
பி. ராமமூர்த்தி: சட்டமன்றத்தில் வர்க்கக் குரல்!
நர்மதா தேவி
கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பங்கேற்று, எத்தகைய வகையில் பாட்டாளி வர்க்கத்திற்காக குரல் கொடுக்க முடியும்; சோஷலிச சமுதாயம் குறித்த புரிதலை ஏற்படுத்த முடியும் என்பதற்கு தோழர் பி.ராமூர்த்தியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உரைகள் பாடமாகத் திகழ்கின்றன. 1952ஆம் ஆண்டு தேர்தலில் சிறப்பான வெற்றியைப் பெற்று, சென்னை மாகாணத்தின் முதல் சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக தோழர் பி.ஆர். செயல்பட்டபோது, ‘தஞ்சாவூர் குத்தகைதாரர் பண்ணையாள் பாதுகாப்பு மசோதா’ குறித்த உரைகளில் பண்ணையார் என்ற வர்க்கம் ஏன் ஒழிக்கப்பட வேண்டிய வர்க்கம் என்று காத்திரமாகப் பேசி இருக்கிறார்.
“கடந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நிலஉரிமையாளர்தான் உற்பத்திப் பொருட்களின் பொறுப்பாளராக இருந்து வருகிறார். உண்மை அவ்வாறு இருந்தபோதிலும், உற்பத்தியானது ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருவது எப்படி? அவர், இன்னும் ஒரு நாள்கூட உற்பத்திக்கான பொறுப்பில் வைக்கத் தகுதியற்ற ஒரு வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்பதையே இது குறிக்கிறது. ஏனென்றால், அவர்கள் நீண்ட காலம் தொடர்ந்து உற்பத்திப் பொறுப்பில் வைக்கப்படுவது என்பது நாடு முழுவதற்குமே ஆபத்து மேலும் அதிகமாவதாகத்தான் இருக்கும்.
இவர்கள் நிலத்துடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாத, நிலத்திற்கு எந்தவித சேவையும் செய்யாதவர்களைக் கொண்ட ஒரு வர்க்கமாகும். இருந்தாலும்கூட, அவர்கள் நிலத்தின் மீதான உரிமையைப் பெறுகிறார்கள். அந்த வெறும் உரிமை மட்டுமே, அங்குள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வியர்வையால் விளைந்த விளைபொருட்களின் பெரும்பகுதியைப் பெறுவதற்கு, அவர்களுக்கு உரிமை அளிக்கிறது. அத்தகையதொரு விஷயம்தான் இப்போது நடக்கிறது. நிச்சயமாக, நில உரிமையாளர்களின் வர்க்கம் முழுவதுமே உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் என்று நான் கோர மாட்டேன்” என்று தோழர் பி.ஆர் பேசினார். அவர் பேசியபோது குறுக்கிட்ட அன்றைய நிதி அமைச்சர் சி. சுப்ரமணியம், ” ‘லிக்விடேட்’ (அழித்தொழிப்பு) என்று சொல்லுங்கள், உங்கள் சொந்த மொழியையே பயன்படுத்துங்கள்” என்று கூறினார். அதற்குப் பதில் அளிக்கும் விதமாக, தோழர் பி. ஆர். தொடர்ந்து, “ஒரு வர்க்கத்தை அழிப்பது என்பது குறிப்பிட்ட ஒரு பொருளைத் தருவது; தனியொரு நபரை அழிப்பது என்பது வேறுவிதமான பொருளைக் கொண்டது என்று திரு. சுப்ரமணியம் அவர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என்று விளக்கிவிட்டு, நிலஉடைமையாளர் வர்க்கத்தை ஒழிப்பது என்றால் என்ன? அந்த வர்க்கம் ஏன் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை மிக உறுதியாக எடுத்துரைத்தார். “ஒரு வர்க்கத்தை அழிப்பது என்பது நில உரிமையாளர்கள் என்று அழைக்கப்படும் நபர்களைக் கொண்ட ஒரு வர்க்கம் இனி இருக்காது; ஆனால் அந்த நில உரிமையாளர் வகுப்பைச் சேர்ந்த அனைத்து மக்களும், இந்த நாட்டில் நில உரிமையாளர்களாக அல்லாமல் சாதாரண மக்களாக தொடர்ந்து இருப்பார்கள். ஒரு வர்க்கத்தின் அழிப்பைப்பற்றி நாம் பேசும்போது, ‘அழிப்பு’ என்ற வார்த்தையின் சாதாரணமான பொருளை மாண்புமிகு அமைச்சர் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். நிச்சயமாக, நில உரிமையாளர் வர்க்கம் என்பது அழிக்கப்பட வேண்டும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. உழைக்காத ஒரு வர்க்கம் இருக்கும்வரை, அந்த வர்க்கத்திற்கு இருப்பதற்கான உரிமை இல்லை. அது மிக எளிமையான ஒரு விஷயம். அவ்வளவுதான்.” என்றார். கம்யூனிஸ்டுகள் எத்தகைய புரிதலோடு பணியாற்றிட வேண்டும் என்பதற்கு தோழர் பி.ஆர் மிகப்பெரும் உதாரணம்.
டிசம்பர் 15 பி. ராமமூர்த்தி 38வது நினைவு நாள்
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply