மகத்தான அக்டோபர் புரட்சியும் அதன் தற்கால பொருத்தப்பாடும் !
ஆர். கருமலையான்
தமிழில்: எம். வி. எஸ். மணியன்
1917 நவம்பர் 7ஆம் தேதி (அல்லது ஜூலியன் நாட்காட்டியின்படி அக்டோபர் 25ஆம் தேதி, எனவே அக்டோபர் புரட்சி என்று கூறப்படுகிறது) போல்ஷ்விக் கட்சி ரஷ்யாவின் அரசு அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதாக தோழர் லெனின் அறிவித்தார்.
மனிதகுல வரலாற்றில் முதல்முறையாக, ஏழைகளும், சுரண்டப்பட்ட தொழிலாளர் வர்க்கமும் அரசு அதிகாரத்தை கைப்பற்றினர். தொழிலாளர்கள், விவசாயிகள், ராணுவ வீரர்கள் கூட்டணியாக இணைந்து தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின் கீழ் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியது, மனிதகுல வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் இல்லாத நிகழ்வாகும். இது தற்காலிக நடவடிக்கையின் விளைவல்ல; தவறான சூழ்நிலைகளில் உருவான ஒரு சம்பவமும் அல்ல. இன்று ஒரு கட்சி அல்லது ஆட்சியாளரை மற்றொரு கட்சி அல்லது ஆட்சியாளரால் மாற்றுவது போன்ற சாதாரண மாற்றமும் அல்ல. ஒரு சுரண்டல் வர்க்கத்திடமிருந்து மற்றொரு சுரண்டல் வர்க்கத்திற்கு அரசு அதிகாரம் மாற்றப்படும் செயலும் அல்ல. இது முற்றிலும் வேறுபட்டது. லெனினின் வார்த்தைகளில் சொன்னால், “இது உலக வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. புதிய வர்க்க ஆட்சியின் சகாப்தம் – முதலாளித்துவ நாடுகள் அனைத்திலும் ஒடுக்கப்பட்ட வர்க்கம் மனிதகுலத்தை முதலாளித்துவத்தின் பிடியிலிருந்து விடுதலை செய்வதற்காக புதிய வாழ்வுமுறையை நோக்கி முன்னேறி வருகிறது”.
பிரபல பொருளாதார நிபுணர் பிரபாத் பட்நாயக் அடிக்கடி கூறுவதுபோல், மனித வரலாற்றில் முதல்முறையாக, அன்றைய புறநிலை மற்றும் அக சூழ்நிலைகளைப் பொறுத்து, தத்தவார்த்த ரீதியாக உருவாக்கப்பட்டு, ஒரு சிறந்த திட்டத்தின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட புரட்சியாகும் இது.
“1905இல் நடைபெற்ற ரஷ்ய புரட்சி மற்றும் லெனின் தலைமையில் நடந்த சக்திவாய்ந்த அக்டோபர் புரட்சி ஆகியன மார்க்சின் மாபெரும் படைப்பான மூலதனத்தின் உத்வேகமளிக்கும் புரட்சிகர சிந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் நேரடி விளைவுகளாகும்” என்று தோழர் பி.டி. ரணதிவேயும் 1967ஆம் ஆண்டில் கூறினார்.
1917ஆம் ஆண்டில் ரஷ்யாவில் உருவாகி வந்த சூழ்நிலை, பிப்ரவரி புரட்சி மூலம் ஜார் ஆட்சியை தூக்கி எறிந்து, பின்னர் அக்டோபரில் சோசலிசப் புரட்சியாக அதனை மாற்றியமைத்திட பங்களித்தது. பெரும்பான்மையான ரஷ்ய மக்களின் விருப்பங்கள் மற்றும் எண்ணங்களை ஈடேற்றும் விதமாக, இந்த உலகத்தை உலுக்கிய புரட்சியில், தோழர் வி.ஐ. லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி முன்னணிப் பாத்திரம் வகித்தது.
1917ஆம் ஆண்டில் ரஷ்யர்கள் முதலாம் உலகப் போரின் நடுவில் இருந்தனர் – நெருக்கடியில் முதலாளித்துவத்தின் எதிர்வினைகள் காட்டுமிராண்டித்தனமாக இருந்தது. எனவே, 1917ஆம் ஆண்டில் ரஷ்யர்கள் அமைதி, உணவு மற்றும் நிலத்திற்காக ஏங்கினர். பூர்ஷ்வாகளின் ஜனநாயக பிப்ரவரி புரட்சி, ஜார் ஆட்சியை ஒழிப்பதற்கு மட்டுமே வழிவகுத்தது. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை. எனவே, தொழிலாளர் வர்க்கத்தால் தலைமை தாங்கப்பட்ட மகத்தான அக்டோபர் சோசலிசப் புரட்சி, குளிர்கால அரண்மனையில் புயலென புகுந்து கெரென்ஸ்கின் தலைமையிலான தற்காலிக அரசை தூக்கியெறிந்து, இருவகை அதிகாரத்திற்கும் முடிவுகட்டியது. சோவியத்தின் உழைக்கும் மக்கள், விவசாயிகள் மற்றும் வீரர்களுக்கு அனைத்து அதிகாரத்தையும் வரலாற்று ரீதியாக அளிப்பதாக அறிவித்தது.
சோவியத்துகளின் முதல் சட்டம் அமைதிக்கான தீர்மானம் ஆகும் – நவம்பர் 8ஆம் தேதி (அக்டோபர் 26ஆம் தேதி) போரில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மற்றும் அவர்களது அரசாங்கங்களுக்கும் போர்நிறுத்தத்தை அறிவிக்கவும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு பேச்சுவார்த்தைகளை துவக்கக் கோரியும், எவ்வித நிபந்தனையுமின்றி ஜனநாயகபூர்வமான அமைதியை நிலைநாட்டக் கோரியும் அந்தத் தீர்மானம் அழைப்பு விடுத்தது.
பதினெட்டு மணி நேரத்திற்குள், லெனின் இரண்டாவது தீர்மானத்தை வெளியிட்டார் – ஏழை மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்குதல். இந்த தீர்மானம் நிலத்தினை ‘சமூக சொத்து’ என்று அறிவித்தது – தனியார் சொத்துக்களை ஒழிக்க அழைப்பு விடுத்தது. இந்த நிகழ்வு முழு முதலாளித்துவ உலகத்தையும் உலுக்கியது; அதேசமயம் புரட்சியாளர்கள், விவசாயிகள் மற்றும் வீரர்களால் வரவேற்கப்பட்டது – ஏனெனில், அது முழு மனிதகுலத்திற்கும் ஒரு புதிய சகாப்தத்தைத் திறந்துவிட்டது. அந்த சகாப்தம் மனிதமற்ற முதலாளித்துவக் கொடுமையை – மனிதனை மனிதன் சுரண்டும் சமூக அமைப்பை – ஒழித்துக் கட்டியது. அது ஒடுக்கப்பட்ட, காலனித்துவப்படுத்தப்பட்ட மற்றும் நசுக்கப்பட்ட மக்களுக்கும் தேசியங்களுக்கும் புதிய வாய்ப்பைத் திறந்துள்ளது. அது காலனித்துவத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. இந்தத் தீர்மானம் இந்தியா போன்ற பல மூன்றாம் உலக நாடுகளின் விடுதலைக்கு வழிவகுத்தது.
எனவே, மனிதர்களை மனிதர்கள் சுரண்டும் அமைப்பை முடிவுக்குக் கொண்டு வருவதை சாத்தியமாக்கியது. முதலாளித்துவத்தின் நுகத்தடியிலிருந்து விடுபட உழைக்கும் மக்களின் சித்தாந்தமான மார்க்சியத்தை நிரூபித்தது. எனவே, இது ஒரு சகாப்த நிகழ்வானது. அக்டோபர் புரட்சியின் பொருத்தப்பாடு மட்டுமல்ல; மார்க்சியத்தின் பொருத்தப்பாடும் நிரூபிக்கப்பட்டது.
அதன்படி, உழைக்கும் வர்க்கத்தின் தலைமையிலான அரசு, மக்களின் நலனுக்காக செயல்படத் தொடங்கியது. உற்பத்திக் கருவிகள் அனைத்தும் – நிலம், உழைப்பு, மூலதனம் – அடுத்தடுத்த காலங்களில் சமூகமயமாக்கப்படுவதற்கு முன்னோடியாக, அரசு உரிமையின் கீழ் கொண்டு வரத் திட்டமிடப்பட்டது. உற்பத்தியானது அனைத்து மக்களின் நுகர்வுக்காகவும், அவர்களின் தேவைகளுக்கு ஏற்பவும், அரசின் திட்டமிடலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. தனிப்பட்ட முதலாளிகளின் லாப வெறிக்காக அல்ல. இவ்வாறு சுரண்டல் இல்லாத சமூக ஒழுங்கு நிறுவப்பட்டது. அது உண்மையும் ஆனது.
ரஷ்யாவில் சோசலிசம் அடைந்த வேகமான முன்னேற்றமும், சிந்திக்க முடியாத சாதனைகளும் சோசலிச அமைப்பின் மேன்மையை உறுதிப்படுத்தியது. ஒரு காலத்தில் பின்தங்கியிருந்த ரஷ்ய சமூகம் ஒரு மிகப்பெரிய பொருளாதார சக்தியாக மாறியது. அக்டோபர் புரட்சிக்குப் பிறகு அரசாட்சியின் பாதை மாற்றப்பட்டது. ஏனெனில் சோசலிசம் மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் தீர்மானிக்கும் காரணியாக மாறியது. சமூக நல அரசாங்கம் என்ற கருத்து முதலாளித்துவ நாடுகளிலும் செயல்படுத்தப்பட்டது.
சோவியத் சோசலிச குடியரசுகள் ஒன்றியம் பாசிசத்தை தோற்கடிப்பதில் வகித்த தீர்க்கமான பங்கும், அதன் காரணமாக கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகள் உருவானதும் உலக வளர்ச்சியில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப் போரில் பாசிசம்/நாசிசத்தின் மீதான வெற்றி, முக்கியமாக சோவியத் செஞ்சேனை வகித்த தீர்க்கமான பங்கின் காரணமாக, காலனித்துவ சுரண்டலிலிருந்து நாடுகளை விடுவிக்க தேவையான தூண்டுதலை வழங்கியது. சீனப் புரட்சியின் வரலாற்று வெற்றி, வியட்நாமிய மக்களின் வீரம் மிக்க போராட்டம், கொரிய மக்களின் போராட்டம் மற்றும் கியூப புரட்சியின் வெற்றி உலக வளர்ச்சியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
சோசலிச நாடுகளின் சாதனைகள் – வறுமை மற்றும் கல்வியறிவின்மை ஒழிப்பு, வேலையின்மை ஒழிப்பு, கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி, ஓய்வூதியம் போன்ற துறைகளில் சமூக பாதுகாப்பின் பரந்த வலையமைப்பு -சமூகத்தின் மேம்பாட்டிற்காக உழைக்கும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு அவர்களின் போராட்டங்களுக்கு சக்திவாய்ந்த நம்பிக்கையையும் உத்வேகத்தையும் வழங்கியது.
பாசிசத்தை தோற்கடித்த பின்னர் நடைபெற்ற சோசலிச புரட்சிகளின் வெற்றியைத் தொடர்ந்து, சோசலிசத்தின் வலிமையை மிகைப்படுத்தியும், முதலாளித்துவத்தின் வலிமை மற்றும் திறன்களை குறைத்தும் மதிப்பிடும் தவறான போக்கு நிலவியது.. உண்மையில் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலும், உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளிலும் முதலாளித்துவம் நிலைத்திருந்த காரணத்தால், உற்பத்தி சக்திகள் மீது முதலாளித்துவத்தின் கட்டுப்பாடு உறுதியாக இருந்தது. மாறிய உலக ஒழுங்கிற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டு, முதலாளித்துவம் தன்னைத் தானே வலுப்படுத்திக் கொண்டதுடன், சோசலிசத்திற்கு எதிராக இராணுவ, அரசியல், பொருளாதார மற்றும் கருத்தியல் பிரச்சாரங்கள் ஆகிய அனைத்து அம்சங்களிலும் ஒரு கடுமையான தாக்குதலைத் தொடங்கியது.
உலக சோசலிச சக்திகள் இந்த ஏகாதிபத்திய சவாலை எதிர்கொண்டாலும், சோவியத் யூனியனில் சோசலிச கட்டுமானத்தின் செயல்பாட்டில் ஏற்பட்ட சில தவறுகள் மற்றும் குறைபாடுகளால், அதன் உள்நாட்டு வலிமை பலவீனமடைந்தது. பின்நோக்கிப் பார்க்கும்போது நான்கு பகுதிகளில் குறிப்பிடத்தக்க குறைபாடுகளைப் பார்க்க முடியும்.
(அ) சோசலிசத்தின் கீழ் அரசின் வர்க்கத் தன்மை
(ஆ) சோசலிச ஜனநாயகம்
(இ) சோசலிசப் பொருளாதாரக் கட்டுமானம்
மற்றும்
(ஈ) கருத்தியல் விழிப்புணர்வைப் புறக்கணித்தல்.
சோசலிசம் மனித முன்னேற்றத்தின் ஒரு அறியப்படாத பாதையில் ஈடுபட்டுள்ளது என்பதை அழுத்தமாக குறிப்பிட வேண்டியது அவசியம். சோசலிசக் கட்டுமானத்திற்கான எந்தவிதமான திட்டமோ அல்லது குறிப்பிட்ட சூத்திரங்களோ நம்முன் இல்லை.
இந்த குறைபாடுகளால், சோசலிசத்தை அகற்ற, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு எதிர் புரட்சிகர சக்திகள் இணைந்து செயல்பட்ட சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, சோசலிசத்தில் ஏற்பட்ட இந்த பின்னடைவுகள் மார்க்சிய-லெனினியத்தின் அடிப்படை கொள்கைகளின் குறைபாட்டின் காரணமாக ஏற்படவில்லை. மாறாக, அவை முதன்மையாக மார்க்சியம்-லெனினிசத்தின் அறிவியல் மற்றும் புரட்சிகர உள்ளடக்கத்தில் இருந்து விலகியது; உலக முதலாளித்துவத்தின் மற்றும் சோசலிசத்தின் ஒப்பீட்டு வலிமைகளைப் பற்றிய தவறான மதிப்பீடுகள்; படைப்பு அறிவியலான மார்க்சியத்தை குறித்த முரட்டுத்தனமான மற்றும் இயந்திரத்தனமான விளக்கம்; சோசலிசக் கட்டுமானத்தின்போது ஏற்பட்ட முக்கிய குறைபாடுகள் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ளன. எனவே, இந்த பின்னடைவுகள் உழைக்கும் வர்க்கத்தின் சித்தாந்தம் – அதாவது மார்க்சியம்-லெனினிசம் அல்லது சோசலிச இலட்சியத்தையோ மறுப்பதாக அமையவில்லை.
அக்டோபர் புரட்சியின் விளைவுகளான சோவியத் யூனியன் அல்லது கிழக்கு ஐரோப்பிய யூனியன் இப்போது இல்லை. சோசலிசத்திற்கு இந்த பின்னடைவு ஏற்பட்ட போதிலும், அக்டோபர் புரட்சியின் பொருத்தப்பாடு இன்றளவும் உள்ளது .
பின்வருவனவற்றில் அது நமக்கு வழிகாட்டுகிறது:
அ) இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், முதலாளித்துவத்திற்கு தாமதமாக மாறும் நாடுகளில், இனி நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான முதலாளித்துவ ஜனநாயக புரட்சியை நிறைவு செய்ய முடியாது என்ற புரிதலுக்கு இந்த நாடுகளில் புதிதாக உருவாகிய முதலாளித்துவ வர்க்கம் வந்தது. நிலப்பிரபுத்துவ சொத்து மீதான எந்தவொரு தாக்குதலும் முதலாளித்துவ சொத்து மீதான தாக்குதலாக மாறலாம் என்ற அச்சத்தால் அவர்கள் புதிய சூழ்நிலையை எதிர்கொண்டனர். எனவே, அவர்கள் பழைய நிலப்பிரபுத்துவ அமைப்புடன் சமரசம் செய்து கொண்டனர். நிலப்பிரபுத்துவத்தின் பிடியிலிருந்து விவசாயிகளை விடுவிப்பதற்காக, முடிக்கப்படாத முதலாளித்துவ ஜனநாயக புரட்சியின் பணியை முன்னெடுத்துச் செல்லும் பணி, அதன் ஒப்பீட்டு அளவு சிறியதானாலும், வரலாற்று அரங்கில் தாமதமாகத் தோன்றியதாக இருந்தபோதிலும், பாட்டாளி வர்க்கத்தின் தோள்களில் விழுந்தது.
இது உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் ஒரு தொழிலாளி-விவசாய கூட்டணியின் அவசியத்தை உருவாக்கியது. லெனின் கூறியது போல், “எதேச்சதிகாரத்தின் எதிர்ப்பை நசுக்கி, முதலாளித்துவத்தின் நிலையற்ற தன்மையை முடக்குவதற்காக, விவசாயிகளின் பெரும்பகுதியை தன்னுடன் இணைத்து, ஜனநாயக புரட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். முதலாளித்துவத்தின் எதிர்ப்பை நசுக்கி, விவசாயிகள்,சிறு முதலாளிகளின் நிலையற்ற தன்மையை முடக்குவதற்காக, மக்கள்தொகையில் அரைப்பாட்டாளிகளாக உள்ள பெரும்பகுதியை தன்னுடன் இணைத்து, சோசலிச புரட்சியை நிறைவேற்ற வேண்டும்.”
இது விசயத்தில் பேராசிரியர் பிரபாத் பட்நாயக்கின் வார்த்தைகளை நினைவுபடுத்துவது மிகவும் பொருத்தமானதாகும்… “பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் தொழிலாளி-விவசாய கூட்டணி அமையவேண்டும் என்ற இந்த கருத்து, ஜனநாயக புரட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து சோசலிசத்துக்குச் செல்வது மட்டுமல்ல; மார்க்சிய கோட்பாட்டின் அடிப்படையில் பார்க்கும்போது, ஒரு அடிப்படை முன்னேற்றத்தை அது குறிக்கிறது. முதலில், இது விவசாயிகளை நோக்கிய பார்வையில் ஒரு மாற்றமாக அமைந்தது. தொழிலாளி வர்க்கத்தால் தலைமை தாங்கக்கூடிய புரட்சிகர சக்திகளின் வரிசையில் விவசாயிகளை உள்ளடக்கியதாக இருந்தது.”
இந்தியா போன்ற, ஒப்பீட்டளவில் பின்தங்கிய நாடுகளில், எந்தவொரு புரட்சியின் வெற்றியும், உழைக்கும் வர்க்கம்-விவசாய கூட்டணியை உருவாக்கி வலுப்படுத்துவதன் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். லெனின் தனது புரட்சிகர நடைமுறைகளில் இந்த அம்சங்களை தெளிவாக எடுத்துக்காட்டினார். எனவே, உழைக்கும் வர்க்கத்தின் தலைமையின் கீழ் உழைக்கும் வர்க்கம்-விவசாய கூட்டணி என்பது வெறும் முழக்கமோ அல்லது வெற்று சொற்களோ அல்ல; சமூக மாற்றத்துக்காக தற்போதைய புரட்சியாளர்களின் கைகளில் உள்ள ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாகும்.
