மோடி ஆட்சி: நிழல் தரா வாய்ப் பந்தல்
தாமஸ் ஐசக்
தமிழில்: க.சுவாமிநாதன்
மோடி ஆட்சியின் 10 ஆண்டுகள் பற்றி பா.ஜ.க செய்யும் பிரச்சாரமும், நமது பதில்களும் இங்கு தரப்பட்டுள்ளது.
பிரச்சாரம் – 1
2029இல் இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக வளர உள்ளது. இதோ “மொத்த உள்நாட்டு உற்பத்தி” (GDP – Gross Domestic Product) வளர்ச்சியில் இந்தியாவின் ரேங்க்
2014 – 10
2015 – 7
2019 – 6
2022 – 5 (பிரிட்டனை முந்தி)
2027 – 4 (ஜெர்மனியை விஞ்சும்)
2029 – 3 (ஜப்பானை விஞ்சும்)
பதில்
1) ஜி.டி.பி. என்ற அளவுகோல் மட்டும் உண்மை நிலையை பிரதிபலிப்பது அல்ல. அதை மட்டும் முன்னிறுத்தி வளர்ச்சி பற்றி பேசுவது பொய்ச் சித்திரம் ஆகும்.
வாதத்திற்காக ஜி.டி.பி யை அளவுகோலை எடுத்துக் கொண்டால்கூட உலகின் 3வது பொருளாதாரம் என்ற ரேங்க்கை எட்டும்போதும் இந்தியா ஒரு குறை வளர்ச்சி கொண்ட நடுத்தர வருமான நாடாகவே இருக்கும். காரணம், * உலக ஜி.டி.பி யில் இந்தியாவின் பங்கு 5 சதவீதம் மட்டுமே. 2027இல் இந்தியாவின் ஜி.டி.பி. அமெரிக்க ஜி.டி.பியில் ⅙ பங்குதான் இருக்கும். சீனாவின் ஜி.டி.பியில் ⅕ பங்குதான் இருக்கும்.
2) மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது சரியான அளவுகோல் அல்ல. ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தின் பிற அளவுகோல்களில் பிரதிபலிக்க வேண்டாமா?
- உலக நாடுகளின் தனி நபர் சராசரி வருமானத்தில் இந்தியாவின் ரேங்க் 142.
- இந்தியாவின் தனி நபர் சராசரி வருமானம் 2600 டாலர். அமெரிக்காவின் தனி நபர் சராசரி வருமானம் 83000 டாலர். ஓ.இ.சி.டி (OECD – Organisation for Economic Cooperation and Development) என்கிற அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 38 நாடுகளின் தனி நபர் சராசரி வருமானம் 54000 டாலர்.
3) உலகக் குறியீடுகளில் அதள பாதாள ரேங்க். மோடி வரும் போதும் – இன்றும்…
- ஐ.நா. மனித வள குறியீடு: 2014இல் உலக நாடுகளில் 130வது இடம். 2023இல் 132வது இடம்.
- ஐ.நா. மகிழ்ச்சி குறியீடு: 2015இல் உலக நாடுகளில் 117வது இடம். 2023இல் 136வது இடம்.
- நீடித்த வளர்ச்சி குறியீடு: 2016இல் உலக நாடுகளில் 110வது இடம். 2023 இல் 121வது இடம்.
- உலக உணவுக் கொள்கை கழகத்தின் உலக பசி குறியீடு: 2014இல் 76 நாடுகளில் 55வது இடம். 2023இல் 121 நாடுகளில் 107வது இடம்.
- குழந்தை வளர்ச்சி குறியீடு (“Save Child UK”): 2017இல் 116வது இடம். 2023இல் 118வது இடம்.
- “புளூம்பெர்க்” உடல் நல குறியீடு: 2015இல் 103வது இடம். 2019இல் 120வது இடம்.
- உலக பொருளாதார அமைப்பின் மனித மூலதன குறியீடு: 2013இல் 122 நாடுகளில் 78வது இடம். 2017இல் 130 நாடுகளில் 103வது இடம்.
- “லீகாட்டும்” வள குறியீடு: 2015இல் 99வது இடம். 2023இல் 103வது இடம்.
- உலக வங்கியின் மனித மூலதன குறியீடு: 2018இல் 115வது இடம். 2020இல் 116வது இடம்.
- உலக வங்கியின் ஊடக சுதந்திரம் குறியீடு: 2014இல் 140வது இடம். 2023இல் 150வது இடம்.
- ஏற்றத் தாழ்வுகளை குறைக்கும் கடப்பாடு: 2023இல் 123வது இடம்.
- பெண்கள் பாதுகாப்பு குறியீடு: 2017இல் 131வது இடம். 2023இல் 148வது இடம்.
- உலக பொருளாதார அமைப்பின் உலக பாலின இடைவெளி குறியீடு: 2014இல் 114வது இடம். 2023இல் 135வது இடம்.
- தாமஸ் ராய்ட்டர்ஸ் “பெண்களுக்கு மிக அபாயகரமான நாடு” குறியீடு: 2011இல் 4வது இடம். 2018இல் 1வது இடம்.
இப்படி எல்லா குறியீடுகளும் மோடி அரசின் தோல்விகளை காட்டுகிற சுட்டு விரல்களாக இருக்கும் போது மோடி அரசோ ஜி.டி.பி தொகையை மட்டும் காண்பித்து “தம்ஸ் அப்” செய்கிறது.
ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கான அளவுகோலாக ஜி.டி.பி மட்டும் இருக்க முடியாது என்பது எளிய பொருளாதார உண்மை. பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களிலும் அதன் பிரதிபலிப்பு இருந்தால் மட்டுமே, அது உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியும். நவீன தாராளமயப் பொருளாதார பாதை என்பது மூலதன நலன்களை மையமாக கொண்டது என்பதும், ஏற்றத்தாழ்வுகளை மென்மேலும் அதிகரிப்பது என்பதும், 30 ஆண்டு இந்திய அனுபவம். கடந்த 10 ஆண்டுகளில் நவீன தாராளமயம், மூர்க்கத்தனமாக மோடி அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடே இத்தனை குறியீடுகளில் சரிவு.
பிரச்சாரம் – 2
ஏழைகளின் எண்ணிக்கை மோடி ஆட்சியில் குறைந்துள்ளது. 25 கோடி பேர் வறுமையை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.
பதில்
ஏழைகள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்றால் வேலை வாய்ப்பு அதிகரித்திருக்க வேண்டும். பண வீக்கம் கட்டுக்குள் இருந்திருக்க வேண்டும். உண்மை ஊதியம் உயர்ந்திருக்க வேண்டும். தனி நபர் சராசரி உணவு தானிய நுகர்வு அதிகரித்திருக்க வேண்டும். குழந்தைகளுக்கு சத்துணவு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் உண்மையில் என்ன நிலைமை? இருந்தாலும் எப்படி மோடி அரசு வறுமையை குறைத்து விட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறது? இதோ பதில்கள்.
- பாதிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு கௌரவமான வேலை இல்லை. 90 சதவீதமான தொழிலாளர்கள் அணி சாரா தொழில்களில் எந்த வித சமூக பாதுகாப்பும் இல்லாமல் பணியாற்றுகிறார்கள்.
- உழைப்பாளர் பங்கேற்பு விகிதம் (Labour Participation Rate): இது வேலை வாய்ப்பை அல்லது வேலையின்மையை வெளிப்படுத்தும் அளவுகோல் ஆகும்.
இதோ உழைப்பாளர் பங்கேற்பு விகிதம் எப்படி ஆண்டுக்கு ஆண்டு சரிந்து வந்துள்ளது & வேலையின்மை எப்படி அதிகரிக்கிறது, அதிக அளவிலேயே நீடிக்கிறது என்ற விவரம்.
ஆண்டு – உழைப்பாளர் பங்கேற்பு விகிதம் -வேலையின்மை
2016 -17 46.2 7.4
2017 -18 43.7 4.7
2018 -19 42.9 6.3
2019 -20 42.7 7.6
2020 -21 40.0 8.8
2021 -22 40.1 7.7
2022 -23 39.5 7.6
- பண வீக்கம் சாதாரண மக்களின் பாக்கெட்டுகளை பதம் பார்த்தது என்பதற்கு உதாரணம் பெட்ரோல் – டீசல் விலை உயர்வு.
2014 மே மாதம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 101 டாலர். அப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 71.41. டீசல் விலை லிட்டருக்கு ரூ 55.49.
2023 இல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 74 டாலர். இப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 96.72. டீசல் விலை லிட்டருக்கு ரூ 89.62.
சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் 25 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல் விலை 35 சதவீதம் உயர்வு. டீசல் விலை 62 சதவீதம்.
எதிர்த்திசையில் எகிறி இருப்பது எப்படி? காரணம் சர்வதேச சந்தை விலைக் குறைப்பை மக்களுக்கு மடை மாற்றம் செய்வதற்கு பதிலாக அரசின் வரி திரட்டலில் வாய்க்காலுக்கு திருப்பி விட்டுள்ளது.
2014இல் ஒரு லிட்டர் பெட்ரோல் மீது போடப்பட்ட வரி ரூ 9.48, ஒரு லிட்டர் டீசல் மீது ரூ 3.56. ஆனால் 2020 இல் ஒரு லிட்டர் பெட்ரோல் மீது போடப்பட்ட வரி ரூ 32.89, ஒரு லிட்டர் டீசல் மீது ரூ 31.82 ஆக உயர்ந்தது. பெட்ரோல் மீது 3.5 மடங்கு. அதாவது 350 சதவீதம். டீசல் மீது 9.5 மடங்கு அதாவது 950 சதவீதம். - பெட்ரோல், டீசல் விலை உயர்வு எனில், அவை எல்லா சரக்குகள் மீதும் பிரதிபலிக்கும். குறிப்பாக, உணவுப் பொருள்கள் மீது அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த காலத்தில் உணவுப் பொருள் பண வீக்கம் 43 சதவீதம் முதல் 56 சதவீதம் வரை இருந்திருக்கிறது. பண வீக்கத்திற்குள் உள்ளார்ந்த வர்க்க பாரபட்சம் உண்டு. உணவுப் பொருள் பண வீக்கம் எனில், அது எளிய மக்களையே அதிகம் தாக்கும். காரணம், அவர்களின் செலவினத்தில் பெரும் பகுதியை ஆக்ரமிப்பதாக உணவுப் பொருள்கள் இருக்கும் என்பதே. உணவுப் பொருள் பண வீக்கத்திற்கு விவசாய உற்பத்தியில் ஒப்பீட்டு அடிப்படையிலான தேக்கம், அரசு கொள்முதலில் குறைபாடு போன்ற காரணங்களும் முக்கியமானவை.
- வறுமை ஒழிப்பை பற்றி அரசாங்கம் தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் வேளையில், உண்மை ஊதியத்தில் பெரும் தேக்கம் நிலவுகிறது. விவசாய வருமானம் இரட்டிப்பாகும் என்ற அரசின் முழக்கம், முனகலாகக் கூட கேட்பதில்லை. நகர்ப்புற உழைப்பாளிகளின் நிலைமையும் அதுவே.
2015இல் ஒரு விவசாயத் தொழிலாளியின் உண்மை ஊதியம் ரூ 225 எனில் 2022இல் ரூ 240 மட்டுமே.
2015இல் ஒரு கட்டுமானத் தொழிலாளியின் உண்மை ஊதியம் ரூ 275 எனில் 2022இல் ரூ 280 மட்டுமே.
2015இல் ஒரு விவசாயமல்லா கிராமத்து தொழிலாளியின் உண்மை ஊதியம் ரூ 234 எனில் 2022இல் ரூ 245 மட்டுமே. - தனி நபர் உணவு தானிய நுகர்வு (Per Capita grain availability) 1991இல் 186.2 கிலோ. 2016இல் 177.9 கிலோ.
ஆனாலும் வறுமை குறைந்து விட்டது என்று ஒன்றிய அரசு மார் தட்டுவது எதன் அடிப்படையில்? வறுமையின் அளவு குறையவில்லை. வறுமைக்கான அளவுகோல் மாற்றப்பட்டு விட்டது. அவ்வளவுதான்.
பொருளாதார நிபுணர் உத்சா பட்நாயக் எழுப்பும் கேள்விகள் முக்கியமானவை. வறுமைக்கு ஏற்கெனவே இருந்த அளவுகோல்களை வைத்து மதிப்பிட்டால், வறுமை குறையவில்லை என்பது பட்டவர்த்தனமாக வெளிப்பட்டு விடும். குழந்தைகளுக்கு சத்துணவின்மை (Malnutrition) அதிகரித்திருக்கவில்லையா? பெண்கள் மத்தியில் இரத்த சோகை அதிகரிக்கவில்லையா? வயதுக்கு ஏற்ற உயரம் இல்லா குழந்தைகளின் (Stunting) எண்ணிக்கை எவ்வளவு? வயதுக்கு ஏற்ற எடை இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை (Under weight) எவ்வளவு? உயரத்திற்கு ஏற்ற எடை இல்லா குழந்தைகள் (Wasting) எவ்வளவு? இதற்கெல்லாம் என்ன பதில் இல்லாததால் அளவுகோல்களையே மாற்றி விட்டார்கள். அவர்கள் புதிதாக இணைத்துள்ள வங்கிக் கணக்கு, கழிப்பறை, சமையல் எரிவாயு இணைப்பு ஆகியன பற்றியெல்லாம் கூட கேள்விக்குள்ளாகும் மதிப்பீடுகள் உள்ளன.
பிரச்சாரம் – 3
உலக அரங்கில் டாப் 10 பணக்காரர்களாக இந்திய தொழிலதிபர்கள் வளர்ந்துள்ளது தேசத்தின் பெருமிதம்.
பதில்
இது தேசத்தின் வளர்ச்சி அல்ல. அசமத்துவமான வளர்ச்சியின் வெளிப்பாடு. வருமான மறுபங்கீட்டில் இழைக்கப்படும் பாரபட்சம். எளிய மக்கள் முதுகுகளை ஏணியாக மாற்றிய அநீதி.
வளர்ச்சியின் பயன்கள் பில்லியனர்கள், பெரும் தொழிலகங்களால் அபகரிக்கப்பட்ட கதை இதோ…
- விரியும் ஏற்றத்தாழ்வுகள்:
2012இல் டாப் 1 சதவீத பணக்காரர்கள் வைத்திருந்த சொத்துக்கள் – மொத்த சொத்துக்களில் 30.7 %. 2020இல் 42.5 %
2012இல் பாட்டம் 50 சதவீத மக்கள் வைத்திருந்த சொத்துக்கள் – மொத்த சொத்துக்களில் 6.4 %. 2020இல் 2.8 %.
சொத்துக்களை போன்று, வருமானத்திலும் இதே நிலைமை. 2020இல் டாப் 1 சதவீத பணக்காரர்களின் வருமானம் மொத்த வருமானத்தில் 21.7 %. பாட்டம் 50 சதவீத மக்களின் வருமானம் 14.7 % மட்டுமே. இதன் பொருள் வருமான பாரபட்சம் தொடர தொடர சொத்துடமை இடைவெளி இன்னும் இன்னும் அதிகமாகும்.
உலக அரங்கில் அதானியும், அம்பானியும் கால் பதித்து ஏறிய ஏணியின் படிக்கட்டுகளாய் சாமானிய மக்கள்.
