
கம்யூனிசத்தின் கோட்பாடுகள்
பிரெடெரிக் எங்கெல்ஸ்
தமிழில்: மு. சிவலிங்கம்
கேள்வி 3: பாட்டாளிகள் என்போர் எப்போதுமே இருந்திருக்கவில்லையா?
இல்லை. ஏழை மக்களும் தொழிலாளி வர்க்கத்தினரும் எப்போதும் இருந்து வந்துள்ளனர். மேலும் தொழிலாளி வர்க்கம் பெரும்பாலும் ஏழ்மையாகவே இருந்துள்ளது. ஆனால், இன்று இருப்பதைப் போன்ற சூழ்நிலைகளில் வாழ்ந்து வருகின்ற தொழிலாளர்களும், ஏழை மக்களும், வேறு சொற்களில் கூறுவதெனில், இன்றைய சுதந்திரமான, கட்டுப்பாடற்ற [வணிகப்] போட்டிகள் எப்போதும் இருந்திருக்கவில்லை; அதுபோலவே, இன்றைய பாட்டாளி வர்க்கத்தினர் எப்போதும் இருந்திருக்கவில்லை.
கேள்வி 4: பாட்டாளி வர்க்கம் எப்படி உதித்தது?
கடந்த [18-வது] நூற்றாண்டின் பிந்தைய பாதியில் இங்கிலாந்தில் உருவாகியதும், அதன்பின்னர் உலகின் அனைத்து நாகரிக நாடுகளிலும் தொடர்ந்து நிகழ்ந்ததுமான, தொழில் புரட்சியின் விளைவாகவே பாட்டாளி வர்க்கம் உதித்தது.
நீராவி எஞ்சின், பல்வேறு நூற்பு எந்திரங்கள், விசைத்தறி, ஏராளமான பிற எந்திர சாதனங்கள் ஆகியவற்றின் கண்டுபிடிப்பினால், இந்தத் தொழில் புரட்சி வலுப்பெற்றது. இந்த எந்திரங்கள் அதிக விலையுள்ளவை. எனவே, பெரிய முதலாளிகளால் மட்டுமே வாங்க இயலும். இவை, உற்பத்திமுறை முழுவதையும் மாற்றிவிட்டன. மேலும் இதுவரை இருந்துவந்த தொழிலாளர்களை வெளியேற்றின. காரணம், தொழிலாளர்கள் தம்முடைய திறனற்ற கைராட்டைகள், கைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய சரக்குகளைவிட, மலிவான, சிறப்பான சரக்குகளை எந்திரங்கள் உற்பத்தி செய்தன.
இவ்வாறாக, எந்திரங்கள் தொழில்துறையை முழுமையாகப் பெரும் முதலாளிகள் வசம் ஒப்படைத்துவிட்டன. மேலும், தொழிலாளர்களின் அற்பச் சொத்துகளை (கருவிகள், கைத்தறிகள் போன்றவற்றை) முற்றிலும் பயனற்றவை ஆக்கிவிட்டன. இதன் விளைவாக, முதலாளிகள் வெகுவிரைவில் எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொண்டனர். தொழிலாளர்களுக்கென எதுவும் மிஞ்சவில்லை. துணி உற்பத்தித் துறையில் ஆலை உற்பத்திமுறை புகுத்தப்பட்டது இதற்கு ஓர் அடையாளம் ஆகும்.
எந்திரங்களையும் ஆலை உற்பத்தி முறையையும் புகுத்திட ஒரு தூண்டுதல் அளிக்கப்பட்டவுடனே, ஆலை முறை தொழில்துறையின் பிற பிரிவுகள் அனைத்திலும், குறிப்பாக, நெசவு, புத்தக அச்சடிப்பு, மண்பாண்டத் தொழில், உலோகத் தொழிலகங்கள் ஆகியவற்றில் மிக விரைவில் பரவியது.
உழைப்பு, தனித்தனித் தொழிலாளர்களுக்கிடையே மேலும் மேலும் பிரித்துக் கொடுக்கப்பட்டது. எனவே, முன்பெல்லாம் ஒரு முழுப் பொருளையும் உருவாக்கிய ஒரு தொழிலாளி இப்போது அந்தப் பொருளின் ஒருபகுதியை மட்டுமே உற்பத்தி செய்தான். இந்த உழைப்புப் பிரிவினை, பொருட்களை முன்பைவிட விரைவாகவும் மலிவாகவும் உற்பத்தி செய்வதைச் சாத்தியம் ஆக்கியது. இது ஒவ்வொரு தொழிலாளியின் பணியையும், தொடர்ந்து திரும்பத் திரும்ப நிகழும் எளிதான எந்திர இயக்கமாகக் குறைத்தது. தொழிலாளி செய்துவந்த வேலையை, ஓர் எந்திரமானது அதே அளவு சிறப்பாக மட்டுமின்றி, அதைவிட மேலும் சிறப்பாகவும் செய்ய முடியும். இவ்வாறாக, நூற்பு, நெசவு ஆகிய தொழில்களில் ஏற்கெனவே நிகழ்ந்தது போலவே, அனைத்துத் தொழில்துறைகளும் ஒன்றன்பின் ஒன்றாக, நீராவி, எந்திரங்கள், ஆலை முறை ஆகியவற்றினுடைய ஆதிக்கத்தின்கீழ் வந்தன.
ஆனால், அதேவேளையில், அத்தொழில்துறைகள் பெரும் முதலாளிகளின் கைகளில் சிக்கிக் கொள்ளவும் செய்தன. மேலும் அவற்றின் தொழிலாளர்கள் தங்களிடம் மிஞ்சியிருந்த சிறிதளவு சுதந்திரத்தையும் பறிகொடுத்தனர். பெரும் முதலாளிகள் மிகப்பெரிய தொழில்கூடங்களை அமைப்பதன்மூலம், சிறிய கைவினைத் தொழில் விற்பன்னர்களை மிகப் பெருமளவில் வேலையிழக்கச் செய்தனர். இத்தொழிற்கூடங்கள் பல செலவுகளைச் சிக்கனப்படுத்தின; மிக விரிவான உழைப்புப் பிரிவினைக்கும் வழிவகுத்தன. இதன் காரணமாய் சீரான பட்டறைத் தொழில் மட்டுமல்ல, கைவினைத் தொழில்களும்கூடப் படிப்படியாய் ஆலை முறையின் ஆதிக்கத்தின்கீழ் வந்தன.
இவ்வாறாகவே, நாகரிகமடைந்த நாடுகளில், தற்போதைய காலகட்டத்தில், ஏறத்தாழ உழைப்பின் அனைத்து வடிவங்களும் தொழில்கூடங்களில் நிறைவேற்றப்படுகின்றன. அனேகமாக, வேலையின் அனைத்துப் பிரிவுகளிலும், கைவினைத் தொழிலும், பட்டறைத் தொழிலும் விழுங்கப்பட்டுவிட்டன. இந்த நிகழ்முறை, முன்னெப்போதையும்விட மிகப் பெருமளவில், பழைய நடுத்தர வர்க்கத்தைக் குறிப்பாகச் சிறிய கைவினைத் தொழில்முனைவோரைச் சிதைத்து அழித்துவிட்டது; தொழிலாளர்களின் வாழ்நிலையை முற்றிலுமாக மாற்றி அமைத்துவிட்டது; இரண்டு புதிய வர்க்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை பிற வர்க்கங்கள் அனைத்தையும் படிப்படியாக விழுங்கி வருகின்றன. அந்த இரு வர்க்கங்களாவன:
(1) பெரும் முதலாளிகளின் வர்க்கம். இந்த வர்க்கத்தினர், ஏற்கெனவே எல்லா நாகரிக நாடுகளிலும், பிழைப்புச் சாதனங்கள் அனைத்தையும், உற்பத்திக் கருவிகளையும் (எந்திரங்கள், தொழிற்கூடங்கள்), பிழைப்புச் சாதனங்களின் உற்பத்திக்குத் தேவைப்படும் மூலப்பொருள்களையும், ஏறத்தாழ தங்களின் தனிப்பட்ட கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களே முதலாளித்துவ வர்க்கம் (பூர்ஷ்வா வர்க்கம்) அல்லது முதலாளிகள் (பூர்ஷ்வாக்கள்).
(2) அறவே உடைமையற்ற வர்க்கம். தங்கள் வாழ்வுக்குத் தேவையான பிழைப்புச் சாதனங்களைப் பெறும்பொருட்டு, தங்கள் உழைப்பை முதலாளிகளுக்கு விற்கக் கடமைப்பட்டவர்களின் வர்க்கம். இவர்களே பாட்டாளி வர்க்கம் அல்லது பாட்டாளிகள் எனப்படுகின்றனர்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply