முற்போக்காளர்களின் பக்கம் நின்றவர் பேரா.சம்பகலக்ஷ்மி
ர. பூங்குன்றன்
பேரா.சம்பகலக்ஷ்மியின் இளமைக்காலம் கொடுமையானதாகவே இருந்தது. 16 வயதில் தந்தை இறந்ததால் குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிவந்தது. குடும்ப பொறுப்புகளோடு தனது படிப்பையும் மேற்கொண்டார். சென்னை பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார். அங்கேயே ஆசிரியராகவும் பணியாற்றினார். வைஷ்ணவ படிமக்கலை எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை முடித்தார். இங்கு இருந்த யாந்திரீகமான ஆய்வு நெறிமுறைகளின் அடிப்படையில்தான் அவரது அந்த ஆய்வு இருந்தது. வைஷ்ணவ மரபை கொண்டவராக அவர் இருந்ததும் இத்தலைப்பை அவர் எடுப்பதற்கான காரணமாக இருக்கலாம். சென்னை பல்கலைக்கழகத்திலேயே ஆசிரியராகவும் பணியாற்றினார்.
ஜி.பார்த்தசாரதி பல்கலைக்கழக துணை வேந்தாராக இருந்தார். அவர் இடது சிந்தனை கொண்டவர். தமிழ்நாட்டை சேர்ந்த பேராசிரியர் என்.சுப்பிரமணியன் என்பவர் அங்கு முக்கிய பொறுப்பில் இருந்தார். ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்திற்கு சென்ற பிறகு அவரது ஆய்வு நோக்கு மேம்பட்டது. முழுமையாக இல்லாவிட்டாலும், இயக்கவியல் பொருள்முதல்வாதக் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டதாக அவரது ஆய்வுநோக்கு வளர்ந்தது.
மேம்பட்ட நோக்கு நிலை
இத்துறையில் சான்றுகளின் அடிப்படையில்தான் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். கல்வெட்டுக்களை அடிப்படையாகக் கொண்டே அவற்றை நிறுவமுடியும். வைஷ்ணவ படிமக்கலை குறித்த அவரது முனைவர் ஆய்வு பல தரவுகளை கொடுத்தாலும், சுகுணா ஜெய்ஷ்வால் வைஷ்ணவத்தின் தோற்றம் குறித்து எழுதியுள்ள புத்தகத்திற்கும் இவரது ஆய்வுக்கும் பெரிய இடைவெளி இருக்கும். சுகுணா ஜெய்ஷ்வால், ஆர்.எஸ்.சர்மாவிடம் பயின்று மார்க்சிய நோக்கில் வைஷ்ணவம் தோன்றியதற்கான சமூக சூழல், சமூக அமைப்பு உள்ளிட்டவைகளை உள்ளடக்கி எழுதியிருப்பார். Religion descent and Substance எனும் மதம் குறித்து ஒரு புத்தகமும் எழுதியுள்ளார். இது வராலாற்றுப் பொருள்முதல்வாத நோக்கில் எழுதப்பட்ட புத்தகமாகும். பக்தி என்றால் என்ன? பக்தி என்ற சொல் பஜ் என்ற வேர் சொல்லில் இருந்த வந்தது. பஜ் என்றால் சமமாக பிரித்துக் கொடுத்தல் என்று பொருள். பக்தி இயக்கம் எல்லோருக்கும் சமத்துவத்தை போதித்தது. அதுதான் பக்தி இயக்கம் இங்கு விரிவான தளத்தை பெறுவதற்கு உதவியது. பங்கை (பாகா) பிரித்துக் கொடுப்பவர் பகவன். பங்கினை பெறுபவன் பக்தன்.
ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்திற்கு சென்றபிறகு, ஜி.பார்த்தசாரதி போன்றோரின் தாக்கம் வரலாற்றுப் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தை அவருக்கு வழங்கியது. ரொமிலா தாப்பர் உள்ளிட்ட பேராசிரியர்களின் தாக்கமும் அவருக்குள் இருந்தது. சான்றுகளை அடிப்படையாக கொண்டு, தத்துவ நோக்குடன் உரசிப் பார்த்து பழைய கருத்து நிலைகளிலிருந்து மேம்பட்ட நிலைக்கு வந்தடைந்தார். மார்க்சிய நோக்கு என்று முழுமையாக கூற முடியாவிட்டாலும், வரலாற்று பொருள் முதல்வாத கண்ணோட்டத்துடன் எழுதினார்.
தனித்தனிக் கட்டுரைகாளக நிறைய எழுதியுள்ளார். Marginalised என்கிற புத்தகத்தில் தமிழ்நாட்டில் சமூக ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள பகுதியினர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டது குறித்தும் அவர்களின் மேம்பாடு குறித்தும் அதில் எழுதியுள்ளார். Old Ideology and Urbanisation என்று ஒரு புத்தகத்தை கொண்டுவந்துள்ளார். சங்க கால அரசியல் எப்படி இருந்தது? குழு ஆட்சி, சிறு மன்னர்கள், வேளிர், வேந்தர்கள் எவ்வாறு படிப்படியாக உருவானார்கள் என்பதை அதில் விளக்கியுள்ளார்.
வேந்தர்கள் வந்தபோது தென் இந்தியா முக்கிய வாணிபப் பகுதியாக மாறிவிட்டது. கி.மு மூன்றாம் நுற்றாண்டு முதல் கி.பி இரண்டாம் நுற்றாண்டு கால கட்டத்தில் வணிகத்தால் அதிக வருமானம் வரும் நாடாக அது இருந்தது. இந்தியாவில் கிடைத்த பத்தாயிரம் ரோமானிய காசுகளில் எட்டாயிரம் காசுகள் தமிழகத்தில், குறிப்பாக கோயம்புத்துர் பகுதியில் கிடைத்தவை என்பது இதற்கான அடிப்படை சான்றாக உள்ளது. ரோமானியர்கள் இங்கு தங்கியிருந்த பகுதிக்கு யவனச்சேரி என்று பெயர். கிரேக்கர்கள், அரேபியர்கள் அனைவரையுமே யவனர்கள் என்றுதான் அழைத்துள்ளனர். சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களில் இது குறித்த குறிப்புகள் உள்ளன. அந்த காலத்தில் யவன வர்க்கம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பக்கபலமாக இருந்துள்ளது.
களப்பிரர்கள் காலம் குறித்து
கி.பி. மூன்றாம் நுற்றாண்டுக்கு பிறகு ரோமானிய நகரங்களை ஒரு காட்டுமிராண்டி கூட்டம் அழித்தது. களப்பிரர்கள்தான் அது என்று தவறாக கூறப்படுகிறது. இதற்கான சான்றுகள் மிகக்குறைவு. களப்பிரர்கள் காலத்தை வேறு கோணத்தில் அணுகவேண்டும். சம்பகலக்ஷ்மி அந்த நோக்கில் அதை செய்துள்ளார். களப்பிரர்கள் காலக்கட்டம் எவ்வாறு இருந்தது என்பதை அறிவியல் நோக்கில் ஆய்ந்து அறிய வேண்டும். தமிழ்நாட்டு மரபுகளை அவர்கள் அழித்ததாக கூறுகின்றனர். உண்மையில் அவர்கள் தமிழ்நாட்டு மரபுகளை வளர்த்தனர். உதாரணமாக, நாட்டார் வழக்காற்று மரபை எடுத்துரைப்பது கலித்தொகை. அந்த கலித்தொகை, பரிபாடல் களப்பிரர்கள் காலத்தில்தான் உருவானது. ஆசிரியப்பா உள்ளிட்ட மற்றவை எல்லாம் உயர்ந்தோர் மரபை பேசியது. களப்பிரர்கள் காலத்தில் நாட்டார் மரபு மேல் எழுந்தது. இதற்கான காலத்தை சரியாக கணிக்க முடியாவிட்டாலும் இது களப்பிரர்கள் காலமாகவே தெரிகிறது.
