமய கொள்கைகளை திணிப்பதில் தீவிரமாக இருந்த காலம். சோவியத்-சீன உறவுகளில் விரிசல் இருந்த காலம். எனினும், உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்தி, அதன் அடிப்படையில் பன்னாட்டு பொருளாதார களத்தில் தனது வலுவை உயர்த்தி, மக்கள்சீனம் முன்னேறியது. 1980களின் இறுதியிலும், 1990களின் துவக்கத்திலும் சோவியத் ஒன்றியமும் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளும் சந்தித்த பின்னடைவும், வீழ்ச்சியும், ஏகாதிபத்திய முகாமை வலுப்படுத்தி சீனாவின் சோசலிச வளர்ச்சிக்கு பாதகமாக அமைந்தன. சீனாவிற்குள் செயல்பட்டுவந்த எதிர்புரட்சி சக்திகள் ‘ஜனநாயகம்’ என்ற கவர்ச்சிகரமான முழக்க போர்வையில் கலகம் செய்தன. இந்த வளர்ச்சிப் போக்குகளை கணக்கில் கொண்டுதான் ஏற்கெனவே அமல்படுத்திவந்த ‘’சீர்திருத்தங்கள் மற்றும் பன்னாட்டு பொருளாதாரத்தில் கூடுதல் பங்கேற்றல்” (Reforms and Opening-Up) என்ற முனைவில் தக்க திருத்தங்களை செய்து, மக்கள்சீனம் முன்னேறியது.
மக்கள் சீனத்தின் வியக்கத்தக்க வளர்ச்சி
சீனா பின்பற்றிவரும் வளர்ச்சிப்பாதையில் கடந்த 45 ஆண்டுகளில் வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சி நிகழ்ந்துள்ளது என்பதை எதிரிகள் கூட மறுக்க இயலவில்லை. பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு ஆண்டுக்கான தேச உற்பத்தி மதிப்பு என்ற குறியீட்டை வைத்துப் பார்த்தால் 1980-2024 காலத்தில் இதன் ஆண்டு வளர்ச்சி விகிதம் பெரும்பாலான ஆண்டுகளில் 8-10% என்று 2008வரை இருந்துள்ளது. சில ஆண்டுகளில் குறைந்து இருக்கிறது. 2008இல் ஏற்பட்ட உலக முதலாளித்துவ மந்த நிலை காலத்தில் (2008-2024) கூட சீனாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் மிகச்சில ஆண்டுகளில் மட்டுமே 5%க்கு கீழே சென்றுள்ளது.
ஆனால் ஜிடிபி கணக்குகளை மட்டும் வைத்து ஒரு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார சாதனைகளை மதிப்பீடு செய்வது பொருத்தமல்ல. ஜிடிபி என்று மட்டும் பேசினால் கூட, விலைவாசி உயர்வு விகிதம், தலா உற்பத்தி மதிப்பு பரந்து விரிந்த சீனத்தில் மாநிலங்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வான நிலை, சீன மற்றும் அந்நிய முதலாளிகள் குறிப்பிடத்தக்க சக்தியாக இருக்கும் நிலையில் சொத்து மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகள் நிலை என்று பல அம்சங்களை கணக்கில் கொள்ளவேண்டும். அதேபோல், கல்வி, மக்கள் நல்வாழ்வு, முதியோர் பாதுகாப்பு, சமூக நல அம்சங்கள் என்று வேறு பல விவரங்களையும் பரிசீலிக்க வேண்டும். இவற்றில் எல்லா அம்சங்களுக்குள்ளும் இந்த கட்டுரையில் செல்ல இயலாது. எனினும்
மக்கள் சீனம் கல்வி, மக்கள் நல்வாழ்வு, அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி, அனைத்து உற்பத்தி துறைகளிலும் உற்பத்தி திறன் உயர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு, பாலின சமத்துவத்தின் சில அம்சங்கள், வறுமை ஒழிப்பு, சமூக பாதுகாப்பு போன்ற அம்சங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை சாதித்துள்ளது என்பதை பல்வேறு அதிகார பூர்வமான பன்னாட்டு புள்ளிவிவர ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
ஊரக-நகர இடைவெளிகளை கட்டுக்குள் வைத்தல், தனி நபர் வருமானம் மற்றும் சொத்து தொடர்பான ஏற்றத் தாழ்வுகளை கட்டுக்குள் கொண்டுவருவதில் இன்னும் முன்னேற்றம் தேவை என்று பலரும் கருத வாய்ப்பு உண்டு. அதேபோல் மாநிலங்களுக்கு இடையிலான வளர்ச்சி மற்றும் வருமானம் தொடர்பான ஏற்றத்தாழ்வுகளை கலைவதில் இன்னும் பயணிக்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் சீன கம்யூனிஸ்ட் தலைமையும் சீன அரசும் இவ்வனைத்துப் பிரச்சினைகளையும் கண்காணித்து, மேம்பாடு காண தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர் என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
சீனப் புரட்சி மக்கள் வாழ்வில் மேம்பாடு காண எடுத்துள்ள முனைவுகள், எதிர்கொண்ட சவால்கள், நிகழ்த்தியுள்ள சாதனைகள், சந்தித்துள்ள இடர்கள் இவைபற்றி இன்று ஏராளமான தரவுகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றை தேடி பிடித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளம்!
சோசலிச புரட்சி, நிர்மாணம் இரண்டும் மாபெரும் சவால்கள்
சோசலிசத்தை நிர்மாணிப்பது என்பது எப்படியும் எங்கும் எளிதான பணி அல்ல. இதனை நமது இயக்க தோழர்கள் அவசியம் உணர வேண்டும். சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒரு சில புரட்சிகர இளைஞர்களால் 1921இல் துவக்கப்பட்டது. மிகவும் பின்தங்கிய நாடாக இருந்த சீனத்தில், மேலை ஏகாதிபத்திய நாடுகளால் சூறையாடப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு கூனிக் குறுகி வீழ்ந்திருந்த சீனத்தில் 28 ஆண்டுகள் நீண்ட நெடிய உறுதி மிக்க போராட்டங்கள் நடத்தி, மிகவும் ஆபத்தான சூழல்களை எதிர்கொண்டு, இறுதியில் வெற்றி பெற்று, சீன கம்யூனிஸ்ட் கட்சியும் சீன மக்களும் சோசலிச சீனத்தை நிர்மாணித்து வருகின்றனர். இதனை பொருளாதார குறியீடுகளை மட்டும் வைத்து மதிப்பீடு செய்வது பொருத்தமல்ல. பொருளாதார வளர்ச்சி என்ற அடிப்படையிலும், மக்கள் வாழ்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்ற அடிப்படையிலும் பார்த்தாலும், மக்கள் சீனமும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் பெரும் வரலாற்று சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகின்றனர். ஆனால், இதனை தாண்டி ஏகாதிபத்திய முகாமிற்கு மிகப்பெரும் சவாலாக சோசலிச மக்கள் சீனம் உள்ளது என்பது மிக முக்கியம். 1970களின் இறுதியில், மாவோ மற்றும் சூ என் லாய் மறைவுக்குப்பின் சீன கட்சி சோசலிச நிர்மாணம் தொடர்பான சவால்களை மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் நிலைபாட்டில் நின்று மிகச்சரியாக மதிப்பீடு செய்ததால், பின்னர் சோவியத் ஒன்றியத்தில் சோசலிசம் வீழ்த்தப்பட்டும், சீனத்தில் சோசலிச அமைப்பை பாதுகாக்க முடிந்தது. இதன் மிக முக்கியமான பன்னாட்டு விளைவு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் “ஒரே துருவ உலகம்” அமைந்தபொழுதும், இன்று உலகம் பலதுருவப்பாதையில் பயணிக்கும் வாய்ப்பு நம் முன் உள்ளது என்பதாகும். பல வளரும் நாடுகள், பன்னாட்டு அரங்குகளில் முன்வருகின்ற பல பிரச்சினைகளில் தங்கள் நலன்களை ஓரளவிற்காவது பாதுகாத்துக்கொள்ள முடிகிறது என்றால், வலுவான மக்கள் சீனம் ஒரு முக்கிய காரணம். பருவ நிலை மாற்றம் குறித்த விவாதங்களில் மக்கள் சீனத்தின் சோசலிச வளர்ச்சியும் வலுவும் அதன் நிலைபாடுகளும், பொதுவாக ஓரளவிற்காவது வளரும் நாடுகளுக்கு சாதகமான சக்தியாக இருந்து வருகிறது.
