ஆர். எஸ். எஸ். – பாஜக ஆட்சி எனும் பெரும் துயரம்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
2014ஆம் ஆண்டு 16 ஆவது மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மோடியும் இதர பாஜக தலைவர்களும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்ற வகையில் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசினர். போடப்பட்டு செல்லுபடியான மொத்த வாக்குகளில் 31 சதமான வாக்குகளை (மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 25%) ஆதரவும் பெற்று 16ஆம் மக்களவையில் பாஜக அறுதி பெரும்பான்மை பெற்றது. அனைத்து கருப்பு சொத்துக்களையும் கண்டுபிடித்துக் கைப்பற்றி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஒவ்வொரு வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடவுள்ளதாக மோடி பிரச்சாரம் செய்தார். அவர் ஆட்சிப்பொறுப்பேற்ற அடுத்த நிமிடமே விவசாயிகள் தற்கொலை நின்றுவிடும் என்றார். பேராசிரியர் சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையத்தின் 2006ஆம் ஆண்டு பரிந்துரையின் அடிப்படையில் அனைத்து வேளாண் பொருட்களும் அதன் அகச்செலவுடன் கூடுதலாக 50% சேர்த்து குறைந்த பட்ச ஆதரவு விலை கொடுத்து தனது அரசு கொள்முதல் செய்யும் என்றார். ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், வேலை இன்மை என்பது வரலாறாகி விடும் என்றும் முழங்கினார். “அனைவருடனும் இணைந்து, அனைவருக்குமான வளர்ச்சி” என்ற கவர்ச்சிகர முழக்கத்தை முன்வைத்தார். அவரது ஆட்சியில் வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாகவும், அனைவரின் பங்கேற்புடனும் இருக்கும் என்றார். மேலும் பலவற்றையும் சொன்னார். மோடியை பிரதமராகக் கொண்ட ஆர்எஸ்எஸ்-பாஜக அரசு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஒன்றிய அளவில் ஆட்சி செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் – ஜூன் 2014 முதல் 2024 ஜனவரி வரையிலான காலத்தில் – இந்திய பொருளாதாரத்திற்கும் இந்திய மக்களுக்கும் நிலைமைகள் எவ்வாறு இருந்துள்ளன?
தாராளமய கொள்கைகளில் இருந்து கார்ப்பரேட் இந்துத்வா நோக்கிய பயணம்
1991இல் இருந்து அடுத்தடுத்து ஒன்றியத்தில் ஆண்ட அரசுகளும் (இடதுசாரி அரசுகள் நீங்கலாக) பெரும்பாலான மாநில அரசுகளும், தொடர்ந்து தாராளமய பொருளாதார கொள்கைகளை பின்பற்றி வந்துள்ளன. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அமலாக்கப்படும் இக்கொள்கைகள் நகரங்களிலும் கிராமங்களிலும் உழைத்துவாழும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்கவில்லை. மாறாக, கிராமங்களையும் வேளாண் துறையையும் கடும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளன. தொழில் வளர்ச்சியும் மந்தமாகவே இருந்துள்ளது. இடுபொருள் மானியங்கள் வெட்டப்பட்டதாலும் உற்பத்திசெலவுகள் கூடியதாலும் முன்பிருந்த வேளாண் ஆதரவு கொள்கைகள் விலக்கி கொள்ளப்பட்டதாலும், விளைபொருள் விலைகள் வீழ்ச்சியாலும், விவசாயிகள் தற்கொலை எனும் துயரம் மோடி அரசின் பத்து ஆண்டு காலத்திலும் தொடர்கிறது. நிலவும் நெருக்கடி “புதிய தாராளமய” கொள்கைகளின் நேரடி விளைவாகும். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளையும் நெறிமுறைகளையும் நீக்குதல் (தாராளமயமாக்கல்), சரக்குகள், சேவைகள், நிதிமூலதனம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய பன்னாட்டு பொருளாதார பரிவர்த்தனைகளை கட்டுப்பாடின்றி அனுமதிப்பது (உலகமயமாக்கல்), பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை அடிமாட்டு விலையில் பெருமுதலாளிகளுக்கு விற்பதும், அரசின் பொறுப்பு என்று இதுவரை கருதப்பட்டுவந்த கல்வி, ஆரோக்கியம், கட்டமைப்பு துறைகள் ஆகிய அனைத்தையும் லாப நோக்குடன் செயல்பட முதலாளிகளுக்கு திறந்துவிட்டு அரசு விலகிக்கொள்வது (தனியார்மயம்) என்ற மூன்று அம்சங்களை கொண்டதுதான் “புதிய தாராளமயம்”. பெரும் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும், பெருமுதலாளிகளுக்கு ஆதரவான – லாபவரி குறைப்பு, எல்லையற்ற மானியங்கள், சுற்றுசூழல் நலம் புறக்கணிப்பு, விவசாயிகளின் உரிமைகளை புறந்தள்ளி நிலம் கையகப்படுத்தல், இன்னபிற – அரசுகொள்கைகளால்தான் இது நிகழ்ந்துள்ளது.
நிகழ்ந்துள்ள வளர்ச்சி வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை. வேலையிழப்புதான் அதிகம். தாராளமய கொள்கைகள் சொத்து மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகளை பெரிதும் அதிகரித்துள்ளன. பன்னாட்டு நிதி மூலதனம் தொடர்ந்து இந்தியாவிற்குள் வந்துகொண்டே இருப்பதை உறுதிப்படுத்த, அரசின் நலத்திட்ட செலவுகள் வெட்டப்பட்டு, பட்ஜெட் பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்கும் “சிக்கன” கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக, கல்வி, ஆரோக்கியம், ஊரக வளர்ச்சி, சமூக பாதுகாப்பு ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் சுருங்கியுள்ளன. இதுதான் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.
இதுதான் ஒட்டுமொத்த தாராளமய கால அனுபவம். எனினும் 2004க்கும் 2008க்கும் இடையிலான காலத்தில் ஒரு முக்கிய வேறுபாடு இருந்தது. அந்த நான்கு ஆண்டுகளில் முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன்தான் ஆட்சியில் இருக்கமுடியும் என்ற நிலை இருந்தது. இடதுசாரி கட்சிகளும் முற்போக்கான சமூக இயக்கங்களும் அளித்த நிர்ப்பந்தங்களின் விளைவாக, சில சாதகமான நிகழ்வுகளை அமலாக்க முடிந்தது. விவசாயம் மற்றும் சமூக நலத்துறைகளுக்கு ஓரளவு ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டன. இதனை அரசில் இருந்த தாராளமயவாதிகள் தொடர்ந்து எதிர்த்தனர் என்பதையும் பதிவு செய்ய வேண்டும். எனினும் தகவல் உரிமை சட்டம் (RTI), ஊரக வேலை உறுதி சட்டம்(NREGA), பழங்குடி மக்களின் வன உரிமைகள் சட்டம் (TFRA), பின்னர் சில ஆண்டுகள் கழித்து சற்று நீர்த்துப்போன தேசீய உணவு பாதுகாப்பு சட்டம் (NFSA) போன்ற மக்களுக்கு ஆதரவான சில நடவடிக்கைகளை செய்யவைக்க முடிந்தது. இதுவும் நமக்கு முக்கியமான கள அனுபவம் ஆகும்.
ஆர்எஸ்எஸ் – பாஜக அதிதீவிர தாராளமயம்
எனினும், மோடி தலைமையிலான ஆர்எஸ்எஸ் பாஜக அரசு முந்தைய அரசுகளை விட மிகத் தீவிரமாக தாராளமய கொள்கைகளை அமலாக்கி இந்திய மக்களை தனது ஒன்பதரை ஆண்டு ஆட்சியில் பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. உழைப்பாளி மக்களின் வருமானங்களையும் வாழ்வாதாரத்தையும் அழித்து பல வகைகளில் அவர்கள் வாழ்வை சூறையாடியது. ஒன்று, முந்தைய அரசுகளையும் விட தீவிர சிக்கன கொள்கைகள் மூலம் பொருளாதார மீட்சியை பலவீனப்படுத்தியது. இரண்டு, மாநில அரசுகளின் மீது இடைவிடாத பொருளாதார மற்றும் அரசியல் போர் தொடுத்தது. மூன்று, தனது பணமதிப்பிழப்பு (மக்கள் மொழியில், ”செல்லாக்காசு”) நடவடிக்கைமூலம் இந்திய பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளியது. நான்கு, தவறுகள் மிக்க சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தின் மேலும் குழப்பம் நிறைந்த அமலாக்கத்தால் அமைப்புசாரா துறை நிறுவனங்களுக்கும் சிறுகுறு தொழில்முனைவோருக்கும் வணிகர்களுக்கும் அனைத்து உழைப்பாளி மக்களுக்கும் பெரும் சேதம் விளைவித்தது. மாநிலங்களின் வரிவிதிப்பு அதிகாரங்களும் பறிக்கப்பட்டன. பெரும் கார்ப்பரேட்டுகளின் நலன்களை இடைவிடாது முன்னெடுத்துச் செல்வதுடன், தீவிர மதவெறி இந்துத்துவா அணுகுமுறை மூலம் சிறுபான்மை மக்களை எதிரிகளாக சித்தரித்தும், உழைக்கும் மக்களை வகுப்புவாத தத்துவம் மூலம் பிரித்தாள்வதிலும் கவனம் செலுத்தியது. மேலும், அரசின் செல்லப்பிள்ளைகளாக அதானி, அம்பானி போன்ற பெருமுதலாளிகள் நலன்களை தீவிரமாக முன்னெடுத்தது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை: பேரழிவும் பெரும் துயரும்
2016 நவம்பர் 8 அன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவிக்கும்பொழுது, அது நான்கு நோக்கங்களை நிறைவேற்றும் என்று மோடி பிரகடனம் செய்தார்: வரிவலையில் சிக்காத, கணக்கில் வராத கருப்பு சொத்தை முற்றிலுமாக அழித்துவிடுவது; கள்ளப்பணத்தை அழித்தல்; பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருதல்; ஊழலை ஒழித்தல். இதைவிட அபத்தமான வாதங்களை காண்பது கடினம். லாப நோக்கத்தின் அடிப்படையில் செயல்படும் முதலாளித்துவ அமைப்பில், ஒவ்வொரு பொருளாதார பரிவர்த்தனையிலும், ஊழலுக்கான வாய்ப்பு உள்ளது. செல்லாக்காசு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் கழித்தும், பயங்கரவாதம் அன்றாட பேசுபொருளாக உள்ளது. கள்ளப்பணத்தை பொருத்தவரையில், அதன் அளவு சுற்றில் உள்ள மொத்த பணத்தில் மிகவும் குறைவு. 2016இல் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 15.44 லட்சம் கோடி. ஆனால் கள்ளப்பணம் ரூ 400 கோடிக்கும் குறைவு. நான்காவதாக, கருப்பு சொத்து ஓழிப்புக்கும் செல்லாக்காசு நடவடிக்கைக்கும் சம்பந்தமே கிடையாது. மொத்த கருப்பு சொத்தில் 5 அல்லது 6 % தான் ரொக்கமாக இருக்கும் என்று அரசின் தரவுகளே கூறுகின்றன. பெரும் பகுதி கருப்பு சொத்து என்பது இதர பல்வேறு வடிவங்களில்- நகைநட்டுக்களாகவும், பினாமி நிலம் மற்றும் கட்டடங்களாகவும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பினாமி வங்கி கணக்குகளிலும் இதர வழிகளிலும் தேக்கிவைக்கப்பட்டுள்ளது என்பது ஊரறிந்த ரகசியம். ரொக்கமாக வைக்கப்பட்டிருந்த கருப்புப் பணத்தை வெள்ளையாக்கி கொடுத்ததுதான் மோடி அரசின் கைங்கர்யம்.
செல்லாக்காசு நடவடிக்கையால் மக்களுக்கும் நாட்டிற்கும் கேடுதான் விளைந்தது. ஒன்றிய அரசும் அதன் ஆதரவாளர்களும் இந்த உண்மையை மறுத்து, கட்டுக்கதைகளை பரப்புகின்றனர். ஆனால் பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டு விவரம் தெரிந்த அனைவருமே, செல்லாக்காசு நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளியது என்பதையும், கோடிக்கணக்கான முறைசாராத்துறை தொழில்முனைவோர் மற்றும் உழைப்பாளிகள் வாழ்வாதாரத்தை பறித்தது என்பதையும் ஏற்கின்றனர்.
ஜிஎஸ்டி: சிறு உற்பத்தியாளர்களையும் வணிகர்களையும் துன்புறுத்தும் நடவடிக்கை
ஜிஎஸ்டி பற்றி முதலில் கவனிக்க வேண்டியது சரக்கு மற்றும் சேவைகளை வாங்கும் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே வரிவிகிதம் தான். எனவே இது ஏழைகளுக்கு பெரும் சுமை. செல்வந்தர்களுக்கு அத்தகைய சுமை இல்லை. இரண்டு, ஆண்டுக்கு 150 லட்சத்திற்கு அதிகமான விற்பனை மதிப்பு இருந்தால் மட்டுமே எக்ஸைஸ் வரி உண்டு என்பது மாறி ரூ 20 லட்சம் (சில மாநிலங்களில் ரூ 10 லட்சம் தான்) என்று ஆண்டு விற்பனை மதிப்பு இருந்தாலே ஜிஎஸ்டி வரிவலைக்குள் தொழில்முனைவோர்/வணிகர் வந்துவிடுகிறார் என்பது சிறு உற்பத்தியாளர்களையும் வணிகர்களையும் துன்புறுத்தும் நடவடிக்கையாகும். மூன்று, “ஒரு நாடு ஒரே வரி” என்று ஒன்றிய அரசு ஜிஎஸ்டியை பிரச்சாரம் செய்ததற்கு மாறாக, பலவரி விகிதங்களும் ஏகப்பட்ட அதிகாரவர்க்க சிகப்பு நாடா செயல்முறைகளும் கொண்டதாக அமைந்தது ஜிஎஸ்டி. நான்கு, மாநிலங்களின் குறுகிய வரிவிதிப்பு அதிகாரங்களையும் பறிக்கிறது ஜிஎஸ்டி. ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு வந்த பிறகு, புகையிலை, சாராயம், டீசல், பெட்ரோல் ஆகிய நான்கு பொருட்கள் மீது மட்டுமே வரி விகிதங்களை நிர்ணயிக்கும் உரிமை மாநிலத்திற்கு உள்ளது.
துவக்கத்தில் ஜிஎஸ்டி அரசுகளுக்கு அதிக வருமானம் தரவில்லை. காரணம், அதன் அமலாக்கத்திற்கு சில மாதங்கள் முன்பு ஒன்றிய அரசு மேற்கொண்ட செல்லாக்காசு நடவடிக்கையால் பொருளாதாரமே பெரும் மந்தத்தில் தள்ளப்பட்டது. மேலும் வரிவிதிகளும் அமலாக்க ஏற்பாடுகளும் குழப்பத்தில் இருந்தன. ஜிஎஸ்டியும் மக்களின் வாங்கும் சக்தியை தாக்கியது. அண்மை மாதங்களில் பெரும் தொற்று தணிந்தபின் ஏற்பட்டுள்ள மீட்சியால் ஜிஎஸ்டி வரிவசூல் அதிகரித்து வருகிறது. முக்கியமான விஷயம் என்னவெனில், ஜிஎஸ்டி சட்டகம் மக்களுக்கும் மாநிலங்களுக்கும் விரோதமான ஒன்று என்பதுதான். ஜிஎஸ்டி வரிவசூல் கூடுவது கொண்டாடப்பட வேண்டிய விஷயம் அல்ல. மாறாக, பெரும் கார்ப்பரேட்டுகள், செல்வந்தர்கள் மீதான நேர்முக வரிகள் அதிகரிக்கப்படவேண்டும்.
பாஜக ஆட்சி கார்ப்பரேட்டுகளுக்கும் பெரும் செல்வந்தர்களுக்கும் மட்டுமே
ஆர்எஸ்எஸ்–பாஜக ஆட்சியில் ஒன்றிய அரசின் மொத்த வரி வருமானத்தில் ஏழைகள் மீது பெரும் சுமையாக இருக்கும் வரிகள் செங்குத்தாக உயர்ந்துள்ளன. இது உழைக்கும் மக்களுக்கும் ஏழைகளுக்கும் எதிரானது. நேர்மாறாக, செல்வந்தர்களுக்கும் பெரும் காரப்பரேட்டுகளுக்கும் மோடி அரசு வரிச்சலுகைகளை வாரி வழங்கியுள்ளது. சொத்துவரி நீக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் வருமான வரிவிகிதம் 22% ஆகிய குறைக்கப்பட்டுள்ளது. தாராளமய காலதுவக்கத்தில் 45% ஆக இருந்த இந்த வரிவிகிதம் அடுத்த 25 ஆண்டுகளில் 30% ஆகிய குறைக்கப்பட்டது இப்பொழுது வெறும் 22% ஆகியுள்ளது. கார்ப்பரேட்டுகள் வங்கிகளுக்கு பாக்கிவைத்திருந்த சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்களை ரத்து செய்துள்ளது. வருமானம் மற்றும் சொத்து ஏற்றத்தாழ்வுகள் வானத்தை தொட்டுவிட்டன. 2014 இல் மோடி பிரதமரான பொழுது இந்தியாவின் மக்களில் உச்சத்தில் இருந்த 1% செல்வந்தர்களிடம் மொத்த குடும்ப சொத்தில் 49% இருந்தது. 2018 இலேயே இது 63% ஆக உயர்ந்தது.
இந்தியா பற்றிய ஆக்ஸ்பாம் 2023 (OXFAM 2023) அறிக்கையின்படி:
- 5% இந்தியர்கள் கையில் நாட்டின் மொத்த சொத்தில் 60%க்கும் அதிகமாக உள்ளது. 50 சதமான கீழ்பாதி மக்களிடம் நாட்டின் சொத்தில் 3% மட்டுமே உள்ளது.
- 2012 முதல் 2021 வரையிலான காலத்தில் இந்தியாவில் புதிதாக உருவாக்கப்பட்ட சொத்தில் 40% உச்சத்தில் இருந்த 1% க்கு மட்டுமே சென்றது. 50%ஆன கீழ்ப்பாதிக்கு 3% மட்டுமே கிடைத்தது.
- இந்தியாவின் டாலர் “பெரும் கோடீஸ்வரர்கள்” (DOLLAR BILLIONARES) – அதாவது, அமெரிக்க டாலர் கணக்கில் 10 கோடி, மேலும் அதற்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 2020 இல் 102 ஆகிய இருந்தது. 2022 இல் இது 166 ஆக உயர்ந்தது. நாடும் மக்களும் பெரும் தொற்றில் கடும் துயரில் இருந்தபொழுது இது நிகழ்ந்துள்ளது என்பதை கவனிக்கவும்!
- இவ்வளவு அசிங்கமான, அப்பட்டமான ஏற்றத்தாழ்வுகள் கொண்ட இந்திய திருநாட்டில் செல்வந்தர்கள் ஒருபைசா கூட வாரிசு வரி கட்டாமல் தங்கள் செல்வங்களை வாரிசுகளுக்கு விட்டு செல்லலாம். சொத்துவரி இல்லை. கார்ப்பரேட் வருமான வரி அதிகபட்ச தனிநபர் வருமான வரி விகிதத்தை விட மிகக் குறைவு!
சிக்கனம் என்ற பெயரில் மக்களை தாக்கும் ஆர்எஸ்எஸ் அரசு
மோடி அரசின் வரவு செலவு கொள்கைகள் பன்னாட்டு நிதிமூலதனம் இந்தியாவிற்குள் வந்துகொண்டே இருக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தால் நிர்ணயிக்கப்படுகின்றன. ஏன் இந்த நிர்ப்பந்தம்? பன்னாட்டு வர்த்தகத்திற்கு கதவுகளை முழுமையாக அரசு திறந்து விட்டுள்ளது. இதனால் நம் நாட்டிற்கு தொடர்ந்து ஏற்றுமதியை விட மிகக் கூடுதலாக இறக்குமதி உள்ளது. இந்த இடைவெளியை ஈடுகட்ட அந்நிய நிதிகளை இந்தியாவிற்கு ஈர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே அயல்நாட்டு நிதி மூலதனம் அரசின் வரவு-செலவு கொள்கைகள் மீது பெரும் செல்வாக்கு பெறுகிறது. “ இந்தியப் பொருளாதாரத்தில் அரசின் பங்கு குறைவாகவே இருக்கவேண்டும். பொருளாதாரத்தை முற்றிலுமாக தனியாரிடம் –அதாவது, இந்திய, அந்நிய பெருமுதலாளிகளிடம் – ஒப்படைக்கவேண்டும். இதற்கு ஏதுவாக அரசின் வரவு – செலவு இடைவெளி சுருக்கப்படவேண்டும். இந்த இடைவெளியை அரசின் செலவுகளை குறைத்தே சுருக்கவேண்டும். செல்வந்தர்கள், கார்ப்பரேட் கம்பனிகள் மீது மேலும் வரிபோடக்கூடாது. கல்வி, ஆரோக்கியம், கட்டமைப்பு உட்பட தனியாரிடம் (அதாவது, பெருமுதலாளிகளிடம்) ஒப்படைத்து அரசின் செலவை குறைக்கவேண்டும். வரவு-செலவு இடைவெளியை, பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்று சரிசெய்யவேண்டும். “ என்ற அம்சங்களை பன்னாட்டு நிதி மூலதனம் வலியுறுத்துகிறது.
இவற்றையெல்லாம்தான் மோடி அரசு அமலாக்கிவருகிறது. இதன் ஒரு உதாரணம்தான் ஊரக வேலை உறுதி திட்டத்தை மோடி அரசு அழித்து வருவது.
வேளாண் நெருக்கடி
மோடி அரசின் பத்தாண்டு ஆட்சியால் வேளாண் மற்றும் ஊரக பொருளாதார நெருக்கடி தீவிரமாகியுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை, ஆய்வு மற்றும் விரிவாக்க அமைப்பை வலுப்படுத்தி, விவசாயிகளுக்கு வலுசேர்ப்பது, நிறுவனக் கடன் வசதி, இடுபொருள் விலைகள் உயர்வு, கடன் நெருக்கடி, அரசு மேற்கொள்ள வேண்டிய வேளாண் கட்டமைப்பு முதலீடுகள் ஆகிய முக்கிய பிரச்சினைகளில் ஒன்றிய அரசு கொள்கைகள் விவசாயிகளுக்கு விரோதமாகவே உள்ளன. செல்லாக்காசு, ஜிஎஸ்டி ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள மந்தநிலையும் பெரும் தொற்றை அரசு கையாண்ட விதமும் விவசாயிகளை பாதித்துள்ளது . ரேகா திட்டத்தில் வேலை நாட்கள் குறைந்துள்ளன, கூலி குறைவாகவே உள்ளது. அதுவும் உடனுக்குடன் தரப்படுவதில்லை. இதனால் ஊரகப்பகுதியில் வறுமை அதிகரித்துள்ளது.
வேலை இன்மை நெருக்கடி
இன்று நாடு மிகப்பெரிய வேலையின்மை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. வேலை தேடி கிடைக்காமல் பகிரங்கமாக அறியப்படும் பெரும் அளவிலான வேலையின்மை மட்டுமின்றி, உழைப்பை சுய தொழிலில் ஈடுபடுத்தி, கணிசமான நாட்கள் வேலையின்றி தவிக்கும் பெரும் கூட்டத்தின் வேலையின்மையையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சமூக பாதுகாப்பு என்பது பெரும்பகுதி உழைப்பாளிகளுக்கு இன்று இல்லை, அல்லது மிக சொற்பமாக உள்ளது. அரசின் ஆய்வுகள் உண்மை களநிலமையை அறிய உதவுவதில்லை. பகிரங்க வேலையின்மை, வெளிப்படாத வேலையின்மை இரண்டையுமே ஆய்வுகள் குறைத்து மதிப்பிடுகின்றன. அரசின் கணக்குப்படியே பார்த்தாலும், வேலையின்மை என்பது பூதாகாரமாக உள்ளது என்பது தெரிகிறது. முந்தைய காலங்களில் (2011-12 தரவு) வருடம் முழுவதும் வேலை தேடி கிடைக்காதவர் விகிதம் அகில இந்திய அளவில் 2% ஆகிய இருந்தது. இது 2017-18 இல் மூன்று மடங்காக்கி 6.1 %ஐ எட்டியுள்ளது. அனைத்துவகை வேலையின்மை அலகுகளும் 2018க்குப் பின் கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலையின்மை அதிகரித்திருப்பதை சுட்டிக் காட்டுகின்றன. குறிப்பாக, பள்ளி கல்வி பெற்றவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் பெரிதும் கூடியுள்ளது. உழைக்கும் வயது வரம்புகளுக்கு உட்பட்டு இருப்பவர்களில் உழைப்புப்படையில் இருப்போர் சதவிகிதமும் குறைந்துள்ளது. 2020-21 இல் பெரும் தொற்றின் பாதிப்பு மிக கடுமையாக இருந்த பொழுது புலம் பெயர் தொழிலாளிகளின் துயரை நாம் கண்டோம். ஒன்றிய அரசின் இரக்கமற்ற அணுகுமுறையையும் கண்டோம். அந்த ஆண்டில் வேலையின்மை உச்சத்தை தொட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓரளவு தேச உற்பத்தி மதிப்பில் மீட்சி ஏற்பட்டுள்ள போதிலும் வேலையின்மை பிரச்சினையின் தீவிரத் தன்மை குறையவில்லை.
2020-21 இல் இந்தியாவின் தேச உற்பத்தி மதிப்பு 7% குறைந்தது. அதன்பின் இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட மீட்சி 2019 நிலைக்கு கொண்டுவந்தது. நடப்பு ஆண்டில் 6 – 7% வளர்ச்சி ஏற்பட்டால் நடப்பு நிதி ஆண்டையும் உள்ளடக்கிய ஐந்து ஆண்டுகளில் (2019-2024) மொத்த வளரச்சிவிகிதம் அதுதான் என்பதை அரசு சொல்வதில்லை. உலகில் மிக வேகமாக வளரும் நாடு இந்தியா என்று தம்பட்டம் அடிப்பது பொருத்தமல்ல.
இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (CMIE) என்ற அமைப்பின் 2023 அக்டோபர் மாத தரவுகள்படி வேலையின்மை விகிதம் கிராமப்புறத்தில் 10.82% ஆகவும் நகரப்பகுதிகளில் 8.44% ஆகவும் இருந்தது. இது 2019ஐ போல இரண்டு மடங்காகும். மேலும் கவலைக்குரிய செய்தி கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலையில் இருப்போரின் மொத்த எண்ணிக்கை 40 கோடியாகவே தொடர்கிறது, அதிகரிக்கவே இல்லை என்பதாகும்.
குறைவாகவும் தேக்கமாகவும் இருக்கும் கூலி விகிதங்கள் இந்தியாவின் வேலையின்மை நெருக்கடியை படம் பிடித்துக்காட்டுகின்றன. இது கிராமப்பகுதிகளுக்கு கூடுதலாக பொருந்தும். நீண்ட பணி நேரம், குறைவான கூலி, நிரந்தரமற்ற வேலை, சமூக பாதுகாப்பின்மை ஆகியவை இந்தியாவின் வேலையின்மையின் தீவிரத்தை நமக்கு நினைவு ஊட்டுகின்றன.
இந்த துயரங்களிலிருந்து விடுபட, பாஜக ஆட்சியை வீழ்த்துவதுதான் ஒரே தீர்வு.
You may also like
1 comment
Comments are closed.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

தேவையான ஆதாரங்கள், இல்லாமல் பொதுவாக உள்ளது. concrete analysis of the
concrete situation தேவை