ஏகாதிபத்தியத்தை எதிர்த்த பாலஸ்தீன விடுதலைப் பயணம்!
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
அறிமுகம்
1988 நவம்பர் 15 அன்று பாலஸ்தீன விடுதலை இயக்கம், இறையாண்மை பெற்ற பாலஸ்தீன நாடு அமைந்துள்ளது என அறிவித்தது. வரலாற்றில் பாலஸ்தீனம் என்று அறியப்பட்ட பகுதியில், 1967இல் இஸ்ரேல் நாடு ஆக்கிரமித்துக்கொண்ட பகுதியான கிழக்கு ஜெருசலம் உட்பட உள்ள ஜோர்தான் நதியின் மேற்குக் கரை மற்றும் காஜா பகுதி ஆகியவை இதில் அடங்கும். இவை பாலஸ்தீனத்தை சேர்ந்தவை என்பது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். 1988 ஆண்டு இறுதிவரை 78 நாடுகளால் பாலஸ்தீனம் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. (உண்மையில் நாம் நினைவில் கொள்ளவேண்டிய வரலாற்றுப் பின்னணி இது தான்: பலப்பல நூற்றாண்டுகளாக பாலஸ்தீன மக்கள் வசித்து வந்த பாலஸ்தீனத்தில், கடந்த 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டிலும் மேலை ஏகாதிபத்தியம் யூதர்கள் குடியேற்றத்தை ஊக்குவித்தது. ஏற்கெனவே அங்கு வசித்து வந்த பாலஸ்தீன மக்களை பல்வேறு கட்டங்களாக வெளியேற்றி, இறுதியில் 1948இல் “நக்பா” என்று அழைக்கப்படுகின்ற இனப்படுகொலை, மற்றும் கூண்டோடு துரத்தியடித்தல் என்ற கொடிய செயல்கள் மூலம் 8 லட்சம் பாலஸ்தீனர்களை விரட்டியடித்து, அதன்பகுதியாக 530 சிறுநகரங்களையும் கிராமங்களையும் அழித்தொழித்து, இஸ்ரேல் என்ற மத அடிப்படையிலான நாட்டை 1948இல் நிறுவியதில் ஏகாதிபத்தியம் முதன்மை பங்கு வகித்தது. ஐக்கிய நாடுகள் அமைப்பு அப்பொழுது கிட்டத்தட்ட ஏகாதிபத்தியத்தின் கையில்தான் இருந்தது. ஏகாதிபத்திய அமைப்பிற்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் உள்ள தொப்புள் கொடி உறவை புரிந்துகொள்வதும் ஆழ்ந்து உள்வாங்குவதும் மிக அவசியம்.) [1]
நீண்ட காலமாக தீர்க்கப்படாத இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காண 1993-95 ஆண்டுகளில் ஆஸ்லோ ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் யிஸ்தாக் ராபின் என்ற இஸ்ரேல் பிரதமர் கொலை செய்யப்பட்டு நெடநியாகு பிரதமர் ஆன பின்பு ஒப்பந்தத்தை அமலாக்க பேச்சு வார்த்தை நடத்த இஸ்ரேல் மறுத்து விட்டது. இதன்பின் பாலஸ்தீன நாடு மேலும் பல நாடுகளின் அங்கீகாரம் பெற்றது. 2011இல் பாலஸ்தீனம் யுனெஸ்கோ அமைப்பின் உறுப்பினராக அனுமதிக்கப்பட்டது. 2012இல் ஐக்கிய நாடுகள் சபையின் 138 உறுப்பினர்களால் பார்வையாளர் அரசு என்ற அந்தஸ்து பாலஸ்தீனத்திற்கு அளிக்கப்பட்டது. பின்னர் அதுவே அதிகார பூர்வமான பாலஸ்தீன அரசு என்று இயங்கிவருகிறது. ஜி-20 நாடுகளில் பாதி நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன. பணக்கார நாடுகளான ஜி-7 நாடுகளும் ஆஸ்திரேலியா, தென் கொரியா உள்ளிட்ட சில நாடுகளும் இதுவரை பாலஸ்தீன நாடு என்பதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை.
1967 இஸ்ரேல் – அரபு நாடுகள் போருக்குப்பின் பாலஸ்தீன இறையாண்மை பன்னாட்டு அரங்கில் அங்கீகாரம் பெற்றாலும், இஸ்ரேல் அதை மதிக்கவில்லை என்பது மட்டுமல்ல; 1967க்கு முன் இஸ்ரேலிடம் இல்லாத பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் அரசு தனது ஆக்கிரமிப்பு வேலைகளை ஏகாதிபத்தியத்தின் ஆசியுடனும் நிதி, தொழில்நுட்பங்கள், ராணுவ தளவாடங்கள் போன்ற பல உதவிகளுடனும் தொடர்ந்தது. மேலை ஏகாதிபத்திய நாடுகளின் உதவியுடன் எஞ்சியிருந்த பாலஸ்தீனத்தின் பெரும் பகுதியையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. காஜா பகுதி இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்ட ஒரு திறந்தவெளி சிறை என்றே ஆனது. ஜோர்டான் நதியின் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேலிய யூதர்கள் குடி அமத்தப்பட்டனர். இவ்வாறு தங்கள் நாடு களவாடப்படுவதை எதிர்த்த பாலஸ்தீனர்கள் மீது கடும் அடக்குமுறைகள் – படுகொலைகள் உட்பட – கட்டவிழ்த்துவிடப்பட்டன. இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களை “பாதுகாக்க” இஸ்ரேல் அரசு பெரும் சுவர்களை பாலஸ்தீனப் பகுதி முழுதும் எழுப்பி, அங்கே வாழ்ந்துவரும் பாலஸ்தீன மக்களை சிறைப்படுத்தி, பழைய தென் ஆப்பிரிக்கா நாட்டில் நிலவிய வெள்ளை நிறவெறி அரசைப் போலவே இஸ்ரேல் செயல்பட்டு வந்துள்ளது. இஸ்ரேல் அரசின் கொடுங்கோன்மையை எதிர்த்து மீண்டும் மீண்டும் கலகங்கள் வெடித்தன. சில வெற்றிகள் பெற்றன. பின்னர் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டன. ஆனால் பாலஸ்தீன மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை.
மாறிவரும் உலகமும் அதன் அடிப்படை முரண்பாடுகளும்
இடைப்பட்ட இந்த பல பத்தாண்டுகளில் அரபு தேசீயம் பின்னுக்கு தள்ளப்பட்டது. சோவியத் ஒன்றியமும் சோசலிச அரசுகளும் வீழ்த்தப்பட்டு, உலகளவில் வலதுசாரி மேலாதிக்கம் வலுப்பெற்றது. அமெரிக்க வல்லரசின் பிடியில் ஒருதுருவ உலகம் உருவானது. எனினும், உலகெங்கும் சிறிதும் பெரிதுமாக மக்களின் எதிர்ப்பும் போராட்டங்களும் தொடர்ந்தன. சோசலிச மக்கள் சீனமும், இதர எஞ்சியிருந்த சோசலிச நாடுகளும், ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களையும் சூழ்ச்சிகளையும் தொடர்ந்து முறியடித்து முன்னேறி வந்துள்ளன. தெற்கு உலக நாடுகளின் ஆளும் வர்க்கங்களின் ஊசலாட்டங்களையும் பிற்போக்கு வர்க்கத் தன்மைகளையும் ஏகாதிபத்திய எதிர்ப்பில் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் ஏற்பட்ட சறுக்கல்களையும் தாண்டி, ஜனநாயக இயக்கங்களுக்கும் மக்கள் விடுதலைக்குமான காலம் கனிந்து கொண்டிருந்தது. சமகாலத்தில் உலகளவில் உள்ள நான்கு முரண்பாடுகளில் ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையிலான முரண்பாடு மையப்பங்கு வகித்தாலும், தொழிலாளி-முதலாளி வர்க்க முரண், ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான முரண் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கும் வளரும் நாடுகளுக்கும் இடையிலான முரண் ஆகிய மூன்று முரண்களில் அவ்வப்பொழுது ஏதாவது ஒரு முரண் மேலோங்கி வரும் என்பதே மாரக்சீயப் புரிதல். இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் 20ஆவது மாநாட்டிலும் அதன் பின்பு அக்கட்சியின் பல மாநாடுகளிலும் வலியுறுத்தப்பட்டது போல முன்னாள் காலனி நாடுகள்/வளரும் நாடுகள் முகாமிற்கும் ஏகாதிபத்திய முகாமுக்கும் இடையிலான முரண்கள் வலுப்பெற்று வந்துள்ளன. பாலஸ்தீனத்தில் நாம் காணும் அண்மை நிகழ்வுகளை புரிந்துகொள்ள இந்த புரிதல் உதவும்.
2023 அக்டோபர் நிகழ்வுகளும் விளைவுகளும்

கடந்த 2023 அக்டோபர் 8ஆம் தேதியிலிருந்து இஸ்ரேல் அரசு பாலஸ்தீனர்கள் மீது நடத்திவரும் இனப்படுகொலை தாக்குதல்கள் உலகெங்கும் பாலஸ்தீன விடுதலையை பேசுபொருளாக்கி வருகிறது. மிக அண்மையில், 2024 மே 10 அன்று கூடிய ஐக்கிய நாடுகள் பேரவை மிகப்பெரும்பான்மையுடன் (ஆதரவு 143 நாடுகள், எதிர்ப்பு 9 நாடுகள், வாக்கு அளிக்காத நாடுகள் 25) ஐக்கிய நாடுகள் சாசனத்தின் நான்காவது ஷரத்தின் அடிப்படையில் பாலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பினர் என்ற தகுதி பெற்றுள்ளது என்பதால், அதை ஒரு முழு உறுப்பினராக அனுமதிப்பது என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. உலகெங்கும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு பெருகிவருவதை எழுச்சிமிக்க மக்கள் இயக்கங்கள் உலகம் முழுமைக்கும் உணர்த்தி வருகின்ற சூழலில், இத்தீர்மானம் பொருத்தமானது மட்டுமல்ல; தவிர்க்க முடியாதது என்பதும் உணரப்பட வேண்டும்.
வலிமை பெற்றுவரும் பாலஸ்தீனம், தனிமைப்பட்டுவரும் இஸ்ரேல்
மேற்கு ஆசியாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் அரசு நடத்திவரும் இனப்படுகொலை போர் இன்று உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஒரு அமைப்பாக பாலஸ்தீனத்தின் காஜா பகுதியில் செயல்பட்டுவரும் ஹமாஸ் இஸ்ரேல் நாட்டுக்குள் புகுந்து நடத்திய முற்றிலும் எதிர்பாராத தாக்குதலை தொடர்ந்து, இஸ்ரேல் தனது விமான மற்றும் தரை படைகளை வைத்து இடைவிடாமல் குண்டுகள் பொழிந்து காஜா பகுதியில் வாழும் 40,000க்கும் மேற்பட்ட நிராயுதபாணியான மக்களை கொன்று குவித்துள்ளது. இப்பொழுதும் கொலைகள் தொடர்கின்றன. இறந்தவர்களில் ஏராளமான குழந்தைகளும் பெண்களும் அடங்கும். காஜா பகுதியின் அனைத்து வீடுகளையும் வாழ்விடங்களையும் தரைமட்டமாக்கிவரும் கொடுஞ்செயலையும் இஸ்ரேல் தொடர்கிறது. கல்வி நிலையங்கள், மருத்துவ மனைகள், கருவுற்ற தாய்மார்கள், பிறந்த குழந்தைகள், பாதுகாப்பற்ற முதியோர் போன்ற கருணையிலான பாகுபாடுகள் எதையும் கண்டுகொள்ளாமல் இஸ்ரேல் படுகொலைகளை தொடர்கிறது. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளின் பண, தொழில்நுட்ப, ஆயுத உதவிகளும் இஸ்ரேல் அரசுக்கு தொடர்ந்து கிடைத்துவருகின்றன. பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் அரசு இனப்படுகொலை செய்துள்ளது என்று தீர்மானித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அவையில் இஸ்ரேலும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அதன் மேலை ஏகாதிபத்திய கூட்டாளிகளும் இஸ்ரேலின் தொடரும் கொடிய இனப்படுகொலைக்கு ஆதரவானவர்கள் என்று அம்பலப்பட்டு நிற்கின்றன.
அமெரிக்க பல்கலை மாணவர்களின் எழுச்சிமிக்க போராட்டங்கள்
இஸ்ரேலுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு வலுப்பெற்று வருகிறது. இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்து ஊக்குவித்து வரும் அமெரிக்காவில் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களில் யூதமாணவர்கள் உள்ளிட்டு பல்லாயிரக்கணக்கில் மாணவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலின் இனப்படுகொலை நடவடிக்கைகளை எதிர்த்தும், அமெரிக்க அரசின் நிலைபாட்டை கண்டித்தும், எழுச்சிமிக்க போராட்டங்களை நடத்திவருகின்றனர். பட்டமளிப்பு விழாக்களிலும் தங்கள் எதிர்ப்பை தைரியமாக வெளிப்படுத்திவருகின்றனர். இஸ்ரேலுடன் பொருளாதார உறவுகள் கொண்டும் ஆயுத தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் விற்றும் பெரும் லாபம் ஈட்டிவரும் கம்பெனிகளின் பங்குகளை வாங்கி வைத்திருக்கும் பல்கலை நிர்வாகங்கள் அவற்றை உடனடியாக விற்று தங்கள் தொடர்பை துண்டித்துக்கொள்ளவேண்டும்; இஸ்ரேல் நாட்டை பொருளாதார ரீதியாக பகிஷ்கரிக்க வேண்டும், இஸ்ரேலுக்கு எதிராக பொருளாதார மற்றும் தொழில்நுட்ப தடைகள் கொண்டு வரவேண்டும் – Boycott, Disinvest and Sanction (BDS) – இஸ்ரேலை புறக்கணிப்பது, இஸ்ரேலுடன் மறைமுகமாகவும் நேரடியாகவும் தொடர்பு வைத்துள்ள கம்பெனிகளில் உள்ள பன்னாட்டு முதலீடுகளை முதலீட்டாளர்கள் விற்றுவிடுவது, இஸ்ரேல் அரசை தண்டிக்கும் வகையில் அதற்கு எதிராக பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் இதர தடைகளை அமலாக்குவது என்ற மூன்று அம்ச கோரிக்கைகளை இப்போராட்டங்கள் சரியாகவே வலியுறுத்தியுள்ளன. பல்கலை வளாகங்களில் காவல் துறை மற்றும் நிர்வாகங்களின் கடுமையான அடக்குமுறைகளை எதிர்த்து தொடர்ந்து நடந்துவரும் இப்போராட்டங்கள் 1960களின் பிற்பகுதியிலும் 1970களின் துவக்கத்திலும் அமரிக்கா வியத்நாம் மீது குண்டு பொழிந்ததையும் அந்த நாட்டு மக்களின் விடுதலை இயக்கத்தை நசுக்க மேற்கொண்ட நடவடிக்கைகளையும் எதிர்த்து அமெரிக்காவின் ஏராளமான பல்கலைக் கழகங்களில் நடந்த வீரமிக்க போராட்டங்களை நமக்கு நினைவுபடுத்துகின்றன.[2] தன்னலமற்ற இப்போராட்டங்கள் ஏகாதிபத்திய முதலாளித்துவம் எவ்வளவு மூளை சலவை செய்ய முயன்றாலும், அதி நவீன தொழில்நுட்பங்களை அதற்கென பயன்படுத்தினாலும், மானுட வரலாற்று வளர்ச்சியில், உற்பத்திசக்திகளும் உற்பத்திஉறவுகளும் நாகரீக வாழ்வை நோக்கி மானுடத்தை நகர்த்தும் பின்னணியில், மானுடத்தின் அடிப்படை நியாய உணர்வை அழிக்க முடியாது என்பதை உலகிற்கு உணர்த்திவருகின்றன. மறுபுறம், ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைகளும் சூழ்ச்சிகளும் அதன் கைப்பாவையாக செயல்படும் இஸ்ரேல் அரசின் 75 ஆண்டுகளுக்கும் மேலான இனப்படுகொலை முனைவுகளும், பாலஸ்தீன மக்களின் விடுதலைக்கான வேட்கையை அழித்து விட முடியாது என்பதை காஜா பகுதியிலும் பாலஸ்தீனத்தின் இதர பகுதிகளிலும் அம்மக்கள் நடத்திவரும் வீரம் செறிந்த போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
மாறிவரும் உலகில் பன்னாட்டு பேராதரவு
இஸ்ரேலின் இனப்படுகொலை போர் எதிர்காலத்தில் இஸ்ரேலின் இருப்பையே கேள்விக் குறியாக்கிவிடும் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மாறிவரும் பன்னாட்டு சூழலில் தேச விடுதலை இயக்கங்களும் ஏகாதிபத்திய எதிர்ப்பு முகாமும் வலுவடைந்து வருகின்றன. மேற்கு ஆசிய நாடுகளிலும் இதர தெற்கு நாடுகளிலும் மக்கள் மத்தியில் பாலஸ்தீன விடுதலை என்ற இலக்கிற்கு ஆதரவு வேகமாக கூடி வருகிறது. இந்த நாடுகளின் அரசுகளில் பெரும்பாலானவை பிற்போக்கு அரசுகள் என்றாலும், அவர்களிடம் முன்பின் முரணற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வையோ, முற்போக்கான அணுகுமுறைகளையோ, எதிர்பார்க்க இயலாது என்பது உண்மை என்றாலும், சமகால மக்கள் எழுச்சி இந்நாடுகளின் ஆளும் வர்க்கங்களை பாலஸ்தீன விடுதலை பக்கம் தள்ளி வருகிறது. இஸ்ரேலுடன் நட்புறவு கொள்ள வேண்டும் என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் சவுதி அரேபியாவை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் அண்மை நிகழ்வுகளுக்குப்பிறகு சவுதி அரேபியா கூட வலுவான இஸ்ரேல் எதிர்ப்பு நிலை எடுத்துள்ளது. யெமென், சிரியா, இராக், போன்ற அரபு நாடுகள் மட்டுமின்றி, ஈரான் இஸ்ரேலுக்கு எதிரான வலுவான சக்தியாக உள்ளது. ஆப்பிரிக்கா நாடுகளும் இதர மேற்கு ஆசிய, தென் அமெரிக்க நாடுகளும் இவ்வரிசையில் இணைந்துவருகின்றன.
மக்கள் சீனத்தின் செல்வாக்கும் சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் உறவுகள் வலுப்பெற்றிருப்பதும் அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய முகாமிற்கு தூக்கமற்ற இரவுகளை கொடுத்துவருகின்றன என்ற முக்கியமான புதிய அம்சததை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். மேலை ஏகாதிபத்திய முகாமிலேயே சில விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. நார்வே, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளும் கனடாவும் கூட பாலஸ்தீன பிரச்சினையில் இஸ்ரேலுக்கு எதிராக நிலை எடுத்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையில் ஒருமித்த கருத்து இல்லை. தெற்கு நாடுகளும் தேச விடுதலை சக்திகளும் மக்கள் சீனமும் இணைந்து செயல்படுவதும் உலகம் தழுவிய பாலஸ்தீன மக்கள் ஆதரவு எழுச்சியும் முற்போக்கான மாற்றத்தை நோக்கி, பாலஸ்தீன விடுதலை என்ற இலக்கை அடையும் நிலைக்கு வரலாற்றை இட்டுச்செலலும்.
ஆனால் இதில் எல்லாம் இந்தியா எங்கே நிற்கிறது என்ற கேள்வி எழுகிறது.
இந்திய அரசின், ஆர்எஸ்எஸ் – பாஜக முகாமின் ஏகாதிபத்திய ஆதரவு நிலைபாடு
அமெரிக்க வல்லரசின் இளைய கூட்டாளியாக செயல்பட்டுவரும் மோடி அரசு, நமது நாடு நீண்டகாலமாக பின்பற்றி வந்த பாலஸ்தீன ஆதரவு நிலையை படிப்படியாக கைவிட்டு வந்துள்ளது. அண்மையில் ஐக்கிய நாடுகளின் பேரவையில் போர் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எந்த ஆயுதமும் அளிக்கப்படக்கூடாது என்ற ஒரு தீர்மானம் பல வளரும் நாடுகளால் ஒன்றிணைந்து கொண்டுவரப்பட்ட பொழுது, அத்தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க இந்தியா மறுத்துவிட்டது. இதன் மூலம் மேலை நாட்டு வல்லரசுகளுடன் இந்தியா நின்றது என்றே சொல்லலாம். இந்திய அரசும் இஸ்ரேல் ராணுவத்திற்கு உதவி வருகிறது. அண்மையில் சென்னை துறைமுகத்திலிருந்து இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்திற்கு சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலுக்கு ஸ்பெயின் நாடு அதன் துறைமுகம் ஒன்றுக்குள் செல்ல அனுமதி மறுத்தது. இக்கப்பல் 27 டன் எடைகொண்ட வெடிகுண்டுகளை கொண்டிருந்ததாக செய்திகள் வந்துள்ளன. இந்திய அரசு விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. எனினும் இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுத ஏற்றுமதி செய்துவருவது பதிவாகியுள்ளது. அதானி குழுமமும் இஸ்ரேல் நாட்டின் எல்பிட் சிஸ்டம்ஸ் குழுமமும் இணைந்து இந்தியாவில் நடத்திவரும் தொழிற்சாலையில் இருந்து 20 ஆளில்லா ஹெர்மஸ் ராணுவ விமானங்கள் இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்பது சில மாதங்கள் முன் தெரியவந்துள்ளது.
களம் இறங்குவோம்
ஏகாதிபத்திய நாடுகள் சார்பாக செயல்படும் இஸ்ரேல் அரசின் போர்க்குற்றங்களை எதிர்த்தும் பாலஸ்தீன மக்களுக்கு நியாயம் கோரியும் தெற்கு நாடுகளின் குரலாக தென் ஆப்பிரிக்காவும் வேறு சில நாடுகளும் செயல்பட்டுவருகின்றன. இதில் ஐரோப்பிய நாடான ஸ்பெயின் நாடும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில், இந்தியாவின் பாஜக-ஆர்எஸ்எஸ் அரசு இந்த முக்கிய வரலாற்று போராட்டத்தில் தவறான பக்கம் நின்றது. இந்திய அரசின் இந்த தவறான நிலைபாட்டை எதிர்த்து இடதுசாரி கட்சிகளும் முற்போக்கு சக்திகளும் இந்தியா முழுவதும் வலுவான இயக்கத்தை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. மோடி தலைமையில் பொறுப்பேற்றுள்ள கூட்டணி அரசாங்கம் இந்த மோசமான பாதையில் தொடர்வதை தடுத்து நிறுத்த வலுவான மக்கள் இயக்கம் தேவை. பொறுப்பேற்றுள்ள புதிய கூட்டணி அரசுக்கு இதில் நாம் கடும் நிர்ப்பந்தம் கொடுக்கவேண்டும். நாட்டில் நிகழ்ந்துள்ள ஜனநாயக முன்னேற்றம் இதை முன்னெடுத்துச் செல்ல நமக்கு உதவும்.
[1] இஸ்ரேலின் உருவாக்கத்திற்குப்பின் சயனிசம் (Zionism) என்று அறியப்படுகின்ற மோசமான ஒரு யூத மேலாதிக்க தத்துவம் உள்ளது. இது பலபல நூற்றாண்டுகளுக்குமுன், கிறித்தவ மதம் தோன்றும் முன்பே யூதர்கள் பாலஸ்தீனப்பகுதியில் வாழ்ந்தார்கள் என்றும், எனவே பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேறி தங்களுக்கு என்று ஒரு யூத தேசத்தை அமைத்துக்கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் வாதிடுகிறது. மேலை ஏகாதிபத்தியம் இந்த இயக்கத்தையும் இதில் இருந்த யூத மக்களையும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு எதிராக நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்துள்ளது. சாதாரண யூத உழைப்பாளி மக்கள் மத்தியில் முதலாளி வர்க்க எதிர்ப்பு உணர்வு ஏற்படாமல் இருக்க, யூத முதலாளிவர்க்கமும் ஏனைய ஐரோப்பிய முதலாளிவர்க்கங்களும் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான பகை உணர்வை இவர்கள் மத்தியில் ஆழமாக விதைத்துள்ளனர். இன்றுவரை இப்போக்குகள் தொடர்கின்றன. சயனிச தத்துவத்திற்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக இந்துத்வா/இந்துமேலாதிக்க தத்துவத்திற்கும் உள்ள ஒருவகை ஒற்றுமையையும் இதில் நாம் காண முடியும். இதில் கவனிக்க வேண்டியது, இதே இந்துத்துவா வாதிகள் இத்தாலி-ஜெர்மனி பாசிச, யூத விரோத சக்திகளுடனும் இயல்பாகவே நெருக்கமாக இருந்தவர்கள்.
சயனிசம் பாலஸ்தீன மக்களை மனிதர்களாகவே அங்கீகரிக்கவில்லை. “மக்கள் அற்ற (பாலஸ்தீன) நாடு, நாடு அற்ற யூத மக்களின் தாயகமாகும்” என்பதே சயனிச கோட்பாடு. இந்த அணுகுமுறை இஸ்ரேல் அரசு நடத்திவரும் இனப்படுகொலையில் அப்பட்டமாக வெளிப்படுகிறது. இந்த இனப்படுகொலைக்கான சம பொறுப்பு ஏகாதிபத்தியத்தை சாரும். ஏகாதிபத்திய வரிசையில் முதல் குற்றவாளியாக அமெரிக்க வல்லரசு இடம் பெறும். இவர்களின் கூட்டாளியாக இந்திய அரசு பல வகைகளில் செயல்பட்டு வருவது பெரும் அவலம். பாலஸ்தீனத்தை தாண்டி, அரபு நாடுகளிலும், அதையும் கடந்து பொதுவாக தெற்கு நாடுகளிலும், இன்று ஏற்பட்டுள்ள எழுச்சி பாலஸ்தீன விடுதலையில் முக்கிய பங்கு வகிக்கும்.
[2] இக்கட்டுரையாளர் 1960களின் இறுதியில், 1970களின் துவக்கத்தில் ஒரு அமெரிக்க பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட படிப்பில் சேர்ந்திருந்த சமயத்தில் யுத்த எதிர்ப்பு, வியத்நாம் ஆதரவு போராட்டங்களில் ஈடுபாட்டுடன் பங்கேற்று, அதன் மூலம் சமூகத்தில் நியாயங்கள் பக்கம் நின்று, முற்போக்கான மாற்றங்களுக்கு வாழ்நாள் முழுவதும் செயல்படவேண்டும் என்ற உணர்வு பெற்றவன் என்பதை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
