மே தினமும் – பொது வேலை நிறுத்தங்களும்
எஸ். கண்ணன்
முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை, வேலை நாளின் நீட்டிப்பைக் கொண்டு, மனித உழைப்பு சக்தியின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் வேண்டிய இயல்பான, தார்மீக, பௌதீக நிலைமைகளைக் கூட, தொழிலாளர்களுக்கு கிடைக்காதபடி கொள்ளையிட்டு, அச்சக்தியை சீரழிய செய்வதுடன் வற்றிப் போகும்படியும் செய்கிறது.
— காரல் மார்க்ஸ் வேலை நாள் குறித்த பகுதியில் எழுதியது.
மார்க்ஸ் பிறந்த மே 5ம், ஒரு வேலை நாளில் தங்களின் உழைப்பு நேரத்தை 8 மணி நேரமாக வரையறை செய்ய வேண்டுமெனவும் நாளின் இதர மணி நேரங்கள் அவர்களுடைய ஓய்வுக்கும், சமூக பணிகளுக்குமானதாக இருக்க வேண்டும் எனவும் தொழிலாளர்கள் போராடிய மே தினமான மே 1ம் என பல்வேறு குறிப்பான சிறப்புகளைக் கொண்டதாக மே மாதம் உள்ளது. ஒரு நிகழ்வின் உரையாடலின் போது, மார்க்ஸ் தனது அதிகமான நேரத்தை ஒரு எழுத்தரைப் போலவும் ஒரு கணக்காளரைப் போலவும் செலவிட்டார் என்று ஒரு ஆராய்ச்சி மாணவர் தெரிவித்தார். சமூக மாற்றம் என மாபெரும் புரட்சிகர கருத்துக்களை முன்வைத்த, உழைப்பு சுரண்டலிலிருந்து விடுதலை பெறுவதற்கான பல்வேறு களப்பணிகளையும் இயக்கவியல் விதிகளையும் ஆய்ந்து அளித்த மார்க்சின் பங்களிப்பை கணக்காளரைப் போன்ற பணி என குறிப்பிட்டது, அதிர்ச்சியாகவும், எரிச்சலாகவும் இருந்தது. ஆனால், மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலின் தொகுதி ஒன்றில், வேலை நாள் குறித்து அவர் குறிப்பிட்டிருக்கும் ஏராளமான ஆய்வு விவரங்கள், கணக்காளருக்கு உரிய பணிகளையும் இணைத்ததாக உள்ளது. அப்படிப்பட்ட கணக்குகளில் இருந்தே, தொழிலாளி வர்க்கத்தின் மீதான சுரண்டலை ஒழித்து, சமத்துவ சமூகம் அமைப்பதற்கான தீர்வினை மார்க்ஸ் முன்வைக்கவும் செய்கிறார்.
அப்படி கணக்கிடும் பணியை மார்க்ஸ் மேற்கொள்ளவில்லை என்றால், இன்று பெறப்பட்டுள்ள எந்த ஒரு தொழிலாளர் உரிமையும் கிடைக்காமலேயே போயிருக்கும். வலிகள் தரும் உணர்வினால் மட்டும் போராட்டங்கள் எழுவதில்லை. போராட்டம் என்பது வாழ்விற்கானது. அந்த வாழ்விற்கான பாதையின் திசை தெளிவாக இல்லாதிருந்தால், போராட்டத்தின் மீதான ஈடுபாடும், நம்பிக்கையும் ஏற்படாது. மார்க்ஸ் லண்டனில் செலவிட்ட ஒவ்வொரு நாளும், அன்றைய பிரிட்டிஷ் தொழிலாளர்களின் வேலை நிலை ஆலை வாரியாக எவ்வாறு இருந்தது? அதில் எப்படி போராட்டங்கள் உருவானது? எப்படி அதிகாரிகள் தங்கள் அறிக்கைகளை தயார் செய்தனர்? அது எப்படி சட்டமாகியது என்பதையெல்லாம் தேடித்தேடிக் கண்டடைந்தார். தனது மூலதனம் நூலின், முதல் தொகுதியில் மிக அருமையாக இவற்றை விளக்கி உள்ளார்.
ரொட்டித் தொழிலும், உருக்கு ஆலைகளும்
ரொட்டி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள், 16 மணி நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இரவு 11 மணிக்கு மாவு பிசைவதிலிருந்து பணி துவங்கும். மாவு பதமாவதற்காக இரண்டு மணி நேரமாகும். இந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அவர்களுக்கு ஓய்வு வழங்கப்படும். மாவு பதமாவதற்காக வைக்கப்படும் தொட்டியினை மூடக்கூடிய பலகையின் மீது சாக்கு பைகளை விரித்து, தொழிலாளர்கள் தூங்க வேண்டியிருக்கும். அதிகாலை 2 மணி அளவில் வேலை மீண்டும் துவங்கும். மாவு எறிதல், அடித்து சீராக்குதல், வார்த்தல், அடுப்பில் வைத்தல், உருளை ரொட்டியும், மினுக்கு ரொட்டியும் தயார் செய்து சுடுதல், எடுப்பு எடுப்பாக அடுப்பில் இருந்து எடுத்து வெளியில் எடுத்தல், கடைகளுக்கு அனுப்புதல், போன்ற வேலைகளைச் அவர்கள் செய்கிறார்கள். ரொட்டி தயாராகும் இடத்தின் வெப்பநிலை 75 லிருந்து 90 டிகிரி அளவிற்கு இருக்கும் என்கிறார்.
அதேபோல், ஒரு ஆயத்த ஆடை தயார் செய்யும் நிறுவனம் குறித்து ஆய்வு செய்கிறார். லண்டன் நகரில் விநியோகம் செய்யப்பட்ட அன்றைய நாளிதழ்கள் அனைத்தும், (1863 ம் ஆண்டு) மிகை வேலை காரணமாக மரணம் என்ற பரபரப்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து முழு விவரங்களையும், மார்க்ஸ் சேகரிக்கிறார். 60 பெண் தொழிலாளர்களை கொண்ட ஒரு நிறுவனம். அதன் விவரங்களை பின்வருமாறு பதிவு செய்துள்ளார். 20 வயது மதிக்கத்தக்க பெண், நாள் ஒன்றுக்கு பதினாறு மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்துள்ளார். சில நாள்கள் 20 மணி நேரம் கூட வேலை செய்துள்ளார். 60 பெண்களும் ஓய்வுக்காக, மிகச் சிறிதான இரு அறைகளில் காற்று இல்லாத சூழலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுகாதாரகேடான முறையில் தங்க வைக்கப்படதும், அதிக நேரம் வேலை வாங்கப்பட்டதுமே அவர்களின் மரணத்திற்கு காரணமாகியுள்ளது. திராட்சை ரசமும், காபியும் அந்த பெண்களின் உழைப்பு சக்தியை மீட்டெடுக்கும் ஆகாரம் என்றால், அதன் கொடுமை எவ்வளவு அதிகமானது என்பதை உணர முடியும். வேல்ஸ் இளவரசியை கவுரவிக்கும் விதமான நடன நிகழ்ச்சிக்கான உயர்குடி சீமாட்டிகளுக்கான ஆடை தயாரிப்பு மும்முரமாக நடந்துவந்த சூழலில் இந்த கொடுமை நிகழ்ந்ததை மார்க்ஸ் பதிவு செய்கிறார்.
மேலும், ஒரு உருக்காலை அனுபவத்தை மார்க்ஸ் விவரிப்பது, இன்றைய ஷிப்ட் முறை எப்படி உருவாகி வளர்ந்தது என்பதற்கான ஆதாரமாக உள்ளது. 86 முதல் 90 டிகிரி வரையான வெப்ப நிலையில் பணி புரியும் தொழிலாளர்கள் 24 மணி நேரத்தை இரண்டாக பிரித்துக் கொண்டு வேலை செய்யப் பணிக்கப்பட்டுள்ளனர். பகல் வேலை செய்வோர் எப்போதும் பகல் வேலையையும், இரவு 12 மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளர் இரவு வேலையை மட்டும் தொடர்ச்சியாக செய்வது அவர்களுடைய உடல் நிலையைப் பாதிக்காது என்ற விளக்கத்தின் அடிப்படையில் அந்த உருக்காலை உரிமையாளர்கள் வேலை வாங்கி வந்துள்ளனர்.
மார்க்ஸ் மேற்படி ஆய்வுகளை மேற்கொண்டது, லண்டன் நகரில் அவர் செலவிட்ட 1849 முதல் 1883 காலமாகும். இங்கிலாந்து நாட்டில் சாசன இயக்கம் நடந்து முடிந்த காலமது. சாசன இயக்கம், அரசியல், சமூக, பொருளாதார கோரிக்கைகளை முன்வைத்து நடந்த போராட்டமாக இருந்தபோதும், தொழிலாளர்கள் ஆலைகளில் நடத்தப்பட்ட விதம் பெரும் கேள்விக்குள்ளானது. வேலை நேரம், சுகாதாரம் உள்ளிட்டவை எதிர்ப்பு இயக்கத்தின் பிரதான கோரிக்கைகளாக பிரதிபலித்தன. ஜெர்மானிய அரசால் மார்க்ஸ் லண்டனுக்கு நாடு கடத்தப் படுகிறார். ஏற்கனவே மார்க்ஸ், எங்கெல்சுடன் இணைந்து கம்யூனிஸ்ட் அறிக்கையை பிரசுரித்திருந்த நிலையில், மார்க்ஸ் லண்டனுக்கு வந்த நாள்களில், தொழிலாளர்களின் எண்ணற்ற பிரச்சனைகள் விவாதப் பொருளாக மாறியிருந்தது. எனவே, அவரது ஆய்வு மூலதனத்தின் மீது விரிவானதாக அமைவதற்கான களமாக லண்டன் இருந்ததைக் காண முடிகிறது.
நிமிடத் திருட்டுகள்
சுமார் 200 ஆண்டுகளாக முதலாளித்துவம், தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை. குறிப்பாக நவீன இயந்திரங்கள் உருவான பின்னரும், தொழிலாளரின் நிமிடங்களை சுரண்டுவதில், கடந்த கால தீவிரத்துடனேயே உள்ளன. மார்க்ஸ் “சட்டத்தை மீறி அதிகப்படியான வேலை வாங்குவதன் மூலம், சம்பாதிக்க கூடிய லாபம் பலரையும் மயக்கி ஈர்க்கிறது”, என்கிறார். 1850களில் தொழிற்சாலை ஆய்வாளர்கள், தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து சமர்பித்த அறிக்கைகள் பலவும், புகாருக்கு விளக்கம் அளிப்பதாக இருந்துள்ளது. பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக இல்லை. அந்த காலத்திலிருந்தே, அவர்கள் தண்டத்தொகையாக செலுத்த வேண்டியிருக்கும் அபராத தொகை சொற்பமாகவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. சற்றும் கவலை கொள்ளாமல் சுரண்டவும் தவறு செய்யவும் இது உதவியுள்ளது.
தொழிலாளர்களின் உணவு இடைவேளை, கழிவறை செல்லும் நேரங்களை வெட்டி சுருக்குவதில் நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்துவதாக மார்க்சின் ஆய்வுகள் தெரிவிக்கிறது. “மூலதனம் பல சிறு திருட்டுகளை தொழிலாளர்களிடம் செய்கிறது. தொழிலாளர்களிடமிருந்து பிடுங்கி கொள்ளும் நிமிடங்கள், நிமிடத் திருட்டுக்கள் என்றும், தங்களின் சாப்பாட்டு நேரத்தை, முதலாளிகள் கொறிக்கின்றனர்” என்றும், தொழிலாளர்கள் கூறுவதாக தொழிற்சாலை ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதை மார்க்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றும் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஏராளமான ஆலைகளில், ஷிப்ட் துவங்கும் நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாக பணித்தளத்தில் இருக்க வேண்டும். ஷிப்ட் முடிந்து 10 நிமிடங்கள் கழித்தே பணித் தளத்திலிருந்து வெளியேற வேண்டும் போன்ற உத்தரவுகளை பிறப்பிக்கின்றனர். ஜப்பான் நாட்டு யமஹா நிறுவனம் வேலை துவங்கும்போது மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சியை, உற்பத்தி நேரத்திற்கு முன்னதாக 10 நிமிடங்களில் செய்ய கட்டாயப்படுத்துவதைக் காண முடிகிறது. அதேபோல், ஜெர்மனியின் பி.எம்.டபுள்யு நிறுவனம் தேநீர் இடைவேளையை ஷிப்ட் நேரத்திற்குள் அடக்க முடியாது என அடம் பிடிப்பது காணக்கூடியதாக உள்ளது. பல ஆலைகளில் தொழிலாளர்கள், தங்கள் பணி இடத்தை சுத்தம் செய்யும் ’5 எஸ்’ என்பதை, ஷிப்ட் முடிந்த பின் செய்ய கட்டாயப் படுத்தப் படுகின்றனர். இவை எல்லாம், தொழிலாளர்களுக்குரிய நிமிடங்களை திருடுவதென்பதைத் தவிர வேறில்லை.
பிரிட்டிஷ் அரசு அன்றைக்கு கொண்டிருந்த சட்டங்கள், இது போன்ற நிமிடத் திருட்டுக்கள் குறித்து புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால், அவற்றுக்கு விதிக்ப்பட்ட அபராதங்கள் சொற்பமானதாகவே இருந்துள்ளது என்பதும் கவனிக்கத் தக்கது. பிரிட்டிஷ் அரசு, அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் மீது ஸ்பெயின் திணித்த கொடுமைகளுக்கு சற்றும் சளைக்காத வகையில் பிரிட்டிஷ் நிறுவனங்கள் இருந்ததாகவும், அவற்றை எதிர்த்த போராட்டங்கள் உருவாக்கிய சட்டங்கள் பல ஓட்டைகளைக் கொண்டிருந்ததாகவும் காணப்படுகிறது. தொழிற்சாலைகளை ஆய்வு செய்யும் அதிகாரிகள் மற்றும் முதலாளிகளின் பேராசையைப் பார்க்கும் போது ஆத்திரம் வருவதாக குறிப்பிட்டு உள்ளனர்.
பிரிட்டிஷ் அரசாங்கம் முன்வைத்த மாதிரியை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தியாவில் இன்றளவும் சட்டங்களின் உள்ளடக்கமும், செயல்பாடுகளும் உள்ளன. 1980கள் வரையிலும், இந்தியாவில் தொழிலாளர் சட்டங்கள் ஓரளவிற்கு நிறுவனங்கள் மீது அழுத்தம் தர முடிந்தது. அதன்பின் படிப்படியாக நீர்த்து போகும் நிலையை காண முடிகிறது. குறிப்பாக நவ தாராளமய பொருளாதார கொள்கை மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவானபின் முற்றாக பலம் இழந்துள்ளது. ஏறத்தாழ தமிழ்நாடு உள்ளிட்டு எல்லா மாநிலங்களிலும், தொழிலாளர் சட்டங்கள் பன்னாட்டு நிறுவனங்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில், அதிகமாக சட்ட அமலாக்கத்தை பேசினால் வேறு மாநிலங்களுக்கு, சென்று விடுவோம் என நிறுவனங்கள் அச்சுறுத்துவதைக் காண முடிகிறது.
சட்டங்களை நீர்த்துப்போகச் செய்வதில், பாஜக ஆட்சிக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது. மேக் இன் இந்தியா என்ற பெயரிலும், டிஜிட்டல் இந்தியா என்ற பெயரிலும் வெளியிட்டு வரும் அறிவிப்புகள், தொழிலாளர்கள் மீது ஈவு இரக்கமற்ற சுரண்டலை, அரங்கேற்ற லைசன்ஸ் வழங்கியுள்ளது. அதன் உச்சமாக தொழிலாளர் சட்டங்களை முதலாளிகளுக்கு சாதகமாக திருத்தி அமலாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. வெளிநாட்டு தத்துவம் என கம்யூனிச கோட்பாடுகளை விமர்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக, முதலாளிகளின் உழைப்பு கொள்ளையை உறுதி செய்ய, பிரிட்டிஷ், அமெரிக்கா போன்ற நாடுகள் பின்பற்றும் தொழிலாளர் சட்டங்களை அமலாக்குகிறது.
குறிப்பாக வேலை நேரம் குறைப்பு, உள்ளிட்டு படிப்படியாக, எடுத்துவரப்பட்ட தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்கள், மீண்டும் படிப்படியாக முதலாளிகளுக்கு ஆதரவாக தளர்த்தப்படுகிறது. உலகம் முழுவதும் இத்தகையப் போக்கை பார்க்க முடிகிறது. இருந்தபோதும், இதற்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் தீவிரமாகி உள்ளன.
வேலை நேர குறைப்பின் அவசியம்
1886 மே மாதத்தில் சிக்காகோ நகரின் ஹே மார்க்கட் பகுதியில், 8 மணி நேர வேலையை வலியுறுத்திய நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தின் தாக்கம், உலகம் முழுவதும் தொழிலாளர்களிடம் பற்றி பரவி வந்தது. இந்த பின்னணியில் 1889ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற சோசலிஸ்டுகள் மாநாட்டில், ஏங்கெல்ஸ், உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கும் சிக்காகோவின் ஹே மார்க்கட் போராட்டம், ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று தொழிலாளர் தினமாக சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப் பட வேண்டும். அதன் வீரிய முழக்கம் தீவிரமாக எழுப்பப் பட வேண்டும் என்ற தீர்மானத்தை முன் மொழிந்தார்.
பின்னர் ரஷ்யாவில் அக்டோபர் 29 (பழைய காலண்டர் படி) 1917இல், புரட்சி வெற்றி பெற்று லெனின் அதிபர் பொறுப்பேற்ற 4 வது நாள், தினமும் 8 மணி நேரம் மட்டுமே வேலை நேரமாக ஒவ்வொரு தொழிலாளரும் கடைப்பிடிப்பார். நிறுவனங்களும் 8 மணி நேரம் மட்டுமே வேலை வாங்க வேண்டும் என்ற சட்டத்தை பிரகடனம் செய்தார். சோசலிசம் குறிப்பிடுகிற, உழைப்பு சாதனங்கள் அரசுடமை ஆக்கப்பட்டதனால், மூலதனம் தனியார் வசம் குவியாமல், அரசின் கையில் குவிந்தது. 1928இல் 7 மணி நேரமாக அன்றைய சோவியத் அரசு, வேலை நேரத்தை குறைத்தது. பின்னர் ஆபத்தான வேலைகளில் 6 மணி நேரம் என அறிவித்து அமலாக்கியது. தொடர்ந்து, 1956ஆம் ஆண்டு தினம் 6 மணி நேரம், வாரம் 36 மணி நேரம் என்பதை சட்டமாக்கிய பெருமை சோவியத் யூனியனைச் சாரும்.
இத்தகைய தாக்கம் இதர முதலாளித்துவ நாடுகளில் உள்ள இளைஞர்கள் மத்தியில் உருவாக்கும் தாக்கத்தை உணர்ந்த முதலாளித்துவ நாடுகள் தங்கள் நாடுகளிலும், வேலை நேரத்தை குறைக்க முன் வந்தன. இன்று அமெரிக்காவில் வாரம் 40 மணி நேரம், ஜெர்மனி, ஸ்வீடன், ஸ்பெயின் ஆகியவை தங்கள் நாடுகளில் 36 மணி நேரத்தை வார வேலை நேரமாக தீர்மானிக்க சட்டங்கள் இயற்றியுள்ளன. பிரான்ஸ், வாரம் 5 நாள்கள் வேலை, தினம் 7 மணி நேரம் வேலை என்ற சட்டத்தினை அமலாக்கியது.
இன்று ஏராளமான இயந்திரங்கள் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகின்றன. அதே ரொட்டி தயாரிக்கும் தொழிலும், ஆயத்த ஆடை தொழிலும், உருக்காலைகளும் உள்ளன. இத்தனை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகும் அதே சாவுகளும், நீடித்த கூடுதல் நேர உழைப்பும் தொழிலாளர்கள் மீது திணிக்கப்படுகிறது. நவீன இயந்திரங்கள் தனியார் வசம் மூலதனக் குவிப்பை அதிகரிக்கிறது. இது மார்க்ஸ் குறிப்பிடுவதைப் போல், ஒரு நாளில் 9 மணி வேலை நேரத்தில், 4 மணி நேரம் உபரி உழைப்பு நேரமாக இருந்தபோது சுரண்டல் 100 சதமாக இருந்தது என்றால், இன்று 8 மணி நேர வேலை நேரத்தில் 5 மணி நேரம் உபரி உழைப்பு நேரமாக உள்ளது. அது சரண்டலின் அளவு 125 சதமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாகத்தான் கடந்த காலங்களை விடவும், பல மடங்கு மூலதன பெருக்கம் தனியார் கையில் உருவாகி உள்ளது. எனவே, வருமான பகிர்வை தொழிலாளர் பக்கம் அதிகரிக்க, வேலை நேரத்தை குறைப்பது அவசியம். மார்க்சிஸ்ட் கட்சி அதன் திட்டம், மக்கள் ஜனநாயக திட்டம் என்ற அத்தியாயத்தில், தொழிலாளர் பிரச்சினை குறித்து குறிப்பிடுகிறபோது, நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் வேலை நேரம் என குறைக்கப் படும், இது வேலையின்மையைக் குறைக்கவும் உதவும் என கூறுகிறது.
6.66 கோடி மக்கள் தொகை கொண்ட பிரான்ஸ் வேலை நேரத்தை நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம், வாரம் இரண்டு நாள்கள் விடுமுறை என அமலாக்கும் போது, 143.8 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஏன் அமல்படுத்தக் கூடாது. பிரான்ஸ் நாட்டில் 7.3 சதமானம் வேலையின்மையும், இந்தியாவில் 4.9 சதம் வேலையின்மையும் உள்ளது. இது சதவீத அடிப்படையில் குறைவு என்றாலும் பிரான்ஸ் உடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பல மடங்கு வேலையின்மை உள்ளது. எனவே, இயந்திரங்களின் வளர்ச்சி, வேலை நேரத்தை குறைக்க பயன்படுத்தப்பட வேண்டும்.
இந்தியாவில் தொழிலாளர் சட்ட திருத்தங்கள்
மேலே விவாதித்த அனைத்து அடிப்படை வளர்ச்சிகளையும் புறம்தள்ளி, கார்ப்பரேட் பெருமுதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், பாஜகவின், மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தொழிலாளர் சட்டங்களை திருத்தியுள்ளது. தற்போது விதிகளையும் உருவாக்கி அமலாக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்த சட்ட திருத்தங்களை, முதலாளித்துவ தொழிற்சங்கங்களால்கூட ஏற்க முடியவில்லை. அதனால்தான் தொடர்ச்சியான பொது வேலை நிறுத்தங்களில் அவை பங்கேற்று வருகின்றனர்.
ஒன்று, வேலை நேரத்தில் தளர்வுகளை முன் வைக்கிறது. இரண்டு ஈஸி டூயிங் பிசினஸ் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆலையை திறக்கவும் மூடவும் வாய்ப்பு வாசல்களை திறந்து விடுகிறது. குறிப்பாக, ஆலை மூடப்பட வேண்டும் என்றால், 100 தொழிலாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். அதை 300 என உயர்த்தி நிறுவனங்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப ஆலைகளை மூடவும் திறக்கவும் வழிவகை செய்துள்ளது.
தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதியில், நிறுவனங்களின் பங்கு குறைக்கப்படும் வகையில், மொத்த சம்பளத்தில் பாதிக்கு மட்டுமே வருங்கால வைப்பு நிதி பிடித்தம் என வரையறை செய்யப்பட்டுள்ளது. பணிக்கொடை, உள்ளிட்ட தொழிலாளர் சேமிப்பு பணம் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கூடாது என கூறுகிறது. 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் தொழிலாளிக்குதான் அத்தகைய வாய்ப்பு உள்ளது. ஆனால், அமர்த்து, பின் துரத்து என வேலை வாங்கப்படும் தொழிலாளர்களுக்கான பணப்பயன் வாய்ப்புகள் குறைவு.
நிரந்தர தன்மையுள்ள வேலையில், காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படக்கூடாது, என்ற தொழிற்சாலைகள் சட்டத்தையும் திருத்தியுள்ளது. நிரந்தர தன்மையுள்ள வேலையில், நிரந்தர தொழிலாளர் இல்லாத போது, காண்ட்ராக்ட் தொழிலாளர்களை ஈடுபடுத்தலாம் என புதிய சட்டம் கூறுகிறது. தூத்துக்குடியில் உள்ள ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனமான என்.டி.பி.எல் நிறுவனம் மின் உற்பத்தி செய்கிறது. இங்கு 1000க்கும் மேற்பட்ட காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் மின் உற்பத்தி பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர். இதுபோன்ற நிலை எண்ணற்ற தனியார் ஆலைகளிலும் உள்ளது. இதன் மூலம் நிரந்தரமற்ற வேலை வாய்ப்பு, சட்ட உரிமைகளை கோர ஒன்று சேர இயலாத நிலை, குறைவான கூலி ஆகிய வடிவங்களில் முதலாளியின் லாப குவிப்பிற்கு உதவ கூடியதாக சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மே 20 வேலை நிறுத்தம் வெறும் உற்பத்தி முடக்கமல்ல
இந்த பின்னணியில்தான் மே 20 அன்று தொழிற்சங்கங்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் முக்கியத்துவம் பெறுகிறது. மோடி ஆட்சிக்கு வந்தபின், இந்தியாவில் 8 பொது வேலை நிறுத்தங்கள் நடைபெற்றுள்ளது. 2016 செப்டம்பர் 2, 2017 செப்டம்பர் 2, 2019 ஜனவரி 8,9, 2020 ஜனவரி 8, 2020 நவம்பர் 26, 2021 நவம்பர் 26, 2022 மார்ச் 28,29, 2024 பிப்ரவரி 16 என நடந்து முடிந்த வேலை நிறுத்தங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றவை ஆகும். இந்த வேலை நிறுத்தங்கள் சர்வ தேச தொழிலாளர் அமைப்பை (ILO) இந்திய ஆட்சியாளர்களுக்கு கடிதம் எழுதவும், சுட்டிக் காட்டவும் அழுத்தம் அளித்துள்ளது.
தொழிலாளர்களுக்கு தொழிலாளர் உரிமை, வேலை நாள் உள்ளிட்ட பல்வேறு வரையறைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதால், வேலை நிறுத்தத்தில் பங்கெடுக்கும் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் காண்ட்ராக்ட் போன்ற நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கான உரிமைகளை பேச வைக்க இந்த வேலை நிறுத்தங்கள் பயன்பட்டுள்ளது.
சுமார் 61 கோடி தொழிலாளர்களை கொண்டுள்ள இந்தியாவில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 93 சதம் ஆவர். இவர்களுக்கு குறைந்தபட்ச சமூக பாதுகாப்பு சட்டங்கள்கூட இல்லை. கோவிட் பொது முடக்கத்தின் போது புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்த விவரம் தெரிவிக்க முடியாத அரசாக ஒன்றிய பாஜக அரசு இருந்தது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம், மருத்துவ பாதுகாப்பு உள்ளிட்ட சமூக பாதுகாப்பு குறித்த நடவடிக்களை மோடியின் தலைமையிலான பாஜக அரசு தொழிலாளர் சட்டத்துடன் இணைக்கவில்லை.
இன்றைய சூழலில் வேலை நேரம் குறைப்பு, கண்ணியமான வேலை, சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை ஆகியவை மிக அவசியம். அதை அரசின் கொள்கைகளாக தீர்மானிப்பதற்கு போராட்டங்கள் மூலமே சாத்தியம். அதற்கு மே தின உறுதி ஏற்பு நிகழ்வுகளும், வேலை நிறுத்தங்களும் உதவிடும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