- எப்படி புதிய முதலாளிகளால் கொள்ளை அரங்கேறுகிறது?
1) கூட்டுக் களவு முதலாளித்துவம்
2) வங்கிகளின் மக்கள் சேமிப்பு சூறை
3) பொதுத் துறை நிறுவனங்களை விழுங்குதல்
4) பொதுச் சொத்துக்களை கைப்பற்றுதல்
1991லிருந்து 20 ஆண்டுகளாக பொதுத்துறை பங்குகள் விற்கப்பட்ட தொகையில் முதல் 7 ஆண்டு மோடி ஆட்சியில் விற்கப்பட்டது மட்டும் 53 சதவீதம். வாஜ்பாய் ஆட்சியில் 14 சதவீதம். மூன்றில் இரண்டு பங்கு பங்கு விற்பனையை பாஜக ஆட்சி காலத்தில்தான் செய்துள்ளார்கள். ஆண்டு சராசரி பங்கு விற்பனைத் தொகை (2019 விலை மதிப்பு அடிப்படையில்) நரசிம்மராவ் காலத்தில் 10,735 கோடி, வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 16,432 கோடி, மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் 17,283 கோடி, நரேந்திர மோடி காலத்தில் 53,262 கோடி என்றால் எந்த அளவுக்கு மோடி காலம் பொதுத் துறையின் போதாத காலம் என்பதை புரிந்து கொள்ள முடியும். இடதுசாரிகள் ஆதரவோடு அமைந்த அரசுகளின் காலத்தில் மட்டுமே சராசரி ஆண்டு பொதுத் துறை பங்கு விற்பனை வருவாய் 2,450 கோடிகள் என்ற மிகக் குறைவான அளவில் இருந்துள்ளன.
- அதானி வளர்ச்சிக் கதை:
2014இல் அதானியின் செல்வம் – 50,000 கோடி
2022இல் – 11.44 லட்சம் கோடி.
23 மடங்கு பாய்ச்சல் வளர்ச்சி. 2021 – 22இல் மட்டும் ஒரு நாளைக்கு 1600 கோடி உயர்வு. செல்வப் பெருக்கத்தில் பெரிய பங்கினை வகிப்பது பங்கு விற்பனை விலைகள்தான். - எப்படி பங்கு விலைகள் சூதாட்டத்தால் அதிகரிக்கப்பட்டன?
- பங்குச் சந்தையில் முதன்மை பங்குதாரர் (Promoter) பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 75 சதவீதத்திற்கு உட்பட்டே பங்கு உடமை வைத்திருக்க முடியும். ஆனால் அதானியின் பினாமி கம்பெனிகள் வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்டு அதானி குழுமத்தில் முதலீடு செய்கிறார்கள். இதனால் அதானி வசம் அதிகாரப் பூர்வமாக உள்ள 75 சதவீத பங்குகளின் விலைகளும் உயர்கின்றன. இப்படி “ஊதி பெருத்த பலூன்” விலைகளை காண்பித்து வங்கிகளில் கடன் வாங்குவார்கள். அதை தொழிலில் போடுவார்கள். இந்த சைக்கிள் மீண்டும் மீண்டும் தொடரும்.
- எப்படி பினாமி கம்பெனிகள் நிதியை திரட்டுவார்கள்?
- அதானி நிறுவனங்களிடம் இருந்து இறக்குமதி மீது அதீத பில்லிங். (Over Invoicing). இதன் மூலம் பினாமி கம்பெனிகளுக்கு ரூட் செய்யப்படும் “சூப்பர் லாபங்கள்”
- அதானி நிறுவனத்தின் ஏற்றுமதி பில்கள் குறைவாக காண்பிக்கப்படுதல். இதன் மூலம் பினாமி கம்பெனிகளுக்கு ரூட் செய்யப்படும் “சூப்பர் லாபங்கள்”.
- அந்நிய நாடுகளில் பதுக்கப்பட்ட கறுப்பு பணம் பினாமி நிறுவன முதலீட்டாளர்கள் வாயிலாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படும்.
- செபி கண்காணிப்பு ஏன் இல்லை?
- தற்போது உச்ச நீதிமன்றம் செபி விசாரணை மீது திருப்தி தெரிவித்து அது தொடரலாம் என்று கூறியுள்ளது.
- இதுவரை அதானியின் தவறுகள் மீது செபி நடவடிக்கை எடுக்கவில்லை. கண்களை மூடிக் கொண்டுதான் இருக்கிறது.
- செபி, விதிகளை மாற்றுவதன் மூலம் விசாரணையை “இருட்டறை”யில் தள்ளியுள்ளது.
- புகார் செய்தவரையே பிடி என்பது போல உச்ச நீதிமன்றம் ஹிண்டன்பர்க் மீது விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளது.
- அதானி “ஹிண்டன்பர்க்” நெருக்கடியில் இருந்து எப்படி தப்பி வருகிறார்?
- அதானி மற்றும் அவரது பினாமி கம்பெனிகள் 85 சதவீதமான அதானி குழும பங்குகளின் மீது கட்டுப்பாட்டை வைத்திருக்கின்றனர்.
- வெளிச் சந்தையின் 10 சதவீத பங்குகளின் விலைகள் மீது செயற்கை தாக்கத்தை உருவாக்க முடிகிறது.
- எல்.ஐ.சி., அரசு வங்கிகள் போய் முட்டுக் கொடுக்கின்றன.
- முகம் தெரியாத செல்வ நிதியங்கள் உதவிக்கு ஓடி வந்தன.
இதுவெல்லாம் நடக்க வேண்டுமென்றால் அரசின் ஆசி இல்லாமல் முடியாது. பிரதமரின் ஆதரவு இல்லாமல் சாத்தியமல்ல.
பிரச்சாரம்- 4
மோடி அரசு பெரும் மாற்றங்களை துணிச்சலுடன் பொருளாதார தளத்தில் அறிமுகம் செய்துள்ளது.
பதில்:
பாஜக பல நடவடிக்கைகளை தனது பொருளாதார சாதனைகளாக பேசி வருகிறது. உண்மையில் அவை எல்லாம் பெரும் மடத்தனம் என்பதை காலம் நிரூபித்துள்ளது. அவர்களின் துணிச்சல் என்பது கார்ப்பரேட்டுகள் மீது பாயவில்லை. மாறாக, சாதாரண நடுத்தர மக்களிடம் அவர்களின் கடுமை வெளிப்பட்டுள்ளது.
- மடத்தனம் 1: பண மதிப்பு நீக்கம். கறுப்புப் பண ஒழிப்பு, பொருளாதார நடவடிக்கைகளில் தூய்மை கொண்டு வருவதே நோக்கம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பண மதிப்பு நீக்கம் ஒரு இமாலயத் தவறு. குறு, சிறு, நடுத்தர தொழில்கள் கடும் பாதிப்புக்கு ஆளாயின.
- மடத்தனம் 2: பொது முதலீட்டில் சரிவு. 2013இல் 14.2 சதவீதமாக ஜி.டி.பியில் இருந்த பொது முதலீடுகள் 2020இல் 13.2 சதவீதமாக சரிவு. சில ஆண்டுகளில் 12.2 சதவீதமாக கூட (2019) வீழ்ந்தது. இது ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் தேக்கமடைய செய்தது.
- மடத்தனம் 3: ஜி.எஸ்.டி. யின் அவசர அமலாக்கம். குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மீது கடும் அடி. ஜி.எஸ்.டி. முறைமைக்கான தகவல் தொழில் நுட்ப பின்பலம் உருவாக்கப்பட ஐந்து ஆண்டுகள் ஆயின. ஜி.எஸ்.டி முறைமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்களும், ஜி.எஸ்.டி பதிவு செய்யப்பட்ட வணிகர்களுக்கு விற்பதாக இருந்தால், ஜி.எஸ்.டி வலைக்குள் வந்தாக வேண்டுமென்ற நிலை உள்ளது. மாநில வருவாய் குறித்து மாநில அதிகாரங்களும் வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளன.
- மடத்தனம் 4: மிகவும் இறுக்கம் நிறைந்த, திட்டமிடப்படாத லாக் டவுன் பெருமளவு ஜி.டி.பி.யை சரித்து விட்டது. கோவிட் காலத்தில் பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசு செய்த ஒதுக்கீடுகளும் போதுமானதாக இல்லை.
இதோ பொருளாதார ஊக்க ஒதுக்கீடுகளின் (Stimulus) சதவீதம் / ஜி.டிபியில்
இந்தியா 3.3 %
பிரேசில் 8.8 %
சீனா 4.8 %
ரஷ்யா 4.3 %
தென் ஆப்ரிக்கா 5.9 %
அமெரிக்கா (USA) 25.5 % - ஏன் இத்தனை மோசமான விளைவுகள்?
நவீன தாராளமய “சீர்திருத்தங்கள்” எல்லா தளங்களிலும் விரிவாக்கப்பட்டுள்ளது.
தொழில்: கட்டுப்பாடற்ற அனுமதிகள், இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம் காரணமாக சிறு அமைப்பு சாரா தொழில்கள் பாதிப்பு, தனியார்மயம், ஏகபோகங்களுக்கு ஊக்குவிப்பு வாயிலாக கூட்டுக் களவு முதலாளித்துவப் போக்கு, அந்நிய முலதனத்திற்கு சலுகைகள், பங்குச் சந்தைக்கு முக்கியத்துவம்.
விவசாயம்: இறக்குமதி கட்டுப்பாடு நீக்கத்தால் விவசாய விலைகள் வீழ்ச்சி, குறைந்தபட்ச ஆதார விலை முறைமையை பலவீனப்படுத்துதல், விவசாய கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம், அரசு விலகிக் கொண்டதால் கடன் – நிலச் சீர்திருத்தம் – விரிவாக்க பணிகள் நடந்தேறாமை, நிலச் சீர்திருத்தங்கள் பின்னோக்கி சிதைக்கப்படுவது
ஆதாரத் தொழில் வளர்ச்சி:
- மின்சாரத் துறையில் உற்பத்தி, பரிமாற்றம், பகிர்மானம் ஆகியவற்றின் தனியார் மயம், நிறுவன மயம் ஆகிய மாற்றங்களின் காரணமாக மானிய ஒழிப்பு, கட்டண உயர்வு, வீட்டு உபயோகம், விவசாய பயன்பாடு பாதிப்பு.
- தொலைத் தொடர்புத் துறையில் நிறுவன மயம், தனியார் அனுமதி, பிஎஸ்என்எல் திட்டமிட்டு சீரழிப்பு.
- ரயில்வே துறையில் ரயில்வே பாதை அரசின் நிர்வாகத்திலும், ரயில் போக்குவரத்து தனியார் வசம் என்ற வகையில் மாற்றங்களை கொண்டு வரும் போக்கு. கட்டண உயர்வு, விரிவாக்கத்தில் தேக்கம் ஆகிய அபாயங்கள் உள்ளன.
நிதித்துறை: - முன்னுரிமை கடன் பாதிப்பு
- புதிய தனியார் வங்கிகளுக்கு அனுமதி
- பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சிகள்.
- பொது இன்சூரன்ஸ் துறையில் தனியார்மயத்திற்கு வழி செய்யும் சட்ட நிறைவேற்றம், எல்.ஐ.சி. பங்கு விற்பனை.
இவை அனைத்தின் குவி விளைவு இந்தியப் பொருளாதாரம், மக்கள் நலன் மீது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
நவீன தாராளமய பாதை, அடிப்படையிலேயே முதலாளித்துவத்தின் மூர்க்கத்தனமான சுரண்டலை உள்ளடக்கியது. வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி, வேலை பறிப்பு வளர்ச்சி ஆகியனவே நவீன தாராளமய கால வளர்ச்சியின் தன்மைகள். அதன் “பயன் ஒழுகும் கோட்பாடு” (Trickle down theory) அதாவது பெருந் தொழிலதிபர்களுக்கு சலுகைகள் தந்தால், அது தொழில் வளர்ச்சிக்கு வழிவகுத்து வேலைவாய்ப்பு, வருமானம், சந்தை விரிவாக்கம் என பிரதிபலிக்கும் என்ற கருத்து பொய்த்துப் போயிருக்கிறது. இது நெருக்கடிகளுக்கும் அடுத்தடுத்து இட்டுச் செல்கிறது.
போராட்டங்களும் வெடிக்கின்றன. விவசாயிகள் போராட்டம், தொழிலாளர்களின் அகில இந்திய வேலை நிறுத்தங்கள், பொதுத்துறை பாதுகாப்பு இயக்கங்கள், திட்ட தொழிலாளர் போராட்டங்கள், சமூக நீதியை பாதுகாக்கும் கள எதிர்வினைகள், மாதர், இளைஞர், மாணவர் போராட்டங்கள் என நிறைய நடந்துள்ளன.
இருப்பினும், நவீன தாராளமய பாதையை கைவிட தயாராக இல்லை. மோடி உள்ளிட்ட வலதுசாரி அரசுகள் உலகம் முழுவதும் திசை திருப்பும் அரசியலை முன்வைத்து அதிருப்திகளை, குமுறல்களை, கோபங்களை சமாளிக்க முயற்சிக்கின்றன.
காரணம், நவீன தாராள மயப் பாதையில் இருந்து பின் வாங்குவது முதலாளித்துவத்தின் போதாமையை, இயலாமையை அம்பலப்படுத்துவதாக இருக்கும் என கருதுவதுதான். ஆகவேதான் முதலாளித்துவ வரையறைகளுக்கு உட்பட்ட சில மாற்றங்களுக்கு கூட அவர்கள் தயாராக இல்லை.
ஆகவே, கள போராட்டங்கள் மட்டுமின்றி, கருத்தியல் ரீதியாகவும் இடதுசாரி மாற்றை முன் வைத்து மக்களின் கருத்தை திரட்ட வேண்டியுள்ளது. முதலாளித்துவத்திற்கு எதிரான சித்தாந்த போரையும் முன்னெடுத்து சோசலிசமே மாற்று என்பதை நிறுவ வேண்டியுள்ளது.
You may also like
1 comment
Comments are closed.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

சிந்திக்க தூண்டும் கட்டுரை மோடி அரசின் பொருளாதார கோட்பாட்டை புரிய உதவும்
விவரங்கள் உள்ளன பொருளாதார வளர்ச்சி என்பது குழந்தை வளர்ப்பு
போண்றது ஆற்றலுள்ள ஆணாக அல்லது பெண்ணாக வளர்ப்பது போண்றதாகும். எவனாவது
குழந்தையின் காலை முதலில் வளர்ப்போம் அப்புறம் கை அப்புறம் வயிறு
படிப்படியாக வளர்க்க முடியும்என்று கருதுவனா,? பொருளதாரம் விவசாயம்,
தொழில், வர்த்தகம் மூன்றும் ஏக காலத்தில் வளர்க்க வேண்டும்
அரசிற்கு அந்த பார்வை இல்லை. பணத்தை பெருக்கினால் போதும் என்று அதுவும்
டாலரை இந்தியாவில் விதை த்தால் போதுமென்று ம் அதிலும அடுக்கு மாடி போல்
கட்டிடம் போல் கட்ட சாலைகள் போடுகிறார் பயன்படுத்தினால்
பொருனாதாரத்தை சரிக்கும் ஆயுதங்களை குவிக்கிறார்.