
புன்னப்புரா- வயலார்: வரலாற்றை புரட்டிய ரத்த சரித்திரம்!
இரா. சிந்தன்
1946ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட புன்னப்புரா – வயலார் ஆகிய இரு கிராமங்கள், உழைப்பாளி மக்களின் புரட்சிகர எழுச்சிப் போராட்டங்களைப் பதிவு செய்தன. நிலப்பிரபுத்துவ அடக்குமுறைக்கும், முடியாட்சியின் சர்வாதிகாரத்திற்கும், ஏகாதிபத்தியச் சதித் திட்டங்களுக்கும் எதிராக உறுதியோடு எழுந்த தொழிலாளர் – விவசாயி ஒற்றுமைக்கும், அதன் தவிர்க்கவியலாத வெற்றிக்கும் இந்த வரலாறு ஒரு அழியாத அடித்தளமாகும்.
சுரண்டலின் வேர்கள் – நிலப்பிரபுத்துவக் கொடுமைகள்
இந்த எழுச்சிகள் திடீரென உருவாகிவிடவில்லை. திருவிதாங்கூரில் நிலவி வந்த ‘ஜென்மி’ எனப்படும் நிலவுடைமை அமைப்பு, விவசாயிகளை ஒட்டச் சுரண்டியது. வரி, நிலவுடைமையாளர் கட்டணம், வட்டி என பல வடிவங்களில் மக்கள் பிழிந்து எடுக்கப்பட்டார்கள். கயிறு திரிக்கும் தொழிலாளர்களும், மீனவர்களும் அரைப்பட்டினியில் உழன்று கொண்டிருந்தார்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு வேலையின்மையும், பட்டினியும் அதிகரித்தது. அரிசி, துணி, சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற அடிப்படைப் பொருட்கள் கருப்புச் சந்தையில் மட்டுமே கிடைத்தன. இந்த பகுதியில் குத்தகைக்காரர்களும் விவசாயத் தொழிலாளர்களும் அடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகினர். வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டன. மக்கள் அடிமைகளைப் போல நடத்தப்பட்டனர்.
‘நிலப்பிரபுத்துவத்தின் மிகக் கொடிய அம்சங்கள் திருவிதாங்கூரின் விவசாய அமைப்பில் தொடர்ந்துவந்தன. கயிற்றுத் தொழிலில் நுழைந்த முதலாளித்துவ உற்பத்தி முறை, முரண்பாடுகளை கூர்மையாக்கியது. விவசாயத் தொழிலாளர்களும், மீனவர்களும், கயிறு திரிக்கும் தொழிலாளர்களும் ஓரணியில் திரண்டார்கள்’ என விவரிக்கிறார் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் (1952). பல்லாண்டுகளாக நீடித்த பண்ணை அடிமைத்தனமும், குத்தகைச் சுரண்டல்களும், சாதி அடக்குமுறைகளும், பட்டினிக் கூலிமுறையும், இதற்கு மேலும் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்பதாலேயே மக்கள் எழுச்சி வெடித்தெழுந்தது.
பரவிய புரட்சி நெருப்பு
கயிறு தொழிலாளர்கள் சங்கமாக சேர்ந்தார்கள், விவசாய தொழிலாளர்களையும், குத்தகைதாரர்களையும் ஒருங்கிணைத்து திரட்டியது கம்யூனிஸ்ட் கட்சி. 1944-45 ஆண்டுகளில் சேர்த்தலை தாலுகா முழுவதும் விவசாயத் தொழிலாளர்களால் வார்டு கமிட்டிகள் உருவாக்கப்பட்டிருந்தன.
1944ஆம் ஆண்டு, திருவிதாங்கூரில் தொழிலாளர் காங்கிரஸ் உருவாகியிருந்தது. 1945ஆம் ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில், ஆலப்புழை, சேர்த்தலை மற்றும் முகம்மா தொழிலாளர்கள் நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொதுவேலைநிறுத்தம் அறிவித்தனர். திருவிதாங்கூர் மாநில அரசாங்கம் முதலில் அவற்றை விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய ஒப்புக்கொண்டது. ஆனால், தொழிலாளர்கள் போராட்டத்தை தொடங்கியதும், அதற்கு எதிராக அடக்குமுறையை கையில் எடுத்தது.
இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. காவல்துறை எதுவும் செய்யலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது. மாநில இராணுவமும் ரிசர்வ் காவல்துறையும் கொல்லம், ஆலப்புழை, கோட்டயம், புனலூர் மற்றும் பிற இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டன. அனைத்து ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தங்களும் தடை செய்யப்பட்டன. காவல்துறையின் மிருகத்தனம் செய்தித்தாள்களில் வெளியாகாத வகையில் முடக்கப்பட்டன. சங்க அலுவலகங்களில் உட்புகுந்து எரிக்கவும், அழிக்கவும் செய்தார்கள். இந்த பயங்கரவாத ஆட்சியை அமல்படுத்துவதில் நிலப்பிரபுக்கள் தீவிர பங்கு வகித்தனர்.
மேலும், 1946 ஆம் ஆண்டில், திருவிதாங்கூர் மகாராஜாவும் அவருடைய திவான் சர் சி.பி.ராமசாமி அய்யரும் தங்கள் சமஸ்தானத்தை ‘அமெரிக்காவை போல’ மேற்கத்திய ஏகாதிபத்தியத்தோடு இணைத்து ‘டொமினியன்’ ராஜ்ஜியமாக ஆக்கப் போவதாக கூறினார்கள். சுதந்திர இந்தியாவில் இணையாது தனியே இருக்க முயன்றார்கள். இந்த ‘அமெரிக்க முன்மாதிரியை அரபிக்கடலில் வீசியெறிவோம்’ என்று கிளர்ந்தெழுந்தார்கள் உழைப்பாளி மக்கள்.
“திருவிதாங்கூர் சமஸ்தான ஆளும் வர்க்கமானது, நிலப்பிரபுத்துவத்தை நிலைநிறுத்துவதோடு, அதை ஆங்கிலோ-அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களோடு இணைக்க முயற்சி செய்தது. எனவே இந்த எழுச்சி நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய இரண்டு தன்மையையும் கொண்டது” என்கிறார் இ.எம்.எஸ். [“இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு” (1972)]
ஆயிரக்கணக்கான தியாகங்கள்
அகில திருவிதாங்கூர் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட பொதுவேலைநிறுத்த போராட்டம் அக்டோபர் 22, 1946 அன்று தொடங்கியது. ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி சுதந்திரம் என்ற முழக்கத்துடன் புன்னப்புராவில் உள்ள ரிசர்வ் போலீஸ் முகாம்கள் முன்பாக அணிவகுத்துச் சென்றனர். முகாமின் பொறுப்பு அதிகாரி ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். பல ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ் தோட்டாக்களால் இறந்தனர், அதே சமயம் தொடர்ந்த மோதலில் அதிகாரியும் அவரது ஐந்து ஆட்களும் உயிரிழந்தனர். 24 மணி நேரத்திற்குள், அம்பலப்புழை மற்றும் சேர்த்தலை தாலுகா இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் நடந்ததோ மனித வேட்டை. மக்கள் தேடித் தேடி சுடப்பட்டார்கள்; அடித்துக் கொல்லப்பட்டார்கள்.
அடக்குமுறைத் தாண்டவங்களை எதிர்த்த போராட்டம் வயலாரில் தொடங்கியது. அக்டோபர் 27, 1946 அன்று, மக்கள் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, திடீரென இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூடு தொடங்கியது. கொல்லப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், விவசாயிகளும் தங்கள் வசமிருந்த மர ஈட்டிகள், அரிவாள்கள், கத்திகளுடன் எதிர்த்து நின்றார்கள். கற்பனை செய்யமுடியாத அதி தீரத்தோடு போராடினார்கள்.
” நூற்றாண்டுகளாக தீண்டாமையின் களங்கத்தைத் தாங்கிய ஈழவர்கள், புலையர்கள், பிற சூத்திர-தலித் மக்கள். அவர்கள் இந்தப் போராட்டக் களத்தில் தம்முடைய உணர்வெழுச்சியை மட்டுமல்லாது, புரட்சிகர எழுச்சித் திறனையும் நிரூபித்தார்கள் ” என வரையறுக்கிறார் இ.எம்.எஸ்.. [“கேரளத்தில் விவசாயி இயக்கம்” (1968)]
புன்னப்புரா – வயலார் போராட்டத்தின் விளைவுகள்
விவரிக்க முடியாத அடக்குமுறைகளில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள். வீடுகள் எரிக்கப்பட்டன. பல நூறு போராளிகள் தேடித் தேடி வேட்டையாடப்பட்டார்கள். ஆனால், அந்த போராட்ட எழுச்சியும் தியாகங்களும் அடுத்தடுத்த ஆண்டுகளில் கேரளத்தின் திசைவழியை தீர்மானித்தன.
தொழிலாள வர்க்கம் தோற்றாலும், மாநிலத்தின் அரசியல் சூழல் முழுவதுமாக மாறியது. இந்த போராட்டத்திலிருந்து எழுந்தது முழக்கம்: ‘வயலாரின் ரத்தம் நம் ரத்தம்’.
1946 அக்டோபரில் கண்ட வீரச் சமர்களின் தொடர்ச்சியாக அடுத்தடுத்து மக்கள் எழுச்சிகள் தீவிரமாகின. கரிவெல்லூர் (1946), காவும்பாய் (1946), திள்ளன்கேரி (1947) விவசாயிகள் போராட்டங்களுக்கும், பிறகு 1950களின் மலபார் நிலப் போராட்டங்களும் எழுச்சியுற்றன.
“கம்யூனிஸ்டுகளை நசுக்குவேன்” என்று கொக்கரித்த திவான், 1947ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓடினார். பத்தாண்டு காலத்தில், அந்த சமஸ்தானத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது வரலாற்று சிறப்பு மிக்க தேர்தல் வெற்றிகளை அடைந்ததுடன், 1957ஆம் ஆண்டில் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான ஒரு மாநில அரசாங்கத்தையும் அமைத்தது.
திருவிதாங்கூர் மற்றும் கொச்சின் என்ற இரண்டு சமஸ்தானங்களும் முதலில் திருவிதாங்கூர்-கொச்சின் என ஒரே ஆளுகை பிரதேசமாயின. பின்னர் அவை ஆங்கிலேயர் ஆட்சிக்கால மெட்ராஸ் மாகாணத்தின் மலபார் மாவட்டத்துடன் ஒன்றிணைக்கப்பட்டு புதிய, ஒருங்கிணைந்த மொழி அடிப்படையிலான கேரளா மாநிலத்தை உருவாக்கின.
1850 ஆம் ஆண்டிலேயே கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டபடி, ‘தொழிலாளர் – விவசாயிகள்’ ஏற்படுத்திக் கொண்ட கூட்டணி, பழைய கட்டமைப்புகளை தகர்த்தெறிந்து முன்னேறியது.
எனவே, புன்னப்புரா – வயலாரின் தியாகங்கள், வீழ்த்தி முடிக்கப்பட்ட உணர்வெழுச்சிகள் அல்ல. அவை மக்கள் ஜனநாயக எழுச்சிக்கு முன் நடந்த ஒத்திகைகளே.
தொழிலாளி வர்க்க எழுச்சியின் இந்த மாபெரும் காவியம், கேரளத்தின் ஒவ்வொரு அடுத்த போராட்டத்திற்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக நிற்கிறது. ஒவ்வொரு விவசாயி எழுச்சியிலும், ஒவ்வொரு தொழிலாளர் வேலைநிறுத்தத்திலும், ஒவ்வொரு சமூக நீதிக்கான கோரிக்கையிலும், புன்னப்புரா-வயலார் வீரர்களின் குருதியே, செங்கொடியின் சிவப்பாக முன் நின்று வழிநடத்துகிறது.
ஒவ்வொரு புதிய சமுதாய நலத் திட்டத்திலும், ஒவ்வொரு கல்வி சீர்திருத்தத்திலும், ஒவ்வொரு சுகாதார முன்னேற்றத்திலும், ஒவ்வொரு நிலச் சீர்திருத்தத்திலும், புன்னப்புரா-வயலாரின் கனவுகள் நிறைவேறுகின்றன. அவர்களின் தியாகம் கேரளத்தை இந்தியாவின் மிக முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக மாற்றுவதற்கான அடித்தளத்தை அமைத்தது.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply