
இஸ்ரேலால் அழிக்கப்பட்ட பாலஸ்தீன் விவசாயமும், கிராமப்புற வாழ்வாதாரங்களும்
அருண் குமார்
கடந்த 22 மாதங்களாக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தனது இனப்படுகொலை ஆக்கிரமிப்பை இடைவிடாமல் நடத்திவருகிறது. இப்போது இஸ்ரேல், முழு பாலஸ்தீன ஆக்கிரமிப்பை நோக்கி காசா மற்றும் மேற்குக் கரை ஆகிய இரண்டிலும் நகர்கிறது.
ஜூலை 04, 2025 நிலவரப்படி, காசாவில் 57,130 பேர் கொல்லப்பட்டனர்; 1,35,173 பேர் காயமடைந்தனர்; 14,000 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டனர் (பாலஸ்தீன் க்ரானிக்கிள் – ஜூலை 2025) லான்செட், (ஆகஸ்ட், 2024), இறப்புகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடுகிறது; அதன் கணக்கின்படி இறந்தவர்கள் குறைந்தது 1,86,000 பேர், அதாவது காசாவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 8 சதவீதம் பேர். ஆக்கிரமிப்பால் ஏற்படும் அனைத்து நேரடி மற்றும் மறைமுக இறப்புகளையும், அதாவது பட்டினி மரணங்கள், மருந்துகள் கிடைக்காததால் ஏற்படும் இறப்புகள் இன்னமற்றும் பிற காரணங்களையும் சேர்த்து இந்த எண்களை அது கணக்கிட்டுள்ளது.
மேற்குக் கரையில், 202 குழந்தைகள் உட்பட, கிட்டத்தட்ட 1,000 பாலஸ்தீனியர்கள் ஆயுதப்படைகள் மற்றும் இஸ்ரேலிய குடியேறிகளால் கொல்லப்பட்டுள்ளனர்; மேலும் 9,230 பேர் காயமடைந்தனர். அக்டோபர் 2023 முதல் ஜூலை 2025 வரை மேற்குக் கரையில் நடந்த, ஆவணப்படுத்தப்பட்ட சுமார் 1,800 தாக்குதல்களில், குறைந்தது 6,574 பேர் வலுக்கட்டாயமாக இடம்பெயர்க்கப்பட்டனர்;, மற்றும் பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமான 3,091 கட்டமைப்புகள் இடிக்கப்பட்டன.
அழிக்கப்படும் வாழ்வாதாரங்கள்
இந்த தாக்குதல்களின், பெரும்பாலும் வெளிச்சத்திற்கு வராத, மற்றொரு முக்கிய அம்சம், காசா மற்றும் மேற்குக் கரையில் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுவதாகும். பாலஸ்தீனிய மத்திய புள்ளிவிவரப் பணியகம் (PCBS 2025), சர்வதேச தொழிலாளர் தினத்தை (மே தினம் 2025) முன்னிட்டு காசாவில் அதிகரித்து வரும் வேலையின்மை விகிதங்களை விவரித்து, ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, அக்டோபர் 2023இல் 45%-ஆக இருந்த வேலையின்மை 2024ஆம் ஆண்டின் இறுதியில் 68%-ஆக உயர்ந்துள்ளது. 15-29 வயதுடையவர்களில், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சியிலிருந்து இடை நின்றவர்களின் எண்ணிக்கை சுமார் 74% ஆகும்.
இஸ்ரேலின் நீடித்த தாக்குதல்கள் மற்றும் ஆக்கிரமிப்பு காரணமாக, மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேற்குக் கரையில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 3,13,000-ஐ எட்டியது, இது 2023-இல் சுமார் 1,83,000-ஆக இருந்தது. மேலும், மேற்குக் கரையில் உள்ள தொழிலாளர் திரளில், 2023-இல் 18%-ஆக இருந்த வேலையின்மை விகிதம், 2024-இல் சுமார் 31%-ஆக அதிகரித்துள்ளது.
குறியாகும் விவசாயப் பகுதிகள்
காசாவில், தற்போதைய ஆக்கிரமிப்பின் பின்னணியில், விவசாயத் துறையின் மதிப்பிடப்பட்ட இழப்புகள், ஒரு நாளைக்குத் தோராயமாக 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள். வடக்கு காசாவில் விவசாயப் பகுதிகள் குறிவைத்துத் தாக்கப்பட்டு வருவதை, தரவுகள் காட்டுகின்றன; இது காசாவின் பயிர்கள், காய்கறிகள் மற்றும் மரங்கள் பயிரிடப்படும் விவசாய நிலத்தின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்காகும்.
பாலஸ்தீனத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 7.1% ஆகும். மேலும் மிக முக்கியமாக, இது உணவுப் பாதுகாப்பை அடைவதற்கு உதவுகிறது. பாலஸ்தீனியர்களின் உணவுத் தேவைகளில் மொத்தம் 46% உள்நாட்டு விவசாய உற்பத்தியிலிருந்து கிடைக்கிறது. மீதமுள்ள 54% இறக்குமதிகள் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது (PCBS 2023).
உணவை இறக்குமதி செய்வதற்கான பாலஸ்தீனத்தின் அனைத்து வழிகளையும் இஸ்ரேல் மூடியுள்ளது. மேலும் உணவு உதவியைக்கூட வேண்டுமென்றே மறுத்துவருகிறது. இதனால் மக்களைச் சென்றடையும் உணவுப் பொருட்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. 2025, மே மாதத்தில், “(காசாவில்) 100 சதவீத மக்களும் பஞ்சத்தின் அபாயத்தில் உள்ளனர்” என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக – பிப்ரவரி முதல் ஏப்ரல் 2025 வரை – இஸ்ரேல் காசாவிற்கு அனைத்து உணவு உதவி விநியோகத்தையும் துண்டித்துள்ளது.
மே 26, 2025 முதல், அமெரிக்காவின் ஆதரவுடன், காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) என்ற தனியார் அரசு சாரா நிறுவனம், காசாவில் உதவிகள் விநியோகத்திற்காக உருவாக்கப்பட்டது. இந்த அரசு சாரா நிறுவனம், இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்படுவதால், ஐ.நா.வும் பெரும்பாலான நன்கொடை வழங்கும் நாடுகளும், இந்நிறுவனத்திற்கு ஒத்துழைக்க மறுத்து, அதைப் புறக்கணித்தன. ஐ.நா. இவ்வாறு ‘உணவை ஆயுதமாக்குவதை’ கண்டித்து, அதைப் ‘போர்க் குற்றம்’ என்று கூறியது.
GHF செயல்படத் தொடங்கியதிலிருந்து 410க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள், ஐ.நா. மற்றும் பிற மனிதாபிமான அமைப்புகளின் மிகச் சில உதவி வாகனங்களை அணுக முயன்றபோது கொல்லப்பட்டுள்ளனர்; குறைந்தது மேலும் 93 பேர் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உணவு உதவியைப் பெற அணுகும்போது இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 3,000க்கும் மேல்.
உதவியை நம்பி பாலஸ்தீன்
விவசாய உற்பத்தி முற்றிலுமாக அழிக்கப்பட்டதால், உணவுக்கு பாலஸ்தீனியர்கள் உதவியை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2023ஆம் ஆண்டு பாலஸ்தீன விவசாயிகள் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின் தரவுகள், காய்கறிகள், முட்டைகள் மற்றும் ஆலிவ் எண்ணெயில் பாலஸ்தீனம் அக்டோபர் 2023க்கு முன்பு முழுவதுமாக தன்னிறைவு அடைந்திருந்ததாகவும், பல பால் பொருட்களின் தன்னிறைவு விகிதம் சுமார் 87% இருந்ததாகவும் காட்டுகிறது.
செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பாலஸ்தீனியர்கள் தங்கள் காய்கறி உற்பத்திக்காக நம்பியிருந்த 70% பசுமை இல்லங்கள் இஸ்ரேலிய தாக்குதல்களால் அழிக்கப்பட்டுவிட்டன என்றும், 70% மரப் பயிர்கள் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது சேதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கண்டறியப்பட்டது.