1978க்குப்பின் மக்கள் சீனத்தில் அமலாக்கப்பட்டுவரும் “சீர்திருத்தமும்”, சீன கம்யூனிஸ்ட் கட்சி வர்ணிக்கும் “சீன தன்மைகள் கொண்ட சோசலிசம்” என்ற அமைப்பும் பரிசோதனைகள் அடிப்படையில் களம் அறிந்து கொள்கைகளை உருவாக்கி அமலாக்குவது, அவ்வப்பொழுது மீண்டும் பரிசீலனை செய்வது, அதன் அடிப்படையில் பொருத்தமான மாற்றங்களை செய்வது என்ற அணுகுமுறையை பின்பற்ற முயன்று வந்துள்ளனர். அதிகாரங்களை மையப்படுத்துவதை கோட்பாடு ரீதியாக நிராகரித்துள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில்தான் அரசு செயல்படுகிறது என்றாலும், வேறு பல நிலைகளில் தேர்தல் ஜனநாயக முறைகளையும் (electoral democracy) கூட்டு ஆலோசனை மூலம் ஜனநாயக முனைவுகளையும் (consultative democracy) சீன அரசு அமைப்பு பயன்படுத்துகிறது. அவ்வப்பொழுது தவறுகளை திருத்திக்கொள்ளவும் கட்சி அமைப்பிலும் அரசு அமைப்பிலும் வாய்ப்புகள் இருந்துள்ளன. “சட்டத்தின் ஆட்சி” என்ற கோட்பாடு விவாதிக்கப்படுகிறது. ஊழலுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளை சீன கட்சியும் அரசும் சில சமயங்களில் மேற்கொள்வதை காண முடிகிறது. இவை பற்றியெல்லாம் விரிவாக ஆய்வு செய்து விவாதிப்பது இக்கட்டுரையின் வரம்பிற்கு அப்பாற்பட்டது.
சோசலிச பயணங்கள் உலகெங்கும் வரும்!
2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் இருபதாவது அகில இந்திய மாநாடு கோழிக்கோடு நகரத்தில் நிகழ்ந்தது. அந்த மாநாட்டில் நிறைவேற்றிய “சில தத்துவார்த்தப்பிரச்சினைகள் தொடர்பாக” என்ற ஆவணத்தின் வெளிச்சத்தில், ஒரு பின்தங்கிய பொருளாதாரத்தில் பெரும் அளவிலான சோசலிச நிர்மாணத்தை சாத்தியப்படுத்தும் வகையில் உற்பத்தி சக்திகளை திரட்டுவது எப்படி என்பது பின்தங்கிய நாடுகளில் நிகழும் ஒரு சோசலிச புரட்சி எதிர்கொள்ளும் முக்கிய கேள்வி என்று சீனாவின் அனுபவத்தை பரிசீலிக்கும் பொழுது நாம் புரிந்து கொள்ளலாம். உற்பத்தி சக்திகள் நீண்ட காலம் தேக்கமாக இருந்தால் சோசலிச அமைப்பிற்கே ஆபத்து வரும் என்று சீன கட்சி சரியாகவே கருதுகிறது. சீனாவின் பிரத்யேக நிலமைகளை கணக்கில் கொண்டுதான் சோசலிச நிர்மாணம் பயணிக்கவேண்டும். எனவேதான் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சீன குணாம்சங்களை கொண்ட சோசலிச அமைப்பு நிர்மாணிக்கப்படுவதாக அக்கட்சி கூறுகிறது. ஆனால் “நிர்மாணிக்கப்படுவது சோசலிசம் தான்; வேறு எந்த ‘இசமும்’ அல்ல” என்று 1978 முதல் இன்றுவரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை முன்பின் முரணின்றி பிரகடனப்படுத்தியுள்ளது. மேலும், இந்த நிர்மாணம் உற்பத்திக்கருவிகள் பொது உடமை என்ற அடிப்படையில், அரசின் நேரடி திட்டமிடுதலும் வழிகாட்டுதலும் என்ற நெறிமுறைகளுக்கு உட்பட்டு, சந்தை பொருளாதார உறவுகளை பயன்படுத்தும் என்றும், சீனா கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து தெளிவுபடுத்திவந்துள்ளது. அரசின் கட்டுப்பாடுகள் மூலம் பெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தவிர்க்கப்படும் என்று அக்கட்சி கருதுகிறது. இத்தகைய பாதையில் உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரம் வேகமாக உயரும் என்றும் அது கருதுகிறது.
சீன புரட்சியின் அனுபவங்கள் மகத்தானவை. மெய் சிலிர்க்க வைப்பவை. சோசலிச மக்கள் சீன அரசும் கம்யூனிஸ்ட் கட்சியும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. இதனை அவர்களே உரக்க சொல்கின்றனர். அதே நேரத்தில், கடந்த நூறு ஆண்டுகளில் சீன கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் நிகழ்த்தியுள்ள சாதனைகள் மறுக்க முடியாதவை மட்டுமல்ல. எந்த சூழலிலும் சோசலிசத்தை அமைப்பது என்ற சவாலை மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை நமக்கெல்லாம் அளிப்பவை. குறிப்பாக, சோவியத் ஒன்றியம் சிதைக்கப்பட்ட பிறகு, இனி முதலாளித்துவம் மட்டுமே உலகில் கோலோச்சும் என்று கொக்கரித்தவர்களுக்கு, இன்று சிம்ம சொப்பனமாக சோசலிச மக்கள் சீனம் நிற்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