சங்க கால அரசியல், வாணிபம், நகரமயமாதல் குறித்ததாக சம்பகலக்ஷ்மியின் ஆய்வுகள் விளங்கின. பக்தி இயக்கம் குறித்து எழுதியுள்ளார். பழங்குடி மக்களை பக்தி இயக்கம் எவ்வாறு சமயத்துக்குள் கொண்டு வந்தது என்பதை விளக்குகிறார். பழங்குடிகள் பல்வேறு கலாச்சாரங்களை கொண்டவர்கள். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு கலாச்சாரம் இருக்கும். அதை சிவ வழிபாட்டோடு ஒருங்கிணைத்ததை பார்க்க முடியும். சைவம், வைணவம் இரண்டும் அதில் ஈடுபட்டாலும் அதிகமாக உள்வாங்கியது சைவம்தான். இவை குறித்தெல்லாம் சம்பலக்ஷ்மி விளக்கியிருப்பார். சமூக அமைப்பு, அதன் சூழல் எவ்வாறு இதற்கு உதவியது என்பதையும் கூறியுள்ளார். சிதறிக்கிடந்த மக்கள் கூட்டத்தை சைவம் ஒன்று திரட்டியது. அம்மக்களின் வழிபாட்டை சைவத்துடன் அது இணைத்துக்கொண்டது. இதுவே அவர்கள் வளர்வதற்கு அடிப்படையாக இருந்தது. பக்தி இயக்கம் எழுப்பிய முரண்களையும் பேசியுள்ளார். இதுகுறித்து சம்பகலக்ஷ்மியை தவிர வேறு யாரும் பேசவில்லை. சிவனை வழிபடும் ஒரு புலையனிடம் கடவுளை கண்டேன் என்கிறார் திருநாவுக்கரசர். ஆழ்வாரும் இதை பாடியுள்ளார். வர்ணாஸ்ரம தர்மத்தை பின்பற்றிய காலத்தில் இத்தகைய மாற்று முன்னெடுப்புக்களையே சம்பகலக்ஷ்மி அவற்றுக்குள் எழுந்த முரண்களாக காண்கிறார். கடைசி நாயக்கர்கள் காலம்வரை அவர் பேசியுள்ளார்.
முற்போக்கு பார்வை
சங்க காலத்தில் தென் இந்தியாவில் சமூக வாழ்வு எப்படியாக இருந்தது என்பதை அகழ்வாராய்ச்சிகள் எடுத்துக்காட்டுகின்றன. சங்க இலக்கியங்களை மேற்கோள் காட்டி சம்பகலக்ஷ்மி தனது ஆய்வுகளை விளக்கியுள்ளார். வாணிபம், நகர உருவாக்கம் பகுதிகளில் கூடுதலாகவே சங்க இலக்கியங்களை சுட்டிக்காட்டுகிறார். வரலாற்றுக்கு முந்தைய காலம் குறித்து சம்பகலக்ஷ்மி அதிகம் கருத்து கூறியது இல்லை. அது தனது ஆய்வு எல்லைக்கு அப்பாற்பட்டது என்று அவர் கருதியிருக்கலாம். அவரிடம் கருத்து கேட்காமல் இருந்ததும் காரணமாக இருக்கலாம்.
ரொமிலா தாப்பருக்கு தென் இந்தியா குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கு கூடுதலாகவே இருந்தது. பண்டைய இந்தியா எனும் புத்தகத்தில் பக்தி இயக்கம் தென் இந்தியா, இந்தியாவிற்கு கிடைத்த கொடை என்று அவர் எழுதுகிறார். இதை அடிப்படையாக கொண்டுதான் பக்தி இயக்கம் குறித்த சம்பகலக்ஷ்மியின் எழுத்துக்களை பார்க்க வேண்டும். பல புத்தகங்களை எடிட் செய்துள்ளார். விளிம்பு நிலை மக்கள் குறித்து எழுதும்போது தமிழகத்தில் கால்நடை வளர்ப்பில் இருந்த மக்கள் கூட்டம் எப்படி விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டனர்? ஒரு காலத்தில் முன்னேறிய நிலையில் இருந்தவர்கள் பல்லவர் காலம் தொடங்கி எவ்வாறு கீழ் நிலைக்கு வந்தனர் என்பதை அதில் பேசுகிறார்.
இறுதி பதினைந்து ஆண்டுகளில் அவர் எழுதியவை குறைவு. கருத்துக்கள் கேட்டால் அதற்கு மட்டும் பதில் அளிப்பதுபோல் இருந்தார். முற்போக்கு இடது கருத்துக்களை அவர் பகிர்வார். ராமர் கோவில் விஷயத்திலும் தற்போதைய முன்னெடுப்புக்கைள அவர் எதிர்த்தார். உண்மையின் அடிப்படையிலும், சான்றுகளின் அடிப்படையிலும் தான் அவரது கருத்துக்கள் இருந்தன. கைலாசபதி, கா.சிவத்தம்பி உள்ளிட்டவர்களை மதிப்புடன் அணுகினார். அவர்களை ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்திற்கு அழைத்து மாணவர்களிடம் அவர்களின் கருத்துக்களை பகிர வைத்தார்.
தொல்லியல் துறையில்தான் அவர் முதுகலை பட்டம் பெற்றார் என்பதால் அதில் அவருக்கு கூடுதல் ஆற்வம் காட்டினார். சிந்துவெளி நாகரீகம், அகழ்வாராய்ச்சி ஆகியவற்றில் அறிவியல் பூர்வமான அணுகுமுறையுடன் கையான்டார். பிற்போக்கு கருத்துக்கள் முன்னெழும்போது அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