ஆ) முன்னதாக, சோசலிசத்தை நோக்கிய மாற்றம் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் மட்டுமே நடைபெறும் என்ற கருத்து இருந்தது. லெனின், முதலாளித்துவத்தின் வளர்ச்சியை நிர்வகிக்கும் விதிகளின் அடிப்படையில், அப்போது நிலவிய சமகால உலக பொருள் நிலைமைகளை பகுப்பாய்வு செய்து, ஏகாதிபத்தியம் குறித்த தனது கோட்பாட்டை உருவாக்கினார். இவர் நிதி மற்றும் தொழில் துறைகளில் மூலதனத்தின் குவிப்பு மற்றும் மையப்படுத்தல் விதிகளை கவனித்தார். முதலாளித்துவத்தின் கீழ் இந்த இயல்பான போக்கு இரண்டு துறைகளிலும் ஏகபோகத்தின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. இறுதியில் ஏகாதிபத்திய கட்டத்தை அடைந்தது. லெனின், அக்டோபர் புரட்சி மூலம், ஏகாதிபத்திய சங்கிலிகளில் மிகவும் பலவீனமான இணைப்பை உடைத்தார் – அதுதான் ரஷ்யா. அப்போது ஒப்பீட்டளவில் பின்தங்கிய பொருளாதாரமாக ரஷ்யா இருந்தது.
தோழர் சீதாராம் யெச்சூரி கூறுகிறார்: “லெனின் பின்தங்கிய பொருளாதாரத்தை சோசலிசத்திற்கான மாற்றத்திற்குத் தயார்படுத்த படிப்படியான புரட்சிக் கோட்பாட்டை முன்வைத்தார். அக்டோபர் புரட்சி அனுபவத்திலிருந்து உருவான புரட்சியின் ஜனநாயக கட்டமும், சோசலிச கட்டத்திற்கான அதன் மாற்றமும் தற்போதைய சூழலில் நமக்கு தொடர்ந்து பொருத்தமாக இருக்கிறது.”
இ) இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு – உலகளாவிய முதலாளித்துவத்தின் அமைதியான பெருக்கத்தின் காரணமாக, மூலதன குவிப்பு புதிய உயரத்தை எட்டியுள்ளது. சோசலிசத்தின் பின்னடைவால் இந்த குவிப்பு மென்மேலும் அதிகரித்துள்ளது. சோவியத் யூனியன் உட்பட முன்னாள் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகள் அனைத்தும் முதலாளித்துவத்தின் கட்டுப்பாட்டில் வந்தன. இது சர்வதேச நிதி மூலதனம் புதிய உயரத்தை எட்டவும், ஒருங்கிணைக்கவும் வழிவகுத்தது. இந்த புதிய சூழ்நிலையில், சர்வதேச நிதி மூலதனம் உலகெங்கிலும் தடையின்றி நகர்வதற்கான சுதந்திரத்தை விரும்பியது. அதன் முயற்சிகளில் வெற்றியும் பெற்றது. அந்த வகையில் உலகமயமாக்கல் முறை உருவானது.
உலகமயமாக்கலின் இப்போதைய காலகட்டம் மூலதன குவிப்பை மேலும் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்ல வழிவகுத்து வருகிறது. இது சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்திற்கு பாதை சமைத்தது. சர்வதேச நிதி மூலதனத்தின் கட்டளைகளின் கீழ், இலாபத்தை அதிகரிப்பதற்கான விதத்தில், உலகத்தை மறுசீரமைப்பதுதான் நவீன தாராளவாதத்தின் உள்ளடக்கம் ஆகும். இது அனைத்து தேசிய அரசுகளும் ஒரு வகையில் அல்லது மற்றொரு வகையில் நிதி மூலதனத்தின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அவை சர்வதேச நிதி மூலதனத்தால் ஆதரிக்கப்படும் பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். உலகம் இப்போது உலகமயமாக்கப்பட்ட நிதியின் சுழலில் சிக்கித் தவிக்கிறது. இது தேசிய அரசின் தன்மையையும் மாற்றியுள்ளது. இது மக்களின் நலனுக்கு சேவை செய்யாது. மாறாக நிதி மூலதனத்தின் இலாப அதிகரிப்பு நலனுக்கு சேவை செய்யும். முதலாளித்துவத்தின் இந்த கொள்ளையடிக்கும் தன்மை, உழைக்கும் மக்களுக்கு அதிக துன்பங்களை ஏற்படுத்துவதன் மூலம் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கடுமையாக அதிகரித்துள்ளது. முதலாளித்துவத்தின் இந்த இயல்பான போக்கு முதலாளித்துவத்தின் தொடர்ச்சியான நெருக்கடிகளால் விளைகிறது.
இப்போது முதலாளித்துவத்தின் வெற்றிக்களிப்பு முடிவடைந்துள்ளது. முதலாளித்துவம் நீண்ட நெடிய அமைப்பு நெருக்கடியின் கட்டத்தில் நுழைந்துள்ளது. அதிகரித்து வரும் அதிருப்தி உலகம் முழுவதும் பாசிச அரசியல் வலதுசாரிகள் உருவாவதற்கான வளமான தளத்தை வழங்கியது. மக்களின் கோபத்தையும் அதிருப்தியையும் திசைதிருப்ப முதலாளித்துவத்தின் அரசியல் கருவியாக இது உள்ளது. இந்த அனைத்து போக்குகளும் நமக்கு சவால்களையும் வாய்ப்புகளையும் அளித்துள்ளன. முதலாளித்துவம் மக்களுக்கு ஆறுதல் அளிக்க முடியாது என்பது நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. சோசலிசம் மட்டுமே மாற்று!
லெனின் கூறினார்: “நாங்கள் தொடங்கிவிட்டோம். எப்போது, எந்த தேதி மற்றும் நேரத்தில், எந்த நாட்டின் புரட்சிகர தொழிலாளர்கள் இந்த செயல்முறையை நிறைவு செய்வார்கள் என்பது முக்கியமல்ல. முக்கியமான விஷயம் என்னவென்றால், பனிமலை உடைக்கப்பட்டுள்ளது; சாலை திறக்கப்பட்டுள்ளது; வழி காட்டப்பட்டுள்ளது”.
மாபெரும் அக்டோபர் புரட்சியின் 106வது ஆண்டு நிறைவையொட்டி, முதலாளித்துவத்தை தாண்டிச் செல்வதன் மூலம் மனிதகுலத்தைக் காப்பாற்றி முன்னேற உறுதியெடுப்போம்.
மாபெரும் அக்டோபர் புரட்சி நீடூழி வாழ்க!
You may also like
1 comment
Comments are closed.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

சோவியத் புரட்சியின் எந்த அம்சம் இன்று பொறுந்தும் என்பது இதில் இல்லை,
இன்றைய உலகமய சூழலில் புரட்சிகர மாற்றங்களின் பாதை எது. மார்க்சே
குறிப்பிட்ட எதிர்காலத்தில் முதலாளிவர்க்கமே இல்லாத
பங்குச்சந்தை முதுலாளித்துவம் உருவாகும் என்பது நிசமாகி கார்ப்பரேட்
சிஸ்டம்,உள்ள நாடுகள் , பெருமுதலாளி, குட்டிமுதலாளி பல ரக முதலாளவர்க்கங்கள்
எடுபடாத இந்திய முதலாளித்துவம் என்று இருக்கிற இக்காலத்தில் ” பனிமலை
உடைக்கப்பட்டுள்ளது; சாலை திறக்கப்பட்டுள்ளது; வழி காட்டப்பட்டுள்ளது”.
என்று எழுதுவது கொஞ்சம் ஓவர்தான்