மேற்கூறிய தரவுகள் சமீபத்திய அழிவின் சித்திரத்தை நமக்குக் காட்சிப்படுத்தினாலும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் உண்மையான கொடூரத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள, நாம் வரலாற்றைச் சிறிது ஆராய வேண்டியுள்ளது. பாலஸ்தீனம் ஒரு மத்திய தரைக்கடல் நாடு, எனவே, புவியியல் மற்றும் காலநிலை மாறுபாடுகளைப் பொறுத்து, அங்கு பயிர் செய்யும் முறையும் மாறுபடும். ஜோர்டான் பள்ளத்தாக்கு மேற்குக் கரையின் காய்கறிக் கூடையாகும். அங்கு கிராமங்கள் நீர்ப்பாசன முறை மூலம் விவசாயம் செய்கின்றன.
உணவுப் பொருள் உற்பத்தி
தேசிய ஆலிவ் எண்ணெய் உற்பத்தியில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு கடலோர சமவெளிகளிலிருந்து கிடைக்கிறது. பாலைவன விளிம்புப் பகுதியில் திராட்சை சாகுபடி மற்றும் மேய்ச்சல் ஆகியவை நடைபெறுகின்றன. காசாவின் உட்புறப் பகுதிகளில், மழை நீரை நம்பி தானியங்கள் பயிரிடப்படுகின்றன., மேலும் அதன் கடலோரப் பகுதிகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.
பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் தொடங்கிய முதல் போர் 1948இல் நடந்தது. அப்போது காசா ஒரு தனி பிரதேசமாக இருக்கவில்லை; தெற்கு பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக இருந்தது அது. இந்தப் போர் தெற்கு பாலஸ்தீனத்தின் விவசாய வாழ்க்கையை அழித்தது. மேலும், காசா, அதனை ஒட்டியிருந்த பெரும்பாலான விவசாய நிலங்களிலிருந்து துண்டிக்கப்பட்டது (கோல்ப்ரி 2024).
மூன்று ஆண்டுகளாக பயிரிடப்படாமல் இருக்கும் எந்தவொரு நிலமும் அரசு நிலமாக அறிவிக்கப்படும் என்று, 1981ஆம் ஆண்டு இஸ்ரேல் ஒரு சட்டத்தை இயற்றியது. அத்தகைய நிலங்கள் பெரும்பாலும் பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமானவை; அவர்கள் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது; மேலும், அவர்கள் ஒருபோதும் திரும்பிவர அனுமதிக்கப்படவில்லை. இதன் விளைவாக, நிலம் பயிரிடப்படாமல் இருந்தது. இந்த நிலம் பாலஸ்தீனியர்களிடமிருந்து “சட்டப்பூர்வமாக” பறிக்கப்பட்டு இஸ்ரேலியக் குடியேறிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
பறிக்கப்படும் நிலப்பரப்பு
1981 மற்றும் 2018க்கு இடையில், மேற்குக் கரையில் 1.4 மில்லியன் டூனம்கள் (140,000 ஹெக்டேர்) நிலத்தை – அல்லது முழுப் பிரதேசத்தில் சுமார் கால் பகுதியை – “அரசு நிலம்” என்று இஸ்ரேல் அறிவித்து, இஸ்ரேலியக் குடியேற்றங்களுக்கு ஒதுக்கியது. தொடர்ச்சியான போர்கள், தாக்குதல்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் பாலஸ்தீனத்தின் நிலப்பகுதிகளை மிகவும் குறைத்துவிட்டன. அசல் பாலஸ்தீன பகுதிகளில் 12 சதவீதம் மட்டுமே, இன்று பாலஸ்தீனம் என்று அழைக்கப்படுகின்றது. 2024ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, மேற்குக் கரையில் 23,700 டூனம்கள் (கிட்டத்தட்ட 6,000 ஏக்கர்) நிலத்தை இஸ்ரேல், அரசு உடைமையாக அறிவித்துள்ளது. இது முந்தைய எந்த ஆண்டையும் விட அதிகம். ஜூன் 25, 2024 அன்று மட்டும், ஜோர்டான் பள்ளத்தாக்கில் 3,000 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை அரசு நிலமாக இஸ்ரேல் அறிவித்தது. இது கடந்த 30 ஆண்டுகளில், செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளுள் இது மிக அதிக அளவிலான நிலமாகும்.
விழுங்கப்படும் எல்லைப்பகுதிகள்
ஓஸ்லோ அமைதி ஒப்பந்தங்கள், இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையில் ஒரு தடையை உருவாக்கவும், 50 மீட்டர் அகலமுள்ள இடையீட்டு மண்டலத்தை உருவாக்கவும் அழைப்பு விடுத்தன. இரண்டாவது ‘இன்டிஃபாடா’வின் (2000) போது (பாலஸ்தீன விடுதலைப் போராட்டம்) இஸ்ரேலிய இராணுவம் ஆக்கிரமிப்பை விரிவுபடுத்தியது. இன்று இடையீட்டு மண்டலத்தின் அளவு தெளிவாக இல்லை; மேலும் அது மாறிக்கொண்டே இருக்கிறது: இது 300 – 1,000 மீட்டர் அகலமாக இருக்கலாம்; இஸ்ரேல் தரும் விளக்கத்தைப் பொறுத்து அகலம் மாறுபடுகிறது.
இதன் விளைவாக, இடையீட்டு மண்டலம் பாலஸ்தீன விளை நிலங்களின் குறிப்பிடத்தக்க பகுதியை விழுங்குகிறது. ஐ.நா. அறிக்கையின்படி, காசாவின் விவசாய நிலங்களில் கிட்டத்தட்ட 46 சதவீதம், இந்த இடையீட்டு மண்டலம் காரணமாக அணுக முடியாததாகவோ அல்லது உற்பத்தி செய்ய முடியாததாகவோ மாறிவிட்டது. 2000 – 2014க்கு இடையிலான ஆண்டுகளில் பாலஸ்தீனத்திற்கு ஏற்பட்ட இழப்பு, ஆண்டுக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நீர்வளமும் கையில் இல்லை
இஸ்ரேல், 1967 முதல், பாலஸ்தீன நீர்வளங்களை ஏறக்குறைய முழுமையாகக் கட்டுப்படுத்தி, பாலஸ்தீனியர்களுக்கு அவர்களின் உரிமையான தண்ணீர் கிடைக்காமல் செய்துள்ளது. இருவருக்கும் பொதுவான, கிடைக்கக்கூடிய நீர் வளங்களில் சுமார் 89 சதவீதத்தை இஸ்ரேல் தானே எடுத்துக்கொள்கிறது. இதனால் பாலஸ்தீன மக்களுக்குக் கிடைக்கும் நீரின் அளவு 11 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இதன் விளைவாக, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் (OPT) (கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசா உட்பட மேற்குக் கரையை உள்ளடக்கியது) வசிக்கும் ஒவ்வொரு பாலஸ்தீனரும் வீட்டு உபயோகத்திற்காக ஒரு நாளைக்கு 60 லிட்டர் தண்ணீரைப் பெறுகிறார். பல சமூகங்கள் ஒரு நாளைக்கு 10 லிட்டர் தண்ணீரை மட்டுமே பெறுகின்றன.
இதற்கு நேர்மாறாக, ஒவ்வொரு இஸ்ரேலியரும் ஒரு நாளைக்கு 280 லிட்டர் தண்ணீரைப் பெறுகிறார். காசாவில் வசிக்கும் பாலஸ்தீன மக்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. காசா பகுதியில் உள்ள நோய்களில் சுமார் 60 சதவீதம் சுகாதாரமற்ற நீரினால் ஏற்படுகிறது.
குறி வைக்கப்படும் ஆலிவ் மரங்கள்
ஆலிவ் சாகுபடி, பாலஸ்தீன விவசாயத்தில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. பாலஸ்தீனப் பகுதிகள் முழுவதும் பழ மரங்களில் ஆலிவ் மரங்கள் 85 சதவீதம் ஆகும்; மேற்குக் கரை மற்றும் காசாவின் விளைநிலங்களில் 54 சதவீத நிலங்களில் ஆலிவ் சாகுபடி செய்ய்யப்படுகிறது. ஒரு மதிப்பீட்டின்படி, பாலஸ்தீனத்தில் கிட்டத்தட்ட 10 மில்லியன் பழம் தரும் ஆலிவ் மரங்கள் இருந்தன. 80,000 – 100,000 பாலஸ்தீன குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு இந்த ஆலிவ் மரங்கள் பங்களித்தன; ஆலிவ் உற்பத்தியின் மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 சதவீதமாகும்.
பாலஸ்தீனத்தில் ஆலிவ் சாகுபடி அதிகரிப்பதற்கு அரசியல் காரணமும் உள்ளது. பயன்படுத்தப்படாமல் இருக்கும் எந்த நிலமும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்படுகிற காரணத்தால், தன்னார்வ இயக்கங்களின் ஒரு பகுதியாக, 1970கள் மற்றும் 1980களில், பாலஸ்தீன இளைஞர்களால் லட்சக்கணக்கான ஆலிவ் மரங்கள் நடப்பட்டன. ஆக்கிரமிப்பிலிருந்து தங்கள் நிலத்தைப் பாதுகாக்கவும், வாழ்வாதாரத்தைப் பெறவும், பாலஸ்தீனியர்கள் ஆலிவ் மரங்களை நடத் தொடங்கினர்; அவற்றின் உள்ளூர் வகைகள் ஒப்பீட்டளவில் அதிகப் பராமரிப்பு தேவைப்படாதவை; மேலும் நோய் மற்றும் வறட்சியைத் தாங்கும் சக்தி கொண்டவை.
பாலஸ்தீனியர்களின் இந்த நடவடிக்கையை இஸ்ரேலிய அரசு உணர்ந்தவுடன், பாலஸ்தீனம் மீதான தாக்குதல்களில் ஆலிவ் சாகுபடியைக் குறிவைக்கத் தொடங்கியது. 1967 – 2023க்கு இடையில், 1,078,000 ஆலிவ் மரங்கள் இஸ்ரேலியப் படைகளால் வேரோடு சாய்க்கப்பட்டன. 2023ஆம் ஆண்டில் மட்டும், இஸ்ரேல் கிட்டத்தட்ட 19,000 ஆலிவ் மரங்களை வேரோடு சாய்த்தது. 2023இல், ஆலிவ் அறுவடையை இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. அந்த ஓர் ஆண்டில் மட்டும் பாலஸ்தீனம் கிட்டத்தட்ட 10,000 டன் ஆலிவ்களையும் 1,200 மெட்ரிக் டன் ஆலிவ் எண்ணெய் உற்பத்தியையும் இழந்தது. இதன் விளைவாக ஏற்பட்ட பண இழப்பு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குடியேறிகளின் அத்துமீறல்கள்
இஸ்ரேலியக் குடியேறிகள் அக்டோபர் 7, 2023க்குப் பிறகு, விவசாய இயந்திரங்கள், நீர்ப்பாசனக் குழாய்கள் மற்றும் தண்ணீர்த் தொட்டிகளை அழிக்கத் தொடங்கினர். மேலும் பாலஸ்தீனிய நிலத்தை (மேற்குக் கரையில்) பறிமுதல் செய்யத் தொடங்கினர். குடியேறிகள் தங்கள் கால்நடைகளை பாலஸ்தீனிய வயல்களுக்குள் ஓட்டிச் சென்று தானிய வயல்கள் மற்றும் ஆலிவ் தோப்புகளில் மேய்ச்சலுக்கு விட்டு, மரங்களையும் பயிர்களையும் அழித்தனர். இவ்வாறு பாலஸ்தீனிய நிலப்பரப்பில் கால்நடைகளைப் பெரிய அளவில் மேய்ச்சலுக்கு விடுவதால், தேவைக்கு அதிகமான மேய்ச்சல் காரணமாக பூமியின் மேற்பரப்பு சொட்டையாக வழிவகுத்து, நில அரிப்பு ஏற்படுகிறது; இதனால் மேற்குக் கரையில் பாலைவனமாக்கல் அதிகரிக்கிறது என்று விவசாய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நடவடிக்கைகளுடன் சேர்ந்து, இஸ்ரேல் பாலஸ்தீனியர்கள் காட்டுப்பன்றிகளைச் சுடுவதைத் தடைசெய்து, பன்றிகளுக்கான பாதுகாப்புப் பூங்காக்களைத் திறந்தது. அவற்றின் எண்ணிக்கை அதிகரித்ததால், பாலஸ்தீனியர்களின் பண்ணைகளில், குறிப்பாக கோதுமை வயல்கள் மற்றும் ஆலிவ் தோப்புகளில் காட்டுப்பன்றிகள் வேண்டுமென்றே திறந்துவிடப்பட்டன. காட்டுப்பன்றிகள் கோதுமை மற்றும் ஆலிவ்களை அழித்தாலும், பயிர்களை அழிக்கும் அவ்விலங்குகளைச் சுட பாலஸ்தீனியர்கள் அனுமதிக்கப்படவில்லை.
காசா பகுதியில், இஸ்ரேல் மூலிகைக் கொல்லிகள் மற்றும் பிற இரசாயனங்களை நிலத்தில் தெளித்ததால், அவை சாகுபடிக்குப் பயனற்றவையாகிவிட்டன (மதனோக்லு 2024). இதன் விளைவாக, ஒரு காலத்தில் பசுமையான விவசாய நிலங்களாக இருந்தவை, எந்தத் தாவரங்களும் இல்லாத வறண்ட நிலங்களாக மாறின. 2023க்கு முன்பு, காசாவில் விவசாய நிலத்தின் பரப்பளவு 170 சதுர கிலோமீட்டர் அல்லது அதன் மொத்தப் பரப்பளவில் 47 சதவீதமாக இருந்தது. இந்த நிலத்தில் உற்பத்தி செய்யப்படும் உணவு, மக்களின் உயிர்வாழ்விற்கு மிக முக்கியமானதாகும்.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களின் விளைவாக ஏற்பட்ட விவசாய அழிவை ரிமோட் சென்சார் மூலம் அளவிட்டதில், விவசாய உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட நிலங்களில் 40 சதவீத நிலங்கள் அழிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அக்டோபர் 2023 – மார்ச் 2024க்கு இடையில், மூன்றில் ஒரு பங்கு பசுமை இல்லங்கள் அழிக்கப்பட்டன. தாக்குதல்கள் மிகவும் தீவிரமாகவும், மீண்டும் மீண்டும் நடந்த வடக்கு காசாவில், கிட்டத்தட்ட 90 சதவீத பசுமை இல்லங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில், இஸ்ரேல், காசாவில் 2,000க்கும் மேற்பட்ட விவசாய உற்பத்தித் தளங்கள் மற்றும் பசுமை இல்லங்களை இராணுவத் தளங்களாக மாற்றியது.
காசாவின் மீதான தரைவழிப் படையெடுப்பு பாலஸ்தீன விவசாய நிலங்கள் மற்றும் பழத்தோட்டங்களில் 50 சதவீதத்தை அழிக்க வழிவகுத்தது. குண்டுவீச்சின் விளைவாக காசாவின் 18 சதவீத விளைநிலங்கள், தரம் மற்றும் அடர்த்தியில் கணிசமான சரிவை சந்தித்துள்ளதாக ஐ.நா. அமைப்புகள் மதிப்பிட்டுள்ளன.
இஸ்ரேலியத் தாக்குதல்கள் காசாவின் நீர்ப்பாசன உள்கட்டமைப்பில் மூன்றில் ஒரு பங்கை அழித்துவிட்டன. மக்களின் வருமானம் மற்றும் உணவுத் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் உதவும் மற்றொரு நடவடிக்கையான மீன்பிடித்தலும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது – காசாவின் மீன்பிடி படகுகளில் 70 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளன.
அதிகரிக்கும் பட்டினி நிலை
2023ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் காசாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சுமார் 670 மில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து சுமார் 90 மில்லியன் அமெரிக்க டாலர்களாக, 80 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்தது. ஆக்கிரமிப்பின் தாக்கம் காசாவைக் கடுமையான பட்டினி நிலைமைகளுக்குத் தள்ளியுள்ளது.
காசாவின் விவசாயத்தில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக அழிக்கப்பட்டு, அதன் மக்கள்தொகையில் 90 சதவீதத்தினர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை அனுபவித்து வருகின்றனர். மிகவும் கடுமையான உணவுப் பற்றாக்குறை காரணமாக, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 90 சதவீதம் பேரை குறைந்தது ஒரு நோயாவது தாக்கியுள்ளது. கிடைக்கும் குறைந்த அளவு உணவு உதவிக்காக வரிசையில் காத்திருக்கும் பாலஸ்தீன மக்களின் மீதான இஸ்ரேலிய அரசின் குண்டுவீச்சை விட மனிதாபிமானமற்றது எது?
(அருண் குமார் (அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ (எம்)) எழுதிய நீண்ட கட்டுரையின் சுருக்கம்)
தமிழில்: சோபனா, சேலம்
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply